18 July 2024

ப்பா! ஆத்துக்குப் போகணும்பா! ” என்றபடி என் தொடையைக் கிள்ளினான் வீரா. அண்ணனின் கோரிக்கையை ஆமோதிப்பது போல் சங்கமியும் என் முகத்தை ஏக்கம் வழியப் பார்த்தாள். வீரா வார்த்தைகளில் சொல்வதை அவள் பார்வையிலேயே சொல்லி விடுவாள்.

“புதுத் தண்ணியில குளிக்க பசங்க ஆசப்படுது. ஆத்துக்கு கூட்டிட்டு போயேன்  புவனா!“ என்றேன், துணி மடித்துக் கொண்டிருந்தவளிடம்.

“துணி துவைக்கணும். வெள்ளிக்கிழமை!, வீடு கழுவணும். நீங்களே போய்ட்டு வாங்க. வீட்லதானே இருக்கீங்க?” என்றாள் புவனா.

“எனக்கு மூடு சரியில்ல புவனா. லாக்டவுன் எப்ப முடியுமோ தெரியல! கொரோனா நம்மள ஒரு வழிப் பண்ணாம போகாது போலிருக்கு! போட்டோ வீடியோதான் முடங்கிக் கிடக்குதுன்னா உளுந்துக் கஞ்சி போடுறதுக்கும் வழி இல்ல! சிங்காரவேலு வட்டிப் பணம் கேட்டு டார்ச்சர் பண்றாரு. அடுத்து என்ன பண்றதுன்னே தெரியல. நீ போய்ட்டு வாயேன்…ப்ளீஸ்!”

“மனச போட்டுக் குழப்பிக்காதீங்க நாம மட்டுமா கஷ்டப்படுறோம்? கொரோனாவால உலகமேதான் வீட்டுக்குள்ளயும், ஆஸ்பத்திரிலேயும் முடங்கிக் கிடக்குது! இப்படி மோட்டு வளையையே பாத்துக்கிட்டிருந்தா குழப்பம்தான் அதிகமாகும்… புதுத் தண்ணி பாக்க நேத்தே தெருக் குழந்தைங்கள்ளாம் போய்ட்டு வந்திருச்சிங்க….இதுங்க ஆசையா கேக்குதுங்க… சமாதி படித்துறைப் பக்கம் குழந்தைகளை அழைச்சிக்கிட்டு போயிட்டு வாங்க! உங்களுக்கும் கொஞ்சம் மனசு லேசாகும்! முட்டுக்கட்டை நம்ம வாழ்க்கையில புதுசு இல்லியே! எவ்வளவோ பிரச்சனைகளைத் தாண்டி தாண்டித்தான் வந்திருக்கோம். பாத்துக்கலாம்….போய்ட்டு வாங்க…!” என்றாள் அழுத்தமான நம்பிக்கையுடன்.

மனம் சோர்ந்திருக்கும் சில சமயங்களில் தெய்வ வாக்கு போல இப்படி ஒலிக்கும், புவனாவின் சொற்கள்தான் என்னை வழி நடத்துகின்றன.

அதற்கு மேல் நான் மறுக்கவில்லை. வீராவுக்கும் சங்கமிக்கும் முகஉறைகளை அணிவித்தேன். நானும் மாட்டிக்கொண்டேன். சங்கமியைத் தூக்கிக் கொண்டு நடந்தேன். வீரா என் கையைப் பிடித்துக் கொண்டு பின் தொடர்ந்தான்.

புஷ்ப மண்டபப் படித்துறையில் அவ்வளவாக கூட்டமில்லை, காவிரியில் புதுத்தண்ணீர் வந்து விட்டால் இரவு வரை படித்துறையில் நிற்க இடமிருக்காது. குளிக்க வரும் உள்ளூர்க்காரர்கள் ஒருபக்கம். திதி கொடுக்கவும் பித்ரு பூஜை செய்யவும் வெளியூர்களிலிருந்து வரும் கூட்டம் ஒரு பக்கம். புரோகிதர்கள் ஓதும் வேத மந்திரங்களும், குளிப்பவர்கள் துணி துவைக்கும் சத்தமும் பகல் முழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

’கங்கைக்கு காசி காவிரிக்குத் திருவையாறு’ எனும் சொலவடையை ஆண்டு முழுவதும் புஷ்பமண்டபப் படித்துறையில் கூடும் கூட்டம் நிரூபித்துக் கொண்டே இருக்கும்.

