18 July 2024

னீதின் வீட்டைப் பார்க்கும்போது அமீருக்கு வியப்பாக இருந்தது. அவனது கிராமத்தில் இப்படியான வீடுகள் இல்லை. அவ்வளவு பெரிய வீட்டுக்கு அவன் இதற்குமுன் சென்றதுமில்லை. உள்ளே செல்வதற்கு அவன் கால்கள் அவனையும் மீறித் தயங்கி நின்றன. வெட்கம் போன்றதொரு உணர்வு அவன் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டதைப் போல் நெளிந்தான். பெரும் பணக்காரர்களுக்கு முன்னால் எப்போதும் அவனுக்குள் ஒருவிதத் தாழ்வுணர்ச்சி உருவாகுவதை இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் திண்ணமாக உணர்கிறான். இப்படியான பெரிய வீடுகளுக்குள் நுழையும் போதும், வசதியானவர்களைச் சந்திக்கும் போதும் தான் ஒரு லோக்கல் கிளாஸ் என்றொரு விரும்பப்படாத உணர்வு அவனுக்குள் கிளம்பி வந்து விடுகிறது. அந்த உணர்வு அவனைப் போன்ற கீழ்த்தட்டு மனிதனொருவனுக்கு அவன் பிறப்பிலிருந்தே உருவாகி இருக்கும் ஓர் அபத்த உணர்வாக இருக்கலாம் என யாரோ ஒருவன் அவனுக்குள் சொல்லிக் கொள்வது போலும் இருக்கும். அந்தக் குரல் அவனுக்கு இது போன்ற சந்தர்ப்பங்களில் சற்று தெம்பூட்டக்கூடியதாக இருந்தது. அவன் இயல்பை வென்று தன்னை சகஜப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வழியாகவும் அவனளவில் அது இருந்தது.

வீட்டை முழுமையாக கண்களுக்குள் உள்வாங்க எண்ணி வெளியிலேயே சிறிது நேரம் அசையாமல் நின்று கொண்டிருந்தான். அவனது வீடு இந்த வீட்டின் இரண்டு அறைகள் கூட தேறாது என நினைத்துக் கொண்டான். அனீத் அவனது தயக்கத்தைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

“வாடா உள்ளுக்க” என்று மிக அலட்சியமாக சொல்லிக்கொண்டே அவன் உள்ளே சென்று விட்டான். வீட்டின் படிக்கட்டிலிருந்து வாசல் கேட் வரை திண்ணைத் தரை போடப்பட்டிருந்தது. இளம்பச்சை நிறப் பெயின்ட் வீட்டின் சுவர்களை பிரகாசமாக்கிக் கொண்டிருந்தது. கேட்டிலிருந்து ஒரு நெடுஞ்சாலையைப் போல் பூக்கன்றுகளின் சீரான வரிசை வீட்டின் முகப்புவரைக்கும் சென்று கொண்டிருந்தது. பல வண்ணப்பூக்களின் வாசம் முற்றத்தை நிறைத்திருந்தது. இவ்வளவு அழகான வீட்டை அவன் அதற்குமுன் கண்டதில்லை. அனீத் ஒரு நாள் கூட தங்கள் வீடு ரொம்பப் பெரியது என்றோ, அழகானது என்றோ சொல்லி பெருமை பீத்திக்கொண்டதில்லையே என்ற நினைப்பு அமீருக்கு வந்தது. அனீத் பீத்திக்கத் தெரியாதவன் என நினைத்துக் கொண்டான். அமீர் நிஜத்தில் முடியாவிட்டாலும் கற்பனையால் தனக்கான மகிழ்ச்சியையும், செல்வங்களையும் தேடிக்கொள்வான்.

மங்கலான இருள் கவிந்து கொண்டு வந்தது. வீட்டின் முன்னால் நின்றிருந்த கத்தா மரத்தில் குந்தி இருந்த ஒரு பறவை தன் கூடு நோக்கிப் பறக்கத் தயாராகிக்கொண்டிருந்தது. அமீரின் வருகையை அந்தப் பறவை சற்று அந்நியமாகப் பார்த்துவிட்டுத் தன் அலகை விரித்து கீச்சிட்டது. அந்தப் பாஷை அவனுக்குப் புரிந்துவிட்டதைப் போல் பறவையைப் பார்த்து விளையாட்டாகத் தலையசைத்தான். அப்படியே அந்தப் பறவையை சிறிது நேரம் இரசித்தான்.

அனீதின் தம்பிக்கு அன்று சுன்னத் கலியாணம். சுன்னத் செய்யப்பட்ட பின் ஏழு இரவுகள் சுன்னத்துக்கார மாப்பிள்ளைக்கு காவல் கடமைபுரிய வேண்டி இருந்தது. சுன்னத்துக்கார மாப்பிள்ளை நித்திரையில் துவண்டு உலத்திப் படுக்கும் போது காயம் தாக்குப்பட்டால் ஆறுவதற்கு காலம் எடுக்கும். வீண் சிரமங்களும் ஏற்பட்டுவிடும். இதனால் சுன்னத்துக்கார மாப்பிள்ளையை ஏழு நாட்கள் நித்திரை முழித்து பாதுகாக்க வேண்டியது வீட்டாரின் பொறுப்பாக இருந்தது. சுன்னத்துக்கார மாப்பிள்ளைக்கான முழுக் காவல் பொறுப்பையும் அவன் உம்மா அனீதிடமே ஒப்படைத்திருந்தாள். இந்தக் காவல் பணிக்குத்தான் அனீத் தன் வகுப்புத் தோழன் அமீரை அழைத்துச் சென்றிருந்தான். அவனுக்குத் துணையாக இன்னொரு நண்பனும் வர இருப்பதாக அனீத் அமீரிடம் சொல்லி இருந்தான். மூன்று பேரும்தான் ஏழு இரவுகளையும் சிறப்பிக்கப் போகும் கலியாண வீட்டுப் பிரதிநிதிகள். அது ஒருவகையில் அமீருக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

அமீர் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். வீடு மேலும் மேலும் அவனுக்கு பிரமிப்பாகவே இருந்தது. அவனது வீட்டை விட அது பல மடங்கு பெரிதாகவும் வசதிகள் நிறைந்தாகவும் இருந்தது. வீட்டைப் பார்த்தவுடன் ஏழு நாட்களையும் கழிப்பதற்கு நல்ல வசதியான இடம் என முடிவு செய்துகொண்டான். அப்போது அவனது அகமலர்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது.

