23 November 2024
NILAVIL PARATHATHU

 


1

ப்பாவின் நண்பர் மகனுக்கும் நண்பர் ஆக முடியுமா?  எனக்கு அப்படி ஒருவர் ஆனார். அவர்தான் யுவசிற்பி.  பதின் பருவத்தில் எல்லோருக்கும் ஒரு மனிதர் ரோல் மாடலாக இருப்பார்.  அவரை மாதிரி நாமும் ஆக வேண்டும் என்ற பாதிப்பை ஏற்படுத்துவார்.  யுவசிற்பி என் ஆழ்மனதின் நாயக பிம்பம்.

அவர் உருவத்தை உங்களுக்கு மிக எளிதாக விளக்கி விடலாம். ஓஷோவின் நகலன்.  அதே தாடி. அதே வழுக்கை. அதே ஒளிமயமான கண்கள். அதே புன்னகை. உயரம் மட்டும் ஓஷோவை விட  கொஞ்சம் குறைவு.

சரி, அவர் எனக்குள் எப்படி ஈர்க்கப்பட்டார்?

ஆங்கிலக் கலப்பின்றி பேச்சு மொழி தமிழையே சுருதி சுத்தமாக பேசுவார். மேற்கோள்களில் மட்டும் ஆங்கிலச் சொற்கள் கலக்கும். தமிழ் கலக்காத ஆங்கிலத்தை நுனி நாக்கு பிரிட்டிஷ் ஸ்டைலில் அவ்வளவு இயல்பாக  பேசுவார். தவிர்க்க இயலாத இடங்களில் மட்டுமே ஒன்றிரண்டு ஆங்கிலச் சொல்  கலப்பு இருக்கும்.

அவர் தீவிர ஓஷோயிஸ்ட்! ஓஷோவின் ஆங்கில நூல்களை கரைத்துக் குடித்தவர். அவருடைய தோற்றமே இவருக்கும் எப்படி  வாய்த்தது என்பது இன்று வரையில் எனக்கு ஆச்சர்யமே. ஓஷோ இல்லாத, புத்தர் இல்லாத, ஓருலக ஆட்சி இல்லாத அவருடைய சிறு உரையாடலும் இல்லை எனலாம்!  வள்ளலாரும், திருமூலரும், பாரதியும் சரளமாக அவர் வார்த்தைகளில் வந்து போவார்கள்.

தினசரி யோகாவும், விபாசனா தியானமும் செய்வார். கட்டுக்கோப்பான உடல். கொஞ்சம் நூல் வாசிப்பு வாசனையுள்ள ஒரு பதின்மனுக்கு, இப்படி ஒரு ஆளை ரோல் மாடலாக வரித்துக் கொள்ள ஆசை எழுவது இயல்புதானே?

இவை தவிர அவரிடம் இன்னொரு அபார திறமை இருந்தது. அவர் என்னை ஆகர்ஷிக்க அதுவும் ஒரு காரணம். அவர்  எஸ்.பி.பி.குரலில் அழகாக பாடுவார்.

இயற்கை எனும் இளைய கன்னி, ஆயிரம் நிலவே வா என்னும் அறுபதுகளின் எஸ்.பி.பி., கம்பன் ஏமாந்தான், சம்சாரம் என்பது வீணை, பாரதி கண்ணம்மா நீயே சின்னம்மா, வா பொன் மயிலே போன்ற எழுபதுகளின் எஸ்பி.பி,. என் கண்மணி


2

 என் காதலி, உச்சி வகுந்தெடுத்து, இளைய நிலா பொழிகிறதே, பொன்மாலைப் பொழுது, கூட்டத்திலே கோயில் புறா, நாத வினோதங்கள் போன்ற  எண்பதுகளின்  உச்சம் தொட்ட, இளையராஜாவின் எஸ்.பி.பி. அவர் பாடும் இவை போன்ற எஸ்.பி.பி. பாடல்களைக்  கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

கொஞ்சம் தீவிரமாக முயற்சி செய்திருந்தால் அவர் உள்ளூரில் புகழ்பெற்ற ஆர்க்கெஸ்ட்ரா பாடகராக ஆகியிருக்கலாம்.