ஊர் என்பதே ஆறுதான். காவிரி ஆற்றுத் தண்ணீர் மக்களின் .ரத்தத்துடன் கலந்த பந்தம். ஆற்றில் புதுத் தண்ணீர் வரும் நாட்கள் தீபாவளி பொங்கல் போலதான். படித்துறை தோறும் ஜனங்கள் கூடிக்கூடிக் கொண்டாடுவார்கள். இந்த வருடம் அந்த சந்தோஷம் குறைந்தது போலவே தெரிகிறது. புதுத்தண்ணீர் வந்த பூரிப்பும் சந்தோஷமும் ஊர்வாசிகளின் முகங்களில் இல்லை. மாறாக கொள்ளை நோய் குறித்த பயம், முக உறைகளாக எல்லா முகங்களிலும் மூடிக் கிடக்கின்றன.

பித்ரு பரிகாரம் செய்ய வந்திருக்கும் அக்கம்பக்கத்து ஊர்க் காரர்கள் ஒரு சிலர், மண்டபத்தில் தூரம் தூரமாக வாழை இலை பரப்பி அமர்ந்திருந்தனர். பரிகார பூஜை செய்யும் புரோகிதர்களும் இடைவெளி விட்டே அமர்ந்திருந்தனர். முக உறை மூடிய வாய்கள் மந்திரம் சொல்ல, முக உறை மூடிய வாய்கள் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தன…

படித்துறையிலிருந்து நுரைத்து, ,சுழித்து ஓடும் காவிரியை, குழந்தைகளுக்கு சிறிது நேரம் வேடிக்கை காட்டி விட்டு வெளியேறி, புஷ்பமண்டபத் தெருவில் நடந்தேன்.

ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் இந்த தெருவுக்கே புதுக்களை வந்து விடும். இருபுறமும் அடைத்து பூஜைக் கடைகள் முளைக்கும். புல்லும் தர்ப்பையும், தானக் காய்கறிகளும், தேங்காய், பூ, பழங்களும் கடைகடையாகக் கொட்டிக் கிடக்கும். அய்யாரப்பன் கோயிலின் தெற்கு வாசலில் இருக்கும் ஆட்கொண்டார் சன்னதியின், குங்கிலியக் கிணறு, அணையா விளக்கு மாதிரி எப்போதும் புகைந்து கொண்டே இருக்கும். எதிரில் இருக்கும் கடைகளில், குங்கிலியப் பொட்டலங்களை கிணற்றில் தூவியபடி இருப்பார்கள்.  குங்கிலியப் புகையின் மணம் தெரு முழுதும் மணக்கும்..

இப்போது தெரு வெறிச்சோடிக் கிடக்கிறது. இரண்டு மூன்று கடைகள் மட்டும் போடப்பட்டிருந்தன. முக உறை அணிந்தபடி உற்சாகமில்லாமல் உட்கார்ந்திருந்தார்கள் பூஜைக் கடைக்காரர்கள். ஆட்கொண்டார் சன்னதி மூடிக்கிடந்தது. குங்கிலியக் கிணற்றில் புகை மண்டலமில்லை. கொரோனா ஊரடங்கு எல்லோரது வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டது.

மானோஜி வீதி வழியாக தியாகையர் சமாதியை நெருங்கிக் கொண்டிருந்தேன்.

வாசலில் ஒரு கார் நின்றிருந்தது. இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. உள்ளிருந்து ”நிதிசால சுகமா…” என்று ஒரு பெண் குரல் கசிந்து கொண்டிருந்தது. தியாகையரை வழிபட வருபவர்கள், அவருடைய ஏதாவது ஒரு கீர்த்தனையை இப்படிப் பாடுவது வழக்கம். சமாதிப் படித்துறையில் உள்ள தூங்குமூஞ்சி மரத்தடிக்கு வந்தேன். சங்கமியை கீழே இறக்கி விட்டேன். இருவரும் பொங்கிச் சுழித்து ஓடும் ஆற்று நீரை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர். ஓடும் ஆறும் நடக்கும் யானையும் எப்போதும் திகட்டாத பேரழகுதானே!.