ஆனால் அமீருக்கு வீட்டுக்குள் நுழையும் போதே ஒரு சந்தேகமும் தோன்றியது. சுன்னத் கலியாணமும் ஒரு வாழ்வு கலியாணமளவுக்கு பெரிய ஆரவாரமாகச் செய்வதுதான் அப்போதைய வழமையாக இருந்தது. அதுவும் வசதிபடைத்த ஒரு குடும்பம் ஏன் இவ்வளவு சாதாரணமாக யாரையுமே அழைக்காமல் செய்கிறார்கள்? அந்த சந்தேகத்தோடு அவன் அனீதைப் பார்த்து ஏதோ கேட்க விரும்பினான். ஆனாலும் நாளை கேட்கலாம் என்ற கணக்கில் மௌனமானான்.

வீட்டுக்குள்ளிருந்து ஒருவர் எங்கோ போவதற்காக வேகமாக வெளியாகிக் கொண்டிருந்தார். அது அனீதின் தந்தை என்பது அமீருக்கு முன்னமே தெரிந்திருந்தது. அமீர் அவரைப் பார்த்து புன்னகைக்க முயன்றான். ஆனால் அவர் அவன் முகத்தை மிகச் சுருக்கமாக முறைத்துப் பார்த்தார். அவர் கண்களில் தெரிந்தது யார் மீதான கோபம் என்பதை அவன் அனுமானிக்கும் முன்னமே அவர் வெளியேறிச் சென்றுவிட்டிருந்தார். மிக நீண்ட காலமாகவே புன்னகைக்காத, பேசாத, அன்பு விசாரிக்காத கறள் பிடித்த வாய் போல அவரது உதடுகளும் முகத்தின் அளவுக்கே கறுப்பாக இருந்தன. தீயில் எரிந்து அணைந்த மரக்கட்டை ஒன்று அவனைக் கடந்து போவதைப் போலவே அவரது உருவம் அவனில் பதிந்தது. ஒரு மனிதன் என்றால் குறைந்தபட்சம் புன்னகைக்க வேண்டுமல்லவா? அவர் முறைத்துப் பார்த்துக் கொண்டே வெளியேறிச் சென்றது அமீருக்கு சங்கடமாக இருந்தது. நண்டுக் கண்களைப் போல் அவரது கண்கள் சற்று வெளித் தள்ளியிருந்ததை அமீர் கண்டான். அவை அவரது நிறத்துக் கேற்ப சிவந்திருந்தன. சிலவேளை தான் வந்தது அவருக்குப் பிடிக்கவில்லையோ என அங்கலாய்த்து மேலும் அவன் கால்கள் துவண்டன.

உள்ளே உற்சாகமற்று நுழைந்தான். அனீத் “வாடா வாடா“ என்று சொல்லிக் கொண்டே அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தான். அனீத் ஒருவிதமான அவசரக்காரன் போன்றவன். நுண்ணர்வு இல்லாதவன். எதையும் சரியாக கிரகித்து உள்வாங்காதவன். அவன் பேச்சைக் கேட்டு தான் வந்தது மடத்தனமானதோ என ஒரு எண்ணம் கூட அந்தக் கணத்தில் அமீரில் வந்து உறைந்தது.

வீட்டின் முன் ஹோலில் பெரிய சாம்பல் நிற ஷோபா செட் ஒன்று கிடந்தது. மீன் தொட்டி ஒன்றுக்குள் பல வர்ணங்களில் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. மீன்கள் கூட வீட்டில் வளர்ப்பார்கள் என்பதை அங்குதான் அமீர் முதன் முதலாகத் தெரிந்துகொண்டான். அந்த ஹோலில் கிடந்த பெரிய கபேட் முழுவதும் வீட்டுப் பாவனைப் பொருட்களாலும் அழகியல் பொருட்களாலும் நிறைந்திருந்தது. இப்படியொரு வீட்டுக்குள் தான் வந்தது மடத்தனமாகத்தான் போய்விட்டது என்ற அவனது எண்ணம் மேலும் மேலும் வலுவடைந்துகொண்டே வந்தது.

“இவன்தாம்மா அமீர்” ஷோபாவில் உட்கார்ந்திருந்த உம்மாவிடம் அனீத் சொன்னான். அமீரைப் பொறுத்தவரை அனீத் அப்போதைக்கு அங்கு செய்த ஒரேயொரு நல்ல காரியம் அதுதான்.

உம்மாவின் முகம் பளீச்சென்று மலர்ந்தது. உதடுகளை அளவாகத் திறந்து இனிமையாகச் சிரித்தாள். உதடுகளின் இடைவெளிக்குள்ளால் மாதுளைப் பற்கள் வெண்மையாகத் தெரிந்தன. அந்த சிரிப்புடன் அமீரின் ஒட்டுமொத்த தயக்கமும் நீர்த்துப் போனது. அனீதின் உம்மா இளமையாகவும் அழகானவராகவும் இருந்தார். அவளை மேலோட்டமாகப் பார்த்தால் அனிதுக்கு சகோதரி வயதுதான் வரும் போலிருந்தது. அனீதும் அமீரும் 17 வயதிலிருந்தனர். ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இவ்வளவு இளமையான ஒருவருக்கு 17 வயது மகன் எப்படி என இன்னுமொரு சந்தேகம் அவனைத் தொற்றிக்கொண்டது.

உம்மாவின் அழகு அவனை மூர்க்கமாகச் சுண்டியது. பதிலுக்கு சிரிக்க முடியாமல் சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அவரது காதில் வளையல்கள் அசைந்தன. அவை எப்போதும் அசைந்து ‘க்னிங்’ என்றொரு ஒலியை எழுப்பிக் கொண்டே இருந்தன. அமீரின் கண்கள் அந்த வளையல்களுக்கும், காது அதன் ஓசைக்கும் ஒரே நொடியில் அடிபணிந்தன. இந்த அழகிக்கு எப்படி ஒரு கரிய மனிதன் அதுவும் செழிப்பே இல்லாத வரண்ட முகத்தான் வந்து கிடைத்தான் என அமீர் யோசித்துப் பார்த்தான். பின்னர்தான் ஏதோ ஒரு உணர்வு உந்த பதிலுக்குச் சிரித்தான். அமீருக்கு வீட்டின் அழகியல் கொடுத்த மகிழ்ச்சியை உம்மாவின் அழகு மேலும் கூட்டியது.