ஓஷோவும் ஓருலக ஆட்சியும் அவருக்குள்ளிருந்த எஸ்.பி.பியை வெளியே வர விடவில்லை. அப்போது உள்ளூரில்  புகழ் பெற்ற நியூடோன் ஆர்க்கெஸ்ட்ராவிலும், ஏ.வி.எம். இன்னிசைக் குழுவிலும் சில பாடல்களைப் பாடி, சில மேடைகளில்  கைதட்டல்களை அள்ளினார். அதோடு சரி. தியான வழியில் ஓஷோவைப் பின் தொடர்ந்த அவரின் மனதுக்கு வேறு எதுவும் ஒத்து வரவில்லை.

நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கோடை விடுமுறையில் எப்போதும் போல் நண்பர்களுடன் பகலிரவின்றி ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன்.பசி,தூக்கம், துக்கம்  அறியாத பதின்பருவம்.  அதனால் அப்பாவுடன் கடுமையான சண்டை. ஒரு நாள் வீட்டிற்கு வந்த யுவசிற்பியிடம் அப்பா என்னைப் பற்றி குற்றப்பத்திரிகை வாசித்து விட்டார். அவர் என்னைக் கடற்கரைக்கு அழைத்துப் போனார். வேர்க்கடலை வாங்கிக் கொடுத்து, மணல்வெளியில்  உட்கார வைத்து பேசிக் கொண்டிருந்தார்.

அன்று,  மூன்று மணி நேரம் அவர் என்னிடம் பேசியிருப்பார். அந்த உரை எனக்கு ஏசுவின் மலைப் பிரசங்கம் போல், ஓஷோவின் நீண்ட சொற்பொழிவைப் போல் ஆயிற்று. விளையாட்டு, நண்பர்களுடன் ஊர் சுற்றுதல், சினிமா பார்ப்பது என்றிருந்த நான்,  எனக்குள் மடை மாற்றம் அடைந்தேன்.

யுவசிற்பி வழியாக ஓஷோவும், புத்தரும், வள்ளலாரும் எனக்குள் நுழைந்து என்னை வேறு மாதிரி ஆக்ரமிக்கத் தொடங்கினர். அவரை என் ஞான குருவாக வரித்துக் கொண்டேன். வாரத்திற்கு இரண்டு தடவைகள், நானே அவ்ரைத் தேடிச்சென்று உரையாடத் தொடங்கினேன். புதுக்கவிதை நூல்களை வாசிக்கக் கொடுப்பார். சங்க இலக்கியத்தின் தனித்தன்மையைப் பற்றி வியந்துரைப்பார். சித்தர் பாடல்களை பாடி காட்டி பொருள் விளக்குவார்.

அப்போது யுவசிற்பிக்குத் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. ஒன்று எல்.கே.ஜி. பருவத்திலும் ஒன்று கைக்குழந்தையாகவும்.  அவர் மனைவி பூர்ணிமா அழகாக இருப்பார்.

ஆனால் நான் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அவர்களுக்குள் எதாவது ஒரு சண்டை நடக்கும். அவரின் மனைவி ஏதோ பேசுவார், இவர் தாழ்ந்த குரலில் சமாதானப் படுத்துவார். அவர்களுக்குள் என்ன?


3

பிரச்சனையாக இருக்கும் என்ற கேள்விகள் எனக்குள் குடைந்து கொண்டே இருக்கும்.

சில வருடங்களுக்குப் பின், நெருக்கமாகப் பழகத் தொடங்கிய போது நான் அவரிடம் மெதுவாக கேட்டேன்:

” சார் நீங்க லவ் மேரேஜா?”

“ஆமா! கணவன் மனைவிக்குள்ள அடிக்கடி சண்டை நடந்தா நிச்சயம்  அவங்க காதல் திருமணம் பண்ணிக்கிட்டவங்களா இருக்கும்! கேக்கவே வேணாம்!” என்று சிரித்துக் கொண்டே சொன்னார், ஓஷோவின் ஜாடையில்.

