25 July 2024

ன்ஸ்பெக்டர் வந்ததும் அழைப்பதாகச் சொன்னார்கள். அனைவருமாக வெளியே வந்தோம். எனக்கு இந்த ஏரியா ஒரு காலத்தில் மிகுந்த பழக்கம். இப்போதும் இருக்கிற தேநீர் கடைக்கு அழைத்துச் சென்றேன். ஆட்கள் எல்லாம் மாறியிருக்கிறார்கள். இந்தக் கடையின் மாடிக்கு ஓடி ஏறின ஒருத்தனை துரத்திச் சென்று அவன் சட்டென்று கீழே குதிக்கவே, அவனைத் தொடர்ந்து குதித்த விக்டர், சரியான ஒரு பஞ்ச் கொடுத்து வீழ்த்தினான். அவன் இந்த ரோட்டில் தான் மல்லாந்து கிடந்தான். நான்தான் அப்புறம் கைகொடுத்துத் தூக்கி விட்டேன்.

“தாசா ! ”

“ம்”

“டீ ய வாங்கிக்க”

நான் தேநீரில் நேற்றைய சுவையை ஆழ்ந்திருந்தபோது பழைய பழக்கத்தின் பேரில் எங்களைக் கடந்து போன ஒருவர், புன்னகை செய்தார். நான் ஸ்டேஷன் வரை வந்திருப்பதாகச் சொன்னேன். அவர் போன பிறகு பெரிதளவில் மாற்றம் அடைந்திராத அந்தப் பகுதியைப் பார்த்து நின்றேன். இங்கே இருந்தபோது நான் எழுதுகிறவன் என்பதிலிருந்து எதைப் புரிந்து கொண்டார்களோ, தெரியாது. என்னிடம் தினம் ஒருவராவது வந்து புகார் மனு எழுதி வாங்கிக் கொண்டு போவார்கள். இப்போதும் ரைட்டருக்கு முன்னால் அமர்ந்து எழுதிய புகாரை அவர் கொஞ்சம் யோசனையுடன் பார்த்தது அதில் கொஞ்சமாக இருந்த மசாலாவை புரிந்து கொள்ள முடியாமல் தான்.

புகாரில் இருந்த விஷயத்தை எந்த அளவிற்குத் தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியும் என்பது இனிமேல் தான் தெரியும். என்னருகில் இருந்து பட்டர் பிஸ்கெட்டைத் தின்று கொண்டிருக்கிற பாஸ்கரனின் மகன் சரணும், அவனுடைய நண்பன் அபியும் ஒரு பிரியாணிக் கடை போட்டார்கள். ஒரு வாரம் கூட ஆகவில்லை. இரவு விளக்குகள் அணையாது பகல் போலிருக்கிற அந்தச் செல்வாக்குள்ள பகுதியில் இரவுக் கடைகளுக்கு மக்கள் திரள்வது வியப்பில்லை. இந்தக் காலம் இரவு வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டு வருகிறது இல்லையா? இந்தப் பையன்கள் படித்த படிப்பை எல்லாம் மறந்து, செய்த வேலையை விட்டுத் தள்ளு வண்டிக் கடையில் பிரியாணி பொங்கத் துணிந்தது போல எவ்வளவோ விசித்திரங்கள் வந்து படிந்தவாறு இருக்கின்றன. எல்லாம் நன்றாகப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ள முற்படுவதற்குள் இரண்டு தரப்பார் வந்து மிரட்டி விட்டுப் போயிருக்கிறார்கள். முதலில் வந்தவர்கள் கடையில் பீப் விற்கப்படுகிறதா என்று கேட்டிருக்கிறார்கள். பையன்கள் இல்லை என்று சொல்லவே, அது எப்போதும் விற்கப்படக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார்கள். இரண்டு நாட்களில் வந்து சோதனை செய்வோம் என்பதையும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அடுத்த தரப்பு பீப் விற்றாக வேண்டும் என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறது. அவர்களும் இரண்டு நாளில் சோதனை செய்ய வருவார்கள்.

முதலில் வந்தவர்கள் சென்ட்ரல். மத்தியில், அவர்களுடைய ஆட்சி தான் நடைபெறுகிறதாம். அடுத்தது ஸ்டேட்.  இரண்டு பக்கமும் குறைந்தது ஆறு பேர் இருந்தார்கள். பிரியாணி மட்டுமல்ல, சிகஸ்டி பைவ், டிக்கா, பிஷ் பிரை என்று அனைத்தையும் வஞ்சகமில்லாமல் சாப்பிட்டிருக்கிறார்கள். அப்புறம் என்ன, பணம் கொடுக்கவில்லை.

