
ஜமா என்பது கூத்துப்பட்டறையின் பெயர் என்று படத்தைப் பார்த்தே அறிந்து கொண்டேன். தெருக்கூத்து, பாவைக்கூத்து(தோல் பாவை), கரகாட்டம், ஒயிலாட்டம், கணியான் கூத்து என அறிந்திருந்தாலும் சில கலைகளில் அவர்கள் புழங்கும் சில வார்த்தைகள், பெயர்கள் நமக்குப் பரிச்சயமில்லாமல் இருக்கும். நெருங்கிப் பார்க்கையில் அறியக் கிடைக்கும். எடுத்துக்காட்டாக அண்ணாவி என்று கணியான் கூத்தில் ஒருவர் அழைக்கப்படுவார். எப்படித் தெருக்கூத்தில் வாத்தியார் இருக்கிறாரோ அப்படித்தான் அண்ணாவி. கிராமத்தில் பேச்சு வழக்கில் தேவையில்லாமல் யாராவது புத்திமதி சொல்வதைக் கேட்டு எரிச்சலுற்று “ ஆமா இவன் பெரிய அண்ணாவி சொல்ல வந்துட்டான்” என்பார்கள். ஆமாம் அண்ணாவி சொல்வதைக் கேட்டுத் தான் கூத்தாடிகள் கூத்தாடுவார்கள். அவர்தான் கதையைப் பாடுவார். பொதுவாகக் கணியான் கூத்தில் சிறுதெய்வக் கதைகள் கூறப்படும். தெருக்கூத்தில் மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசக் கதைகள் கூறப்படும். புத்தகங்கள் அதிகம் வாசிக்கப்படாத நாட்களில் இப்படித்தான் கதைகளாய் பார்த்து அறிந்து கொண்டனர். ஒரு மொத்தக் கிராமத்தையும் படிப்பிப்பது என்பது எத்தனை பெரிய காரியம். தொலைக்காட்சியும், சினிமாவும் அதிகம் இல்லா கிராமங்களில் கூத்து தான் சினிமா, பொழுதுபோக்கு எல்லாம். ‘கணியான்’ போல, ‘அடவு , அரிதாரம்’ போல ஒரு பிரத்தியேக வார்த்தை தான் ‘ஜமா’- குழு என்பதைத் தான் ஜமா என்றழைக்கின்றார்கள்.
தோல்பாவை கூத்து பற்றி இயக்குநர் மீரா கதிரவன் தனது “அவள் பெயர் தமிழரசி” படத்தில் காண்பித்திருப்பார். தசராவைப் பற்றியும் அந்தப் படத்தில் விரிவாகப் பார்க்கலாம். அதன்பின்னர் புஷ்கர் காயத்ரியின் சுழல் வெப்சீரிஸில் மயானக் கொள்ளை பற்றிக் காண்பித்திருப்பார்கள். நாடகக்கலை குறித்து நட்சத்திரம் நகர்கிறது படத்திலும், பெண் வேடமிட்டுக் கூத்தாடுவதைப் பற்றி பரியேறும் பெருமாள் படத்திலும் காணலாம். சாமியாடுவதும் பேயோட்டுவதும் காலம் காலமாய் நாம் பார்த்துக் கடந்து வரும் விடயங்கள் தான். கொட்டுக்காளி படத்தில் படம் முழுவதும் அதற்காகப் பயணிப்பார்கள். இதெல்லாம் உண்மைதானா என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் கிராமத்துக் கொடைகளில் தன்னிச்சையாய் கலந்து கொள்ளும் போது சாமிகொண்டாடிகளையும் அவர்தம் ஆக்ரோஷமான ஆட்டத்தையும் காண்கையில் நமக்குச் சன்னதம் வரக்கூடுமோ என ஐயம் தோன்றும். மனோவசியம் போல மனம் அந்த மேளச் சத்தத்திற்கு ஏற்றவாறு மயங்கத்துவங்கும். அப்படியாகத்தான் சில நம்பிக்கைகள் நம்முள் இடத்திற்கு ஏற்பக் கலந்து கிடக்கிறது. சாமியாடியான தாத்தா இயல்பில் பேசுகையில் இவரா அன்று அப்படிக் குதித்தாடினார் என்று ஆச்சரியமாய் இருக்கும். அதே சமயம் ஒரே நேரத்தில் எப்படி இத்தனை பேர் உடம்பில் சாமி வந்தது எனக் கேட்டு வாங்கிக்கட்டிக் கொள்வதும் உண்டு.
