8 December 2024
Ashok kumar 13

சென்னையிலிருந்து போபாலுக்கு நடந்து செல்வதை நினைக்கும்போதே; சுரேந்தருக்கு மலைப்பாயிருந்தது. டென்ட்டினுள் மனைவி ரேஷ்மி படுத்துக் கிடக்க, ஐந்து வயது மகனும், மூன்று வயது மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

கட்டுமானப் பணிகள் செய்ய இவர்களுடன் வந்திருந்த மேலும் ஐந்து வட இந்தியக் குடும்பங்கள் சென்னையில் தங்கியிருந்தனர். ஒரு கட்டிடம் கட்டி முடித்ததும் மற்றொரு கட்டிடத்திற்கு சூப்பர்வைசர் அழைத்துப் போவார். அங்கு டென்ட் அமைத்துக் கொள்வார்கள். போபாலை விட அதிக வேலை வாய்ப்பும், கூலியும் கிடைத்ததால் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் தங்கி வேலை செய்து வந்தனர்.

வருடத்திற்கு ஒருமுறை சென்னை இனிப்பு, ஆடைகள் வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு ரயிலில் சென்று உறவினர்களைப் பார்த்து விட்டுத் திரும்புவது வழக்கம். எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது கொரானா நோய்த் தாக்கும் வரையில்.

கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கினால் வேலையில்லை. கையிலிருந்த பணமும் குறைந்துவர, போன் செய்தால் சூப்பர்வைசரும் எடுப்பதில்லை. காசில்லாமல் சாப்பாட்டிற்கே சிரமப்பட வேண்டியிருக்குமோ என சுரேந்தர் பயந்து கொண்டிருந்தான்.

அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்ப ஸ்பெஷல் ரயில், பஸ் விடுகிறோமென அரசு வண்ண வண்ணப் பட்டங்களைத் தினமும் பறக்க விட்டுக் கொண்டிருந்தது. இரு மாதங்களாகக் காத்துக் கிடந்ததுதான் மிச்சம். பட்டினியால் சாவதா, கொரோனாவால் சாவதா, போபாலுக்கு நடந்து சாவதா என்று வாழ்க்கை மூன்று விரல்களை நீட்டியது. எதுவும் செய்யாமலிருப்பதை விடச் சொந்த ஊருக்கு நடக்கலாமென அனைவரும் முடிவெடுத்திருந்தனர்.

“ஊரை விட்டுப் போகிறோம். பணம் கொடுத்தனுப்புங்க” என்று சூப்பர்வைசருக்கு நாலைந்து முறை வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பியும் எந்தப் பதிலுமில்லை. போன் செய்தாலும் எடுக்க மறுத்தார். இருபதாயிரத்துக்கு மேல் பாக்கியிருந்தது. இன்று புறப்படுவதாகத் தகவல் அனுப்பியிருந்தான். பார்த்து விட்டார் என்பதை நீல டிக்குகள் தெரிவித்தன. ஆனாலும் வரமாட்டார். நான் திரும்பி வருவேனா, இல்லையா என்றிருக்கையில் இது அவருக்கு லாபம். எங்களது இரண்டு மாத கடும் உழைப்பின் கூலி வீணாய்ப் போய்விட்டது.

“ஆஜாவ் பாய்” என்று வெளியிலிருந்து முகேஷின் குரல் கேட்டதும் மனைவியை எழுப்பினான் சுரேந்தர். முகேஷ் சுரேந்தரின் ஊர்க்காரன். அருகிலிருந்த ஓட்டலில் வேலை செய்தான். லீவு நாளென்றால் இங்கு வந்து விடுவான்.

முதல் நாள் இரவிலிருந்து அடித்த காய்ச்சலில் ரேஷ்மி கந்தல் துணியாய் கசங்கிக் கிடந்தாள். “வா போலாம்” என்று அவளை மறுபடியும் எழுப்பினான்.

வேறு வழியில்லை என அவளுக்கும் புரிந்ததால் சமாளித்து எழுந்தாள். சூட்கேசை அவள் தலையில் வைத்தான். முதுகில் பேக்கையும், தோளில் மகளையும் சுமந்து கொண்டு, மகனின் கையை பிடித்தவாறு வெளியே வந்தான். இருட்டத் தொடங்கியிருக்கையில் ஏராளமானோர் கிளம்பியிருந்தது சற்று தெம்பாக இருந்தது. சில பெண்களும் இருந்தனர். வெளியே வந்ததும் முகேஷ் மகளை வாங்கிக் கொண்டான். சூப்பர்வைசர் வந்து விட மாட்டாரா என அப்போதும் கண்கள் தேடின.

