21 November 2024
DASARATHAM

“ நம்ம மாஸ்டர் செத்துப் போனது எல்லாம் தெரியும் இல்ல, உங்களுக்கு? “  உண்மையில் பாஸ்கர் இதை எதற்கு கேட்கிறான் என்பதே எனக்குப் புரியவில்லை. அது ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே நடந்த ஒன்று. அந்த மரணம் அவருடைய இரண்டாவது மரணம் என்று சொல்ல வேண்டும். கனடா உத்தியோகத்தை எல்லாம் ஏறக்கட்டி விட்டு அந்நேரம் நான் ஊரில் தான் இருந்தேன். அது மட்டுமல்ல, இரவில் சாவு பற்றி கேள்விப்பட்டதும், மறுநாள் காலை அதை தவிர்ப்பதற்காக அப்போதே வேலை என்று சொல்லி, வீட்டை விட்டு கிளம்பி காரில் பயணித்து முடித்து, ஹோட்டலில் அறை எடுத்து படுத்துக் கொண்டு தூங்கி இரண்டு நாட்கள் கழித்துதான் வீடு திரும்பினேன். என்னதான் முதுமை என்றாலும் அவ்வளவு சீக்கிரம் மறந்து போகிற கதைகளா இவை? இந்த முட்டாள் பயலின் எண்ணமென்ன ? எனக்கு எரிச்சலாக இருக்கிறது.

பாருங்களேன், ஒருத்தன் ஆஸ்பிட்டலில் உடம்பு சரியில்லை என்று வந்து மார்பை ஆபறேஷன் பண்ணிப் படுத்துக் கொண்டிருக்கிறேன், நைட்டு தங்கி என்னை யார்  பார்த்துக் கொள்ளுவது என்று எனது குடும்பத்தார் சீட்டு குலுக்கிப் பார்த்துக் கொள்ளும்போது ஊரார் கும்பலில் வந்த இவன், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டான். எப்போது போவான் என்று நான் எதிர்பார்த்திருக்கும் போது, என்னை இவனிடம் ஒப்படைத்து விட்டு எல்லோரும் சென்று விட்டார்கள். இந்த மாதிரி ஒரு அசட்டுப் பயலோடு ராத்திரியெல்லாம் நான் குடித்தனம் பண்ண வேண்டுமா? எதற்கு இப்படியெல்லாம் நடக்கிறது? இவன் எனது மூஞ்சியைத்தான் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறான் என்பது தெரிகிறது. நான் கண்களைத் திறக்க விரும்பவில்லை.

எனக்கு இங்க இருந்தா தூக்கம் வராது என்று சொன்ன மகனின் முகம் சுழிந்த அழகு திரும்ப, திரும்ப வந்து கொண்டிருந்தது.

அப்போது அவன் ஒரு பாட்டைக் கூட முனகிக் கொண்டான்.

“ கரிகாலன் காலப் போல கருத்திருக்குது கொழலு, அது கொழலில்ல கொழலில்ல தாஜ்மகால் நெழலு ! “

இந்தக் கண்றாவிகளை மறக்க நானறிந்த பெண்களைப் பற்றி நினைத்துப் பார்த்துக் கொள்ள விரும்புகிறேன். முகங்கள் ஒரு கணம் கூட நிற்காமல் ஓடுகின்றன.

பாருங்கள், அவனே எடுத்துக் கொடுக்கிறான்.

“ புவனா மும்பையில் எங்கோ குடும்பத்துடன் இருக்கிறாள். சிறிய அளவில் விபச்சார விடுதி நடத்துவதாக சொல்கிறார்கள். பூர்ணிமாவிற்கும் குடும்பம் உண்டு. சீரியல்களில் அம்மா, பெரியம்மா, அத்தை சொத்தை வேஷங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறாள். இங்கேயும் ஒரு மாறுதலுக்கு எப்பவாவது விபச்சாரம் உண்டு. “