ஜமா படத்தில் ஒரு பகுதியாக கூத்து வரவில்லை. கூத்தைப் பற்றித்தான் படமே. இளவரசன், தாண்டவம், கல்யாணம் எல்லோருமே கூத்தை தன் உயிராய் நினைப்பவர்கள். அவர்களுக்கிடையே நடக்கும் பூசல், போட்டி, தான் என்ற அகந்தை, திறமை கொடுக்கும் கர்வம், பணம், பெயர், மதிப்பு, மரியாதை, உரிமை இதையெல்லாம் ஒருங்கிணைத்துத் தான் ஜமா உருவாகியுள்ளது. எல்லோருமே தனக்குரிய கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். தெருக்கூத்து ஊருக்கு ஊர் சிறிய மாறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். இந்தப் படம் திருவண்ணாமலை பக்கமுள்ள தெருக்கூத்து சார்ந்தது. அவர்களது பேச்சு நடையும் அப்படியே. சேத்தன்,ஸ்ரீ கிருஷ்ண தயால், அம்மு அபிராமி, பாரி இளவழகன் மட்டுமல்லாது, கல்யாணத்தின் அம்மா, குடிகாரக்கிழவன், துணையாய் நிற்கும் அரிதாரம் பூசுபவரும் கூட மிகச்சிறப்பாக நடித்துள்ளார்கள். நாம் கடந்த நிஜத்திற்கு நெருக்கமான குடிகார கிழவனைப் போலத்தான் அவர் தோன்றினார்.
ஒரு கலைஞனுக்கு உள்ள செருக்கை இளவரசிடம் காணலாம். திமிரை அகங்காரத்தைத் தாண்டவம் வெளிப்படுத்தி இருப்பார். ஏக்கத்தை, கலையின் மீதான நேசத்தை கல்யாணத்திடம் பார்க்கலாம். மனிதர்கள் கொஞ்சம் தனக்குக் கீழே இருக்கும் மனிதர்களை எப்படி எல்லாம் உபயோகிப்பார்கள் என்பதை தெருக்கூத்தில் மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் நாம் பார்க்கிறோம். வலியவன் சொல்வதை எளியவன் கேட்க வேண்டிய கட்டாயத்தைதானே நம் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. உறவுமுறை போல நெருங்கிப் பழகி மாமா என்று அழைத்த உறவை அண்ணா என்று அழைக்கச் சொல்கையில் கல்யாணத்திற்குப் புரியாமல் இல்லை. ஆனால் கூத்தின் மீது கொண்ட காதல் அவனை எல்லாவற்றையும் மறக்கவும், மன்னிக்கவும் வைக்கிறது. இந்தக் கலைஞர்களின் தினப்படி வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியானது இல்லை. வாய்க்கும் கைக்குமான அன்றாடங்காய்ச்சி தான் அவர்கள். கூத்து நடந்தால் காசு, சோறு. கூத்தைப் பார்த்தவர்கள் பாராட்டிச் சொல்லும் சொற்களே இவர்களுக்கான வெகுமதி. அடுத்த ஆட்டத்திற்கான உற்சாகத்தை அதில் இருந்தே அவர்கள் பெறுகிறார்கள். நல்ல கலைஞனுக்கு காசை விட இப்படியான புகழ்ச்சியே பிரியமாய் இருக்கிறது. அந்தக்காலத்தில் அரசர்கள் புகழுக்குத் தானே அடிமையாக இருந்தார்கள், மது, மாது போல மயக்கும் இன்னொரு விஷயம் பணம், புகழ். இந்த ஜமாவிலும் யார் பெரியவன், யார் திறமையானவன், யாருக்கு எல்லாப் புகழும் சேர்கிறது, யார் ஜமாவை நடத்த வேண்டும் என்னும் போட்டியில் தாண்டவம் வெற்றி பெறுகிறான்.