“எந்த வழியா போறோம்” என்றான் சுரேந்தர் இந்தியில்.

“எங்கயாவது ரயில் ட்ராக்கை பிடிச்சிட்டா போயிட்டே இருக்கலாம் பாய்” என்றான் முகேஷ் உற்சாகத்துடன்.

இளமை அனைத்துக் கஷ்டங்களையும் சுவாரஸ்யமாகவே எடுத்துக் கொள்கிறது என சுரேந்தர் நினைத்தான். சாலைகள் வெறிச்சோடிக் கிடக்க ஓரிரு பைக்குகள் சென்றன. கடைகள் மூடிக்கிடந்தன.

யார் வழி நடத்துகிறார் என்றில்லாமல் எறும்புகளைப் போல வரிசையாகப் பைகளைச் சுமந்து கொண்டு நடந்தனர். எறும்புகளாவது ஏழை, பணக்கார பேதமின்றி பொதுவில் உழைத்துச் சேமித்தன. ஆறறிவுடைய மனிதன் மட்டும் சகமனிதனைச் சுரண்டி, ஏமாற்றி தனியே சேமித்துக் கொள்கிறான். கஷ்டப்படுபவர்களுக்குச் சற்றும் இரக்கம் காட்ட மறுக்கிறான். வீட்டிற்கு வெளியே நாய்க்குச் சோறிடுபவர்கள் கூட ஏழைக்குச் சோறிட மறுத்தனர்.

புலம் பெயர்ந்தவர்களுக்கு உணவு, இருப்பிடம் வழங்கிவிட்டதாக அரசுகள் அறிவித்துக் கொண்டிருக்க, உணவிற்கு வழியில்லாமல் பிச்சையெடுக்கும் நிலைக்குப் பலர் தள்ளப்பட்டிருந்தனர்.

“பெட்டிய குடு” எனக் கேட்டதும் ரேஷ்மி மெதுவாகக் குனிந்தாள். பெட்டியை எடுத்து தனது தலையில் வைத்துக் கொண்டான்.

இங்கிருந்து போபாலுக்கு கிட்டத்தட்ட 1500 கிலோமீட்டர்கள். பஸ், லாரியென ஏதாவது நடுவில் கிடைத்தால் வேகமாகப் போகலாம். தினமும் அறுபது கிலோமீட்டர் நடந்தாலும் 25 நாட்களாகும். அதுவரையில் ரேஷ்மியால் நடக்க முடியுமா என்றிருந்தது.

முன்னால் சென்றவர் ரோட்டிலிருந்து பிரிந்து ரயில் டிராக்கில் இறங்கி நடக்கத் தொடங்கினார். சிலர் டார்ச்லைட் அடித்துச் செல்ல மற்றவர்கள் பின்தொடர்ந்தனர். அரசையும், வைரஸையும் திட்டிக்கொண்டு நடந்தனர். ஆந்திரா போய்விட்டால் லாரி கிடைக்கும் என்றனர். யாரோ ஒருவன் ஹிந்தி பாட்டை ரேடியோவில் சத்தமாகப் போட்டான். சரளைக் கற்களில் நடக்க மனைவி தடுமாறுவதைப் பார்த்தபடியே அவளுக்குப் பின்னால் நடந்தான் சுரேந்தர்.

லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் வெளிநாட்டு இந்தியர்களுக்குத் தனி விமானத்தையும், கப்பலையும் அனுப்பி உலக அளவில் பெருமை சேர்த்துக்கொள்ளும் அரசு உள்ளூர் ஏழைகளுக்கு ரயில் அனுப்ப உடனடியாக முடிவெடுப்பதில்லை. விமானத்தில் இறந்தால் அதிகமாகவும், பஸ்ஸில் அடிபட்டு இறந்தால் குறைவாகவும் நஷ்ட ஈடு தரப்படும் நாட்டில், மரணத்தின் தராசிலும் ஏழைகளுக்கு மதிப்பிருப்பதில்லை.

சில மணிநேரத்தில் காலியாய் கிடந்த ஸ்டேஷனை கண்டதும் எவனோ ஒருவன் “தொடா அராம் கர்த்தேன்” என்று கத்தினான். டிராக்கிலிருந்து மேலேறிக் காலியாய் கிடந்த ரயில்வே பிளாட்பார்ம் வெளிச்சத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தனர்.

