1

வாணிபச்சாத்துபுரத்தின் வீடுகளெல்லாம் மாலையை வரவேற்கும் ஆவலுடன் மணி விளக்கு ஏற்றியிருக்கப் பிரகாசமாய்க் காட்சித் தந்தன. ஆமணக்குடன் கற்பூரத்தைச் சேர்த்துக் காய்ச்சியிருந்த மணம் கமழும் கேசத் தைலத்தைத் தலையில் பூசி, பின்னலிட்டுச் செம்பருத்தி சூடி மாடத்தில் நின்றுகொண்டிருந்தாள் கண்ணகி. நாள்தோறும் தேவந்தி வரும் நாழிதான் என்றாலும், இன்று ஏனோ அவள் கீச்சுக் குரலிலிருந்து பிரவாகமெடுக்கப் போகும் கதைக்காக ஏங்கிக்கொண்டிருந்தாள். 

‘அம்ம, நெய் கொஞ்சமே உள்ளதால் மாடத்திலும் வாசலிலும் மட்டுமே விளக்கேற்றியுள்ளேன். கொள்ளைப் புறமும் உள்ளறைகளும் இருளுடன்தான் இருக்கின்றன. பொறுத்தருள்க தாயே! நாளை மதி ஆய்ச்சியிடம் வாங்கி களத்தை நிரப்பிவிடுகிறேன்’ என்று புறப்பட்டாள் தாதி. கண்ணகி, அவளது தலையில் சூடப்பட்டிருந்த தீக்கொன்றைக் கொத்து, மெல்லிதாய் உடுத்தியிருந்த வெள்ளாடைக்கு எடுப்பாய் இருந்ததைக் கவனித்து, முறுவல் பூத்தாள். 

அதுபோலொரு உடை உடுத்தும் கொடுப்பினைத் தனக்கு அமையவே போவதில்லை என்று திடமாய் நம்பினாள். கொலுசணிச் சிணுங்க கண்ணகி என்ற விளியோடு, தேவந்தி மாடத்திற்கு ஏறி வருவதைக் கேட்டாள்.

‘வா தேவந்தி. இன்று எந்தக் கோயில் குளமெல்லாம் சுற்றி வந்தாய். உன்னவரைப் பார்க்க முடிந்ததா?’

சட்டென தேவந்தியின் முகம் வாடியதைப் போலாகிவிடவே, வார்த்தைத் தடிப்புற்றதை எண்ணி கலங்கிப் போனவளாய் மூங்கில் இருக்கையில் அமரச் சொன்னாள். தேவந்தியும் கண்ணகியின் அருகிலமர்ந்து அவள் காதினருகே சலம்பும் கூந்தல் கற்றையை ஒதுக்கிவிட்டு, ‘இன்று பௌர்ணமி என்பதால் கடற்கரை அருகிலுள்ள சோம குண்ட, சூரிய குண்ட பொய்கைகளைச் சுற்றி வந்தேன் தோழி. மடந்தைகள் அணியணியாய் வெண்ணுடுப்பில் மூழ்கியெழுந்து, கழிமுகத்தை ஒட்டியிருந்த மன்மதன் கோயிலுக்குச் சென்று வணங்கிய மகிழ்வுடன் வீடு திரும்பினர். கணவனைப் பிரியாத பலரும்கூட அதில் இருந்தனர். இம்மையிலும் மறுமையின் போக லோகத்திலும்கூட உற்றானுடன் இன்புறுதல் வேண்டும் என எவ்வளவு ஆசை இவர்களுக்கு. நமக்கெல்லாம் பார்க்ககூட வாய்ப்பதில்லை.’ என வலியை மறைத்துச் சிரித்துக்கொண்டாள். 