அவர்களின் காதல் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது.அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலையே சுக்கு நூறாய் வெடித்துவிடும் போலிருந்தது.

அதைப் புரிந்து கொண்டது போல் அவரே சொன்னார், “எங்க காதல் கதை சுவாரஸ்யமானதுதான். எனக்குத் தோணும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்குச் சொல்றேன்!”

“சரி சார்!”

“நீங்களா கேக்கக் கூடாது! நானா சொல்வேன்… துண்டு துண்டா அப்பப்ப…!” என்றார் .

எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான்! சரி தொடர்கதை படிப்பது போல் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்போம் என்று முடிவு செய்தேன்.  “சரி சார்!” என்றேன் ஆவலைக் காட்டிக்கொள்ளாமல்.

அப்போது மாதா கோயில் வீதியில் இருந்த ஜனதா கஃபேயில் உட்கார்ந்து இருவரும் ரவாதோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அங்கு நெய் ரவா தோசை ரொம்ப விசேஷம்!  வெளியே மழைச் சத்தம்.

“மழை பெய்யும் போது ரவா தோசை சாப்பிடுறது நல்லாருக்குல்ல?” என்றார். அவருடைய ரசனைகள் இப்படிதான்.

“இப்போ நீங்க ஒரு எஸ்.பி.பி. பாட்டு பாடுனா, இன்னும் நல்லா இருக்கும் சார்!’ என்றேன்.

சட்டென்று மெல்லிய குரலில் “ஓரே நாள்… உனை நான்… நிலாவில் பார்த்தது… உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது!” என்று பாடத் தொடங்கினார்.

“இந்தப் பாட்டுதான் என்னையும் பூர்ணிமாவையும் ஒண்ணு சேத்துச்சி!” என்றார் மெல்லிய குரலில்.

“ஓ!” என்றேன் அடுத்த அத்தியாயத்தைப் படிக்கும் ஆவலுடன்.


4

 

“கல்லூரி விழாவுல இந்தப் பாட்டை மேடையில் பாடினேன்… கைத்தட்டல்கள் குவிஞ்சிது!.. அங்கு ரசிச்சுக் கைதட்டுன ஒரு மாணவிதான்  பூர்ணிமா!” என்று சொல்லி நிறுத்தினார்.

ஒரு அழகான காதல் திரைப்படத்தின் தொடக்கம் போலிருந்தது அந்த வார்த்தைகள்…    எனக்குள் சுவாரஸ்யம் கூடியது!

“அப்போ நான் அண்ணா கல்லூரியில் படிச்சேன். அவ அவ்வையார் கல்லூரி மாணவி. கல்லூரிக்கும் பக்கத்துல அவங்க அப்பா ஸ்டேஷனரி கடை வச்சிருந்தார். அதைக் கடந்துதான் நான் கல்லூரிக்குப் போகணும். மறுநாள் ஒரு நோட்புக் வாங்குறதுக்காக கடைக்குப் போனேன். அங்க பூர்ணிமா இருந்தா…நேத்து காலேஜ் டே ஃபங்ஷன்ல நீங்க பாடுன ‘ஒரே நாள் உனை நான்’  பாட்டு பிரமாதம்! நான்  எஸ்.பி.பியோட  தீவிரமான ஃபேன்..அதனால உங்க குரலுக்கும் இனிமே ரசிகைதான்னு சந்தோஷமா சொன்னா!”

சந்தோஷமாக மலர்ந்த அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே நான் கதை கேட்கத் தொடங்கினேன்…

“அவளுக்கு என் எஸ்.பி.பி குரல் பிடிச்சிப்போனது. அவளோட  ஜெயப்பிரதா புன்னகை எனக்குப் பிடிச்சிப் போச்சு!!”

யுவசிற்பி-பூர்ணிமா காதல் கதையின் முதல் இரண்டு காட்சிகள் இவைதான்.