“உள்ள போங்க தம்பி..ஏழு நாளெய்க்கும் நீங்கதான் காவல் பார்க்கனுமாக்கும்”

ஷோபாவிலிருந்து எழுந்து கொண்டே அனீதின் உம்மா சிரித்துக் கொண்டு சொன்னாள். அவரது குரலும் இசைபோல அமீரின் காதுகளில் ஒலித்தது. மருதோன்றியால் சிவந்த வெண்ணிறக் கைகளில் மின்விளக்கொளி பட்டு அமீரைக் கிளர்ச்சியூட்டியது. ச்சீ என்ன அற்பமான மனம் என தன்னையே திட்டிக்கொண்டான். அமீர் அவரை மாமி என்று அழைக்கப் போவதாக முடிவு செய்து கொண்டான்.

சுன்னத்துக்கார மாப்பிள்ளை படுத்துக்கிடந்த அறைக்குள் அமீர் பிரவேசித்தான். பெரிய டீ பல்ஃப் ஒன்று அறைக்குப் போதுமானளவு வெளிச்சத்தைப் பாய்ச்சுக் கொண்டிருந்தது. உத்தரத்தில் தொங்கிய கூரை மின்விசிறி காற்றை அள்ளிச் சொறிந்தது. அமீர் தனது கிராம வீட்டு முற்றத்தில் இயற்கையாய் வீசும் காற்றின் வேகத்தை விட இந்தக் காற்று கனமாக இருப்பதாக உணர்ந்தான். ஆனால் அதன் வெம்மையை அவன் அசூசையாக உணர்ந்தான். பெரிய இரண்டு கண்ணாடி ஜன்னல்களைக் கொண்ட அந்த அறையின் ஒரு பக்கச் சுவரை பழங்களினதும் நீர் வீழ்ச்சியினதும் அழகிய வண்ணப்படங்கள் நிறைத்திருந்தன. ஆனால் அந்த வீடு ஒரு சுன்னத்துக் கலியாண வீடே அல்ல என்பதைப் போல கனத்த மௌனம் பூண்டிருந்தது.

அனீத் இரவைக்கு படம் போடுவதற்காக டீவியையும், டெக்கையும் சரிப்பிடிக்கும் வேலைகளில் மும்முரமாக இருந்தான். அவனுக்கு இன்னொரு பையன் எடுபிடியாளாக நின்றான். அவன் யாரென்று அறிந்துகொள்ள அமீர் விரும்பவில்லை. நித்திரை முழித்திருந்து காவல் பணி செய்வதற்கு படம் போடுவது சுன்னத்துக் கலியாண வீடுகளின் சம்பிரதாயங்களுள் ஒன்றாக இருந்தது. அதுவும் அமீர் போன்றவர்களுக்கு சுன்னத்து வீடொன்று அளிக்கக்கூடிய உச்சபட்ச மகிழ்ச்சியும் அதுவாகத்தானிருந்தது.

அனீதின் உம்மா அதே மாறாப் புன்னகையோடு அந்த அறையின் கதவண்டை நெருங்கி வந்து நிலையில் சாய்ந்து கொண்டு நின்றாள். கதவுத் திரைச்சீலைக்குள் உடலை மறைத்துக்கொண்டு அவளில் சாய்ந்தபடி இன்னொரு உருவம் நிற்பதை அமீர் கண்டான்.

“அது சஹானா..தங்கச்சி“ என்றான் அனீத்.  அந்தப் பெயர் அறியப்படாத காரணங்களுக்காக அமீருக்குப் பிடித்துப் போனது. திரையை நீக்கி அவள் முகம் காட்டினாள். அவள் உம்மாவுக்கும் வாப்பாக்குமிடைப்பட்ட ஒரு நிறத்திலிருந்தாள். ஆனாலும் உம்மாவைப் போல் அழகு அவளிடமுமிருந்தது.  அவள் எல்லாவிதத்திலும் இரண்டு பேரின் கலவையாக இருந்தாள். அவள் அமீர் மீது ஓர் அக்கறையற்ற பார்வையை செலுத்தி விட்டு உதடுகளை மெல்லப் பிதுக்கினாள். அது அவளது அந்தஸ்த்திலிருந்து வரும் கர்வமாக இருக்கலாம் என்று அமீருக்குத் தோன்றியது. ஆயினும் அடுத்த நொடி உம்மாவை போன்று ஒரு கனிவான சிரிப்பும் அவளிடம் தோன்றியது. அமீருக்கு அது ஓர் இதமான சுதந்திர உணர்வைக் கொடுத்தது. ஆனால் சஹானா பற்றி அவன் கேட்க விரும்பியதை உம்மா கேட்காமலே சொன்னாள்.

“Grade லெவன்த் படிக்காள்..கெட்டிக்காரி. எக்ஸாம்ல ரெண்டாவது மூணாவது வருவாள்” என்று பெருமிதமாகச் சொல்லிக்கொண்டே அவளைப் பாரத்தாள். சஹானா வெட்கப்பட்டது போல மெலிதாக நெளிந்தாள். இருந்தாலும் இன்னும் அவள் முகத்தில் கர்வம் இருந்து கொண்டே இருந்தது. பணம் படைத்தவர்களிடம் இயல்பாக இருக்கும் கர்வத்தோடு கெட்டித்தனமும் இணைந்தால் அது இன்னும் உயரமானதாக இருப்பதை அமீர் பல தடவைகளில் கண்டிருக்கிறான். சஹானாவும் அந்த வகையாகத்தான் இருப்பாள் என்று உள்ளூர நம்பினான். உம்மாவின் அழகு அவளுக்கு முழுமையாக வராமல் முக்கால் வாசிதான் வந்திருப்பது அவளுக்கு ஒரு கவலையாக இருக்கும் என்பது அமீருக்குப் புரிந்தது.

