21 November 2024
children of heaven article narmi

“Cinema  is the greatest mirror of humanity ‘s struggle. You see this alternative world, you are part of it. Everybody is part of it. This is our world. “

-Lav Diaz 

சினிமாக்கள் என்பவை மனிதனின் வாழ்வியலை பேசுபவை. சாமான்ய மனிதனுக்கு மிக அருகில் அமர்ந்துக்கொள்பவை. அவனை கொஞ்சம் ஆசுவாசப்படுத்துபவை, சிரிக்க வைப்பவை, அழ வைப்பவை, காதல்வயப்பட வைப்பவை, கோவப்பட வைப்பவை, புரட்சி செய்ய வைப்பவை. அவனுக்கான அரசியலை பேசுபவை, அவனுக்கான அடக்குமுறையை பேசுபவை. ஆனால் அவையனைத்தையும் செயற்கையான நாடகத்தன்மையில் அல்லாது இயல்பாக பேசுகிற படங்கள் உலகம் முழுவதும் உள்ள எளிய மனிதர்களாலும் கொண்டாடப்பட்டிருக்கின்றன, வெற்றியடைந்திருக்கின்றனகலையின் எல்லா வடிவங்களுக்கும் உள்ள பொதுத்தன்மை அதுதான். கலை குறிப்பிட்ட மொழியால், கலாச்சாரத்தால், புவியியல் வேறுப்பாட்டால் வேறுபடுவதில்லை. ஆத்மார்த்தமான கலையின் வெளிப்பாடு மனிதனின் உணர்வுகளை எங்கிருந்தாலும் தொடுவதாக இருந்திருக்கின்றது. அந்த வகையில் ஈரானிய திரைப்படங்களுக்கு என்று உலகத்தில் ஒரு தனியிடம் இருக்கின்றன

தற்போதைய ஈரான் என்று அழைக்கப்படும் பாரசீகம் நீண்டகால தொன்மையான கலைசார்ந்த அறிவியலை கொண்டு உலகம் முழுவதும் ஒளிப்பாய்ச்சிய காலம் என்ற ஒன்று இருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஈரானிய திரைப்படத்துறையை இன்று பார்க்க வேண்டியிருக்கிறதுஉலகத்தின் சினிமா வரலாற்றில் ஈரானிய திரைப்படங்கள் ஒரு சகாப்தம் எனலாம். அப்படிப்பட்ட ஈரான்  பல சிறந்த திரைப்பட இயக்குனர்களை இந்த உலகுக்கு தந்திருக்கிறது. அதில் மிகமுக்கியமான இயக்குனர் மஜித் மஜீதி. ஈரானின்  தலைநகர் தெஹ்ரானில் உள்ள  ஒரு நடுத்தர குடும்பத்தில்  1959 இல் ஈரானிய திரைப்பட இயக்குனர் மஜித் மஜுதி பிறந்தார்உலக சினிமாவை கொண்டாடுகிற எவராலும் ஈரானிய திரைப்படத்தை புறக்கணித்துவிட்டு உலக சினிமாவை கொண்டாட முடியாது. அதிலும் ஈரானிய திரைப்பட இயக்குனர்  மஜித் மஜுதி ஈரானிய திரைப்பட உலகுக்கு கிடைத்த ஒரு பொக்கிசம். பல விருதுகளுக்கு சொந்தக்காரரான  மஜிதின் மிக உன்னதமான படைப்புக்களில் ஒன்றே  சில்ரன் ஆஃப் ஹெவன் என்ற திரைப்படம்.

1997 இல் பாச்சிகாயெ அசெமான்  என பாரசீக மொழியில்  வெளிவந்த திரைப்படமே  சொர்க்கத்தின் குழந்தைகள் என்ற இந்த திரைப்படம்இது பின்னர் சில்ரன் ஆஃப் ஹெவன் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. உலகின் மிகச்சிறந்த படங்களை பட்டியலிடப்படுகின்றபோது  இந்த படத்திற்கென்று ஒரு தனியிடம் உண்டு

ஈரானிய படங்களை பார்க்கிற எவருக்கும் ஒரு அந்நியத் தன்மை புலப்படுவதில்லை. ஆடம்பரமான இசைகள் இல்லை. தாம் வாழ்கிற தேசங்களுக்கு அப்பால் படப்பாடல்களோ, காட்சிகளோ இல்லை. படத்துக்கு சம்பந்தமில்லாத பாடல்கள் இல்லை. கவர்ச்சியான நாயகிகளோ, நாயகன்களோ இல்லை. பொருத்தமற்ற உடல் அலங்காரங்கள் இல்லை. அந்த மக்களின் வாழ்வியலில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவற்றை மட்டும்தான் அவர்கள் படங்களுக்குள் கொண்டுவருகிறார்கள். அந்த காட்சிகள் அவ்வளவும் அத்தனை இயல்பாக இருக்கின்றன.  

