18 July 2024

மாயா .. உனக்கு எத்தனை மொழிகள் தெரியும் ?”

“மூணு ”

“என்னென்ன ?”

“தமிழ் ..”

“ம்ம் ..”

“அப்புறம் பறவைகளின் மொழி .. அதோட பூக்களின் மொழி ”

என் அன்பின் வினோத் .. உனக்கு நினைவிருக்கிறதா ? என்னைப் பெண் பார்க்க வந்த அன்று நீ என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘உனக்கு எத்தனை மொழிகள் தெரியும் . அதற்கான என் பதிலைக் கேட்டு நீண்டதொரு புன்னகையைக் கொடுத்தாயே . ம்ம் . அன்றிலிருந்து தான் நான் புன்னகையின் மொழியினைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன் வினோத்.

உன் கைகோர்த்துக் கடற்கரை மணலில் நடந்த பொழுதொன்றில் நீ என்னிடம் கேட்டாய். யாரோடும் பகிர்ந்துகொள்ளாத ரகசியம் என்னுள் ஏதேனும் இருக்கிறதாவென்று. அதற்கு நான் “ஆம் .. இருக்கு .. நீதான்” என்று சொல்லி உன் கண்களைப்பார்த்தேன். அதற்கான பதிலாய் நீ என் கண்களுக்குள் ஆழமாய் ஊடுருவினாய். அந்த நிமிடத்தை இன்னும் பத்திரமாகவே வைத்திருக்கிறேன் வினோத்.

‘சரி சொல். உனக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே . பறவைகள் தமக்குள் ஒன்றையொன்று பெயரிட்டு அழைத்துக்கொள்ளுமா ?’ என்று கேட்டாய் ஒரு முறை நீ. இரண்டு நொடிப் புன்னகை மௌனத்துக்குப் பிறகு நான் சொன்னேன் ‘உன்னை நான் பெயர் சொல்லித்தானே அழைக்கிறேன் வினோத் ‘.

எங்கோ அளக்கவியலாத தூரத்தில் சில நிமிட இடைவெளியில் ஜனித்த இரண்டு சிசுக்கள் நாம் என்று அடிக்கடி சொல்வாய். இதை நீ சொல்லும் ஒவ்வொருமுறையும் அந்தச் சிலநிமிட இடைவெளிக்குள் நான் மீண்டும் மீண்டும் ஜனித்துக் கொண்டிருந்திருக்கிறேன் வினோத்.

‘அதிருக்கட்டும் நீ இப்போதே சொல். இன்றைய நாளின் உன் அத்தனை ஆசைகளையும் உடனே நிறைவேற்றுகிறேன்’ என்று என் ஆசைகளைச் சொல்லச் சொல்லிக் கேட்டாய். அதற்கு நான் இன்றைய ஒரு நாளாகவே என் எல்லா நாட்களும் இருந்துவிட வேண்டுமென ஆசை எனக்கு என்று சொன்னபோது உன் கண்ணீர்த்துளியை முதன் முதலாகப் பார்த்தேன் வினோத்.

ஒரு முறை ஒரு விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தோமே உனக்கு நினைவிருக்கிறதா ? ஒருவர் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மற்றொருவர் சரியாகச் சொல்ல வேண்டும் . ம்ம் . அந்த விளையாட்டில் நான் நினைத்த ஒவ்வொன்றையும் நீ ஒவ்வொருமுறையும் சரியாகவே சொல்லிச் சொல்லி வென்று கொண்டிருந்தாய். ஆனால் நானோ நீ யோசித்த எல்லாவற்றையும் வேண்டுமென்றே தவறாகச் சொல்லிச் சொல்லித் தோற்றுக்கொண்டேயிருந்தேன் . ஏன் தெரியுமா ? நீ என்னைப்பற்றி யோசிக்கும் அத்தனையும் காற்றுக்கும் கூடத் தெரியாமல் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டுமென்றுதான் வினோத்.

நம் அறை ஜன்னலினருகே அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன் இந்தக் கடிதத்தை. நாம் இங்கு அமர்ந்து விரல்கோர்த்துப் பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம் இந்த ஜன்னலின் மேல் வந்தமரும் குருவி இப்போது இந்தக் கடிதத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறது வினோத். அதற்கும் நம் மொழி புரியத்தொடங்கிவிட்டதுபோலும். வழக்கத்துக்கு மாறாக இன்றைக்கு அது இடதுபுறமாக உட்கார்ந்திருக்கிறது. முதன் முதலாய் அந்தக்குருவி நம் வீட்டிற்கு வந்தபோது நாமிருவரும் அதனோடு நீண்ட நேரம் விளையாடிக்கொண்டிருந்தது உனக்கு நினைவிருக்கிறதா வினோத் ?