தாண்டவம் உண்மையாகத் தனது திறமையில் நம்பிக்கை உள்ளவன். அதனால் உண்டான தலைக்கனத்தைக் கிரீடமாக அணிந்திருப்பவன். எந்த வேடமென்றாலும், எந்த பாட்டென்றாலும் தன்னால் முடியும் என்ற அதீத நம்பிக்கையையும், திறமையையும் உடையவன். அந்த அகங்காரம் தரும் துணிச்சலில் தான் தனியாக ஜமாவை நடத்த முடிவெடுக்கிறான். கலையில் சிறந்தவனாக இருக்கும் தாண்டவம் நல்ல மனிதனாக இருக்கத் தவறுகிறான். கல்யாணத்தைத் தன் தேவைக்கு உபயோகிக்கிறான். கூத்தாடியாய் இருக்கும் தாண்டவம் இன்னொரு கூத்தாடிக்குத் தன் பெண்ணை மணம் முடிக்க சம்மதிக்கவில்லை. ஒருவேளை கல்யாணத்திடம் பணம் காசு இருந்திருந்தால் சரி என்று சொல்லியிருக்கக் கூடுமோ என்னவோ. சில கலைகளுக்கு என்று சில மரியாதையும், சட்டத்திட்டங்களும் இருக்கும். பொதுவாகத் தசராவிற்கு வேடம் அணிபவர்கள் விரதமிருந்து வேடமிட்டு கோவிலுக்கு வருவார்கள். தெருக்கூத்து கிராமத்துத் தெருக்களில் வசதியானவர்களின் வீட்டு நிகழ்ச்சிக்காகவும், பொதுவிழாவிற்காகவும், கோவில் கொடைகளிலும் பெரும்பாலும் நடத்தப்படும். கொடையில் ஒளிந்திருந்து சாராயம் குடிப்பவர்கள் மத்தியில் கூத்து கட்டும் முன் மது அருந்துவார்களா என்பது தெரியவில்லை. இதில் கூத்திற்கு முன்பாகத் தாண்டவம் மது அருந்துவதாகக் காட்டப்படுகிறது. நல்ல கலைஞர்கள் எல்லோருமே மதுவுக்கும் அடிமையாகிவிடுகிறார்கள் சமயங்களில்.
இளவரசை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்து, யோசித்து பின்னர் அவரின் தெளிவான புகைப்படத்தைப் பார்த்தபின் இன்ஸ்பெக்டர் ரிஷியில் காட்டு இலாகா அதிகாரியாக வந்தவர் என்பது உரைத்தது. வேண்டாம் என்று உதறிவிட்டு வந்தபின்னரும் அவரால் கூத்தை விட்டு விலகவே முடியவில்லை. கலை என்பது உயிருள்ளவரை மறையாது இல்லையா. எழுத்து, ஆடல், பாடல், கூத்து, நடிப்பு எல்லாமே ஒருமுறை வாழ்வில் பற்றி விட்டால் வாழ்நாள் முழுமைக்குமாய் இருக்கும். இறக்கும் போதும்கூட ஆழ்மனதில் இருந்துகொண்டே தான் இருக்கும் கலைக்கான தேடல். முடியை வெட்டி விட்டு வரும் இளவரசிடம் மகன் ‘இனி எப்படிப்பா கூத்தாடுவே’ என்று கேட்கிறான். பெண் வேடம் கட்டுவதற்கு என்றாலும் அர்ச்சுனன் கட்டுவதாய் இருந்தாலும் பொய்யடி தானே வைக்கிறார்கள். மேலும் தாண்டவத்திற்கு பின்முடி இல்லாமல் தானே இருக்கிறது. கூத்தாடிகளின் கால்கள் மண்ணில் படர்ந்து திளைப்பவை. இளவரசு மரிக்கும் காட்சியில் அர்ச்சுனன் கிரீடம் கட்டி ஆடி வீழ்கையில் உள்ளங்கால்கள் படுசுத்தமாய் இருக்கும். ஒரு நல்ல படத்தில் இப்படியான சின்ன சின்ன விடயங்கள் கூட மிகச்சரியாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு படத்தையும் அட்சர சுத்தமாய் யாரும் எடுத்துவிட முடியாது. பிழைகள் படைப்பாளியின் கண்களுக்கு ஒவ்வொரு முறையும் புலப்படும். ஓர் எழுத்தாளன் தன் படைப்பை வாசிக்கையில் முழுமனதோடு திருப்தி அடைவது பெரிய விஷயம். ஒவ்வொரு வாசிப்பிற்கும் எதையாவது மாற்றவோ எங்கோ ஓர் பிழையோ கண்களில் பட்டுக்கொண்டே இருக்கும். என் நண்பர் கூறுவார் முழுமையாக ஒரு படைப்பில் மனம் லயிப்பது என்பது வாய்க்கப்பெறாதது. குறைகள் வந்துகொண்டே இருக்கும், ஒரு கட்டத்தில் திருப்தி அடைந்து முடிக்க வேண்டுமென. அதையே இங்கே நினைவுகூர்கிறேன்.