இந்த ஆடவர்க்கெல்லாம் நாம் ஏன் இப்படி ஏங்கிக்கொண்டும் காத்துக்கொண்டும் இருக்க வேண்டுமென இத்தனை விருப்பம்? எட்டு ஆண்டுகளாகத் தோன்றும் வேளை வருகிறார், போகிறார். முகம் பார்த்துக்கூடப் பேசுவதில்லை. என்ன உடுத்தியிருக்கிறேன், எந்தப் பூச் சூடியிருக்கிறேன் என எதுவும் அவர் மனதில் தங்குகிறதா என்று தெரியவில்லை. இறுதியாய் ஐந்து திங்களுக்கு முன் மணிமேகலை விளையாடவெனப் பொன்யானைச் சிற்பத்தை எடுத்துக்கொண்டு போனதோடு சரி. ஒரு மோர் அருந்தக்கூட அவருக்கு இந்த வீட்டில் விருப்பமில்லை போல. மிலேச்சருக்குக்கூட காட்டாத அன்னியத்தை என்னிடம் ஏன் காட்டுகிறார். மகளையாவது அழைத்துக்கொண்டு வரலாமல்லவா! பிஞ்சை வெறுக்குமளவு நஞ்சேறிவிட்டதா எனக்கு! கடைவீதியில் அந்தத் தாய் சித்ராபதியுடன் நடந்துபோனாளே குழந்தை. என்ன அழகு முகம் அவளுக்கு! அவள் அம்மாவைப் போலவே நீண்ட கூந்தலுடன் சுற்றித் திரிந்தாள். எவ்வளவு பெரிய அறிவரும் அதுபோலொரு குழந்தைக்குப் பிணையாய்க் காலம் முழுதும் தவமிருக்கச் சொன்னாலும் இருப்பார்கள் அல்லவா. அப்பிஞ்சு உங்கள் உதிரமெனில், எனக்கும் உரித்ததுதானே. அள்ளியெடுத்துக் கொஞ்சிடக்கூடத் தருணம் அமையாத பாவியாகிவிட்டேன் என நினைத்தவாறு பின்னலிட்டிருந்த கூந்தலை உருவி முன்னிழுத்துப் போட்டுக்கொண்டாள். தொப்புள்வரை சுருள்சுருளாய் மலர்ந்து அசைந்தாடியது. பிட்டம் தாண்டி விழும் ஆடலரசியின் அடர்கூந்தலும், பிசிறில்லாத அவளது பால் வண்ண முகமும் கண்முன் நின்று கவலைக்குள்ளாக்கியது.

‘என்ன நான் பேசிக்கொண்டே இருக்கிறேன். நீ அமைதியாக இருக்கிறாயே?’

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. சரி சொல். என் கணவருக்குத்தான் நான் கசந்துவிட்டேன். உன்னவருக்கு என்ன? கொல்லேற்றின் திமிலை அணைக்கும் கோமகன் போலல்லவா உன்னோடிருந்தார்!’

‘அது ஒரு சாப நீக்கப் பிரிவு கண்ணகி. தற்காலிகத் துறவு. உனக்குத்தான் அவரது பிறப்புப் பற்றி நன்றாகவே தெரியுமே?’

ஒன்றும் பேசாது அவளை இடையோடு அணைத்துக்கொண்டு தோளில் தலைசாய்த்துக்கொண்டாள். துறவு, பிரிதல் போன்ற சொற்களெல்லாம் எந்தளவு அவளைக் காயப்படுத்தியதோ அதைவிட மேலாய்த் தற்போது ஈர்க்கத் தொடங்கியிருந்தது. திருவாதிரை உடு அதிகாரமாய் விண்ணில் மினுங்கிக் காட்ட, மருதாணியால் சிவந்திருந்த மல்லி மொக்கைப் போன்ற கண்ணகியின் பாத விரல்களை மிருதுவாய்ப் பிடித்து நீவினாள் தேவந்தி.

 

2

மாடல மறையோனின் இரண்டாம் மனைவியான மாலதியின் மகன்தான் என் கணவன். ஒருவகையில் முதல் மனைவியான பூதகியின் மகனும்கூட. பூதகிக்கு ஏற்கனவே இப்பிள்ளை பிறக்கும்முன் இரு ஆண் மகவு பிறந்து மறைந்திருந்தன. அவள் இல்லுறை தெய்வத்தை வணங்க தோட்டத்தில் முல்லை கொய்யச் சென்றிருக்கையில், முற்றத்தில் அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை பெரியநல்லான் பசியில் அழத் தொடங்கினான். சிற்றன்னையான மாலதிக்குப் பெண்பிள்ளை பிறந்து மூன்று திங்களே கழிந்திருந்ததால், பிள்ளையின் பசி கருதி அவரே பாலூட்டியிருக்கிறார். பால் விக்கி குழந்தை மாண்டுவிடவே, குழந்தைக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற கலக்கம் ஒருபுறமிருக்க; மாற்றாளுக்கு மகன் பிறந்ததால் அறமின்றிப் பொறாமையால் கொன்றுவிட்டதாய்ப் பழிபாவம் வந்து சேருமே என்ற அச்சமும் எழுந்தது. யாருக்கும் தெரியாமல் பலதேவர் கோயிலில் இருக்கும் தனது கணவரை நோக்கி மாண்ட குழவியைத் தூக்கிக்கொண்டு அழுகையுடன் ஓடியிருக்கிறார். 