மேற்குறிப்பிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கிய படம்தான் சில்ரன் ஆஃப் ஹெவன் என்ற திரைப்படம். ஈரானின் வறிய நிலையில் அன்றாட தேவைகளை அன்றன்று பூர்த்தி செய்கிற ஒரு குடும்பத்தை மையப்படுத்திய கதை. பத்து வயது நிரம்பிய அலி, அவனது தங்கை சாரா, குடும்பத்திற்கென ஓடியாடி வேலை பார்க்கிற ஒரு நடுத்தர குடும்பத்து அப்பா, புதிதாக பிரசவித்த குழந்தையோடு நோய்வாய்ப்பட்டு இருக்கிற அம்மா மற்றும் குட்டிப்பாப்பா, இவைகள்தான் கதையின் பிரதான பாத்திரங்கள். இடையிடையில் அவர்கள் சந்திக்கிற மனிதர்களுடன் ஒரு சிறு காட்சிகள், அதுவும் மிகவும் அழுத்தமான அரசியல் பேசும் காட்சிகள்.

இந்த படத்தை பார்க்கிறப்போது ஈரானின் நடுத்தர அப்பாவி ஏழை மக்களினுடைய வாழ்வியலை அழகாக புரிந்துக்கொள்ள முடிகிறது. ஈரானின் அங்காடிகள் எப்படி இருக்கும், அங்கு எதையெல்லாம் மக்கள் விற்கிறார்கள், அந்த மக்களின் ஆடைக் கலாச்சாரம் எப்படியிருக்கிறது, அங்குள்ள கட்டிடங்கள், அங்குள்ளவர்களின் பிரதான தொழில் என்ன எல்லாவற்றையும் அறிந்துக்கொள்ள முடிகிறது

ஐந்துபேர் சாப்பிடுகிற ஒரு குடும்பத்தில் மூன்று வேளை  உணவை தேடிக்கொள்வது என்பதே பெரும் பணி. அதனால் செய்கிற வேலைக்கு மேலதிகமாக கையில் கிடைக்கிற எல்லாவற்றையுமே செய்கிற  தந்தையாக  அலியின் தந்தை இருப்பார். அந்த செலவுகளையே பூரணமாக பார்த்துக்கொள்ள முடியாதபடி அவர்களின் வாழ்வியல் மீளமுடியாத கடனில் சுழன்றுக்கொண்டிருக்கும். குடும்பத்திற்கு தேவையான வெளித்தேவைகளை பார்ப்பவனாக அலி இருக்கிறான். அவனே குடும்பத்துக்குத் தேவையான உணவு பொருட்கள், மரக்கறிகள், மருந்துகள், வீட்டுப்பொருட்களை பழுதுபார்ப்பது, போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றான். சாரா அம்மாவுக்கு வீட்டில் உதவியாக இருக்கிறாள். நாளாந்தம் இந்த வேலைகளை கவனித்தப்படிதான் அவர்கள் பாடசாலைக்கு சென்று வருகிறார்கள்

இவ்வாறு வழமைப்போல  அலி குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அங்காடித்தெருவுக்கு செல்கிறான். அதில் முதல் வேலையாக தங்கை சாராவின் பிய்ந்து போன சப்பாத்தை தைக்கக்கொடுப்பான்அந்தச் சப்பாத்தை திருத்துவதற்கு செருப்பு தைப்பவர் முப்பது தெகரான்களை பெற்றுக்கொள்வார். சாராவின் சப்பாத்தை கருப்பு பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டு, அடுத்ததாக அவனுக்கு பணிக்கப்பட்டிருந்த  சுக்கா ரொட்டிகளை வாங்குவதற்கு  கடைக்குப் போவான். ரொட்டிகளை வாங்கிவிட்டு, அடுத்ததாக அவனுக்கு  உருளைக்கிழங்கு வாங்க அக்பர் கடைக்குப் போகவேண்டியிருந்ததுஅக்பர் கடைக்கு போகின்ற அலி   சாராவின் செருப்பு பையை வெளியில் வைத்துவிட்டு, கடைக்காரன் தந்த கேரி பையில்  உருளைக்கிழங்கை போட்டுக்கொண்டிருப்பான். எல்லாம் வாங்கிவிட்டு வெளியில் வந்து பைகளை பார்த்தபோது   அங்கு அவன் வைத்த பை இருக்காது.

