
1
செவ்வாய்ச் சந்தை தன் வழமையான திரள் வற்றித் தணிந்திருந்தது. காய்கறிகளால் நிரம்பியிருந்த கட்டப்பையை ஷீலா சுமக்க முடியாமல் தாங்கி வருவதைப் பார்த்துச் சிரித்தபடி ஒரு முனையைப் பிடித்துக்கொண்டாள். ஷீலா வீட்டாளாய்க் கலந்து மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தன என்றபோதிலும், சீக்கிரத்திலே இருவருக்கும் நல்ல பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. பதின்மச் சிறுமியின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் சிசுவைப்போல் அவளைத் தாங்கிக்கொண்டிருந்தாள் பத்மா. சாலையைக் கடக்கலாம் என இருவரும் நின்றுகொண்டிருந்தபோது, சவுக்குக் கயிற்றை உதறும் சத்தம் எழுந்தது. மர நிறத்தில் வலத்தோளில் மாட்டியிருந்த பையைக் கீழே வைத்த சிறுவன், சாலையின் எதிர்ப்புறத்தில் நின்ற இடத்திலே இரு கைகளையும் விரித்து அவன் காட்சிக்கு மட்டுமே பிடிபடும் ஒரு சூக்கும வளையத்தைப் போட்டுக்கொண்டான்.
தலையில் சிவப்பு நிறத்தில் அணிந்திருந்த நீள பேண்ட், அவனைச் சுதந்தரமானவனாகக் காட்டி மயக்கியது. அவன் அணிந்திருந்த சட்டையில் சிவபெருமான், கங்கை தன் சடையிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்வதில் பூரித்தவராக புன்னகைப் பூத்துக்கொண்டிருந்தார்; அவரது கையிலிருந்த சூலாயுதப் பிடி நழுவியிருந்தது.
‘ஷீலா, கொஞ்சம் பாத்துட்டுப் போலாம்டா’
‘நிழலுக்குப் போயிடலாம் அக்கா’ என்று பையின் இருபிடியையும் அதக்கிப் பிடித்தவளாகச் சாலையைக் கடந்தாள். கண்கட்டிவிட்டதுபோல் வேறெதையும் கவனியாதவளாக அவளனுடனே நகர்ந்தாள் பத்மா. சிவபெருமானின் வர்ணத் தோரணை கலையப்பட்டு வெற்றுடலுக்கு மாறினான் சிறுவன். அவனை வாஞ்சையோடு நெருங்கி வந்து அண்டிக்கொண்டாள் உறுமியைக் கழுத்தோடு மாட்டியிருந்த சிறுமி. அவனது தங்கையாக இருக்கலாம் என்று தோன்றியது பத்மாவுக்கு. தனக்கு ஓர் உறுமியும், அதை ஓயாமல் உராயும் பதுசான தாளக்குச்சியும் கையளிக்கப்பட வேண்டும் எனப் பார்த்து நின்றாள். இருவரையும் கண்காணிப்பதுபோல் அவர்களது அம்மா, சாலையிலே ஒரு கறுத்த சால்வையை விரித்தார். சிறுவனுக்குத் தன் தங்கையின் மீதிருந்த அதிகாரம், அம்மாவின் வருகையால் துச்சமானதை எண்ணி வருத்தம் ஓங்கியது. அதை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டவன், ‘என்னால சம்பாதித்துவிட்டு வர முடியாதா! நீ ஏன் வந்தெ!’ என்று அம்மாவிடம் கத்தினான்.
அவனது கூச்சலைத் தவிர்த்துவிட்டு, சிறுமியிடமிருந்து உறுமியைப் பிடுங்க முயற்சித்த அவளது அம்மா, ‘பாண்டச் சிறுக்கி, தூரமாயிட்டா மேளத்தைத் தொடக்கூடாதுனு எத்தனை தடவ சொல்றது உனக்கு..’ என முறைத்துக்கொண்டார்.
அவரது கோபத்தை ரசிப்பதுபோல் சிறுமி, தன் வாத்தியத்தை உறுமிக் காட்டினாள்.
‘ஷீலா வா புறப்படலாம்’ என்று பேருந்துநிலையப் பந்தலில் தன் கால்களின் கீழ் வைக்கப்பட்டிருந்த கட்டப்பையைக் கையிலெடுத்துக்கொண்டாள் பத்மா.