சுரேந்தர் அறுபது சப்பாத்திகள் செய்து மூட்டையாய் கட்டி எடுத்து வந்திருந்தான். ஊறுகாய் பாட்டிலும், இரண்டு பிஸ்கட் பாக்கெட்களும் இருந்தன. முகேஷ் யாரிடமோ பேசி விட்டு வந்தமர்ந்தான். அவன் எடுத்து வந்த சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிட்டனர். மகள் சுரேந்தருடைய தோளில் சாய்ந்து தூங்க முயன்றாள்.

சிலர் பிளாட்பார்மில் படுத்தனர். அவர்களை நோக்கி வந்த ஒருவர் “இங்கெல்லாம் படுக்கக் கூடாது கிளம்புங்க” எனச் சத்தமிட்டார்.

“ஏன் இது இந்தியா இல்லையா?” என்றொருவன் ஹிந்தியில் கேட்க, அவர் கோபத்துடன் திரும்பிச் சென்று ரயில்வே போலீசை கூட்டி வந்தார்.

அவர் இவர்களை ஹிந்தியில் விசாரித்துவிட்டு “அரைமணியில் போயிடுவாங்க.. விடுங்க” என சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஸ்டேஷனில் மாட்டியிருந்த டிவியில் செய்தியாளர் “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பிச் செல்லத் தேவையில்லை. அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது” எனப் பேசிக் கொண்டிருந்தாள்.

சொந்த வீட்டு நிழலில் அமர்ந்து இந்தச் செய்தியைக் கேட்பவர்களுக்கு அரசின் துரிதச் செயல்கள் மிகுந்த பெருமையை அளிக்குமென சுரேந்தர் நினைத்தான். சிரிப்பாக வந்தது.

அரைமணி நேரத்தில் மீண்டும் “சலோ சலோ” என எழுப்பும் சத்தம் கேட்டது. பிளாட்பாரத்தில் தண்ணீர் பிடித்து, உடமைகளைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டனர். முகேஷ் மகளை வாங்க, சுரேந்தர் மகனைத் தூக்கிக் கொண்டான்.

“நைட்டுல நடந்தா நிறைய தூரம் போலாம். பகல் வெயிலுல இப்படிப் போவ முடியாது” என்றான் முகேஷ்.

“இதே வேகத்துல எல்லாத்தாலும் தொடர்ந்து நடக்கவும் முடியாது” என்றான் சுரேந்தர் மனைவியை நினைத்தவாறு.

“குறுக்கு வழி ஏதாவது இருக்குமா?”

“ஓங்கோல்ல இருந்து கம்மத்துக்கு ரோட்டுல போறது பக்கம். ட்ரெயின் ரூட்டு சுத்து. போயி சேர மாட்டோம்”

“செத்தாலும் சொந்த ஊருக்கு போயி சாவோம் பாய்”

“சாவறதுக்கு எங்க செத்தா என்ன? வாழ்றதா இருந்தாதான் சொந்த ஊருக்கு போவணும்”

இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர். சற்று நேரத்தில் பேச்சும் நின்று போக, கால்களுக்குத் தனியாக உயிர் இருப்பதுபோல தாமாகச் சென்றன. சரளைக் கற்கள் கதறும் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. இரவில் மூன்று முறை பிளாட்பார்மில் அமர்ந்து ஓய்வெடுத்தனர். பெண்கள் கஷ்டப்படுவது கண்கூடாகத் தெரிந்தது. ரேஷ்மி இரண்டு முறை சேலை தடுக்கி விழுந்தாள்.

“நடந்துருவியா” என்று சுரேந்தர் கேட்க, “ம்” என்றவாறு முந்தானையால் தலையைப் போர்த்திக்கொண்டாள்.

எதுவும் செய்ய முடியாமலிருப்பது கஷ்டமாக இருந்தது. வேறு வழியுமில்லை. சொந்த ஊர்க்காரர்கள் அனைவரும் போன பின்னர் இங்கே தனித்து என்ன செய்ய இயலும்.