நான் மரத்தடி நிழலில் அமர்ந்தேன். சங்கமி என் மடியில் உட்கார்ந்து கொண்டாள். வீரா ஓடும் ஆற்றையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். படித்துறையில் யாருமில்லை. மரக்கிளைப் புதரில் சிட்டுக் குருவிகளின் கீச்சொலிகள் ஒலித்தன.

நான் வீராவையும் சங்கமியையும் இப்படி அழைத்து வருவது போல்தான் என்னையும் சீனுவையும் புதுத் தண்ணீர் பார்க்க அழைத்து வருவார் அப்பா. அதே தூங்குமூஞ்சி மரம்தான். இப்போது கை கால்களில் சுருக்கம் விழுந்த ஒரு நிறை மூதாட்டி போல் உருமாறி  இருக்கிறது. நமக்கு வயசாவதை மரங்கள் கவனித்துக் கொடுதான் இருக்கின்றன. மரங்களின் முதுமையை நாம்தான் கவனிப்பதில்லை.

“புதுத்தண்ணியில குளிக்கக் கூடாதுன்னு ஏம்பா சொன்னிச்சு அம்மா?”- வீரா என்னைப் பார்த்து கேட்டான்.

நானும் இதே போல் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன்.

“அதுவா? புதுசா வர்ற ஆத்துத் தண்ணில பூதம் வரும்! தண்ணி பூதம்! அதுங்கள்ளாம் போனப்புறம், கொஞ்ச நாள் கழிச்சுதான் நாம குளிக்கணும். சரியா?” என்று அப்பா சொன்னதையே நானும் சொன்னேன் புதுத் தண்ணீரில் குளித்தால் கண்வலி, காய்ச்சல் வரும். அதை தவிர்க்கவும் குழந்தைகளை பயமுறுத்தவும் சொல்லப்படும் காரணம் இது.

கொஞ்சம் ஏமாற்றத்துடன் “சரிப்பா!” என்று தலையாட்டினான் வீரா. அவன் தலை ஆட்டுவதை அப்படியே நகல் எடுத்து என்னிடம் செய்தாள் சங்கமி. அவனின் எமாற்றம் அவள் முகத்திலும் தொற்றியிருந்தது.

“அய்! போட்ல எறும்பு போவுது அங்கப்பாரு!” என்றான் வீரா சங்கமியிடம், ஆற்று நீரில் ஒரு தேக்குச் சருகு மிதந்து சென்று கொண்டிருந்தது. அதன் மேல் ஒரு கட்டெறும்பு ஊர்ந்து கொண்டிருந்தது.

குழந்தைகள் அனுபவிக்கும் காவிரியின் புதுத்தண்ணீர் சந்தோஷங்களை, என்னால் அனுபவிக்க இயலவில்லை.

நாளை சிங்காரவேலுக்கு வட்டிப்பணம் கொடுக்கவேண்டும். அவர் கொஞ்சம் கரடு முரடான ஆள். கொரோனா, லாக்டௌன் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே மாட்டார்.  உலகம் நாளை அழியப்போகும் அறிவிப்பு வந்தால் கூட இன்று வட்டிப்பணம் வசூலிக்கச் சென்றுவிடுவார்!.

வட்டிப் பணம் கொடுக்க ஒருநாள் தாமதமானால்.போதும். போட்டோ ஸ்டுடியோவுக்கோ அல்லது உளுந்துக் கஞ்சிக் கடைக்கோ வந்து விடுவார். போன மாசமும் வட்டிப்பணம் கொடுக்கவில்லை அவரின் கோபம் இரு மடங்காக இருக்கும். வார்த்தைகள் குத்தீட்டியாய் இறங்கும்.

“கொரோனா பிரச்னை ஆரம்பிச்சதுலேருந்து கல்யாண ஆர்டர் ஒண்ணு கூட வரலண்ணே. ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க கூட ஆள் வர்றது இல்ல. வீட்டுல இருக்கப் பிடிக்காம ஸ்டுடியோவ திறந்து வச்சிட்டு உக்காந்திருக்கேன் உளுந்துக் கஞ்சிதான் என்னைக் காப்பாத்திக் கிட்டிருந்துச்சி, இப்ப ரெண்டு யாவாரமும் முடங்கிப் போச்சுண்ணே.! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. அடுத்த மாசம் சேத்துக் குடுத்துடுறேன்!”