எப்படியெல்லாம் கொஞ்சிக் கொண்டிருக்கிறான், புரிகிறதல்லவா? ஒரு மாதிரியான அழுமூஞ்சிப் பயல்கள். உலகத்தை சுற்றி வந்தேன் என்கிற அனுபவத்தில் சொல்ல வேண்டுமானால், சோதாப் பயல்கள். எல்லாத்துக்கும் உருகிக் கொண்டிருப்பான்கள். நான் இப்போது பார்க்காமல் கூட, அவன் முகம் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். கொஞ்ச காலம் முன்பு அது, கனடாவில் இருந்து இங்கே வந்திருந்தேன். கூட வேலை செய்கிற ஒருவன் சில அன்பளிப்புகளைக் கொடுத்து கொண்டு சேர்க்க சொன்ன இடம்தான் மாஸ்டர் வீடு. தூரமெல்லாம் இல்லை, பக்கத்து ஊர். அதனால் பொருட்களை ஒப்படைத்த பின்னாலும், அடிக்கடி அங்கே செல்கிற வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். ஒருநாள் அந்த குடும்பத்தாருடன் நான் பார்த்த அந்த நாடகத்தில் மாஸ்டர் பெண் வேடத்தில் பளிரென்று நடித்துக் கொண்டிருந்தார். என்ன துடிதுடிப்பு, என்ன மலர்ச்சி? மேடையில் வேங்கை போல துள்ளி விழும் அவர் வீட்டில் ஒரு மூலையோடு பல்லி போல ஒட்டிக் கொண்டு கிடப்பார். அல்லது கிருஷ்ணன் கோவிலுக்கு தெற்கில் இருக்கிற ஒரு மேட்டில் உட்கார்ந்தார் என்றால், ஒரு கட்டு பீடியையும் புகைத்து முடித்து விட்டுதான் வருவார். நான் பேசினாலும் அவர் பதிலுக்கு பேசுவதில்லை. நான் ஒரு நலிந்த கலைஞனுக்கு உதவி செய்வதாக முடிவெடுத்து விட்டிருந்தேன். பல பொதுமக்களும், நண்பர்களும் அதை மனிதாபிமானத்துடன் அங்கீகரித்தார்கள். எனவே அவ்வப்போது அங்கே பால், பழம், மலிகைப்பொருட்களுடன் அவ்வீட்டுக்கு செல்லுவது வழக்கம். அவர்கள் என்னை எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள் என்று சொன்னால் போதுமல்லவா? மாஸ்டர், அவர்  வீட்டுப் பக்கம் வருவதையே நிறுத்தி விட்டிருந்தார். கிருஷ்ணன் கோவிலில் தனியாக படுத்துக் கொள்ளுவதாக சொன்னார்கள். அது நல்லது தான் என்றாள் அவருடைய மனைவி. அவளும் இல்லாத ஒரு பகலில் மாஸ்டர் திடுதிப்பென்று வீட்டுக்கு வந்து விட்டதை என்னவென்று சொல்லுவது? அப்போது புவனாவும் பூர்ணிமாவும் என்னோடு படுக்கையில் இருந்தார்கள். நிர்வாணத்தை வெறித்துக் கொண்டு நின்றார் அவர்.

திரும்பிப் போனார்.

இரண்டு நாட்களில் எனக்கு கொஞ்சமாக அறிவுக்கண் திறந்தது. ஒரு பெரிய தொகையை அவரிடம் கொடுக்கத் தேடினேன். அவர் சிக்கவில்லை. அவருடைய மனைவியிடம் அதை ஒப்படைத்து விட்டு, அதன் பின்னரே அந்த வீட்டுக்குப் போவதை நிறுத்தினேன். ஒரு நலிந்த கலைஞனுக்கு மேற்கொண்டு என்னால் உதவ முடியவில்லை.

பெண்களில் அறுபதுக்கும் அதிகமான சதவீதம் ஒரு பதம் தான். பத்தோ, இருபதோ கிடந்து துள்ளும். எல்லாம் தெரிந்தவனுக்கு எல்லாம் சரிப்பட்டு வரும் என்பது என்னுடைய கணக்கு. பாஸ்கர் அப்பதான் கல்யாணம் செய்து கொண்டு வந்த மலர்விழி ரொம்பதான் பிகு செய்து கொண்டிருந்தாள். இது பாவம் என்றாள். இது அநியாயம் என்றாள். உங்க வயதென்ன, என் வயதென்ன என்றாள். ஒருமுறை செருப்பால் அடிப்பேன் என்று தயக்கத்துடன் சொன்னதைத்தான் நான் சாதகமாக எடுத்துக் கொண்டேன். அவள் வீட்டில் உடம்பு சரியில்லை போல தைலம் தடவி உட்கார்ந்து கொண்டு, விரோதமாக பார்த்திருக்கிற பாஸ்கரை என் வண்டிக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு வர முடியுமா என்று கேட்டபோது அவன் முறைக்க,  “ ஏன், போயி அதை போட்டு விட்டுதான் வாங்களேன் “  என்று அவனை அவள் அனுப்பி வைத்த பாங்கு வழக்கமாக நான் அறிந்த சாகசம் தான். இதோ என்றது பட்ஷி. பாஸ்கர் வண்டியை எடுத்து நகர்ந்த சப்தம் ஓய்ந்ததும், நான் அவளை நெருங்க முயன்றேன். அருகில் வரக்கூடாது என்று வீட்டின் பல பக்கங்களுக்கும் நடந்தாள். அநேகமாக நான் உளறுவதை எல்லாம் அவள் நிதானமாக தொகுத்து ரசித்துக் கொண்டிருந்தது போலிருக்கவே, இது ஒரு புதிய டைப் என்று நினைத்துக் கொண்டேன். ஆர்வம் பல புள்ளிகளில் மேலுக்கு ஏறியது. எனது முகம் முழுக்க காமம் நிரம்பிய போது பாஸ்கர் வந்து விட்டான். இவள் என்ன என்று கேட்டதற்கு பதில் கூறாமல் கழிவறையில் புகுந்து கொண்டு விட்டான். இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தோம். உள்ளே ஒரு பக்கெட்டை உடைக்கிற சப்தம் கேட்டது. தண்ணீரின் சப்தம், மற்றும் அவன் எதையோ சொல்லி உறுமுகிற சப்தம். வீட்டிற்கு கிளம்பி விடலாம் என்று புறப்படுவதற்குள் அவன் கதவைத் திறந்து புலி போல வந்தான். இடுப்புக்கு கீழே துணியே இல்லை. கையில் அந்த இரும்பு பக்கெட் இருந்தது.