வழமையாக அந்த பக்கம் வருகிற பழைய பேப்பர் பொறுக்குபவன், தேவையில்லாமல் அங்கு கிடக்கிற பிளாஸ்டிக் பைகளையும் எடுத்துக்கொண்டு போவான். அப்படி நினைத்து சாராவின் செருப்புகள் இருந்த பிளாஸ்டிக் பையையும் எடுத்துச்சென்றிருப்பான்அந்த அங்காடித்தெரு முழுவதும் எவ்வளவு சுற்றித் தேடியும்  அவனால் சாராவின் செருப்புகளைக் கண்டுபிடிக்க முடியாது இருக்கும். மிகுந்த துயரத்துடன் வீட்டுக்கு போவான். அங்கு சாரா தனது திருத்தப்பட்ட சப்பாத்தினை பார்ப்பதற்கு மிகுந்த ஆவலுடன் இருப்பாள். அலி அவளது சப்பாத்தை காணமலாக்கிவிட்டான் என்று தெரிந்ததும் அவளால் அந்த வேதனையை தாங்க முடியாது இருக்கும். கவலை ஒரு பக்கம் இருந்தாலும் அவள் பாடசாலைக்கு எப்படி போவாள் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக அவளுக்கு இருந்தது. பின்னர் அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அவளின் சப்பாத்து கிடைக்கும் வரை சாரா பாடசாலை செல்வதற்கு அலியின் சப்பாத்தை கொடுப்பான். அதை அவள் பாடசாலை சென்று திரும்பிவந்து தரும் வரை அலி காத்திருப்பது, பின்னர் அதை மாட்டிக்கொண்டு பாடசாலைக்கு ஓடுவதுநேரம் சென்று வந்ததற்காக பாடசாலை தலைமை ஆசிரியரிடம் பேச்சு வாங்குவது இப்படி அவர்கள் நாட்கள் சென்றுகொண்டிருக்கும். அலியிடம் சப்பாத்தை கொடுப்பதற்காக சாரா ஒருநாள் ஓடியப்போது அவள் காலுக்கு சற்று பெரிதாக இருந்த அந்த சப்பாத்து அந்த குறுக்குச் சந்தில் ஓடும் கால்வாயில் மாட்டி  சேற்று தண்ணீரில் அடித்துக்கொண்டு சென்றுவிடும். ஒருமாதிரி ஓடி  அதை எடுத்துவிடுவார்கள். இப்படி ஒருநாளில் சாரா பாடசாலையில் அவளது சப்பாத்தை ஒரு சிறுமி போட்டிருப்பதை  காண்பாள். பின்னர்   அலியும், அவளும் அந்தச் சிறுமியை பின்தொடர்ந்து  செல்வார்கள். வீட்டுக்குள் இருந்து வந்த  அவளது தந்தை அவளை அணைத்துக்கொள்வார். அவளது தந்தையின் நிலைமையை பார்த்தபிறகு சாராவுக்கும், அலிக்கும் அந்தச் சப்பாத்தை திருப்பி கேட்கமுடியாது போய்விடும்.

 அடுத்தது அந்த குழந்தைகள் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கிறது, சப்பாத்தினைப் பெறுவதற்கு அலி செய்கிற முயற்சியில் அவன் வெற்றி பெற்றானா, அவர்கள் வாழ்வில் அந்த சிறிய வயதில் படர்கின்ற துயரங்கள் என்ன  என்பவைதான் சில்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படம்

வறுமைப்பட்ட மக்களுக்கு வாழ்வில் அத்தனையும் துயரம் எனும்போது, அவர்கள் வாழ்வில் மிகச்சிறிய ஒன்றை இழந்தாலும் அதனைப்பெற எப்படியெல்லாம் துயரமடைகின்றனர். அதனை சரிசெய்ய நீண்ட நாட்கள் எடுக்கின்றன. இந்த திரைப்படத்தில் வருகிற சாரா, அலி மிகச்சிறிய குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் இரக்க குணம் படைத்தவர்களாக, பிறருக்கு உதவுபவர்களாக, பிரச்சினை ஒன்று வரும்போது துவண்டு போவதுடன் நின்றுவிடாது, அதைச் சரிச்செய்ய முயற்சிக்கிறார்கள். அதுவும் நேர்மையான வழியில்ஈரானின் நடுத்தர மக்களின் வாழ்வை மஜித் இந்த படத்தில் அழகாக சொல்லியிருப்பார்சிறந்த படங்களை தேடித்தேடி பார்ப்பவர்களின் வரிசையில் முதலாவதாக இருக்கவேண்டிய படங்களில் இதுவும் ஒன்று


 

எழுதியவர்

நர்மி
நர்மி
நர்மி என்ற பெயரில் எழுதி வரும் நர்மியா 1991 ஆம் வருடம் மதுரையில் பிறந்தவர். தற்போது கல்கத்தா ஜதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் தனது இரண்டாவது முதுகலை பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார். கல்கத்தா நாட்கள் எனும் பயணக்கட்டுரைத் தொகுப்பு நூலும் , பனிப்பூ எனும் கவிதைத் தொகுப்பு நூலும் வெளியிட்டு இருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x