“குரு! கடன் கொடுக்கும் போதே சொன்னேன் ஞாபகம் இருக்கா? காரணம் சொல்லாம தேதிக்கி வட்டிப் பணம் குடுத்துடணும்! வாங்குன பக்குவத்திலேயே முதலை திருப்பிக் கொடுத்துடணும்! வாழ்க்கைன்னாலே கஷ்டந்தானய்யா? ஆளாளுக்கு வித்யாசம் இருக்கும், அவ்ளோதான்! கொரோனா கரோனான்னு இப்படியே நாலு பேரு வட்டி குடுக்கலேன்னா என் பொழப்பு என்னாவும்?” என்று வேகமாக டி.வி.எஸ் ஃபிப்ட்டியை ஸ்டார்ட் செய்து கொண்டு போய்விட்டார்.

பிரச்சனை அத்தோடு முடிந்து விடவில்லை. நேராக செவத்தய்யாவிடம் போய். “ஏன்யா இப்படிப்பட்ட வழவழா பார்ட்டியையெல்லாம் எங்கிட்ட சேர்த்து விட்டுக் கழுத்தறுக்கிறே?” என்று புகார் செய்து விட்டார். அவர்தான் எனக்கு ஜாமீன் போட்டு சிங்காரவேலுவிடம் பணம் வாங்கிக் கொடுத்தவர். மாலை உளுந்துக்கஞ்சிக் கடைக்கு வந்த  செவத்தய்யா. ”மனுஷன் கடுப்படிக்கிறான்யா. எங்காவது கடனவுடன வாங்கியாச்சும் வட்டிப் பணத்தக் கொடுத்துடு!” என்று அவர் என்னிடம் முகத்தைக் காட்டிவிட்டுபோனார்.

“எந்த வேலை வேணும்னாலும் பாரு. கடன் வாங்காம வயத்தைக் கழுவக் கத்துக்கணும்! கடன் வாங்குறவங்களப் பாத்து நாமளும் ஆசப்படக் கூடாது!” என்பார் அப்பா. அவரின் வாழ்க்கைத் தத்துவம் ரொம்பவும் ரத்தினச் சுருக்கமானது. ‘விரலுக்கேத்த வீக்கம்!’

பள்ளி அக்ரஹாரம் அய்யாரப்பன் ஸ்வீட் ஸ்டாலில் அப்பாவுக்கு சரக்கு மாஸ்டர் வேலை. இருபத்து ஐந்து வயதில் பொட்டலம் மடிக்கும் பையனாக வேலைக்குச் சேர்ந்தவர் முப்பத்தைந்து வயதில் சரக்கு மாஸ்டர் ஆனார். காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வேலை. 20 ரூபாய் நாள் சம்பளத்தில் ஆரம்பித்து, ஓய்வு பெறும் போது 300 ரூபாய் வாங்கினார். பத்து மணிக்குத்தான் இரவு வீடு திரும்புவார் அதுவரை நானும் சீனுவும் தூங்காமல் விழித்துக் கொண்டிருப்போம், அசோகா அல்வாவுக்கும், மிளகு காராசேவுக்காகவும்.

அந்த தினப்படி வருமானத்திலேயேதான் வருஷம் முழுவதும் வாழ்க்கை. நல்லது கெட்டதுக்கு முதலாளியிடம் சம்பள முன் தொகையாக வாங்கிக் கொண்டு தினசரி கழித்து விடுவார். தீபாவளிக்கு துணிமணி எடுப்பதற்கு மட்டும் நடராஜ முதலியார் ஜவுளிக்கடையில் கடன் வாங்குவார். அதையும் சம்பள முன்பணம் வாங்கி அம்மாவின் தினசரி சிறுசேமிப்புத் தொகையைச் சேர்த்து அடைத்து விடுவார்.

அம்மாவும் ஜாடிக்கேத்த மூடி மாதிரிதான். அப்பாவின் வழித்தடத்தை விட்டு விலகாத சிக்கனமான குடும்ப நிர்வாகம்  கடன் வாங்காத வாழ்க்கைக்காக நானும் எவ்வளவோ முயன்று பார்த்து விட்டேன். இன்று வரை முடியவில்லை. டிஜிட்டல் கேமராக்களின் வரவால் போட்டோ ஸ்டுடியோ தொழிலில் போட்டிகள் அதிகரித்தன.  வாடிக்கையாளர்கள் குறைந்தார்கள் அப்போதுதான் செவத்தய்யாவின் யோசனையில் உளுந்துக் கஞ்சித் தொழிலைத் துவங்கினேன்.