குழந்தை உயிர்பிழைத்தால் துறவு பூண்டுவிடுகிறேன் என மறையோனும், மண்டியிட்டு பலதேவரிடம் கெஞ்சியும் ஒன்றும் நிகழவில்லையாம்.’ என்று தான் தொடர்வதை நிறுத்திய தேவந்தி,

‘அதெப்படி தோழி முதல்முறை கேட்பதைப் போலவே உளங்கூர்ந்து கேட்கிறாய். இனி நான் சொல்ல மாட்டேன். நீயே நிறைவு செய்.’ என்றாள்.

கண்ணகி குறுநகை பூத்தவளாக, ‘பிறகென்ன, பார்ப்பானும் அம்மையும் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு கற்பக தரு கோயிலுக்கும், ஆலமர் செல்வன் உறையும் ஊர்க்கோட்டத்துக்கும், முருகவேள் இல்லத்துக்கும், கொற்றவை வாயிலுக்கும், ஐராவதக் கோட்டத்துக்கும், அருகர் நிழல் முற்றத்துக்கும், ஏறி இறங்கியும் இரக்கம் பெறாமல் போகவே, இறுதியாய் ஊர்ப்புறம்பே சுடுகாட்டுச் சுனைக்கருகே விண்ணைக் கூரையெனப் பாவித்து நிற்கும் சாத்தன் கோயில்முன் பிள்ளையைக் கிடத்திப் பாடு கிடந்தனர். சாத்தன் மனமிரங்குவதற்கு முன் இடாகினிப் பேய் உன் குட்டிக் கொழுநனை விழுங்கியே விட்டது. கதறித் துடித்துத் தன் உயிர்ப்போகட்டுமெனச் சாத்தனின் கற்கால்தனில் தலையை முட்டிக்கொள்ளும் சிற்றாய் மாலதிக்கு மனமிரங்கிய சாத்தன், ‘அஞ்ஞையே நீ ஏங்கி அழாதிரு,’ எனக் குயில்கள் கூவும் சோலையில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி அங்கே நானே உன் பிள்ளையாய் வீற்றிருக்கக் காண்பாய் என்றது.’ என்றாள்.

‘மேலும் சொல். அருமையாய்ச் சொன்னாய். நான் இல்லாவிட்டாலும்கூட உன்னால் இவ்வுண்மை வாழும் அன்னாய். அந்த நம்பிக்கை இன்று வந்துவிட்டது.’

‘அதன்பின், சோலையில் பிள்ளையிருக்கக் கண்ட மாலதியும் அவள் கொழுநனும் பூதகியிடம் பிள்ளையை நீட்டி நடந்ததையெல்லாம் சொல்லி உருகினர். பூதகிக்குப் பிள்ளையிடம் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. அவள் எவ்வித விகற்பமும் காட்டவில்லை. பெரியநல்லான் அல்லது அப்புதியநல்லான் அப்படியாய்ப் பார்ப்பனப் பிள்ளையாய் வளர்ந்தான். தந்தையைப் போல் பலதேவர் கோயில் படியேறாமல், சாத்தனின் தொண்டனாய் மாறிப்போனான். அருந்தவச் சாத்தன் எனப் பெயர் பெற்று, பேரழகியான தேவந்தியின் கணவனுமானான்…’

‘அதற்குமேல் எதுவும் சொல்லாதே’ என கண்ணகியின் இதழ்களைப் பொத்தினாள் தேவந்தி.