சுரேந்தரின் கால்கள் நடுங்கின. பாரத்தினால் கழுத்து, தோள், முதுகென உடல் மொத்தமும் வலியில் துடித்தது. மூச்சிழுக்கவே சிரமமாய் இருந்தது. வலியை நினைக்காமல் பத்தாவது படிக்கையில் ஸ்கூல் பர்ஸ்ட் வந்ததையும், தொடர்ந்து படிக்க வழியில்லாமல் கடையில் வேலைக்கு சேர்ந்ததையும் நினைத்துக் கொண்டான். ரேஷ்மியை பெண் பார்த்தது, திருமணம் செய்தது, முதல் குழந்தை பிறந்ததென மகிழ்வான நாட்களை அசைபோட்டான். நினைவுகள் வலியைப் பின்னுக்குத் தள்ளின. மகனுடைய நெஞ்சுக்கூடு துடிப்பதையும், காதுக்கருகில் மூச்சிழுப்பதையும் உணர முடிந்தது. அவனுடைய உடல் சூடு மனதுக்கு வலிமையைத் தந்தது. குழந்தைகளையாவது உயிருடன் கொண்டு போய் சேர்க்க வேண்டுமென்ற வெறியுடன் நடந்தான்.

இரண்டாம் நாள் ஆந்திரா எல்லைக்குள் நுழைந்து ஏதோவொரு பிளாட்பார்மை சென்றடைந்தனர். அனைவரும் அமர்ந்திருக்கையில் திடீரென அங்கு வந்த நாலைந்து போலீஸ்காரர்கள் எவரையும் எதுவும் கேட்காமல் லத்தியால் அடிக்கத் தொடங்கினர்.

சிலர் “எதுக்கு அடிக்கிறீங்க?” என்று எதிர்த்து நிற்க…

“எங்க ஊருக்குள்ள எதுக்குடா நுழையறீங்க? இங்கயும் நோயை பரப்பவா ? என்று ஹிந்தியில் கத்தினார் ஒருவர் .

“சோத்துக்கு வழியில்ல சார். சொந்த ஊருக்கு போறோம்”

“அரசாங்கம் நடந்து போவாதன்னு சொல்றத மீறி, நீங்க பாட்டுக்கு கிளம்பிப்போனா என்னடா அர்த்தம்”

“அவங்களுக்கு இது கவுரவ பிரச்சினை. எங்களுக்கு உயிர் பிரச்சினை”

“எல்லா ஏற்பாடையும் பண்றேன்னு சொல்லுறாங்க. அப்புறமென்ன நோவுது”

“எப்ப பண்றது? நாங்க செத்ததுக்கு அப்புறமா. சோறு போடுங்க. இங்கயே இருந்து வேலை செய்றோம்”

“உங்க ஊர்ல இருக்க வேண்டியதுதானே. இங்க எதுக்கு வந்தீங்க?”

“நீங்க படிச்சிட்டு வெளிநாட்டுக்கு சம்பாரிக்க போவலயா. அது உங்களுக்கு பெருமையாய் இருக்கைல நாங்க வந்தா எரியுதா? இதே மாதிரி வெளிநாட்டுக்காரன் உங்கள் புள்ளைங்கள அடிச்சா?”

அவர்களுக்குப் பதிலேதும் கொடுக்க முடியாமலிருக்கையில் கேள்வி கேட்டவனை மீண்டும் அடித்தனர். பேசும் குரலில் உண்மை இருந்தபோது மகாத்மாவை விட்டு விலகிச் சென்றது ஆங்கிலேய அரசாங்கம். கேள்வியில் நியாயம் இருந்தபோது, கேள்வி கேட்டவனை அடித்து நொறுக்கியது சொந்த அரசாங்கம். ஏற்கனவே உடல் வலியிலிருந்தவன் கீழே விழுந்து கதற, மற்றவர்களையும் அடித்தனர்.

“எல்லாரையும் அரஸ்ட் பண்ணு”

“அரெஸ்ட் பண்ணி எங்க கொண்டு போய் சோறு போடுறது நடந்துபோயி சாவட்டும் விடு”

மீண்டுமொருமுறை வெறுப்புடன் அடித்து விட்டு விலகினர். குழந்தைகளுடன் இருந்ததால் சுரேந்தரை அடிக்காமல் விட்டுச் சென்றனர்.

“சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலையறவங்க நாமதான்” என்ற முகேஷின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவனுடைய கன்னம் வீங்கியிருந்தது.

“கொரானா வந்துரும் எங்க எல்லைக்குள்ள வராதன்னு சொல்ற இதே ஊருக்காரன், ஸ்டேட்டுகாரனுங்க அத்தனைபேரும் நாளைக்கு தண்ணி வேணும், நிலம் வேணும்னு பக்கத்து நாட்டுக்காரன்கிட்ட நியாயம் பேசுவானுங்க”

“ஆளை பொறுத்துதான் நியாயம். நம்ம மண்ணை விட்டு வந்ததற்கான தண்டனை இது”

“அரசியல்வாதிகளும், பணக்காரங்களும் நம்மூர்லயே பிழைக்க வழி செஞ்சிருந்தா நாம ஏன் வெளியே வர்றோம்?”