மனதிற்குள் ஓயாமல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது இந்தப்பாடல் ..

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
என் மனது போகும் வழியை
உந்தன் மனது அறியுமே

இது நமக்குப்பிடித்த பாடல் அல்லவா வினோத் !

நீ ஒரு முறை சொன்னாய் உன் உள்ளங்கை ரேகையின் வடிவம் என் முகச்சாயலில் இருக்கிறதென்று. நானோ அதில் என் கன்னத்து மச்சம் தென்படுகிறதா என்று தேடினேன். “போடி லூசு’ என்று சொல்லிப் புன்னகைத்தாய் வினோத்.

தீர்ந்துபோன நினைவுகளுக்குப் பிறகான தூரத்தில் நீ தெரிகின்றாய் என்று சொன்னேன். அந்த தூரம் எத்தகையது என்று கேட்டாய் நீ. எனக்கும் உன் மீதான என் நேசத்திற்குமான தூரம் அது என்றேன். அப்போது என் கைகோர்த்த உன் விரல்களின் ஸ்பரிசம் இன்றும் மறக்கவில்லை வினோத்.

என் ஆயுள் வரை வார்த்தைகளுக்காகக் காத்துக்கொண்டேயிருப்பேன் நான் உன் மீதான எனதன்பை வெளிப்படுத்திவிட . ஆனால் என் வார்த்தைகளென்று என் முன்னே நீதான் நிற்கின்றாய். உன்னைக்கொண்டே உன் மீதான எனதன்பை நான் எப்படிச்சொல்வேன் வினோத்.

ஆனால் … எல்லா நாட்களும் ஒன்றுபோலவே இருந்துவிடுவதில்லை என்ற உண்மைக்குக் கசப்பின் சுவை. எப்படியிருந்தாலும் அந்த ஒரு நாள் அத்தகையதாய் இருந்துவிடுமென்று நான் எதிர்பார்த்திருக்கவேயில்லையே வினோத்.

நீ என் பக்கத்தில் இல்லாத பொழுதுகள் எவ்வளவு பைத்தியக்காரத்தனமாய் கழிந்து கொண்டிருக்கின்றன என்று என்னைச் சுற்றியிருக்கும் எல்லாரும் அறிவார்கள். உன்னைத் தவிர வினோத்.

நீயற்ற நம் வீட்டில் என்னைச்சுற்றிக் கவிந்திருக்கும் இந்த இருளான நிசப்தம் என் ரணங்களை இன்னும் அதிகப்படுத்துகிறது. நம் முதல் திருமண நாளன்று நீ எனக்குப் பரிசளித்த கண்ணாடிக்குடுவை நட்சத்திர மீன் சலசலத்துக்கொண்டிருக்கும் சிறு சருகுத்துண்டென எனக்குக் காட்சியளிக்கிறது வினோத் .

எனக்கிது ஒவ்வொரு நொடிக்குமான நேசம். உனக்கிது முழு வாழ்க்கைக்குமான நேசம். உன் முழு வாழ்வையும் என் ஒவ்வொரு நொடியையும் கொண்டு நிரப்பிவிட ஆசைப்படுகிறேன் வினோத்.

மாலை நேரத்தில் நாம் எப்போதும் உலாவும் உனக்குப் பிடித்த அந்தக் காளான் வடிவ மரம் இருக்கும் சாலையில் தினமும் நடந்து செல்கிறேன். நீ எதிர்ப்பட்டு விடுவாயென நம்பிக்கொண்டு. பூங்காவினுள் ஒலிக்கும் குருவிச் சத்தங்கள் உன் விளையாட்டின் சிரிப்பினை நினைவுபடுத்துகின்றன வினோத்.

மழை வரும் ஒவ்வொரு முறையும் நீ என்னைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறாய் என்றும் எனக்கான உன் அன்பின் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறாய் என்றும் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன் வினோத்.

ம்ம். திட்டுத்திட்டாய்ப் பரவியிருக்கும் மேகங்களுக்குள் இன்று மழைத்துளிகள் மீதமிருப்பதாய்த் தெரியவில்லை. இப்போது நீ என்னை நினைத்துக் கொண்டிருக்கவில்லையா வினோத் ?

இப்போது நாம் ஆடிக்கொண்டிருக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் நாமிருவருமே கண்களைக் கட்டிக்கொண்டிருக்கவில்லை என்பதை அறிவாய்தானே வினோத் ?

தன்னந்தனியாக நடந்துகொண்டிருப்பதாய் உணர்கிறேன். முன்பெப்போதும் இப்படியொரு பொழுதினை நான் தேடிக்கொண்டதில்லை. முன்பு எங்கும் இந்தத் தொலைவுகளை நான் கண்டடைந்ததில்லை என்பதை நீ அறிவாய் என்று எனக்குத் தெரியும் வினோத்.