காலை எட்டு முதல் நான்கு மணி வரை போட்டோ ஸ்டுடியோவில் இருப்பேன், நான்கு மணிக்கெல்லாம் வீட்டில் புவனா உளுந்துக் கஞ்சியைக் காய்ச்சி வைத்து விடுவாள். கஞ்சி வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்து, சீனிவாசா பள்ளிக்கூடம் எதிரிலுள்ள சத்திரத்து வாசலில் நிறுத்தி வியாபாரத்தை தொடங்குவேன். ஒரு கப் கஞ்சி 10 ரூபாய். எண்பதிலிருந்து நூறு கஞ்சிகள் விற்கும். நானூறு ரூபாய் தினசரி முதலீடு. சுமார் 1000 ரூபாய் வரை வருமானம். அதனால் கடன் வாங்குவதோ கொடுப்பதோ கடினமாகத் தெரியவில்லை!

கொரோனா ஊரடங்கு எல்லா தொழிலையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டது வீட்டுக்குள் முடங்கியது ஊர். போட்டோ ஸ்டுடியோவின் வருமான ஆதாரமே கல்யாண ஆர்டர்கள்தானே! திருமணம் இல்லை. நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் காலத்தின் கட்டாயத்தால் எளிமையாக்கப்பட்டன. செல்பேசி ஒளிப்படங்களிலும், ஹேண்ட்டி கேமரா வீடியோக்களிலும் முடிந்து போயின கல்யாண வைபவங்கள்!

ஸ்டுடியோ வியாபாரம் நொடிக்கும் போது சமன் செய்த கஞ்சிக் கடையும் இப்போது இல்லை, திருமணத்துக்கு முன்பு புவனா ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணி புரிந்தாள். குழந்தைகளை வளர்ப்பதற்காக வேலையைத் துறந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பு என்னிடம் கேட்டாள்: “என்னங்க! நான் முன்னால வேல பாத்த ஹாஸ்பிட்டல்ல நர்ஸ் தேவையாம். கூப்பிட்டாங்க. போகவா? எனக்கு மாச சம்பளம் வந்தா உங்களுக்கு இந்த டைம்ல ஹெல்ப்பா இருக்கும்ல?”

“ஏன் புவனா உலகமே கொரோனாவுல பயந்து நடுங்கிக் கிடக்குது! ஆஸ்பத்திரியில டா.க்டர் நர்ஸ்க்கெல்லாம் கொரோனா தொத்திக் கிட்டிருக்கு! இந்த சமயத்துல நீ நர்ஸ் வேலைக்குப் போறது விபரீதத்த விலைக்கு வாங்கற மாதிரி! வேணாம்! நீ சொல்லுவேல்ல, எப்போதும் பாத்துக்கலாம் பயப்படாதீங்கன்னு! நான் எப்படியும் சமாளிக்கிறேன், பாத்துப்போம் கவலப்படாத!” என்று நாசுக்காக மறுத்து விட்டேன்.

அதன் பிறகும் புவனா சும்மா இருக்க வில்லை அவள் தோழி ஒருத்தியின் அண்ணன் தஞ்சாவூரில் பெரிய டைலரிங் யூனிட் வைத்திருக்கிறான். அவனிடம் பேசி முக உறைகள் தைக்க ஆர்டர் எடுத்து வீட்டில் உள்ள தையல் மிஷினில் தைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“அப்பா! நாம எப்பப்பா ஆத்துல குளிக்கிறது?”- வீரா சட்டென்று என்னை உலுக்கிக் கேட்டான். நிதானித்தபடி ”அடுத்த வாரம் குளிக்கலாம்!” என்றவாறு எழுந்தேன்.

தூரத்தில் புஷ்ப மண்டபப் படித்துறையின் சுதைக் குதிரைகள் தெரிந்தன. குதிரை மண்டபத்திலிருந்து உற்சாகமாக ஆற்றில் குதித்துக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். குதிக்கும் போது தெறித்து எழும் நீர்க்கோலங்கள் அழகாகத் தெரிந்தன. ஆறு பார்த்து வியந்து நிற்கும் குழந்தைப் பருவமும், அச்சமின்றி நீந்திக் களிக்கும் இளமைப் பருவமும் நினைவுகளில் நுரைத்துப் பொங்கின!