‘நீங்கதானே பாக்கலாம்னு சொன்னீங்க. கொஞ்சநேரம் பாத்துட்டுப் போகலாம்கா. நான் பாத்ததே இல்ல’ என்றாள் ஷீலா. அம்மாவுக்கும் மகனுக்குமான வாயாடல் நீண்டுக்கொண்டே போக, உறுமியின் கனத்த அதிரல் பத்மாவை நிற்க முடியாமல் செய்தது.
‘இல்லை. அவன் அடிச்சிப்பான். ஒருத்தன் அடிச்சிக்கிறதை நம்ம எதுக்கு வேடிக்கை பாத்து என்கரேஜ் பண்ணனும்’ என முன் நடக்கவாரம்பித்தாள். அதற்குமேல் அவளுடன் ஷீலாவும் வார்த்தையாடவில்லை. பழையபடியே இரு பிடியையும் ஆளுக்கொன்றாய்ப் பற்றியவர்களாக நடக்கவாரம்பித்தனர்.
‘ஏன்கா கேசவன் மாமா கடையில இருப்பாங்களா’ என்று பேச்சுக் கொடுத்தாள் ஷீலா.
பிரதான சாலையைக் கடந்து, வ.உ.சி தெருவில் நுழைந்ததும் அம்மன் கோவிலருகே, பின்னணியில் அடுக்கியிருக்கும் நீண்டு தடித்த கரும்புக் கழிகளின் பாதத்தில் உடைந்த சவுக்கைபோல் நின்றுகொண்டிருந்தான் கேசவன்.
‘மாமா ஏன் வெயிலுல நிக்கிறீங்க. வந்து சாப்பிட்டுட்டு சாயங்காலமாப் போலாம்ல. அக்கா சுண்டக்கா குழம்பும் உருளக் கெழங்கு பால்கறியும் செஞ்சு வச்சிருக்காங்க’
‘இப்ப கிராக்கி வரேன்னு சொல்லிருக்குமா. லோடு ஏத்துறப்ப நான் இல்லேன்னா, இந்தச் சுள்ளான் கூடக் குறைச்சலா ஏத்துவிட்டுருவான்’ என்று வேலையாளைச் சுட்டிப் பேச்சை நிறுத்தியவன், பின் சம்பிரதாயமாக ‘வெய்யில்ல நடந்துதான் போணுமா. ஒரு ஆட்டோ வச்சிக்கிட்டா ஆகாதா?’ என்று பத்மாவைப் பார்த்துக் கேட்டுவிட்டு தலையைத் திருப்பிக்கொண்டான்.
தன்னை ஒளித்துக்கொள்ளும் கணவனின் லாவண்யம் பத்மாவின் கண்களில் தோன்றி மறைந்தது. வெயில் அப்போதுதான் உறைப்பதாகப்பட்டது. சுற்றியிருந்த முந்தியை எடுத்து தலையில் போட்டுக்கொண்டாள். ‘நேரத்துக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போங்க. இல்லைனா போன் அடிங்க. வந்து குடுக்குறேன்’ என்றாள்.
‘பரத் வரும்போது சேர்ந்து வந்துடுறேன். அம்மாகிட்டயும் சொல்லிடு’ என்று வேஷ்டியை மடித்தவாறு பந்தலின் கீழ் கிடந்த நாற்காலியில் அமரச் சென்றான். கணவனின் பெயரைக் கேட்டதும் தன்னை அறியாமல் ஷீலா முகத்தில் படர்ந்த மலர்ச்சியை பத்மா குறித்துக்கொண்டாள்.
2
சிறுமி உருவிக்கொண்டிருந்த தாளக்குச்சியின் நீண்டவடிவமாகத்தான் தன் கணவன் இருப்பதாகப்பட்டது பத்மாவுக்கு. அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் தனக்கு இணையான அழகும், மிடுக்கும் அவருக்கு வாய்க்கவில்லை என்ற கரிசனை மேலெழும்பிய காலம் பிறழ்ந்து, அவர் தனக்கு எவ்வகையிலும் ஒப்பில்லாதவர் என்ற எண்ணம் மூண்டெழத் தொடங்கி ஆங்காரமாய்ப் பீறிட்டது. வயதுகூடக்கூட குழந்தையின்மை பொருட்படுத்தக்கூடிய ஒன்றாகத் தோன்றவில்லை. அதன்மூலமே தான் அர்த்தப்படக்கூடிய பிறப்பாக முடியும் என்பதை பத்மா ஏற்கவில்லை. ஆனால் அதே நினைப்பில் கேசவன் இருப்பதை அவள் சுத்தமாக விரும்பவில்லை. ஒவ்வொரு மாதமும் தூரம் நிகழும்போது, ‘இந்த மாசமும் ஏமாத்தியாச்சுல…’ என்று சத்தமெழாத தொனியில் கணவனைக் காயப்படுத்துவது அவளுக்குப் பிடித்துப்போய் வருடங்கள் பலவாகின்றன.