பையன்கள் உலக விவரம் அறிந்தவர்கள் அல்லர். இது என்ன அக்ரமமா இருக்கே என்று அவர்கள் துள்ளும்போது எனக்குச் சிரிப்பாக இருந்தது. அதை மறைத்துக் கொண்டு சமாதானம் செய்தேன். பாஸ்கரனே கூட அவர்களைச் சும்மா விடக்கூடாது என்பது போல அவ்வப்போது எதையோ சொல்லிக் கொண்டிருந்தான். இதெல்லாம் நமக்குத் தெரியாத விஷயமா என்று நான் அவனிடம் சொல்லும்போது, அவனுக்கு அது காதில் ஏறவில்லை. நாம் உள்ளிட்ட அத்தனையும் கணக்கிட்டுப் பார்த்தால் கூட இந்த உலகம் நீதிகளின் தொகுப்பல்ல. இதன் ஆழத்தில் அதைப் புரிந்து கொண்டு கொஞ்சம் பதற்றமில்லாமல் இருக்கலாம்.

அன்று ஒரு மழைநாள்.

மழையின் சிட்டிகைகளைக் கேட்டவாறு, இழுத்துப் போர்த்திக் கொண்டு கால்களை ஆட்டிக் கொண்டிருந்தேன். இந்த மழையைத் தவற விடக் கூடாது என்று தோன்றியதும் விக்டரை, சாமியை உலுக்கினேன்.

“புள்பப் போலாமா?”

“ஆறு தாண்டா ஆவுது ! ”

“சும்மா கொஞ்சம் போடுவோம். மழ ! நல்லா இருக்கும்டா ! ”

கையில் இருந்தது தவிர அக்கம்பக்கம் பேசி கொஞ்சம் பணம் வாங்கி வைத்துக் கொண்டேன். முதலில் மழையில் இறங்கும்போது குடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டோம். பாரில் இருந்து ரோட்டைப் பார்க்க முடியும். சரக்கு தவிர வேறு எதுவும் வந்து சேரவில்லை. பையன்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். கூலிவேலைக்குச் செல்லும் ஒரு கூட்டம் மக்கள் ஆளுக்கொரு குப்பியுடன் தண்ணீர் பாட்டில்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த போதே அவர்களில் ஒருவர் பொறுமை இழந்தார். மூடியைத் தட்டித் திறந்து வாய் முழுக்க ஒரு மிடறு முழுங்கி விட்டு, மிச்சமிருந்த பாட்டிலுடன் சற்றே திரும்பி அந்தக் குப்பியில் சிறுநீரை விட்டுக் கொண்டார். அண்ணாந்து குடித்து விட்டு வெளியேறினார். இரண்டாவது பெக் போகும் போது மழை வலுத்து விட்டிருந்தது. வாகனங்கள் குறைவான சாலையின் இரண்டு பக்கமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்த்திருந்து சட்டென்று வேறு ஒரு ஷாப்புக்கு போக முடிவு செய்தோம். குடைகளைத் தெரிந்த கடையில் ஒப்படைத்து விட்டு மழை நனைய ஆரம்பித்தது தான். மதிய வாக்கில் மூடிக் கிடந்த டவரின் மீது ஏறி, அதன் உச்சியில், வெட்ட வெளியின் பேய் மழையை ஏறிட்டுக் கொண்டு நடுங்கியவாறு குடித்தோம். மேகங்கள் எங்களுடைய தலைக்கு மேலே இறங்குவது போல இருந்த அந்த நேரத்தில் கடவுளோடு இருப்பது போலிருந்தது. கீழே இறங்கி மழை நீர் தேங்கின பிரம்மாண்டத் தொட்டிகளில் நீச்சலடித்து ஆட்டம் போட்டு அப்புறம் ஒரு ஆட்டோ பிடித்து ஓட்டேரிக்குப் போனோம், அங்கிருந்து எங்களுடன் மழையில் நனைய சிவாவும், பாபுவும் புறப்பட்டார்கள்.