படித்துறையில் இறங்கினேன் புதுத் தண்ணீர் வந்து நான்கைந்து நாட்கள் ஆகிவிட்டதால் கொஞ்சம் தெளிந்து விட்டது. பாதை முழுதும் உள்ள குப்பைகள், இலைச் சருகுகள், பழந்துணிகள் எல்லாம் புது தண்ணீரில் அடித்துக் கொண்டு போய் விட்டன. இப்போது தண்ணீர் சுத்தமாக இருந்தது. ஒரு கை நீரை அள்ளிக் குழந்தைகள் தலையில் தெளித்து விட்டு என் தலையிலும் தெளித்துக்கொண்டேன். வீட்டுக்கு நடக்கத் தொடங்கிய போது புவனா  செல்பேசியில்  அழைத்தாள்.

“சொல்லு புவனா…”

“இங்க வீட்டுல ஒரு பிரச்னை. டென்ஷன் ஆகாம கேளுங்க!” பதட்டத்தை  மறைத்து “என்ன சொல்லு?” என்றேன்.

”இந்த ரம்யா பொண்ணு என் தம்பியோட வீட்ட விட்டு ஓடிட்டாளாம்! லெட்டர் எழுதி வச்சிருக்கா போலருக்கு! அவ அம்மா எங்கிட்டயும் அத்தைக் கிட்டேயும் ஒரே சத்தம் போடுறாங்க. நாமதான் திட்டம் போட்டு செஞ்சோம்னு ரம்யாவோட அப்பா போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிருக்காரு போல… இப்பதான் கான்ஸ்டபிள் சிவராமன் வந்து நம்ப ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லிட்டுப் போறாரு!”

“வீட்டுக்குத்தான் வந்துகிட்டிருக்கேன் புவனா! நீயும் அம்மாவும் அவங்ககிட்ட எதுவும் வாய் குடுக்காதீங்க…” என்று சொல்லி செல்பேசியை அணைத்து விட்டு நடையைக் கொஞ்சம் வேகப்படுத்தினேன்.

எங்கள் வீட்டுக்குள்ளேயே இருந்த இன்னொரு பகுதி குடியிருப்பில் இருக்கும், மாடசாமியின் மகள் ரம்யா. என் வீட்டில் தங்கி ஸ்டுடியோவில் பணி புரிந்த புவனாவின் தம்பி சுரேஷிடம் பழகியிருக்கிறான். ஒரே வீட்டுக்குள் பல ஆண்டுகளாக இருந்த எங்களுக்கும் அவர்களுக்கும் அதனால் கரைச்சல்! நானும் புவனாவும் சுரேஷைக் கண்டித்து தஞ்சாவூருக்கே அனுப்பி வைத்து விட்டோம். இப்போது சுரேஷுடன் ரம்யா ஓடிப்போய் விட்டாள் போலிருக்கிறது!

எனக்குத்  தலை சுற்றியது. ஏற்கனவே இருக்கும் பிரச்னைகள் போதாதென்று இது வேறா?

நாங்கள் குடியிருக்கும் பூசைப் படித்துறைச் சந்து வீட்டில் கல்யாணத்துக்கு முன்பே அப்பா குடி வந்து விட்டார். அரண்மனை படித்துறைக்கும் புஷ்ப மண்டப படித்துறைக்கும் இடையில் உள்ள எங்கள் சந்து, நாயக்கர் காலத்தில் குதிரைக் கொட்டடியாக இருந்துள்ளது.உயரம் குறைந்த நாயக்கர் கால சுண்ணாம்புக் காரை கட்டிடங்கள், குதிரைகளைக் கட்டி விட்டு வீரர்கள் தங்குவதற்காக, காவிரிக் கரையில் கட்டப்பட்ட கொட்டடிகள்.

