அந்தக் கண்ணாடிக் குடுவையை அனுவுக்கு அவள் அப்பா பிறந்த நாள் பரிசாகக் கொடுக்கும் போது, அது ‘மந்திரக் குடுவை’ என்பதை அவர் உட்பட யாரும் அறிந்திருக்கவில்லை. தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் அன்றைய தினத்தில் அவளுக்குப் பிடித்தவரை அல்லது அவளுக்கு உதவியவரை பாராட்டியும்,அவளை வெறுப்பவரை அல்லது அவள் வெறுப்பவரைத் திட்டியும் ஒரே வரியில் இரு வேறு சின்ன துண்டுச் சீட்டில் எழுதி அதை அந்த மேஜையின் ஓரத்தில் இருக்கும் கண்ணாடிக் குடுவைக்குள் அடைப்பது அனுவின் வழக்கம். அனு அதற்கு “சிட்டு” என்று பெயர் வைத்து அதை எழுதி சிட்டுவின் இடுப்பில் ஒட்டியிருந்தாள்.
அவள் முந்தைய இரவு எழுதி மடித்து உள்ளே விழும் சீட்டுகளில் ஒரு சீட்டு மட்டும் அடுத்தநாள் இருப்பதில்லை. மூடியற்ற அந்தக் கண்ணாடிக் குடுவையை அவன் தம்பியை அன்றி யாரும் தீண்டப்போவதில்லை என்பதால் தன் தம்பியின் கைங்கரியம் தான் இது என அவனிடம் சண்டையிட்டாள். அவனோ வலுவாக மறுத்தான். அன்றைய இரவு காகிதத் திருடனைக் கண்டுபிடிக்க உறங்கியது போல் நடித்துக்கொண்டே அவள் விழித்தபடி காத்திருந்தாள்.
அவள் எதிர்பாராத விதமாய் மேஜையின் மூலையிலிருந்து காகிதம் கசக்கப்படும் சத்தமும்.. பின் அதை மெல்லும் சத்தமும் கேட்டது. எலியாக இருக்கும் என யூகித்துத் திரும்பியவளுக்குக் கண்கள் விரிந்தன. ஆம்.! சிட்டு காகிதத்தை மென்று கொண்டிருந்தது. அதிர்ந்து போனவள் ஒரு வகைத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “யார் நீ.?” என்றாள். “மனசு” என்று பதிலளித்தபடி மீண்டும் மெல்லத் துவங்கியது. அதன் பின் இவள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காத சிட்டு, சற்று நேரத்தில் மெல்வதை நிறுத்தி மீண்டும் அஃறிணை ஆனது. பயத்தில் அனு வேறு அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உறக்கம் கண்ணைத் தொட மறுத்தது. எப்படியும் அதனுள் உள்ள சீட்டுகளைக் கொட்டிவிட்டு சிட்டுவை எங்கேனும் எறிந்து விட வேண்டும் எனத் தீர்மானித்தாள்.
மறுநாள் வேகவேகமாய் சிட்டு மீதி வைத்திருந்த காகிதங்களைக் கொட்டி குப்பையில் எறிய முற்படும் முன் அந்தச் சீட்டுகளில் தான் எழுதியதை மீண்டும் நினைவுகூரப் படித்தாள். அடுத்தடுத்த சீட்டுக்களைப் படிக்க அவள் கண்கள் விரிந்தன. தான் வெறுப்பவர்கள் பற்றியும் தன்னை வெறுப்பவர்கள் பற்றியும் அவள் எழுதிய வாசகங்கள் மட்டும் மீதிருந்தது. நல்ல வரிகளால் நிரம்பி அவள் பாராட்டிய நபர்கள் குறித்த சீட்டுக்களை மட்டுமே சிட்டு தின்றிருக்கிறது. அவள் முந்தைய இரவு நடந்ததை அசைபோட்டாள். அவள் கேட்ட எதற்கும் பதில் அளிக்காத சிட்டு நீ யார் என்ற கேள்விக்கு மட்டும் “மனசு” என்று பதிலளித்ததேன்.? என யோசித்தவளுக்குப் பதில் பிடிபட்டது. “எப்போதும் நல்லவர்கள் குறித்தான நினைவுகளை மனசு எளிதில் விழுங்கி உள்வாங்கிக் கொள்ளும். தீய நினைவுகளை மட்டும் தேங்க வைத்து மீண்டும் மீண்டும் அசைபோட்டுக் கொள்ளும். அதுக்காவா சிட்டு நீ மனசு என்றாய்.?” என்று அவள் உணர்ந்து கேட்ட மறு நிமிடம், அன்றைய இரவு அவள் பாராட்டி எழுத நினைத்த நபரை அவள் என்றோ திட்டியிருந்ததை எண்ணியும் அந்த நபர் மேல் அவள் வைத்திருந்த கெட்ட பிம்பமும் சிட்டுவோடு சேர்ந்து உடைந்து சிதறியது.