தன்னைச் சுட்டி பொருமுவதன் மூலம், தன் ஆங்காரத்தை அவள் அடக்கிக் கொள்கிறாள் என நினைத்து, கேசவனும் ஒன்றும் சொல்லிக்கொள்வதில்லை. குற்றவுணர்வைச் சுமக்கும் முகம் இயல்பிலே வாய்த்திருந்தது, அவனுக்கு. மெல்ல இருவருக்குமான சேர்க்கைகள் அருகிக்கொண்டே வர, கருபிடிக்கத் தோதுவான நாட்கள் என பத்மா கருதும் வேளைகளிலும்கூட, விலகிப் படுப்பது சகஜமாகிவிட்டது இருவருக்கும். ஆண்டுதோறும் பத்மாவின் அழகு கூடிக்கொண்டே போவதாக கேசவன் நம்பினான். ‘உனக்கு நான் பொருத்தமில்லேல’ என்று சொன்ன நாள் தொடங்கி, இன்றுவரை பகலில் அவன் வீடு திரும்புவதில்லை. இரவில் குடிமிகுதியில் உணவைக் கொரிக்கும் அளவிலான பிரக்ஞையுடன் மட்டுமே வீடுதிரும்புவது, எல்லோருக்கும் பழகிவிட்ட ஒன்றாகிப் போய்விட்டது.
தான் ஆளப்படாமையின் வெறுமையைப் போக்குவதற்கெனவே பத்மா, வீட்டின் சகல முடுக்கிலும் தன் இருப்பின் பரவலைக் காட்டி வந்தாள். இடையைத் தாண்டி ஆடும் முடிக்கற்றையில் ஆங்காங்கே வெள்ளியருவியாய் மிளிர்வன மட்டும் அவளது இயக்கத்திற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை என்பதைச் சொல்லி வந்தன. அத்தையின் பதவியை இலேசில் தனதாக்கிக்கொள்ள அவளால் முடிந்தது. ஹாலின் மத்தியில் கிடத்தப்பட்டிருந்த கட்டிலில் படுத்தவாறும், முதுகிற்குத் தலையணை கொடுத்து சாய்ந்தமர்ந்தவாறும் தொலைக்காட்சியோடு காலம் போக்கும் அத்தைக்கு, தான் பொறுப்பெடுப்பது அனுகூலம்தான் என்று அவளாகவே உறவுகளிடம் சொல்லியும் வந்தாள்.
பரத்திற்குத் திருமணம் செய்து வைத்த பின்புதான், கேசவன் மீது தனக்கு மேலும் எரிச்சல் கூடியது என்பதற்குச் சமாதானம் கூற முடியாமல் தவிர்த்தாள். ஷீலாவின் மலர்ந்த புன்னகை நினைவில் ஏறி அமர்ந்தது. முரடன், சிடுசிடு பேர்வழி, காரியக்காரன், ஊர்ச்சுற்றி என்பதாகவே அனுபவத்தில் படிந்த கொழுந்தனின் குணத்திற்குப் பின்னால், அருகின்மையிலும் மனைவியின் முகத்தில் சந்தோசத்தை உண்டாக்க முடிகிற அம்சம் எது எனக் குழம்பிப் போனாள். நாற்பதின் தொடக்கம் அவளை, எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து ஒன்றை அடைவது என்ற புள்ளிக்குத் தள்ளியிருந்தது. பெரும்பாலும் அது சரியாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. சில அவதானங்கள் சரியானவை அல்ல என்றாலும் அது தனக்கேயான அனுபவத்திலிருந்தும் சிந்தையிலிருந்தும் பிறந்தவை என்பதால் அவற்றை அழுந்தப் பற்றியிருந்தாள்.