3

விரிசடை அலைய, கண்களில் தேட்டம் மிளிர சந்தனம் பூசாத மார்புடன் வேகமாய் சாத்துபுரத்தினுள் நுழைந்தான் கோவலன். மாடத்திலிருந்து அவனையே உற்றுப் பார்த்தும் அவனில்லை என்ற உணர்வே கண்ணகியைப் பற்றியிருந்தது. அதுபோல் பல்லாயிரம் முறை அவனுருவைக் கண்டிருக்கிறாள். வாசல்வரை வரும் மிடுக்கும் செறுக்கும் நிரம்பிய அவன் தேகம், அப்படியே மறைந்துபோயிருக்கக் கண்டிருக்கிறாள். தேவந்தி சென்ற பிற்பாடும் அவளுக்கு அறைக்குத் திரும்பி துயில் கொள்ளத் தோன்றவில்லை. விளக்குகள் ஏற்றித் தங்கள் கணவர்களுக்காக வாசலில் காத்திருந்த சேயிழைப் பெண்டிர் யாவரும் இல்லம் ஏகிவிட்டனர். நாள் முழுதுமான அவர்களது காத்திருப்புக்கான பதில் சந்திரன் சற்றே மேற்கில் ஏறியதும் ஈடேறிவிட்டது. தனக்கோ அது என்றும் நிகழாத அதிசயம் என்றவளாய், அவ்வுருவை மீண்டும் காணத் திரும்பினாள். அதன் தடமே தெரியாமல் மறைந்திருந்தது. இன்றும் நீங்கள் கானலாகத்தான் வந்திருக்கிறீர்கள்போல. அப்படியேனும் சிறிது நேரம் என்னுடன் அமர்ந்துவிட்டுப் போகக்கூடாதா! எனக் கண்களை மூடி நின்றாள். அவளது தோள்களை அழுந்தப் பற்றின கோவலனின் கைகள்.

அவளால் பதில்தர முடியவில்லை. அவன் தன்னை இறுக்கமாய்ப் பிடிப்பதிருப்பது மெய்தான்  என்று உணர்ந்ததும் கண்களிலிருந்து நீர் பொங்கியது. துடிப்புற்று அவளுடல் நடுங்குவதைக் கண்டவன்,

‘அழாய்… கண்ணகி. அழாய்…’ என்று தன் பிடியை இலகுவாக்கி நெருங்கி வந்தான்.

பல்சாண்டச் சாத்தன் மாலதியைத் தேற்றியதைப்போல அவன் மொழி இருந்ததை நினைந்து கண் திறந்தாள். 

‘கண்ணகி. நான் மதியீனன். இத்தனை ஆண்டுகள் உன்னை நினைக்காமல் என் சுகமே பெரிதென இருந்துவிட்டேன். எத்தனை பொய் என் உடலின் விருப்பும் அதன் அலைக்கழிப்பும். குற்றக் கொள்கலனாக அல்லவா அது இருந்துவிட்டது. அது அண்டிய யாவும் என் பற்றாகிவிட்டதே. உன்னைத் தவிர எல்லாமும் அதன் பிடியிலிருந்தது. இப்போதும் நான் மீண்டுவிட்ட நல்லனாய் இங்கு வந்தேன் என்று சொல்ல முடியுமா? என்னையே உலகென எண்ணி காத்திருப்பவளிடம் அப்படி ஒரு பொய் உரைக்கலாகுமா! ஏமாந்ததால் இங்கு வந்தேன். ஆயினும் அதுமட்டுமல்ல. இனி ஏமாறாமல் தூய வாழ்வையும் உண்மையான காதலையும் அனுபவிக்கவே உன்னிடம் வந்தேன். பார் கண்ணகி இப்போதும் என் விருப்புதான் முன்னிற்கிறதல்லவா. என்னைப் பொறுத்தருள்க. உகந்த பாதணிகளைக்கூட இழந்த, ஒன்றுமில்லாதவனாய் மாறிவிட்டேன். கூடாச் சேர்க்கையினால் மாசாத்துவக் குடியின் அரும்பெருஞ்செல்வத்தை எல்லாம் இழந்துவிட்டேனே!’ எனத் தலைகுனிந்து நின்றான்.