காரைக்கால் கடற்கரையிலும்,  தரங்கம்பாடி கடற்கரையிலும்,  அம்பகரத்தூர் காளியம்மன் கோயிலிலும் வேளாங்கண்ணி மாதா  கோயிலிலும் அவர்களின் காதல் காட்சிகள் தொடர்ந்தன.

கல்லூரி இறுதி ஆண்டில் பூர்ணிமாவின் வீட்டில் காதலை எதிர்க்கும் வழமையான பிரச்னைகள் தொடங்கின. இருவரும் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை பொறுமையாக விலகியிருந்தனர். கல்லூரிக்குப் போகும்  வழி நடையில் சந்தித்து கைக்கடிதங்களைப் பரிமாறிக் கொண்டனர். படிப்பு முடிந்ததும் பூர்ணிமாவுடன் யுவசிற்பி கோயம்புத்தூருக்குச் சென்றார்.  நண்பர்கள் ஆதரவில், அவர்களுக்கு பதிவுத் திருமணம் நடந்தது.

அவர் ஒரு அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பூர்ணிமா ஒரு உணவகத்தில் பில் போடும் வேலையில் அமர்ந்தார். இரண்டு குழந்தைகள் பிறந்து, வளர வளர பொருளாதாரப் பற்றாக்குறைகளும் வளர்ந்தன. அப்போதும் தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை புத்தகங்கள் வாங்குவதில் செலவிட்டார் சிற்பி. அது பூர்ணிமாவுக்குப் பிடிக்கவில்லை!

அவர்களுக்குள் தொடங்கிய சிறு சிறு பிரச்னைகள் மெல்ல மெல்ல பூதாகரமாயின!.  குழந்தைகள் பிறந்த பின் பூர்ணிமா வீட்டில் கொஞ்சம் சமாதானம் ஆனார்கள். சொந்த ஊரிலேயே பிழைக்கலாம் என மீண்டும் காரைக்கால் திரும்பி, சொந்தமாக ஒரு அச்சகத்தொழில்.


5

தொடங்கினர். அதில் யுவசிற்பியின் கவிதைப்புத்தகங்கள் அச்சடித்ததுதான் மிச்சம். வருவாய் குறைந்து கடன் அதிகரித்தது. எது நடந்தாலும் பதட்டமின்றி இருந்தது யுவசிற்பியின் மனம். ஒஷோவைப் பின் தொடர்பவர் அல்லவா!

‘தியானமும், நூல் வாசிப்பும் வீட்டில் உலை கொதிக்க உதவுமா’ என்று பூர்ணிமா சண்டைபோடத் தொடங்கினார். யுவசிற்பியின் ஆன்மிகமும், இலக்கியமும் வெறுப்பாக மாறிற்று. அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. இருவருக்கும் பெரிய பெரிய ஈகோ  யுத்தங்கள் மூண்டன. இடைவெளிகள் பெரிதாயின.

அப்போது அவரின் கவிதை ரசிகையாக அறிமுகம் ஆனவர்தான் அணு என்னும் அணுமிகா! நாகப்பட்டினத்தில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் அறிமுகம். அவர் வேதாரண்யத்தில் இருந்தார். எம்.ஏ. படித்த தமிழாசிரியை. தீவிர நவீன இலக்கிய வாசகி. இளைய படைப்பாளி. யுவசிற்பிக்கு நெருக்கமானார். இருவருக்கும் கடிதங்கள் வழியாக தொடங்கிற்று காதல்.

இதுவரையிலான யுவசிற்பியின் கதையை அவர், இவ்வளவு சுருக்கமாகச் சொல்லவில்லை. பல அமர்வுகள். பல பயணங்கள். அவர் மனநிலை உந்தும் போது சொல்லத் தொடங்குவார். பிறகு சிறு சிறு இடைவேளைகள். மீண்டும் சட்டென்று தொடர்வார். இப்படியேதான் வளர்ந்தது அந்தக்கதை.

