18 July 2024

அவளுக்கு ஒருமாதிரி வைல்ட் டேஸ்ட். மிகப் பளிச்சென்றோ, மங்கலாகவே உடை அணிந்து பார்த்ததில்லை. ஒப்பனையிலும்கூட அப்படித்தான். பவுடர் மட்டும் பூசுவதாக டப்பாக்கள் சேதி சொல்லும். ஆனால் பார்க்கையில் தெரியவே தெரியாது. நகைகள் அணிவதை அறவே கைவிட்டிருந்தாள். அதுவே அவளுக்கொரு தர்பார் நடத்தும் ராஜ தந்திரியின் – மஹாராணியின் – தோற்றத்தை வழங்கியிருந்தது. அம்மாவிடம் அவள் தஞ்சமிருந்தாலும் அம்மாதான் அவளை அண்டியிருப்பதாகத் தோன்றும். அவளுடைய விருப்பத்திற்கே அப்பா மறைந்தபின் அம்மா தன்னை மாற்றிக் கொண்டாள். எனக்கு நினைவிருக்கும் காலத்திலிருந்து, ஜெபா அத்தையின் முகத்தோடுதான் வளர்ந்து வந்திருக்கிறேன். அம்மாவைவிடக் கூடுதலாக அவள் முகம்தான் எனக்கு அணுக்கமாகவும் இருந்திருக்கிறது. அம்மா பள்ளிக்குச் சென்றுவிட்டு வரும்வரை, இல்லை வந்தாலும்தானென்ன என்று சொல்லுமளவு ஜெபா அத்தை எனக்குப் போதுமானவளாக இருந்தாள்.

என்னை அடம்பிடித்து ஹோம் ஸ்கூலிங் பண்ண வைத்து, தனியாரில் பொதுத்தேர்வு எழுத வைத்தாள். அம்மாவுடைய தோழி – அவளுக்குக் கணவர் இல்லை, குடும்பம் இல்லை போன்ற மேலான கதைகளைத் தவிர அவளைக் குறித்துப் பெரிதாகத் தெரியாது. கேட்டும் சொல்லியதில்லை. நானும் தெரிந்துகொள்ள வேண்டும் என அலட்டிக்கொள்ளாததால் இருக்கலாம். ஆனால் நாளை திடீர் என அவள் கணவன் வரவிருக்கிறான் என்ற தகவலைக் கேட்டதிலிருந்து அவள் பெட்டியைத் திறந்துவிட வேண்டுமென்கிற ஆசை பறக்க வைத்தது. எங்கே அவன் வந்தால் அவனுடன் அத்தை போய்விடுவாளோ என்ற நடுக்கமும் பரவிக் கொன்றது. அம்மாவும் அத்தையும் கொல்லைப் புறத்தில் உடலின் மொத்த பாவனைகளும் கண்களிலிருந்து வழிந்து கொட்டும்படி உணர்ச்சிக் கொந்தளிப்போடு விவாதித்துக்கொண்டிருக்க, இதுதான் சமயமென அவள் அறைக்குள் நுழைந்தேன்.

எத்தனையோ முறை நுழைந்திருந்தாலும் அவள் அந்துருண்டை மனம் கவியும் மெத்தையில் புரண்டிருந்தாலும் அவளில்லாதபோது அறைக்குள் செல்ல எனக்கு அனுமதி கிடைத்ததே இல்லை. விக்டர் weds ஜெபா என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த மரப்பெட்டகம் இனியும் என் கையிலிருந்து தப்பிக்கப் போவதில்லை எனச் சத்தமின்றிப் பரணிலிருந்து இறக்கி வைத்தேன். அவ்வளவாக கனமில்லை. அவள் வளர்ந்த ஆசிரமத்தின் ஃபாதர் கல்யாணப் பரிசாகக் கொடுத்திருக்க வேண்டும். To my dear daughter – Fr. Proxidus எனக் கீழே எழுதியிருந்தது. இதையெல்லாமா கல்யாணத்துக்குப் பரிசு தருவார்கள் என நினைத்தபடி ஜன்னலை மெதுவாகத் திறக்க முயன்றேன். எத்தனை வருடமாய்ப் பூட்டப் பட்டிருந்ததோ திறக்கவே முடியவில்லை. அவளே, தன்னை இந்த அறையில் ஒரு பெட்டியாகத்தான் வைத்துக்கொண்டிருந்திருக்கிறாள். என்னையும்கூட, பத்து வயதுக்குமேல் இரவில் உடன்படுத்துக் கொள்ளவிடாமல் விரட்டுவாளே என யோசிக்கையில் எழுந்த ஆவலோடு, எங்கே அவள் வந்துவிடுவாளோ என்ற பதட்டமும் கூடியது. பூட்டு திறந்தேதான் மாட்டியிருந்தது. இருந்தாலும் கொக்கியிலிருந்து கழன்றுவர அடம்பிடிக்கவே எச்சிலை ஊற்றிப் பின் அவள் மேசையில் வைத்திருந்த தேங்காய் எண்ணெய்யையும் ஊற்றி ஒருவழியாகத் திறந்தேன். சிறு சிறு துணிகள், ஒரு கவுன் போட்ட சிறுமியின் பொம்மை – புராண காலத்திலிருந்து புறப்பட்டு வந்ததுபோல – அதோடு மூன்று பேப்பர்களும் கைக்குச் சிக்கின. அந்த இருளில் வாசிக்க முடியாதெனச் சட்டைக்குள் மடித்து வைத்தேன். பெட்டியை எடுத்தபடியே பரணில் வைத்துவிட்டு, மெல்லக் கீழிரங்கிய பேப்பர்களை டிவுரசருக்குள் மடக்கித் திணித்தபடி மாடிக்கு ஓடினேன்.