‘வருந்தாதீர்கள். எது இல்லையாயினும் என் சிலம்புள்ளதே. அதை எடுத்துச் செல்லுங்கள்’ எனக் கழற்ற முனைந்தாள். அப்போதும்கூட தான் கணிகைக்குச் செலவழிக்கவே எழ்மை பாடுவதாக எண்ணி, சிலம்பை அவிழ்க்கத் துணிந்த கண்ணகியை நினைத்து நைந்து போனவன், 

‘ஆம் அது எனக்கு வேண்டும்தான். எடுத்துக்கொண்டு செல்வதற்கல்ல, அதை அணிந்தவளின் கைகளைப் பற்றிக் கூட்டிச் செல்ல. இனி நாம் சேர்ந்துதான் இருக்கப்போகிறோம் கண்ணகி. இந்த நாடும் இந்தக் கேளிக்கைகளும் என் கண்முன்னால் தெரியும் தோல்வியும் இழப்பும் எனக்குக் கசந்துவிட்டது. இனி இங்கு என்னால் இருக்கவே முடியாது. என்னோடு வருவாயா?’

இறுதியில் அவன் வலக்கையிலிருந்த குல மோதிரத்தில் முத்தமிட்டு, ‘நீர் எங்கு அழைப்பினும் நான் வருவேன், அதற்காகத்தானே காத்திருந்தேன்,’ என்றாள்.

4

கோழியூர் கடந்து கூடலூர் செல்லும் சாலையின் இருபுறமும் புங்கையும் வேம்பும் சூழ்ந்திருந்தன. வெயில் பாந்தமாய் உஷ்ணமூட்டியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வணிகப் பொருட்களை ஏந்திச் செல்லும் எருது பூட்டிய வாகனங்கள் அசைந்துகொண்டிருந்தன. பயணிகள் கையில் உணவுடனும் குடுவையில் நீருடனும் பெருநிழல் தரும் மரங்களின் கீழ் இதம் கண்டனர். நகர வீதியில்கூடப் பெரிதும் நடந்து பழகியிராத கண்ணகிக்குக் கால் நோவெடுத்தது. தன் தந்தைக்குச் சொல்லியிருந்தால் உதவிக்கு வாகனம் அனுப்பியிருப்பார் என்று நினைத்தாலும் அவள் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. கோவலன் தன் வசம் திரும்பியதும் அவ்வப்போது அவளை ஆசையோடு பார்ப்பதும், சமயங்களில் கிள்ளி விளையாடுவதும் ஆதுரமாய் இருந்தது. அப்போதுதான் புதிதாய் மணமாகியிருந்த உணர்வில் இருந்தனர்.

அவளுடனும் இப்படித்தான் இருந்திருப்பாரோ. அவள் அங்கங்களைச் சீண்டி விளையாடியவாறும் பழித்தல் காட்டி வம்பிழுத்தவாறும் தங்கியிருப்பாரோ. இப்படி விளையாடும் ஆடவனை எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காமல் போகும். மாதவி மேல் கோபம் கொள்ளவோ, வருந்தவோ எனக்கு என்ன இருக்கிறது. முறைத்துக்கொண்டால் இவரிடம்தான் காட்ட வேண்டும். இவரிடம் எப்படிச் சினப்பது! என்று மென்நகை உதிர்த்தவாறு அவன் விரல் பிடித்து நடக்கலானாள்.

வழியே எதிர்ப்பட்ட பொய்கையில் அவன் நீராடலாம் என்று சொன்னபோது தயங்கியவளாய் ஒதுங்கி நின்றுகொண்டாள். பொய்கையின் பக்கவாட்டில் அமைந்திருந்த கல்மண்டபத்தில் முடி சிரைக்கப்பட்ட பெண் துறவி அமர்ந்திருந்ததைக் கண்டு அவளருகில் சென்று தங்கினாள். கோவலன் தன் மேலாடை களைந்து, நீரினில் குதித்தான். விடலையின் ஆர்வம் அவனிடம் இன்னமும் எஞ்சியிருப்பதை, நீந்துதல் காட்டித்தந்தது.

‘இப்படி நெருங்கி வா பெண்ணே. உன் பெயர் என்ன?’ என்று அழைத்த பெண் துறவியை அண்டி அமர்ந்தாள் கண்ணகி. வெண்ணாடை உடுத்தியிருந்தவர் கைகளில் ஓர் மணி மாலை உழன்றுகொண்டிருந்தது. கூந்தலமைய துறவியின் முகத்தை எண்ணிப் பார்த்தாள், யாரும் மறுக்க முடியாத பேரெழில் கொண்ட முகம்தான்.

‘என் பெயர் கண்ணகி. மாநாய்கனின் மகள், பெருவணிகர் மாசாத்துவனின் மைந்தரான கோவலனின் மனைவி. உங்கள் பெயரென்ன தாயே?’