மின்விசிறி பூமியின் மொத்தக் காற்றையும் திரட்டி தன்மேல் அனுப்பவதாகத் தோன்றியது பத்மாவுக்கு. அவளது சேலை முந்தானை விலகுவதும் முடி காற்றில் சலம்புவதும், எங்கோ நினைவின் மூலையில் தான் தொலைத்துவிட்டதாக நினைக்கும் பருவத்திற்கு அவளை அழைத்துக்கொண்டு போனது. இதுவரை கவனியாத உஷ்ணம் அவளை மேற்கொண்டது. நாற்சுவர்களும் கந்தகத்தை உமிழ்வதாக இருந்தது. ஆனாலும் உடல் குளிர்ந்துகிடந்ததுபோல் விரிப்பைப் போர்த்திக்கொண்டாள். அந்தச் சிறிய அறை தன்னளவிலே அணைத்துக்கொள்வதாக நினைத்துக்கொண்டாள். விரல்களை மடக்கி படுக்கைத் தலையணையில் குத்திக்கொண்டே இருந்தாள். பற்கள் போர்த்தியிருந்த சால்வையை இறுகக் கடித்தன.
‘அக்கா… அக்கா…’ என அறைக்கதவைத் தட்டியவாறு நின்றாள் ஷீலா.
களைந்த சிகையுடனும் உறக்கப் பிடிமானம் உதிர்வதன் சாட்சியாய் உமிழப்படும் நீர் திரண்ட கண்களுடனும் கதவைத் திறந்தாள்.
‘சந்தைக்குப் போனதுல அசதியாகிட்டீங்களா அக்கா. வாங்க சாப்பிடலாம். அவரே ரேஷனுக்கும் போயிட்டு வந்துட்டாராம். நமக்கு வேலை மிச்சம். இந்த வருஷம் பொங்கல் பணம் கொடுக்கலியாம்’ என்று பேசியவாறு கைப்பிடித்து இழுத்தாள். உடைத் திருத்தி, கூந்தலைக் கொண்டையிட்டவாறு ஹாலுக்கு வந்தாள் பத்மா.
‘அண்ணி, அண்ணனுக்கு வர நேரமில்லயாம். சாப்பாடு கேட்டுச்சு. நான் போறப்ப குடுத்துடுறேன்’ என்றபடி தன் அம்மாவின் கட்டிலில் அமர்ந்தபடி டி.வியைப் பார்த்துக்கொண்டிருந்தான் பரத்.
3
ஆழ் ஊற்றுகளிலிருந்து பாயும் காட்டருவியின் தடம்போல் சலசலத்துக்கொண்டிருந்தது இரவின் நிசப்தம். அத்தையின் படுக்கைக்குக் கீழே பாய் விரித்துப் படுத்திருந்தாள் பத்மா. பதினொன்றைக் கடந்தும் கேசவன் வரவில்லை. அவன் வரவை அவள் எதிர்நோக்கவுமில்லை. அறையின் கதகதப்புக்கு அஞ்சி, குளிரின் காலடியில் கைகளை மடக்கிக்கொண்டு படுத்திருப்பதே நன்றாகப்பட்டது.
‘ஷீலாவ கவனிச்சிக்கிடணும்மா. காலக்கடைசில நான் கண்ணமூடுறதுக்கு முன்னேயே நல்ல செய்திய கேக்க வச்சிட்டாரு திருச்செந்தூர் ஆண்டவரு. கண்ணால பிள்ளைய பாக்குறவரை உசிரிருந்தாப் போதும்’ என்று தழுதழுத்த குரலில் பேசிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் சாய்ந்துகொண்டார். மூப்பு அவரைச் சகல வகையிலும் தாங்கிக்கொண்டிருந்தது.
‘நீங்க சொல்லணுமா அத்தே. நான் தங்கமாக் கவனிச்சிக்க மாட்டேனா,’ என்றாள் பத்மா.
இந்தச் செய்தியை ஒருத்தியின் மனம் எப்படி ஆராதிக்கும்? கேள்விகளால் துவண்டுபோகுமளவு பயம் மேலிடுமோ! சுற்றியுள்ளவர்களின் ஓயாத கண்காணிப்பில் சலித்துப் போகுமோ! ஒருவகையில் இது சுதந்திரத்தின் காவு இல்லையா என்று நினைத்தவாறே படுத்திருந்தாள் பத்மா. அவளுக்குப் பிள்ளைப்பேறு என்பதை வரம், சாபம் என எந்தப் பாராட்டிற்குள்ளும் புறக்கணிப்பிற்குள்ளும் பொருத்தக்கூடாது என்று தோன்றிக்கொண்டே இருந்தது.