மொட்டை மாடியின் கிழக்கு மூலையில் இடப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸுக்குக் கீழே அமர்ந்துகொண்டு, கொல்லைப்புறத்தில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதையும் கேட்டுக்கொண்டு பேப்பர்களைக் கையிலெடுத்தேன். என் இடுப்பு வியர்வை நசித்ததில் கல்யாண பத்திரிகை கொஞ்சமே துவண்டு போயிருந்தது. அதில் ஜெபா அத்தை, அவள் கணவனது பெயர் மட்டுமே பரிச்சயமாய் இருந்தது.

அதற்கடுத்து இருந்தவை கடிதங்கள்தாம்! இல்லை அப்படிச் சொல்வது பொருந்தாது. அந்த மஞ்சள் நிறத்துக்கும் தொட்டால் கிழியும் தன்மைக்கும் ஓலை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

 

கடிதம் 2:

பிரியப்பட்ட ஜெபா,

இனி நீ சந்தோஷமாயிருக்கலாம். நான் சாது தேசத்துக்குப் போறேன். உனக்கு இனி விடுதலைதான்.                                                     

03.05.92                                                தேவ ஊழியன்

துறையூர்                                                    விக்டர்.


நீ நாளைக்கு வரலைனா இன்னும் சந்தோஷம்டா. ஆனால் அது என்ன தேசம் என்ற நினைப்போடு அடுத்த கடிதத்தைப் பிரித்தேன்.

கடிதம் 1:

கர்த்தருக்குள் எல்லோரும் சுகமாயிருக்கக் கடவது.

நலம்தானா ஜெபா. நலமாகத்தான் இருப்பாய். ஆனால் நான் நலமாகவும் இல்லை, சுகமாகவும் இல்லை. மடத்திலிருந்து கட்டிக்கொண்டு வந்தால் அடங்கியிருக்கும் என நினைத்தேன். உன்னைப் போல அமையும் என நினைக்கவே இல்லை. தேக சம்பந்தத்துல விருப்பமில்லாம ஏன் திருமணத்துக்கு சம்மதிச்சே. நாங்க வந்து கேட்டோம், அவ்வளவுதானே. உன்னைக் கட்டாயப்படுத்தலயே. என்னோடு படுத்திருக்க உனக்குக் கசக்குது. ஆனால் உன் விரலோட உனக்குப் பிரச்சனையே இல்ல. அதுவே போதும்னா, ஆம்பள எதுக்கு உனக்கு. ஒழுங்கா என்னோட சேர்ந்துவந்து வாழு. இப்படி உன் தோழி வீட்ல போய் உக்காந்திருக்கியே. ஊர் என்னய எப்படியெல்லாம் தப்பாப் பேசுது தெரியுமா… எனக்கு அவமானமா இருக்கு. நீ நல்ல பக்தியுள்ளவளா இருப்பனு நினச்சேன். கான்வெண்ட்லே நீதான் ரொம்ப ரொம்ப யோக்கியம்னாரு உன் ஃபாதரு. எல்லாம் பொய். ஆமா, உனக்கு என்னோட பேசுறதவிட வர்றவன் போறவன் கிட்டலாம் இளிச்சுப் பேசதான் சுகமாயிருக்கோ. சலவைக்காரன் துணிக்குடுத்தாக்கூட கைய உரசிட்டுத்தான் வாங்கிக்கிற. எனக்கு உண்மையிலே அந்த விரலுகள வெட்டித் துள்ள விடணும் போலருக்குத் தெரியுமா. ஆனா அப்படிச் செய்யிறவன் நானில்ல. நான் கடவுளுக்குப் பயந்தவன் உன்ன மாதிரி கிடையாது. இதுவரையும் இருந்ததெல்லாம் சரி. என்கிட்டகூட வேண்டாம். கடவுள்கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டு வந்துடு. நிம்மதியா இருப்போம். ஆனா மறந்துராத தாம்பத்யத்த மறுக்கக்கூடாது.