“உங்களுக்கும் அணுவுக்குமான காதல் அவங்களுக்கு தெரியுமா சார்?” என்றேன் ஒரு சந்திப்பில், பூர்ணிமாவைக் குறிப்பிட்டு. அப்போது  இருவரும் கடற்கரை சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தோம்.

“அணு எனக்குப் போட்ட எல்லாக் கடிதங்களையும் பூர்ணிமா படிச்சுட்டா!” என்றார் ஓஷோவின் மலர்ச்சியான புன்னகையுடன். சுவாரஸ்யமான அதிர்ச்சி எனக்குள்.

நான் நினைத்தேன் அணுவின் அத்யாயம் தொடங்கிய பின் பூர்ணிமாவின் கோபம் உச்சம் தொட்டிருக்கும் என்று. ஆனால் அவர்  சாந்தமாகிவிட்டார் என்று யுவசிற்பி சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை.

அதற்குப் பிறகு பூர்ணிமாவின் கோபம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிற்று. அப்போதுதான்  எதிர்பாராமல் பூர்ணிமாவை நோய்மையும் சூழ்ந்தது. ஆம் ! அவருக்கு  கருப்பையில்  புற்று நோய்! படுக்கையில் வீழ்ந்தார்.

யுவசிற்பி அதற்கு முன் அவர் மேல் கொண்டிருந்த எல்லா வெறுப்பையும் துடைத்தெறிந்தார். ஒரு குழந்தையைப் போல் பாவித்து, பூர்ணிமாவைப் பார்த்துக்  கொண்டார். இரவும் பகலும் கண் விழித்து அவ்வளவு சிஷ்ருஷைகள். குழந்தைகளை பராமரிப்பது ஒரு பக்கம், வருவாயின்றி கடன் தொல்லை மறுபக்கம்.


6

ஓஷோவும் புத்தரும் அவருக்குத் தந்த கருணையும் அன்பும், பூர்ணிமாவின் மேல் பரிவும் காதலுமாகப் பற்றிப் படர்ந்தன. ஆறு மாதம் பலவித சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. பூர்ணிமாவின் உடல்நிலை வேகமாகக் குலைந்து கொண்டே வந்தது.

இடையில் அணுவைப் பற்றி யுவசிற்பி என்னிடம் எதுவும் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை. அவர் வாயாலேயே சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.

“அன்னைக்கு பௌர்ணமி! புத்த பூர்ணிமா! குழந்தைகள் நிவேதாவும், சுவேதாவும் தூங்கிடுச்சிங்க. நான் வழக்கம் போல நள்ளிரவு தியானம் பண்ணேன், மொட்டை மாடியில! வீட்டுக்குள்ள திரும்ப வந்தப்போ பூர்ணிமா தூங்கல…’பூர்ணி! என்னம்மா பண்ணுது… தூக்கம் வரலியா’ன்னு கேட்டேன். அவ கொஞ்ச நேரம் எதுவும் பேசாம என்னையே பாத்துக்கிட்டிருந்தா… அப்புறம் ‘நிவேதாப்பா! ஒரே நாள் உனை நான் பாட்ட,  எனக்காக ஒரு தடவ  இப்ப பாடுங்களேன்னு மெதுவா சொன்னா.

அவளின் முகத்துக்கிட்ட நெருங்கி கண் பார்த்து பாடினேன்.

முகம் பூர்ணிமையா பிரகாசமாச்சு. பாடி முடிச்சதும் என் கைககளை இறுகப்பிடிச்சுட்டா. “நிவேதாப்பா! நான் உங்கள சரியா புரிஞ்சுக்கல! அல்லது உங்க ஓஷோ, உங்க புத்தர், உங்க இலக்கியம் இதெல்லாம்  எனக்கு சரியா புரியல… அந்த அணுதான் உங்கள நல்லா புரிஞ்சுகிட்டா! தப்பா நினைக்காதீங்க, அணு உங்களுக்கு எழுதுன எல்லா லெட்டரையும் நான் படிச்சுட்டேன்! அவதான் உங்களுக்கு ஏத்த பெண்… விட்டுடாதீங்க… நான் இன்னும் கொஞ்ச நாள்தான் இருப்பேன்! நீங்க அணுவ கல்யாணம் பண்ணிக்குங்க… நம்ம குழந்தைகளையும் அவ நல்லா பாத்துப்பா…  எனக்கு அவ மேல கோபமோ வருத்தமோ இல்ல. அவ கிரேட்னு சொல்லிக்கிட்டே  சட்னு கண்ண மூடிட்டா!” – யுவசிற்பி சட்டென்று மௌனமானார்.