அனீத் படம் போடுவதற்கான ஆயத்தங்களை கச்சிதமாக செய்து முடித்துவிட்டிருந்தான். அனீதும் தந்திரமாகத்தான் அமீரை அழைத்து வந்திருந்தான். அமீர் பெரிய அலட்டல் இல்லாதவன். கொஞ்சம் வெட்கப்பட்ட டைப். பணமில்லாததால் கொஞ்சம் தாழ்வுணர்ச்சியுமுள்ளவன். நல்ல சாப்பாட்டுக்கும் படம் பார்ப்பதற்கும் ஏங்குபவன். இந்த இரண்டையும் கொண்டே ஏழு நாட்களையும் முடித்துவிடலாம் என்ற எண்ணம் அனீதுக்கிருந்தது.

அமீர் ரஜினி ரசிகன் என்பதால் அப்போது வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த பாட்ஷா படக் கொப்பியை படக்கொப்பி அடுக்கில் ஆகவும் மேலே வைத்திருந்தான் அனீத். பாட்ஷா என்ற பேரைப் பார்த்ததுமே அமீருக்குள் மேலதிக பரவசம் நெஞ்சுப் பகுதியை அற்புதமாக வருடிக் கொடுத்தது. சஹானாவின் முகமும் மாமியின் முகமும் சட்டென மறைந்து ரஜினியின் முகம் இப்போது அவன் கண்களில் நிறைந்தது. பாட்ஷா பார்க்க வேண்டும் என்ற அவன் கனவு இவ்வளவு சீக்கிரமாக நிறைவேறப் போவதையிட்டு அவன் புளகாங்கித்தான். தாயும் மகளும் அகன்றதும் அனீதின் கைகளை உணர்ச்சிகரமாக முத்தமிட்டுப் புன்னகைத்தான்.

”டேய் என்னடா இது” என்று அனீத் அவனிலிருந்து சங்கடமாகத் தெறித்து விலகினான். ‘க்ளிங்’ என்ற வெட்கச் சிரிப்புடன் அப்போதுதான் சஹானாவின் உருவம் திரைச் சீலைக்குப் பின்னால் நெளிந்து மறைவதை அமீர் கண்டான்.

அமீர் மிகவும் உணர்ச்சிகரமானவன். மனக்கட்டுப்பாடற்றவன். அன்பெனும் உணர்ச்சியில் ஆழ்ந்து போய் தன்னையே மறந்துவிடுபவன். அதனால் கண்ணாடி போல் இலகுவில் உடையக்கூடியவன். அனீத் சொன்ன மற்ற நண்பனும் வந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். அவனுக்குப் புடலங்காய் போன்ற கை, கால்கள். ஆனால் உறுதியான உடல். அமீருடையதைப் போல் நைந்து நெகிழ்ந்து போன உடலல்ல. ஒடுங்கிய முகம். அனீதின் வாப்பாவைப் போன்று கரிய நிறத்திலிருந்தான். திக்குவாயாகப் பேசினான். சரளமாகப் பேசத் தொடங்கி விட்டால் அவனுக்குத் திக்குவாய்ப்பிரச்சினை இருப்பதே தெரியாதளவுக்குப் பேசினான். அமீரளவுக்கு இல்லாவிட்டாலும் அவனும் திரைப்படப் பிரியனாகவே இருந்தான். அவ்வப்போது பெருங்குரலில் பாடல்களும் முழக்கினான். அப்போது சொற்கள் திணறாமல் லகுவாக அவன் வாயிலிருந்து வெளிப்பட்டன. ஆனால் இனிமையற்றிருந்தன. மயில் அகவுவதைப் போல. ஆனால் அவன் அதை தினமும் செய்துகொண்டுதான் இருந்தான்.

மாமியும், சஹானாவும் காவலாளிகளுக்கு இரவுத்தீனிக்குரிய ஒழுங்குகளில் மும்முரமாகினர். சுன்னத்துக்கார மாப்பிள்ளை அவ்வப்போது முரண்டு பிடிக்கத் தொடங்கினான். அவனுக்கு விருப்பமான படம் எதுவும் அனீத் எடுத்து வந்திருந்த படக்கொப்பிகளுக்குள் இல்லை என்பதாக குறைபேசி அழுதான். பிறகு அனீத் அவனுக்குப் பிடித்த படம் ஒன்றைப் போய் எடுத்து வந்த பிறகுதான் அமைதியானான். அவனுக்கு இயல்பாகவே செல்லம் அதிகமாக இருக்கும் என்பதை அமீர் அவன் முகத்தைப் பார்த்தே மட்டிட்டான். போதாக்குறைக்கு சுன்னத்துக்கார மாப்பிள்ளை வேறு. என்ன பாடு படுத்துவானோ தெரியவில்லை என்ற மனக்குறை அமீருக்கு அவனைப் பார்க்குந் தோறும் தோன்றியது. அடிக்கடி “உம்மா உம்மா” என்றும் செல்லக் குரலில் சிணுங்கினான். ஆனால் வாப்பாவை அவன் ஒருபோதும் அழைத்ததே இல்லை. வாப்பா குடும்பத்துடன் ஒட்டுறவு இல்லாத மனிதனைப் போல் அமீருக்கு உருவகமானார். எவ்வளவு நேரம் வெளியில் போனவர். தன் மகனின் விஷேச நாளில் கூட அவன் அருகில் அவர் இல்லையே என அமீர் தனக்குத் தேவையில்லாத ஒன்றைப்பற்றி மிகுந்த சிரத்தையுடன் கவலைப்பட்டான். அவ்வளவு பிஸியானவரா அனீதின் தந்தை?

முதல் நாளிலேயே ரஜினியின் பாட்ஷா படம் என்பதால் அமீரும் நண்பர்களும் தங்களது காவல் பணியை அவ்வப்போது மறக்கவும் செய்தனர். ஒரே இரவில் அமீர் அந்தப் படத்தை திரும்பத் திரும்ப மூன்று முறை பார்த்தான். சுன்னத்துக்கார மாப்பிள்ளையும் வெறி பிடித்தவன் போல் டீவியையே பார்த்தக் கொண்டிருந்தான்.

“தம்பிகளா, சுன்னத்துக்கார மாப்புளயையும் கொஞ்சம் பார்த்துக்குங்க” உம்மா அடிக்கடி நினைவூட்டிக் கொண்டாள். அமீரைப் போல் மூர்க்கமாகப் படம் பார்க்கும் ஒருவனை அவளும் அதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்.