என்னென்னவோ சொல்கிறான், ஒன்றுமே புரியவில்லை. அவனுடைய மனைவி செயலற்றுப் போயிருந்தாள்.

எனக்கு விட்டுவிட்டு தாண்டிப் போகவும் பயம்.

ஒன்று புரிந்தது.

மாஸ்டருக்கு என்னவோ ஆகி விட்டிருக்கிறது. துணிகளை அவிழ்த்துப் போட்டவாறே ரோட்டுக்கு ஓடி வந்தாராம். அபயம் கிருஷ்ணா, அபயம் கிருஷ்ணா என்று கத்தியவாறு ஓடி மறைந்து விட்டிருக்கிறார். சொல்லப் போனால் இது அவருடைய முதல் மரணம். போலீஸ் பிடித்து அவரை மெண்டல் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வைப்பார்கள். பாஸ்கர் என்னிடம், ” ஒரு நலிஞ்ச கலைஞனை வெச்சு காப்பாத்தினது போதுமா உனக்கு? திருப்தியா? “ என்று கேட்டான். ‘ வெளியே போடா நாயே !  இந்தப்பக்கம் வந்தா செத்த ! “

நான் அப்புறம் அங்கே போகவில்லை.

மேலும், ஒரு வேட்டைக்காரனின் வாழ்வில் இதெல்லாம் பொருட்டில்லை.

எவ்வளவோ ஆண்டுகளுக்கு அப்புறம் இப்போது அவன் எதற்கு இப்படி எனது முகத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார வேண்டும்?

அதற்கு பதில் இருந்தது.

“ உனக்கு கல்யாணம் ஆன புதுசிலேயே உன் பொண்டாட்டி உன்ன விட்டுட்டு போயிட்டா இல்லையா? “ என்கிறான் பாஸ்கர்.

நான் கண்களைத் திறந்தேன். அவனைப் பார்க்கவில்லை. கண்ணாடி சன்னல்கள் வழியாக வெறுமனே இருளில் துலங்கும் வானத்தைப் பார்த்தேன். மனம் வெறுமையில் கொரகொரத்தது.

“ கோர்ட்ல அவங்க வக்கீல் உங்களுக்கு ஆண்மையில்லைன்னு சொல்லி டைவர்ஸ் வாங்கினாங்க. சரியா?”

மேகங்கள் சிதறுவது போல படுவது எனது மனநிலையாக இருக்கக்கூடும்.

“ நீங்க ஒரு பெண்பித்தர் போல வேஷம் போட்டதெல்லாம் கூட உங்களை திருப்தி செஞ்சுக்க தான். பள்ளமா விழுந்துட்டதை இப்படியெல்லாம் நெரப்பிகிட்டு இருந்தீங்க, வேற என்ன?”

இவனுக்கு எல்லாம் தெரியும் என்பதை புரிந்தவாறு வந்தேன்.

“ அப்புறம் செகண்ட் மேரேஜ். நிம்மி வந்தாங்க. அவங்களுக்கு பொறந்த கொழந்த உங்களோடது இல்லன்னு உங்களுக்கு தெரியும் !”