ஒரு திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சி பார்ப்பது போலவே இருந்தது  எனக்கு!

“அணு என்னவானாள்?”- உங்களுக்கு இப்போது இந்தக் கேள்விதானே எழுகிறது?

எனக்கும் அப்போது இதே கேள்விதான் குடைந்தது. நான் அவரிடம் கேட்கவில்லை அந்தச் சூழலில் எப்படிக் கேட்க முடியும்? சில நாள் இடைவெளி விட்டு,அவரே சொல்வார் என நினைத்தேன்.

ஆனால் சிறிது நேரம் கழித்து அவரே தொடர்ந்தார்.

“அணு என்ன ஆனான்னுதானே மனசுக்குள்ள கேட்டுக்கிட்டிருக்கீங்க குமரன்?”

நான் மெல்ல தலை அசைத்தேன் ‘ஆம்’ எனும் பாவனையில்.


7

“அணுவைப் பத்தி உண்மைய சொல்றதுகுள்ள பூர்ணிமா போய்ட்டா, எனக்கு அதுதான் வலி! அணு எனக்கு ஒரு நல்ல ஸ்நேகிதி… என் தீவிர ரசிகை. என் மனசுக்குப் பிடிச்சவ, ஆனா…!” என்று சொல்லி என்னைப் பார்த்தார் ஒரு சிறிய துயர் கசியும் புன்னகையுடன். என்னால் அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை. குனிந்து கொண்டேன்.

ஒரு ஆழ்ந்த அமைதிக்குப் பின் “அப்படி ஒரு பெண் நிஜமாவே இல்ல குமரன் …” என்று சொல்லி நிறுத்தினார்.

“சார்!” என்றேன் குழப்பமாக…

“பூர்ணிமாவோட புறக்கணிப்பு என் ஆனமிகத்த, இலக்கியத்த  அவ உதாசீனப்படுத்தினது எல்லாம் எனக்குள்ள ஆழமான காயங்கள ஏற்படுத்திச்சி… பூர்ணிமா எங்கிட்ட எப்படியெல்லாம் இருக்கணும்னு நான் நெனச்சேனோ, ஆசப்பட்டேனோ அதோட கற்பனை வடிவம்தான் அணு! அணுமிகா! என்னை புரிஞ்சிக்காத பூர்ணிமாவுக்கு மனசளவுல தண்டனை தர நெனச்சேன்… அணுங்கற கேரக்டரா நானே மாறினேன்… அவ எழுதுன  கடிதங்கள் எல்லாம் நான் எழுதினதுதான்! அணுங்கிற என் ரசிகைய, காதலிய, பூரணி  நம்பணும்கிறதுக்காக, ஏதாச்சும் இலக்கிய நிகழ்ச்சின்னு பொய் சொல்லிட்டு திருத்துறைப்பூண்டிக்கு போய் அணு எழுதுற மாதிரி, என் கையெழுத்த மாத்தி, நான் எழுதிய கடிதங்களை போஸ்ட் பண்ணேன்! இப்ப நெனச்சா பைத்தியக்காரத்தனமா இருக்கு!  நான் எதிர்பார்த்த மாதிரியே அணுவோட கடிதங்கள பூர்ணிமா படிச்சா… கொஞ்சம் கொஞ்சமா என் எதிர்பார்ப்பை உணர்ந்தா… அணுவை உண்மைன்னு முழுசா நம்பிட்டா! அணுன்னு யாரும் இல்ல, நான் ஆசைப்படுற நீதான் அவன்னு சொல்றதுகுள்ளே அவ போயிட்டா குமரன்!” என்று சொல்லி விட்டு ஓங்காரமாய் கரையில் மோதி உடையும் அலைகளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார் யுவசிற்பி.