‘ஓ அதோ பொய்கையும் தானும் ஒன்றாய் மாறியுள்ளாரே அவர்தானா உன் கோவலர்!’

‘ஆமாம்.’

‘உன் கணவருக்கு இப்போதுதான் ஆடலரசியின் இணக்கம் கசந்ததுபோல!’

‘அம்மா. உங்களுக்கு எங்களை முன்பே தெரியுமா?’ என்று அச்சத்துடன் துறவியின் கண்களை உற்று நோக்கினாள்.

‘ஆம் பெண்ணே தெரியும். நானும் உங்களூரைச் சேர்ந்தவள்தான். மலடி என முத்திரைக் குத்தப்பட்டவள். கணவன் இறந்த பின், அருகனது காட்சிப்பெற்றுத் துறவியானேன். மலடி என்று இழிவுபடுத்தப்பட்ட கவுந்தி, இப்போது கவுந்தியடிகள் ஆகிவிட்டேன் பிள்ளாய். என்னைத் தாயென்று அழைத்த முதல் உயிர் நீதான். ஆமாம் நீங்கள் உங்கள் செல்வ நிலத்தையெல்லாம் விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்கள்?’

கோவலன் குளத்தின் மத்தியில் தன் இரு கைகளால் அகவியும் அப்பெரிய தாமரையைக் கிள்ளியெடுக்க முடியாமல், அடிக்கிழங்கை உடைத்து எடுத்துக்கொண்டு நீந்தியவாறு மண்டபத்தினருகே ஒதுங்கினான். கண்ணகி அவனிடம் நீட்டிய தோள்சீலையைச் சுற்றிக்கொண்டு, கவுந்தியடிகளை வணங்கினான்.

‘நலமாக வாழ்க. நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று உன் மனைவியிடம் கேட்டேன். அவள் ஒன்றும் பதில்தரவில்லை. நீயாவது சொல்வாயா?’

‘பொறுத்தருள்க தாயே. அவளுக்கு நான் கூட்டிச் செல்லும் இடம் குறித்துத் தெரியாது. என் மனைவி அவள் சொந்த நிலத்தையே முழுவதும் அறியாதவள். அண்டை நாட்டின் தலைநகராகிய மதுரை குறித்து அவளால் யாது சொல்ல முடியும். சரி தாயே, நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?’ என்று அவரிடம் வினவியபடி, கண்ணகியைப் பார்த்து முறுவலுடன் தாமரையை நீட்டினான். 

மலர்ச்சியுடன் வாங்கி நன்கு விரிந்த பூவின் இதழ்களை முகர்ந்துகொண்டாள். இந்த மலர்களின் குளிர்ச்சியையும் மணத்தையும் எப்படித்தான் பெண்கள், கணவனின் மறைவுக்குப் பின் இழக்கத் துணிகின்றனறோ என்ற சிந்தை அவளுக்கு எழுந்ததும், திடுக்குற்று வருந்தியவளாய் கணவனின் கைகளுள் தன்னுடலை மறைத்துக்கொண்டாள். கண்கள் அனிச்சையாய் நீரைக் கொட்டின.

‘அழாதே கண்ணகி. நான்தான் உடனிருக்கிறேனே வேறென்ன கவலை உனக்கு. பார் இந்தத் தாயார் பார்த்துக்கொண்டிருக்க நீ சிறு பிள்ளைப்போல் அழலாமா?’ என்றான். கண்ணகி பதிலேதுமின்றி அவனையே பார்த்தாள்.

‘கோவலா, நீ எப்போதும் அவளுடன் இருக்க முடியாதல்லவா அதுதான் பிள்ளை தேம்புகிறாள்.’

‘என்ன சொல்கிறீர் தாயே, நான் எப்போதும் அவளுடனிருக்கத்தான் போகிறேன்’ என்றவன் மீண்டும் அவன் மாதவியிடம் செல்லக்கூடும் எனக் குற்றஞ்சாட்டி கவுந்தியடிகள் பேசியதாக நினைத்துக்கொண்டான். ஒருகணம் மாதவி இப்போது உடனிருந்தால், அவளும் தச்ன்னுடன் தயங்காமல் நீராடியிருப்பாளே என்ற சிந்தை அவனுள் ஓடி மறைந்தது.