என் கைகள் உன்னை நோக்கி நீண்டிருக்கின்றன. உன் விரல்கள், நீண்டிருக்கும் என் கைகளைப்பற்றிக்கொள்ளக் காத்திருக்கின்றன. நம் இருவரின் கைகளுக்கிடையிலான தூரம் மிகுந்த அச்சத்தைத் தருகிறது வினோத்.

சொல்லி அழத் தோள்கள் வேண்டுமெனக்கு என்று அறிவாய் தானே வினோத் ? ஆனால் உனக்குத் தெரியாது வினோத். நான் இப்பொழுது அழுவதில்லை . இனி எப்போதும் அழுவதாய் இல்லை. ஆச்சரியக் குறிகளை வெளிப்படுத்திவிட்டேன். அவை யாவும் கேள்விக்குறிகளாக எஞ்சி நிற்கின்றன. அவற்றை நான் என்ன செய்வது வினோத் ?

என் துவக்கப்புள்ளியும் என் முற்றுப்புள்ளியும் நீதான். கனவுகளுக்காக மட்டுமே காத்திருந்து பழகியவள் அல்லவா நான். இப்போது தூக்கத்திற்காகக் காத்திருக்கிறேன். ஆம். மனம் அமைதியாகிவிடும் ஏதோ ஒரு நொடியில் தூங்கிவிடுவதற்காக நான் காத்திருக்கிறேன் வினோத்.

என் மனம் வலிக்கவில்லை. நீ இருக்கும் என் மனதால் எனக்கு வலியைத்தர இயலாது வினோத்.

காத்திருத்தல் ஒரு சுவாரசியம் என்று சொல்வாயே. இந்தக் காத்திருத்தல் எனக்கு மிகுந்த அச்சத்தைத் தருகிறது வினோத்.

தூரம் விலகிப் போகக்கூடியவை என்று எதுவும் இல்லைதானே . நினைவுகளின் வடிவங்கள் உண்மைதானே. இழந்துகொண்டிருக்கும் நிமிடங்களை நிரப்பிவிட , இல்லவே இல்லாத நிமிடங்களால் முடியாதுதானே. காட்சிப்பிழைகள் என்றொரு வார்த்தையை எனக்குக் கற்றுக்கொடுத்தாயே. இப்போது நான் கண்டுகொண்டிருக்கும் அத்தனையும் காட்சிப்பிழைகள் தானே வினோத் ?

கற்பனைக்கும் அப்பாற்பட்ட சில நொடிகள் எங்கோ ஓரிடத்தில் நம் வருகைக்கென்று காத்திருக்கும் என்று எப்போதும் சொல்வாய் வினோத் நீ. பூக்கள் மட்டும் நிரப்பப்பட்ட பள்ளத்தாக்குக்குள் பட்டாம்பூச்சியொன்றைத் தேடியலையும் பொழுது போன்றா என்று கேட்டேன் நான். முடிந்து போய்விட்டதாய் நினைத்திருந்த ஒரு நேசக்கதையை மீண்டும் துவங்கச் செய்த ஒரு நிமிடமாகக் கூட இருக்கலாம் என்றாய் நீ . ம்ம் .. ஆம் .. இப்போது நம்புகிறேன். கற்பனைக்கும் அப்பாற்பட்ட அந்த ஒரு நொடி எங்கோ ஓரிடத்தில் நமக்கென்று காத்துக்கொண்டுதான் இருக்கிறது வினோத்.

மிக மிகத் தொலைவுக்கு அப்பால் ஏதோ ஒரு இருண்ட புள்ளி இருப்பதாயும் அதன்பின்னே ஒளிந்திருக்கும் கொடும் தனிமையின் சாபங்கள் என்னைத் துரத்திக்கொண்டு வருவதாகவும் ஒரு கற்பனை அடிக்கடி வந்து என்னை பயமுறுத்துகிறது.  இந்தச் சாபத்திலிருந்து என்னைக் கூட்டிப்போய்விட நீ வந்துவிடுவாய்தானே வினோத் ? வந்துவிடு வினோத்.

முற்றுப்பெற அனுமதியற்ற இந்தக் கடிதத்தை உன்னிடம் சேர்ப்பேன் நான் . வேறோர் மழை நாளில் எனக்கான உனதன்பை உன் புன்னகைகளின் மொழிகொண்டு நீ எழுதிக்கொண்டிருக்கையில்.

இப்படிக்கு
உன் பிரியங்களின் மொழியாலானவள்
மாயா

கிருத்திகா தாஸ்

எழுதியவர்

கிருத்திகா தாஸ்
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x