ஆமாம். அது எனக்கு தெரியும். பொண்டட்டிகளை ஒரு ஆசைக்கு எப்பவோ சில முறைகள் தொட்டிருக்கிறேன். மற்றபடி அதில் என்ன பிளஷர் இருக்க முடியும்? வீட்டுப் பொருட்களில் உழல முடியாது. சிறு வயதில் இருந்தே பதுங்கியும் பாய்ந்தும் பழகி விட்டேன். நிம்மியை உருட்டுவது நடந்திருந்தால் கூட ஏதாவது ஒரு பொது வெளியில் வைத்துதான் அதை செய்திருப்பேன். கனடா வேலையில் இருந்து கத்தருக்கு மாறும் முன்னே ஊருக்கு வந்து போனேன். மூன்று மாதத்தில் ஒரு போன் வர, அப்பா நான் தாத்தாவாயிட்டேன் என்றார். அம்மா பாட்டியாகாமல் இருப்பாளா? யார், யாரோ என்னவெல்லாமோ ஆக நான் அப்பாவாக முடியாதே என்று யோசித்துக் கொண்டு நின்றேன். இருபத்திநான்கு மணி நேர குடும்பக் குத்து விளக்காக இருந்த நிம்மி மிக சாதாரணமாக சிரித்து மகிழ்ந்து கொண்டு “ நமக்கு கொழந்த ! நம்ப முடியல இல்ல? கடவுள் கருணையுள்ளவர் தான்  ! “ என்றாள். ஒன்றரை வருடத்தில் மூன்று மாதம் லீவு கிட்டியது. நான் ஊருக்குப் போகவில்லை. சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங், பாங்காக் என்று சுற்றிக் கொண்டிருந்து விட்டு பணியில் சேர்ந்து கொண்டு விட்டேன். பணம் அனுப்புவதைத் தவிர்த்து ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்து விட்டு ஐந்து வருடங்களுக்கு அப்புறம் தான் ஊருக்கு வந்து நான் எனக்கு மகன் என்று சொல்லப்படுகிறவனைப் பார்த்தேன்.

எனக்கு அன்று இருந்த மனநிலைக்கு ஒரு மகன் இருப்பது ஆண்மையின் அடையாளம் தான் என்று பட்டது.

அவனை முத்தமிடும் போதெல்லாம் நான் நிம்மியைப் பார்க்காதிருக்க தவறியது கிடையாது. ஆனால் அவள் களங்கமற்ற பரிசுத்தமான சிரிப்புடன் என்னை நோக்கி புன்முறவல் செய்வாள். நான் தான் இந்த மாதிரி பெண்கள் கொள்கிற உயிர் பிழைப்பைப் பற்றி அறிவேன் இல்லையா? இலேசான பாராட்டுணர்வுடன் சொல்லுவேன். “ என் மகன் ! “

“ உன் மகனுக்கு நான் தான் அப்பன் ! “ என்கிறான் பாஸ்கர்.

கண்களை மூடிக் கொண்டேன். ஓ, இது தான் நீ இங்கே வந்து அமர்ந்த காரணமா? என் மூச்சு சப்தம் எனக்குக் கேட்டுக் கொண்டிருந்தது. நான் இந்த இரவைக் கடக்க முடியாது. எனது மரணத்தை அவன் இப்படியே சிரித்துக் கொண்டே பார்த்திருக்கக் கூடும். என்ன செய்வது, இப்போதும் நான் சிரிக்காமலில்லை.

கரிகாலன் காலப் போல கருத்திருக்குது கொழலு,

அது கொழலில்ல, கொழலில்ல தாஜ்மகால் நெழலு ….


 

எழுதியவர்

மணி எம் கே மணி
சென்னையில் வசிக்கும், மணி எம்.கே.மணி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்.திரைப்படங்களுக்கு திரைக்கதை அமைப்பதில் பங்காற்றி வருவதோடு திரைக்கதைகளும் எழுதி வருகிறார். சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதோடு., தமிழ், மலையாள திரைக்கதை ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், திரை விமர்சன உரையாடல்கள் என திரைத்துறை சார்ந்தவைகளும் எழுதுபவர்.

இதுவரை வெளியான நூல்கள் :

சிறுகதை :
மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் (பாதரசம் வெளியீடு)
டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல் (யாவரும் பதிப்பகம்)
ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் (யாவரும் பதிப்பகம்)/

நாவல்:
மதுர விசாரம்? (யாவரும் பதிப்பகம்),
புயா மின்னா இதி (குறுநாவல், யாவரும் பதிப்பகம்),

திரைக்கதைகள்:
கடவுளே என்கிறான் கடவுள் - குறும்படங்களின் திரைக்கதைகள் (வாசகசாலை பதிப்பகம்).

கட்டுரை:
மேலும் சில ஆட்கள் (சினிமா, பாதரசம் வெளியீடு),
எழும் சிறு பொறி பெருந் தீயாய் (சினிமா, பாதரசம் வெளியீடு),
பத்மராஜன் திரைக்கதைகள் (சினிமா, பாரதி புத்தகாலயம்),
உள்கடல் (சினிமா, வாசகசாலை பதிப்பகம்),
மேலும் நூறு படங்கள் (சினிமா அறிமுகங்கள், பாரதி புத்தகாலயம்).

(ஆசிரியர் குறிப்புக்கு நன்றி : தமிழ் விக்கி)
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x