கல்யாணமாக இயக்குநர் பாரி மிக மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஏனோ அம்மு அபிராமி நடித்த தண்டட்டி பட நடிகர் ஞாபகத்தில் வந்தார். மீசையில்லாமல் கொண்டையோடு , பெண்ணின் நளினத்தோடும், நடையோடும், உடல்மொழியில் தான் வேஷம் கட்டி பழகிய பெண் உருக் கொண்டிருந்தாலும் ஆணின் காதல் உணர்ச்சியோடு ஜகாவை காண்கையில் பிச்சி உதறியிருக்கிறார். என்ன ஒரு உடல்மொழி. தெருக்கூத்து கலைஞர்கள், பெண்களைப் போல நடந்துகொள்பவர்களைக் கண்டு உணர்ந்து நடித்தது போன்ற ஒரு பூரணத்துவம். எனக்குக் கிராமத்தில் கண்ட ராசு அண்ணா நினைவுக்கு வந்து போனார். பெண்களுடன் அதிகம் உரையாடுவார், நடை, பேச்சு எல்லாம் பெண்களை ஒத்திருக்கும். திருமணமாகி குழந்தை குட்டி எல்லாம் இருந்தாலும், சில செய்கைகளை அவரால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. சிலர் பார்ப்பதில் ஒன்றி அவர்களாகவே மாறிப்போவார்கள். இயற்கையோ செயற்கையோ சேர்வாரோடு சேரு என்று ஒரு வழக்காய் சொல்வார்கள். யாருடன் சேர்கிறோமோ அவர்களின் குணம் நம்மிடம் கொஞ்சம் அப்பிவிடும் என்ற நம்பிக்கை. என் கல்லூரி ஆசிரியைகள் இருவரின் உடல்மொழி, பேச்சு, உச்சு கொட்டுவது கூட ஒன்றுபோல இருக்கும். யாரிடம் இருந்து யார் தனதாக்கிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. சிலர் ஒரு படத்தைப் பார்த்தால் அந்தக் கதாநாயகன் போல உடையுடுத்தி, தலைசீவி, உடல்மொழியில் அவரை நகலெடுக்க முயல்வார்கள். தன்னை பிறராய் உணரும் தருணங்கள். அப்படிப் பெண்களுடன் அதிகமாய் பழகி அவர்களின் பழக்கவழக்கங்களைத் தனதாக்கிக் கொள்ளும் சிலர், உடல் சுரப்பினால் இயற்கையிலேயே பெண்ணாய் தன்னை உணர்பவர்களிடம் இத்தகைய மாற்றங்களைக் காணலாம். இப்பொழுது இது சாதாரணம், இது இயற்கை, இப்படி ஆகலாம் என்ற பொது புரிதல் பரவலாய் இருக்கிறது. முன்னெல்லாம் அப்படி இருக்கவில்லை. அவன் ஒரு பொன்னஞ்சட்டி, பொண்டுவன், ரெண்டுங்கெட்டான், ஒம்போது,அலி என்று கேலி செய்து ஒதுக்குவார்கள்.