இரவு 11 மணியையும் கடந்துவிட்டிருந்தது. அனீதின் உம்மா தங்கை எல்லாம் தூங்கிவிட்டார்கள். அப்பதான் அனீதின் வாப்பா வந்திருந்தார். அவர் போகும் போது இருந்த அதே தோரணையில்தான் தெரிந்தார். மகன் படுத்திருக்கும் அறையை யாரோ ஒருவரைப் போல் எட்டிப் பார்த்து விட்டு தானே சாப்பாட்டை வைத்து உண்டார். தன் நண்டுக் கண்களை உருட்டிப் பிரட்டி அமீரை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு கைகளைக் கழுவினார். எங்கே திட்டி விடுவாரோ என்ற பயம் அமீருக்குள் துளிர்த்தது.  அவர் யாருடனும் பேசவில்லை. அவருடனும் யாரும் பேசவில்லை. அவர் நல்லவேளை எதுவுமே பேசாமல் தூங்கச் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் அமீர் பள்ளியில் வைத்துக் கேட்டான்.

“வாப்பா ஏண்டா யாரிட்டையும் பேசமாட்டாரா?”

”இல்லடா அவர் ஒத்தரடயும் பேசிரல்ல. அதான் உம்மா தம்பிட சுன்னத்த யாரையும் கூப்பிடாம செஞ்ச?”

“உம்மாவோடயும் பேசமாட்டாரா?”

”இல்ல.எங்களட மட்டும் அளவாப் பேசுவாரு.. ஆனா செலவுக்கெல்லாம் அவருதான் காசி தருவாரு. அவருக்கு கட எல்லாம் இருக்கு” என்றான். கணவனும் மனைவியும் பேசாமலே ஒரே வீட்டுக்குள் வாழலாம் என்பது அன்றுதான் அமீருக்குத் தெரியவந்தது. அவனது வாப்பாவும், உம்மாவும் ஒருநாள்கூட பேசாமல் இருந்ததை அமீர் கண்டதில்லை. ஆனால் அனீதின் உம்மாவும் வாப்பாவும் இப்படி வாழ்வது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“இனி எப்ப பேசுவாக?” அமீர் கேட்டான்.

”அவங்க அஞ்சி வருசமாப் பேசாமத்தான் இருக்காங்க.”

“அஞ்சி வருசமாவா?“ அமீரின் வாய் அகலத்திறந்து அப்படியே நின்றது. ஐந்து வருடங்களாக கணவனும் – மனைவியும் பேசிக்கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிப்பதை அமீர் பத்திரிகைச் செய்திகளில் கூட படித்ததில்லை. அதை நெருக்கமாக நின்று அறியும் போது அவனுக்கு அயர்ச்சியாக இருந்தது.

அடுத்த நாள் இரவும் படம் பார்க்கும் படலம் தொடங்கியது. இந்த முறை இரண்டு படத்தோடு நித்திரை முழிப்புக் கலக்கத்தில் காவலாளிகள் மூவரும் தூங்கிக் குறட்டையடித்தனர். போதாக்குறைக்கு மாப்பிள்ளையை வளைத்து, உலத்தி அடித்து முரட்டுத்தனமாகத் தூங்கும் மூன்று காவலாளிகளிடமிருந்தும் உம்மாவுக்கு மகனைக் காப்பாற்றுவது பெரும்பாடாக இருந்தது. ஆனால் மாப்பிள்ளை கொஞ்சமும் கண் கொட்டாமல் தொலைக்காட்சி சத்தத்தை சற்றுக் கூட்டிவைத்து படம் பார்த்துக் கொண்டிருந்தான்.

அனீதின் உம்மா சூடான பிளேன்டீயுடன் காவலாளிகளை எழுப்பினார். மாப்பிள்ளையோடு சேர்ந்து காவல்காரர்களும் தூங்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் மாமி கதைத்துக்கொட்டத் தொடங்கினார். கதைப்பதிலும் கதை கேட்பதிலும் அமீருக்கு திரைப்படம் பார்ப்பதைவிடவும் அலாதிப்பிரியம் இருந்தது. அதுவும் ஒரு அழகான மாமியின் நள்ளிரவு நேரப் பேச்சை அவளின் மகளோடு சேர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதில் மேலதிக கவர்ச்சியாக உணர்ந்தான். அவரது கதை எங்கோவெல்லாம் சுற்றி கடைசியில் சொந்த வாழ்க்கையில் வந்து முட்டி நின்றது.

“நான் ஓ.எல். படிச்சிட்டிருக்கக்கதான் இவரு என்ன எக்ஸாமும் எழுதவுடல. நாளைக்கு எக்ஸாம்டா இன்டெய்க்கு காரைக் கொண்டந்து ஏத்திட்டுப் பெயித்தாரு. போய் கலியாணம் முடிச்சிட்டம். எங்க வூட்ல யாருக்கும் விருப்பம் இல்லாமத்தான் செஞ்ச. அப்ப அவருக்கு என்னில உண்மயான காதல் இருந்திச்சி.  முடிச்சி ஒன்னர வருசத்திலேயே அனீதப் பெத்திட்டன். பொறவு எனக்கும் படிக்க முடியல. காலமும் பெயித்து. நானும் படிச்சிருந்தா ஒரு உத்தியோகத்தில இருந்திருப்பன். ஸ்கூல்ல நான் அவர விடக் கெட்டிக்காரி. ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்தான்”

மங்கலான வெளிச்சத்தில் அவர் கண்கள் பளபளத்தன. அனீதின் உம்மா கண் கலங்குவதையும் அவர் முகம் சுருங்குவதையும் அமீர் முதன்முதலாகப் பார்த்தான். வட்டப் பொன்னெழுத்துப் பீங்கான் போன்ற அந்த முகம் காற்றுப்போன பலூன் போல் ஒரு கணத்தில் சுருங்கி அவனைத் துயரப்படுத்தியது. அவரது கலகலப்பான முகத்தை மட்டுமே பார்த்து வந்த அமீர் அந்த முகத்தைப் பார்க்க விரும்பாது தொலைக்காட்சியை சும்மா வெறித்தப் பார்த்துக் கொண்டிருந்தான். திரையில் தோன்றிய மனிதர்கள் சும்மா வெறுமனே வாயை மட்டும் அசைப்பது போன்று அவனுக்குத் தோன்றியது. அவரது ஆழமான மனக்காயம் முகத்தில் தெரியாமல் எப்படி இவ்வளவு அற்புதமாக அவரால் மறைக்க முடிந்தது. ஒரு பெருமூச்சுக்குப் பின் உம்மா சீக்கிரமே சுதாரித்து மீண்டாள். வழமைக்குத் திரும்பி புன்னகையையும் உதிர்த்தார். அவருக்குள் இப்படியொரு சோகம் இருப்பதை அமீரால் நம்பவே முடியாமலிருந்தது. அதற்கான எந்தத் தடங்களையும் அவரில் அவன் கண்டதில்லை. பிள்ளைகளில் கூட கண்டதில்லை. அனீதின் தந்தையின் முகத்தில் வேண்டுமானால் அதற்கான சில குறிகளை அவன் கண்டிருக்கக்கூடும். அதுவும் மிக மிக மேலோட்டமாக.