ஆம்! சிட்டு உடைந்து சிதறியிருந்தாள். சில்லுக்களை பொறுக்கிக் குப்பையில் போட்ட அனு கொஞ்சம் நேரம் அழுதாள். அவளுக்கு “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள்” என்ற ஜெயகாந்தனின் வரிகளின் நியாயம் பிடிபட்டது.
இப்போது குப்பையில் வீசப்பட்ட சிட்டுவின் சில்லுக்கள் மீண்டும் இணைந்து வேறொரு வீட்டில் வேறொரு மேஜையில் கண்ணாடிக் குடுவை ஆகி சீட்டுக்குக் காத்திருந்தது.
எழுதியவர்
-
திருப்பூரைச் சார்ந்த முத்து மீனாட்சி உயிர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, ஒரு தனியார்ப் பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணிபுரிகிறார். கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவற்றில் பங்கேற்கும் ஆர்வமுடைய இவரது கவிதைகள் பல்வேறு இலக்கியச் சிற்றிதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை வெளியிட்டுள்ள கவிதைத் தொகுப்புகள், 1. மௌனம் ஒரு மொழியானால், 2. கவி தேடும் விழிகள். இலக்கிய அமைப்புகளில் இணைந்து இலக்கியச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் வளரும் படைப்பாளர் விருது, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வழங்கிய இலக்கியப் படைப்பு ஜீவா விருது, தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை வழங்கிய கவிச்சிகரம் விருது, .தளிர் இலக்கிய களம் வழங்கிய கவிச்சுடர் விருது, அக்கினிப் பெண்கள் தமிழ்ச் சங்கம் வழங்கிய பாரதிச் சுடர் விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். அனைத்துலகப் பொங்குதமிழ் சங்கம் இந்தியா பிரைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய ‘200 காப்பிய மாந்தர்கள்’ ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உலக சாதனை நிகழ்விலும் பங்கேற்றிருக்கிறார்.
இதுவரை.
- சிறார் கதைகள்11 November 2024சிட்டுக் குடுவை
கதையில் வரும் அந்தப் பெண் அனுவின் வயது என்ன? அவள் ஜெயகாந்தனின் கதையெல்லாம் படித்து அவற்றில் உள்ள முக்கியமான வரிகளை நினைவுகொண்டிருக்கும் பருவத்தில் உள்ளவா… அப்படியெனில், ஜெயகாந்தன் போன்றவர்களின் கதைகளில் இருந்து கிடைக்காத நீதி மந்திரக் குடுவையில் இருந்து கிடைப்பதான கான்செப்ட்டே சிறுபிள்ளைத்தனமாக மாறிவிடாதா?
வணக்கம் sir, ஜெயகாந்தன் அவர்களின் வரிகளில் கிடைக்காத நீதி என்று குறிப்பிடவில்லை மாறாக “அந்த வரிகளின் நியாயம் பிடிபடுகிறது” means நடைமுறை வாழ்வில் அவள் அந்த வரிகளுக்கான அர்த்தத்தை உணரத்துவங்குகிறாள். மற்றபடி வயதை குறிப்பிடாதது தவறுதான் பிறந்தநாள் பரிசு என்ற இடத்தில் இத்தனையாவது பிறந்தநாள் என்று குறிப்பிட்டு இருக்கலாம். இனி வரும் கதைகளில் நுணுக்கங்களை விடாமல் கையாள்கிறேன்.கருத்துக்கும் அறிவுரைக்கும் நன்றி sir