வழக்கம் போல கார்டன் ஷாப்பில் எனக்கும் சிவாவிற்கும் வாக்குவாதம் நடந்தது. மழையின் ரகளையை மீறி, பலரும் எங்களுடைய தர்க்கங்களைக் கவனிப்பதில் ஈடுபட்டார்கள். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது ஒவ்வொரு குடி சந்திப்பிலும் வந்து சேர்ந்து கொள்ளும். சிவா நாத்திகன், கட்சியில் இருப்பவன், அவன் இருக்கும் பகுதி மக்களுக்கு ராத்திரி பகல் பாராமல் உதவிகள் செய்பவன். எதிர்காலத்தில் அவனுக்கு உரிய பதவிகள் தேடி வரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவன் சார்ந்திருக்கிற கட்சியை மட்டுமல்ல, அரசியலையே ஏறிட விருப்பமில்லாத நான் அவன் பொறுப்பாளராக இருந்த தேர்தலில் அவன் சொன்னபடி கேட்டு மூன்று கள்ள ஓட்டுகள் போட்டிருக்கிறேன். எங்களுக்குள் ஒரு பிடிப்பு இருந்தது, என்னை அதிகமாகக் கூடக் குடிக்க வைத்து, பேச வைத்து என்னை வெல்லுகிற ஆசை அவனிடம் இருந்தது.

மொத்தத்தில் அந்த மழை தினம் பெரிய நடுக்கத்துடன் முடிவதற்கு முன்னே சாப்பிட முடிவு செய்தோம். வழக்கமாக மரத்தடியில் நடக்கிற கடையைச் சற்றுத் தள்ளி மழை விழாத ஒரு கடையின் கூரைக்குக் கீழே பாய் தனது தள்ளு வண்டிக் கடையை நிறுத்தி இருந்தார். சரியாக வியாபாரம் நடக்கவில்லை. எங்களைப் பார்த்ததும் அவருக்குச் சந்தோஷம் தான். நிறைய ஆர்டர் செய்தோம். இஷ்டம் போல சாப்பிட்டோம். எல்லாம் சரியாகத் தான் சென்று கொண்டிருந்தது. பாபு என்ன கேள்வி கேட்டான், அவர் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை. விக்டரும் சாமியும் என்ன பேசுகிறார்கள் என்பது சரியாகப் புரியவில்லை என்பதை விட நான் என்ன பேசிக் கொண்டிருந்தேன் என்று பிடிபடவில்லை. அவர் பக்கத்தில் இருந்த காவல் நிலையத்துக்கு நகர்ந்தார். எங்களுக்குள் யாரோ ஒருவர் மொத்த வண்டியையும் கவிழ்க்கத் தூக்கின போது பாய் அய்யோ என்று வீரிட்டார். அனைவரும் நடுங்கிப் போனோம். அவரை சமாதானம் செய்வதாக நினைத்து, சாப்பிட்டதைக் காட்டிலும் அதிகப் பணத்தை அவருடைய மேல் சட்டையில் திணித்து விட்டு கிளிப் பிள்ளைகள் பேசினதையே பேசினோம். அவர் தன்னுடைய தலையைப் பிடித்துக் கொண்டு மழையில் அமர்ந்திருந்தார்.

அன்றிரவு அடித்துப் போட்டது போலத் தூங்கி நான் மறுநாள் மதியம் தான் எழுந்தேன்.

வேலை செய்ய வேண்டிய இடத்துக்குப் போனதும் அங்கே எல்லோருக்கும் விஷயம் தெரிந்து விட்டிருந்தது. கடைக்காரரின் மனைவி வந்து கூச்சல் போட்டிருக்கிறாள். அவருக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றார்கள். அபாயப் பிரிவில் இருக்கிறார் என்றார்கள். அவருக்கு இரண்டு சின்னப் பிள்ளைகள், அவர்கள் தெருவிற்கு வந்து விடுவார்களா?

குறைந்தது நான்கு நாட்கள் திணறிக் கொண்டிருந்தேன்.

யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத அளவில் நான் தனிமைப்பட்டு இருந்ததை அவ்வளவாக விளக்க முடியாது.

அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் தப்பித்து அவர் நான்கு நாட்கள் கழித்து, அவர் வீட்டுக்குத் திரும்பின அன்று இரவு ஒன்பது மணி வாக்கில் நானும் விக்டரும் சேர்ந்து அவர் வீட்டுக் கதவைத் தட்டினோம். அவரே எவ்வளவு சமாதானம் செய்த போதும், அவருடைய மனைவி அடங்கவே இல்லை. தரையிலிருந்து மண்ணு வாரி அடித்துத் தீர்த்தாள். தலை கலைந்து புடவை சரிய, தன்னைத்தானே கைவிட்டு அடிவயிற்றிலிருந்து எழுகிற கேவலுடன் சாபம் கொடுத்து முடித்தாள். தன்னுடைய புருஷன், பிள்ளைகளை உள்ளே பிடித்துத் தள்ளி வாசல் கதவை அறைந்து சாத்தினாள்.