“இப்ப ஏன் ரெண்டு பேரும் பேசிரல்ல..” அமீர் புதிருக்கான பதிலை அறியும் வேட்கையுடன் கேட்டு விட்டான். மாமியின் புன்னகை சட்டென்று உதிர்ந்து அவர் முகத்தில் மீண்டும் ஒரு வெறுமை படர்ந்ததை அமீர் பார்த்தான். கிட்டத்தட்ட அதையொத்த மாற்றத்தையே சஹானாவின் முகமும் அடைந்தது. அமீர் சற்று சங்கடமடைந்து மீண்டும் டீவியின் பக்கமாகத் திரும்பினான். கலக்கத்தில் உறைந்த மாமியின் வாயிலிருந்து துண்டு துண்டாக சொற்கள் உடைந்தன.

“அது தம்பி, அவருக்கு வேற பொம்புளயட தொடுப்பாம் எண்டு நெறயப் பேர் சொல்றாங்க. கொலனிக்குள்ள ஒரு முடத்தியோட அவருக்குத் தொடர்பு“

அனீத் தூங்கிக்கொண்டிருந்தான். அல்லது அப்படி நடித்துக் கொண்டிருந்தான். சஹானா இறுக்கமான முகத்துடன் சுன்னத்துக்கார மாப்பிள்ளையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனோ ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். இவ்வளவு அழகான ஒருவரை இப்படிக் கரிக்கட்டை போலிருக்கும் ஒருவரால் எப்படி கைவிட்டு ஒரு முடத்தியோடு போக முடிந்தது? அதுவும் தன்னை நம்பி வந்தவளுக்கு இப்படியொரு துரோகத்தைச் செய்த அந்தாளின் முகத்தைக்கூட பார்க்கக் கூடாது என்றெல்லாம் ஏதேதோ சிந்தனைகள் அமீருக்குள் கொந்தளித்து அடங்கின. கறுப்புக்குக் கிடைத்த வெள்ளை இது. வெள்ளையின் அழகும், வெள்ளையின் நளினமும், வெள்ளை மனமும் கறுப்புக் குணத்துக்கு திகட்டியதா என்ன? அமீருக்கு அன்றிரவு படம் பார்க்க பிடிக்கவில்லை. கறுப்பும் வெள்ளையுமாக மனிதர்கள் தெரிந்தனர். வாழ்வு ஒரு ஏமாற்று வட்டத்துள், மாயவட்டத்துள் சுழலும் கண்ணுக்குத் தெரியாத சூனியப் பகுதியாகத் தோன்றியது. அப்படியே தூங்கிப் போயிருந்தான்.

சுன்னத்துக்கார மாப்பிள்ளையும் எழுந்து விட்டான். அமீருக்கு காலை எட்டு மணியைத் தாண்டி இருந்ததும் தெரியாமல் தன் சொந்த வீடு போல் தூங்கிக் கொண்டிருந்தான். யாரும் அவனைத் தெந்தரவு செய்யவில்லை. மாமி ஊற்றிக் கொடுத்த டீயைக் குடித்துவிட்டு அங்கிருந்து கேள்விச் சலனங்களால் வதைபடும் கனத்த மனதுடனும் அரைகுறை விருப்புடனும் கழன்று சென்றான். அனீதின் தந்தை மீது ஒரு தீவிர வெறுப்புணர்வு தனக்குள் திரண்டு வருவதை உணர்ந்தான். அனீதுக்கே வராத கோபம் தனக்கெதற்கு என்று அவனுக்குப் புரியவில்லை. சிலவேளைகளில் நம் செயல்களுக்கும் உணர்வுகளுக்கும் எந்த அர்த்தமும் இருப்பதில்லை. ஒரு பூர்வ ஜென்ம பந்தம் அந்தக் குடும்பத்துடன் வந்து ஒட்டிக் கொண்டதைப் போல் அவன் எண்ணினான்.

உலகின் இரகசியங்களையும், மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்கும் இரவுகளின் குளிர்ச்சியில் அமீரின் உறவு அந்த வீட்டுடன் ஒவ்வொரு இரவிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆழமாகிக் கொண்டு வந்தது. அமீர் காவல் பணிக்கு வந்தவன் என்றில்லாது தங்கள் உறவுக்காரப் பையன் என்பதைப் போல் இப்போது அந்த வீடும் அவனை உணரத் தொடங்கியது.

தினமும் பள்ளி முடிந்ததும் வீட்ட போய் சாப்பிட்டு விட்டு உடனே அமீர் கிளம்பி அங்கு போய் விடுவான். அந்த இடம் அவனுக்கு மிகப்பிடித்தமான இடமாக மாறிற்று. அனீதின் உம்மாவின் அழகிய முகமும் அன்பான பேச்சும் சஹானாவின் கனிவும் அவனுக்கு அவனது சொந்த வீட்டிலேயே கிடைத்ததில்லை. இதனால் ஏழு நாட்கள் முடிந்தும் இனிக் காவல் தேவை இல்லை என்ற நிலை வந்தும் அவன் அங்கிருந்து செல்ல முடியாதவனாக போய் வந்து கொண்டிருந்தான். அந்த வீடும் மொத்தமாக அமீரை நேசிப்பது போல்தான் அவனுக்குத் தோன்றியது. அமீரின் வருகை அங்கு அருவருக்கப்படுவதாகத் தெரியவில்லை. அனீதின் வாப்பா மட்டுமே தனது வழமையான நண்டுக்கண்களால் அவனை உருட்டிப் பிரட்டிப் பார்ப்பார். ஆனால் அவருக்கே வீட்டில் பெரிய மரியாதை இல்லை என்பதை அமீர் தெரிந்துகொண்டதிலிருந்து அவரை அவன் சட்டை செய்வதே இல்லை.