இந்தப் படத்திலும் கல்யாணத்தை அக்கா என்று விளித்து அதைத்தான் செய்கிறார்கள். ராசு அண்ணாவை நேரிடையாகக் கிண்டல் செய்யாவிட்டாலும் பின்னால் அவன் ஒரு பொம்பளை என்றே பேசினார்கள். அவனைப் போலப் பேசிக் கிண்டல் செய்தார்கள். சமயத்தில் துண்டை மாராப்பு போல இட்டுக்கொள்ளும் ராசு அண்ணாவிற்கு பெண்களுடன் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து புறணி பேசுவது அத்தனை வித்தியாசமான விடயமாய் தோன்றவே இல்லை. அவன் அக்கா காண்கையில் ‘எலே எந்திச்சு போலே அங்கிட்டு. இவளுக கூட உட்காந்து கூத்தடிச்சிக்கிட்டு’ என்பாள். ‘ ஏ போறேங்கா’ என்ற ராகமாய் சொல்லிவிட்டு நடந்து போவான் ராசு அண்ணா. அந்த உடல்மொழியைத்தான் கல்யாணத்திடம் கண்டேன். சிறுவயது கல்யாணமாய் மீசையோடு இந்தப் பையனா அந்தப் பையன் என வியப்பளிக்கிறார். பெண் வேடத்திலும் சரி, அர்ச்சுனன் வேடத்திலும் சரி மிகத்தேர்ந்த ஒரு கூத்துக்கலைஞனாக பரிணமிக்கிறார். அருமையான நடிப்பு. குந்தியின் கதறலைக் கேட்டு தாண்டவத்தோடு நம் மனமும் திடுக்கிட்டு விழித்துக்கொள்கிறது. இறுதியில் கல்யாணம் ஆடும் தாண்டவமே ஜமாவின் வெற்றி, இளவரசின் வெற்றி, கலைஞனின் வெற்றி, கூத்தின், கலையின் வெற்றி. கூத்தை முழுவதுமாய் வரித்துக்கொண்ட படத்தில் இன்னும் கொஞ்சம் கூத்தைக் காண்பித்திருக்கலாம். ஆனால் தெருக்கூத்தை அறியாதவர்களுக்கு ஒரு சலிப்பினைத் தரக்கூடும். எல்லாருக்குமான படமாய் இல்லாமல் போய்விடக்கூடிய அபாயம் தாங்கியே ஜமா பயணிக்கிறது கொஞ்சம் மெதுவாக.
தாண்டவமாய் சேத்தன் நியாயம் செய்திருக்கிறார். வாத்தியாருக்கான மிடுக்கோடு பேசுவதும், அவனை அவமானப்படுத்தி விட்டு பின்னர் சரிசெய்வது போலப் பேசி எல்லாத்தையும் துவைச்சி போட்டுட்டு போ என்று கூறுவதில் சிறுவேட கூத்துகலைஞர்கள் நடத்தப்படும் விதத்தைக் காணலாம். சாதாரணமாய் ஒரு மகாபாரத கதையை கூத்தாக நாம் பார்ப்போம். ஆனால் அதில் ஏற்கும் வேடங்களைப் பொறுத்து கூத்தாடிகளின் மதிப்பும், தன்மையும் அறியப்படுகிறது என்பது ஜமாவில் புரிகிறது. எந்த வேஷமாக இருந்தாலும் எடுத்துக்கொண்ட வேஷத்தைச் சிறப்பாக நல்ல கலைஞன் செய்வான் என்பதைக் கல்யாணம் குந்தி வேஷத்தில் செய்கிறான். எத்தனை அரசியல், எத்தனை சூழ்ச்சி எல்லாம் ஒரு ஜமாவிற்குள் நடக்கிறது. கணியான் கூத்தில் சில ஆண்கள் எப்பொழுதுமே பெண்வேஷமிடுவார்கள். மீசை இல்லாமல் முகம் மொத்தமும் மழித்து பெண்மை கலந்தே இருப்பார்கள். எப்பொழுதும் திரெளபதி கட்டும் கல்யாணம் அப்படித்தான் இருக்கிறான். தனது செருக்கு அழியும் தருணத்தில் கலைக்கு அடிபணிந்து உள்ளுக்குள் உடைந்து வெளியில் பணிந்து ஒன்றுமில்லாமல் ஆகிறான் தாண்டவம். தாண்டவம் காலில் வீழ்கையில் ஜமா கல்யாணத்திற்கானதாகிறது. படமும் அங்கேயே முடிவடைந்து விடுகிறது. சில எழுத்தாளர்கள் வாசகரை திருப்திப்படுத்த முடிவைப் புளி போட்டு விளக்குவதான காட்சிகள் தான் அதற்குப்பின் வரும் காட்சிகள்.