‘ஆடவனாகிய நீ, பொருள்வயின் அவளைப் பிரிய நேரும்தானே, அதைக் குறித்துதான் சொன்னேன். வீணாய் கலங்காதே. நானும் மதுரைதான் செல்கிறேன், உங்களுக்கு நான் உடன் வருவதில் ஏற்பெனின், சேர்ந்து போகலாம்’ என்றார்.

மூவருமாக, அப்பொய்கையை விட்டு நீங்குகையில், நண்பகல் வேளையாகியிருந்தது. கடந்த தினங்கள் ஆங்காங்கே கோழியூரைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த பயணியர் தங்குமிடத்தைப் பயன்படுத்திக் கொண்டதைப்போல, மதுரைப் புறநகர்ப் பாதையிலும் இருக்குமா? என்ற கேள்வியுடன் நகர்ந்தான். ஒல்லையூர் வழியாகவோ பொற்பனைக்கோட்டை வழியாகவோ செல்லாமல் கோழியூர் பாதையைத் தேர்ந்தது அதிக சுற்று எனினும் அவனுக்கு இதுவே சரியான முடிவாகத் தோன்றியது. கான்வழியையும் மலையையும் கண்ணகியின் கிள்ளைப் பாதங்களால் நிச்சயம் கடக்கவே முடியாது என்று யோசித்தவாறு கவுந்தியடிகளின் சிறுபொதியையும் தன் தோளில் மாட்டிக்கொண்டு முன் சென்றான்.

5

துரை திரிசங்கத் தெருவில் அல்லங்காடிகள் பகல்போல் விளக்கொளிகளால் மின்னிக்கொண்டிருந்தன. பொற்கொல்லர்களுக்குகெனச் சிறப்பாக ஒதுக்கப்பட்ட கிளைத் தெருவின் முனையில் நின்றபடி, கண்ணகி முன் மண்டியிட்டு அவளது காற்சிலம்பில் ஒன்றைக் கழட்டியவன், தன் கையில் இருந்த செம்புக்காப்பை அணிவித்துவிட்டு அவள் முகம்பார்த்துச் சிரித்தான். 

அவளுக்கு அவனை மடிமேல் ஏந்தி, பச்சிளம் பாலகனைக் கொஞ்சுவதுபோல் முகர வேண்டும் போலிருந்தது. சிறுவயதில் அடங்கமறுத்த கணியனார் வீட்டு மதம் கொண்ட யானையை, அடக்கிய வேகத்துடன் வாகை மாலை சூட்டப்படத் தெருவில் வீர நடை நடந்த அதே கோவலனை, புறம்காட்டி பொற்கொல்லர் வீதியில் கம்பீரமாய் நடக்கையிலும் கண்டுகொண்டாள்.

அவளை அவன் நெய் விற்கும் ஆயர்குல மூதாட்டியின் துணையில் விட்டுச் சென்றிருந்தான். அம்மூதாட்டியின் அருகில் இடப்பட்டிருந்த சிறு கும்ப வடிவிலான நார்க்கூடையில் அமர்ந்துகொண்டாள் கண்ணகி.

அவளது கண்ணிற்கு மறைந்தும் மறையாத நிழல் தொலைவில் அவன் இருக்கையில், புது வாழ்வு தொடங்கப் போகிறது என மகிழ்வும், யாமத்தை நெருங்கும் குளிர் காற்றினால் விளைந்த வாதையும் மாறிமாறி வந்துபோனது. ஒருகணம் நகர் எல்லையில் தானும் கவுந்தியடிகளும் கோபித்துக்கொள்ளாதிருந்தால், கோவலன் சார்வாகர்களின் களிக்குடிலைவிட்டு வந்திருக்கவே மாட்டாரே என்று நினைத்துக்கொண்டாள். களிமகன் என்றவள் செல்லமாய் அழைத்துப் பார்த்துச் சிரித்துக்கொண்டாள்.

‘தாயி, இந்தச் சிரிப்பின் அர்த்தம் என்ன?’

‘ஒன்னுமில்லை ஆயா! கணவரின் குறும்பை நினைத்துச் சிரித்தேன்.’

‘அப்படியா. இந்த அகவையில் இருக்க வேண்டியதுதான். புகார்ப் பெண் என்றுதானே சொன்னாய். உண்மையிலே சோழப்பெண்கள், பாண்டிய குமரிகளை விடவும் அழகுதான்’ என்று கண்ணகியின் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டாள். 