“அவனுங்களை நாம தானே ஓட்டுப் போட்டு உட்கார வச்சோம்”

“என்ன செய்ய. பணக்காரங்களும், ஏழைங்களும் இந்த தண்டவாளங்கள் மாதிரி ஒரே நாட்டுல இருக்கோம். அவங்களை நம்பி நாம வாழ்றோம். நம்மை வச்சி அவங்க பிழைக்கிறாங்க. ஒருபோதும் சேரவும் மாட்டாங்க, பிரிச்சி உடவும் மாட்டாங்க”

“தண்டவாளமாவது பக்கம் பக்கமா இருக்கு. நாம படிக்கட்டு மாதிரி. கீழ் படிக்கட்டு எப்பவும் மேலே போவாது”

உடலை விட மனம் அதிகம் வலிக்க பேசியபடியே நடந்தனர். வெயில் அதிகமானதும் ஏதோவொரு ஸ்டேஷனில் அமர்ந்தனர். “வெயிலு கொறஞ்சதும் போலாம்” என்ற குரல் கேட்டதும் அப்படியே அமர்ந்து சாப்பிட்டனர். உடல் வலி தெரியாதளவு சுருண்டு தூங்கினர். சுரேந்தரின் செருப்புகள் கடித்து காலில் தோல் உறிந்தது. அதைப்பற்றி கவலைப்படாமல் மீண்டும் மாலையில் நடக்கத் தொடங்கினான்.

பல நாட்கள் தொடர்ந்து நடந்ததும் வலி பழக்கமாகியது. அதன் பின்னர் அனைத்தும் கனவைப்போல மயக்கமாய் தோன்றின. நடப்பது, தூங்குவது என்று இரண்டு நிகழ்வுகளே எஞ்சின. இயற்கைத் தேவைகளுக்கு ஸ்டேஷன்களை பயன்படுத்தினர். ஓங்கோலில் இருந்து ரோட்டில் நடந்தனர். சிலரால் நடக்க முடியாமல் பின்தங்கினர். மற்ற இடங்களிலிருந்து வந்த சிலர் சேர்ந்து கொண்டனர். முகமெல்லாம் முடி முளைத்து, ஆடைகளில் மண் படிந்து அவர்கள் சென்றது பிச்சைக்காரர்களின் அணிவகுப்பாய் இருந்தது.

சில இடங்களில் அவர்களை விசாரிக்க வந்த போலீஸார் பலர் இருமுவதைப் பார்த்து விலகியோடினர். முகேஸ் பயணம் முழுதும் சிறியவளைத் தூக்கிக் கொண்டு வந்தான். சுரேந்தர் பையனைத் தூக்கிக் கொண்டும், நடக்க வைத்தும், சுமைகளுடன் நடந்தான். பகல், இரவென நாள், கிழமை எதுவும் தெரியாமல் நடந்தனர்.

ரோட்டில் செல்கையில் சில இடங்களில் மக்கள் தண்ணீரும், பிஸ்கட்டும் தந்து உதவ, அவற்றைப் பெற்றுக் கொண்டனர். தன்னுடைய குழந்தைகள் இரண்டும் ஓடிச் சென்று கையேந்துவதைக் கண்ட சுரேந்திரன் மனமுடைந்து போனான். குழந்தைகள் கையேந்தும் நாடு அழிய வேண்டிய ஒன்று எனக் கோபத்தில் கத்தினான். கையிலிருந்த சப்பாத்திகள் தீர்ந்து, கடைகளும் இல்லாமலிருந்த நிலையில் பிழைக்க வந்த இடத்தில் பிச்சைக்காரனாய் மாறி விட்டோம் என்று அழுதான். இயலாமை முகத்திலறைய குழந்தைகளுக்கென கை நீட்டினான்.

பிரைவேட் பஸ்காரன் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஆந்திர எல்லையில் விட்டுச் சென்றான். அதன் பின்னர் எங்கோ சென்ற ஆர்மி லாரியில் இடம் கிடைத்தது.