அப்பா வசிக்க தொடங்கிய போதே, வீட்டின் இன்னொரு பகுதிக்கு மாடசாமி குடி வந்து விட்டார். ஆனால் இருவருக்கும் அலை வரிசை ஒத்துப் போகவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்னும் சாதுவான மனிதர் அப்பா. மாடசாமி, முன்னாள் குஸ்தி வாத்தியார். அடிதடி, வெட்டுக் குத்து ஆசாமி. அதனால இரண்டு வீட்டுக்கும் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை ஓடிக் கொண்டே இருக்கும். ஆனால் இருவருக்கும் சொந்த வீடு மாதிரி அந்த வீடு.

அய்யாரப்பன் கோயிலுக்கு பாத்தியதைப்பட்ட அந்த வீட்டின் வாடகை அப்பா குடி வரும் போது ஏழு ரூபாய்தான் இப்போது நான் 450 ரூபாய் கொடுக்கிறேன். கிட்டத்தட்ட சொந்த வீடு மாதிரிதான். இரண்டு குடும்பங்களும் எக்காரணம் கொண்டும், அங்கிருந்து வெளியேற வாய்ப்பில்லை. அதனால்தான் பங்காளிக் குடும்பங்கள் மாதிரி சண்டையும் சமாதானமும் வாழ்ந்து வருகிறோம்.

இப்போது இப்படி கை மீறிப் போன ஒரு புது பிரச்னை! இதை எப்படி சமாளிப்பது? எப்படித் தீர்ப்பது? எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்குப் பிறகான இரு குடும்பங்களின் உறவை நினைத்தாலே படபடப்பாக இருக்கிறது!

வீட்டுக்குள் நுழையும் போது மயான அமைதி நிலவியது அம்மாவின் முகம் வெளிறிப் போய் இருந்தது. புவனாவின் முகமும்தான். கொல்லைப் பக்கமிருந்து ஒப்பாரி வைப்பது போல் ரம்யா அம்மாவின் குரல் ஓலம் கேட்டது.

“அடப்பாவி மவளே! இப்படி ஒரு தெருநாயோட ஓடிப்போறதுக்காடி உன்ன பொத்தி பொத்தி வளத்தேன்? ஐயோ கடவுளே! உனக்கு கண்ணில்லையா?”

நான் அறைக்குள் சென்ற போது புவனா உள்ளே வந்து கதவைச் சாத்தினாள்.

“என்ன புவனா இது? பட்ட காலிலேயே படும்கற மாதிரி என்ன வாழ்க்கை இது?”

புவனா என் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்.” “என்னங்க பண்றது! ஊர் சுத்திகிட்டு கெடந்தவனுக்கு உதவி பண்ண நெனச்சோம். அது தப்புதான்! என் தம்பியா அவன்? மானத்த வாங்கிட்டான்! நடந்தது நடந்து போச்சி… ஸ்டேஷனுக்கு வரச் சொன்னாங்க… வாங்க போயிட்டு வருவோம்! அதுங்க ஓடுனதுக்கு நாம என்ன செய்ய முடியும்?”

“மண்டையே வெடிச்சிடும் போலருக்கு புவனா எனக்கு!. இனிமே இந்த வீட்ல எப்படி இருக்கப் போறோமோ தெரியல!” என்றேன்.

“நம்ப மேல எந்தத் தப்பும் இல்ல…. டென்ஷன் ஆகாதீங்!. வாங்க, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிட்டு வந்திருவோம்!” என்ற புவனா அறைக் கதவைத் திறந்து “அத்தே!” என்று குரல் கொடுத்தாள். அம்மா உள்ளே வந்தது.

“இங்க யாரு கிட்டேயும் நீங்க வாயக் குடுக்காதீங்க. அவங்க என்ன பேசுனாலும் அமைதியா இருங்க… குழந்தைகளைப் பாத்துக்குங்க… வாங்க போகலாம்!” என்றாள் என்னைப் பார்த்து.

வீராவும் சங்கமியும் அம்மாவின் புடவையைப் பிடித்துக் கொண்டு, அதன் காலோடு ஒட்டிக் கொண்டனர். வீரா என் முகம் பார்த்து ஏக்கமாக கேட்டான், “தண்ணி பூதம் எப்பப்பா ஆத்த விட்டுப் போகும் ? குளிக்கணுமே !”

“சீக்கிரம் போயிடும்பா! குளிக்கலாம் !” என்றேன். சங்கமி அண்ணனின் ஏக்கத்தில் தனக்கும் பங்குண்டு என்பது போல் என்னைப் பார்த்தாள்.