08.09.91                                                உன் அன்புக் கணவன்

துறையூர்                                                          விக்டர்.


கடிதத்தை வாசித்ததும் மிகப்பெரிய பாவம் செய்துவிட்ட உணர்வு சூழ்ந்துகொண்டது. மென்மையாய்க் கடிதங்களை மடித்து வைத்துவிட்டுப் பெட்டிக்குள் வைக்கவேண்டும் என நினைத்தேன். அத்தையை நினைத்தால் பாவமாக, கேள்வி பலவற்றுக்கும் பதிலாக இருப்பவளாய்ப் பட்டது. அவள் இன்னமும் அம்மாவிடம் பேசிக்கொண்டுதான் இருந்தாள். அம்மா அவளிடம் என்னவோ சொல்லி மன்றாடுவதைப் போலிருந்தது. அவள் அதை மறுத்தவளாகப் ’போனதும் வருவேன். வந்துதான் ஆகவேண்டும்’ எனச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

கண்களில் வழியா நீர்க்குமிழியாய்க் கண்ணீர் கோர்த்து நிற்க, அதை உடைத்து விடுவதைப் போல் அவள் விரலால் சீண்டினாள். லேசாய்ப் பூசப்பட்டிருந்த மையுடன் சேர்ந்து கன்னத்தில் வழிந்தது. அவளது விரல்கள் தாளகதியில் சேர்க்கப்பட்டிரா ராகத்தில் துள்ளி துவண்டு கொண்டிருந்தன. அவ்விரல்களையே மீண்டும் மீண்டும் பார்த்தேன். நீண்ட பச்சை மிளகாய்ப் போல் கூரான அழகிய விரல்கள். கருமண்ணை உழுவதைப் போல் அடக்கமாய் அலைந்த கூந்தல் கற்றையையும் அவ்வப்போது சரிசெய்து கொண்டிருந்தன. அவை அம்மாவின் பூசிய விரல்களைக் காட்டிலும் மிகவும் நளினமானவை. என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. காகிதங்களை எடுத்து என் உள்ளங்கையில் வைத்துக் கொண்டேன். என் விரல்கள் என்னையும் மீறி ஆவேசத்துடன் அதைப் பற்றின. கைகளை இறுக்கியும் தளர்த்தியும் நான் போராடியதை மீறி, திப்பித்திப்பாய் கடிதங்கள் கிழித்திப் போடப்பட்டிருந்தன. ’நான் கடவுளுக்குப் பயந்தவன்’ என்று பறந்த துண்டை மட்டும் எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வைத்துவிட்டுக் கீழ் இறங்கிறேன்.

மூவரும் சாப்பிடும்போது ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. வழக்கமான ஜெபத்தை அத்தை சொல்லச் சொல்ல, ‘பிரைஸ் தி லார்ட் அண்ட் தி ஹோலி மதர்’ என அம்மாவும் நானும் சேர்ந்து சொன்னோம். அம்மா உறங்கியதும் செஸ் போட்டை எடுத்துக்கொண்டு அவளது அறைக்குச் சென்றேன். கதவு திறந்தே இருந்தது.

’இப்ப வேணாம்டா.’

’சரி அத்தை. நான் கொஞ்ச நேரம் இங்க படுத்துக்கவா?’