தனக்காகத் தியாகம் செய்பவனை விரும்பும் ஜகா, உனக்கு கூத்து முதன்மை என்றால் எனக்கு என் தன்மானம் பெரிது என்று காட்டுகையில், கிராமமாய் இருந்தாலும் பிடிவாதமாக இந்தப் பெண் கொள்ளி வைக்கக் கூடும் என்றே எண்ண வைக்கிறாள். ஊர் திருவிழா, நீர் ஊற்றி கும்பம் ஏற்றி கன்னிமார் பூஜை நடக்கும் இடத்தில் இன்னும் கொஞ்சம் ஊர் மக்களைச் சேர்த்திருக்கலாம். பொதுவாகக் கிராமத்தில் கூத்துப் பார்க்க எல்லோருமே கூடிவிடுவார்கள். பன்னிரண்டு வருடங்கள் வராத சாமி கல்யாணம் வரிசையில் நிற்கையில் வருகிறது. கல்யாணம் அந்த மொட்டைப்பாறைக்கே வராமல் இருந்து அந்த வருடத்தில் வந்தது போலக் காட்டி இருக்கலாம் என்று தோன்றியது. சாமி அவனுக்கு வரவேண்டுமென்று இருந்தால் முந்தைய வருடங்களிலேயே வந்திருக்கலாம் இல்லையா. எல்லைக்கோட்டில் நிற்பதும், தண்ணீர் ஊற்றிக்கொண்டு வருவதும், திருநீறு பூசுவதும் எந்த அளவுக்கு நியாயம் சேர்க்கிறது என்று தெரியவில்லை. முந்தைய வருடத்தில் அருள் வருவது போலக் காண்பித்து மேளம் நின்றதும் சாதாரணனாக மாறுகிறான் கல்யாணம்.
இப்படியான சிறு சிறு விடயங்கள் ஒரு பொருட்டே இல்லை. கிராமியக் கலையைப் புதுப்பிக்கும் ஜமாவிற்கு. மிக தைரியமாக எடுக்கப்பட்ட படமென்றே சொல்லவேண்டும். வெட்டு, குத்து, துப்பாக்கி, ரத்தம், போதை, கடத்தல் என அசுர வேகத்தில் விற்பனைக்கான படங்கள் குமியும் காலக்கட்டத்தில் இப்படி ஒரு கதையை, ஒரு வாழ்க்கையைத் தேர்வு செய்து படமெடுத்த துணிச்சலை எத்தனை பாராட்டினாலும் தகும். படத்தை முழுவதுமாய் பார்த்து முடித்தபொழுது இயக்குநருக்கும், நடித்தவர்களுக்கும் ஒரு திருப்தி உண்டாகியிருக்குமானால் அது தான் நிஜமான வெற்றி. இப்படியான கலா ரசனையான படங்களை ஒன்றிரண்டு இயக்குநர்களாவது பற்றிக்கொண்டு பதிவு செய்யட்டும். தமிழர் பண்பாட்டிற்குச் சான்றாக இப்படியான படங்கள் காலத்தால் அழியாமல் நிற்கட்டும்.சினிமா நிலைப்பெற்ற காலத்திலேயே தெருக்கூத்து மறைய துவங்கியது. அப்படியான கலைக்குச் சினிமா செய்யும் கைமாறாகவே இந்தப் படத்தைப் பார்க்கிறேன். இயக்குநர் பாரி இளவழகனுக்கும் அவரின் ஜமாவிற்கும் வாழ்த்துகள்.
எழுதியவர்

- திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த ராணி கணேஷ், கணிப்பொறி அறிவியல் படித்து தற்சமயம் பப்புவா நியு கினியா தேசத்தில் சொந்த தொழிலை நிர்வகித்து அங்கேயே வசிக்கிறார்.பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். பள்ளிக்காலம் தொட்டே கவிதைகள், கட்டுரைகள் மீது தீராத ஆர்வம் கொண்டவர். இணையத்தில் கவிதை, திரைவிமர்சனம் என எழுதி வருபவர். சமூக சேவையில் விருப்பம் உடையவர்.
இதுவரை.
கலை11 November 2024கிராமியக் கலையை புதுப்பிக்கும் ‘ஜமா’ – ஒரு பார்வை