மாலை நேரம். அனீதின் வீட்டில் மாப்பிள்ளையின் அறையில் சாவகாசமாக உட்கார்ந்து அமீர் படம் பார்த்துக் கொண்டிருந்தான். டெலிபோன் அலறியது. யாரும் தூக்கவில்லை. மாமியோ சஹானாவோ பதிலளிப்பார்கள் என்று அமீர் எண்ணினான். யாரும் பதிலளிக்காமலே அது ஓய்ந்தது. அனீதின் வாப்பாவின் அழைப்பு என்பதை அறிந்துதான் அவர்கள் தூக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டு, மறுமுறையும் அலறிய போது அமீர் பேச வேண்டியதாயிற்று.

அமீருக்கு அதற்கு முன் டெலிபோனில் பேசிய அனுபவம் இல்லை. ரிஸீவரைத் தூக்கும் போது இலேசாக அவனது கைகள் நடுங்கின. அனீதின் வாப்பாதான் பேசினார். இப்போது அவன் கை மேலதிகமாவும் நடுங்கியது. நல்லவேளை சஹானா இல்லை என நினைத்துக் கொண்டான். அவருடன் நேரில் பேசுவதையே தவிர்த்து வந்தவனுக்கு அது கொஞ்சம் சங்கடமாகத்தானிருந்தது. அவர் மீது அவனுக்கு வெறுப்பும் கூடவே கொஞ்சம் பயமும் இருந்திருக்கிறது என்பதை அந்தக் கணத்தில் புரிந்துகொண்டான்.  தனது காதுக்குள் அவர் நேரில் வந்து பேசுவது போலவே இருந்தது.

“தம்பி நான் வரச் சுணங்கும். பின்னேரம் 5 மணி போல பெரிய முன் ஜன்னல் கட்டடிய அணிலொண்டு வரும். சாப்பாடு வெய்க்க மறந்திட்டன். ஃபிரிஜ்ல கொய்யாப்பழம் வெச்சிருக்கன். அத எடுத்து ஜன்னல் கட்டில வெய் தம்பி. மறந்திராத” என்றார் தெளிவான குரலில். அமீருக்கு ஒரு கணம் அலைகளுக்குள் அமிழ்வதைப் போலிருந்தது. “சரி“ என்ற ஒற்றை வார்த்தையுடன் போனை வைத்தான்.

‘ஒரு அணில் மீதே இவ்வளவு அன்பாக இருக்கிறாரே. இவர் இவ்வளவு இளகிய மனிசனா? இவர் எவ்வளவு மோசமானவரெண்டு நெனச்சன். மாமி அப்புடித்தானே சொன்னாள்’ அமீரின் வாய் மௌனமாகப் பேசியது. மாமியின் வார்த்தைகளுக்கூடாக அவன் புரிந்துகொண்டது ஒரு மோசமான அன்பில்லாத ஒரு கணவனை, ஒரு தந்தையை. ஆனால் நிஜத்தில் அவர் வேறொரு மனிதன் போன்று இப்போது அமீருக்கு உருவகமானார். மாமா என பரிவாக அமீரின் உதடுகள் ஒரு முறை உச்சரித்துக் கொண்டன. முதன் முதலாக கறுப்பின் மீது அவனுக்கு ஒரு பிடிப்பு உருவானது. ஒரு அணிலையே இவ்வளவு நேசிக்கும் ஒருவனுக்குள் எவ்வளவு ஈரம் இருக்கும் என அமீரால் உறுதியாக நம்ப முடிந்தது. அனீதின் உம்மா சொன்னவற்றின் மீது அமீருக்கு முதன்முதலாக சந்தேகங்கள் முளைத்து வந்தன.

இந்த முரணும் பிளவும் ஒருவகைக் கறுப்பு வெள்ளை விளையாட்டோ எனவும் எண்ணினான். வாப்பா கறுப்பு உம்மா வெள்ளை. இது கறுப்பு வெள்ளை ஒவ்வாமைதான் என எண்ணினான். கறுப்பு என்றால் ஆப்பிரிக்கா கண்டம். வெள்ளை என்றால் ஐரோப்பாக் கண்டம். இதில் யார் அழகு. யார் அறிவு. யார் நல்லவர்கள். யார் உலகத்துக்கு தேவையானவர்கள். யார் பிற மனிதர்கள் மீது அன்பு கொண்டவர்கள், யார் பிறருக்கு உதவுவபவர்கள். எல்லாவகையிலும் வெள்ளைதான் உசத்தியாக அவனுக்குத் தோன்றியது. இந்தக் கறுப்பு வெள்ளை ஒவ்வாமையாகவும் விளையாட்டாகவும்தான் அமீர் அந்த உறவைப் பார்த்தான். உண்மையில் அனீதின் வாப்பாதான் கெட்டவரா? அவர்தானே கறுப்பாக இருக்கிறார். அப்படியானால் அவர்தான் அறியாமையுள்ளவர். மோசமானவர். ஒழுக்கமில்லாதவர். அவன் உம்மா வெள்ளைதானே. அவர் நல்லவர் தான். ஆனால் சஹானா கறுப்பு வெள்ளைதான். அவள் கறுப்பாகவுமிருக்கிறாள். வெள்ளையாகவும் இருக்கிறாள். உம்மாவைப் போன்றும் இருக்கிறாள். வாப்பாவைப் போன்றும் இருக்கிறாள். அன்பாகச் சிரிக்கிறாள். கோபமாக முறைக்கிறாள். அவள் இரண்டின் கலவையாக இருக்கிறாள்.

டீவியை சும்மா வெறித்துக் கொண்டு யோசனையில் மூழ்கி இருந்தான். ஏதோ ஒன்று தன்னை அலைக்கழிப்பது போல் அவனுக்குத் தோன்றியது. சலனங்கள் இடைவிடாது உதிர்ந்தன. வாழ்க்கையில் எல்லோரும் தனது தரப்பை மட்டுமே நியாயப்படுத்திக் கொள்வதைப் போலத்தான் இதுவும் நடந்திருக்கலாம். ஈகோதான் இன்று நிறையச் சீரழிவுகளுக்கு காரணம் என எங்கோ ஒரு புத்தகத்தில் படித்தது அவன் நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கிறது. எல்லாம் அவரவர் அனுபவங்களிலிருந்து உருவாகி வருவது. அமீரின் வாப்பாவின் நியாயம் என்ன என்பதை யார் கண்டறிவது? அவரது நியாயத்தை அந்த வீட்டுக்கு யார் சொல்வது?  மேலும் மேலும் அமீருக்குள் சலனங்கள் உதிர்ந்தன. அனீத் எல்லாம் தெரிந்துதான் மௌனமாக இருக்கிறானா?