மதியம் உணவு மேஜையில் ஷீலா வெட்கித்தவாறு செய்தியைச் சொன்னதும் பரத் முகத்தில் நெளிந்த சிரிப்பை அவளால் மறக்கமுடியவில்லை. கேசவனால் இதுபோல் ஒரு சிரிப்பை நிச்சயம் உதிர்க்க முடியாது. அப்படி ஒன்று ஆண்களுக்குள் எங்கே மறைந்திருக்கும் அத்தனை காலமும். கூச்சமும் கர்வமும் தொற்றிக்கொண்டாற்போல் பக்குவத்துடன் சிரிக்கும் ஒரு சிரிப்பு என்று விரல் நகங்களைக் கடிக்கவாரம்பித்தாள்.
அண்ணியின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலையும், அவளுக்குச் செய்தி அறிவிக்கும் முன் அம்மா தன்னையும் ஷீலாவையும் முடிந்தவரை சீக்கிரம் தனியாக வீடெடுக்கும்படி சொன்னதையும் பரத்தால் உள்வாங்கவே முடியவில்லை. தனது தாம்பத்யம் அழியா விளைவுகளுக்கு உட்பட்டதெனப் பாவிக்கப்படுதலின் கோபமும் வெறுப்பும் அவனது தூக்கத்தை நிரந்தரமாய்க் களைத்துவிட்டதுபோல் எழுந்தமர்ந்தான்.
எப்போதும் அசைந்தாடும் அண்ணியின் சினேகப் பார்வையும் அனுகூலச் சிரிப்பும் மறைந்து, ரூபமெடுத்த போலித்தனத்தின் நகையும் சந்தோஷக் களிப்பைப் போலான செயற்கைச் சத்தமும் தன்னைப் போலவே ஷீலாவையும் எட்டியிருக்குமோ என்று அவளைப் பார்த்தான். மிதமான குறட்டையொலியுடன் பகலில் குடியேறிய அதே மலர்ச்சியின் பொலிவுடன் தூங்கிக்கொண்டிருந்தாள். குழந்தைமையின் பக்கங்கள் தீராத அம்முகத்தில், அன்றாடத்தில் பங்குகொள்ளும் மற்றொரு முகத்தை முதல்முறை தேடத் தொடங்கினான்.
4
பேரருவியின் வீழ்ச்சியை நித்யமாய் ஏந்திக்கொள்ளும் கற்பாறையின் அழுகுரலைப் போல் மழையின் சத்தம் வீட்டிற்குள் பாய்ந்தது. அக்கனத்த இரைச்சலொலியின் மத்தியிலும் அவர்களது அறையிலிருந்து கசிந்த விருப்பமின்மையின் சலித்த சினுங்கலொலியும் கட்டிலின் நொடித்த சப்தமும் பத்மாவின் காதுகளைக் குடைந்தன. அழிவை நோக்கிய இயக்கத்தின் சூடு அவளைத் தொந்தரவுப்படுத்தியது. தன்னால் தாங்கமுடியவில்லை என்றானபோது மெல்ல எழுந்து, அத்தையைப் பார்த்தாள். எதற்கும் ஆட்படாதவராய் மெய்ம்மறந்து உறங்கிக்கொண்டிருந்தார்.
வாசல் கதவு தட்டப்படும் சத்தமெழுந்தது. இடைவிடாமல் தட்டிக்கொண்டே இருக்கும் ஒலி, அது நீண்ட நேரமாய் அறையப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியது. உடுக்கை உறுமலும் சாட்டையின் சதைக்கிழித்தலும் தன்னை எழவிடாமல் செய்தன. சக்தியெல்லாம் மீட்டுக்கொண்டவளாய், கதவைத் திறந்து கேசவனின் முகத்தைக்கூட ஏறிடாமல், தன் அறைக்கு விரைந்து ஓடினாள்.
அவள் வழியெங்கும் சிந்திச் சென்ற குருதிச் சொட்டுக்களை அழித்தபடி அவனும் பின்னேயே சென்றான். கதவுத் தாளிடப்படாமலே கிடந்தது.
(‘இரு சகோதரர்கள்’ எழுதிய கு.அழகிரிசாமிக்கு)
எழுதியவர்

- ஜார்ஜ் ஜோசப் என்கிற பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் ஜார்ஜ் இம்மானுவேல் ஜோசப். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். கவிதை, சிறுகதை, விமர்சனம் என இலக்கியத்தில் இயங்கி வருகிறார்
இதுவரை.
கதைகள் சிறப்பிதழ் 202523 January 2025சலம்பல்
கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023அழல்
சிறுகதை28 February 2023ஓலை