உடல் பலகீனமாயிருந்த ரேஷ்மிக்கு மாதாந்திர பிரச்சினையும் சேர்ந்து கொள்ள வயிற்று வலியுடன் நடந்து வந்தாள். சொந்த ஊருக்குப் போய்ச் சேரவேண்டும் என்ற உறுதியே அவளைச் செலுத்திக் கொண்டிருந்தது. அடிக்கடி பாத்ரூம் சென்று வந்தாள். சில சமயங்களில் காலெல்லாம் ரத்தத்தில் நனைந்தது.

சுரேந்தர் வெளுத்துப் போயிருந்தவளின் முகத்தைப் பார்த்தபடி நடந்தான். மீண்டும் ரோட்டிலிருந்து ரயில் ரூட்டிற்கு மாறி பயணித்தனர். உடல் வலியும் உடன் பயணித்தது. ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாமல் போனது. அவர்களுடைய சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் எல்லையை அடைந்த போது நிறுத்தப்பட்டனர்.

அங்கிருந்த போலீசாரும், மக்களும் “உள்ளே விட முடியாது”, “எங்கெல்லாமோ சுத்தி நோயை வாங்கிட்டு வர்றாங்க”, “கொரனா டெஸ்ட் செஞ்சுட்டு வரட்டும்”, “முகாமில் தங்க வையுங்க” என்று ஆவேசத்துடன் கத்தத் தொடங்கினர். சுரேந்தர் ஒருவரிடம் கெஞ்சி போனை வாங்கி பெற்றோருக்கு தகவலனுப்பினான்.

பூட்டிய ரூமிற்குள் அனைவரையும் அடைத்து ஒவ்வொருவருக்கும் டெஸ்ட் எடுத்தனர். உடல் துவண்டு மயங்கிய ரேஷ்மி பேச்சு மூச்சில்லாமல் கிடக்க, “இவளை மட்டுமாவது கூட்டிட்டு போங்க” என்று சுரேந்தர் ஜன்னல் வழியாகக் கத்தினான்.

“எங்கயும் எடம் இல்லை. மாத்திரை போட சொல்லு. டெஸ்ட் ரிசல்ட் வந்தது அனுப்பிடுறோம்” என மறுத்தனர்.

அவன் கத்தினாலும், கதறினாலும் அவளை வந்து பார்ப்பதற்கும் எவருக்கும் மனமில்லாமலிருந்தது. உடல் பலகீனமாகி மாத்திரைகளுக்குக் காய்ச்சல் அடங்காமலிருக்க, வலியை உணர முடியாமல் மயக்கமாயிருந்தாள் ரேஷ்மி.

கொரானாவினால் எவரும் இறக்கக் கூடாதென்று அரசு இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்க, சொந்த மாநிலத்தில் நுழைந்த ஐந்து மணி நேரத்தில் ரேஷ்மி இறந்து போனாள்.

ரேஷ்மியின் பெற்றோர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ய, குழந்தைகளைச் சோதித்து விட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர். கொரோனாவில் செத்ததாய் கணக்குக் காட்டினால் காசு கிடைக்கும் என்றனர் சிலர். அரசுக்குக் கெட்ட பெயர் என்றனர் சிலர். ரேஷ்மியின் உடல் சுரேந்தருக்கு அருகில் அனாதையாய் கிடக்க, வானமும் வித்தியாசப்பட்டுக் கிடந்தது.

உடல் இற்றுப்போய், மனம் செத்துப்போயிருந்த சுரேந்தர் எழவோ, அழவோ திராணியின்றிக் கண்களை மூடினான். ஏழைகளுக்கு இடமில்லாத இந்த நரகத்தில் விழித்தெழக் கூடாதென்ற வேண்டினான். அழுகுரல்கள் கேட்டுக் கொண்டேயிருக்க, அவன் தூங்கத் தொடங்கினான்.


எழுதியவர்

அசோக் குமார்
சேலம் மாநகராட்சியைச் சார்ந்த அசோக் குமார்; தற்போது சென்னை சுங்கத்துறையில் பணி புரிகிறார். சிறுகதைகள், கவிதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
கரிகாலனின் வரலாற்றை பின்புலமாக கொண்டு ‘சோழவேங்கை கரிகாலன்’ எனும் நாவல் இரண்டு பகுதிகளாகவும், இதன் தொடர்ச்சியாக ‘இமயவேந்தன் கரிகாலன்’ எனும் நாவலும் எழுதி இருக்கிறார். பறம்புத் தலைவன் பாரி அசோக் குமார் எழுதிய மற்றொரு நாவலாகும்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x