நான் கொஞ்ச நாளில் அந்த ஏரியா விட்டே போக வேண்டியதாயிற்று. அந்தக் கடை அப்புறம் அங்கே போடப்படவில்லை என்பது தெரியும். வாழ்க்கை நம்மை எங்கெல்லாமோ கொண்டு செல்கிற சடுதியில் யாரையேனும் திரும்பிப் பார்க்க வாய்ப்பு உள்ளதா? விக்டர், பாபு எல்லாம் குடும்பத்தைக் காப்பாற்றுகிற குட்டிக்கரணம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நல்லவேளை கடவுளே, நான் ஒரு நாத்திகனாக இருக்கிறேன் என்பதாக லூயி பூணுவல் சொன்னது போல எனக்கு நான் பிடித்த திக்கில் தான் இருக்கிறேன். சிவா அரசியலில் நல்ல இடத்துக்கு வந்து மக்கள் சேவையைத் தொடருகிறான். கண்டிப்பாக அவனுடைய உதவிகளால் கண்ணீர் மல்குகிறவர்கள் இப்போதும் இருப்பார்கள். அவனுடைய முகப்புத்தகப் புகைப்படங்களில் அவன் தீர்த்த யாத்திரை சென்ற கோவில்களைப் பார்க்க முடியும். குடி சந்திப்புகள் நிகழவோ, கடவுளைப் பற்றின பேச்சுகள் நடக்கவோ இல்லை. சந்திப்போம் என்று சொல்லிக் கொள்வது எல்லாம் நழுவிக் கொண்டே போகின்றன.

“சாமி ”

“என்ன ? ” என்கிற பாஸ்கரன் என்னிடம் சற்றே குசுகுசுப்புடன்

“இன்ஸ்பெக்டர் பணம் வாங்கறவரா இருந்தா, ஒரு அஞ்சாயிரம் வரைக்கும் நான் ரெடி ! ” என்றான். அப்படி நாம் செய்ய வேண்டியது நமது கடமை என்பது போலப் பேசினான் அவன்.

அந்த அறைக்குள் போனோம்.

சில வினாடிகள் தான்.

அதை எனது மனம் அறிந்தது, தள்ளு வண்டிக்காரன் பாய் படிப்பித்து வளர்த்த அவனுடைய மகன் இப்ராகிம். நான் என்னுடைய அடிமனதிலிருந்து பொங்கி வந்த உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கேட்டேன், “எப்படி இருக்கிறாய் மகனே ?”


 

எழுதியவர்

மணி எம் கே மணி
சென்னையில் வசிக்கும், மணி எம்.கே.மணி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்.திரைப்படங்களுக்கு திரைக்கதை அமைப்பதில் பங்காற்றி வருவதோடு திரைக்கதைகளும் எழுதி வருகிறார். சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதோடு., தமிழ், மலையாள திரைக்கதை ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், திரை விமர்சன உரையாடல்கள் என திரைத்துறை சார்ந்தவைகளும் எழுதுபவர்.

இதுவரை வெளியான நூல்கள் :

சிறுகதை :
மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் (பாதரசம் வெளியீடு)
டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல் (யாவரும் பதிப்பகம்)
ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் (யாவரும் பதிப்பகம்)/

நாவல்:
மதுர விசாரம்? (யாவரும் பதிப்பகம்),
புயா மின்னா இதி (குறுநாவல், யாவரும் பதிப்பகம்),

திரைக்கதைகள்:
கடவுளே என்கிறான் கடவுள் - குறும்படங்களின் திரைக்கதைகள் (வாசகசாலை பதிப்பகம்).

கட்டுரை:
மேலும் சில ஆட்கள் (சினிமா, பாதரசம் வெளியீடு),
எழும் சிறு பொறி பெருந் தீயாய் (சினிமா, பாதரசம் வெளியீடு),
பத்மராஜன் திரைக்கதைகள் (சினிமா, பாரதி புத்தகாலயம்),
உள்கடல் (சினிமா, வாசகசாலை பதிப்பகம்),
மேலும் நூறு படங்கள் (சினிமா அறிமுகங்கள், பாரதி புத்தகாலயம்).

(ஆசிரியர் குறிப்புக்கு நன்றி : தமிழ் விக்கி)
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x