மர்மத்தின் வாசலில் இப்போது நின்றுகொண்டிருப்பதாக அமீர் உணர்ந்தான். அனீதின் வாப்பாவின் மெய்யுருவை அறிந்துகொள்ளும் கிறுக்குத்தனமான ஆர்வமொன்று அவனுக்குள் வேகமாக முளைத்து வளர்ந்தது. கண்களில் தெரியும் உலகுக்கு அப்பாலும் இருக்கும் மனிதர்களைப் பற்றிய அந்த அந்தரங்க உண்மையைக் கண்டறியும் வேட்கை அவனுள் பொங்கியது. கருப்பு வெள்ளை மனிதர்களின் நிஜத்தை கண்டறியும் ஒரு உத்வேகம் அவனை சகட்டு மேனிக்கு இயக்கியது. ஆனால் எங்கே எப்படிக் கண்டுபிடிப்பது.

ன்று காலை நேரம். அமீர் அனீதின் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அனீதின் வாப்பா அவனை இடைமறித்தார். அவன் கையில் ஒரு பையை நீட்டினார். பையில் பசுமையான மரக்கறிகள்.

“தம்பி இதக்கொண்டு போய் நான் தந்தண்டு நான் சொல்ற வீட்டுல கொண்டு குடுத்துட்டு வா. எனக்கு கடையில கொஞ்சம் வேல இருக்கு. அமீருக்கு அது நல்ல சகுனமாகப் பட்டது. அந்த சந்தர்ப்பம் அவனுக்கு இயல்பாகவே வந்து கிடைத்தது. விபரத்தைக் கேட்டு தலையை ஆட்டிக்கொண்டே பையை சைக்கிள் ஹேண்ட்டிலில் கொழுவிக் கொண்டு விரைந்தான்.

அவர் சொன்ன திசையில் அவர் சொன்ன அடையாளம். ஒரு பழைய நீத்துக் கட்டு வீடு. வீட்டின் முன்னே பந்தல் போன்று பெஸன் ஃப்ரூட் கொடி படர்ந்திருந்தது. பலாமரமொன்று பிஞ்சுக் காய்களோடு வீட்டின் ஓரமாக உயர்ந்து வளர்ந்து நின்றது. அனீதின் வாப்பா சொன்ன இடம் அதுதான். உள்ளே நுழைந்தான். வாசலில் ஒரு பெண் சாய்வு நாட்காலியில் உட்கார்ந்திருந்தாள். ஒரு கால் சூம்பி இருந்தது. எழுந்து அவளால் நடக்க முடியவில்லை. அமீரைக் கண்டதும் கதிரையிலிருந்து நீங்கி தவண்டு கொண்டு வீட்டுக்குள் நுழைய முயன்றாள். அமீர் விரைந்து விபரத்தைச் சொல்லி பையை கதிரையில் வைத்தான். வயதான இன்னுமொரு பெண். திண்ணைத் தரையிலிருந்து எழுந்து வந்து அமீரைக் தன் நடுங்கும் கரங்களால் அமீரைக் கட்டிக் கொண்டு அழுதாள். அவள் அவனை அனீத் என்று நினைத்திருக்க வேண்டும்.

“உங்க வாப்பாதான் எங்களக் கவனிக்கிற. மனிசப்பழம் அவரு. எனக்கும் ஏலா வயசி. என்ர மகளுக்கும் கால் ஏலாது. உங்க வாப்பாட நல்ல மனசு. எங்கள்ட்ட எதயுமே எதிர்பார்க்காம உதவி செய்வாரு. அவருக்க ஏழு அஜ்ஜிச் செஞ்ச நம்மய ரப்பு குடுப்பான்” கிழவியின் கைகள் தொடர்ந்தும் நடுங்கிக் கொண்டே இருந்தன. கண்களிலிருந்து உஷ்ணமான துளிகள் விழுந்து அமீரின் கைகளை நனைத்தன. அமீருக்கு அங்கு மேலும் நிற்கவோ பேசவோ முடியவில்லை. ஒருவித அசட்டுக் குறுநகையுடன் கிழவியிடமிருந்து விடுபட்டு வெளியே வந்தான். சைக்கிளில் ஏறி அனீதின் வீட்டை நோக்கி மிதித்தான். கால்களுக்கு எந்தச் சுமையும் தெரியவில்லை.

உலகம் உண்மையில் கறுப்பு வெள்ளை விளையாட்டுத்தான் என இப்போது உறுதியாக நம்பினானான். எல்லா மனிதர்களும் அப்படித்தான் இருக்கிறார்களா? எல்லோருக்குள்ளும் கறுப்பும் இருக்கிறது வெள்ளையும் இருக்கிறது. எல்லோரும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள். கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு கண்ணிலும் கறுப்பும் வெள்ளையும்தான் இருக்கிறது. அதன் வழியேதான் உலகைக் காண்கிறோம். தான் ஒரு ஞானியைப் போல் சிந்திப்பது போன்றிருந்தது அமீருக்கு. அமீர் அனீதின் வீட்டை அடைந்துவிட்டான். ஆனால் உள்ளே செல்ல முடியாமல் அவன் மொத்த உடலும் விறைப்பது போல் இருந்தது. முதல்நாள் அங்கே நுழைவதற்கு அவன் கால்கள் இடறித் தடுமாறியது போல் இப்போதும் தயங்குவதை உணர்ந்தான். வீட்டின் விசாலத்தை வீதியில் நின்று பிரமிப்பாகப் பார்த்தான். அதன் உள்ளே இருக்கும் போலி உலகத்தையும் பார்த்தான். உள்ளே செல்லாமலே தன் வழியில் திரும்பிச் செல்லத் தொடங்கினான்.


 

எழுதியவர்

ஜிஃப்ரி ஹாசன்
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x