‘வா…’ என கைகளை விரித்து அழைத்தாள். எப்போதும் இருந்திராத தயக்கத்துடன் அவள் கைப்பிடிக்குள் அடங்கப்படுவதை விரும்பாது, மடியில் தலைசாய்த்துப் படுத்துக்கொண்டேன். எனக்கு நெருக்கமான மணத்தில் செழித்து வளர்வதைப் போல் சுருங்கிச் சுருங்கி விரித்தேன். விரிவடையா மொட்டாய் அவ்வாசஸ்தலத்தில் உறைந்திருந்தேன். தலையைக் கோத வந்த விரல்களைப் பிடித்து ஒவ்வொரு விரலாக அழுத்தமாய் முத்தமிட்டு, ’என்னை விட்டுப் போய்டாதீங்க அத்தை. எங்கூடவே இருங்க, ப்ளீஸ்.’ என்று மீண்டுமாய் அழுந்த அவள் மறு கையின் விரல்களிலும் முத்தமிடத் துவங்கினேன். அவள் என்னை வினோதமாய்ப் பார்த்தாலும் முத்தமிடுவதை விலக்கவில்லை.

மறுநாள் காலை நான் அவளது மெத்தையில்தான் கண்விழித்தேன். அருகில் அவளில்லை. அத்தை அவளோடு என்னைப் பல வருடங்களுக்குப் பிறகு படுக்க வைத்துக்கொண்டாள் என்பதே பெருமிதம் தந்தது. அறையை விட்டு வெளிவந்ததும் அம்மா வீட்டைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

’என்னடா எட்டரைவரையும் தூக்கம். ரொம்ப நேரம் செஸ் விளையாண்டீங்களா… உன் அத்தெயும் போறோம்னு உன்ன அங்கேயே படுக்க வச்சிக்கிட்டாளாக்கும்’ எனப் பேசிக்கொண்டும் வாசலைப் பார்த்துக்கொண்டும் சுத்தம் செய்தாள்.

கிட்சனிலிருந்து வந்த அத்தை என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு கையில் காஃபி கொடுத்து விட்டுச் சென்றாள். அவள் வாய் அடைபட்டிருந்ததைப் போல், அமைதியாக – உட்கார்ந்தாள், வாசலைப் பார்த்தாள், சிரித்தாள் – அறையினுள் போய் வந்தாள்.

சாதாரணமாகப் போய் வந்தாளும் பெட்டியை இறக்கவே இல்லை. பயத்துடனே அந்தக் கடிதத்துண்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டேன்.

மதியம் உணவுவேலை கழிந்து, டவேரா ஒன்று வாசலில் வந்து நின்றது. அத்தை நகராமலும் முகத்தில் எந்த மாறுதலும் காட்டாமலும் சோஃபாவில் அமர்ந்திருந்தாள். யார் அந்த விக்டர் அவனைப் பார்க்க வேண்டுமே என வாசலுக்கு அம்மாவுடன் ஓடினேன். ஒரு பாட்டியும் இரண்டு பெண்களும் விக்டரும் வந்திருந்தனர். அவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டதிலிருந்து அவனது அம்மாவும் தங்கைகளும் எனத் தெரிந்தது.

’இது யாரு உங்க மகனா’ என்று கேட்டுக்கொண்டு என்னைத் தோளோடு அணைத்தபடி வாசல்படி ஏறினான். அவன் என்னைவிட ரொம்பவே உயரமாக இருந்ததை நினைத்து நொந்துகொண்டேன். அவன்மேல் மூடி வைக்கப்பட்ட ஆமணக்கு எண்ணெய் வாடை அடித்தது. தலையில் சுத்தமாய் முடிகளின்றி இருந்தான். உருண்டையாய்ச் செவத்த முகமும் நேர்த்தியாய் உடையும் அணிந்திருந்தான். நான்கு வார்த்தை சேர்ந்தாற்போல் பேசினால், வாயின் இரு எல்லைக் கதுப்பிலிருந்தும் எச்சில் தெறித்தது. ஆங்காங்கே சிவந்தும் கருத்துமிருந்தன உதடுகள். நிலைகுத்தாத விழிகளால் சகலத்தையும் ஆராய்ந்தபடியே இருந்தான். அத்தையைப் பார்த்த மறுகணம் அவனைப் பார்க்கையில் எங்கள் வீட்டுக் கெபியைக் காத்துக்கொண்டிருக்கும் சம்மனசையும் சாத்தானையும் சேர்ந்து கண்டது போலிருந்தது.

’என்ன ஜெபமேரி. இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கானேனு பார்க்குறீயா. இன்னும் பத்து வருசமானாலும் அவந்தானே உம் புருஷன்’ என்றாள் பாட்டி.