 

முக உறைகளை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி நடந்தோம். தெரு திரும்பும் வரை எதுவும் பேசிக் கொள்ள வில்லை.

“ஒரு பையனும் பொண்ணும் வீட்டவிட்டு ஓடினால் தப்புரெண்டு பேர் மேலயும்தான்! சின்னக் குழந்தைகளா கண்டிச்சி வைக்க? நாம என்ன பண்ண முடியும்? தைரியமா பேசுங்க பாத்துக்கலாம் !” என்றாள் புவனா.

நான் பதில் சொல்லவில்லை. அவள் கைகளைப் பற்றிக் கொண்டேன் இறுக்கமாக. அப்போது ஒரு வீட்டுக்குள்ளிருந்து, ஊரடங்கு பற்றிய தளர்வு, தலைப்புச் செய்தியாக கசிந்து கொண்டிருந்தது. எனக்குள் ஒரு மெல்லிய ஆசுவாசம் பரவியது. உளுந்துக் கஞ்சிக் கடையைத் திறந்து விடலாம். கடன் பிரச்னைகளை ஓரளவு சமாளிக்கலாம்!

புஷ்ப மண்டபத் தெரு திரும்பும் போது, படித்துறை தெரிந்தது. குதிரை மண்டபத்தின் மேலிருந்து குதிக்கும் சிறுவர்கள் தெரிந்தனர். பூத்தூவலாக எழும்பிச் சிதறும் தண்ணீர் தெரிந்தது. இப்போது புதுத்தண்ணீர் வருகையின் ஆரவாரம் இல்லை. குப்பைக்கூளங்கள் இல்லை.

அமைதியாக, தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது ஆறு…


– எஸ்.ராஜகுமாரன்

எழுதியவர்

எஸ்.ராஜகுமாரன்
கவிஞர், எழுத்தாளர் மற்றும் இயக்குநராக புகழ்பெற்றவர் எஸ்,ராஜகுமாரன். இவரின் தந்தையார் கவிஞர் வயலூர் கோ.சண்முகம் தமிழக அரசால் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்ட தமிழறிஞர்.
எஸ்.ராஜகுமாரன் பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்கள் இயற்றியுள்ளார். விகடன் பிரசுரம் வெளியீடாக வெளிவந்துள்ள '27 இந்திய சித்தர்கள்', 'ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர்', ‘மலைவாழ் சித்தர்கள்' ஆகிய நூல்கள் பரவலான வாசக வரவேற்பைப் பெற்று விற்பனையில் சாதனை படைத்தவை. - 27-இ சுடலைமாடன் தெரு திருநெல்வேலி டவுண்' என்ற எழுத்தாளர் தி.க.சி. குறித்த ஆவணப்படம், 'லாவணி' என்னும் நாட்டுப்புற இசைக்கலையை குறித்த ஆவணப்படம் ஆகியவை பாராட்டுகளையும், சில விருதுகளையும் வென்றவை. கலைஞரின் சிறுகதைகளை கலைஞர் தொலைக்காட்சிக்காக தொடராக இயக்கி உள்ளார்.
அண்மையில் வெளியான ஆவணப்படம் 'ஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர்'. ஆதரவற்ற மக்கள் குறித்த தனியாக யாருமில்லை' என்ற ஆவணப்படமும் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கே குறித்த கவிதைப் பயணம்' என்ற ஆவணப்படமும் இப்போது இயக்கி வருகிறார். ஓமந்தூராரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை The Premier எனும் பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார். இவரின் சமீபத்தில் நூல் நதியில் விளையாடி கொடியில் தலை சீவி- கட்டுரைத் தொகுப்பு
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
வெற்றிப்பேரொளி

“காசிக்கு கங்கை காவிரிக்கு திருவையாறு!”

” ஊர் என்பதே ஆறுதான்!”— ஆகா!

நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு முழுமையான சிறுகதையைப் படித்த நிறைவு.

திருவையாற்றில் வசிப்பவர்களுக்கே
தெருக்கள் பற்றி இவ்வளவு தெரியுமா என்பது சந்தேகமே!

“தண்ணீர் பூதம்” – கதைக்குப் பொருத்தமான காவிரிப் பின்னணி. தலைப்பு மிக ஒட்டுதல்… !

அன்பும் மகிழ்வும் வாழ்த்தும் தோழர்!

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x