மஞ்சள் பூத்த முகமாய் இனி நிகழ விரும்பும் இன்பங்களை எண்ணிப் பூரிப்புடன் அவன் சென்ற திசையையே நோக்கினாள். அவள் அமர்ந்திருந்த தெருமுனையிலிருந்து தெற்கு கோணத்தில், தினை விளைச்சல்களை விற்கும் கூலவாணிகக் கடைகள் ஆடம்பரமாய்ப் பரவியிருந்தன. அங்கிருந்த மதுரைக் கூலவாணிகச் சாத்தன் என்னும் அசையும் பெயர்த் துணி தாங்கிய அங்காடியின் கீழிருந்த வணிகர், ஓலையில் என்னவோ குறித்தபடியும் தன்னைப் பார்த்தபடியும் இருந்ததைக் கண்டுகொண்டவள் மீண்டுமாய் கோவலன் சென்ற திசையை நோக்கினாள்.

சிறிது நேரத்திலெல்லாம் பொற்கொல்லர் தெருவில் பெருங்கூச்சலும் சத்தமும் உண்டாயிற்று. அவள் அச்சத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாததை எண்ணி மனமிரங்கிய ஆயர்குல மூதாட்டி அவளுடன் சேர்ந்து கோவலனைத் தேடி முன்னகர்ந்தார்.

6

சார்வாகக் குடியேற்றத்தின் அருகே இருந்த பெருஞ்சுனையில் தன் உடையினை உதறிவிட்டு இறங்கியிருந்தார் கவுந்தியடிகள். பொதிகை மலையூற்றுப்போல் பெருக்கெடுத்துக் கொட்டும் கண்ணீருடன் நீரில் மூழ்கி அமரவும், அவள் உடல் கடலாலானதுபோல் உப்புக்கரைசலை வெளியிட்டு நீரோடு நீராகக் கரையத் தொடங்கியது. அவள் செவிப்பறையில் ‘தாயே’ என்றழைத்து வந்த தம்பதியின் குரல் சன்னமாய் அரவத்தின் நடனத்தைப் போல் அசைந்தது. 

7

கூட்டத்தை விலக்கிய மூதாட்டி கண்ணகியின் கையைப் பிடித்து முன்னுக்கு இழுக்கவே, கோவலனின் திடமான பிடியிலிருந்த அவளது மாணிக்கப் பரல் உறங்கும் சிலம்பு, பட்டு ஜரிகைத் தலைப்பாகைக் கட்டிய முதியவரால் பிடுங்கப்பட்டது அவளுக்குத் தெரிந்தது. அதை மீட்கும்படி கோவலன் திரும்பும்கணம், அவனைச் சூழ்ந்து நின்றிருந்த காவலாளிகளின் ஒருவன் தன் உறைவாளை உருவி பின்புறத்திலிருந்து தெளிவுற கோவலனது தலையைச் சீவித் துண்டாக்கினான்.

அழுகையோ, அச்சமோ, மயக்கமோ எவ்வுணர்வுமில்லாத சவம் போல் மெதுவாய் முன்னகர்ந்து சென்ற கண்ணகி, அவனின் சிதையுண்ட உடலை ஏந்தித் தன் மடியில் கிடத்தி, அருகில் ஒப்பனைப் பொருள்போல் நின்றிருந்த கணவனது தலையைக் கையில் பிடித்துப் பார்த்தாள். துண்டாக்கப்பட்ட கவந்தத்திலிருந்து ஆர்ப்பரித்த குருதி, அவள் சுமந்திராத ஒரு துளியின் பல்துளி வடிவமாய்ப் பீச்சியடித்தது. மறுமையிலும் இன்பம் துய்க்கும் போகக் குளத்தில் மூழ்கினாற்போல் வீச்சம் பொருந்திய குருதிச் சுரப்பில் மூழ்கலானாள். யாமம் தன் இயல்பு வண்ணத்தைத் துறந்து சிவப்பை ஆடையென உடுக்கத் தொடங்கியது.


 

எழுதியவர்

ஜார்ஜ் ஜோசப்
ஜார்ஜ் ஜோசப் என்கிற பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் ஜார்ஜ் இம்மானுவேல் ஜோசப். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். கவிதை, சிறுகதை, விமர்சனம் என இலக்கியத்தில் இயங்கி வருகிறார்
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x