அத்தை எதுவும் பேசாமல் தான் சிரிப்பது போலி எனப் பிறருக்கு உணர்த்தும்படியாகச் சிரித்து மௌனமானாள். அவளுக்கு அருகிலேயே ஒரு பெரிய பயணப் பையையும் எடுத்து வைத்திருந்தாள். அவர்கள் ஊருக்குப் போக இங்கிருந்து ஐந்துமணி நேரம் ஆகுமாம். எங்களுக்குச் சாப்பாடு வேண்டாம் என டீ மட்டும் அருந்திவிட்டு எழுந்து நின்றுகொண்டனர்.

அம்மாவைக் கட்டிக்கொண்டு அத்தை அழுதாள். சத்தம் வராத அழுகை. நளினமும் உயர்வும் குடிகொண்ட அழுகை. எல்லா வேளையிலும் அவளால் இப்படியிருக்க முடியும்போது, இவனோடு ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்வி என்னைத் துளைத்தபடியே இருந்தது. என்னைப் பார்த்துவிட்டு மேலும் அதிகமாய் அம்மாவை இறுக்கிக்கொள்ள, நான் அவளது கைகளைப் பற்றிப் பிசைந்தவாறு நின்றேன்.

’பயப்படாதே ஜெபம். அப்பப்போ இவங்கள வந்து பாக்கலாம். அதுல என்ன இருக்கு. எல்லாம் கர்த்தர் கிருப. இத்தனை வருஷம் மிஷனெரியா இருந்ததுல, கத்துக்கிட்டதெல்லாம் ஒன்னுதான். அவர் நமக்குத் தேவையானதை நிச்சயம் நிறைவேற்றுவார்’ என அத்தையின் கையினை விக்டர் பற்றினான்.

அவள் தீப்பட்டதைப்போல் வெடுக்கென உதறிவிட்டு, பையைத் தூக்கிக்கொண்டு வாசலுக்கு நடந்தாள். எல்லோரையும் நிலம் குத்தியெடுத்ததைப் போல் பின்தொடர்ந்தோம். இறப்புக்கு அழாத துக்க வீடாக அமைதி அழுத்தியது.

காரில் அனைவரும் ஏறிட அத்தையும் விக்டரும் மட்டும் காருக்கு வெளியே நின்றனர். ஏறு ஏறு என அவன் சொல்லிக்கொண்டே இருந்தான்.

அவள் ஒருகணம் என்னைத் திரும்பிப் பார்த்ததும், ஓடிச்சென்று அவளைக் கட்டி அணைத்துக்கொண்டேன். என் சொத்தைப் பற்றிக்கொண்டதுபோல் அணைத்துக்கொண்டேன். அவள் கழுத்தளவே இருந்தும் அதிகாரத்துடன் எம்பி அணைத்து அவள் கன்னங்களில் முத்தங்களிட்டேன். அத்தை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு நின்றாள்.

அவள் விரல்கள் பரிவாய் என் தலையைக் கோதி, ‘வந்துடுவேன்டா கேபா, அழாதே. உன்னைவிட்டுட்டு எங்க நான் போவேன்’ என்கையில், விக்டரின் கண்வெளியெங்கும் அத்தையின் விரல்கள் செருகப்பட்டிருந்தன.

’வரணும்’ எனச் சொல்லிவிட்டு அம்மாவிடம் வந்து நின்றுகொண்டேன். அம்மா என்னை விசித்திரமாய்ப் பார்த்தாள். அத்தை, அதுவரை தூக்கிச் சுமந்த முகத்தை எறிந்துவிட்டு மலர்ச்சியோடு காரினுள் ஏறினாள். விக்டர் ஒரு சிறுவனைப் போல், என்னைப் பார்த்தும் பார்க்காமல் அவளைப் பின்தொடர்ந்தான். என் சட்டைப் பாக்கெட்டில் இருந்த ஓலையின் துண்டை எடுத்துக் கிழித்துவிட்டு, ’நான் எவனுக்கும் பயந்தவனில்லை’ என்று நினைத்துச் சிரித்தேன். மூன்றடி உயர்ந்து கழுகைப் போல் என்னால் அனைத்தையும் பார்க்கமுடிந்தது என்னையும் சேர்த்து.


 

எழுதியவர்

ஜார்ஜ் ஜோசப்
ஜார்ஜ் ஜோசப் என்கிற பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் ஜார்ஜ் இம்மானுவேல் ஜோசப். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். கவிதை, சிறுகதை, விமர்சனம் என இலக்கியத்தில் இயங்கி வருகிறார்
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x