எழுதியவர்

எஸ்.ராஜகுமாரன்
கவிஞர், எழுத்தாளர் மற்றும் இயக்குநராக புகழ்பெற்றவர் எஸ்,ராஜகுமாரன். இவரின் தந்தையார் கவிஞர் வயலூர் கோ.சண்முகம் தமிழக அரசால் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்ட தமிழறிஞர்.
எஸ்.ராஜகுமாரன் பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்கள் இயற்றியுள்ளார். விகடன் பிரசுரம் வெளியீடாக வெளிவந்துள்ள '27 இந்திய சித்தர்கள்', 'ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர்', ‘மலைவாழ் சித்தர்கள்' ஆகிய நூல்கள் பரவலான வாசக வரவேற்பைப் பெற்று விற்பனையில் சாதனை படைத்தவை. - 27-இ சுடலைமாடன் தெரு திருநெல்வேலி டவுண்' என்ற எழுத்தாளர் தி.க.சி. குறித்த ஆவணப்படம், 'லாவணி' என்னும் நாட்டுப்புற இசைக்கலையை குறித்த ஆவணப்படம் ஆகியவை பாராட்டுகளையும், சில விருதுகளையும் வென்றவை. கலைஞரின் சிறுகதைகளை கலைஞர் தொலைக்காட்சிக்காக தொடராக இயக்கி உள்ளார்.
அண்மையில் வெளியான ஆவணப்படம் 'ஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர்'. ஆதரவற்ற மக்கள் குறித்த தனியாக யாருமில்லை' என்ற ஆவணப்படமும் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கே குறித்த கவிதைப் பயணம்' என்ற ஆவணப்படமும் இப்போது இயக்கி வருகிறார். ஓமந்தூராரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை The Premier எனும் பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார். இவரின் சமீபத்தில் நூல் நதியில் விளையாடி கொடியில் தலை சீவி- கட்டுரைத் தொகுப்பு
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
தம்பி மாரிமுத்து
தம்பி மாரிமுத்து
3 years ago

யெஸ்…அவர்..அவரேதான்! யுகசிற்பி என்கிற சுரேந்திரன். நீங்கள் குறிப்பிட்ட அதே சாமுத்திரிகா லட்சணம்.
சுரேந்திரனுக்கு அறிமுகமானவர்கள் எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ், கவிஞர்.கா.விஜயராகவன். மணிக்கணக்காய் இலக்கியம் பேசுவோம்.
விஜயராகவனின் தாயார் மரணித்தபோது தஞ்சை ப்ரகாஷ் துக்கம் விசாரித்துவிட்டு சுரேந்திரனுடன் விடியவிடிய பேசிக் கொண்டிருந்துவிட்டு தஞ்சாவூர் போனார். சுரேந்திரனின் இறுதிக் காலம் நாகப்பட்டினம் சிவசக்தி சிட்பண்டு அலுவலகத்தில் கழிந்தது. அவரது பெரிய மகள் மிகச்சிறந்த நாட்டியத் தாரகை. சின்ன வளை சர்வைட் பள்ளியில் படிக்க வைத்தேன்.
சுரேந்திரனின் மறைவுக்குப் பிறகு பெரியவளுக்கு திருமணம். மாப்பிள்ளை நல்ல பையன். சின்வளும் இவர்களது பராமரிப்பில் இருந்ததாக விஜயராகவன் சொல்லியிருக்கிறார்.
மீண்டும் யுகசிற்பி என்கிற சுரேந்திரனை கூப்பிட்டு வந்து காட்டியமைக்கு “எழுத்தோவியர்” ராஜகுமாரன் அவர்களுக்கு பாசமுள்ள நன்றிகள்.
-நிறைபிரியங்களுடன்,
.
தம்பி மாரிமுத்து.

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x