22 January 2025
ravi shankar

ஷியாம் சுந்தர் மேனேஜர் – பைனான்ஸ், பதாகைத் தாங்கிய தன் கேபினில் ஷியாம் நுழைந்ததும்; தோல் பையை வைத்துவிட்டு முதல் வேலையாகத் தன் டைரியின் அன்றைய பக்கத்தைப் பிரித்துப் பார்த்தான். இன்றைய வேலைகள் லிஸ்டில் ஆறாவதாக இருந்த வேலை
பூர்ணிமா நாராயணன்- எக்ஸிகியூட்டிவ் அட்மின் -காஸ்ட் வொர்க் அவுட் ஸ்டேட்மெண்ட். அப்பா நாராயணனை விட்டுவிட்டு பூர்ணிமாவை மட்டும் சுற்றிச் செல்லமாக வட்டம் (மனதில் ஹார்டின்) அடித்து கோடு இழுத்துக் கொண்டு வந்து ஒன்னாவதில் சேர்த்து விட்டான்.

’சே… தாங்க்யூ பூர்ணிமா. எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கேன் உனக்கு.” மனதில் செல்லமாக வருடிக் கொண்டான்.

அதே போல ஒன்னாவதை ஆறில் கோடுப்போட்டுச் சர்ர்ரென்று அலட்சியமாக இறக்கினான். இந்தக் கம்பெனியில் சேர்ந்த இரண்டு மாதத்தில் இன்றைய நாள்தான் ஆபிஸ் நாளாக இல்லாமல் இனிக்க ஆரம்பித்தது. முதன் முதலாக பூர்ணிமாவுடன் வேலை செய்யப் போகிறான். தானே இழுத்து விட்டுக் கொண்ட வாய்ப்பு.

இரண்டு நாள் முன்பு மீட்டிங்கிற்காக தன் கேபினுக்கு தேவதை மாதிரி வந்திருந்தாள். வட்டமான சூட்டிகையான முகம். சின்னப் பொட்டு. மெல்லிசானப் புருவம். கருப்பு வண்ணத்தில் அங்கங்குப் பூப் போட்ட முரட்டான குர்த்தா. அதற்கு மேட்சிங்காக சிவப்புக் கலரில் சல்வார். தோளில் இரண்டும் கலந்த கலவையில் இருந்தத் துப்பட்டா. கதவைத் தட்டி சுறுசுறுப்பாக நுழையும் போது தோளில் இருந்த துப்பட்டாவை மார்பில் பரத்தினாள் பூர்ணிமா.

ஷியாமிற்கு மயிர் கூச்சம் வாரியிறைத்தது.

”வெல்கம் ……. பூர்ணி. லாஸ்ட் டைம் வரவே இல்ல” கண்களில் கூச்சம் தெரிந்தது.

பதிலுக்கு ’தாங்கஸ்’ சொல்லி சின்னதாக புன்னகை உதிர்த்தாள். விகல்பம் இல்லாத புன்னகை.

“எந்த உடையும் உனக்கு சூட ஆகுது. தேவதை மாதிரி இருக்க. கூடவே ஹோம்லினெஸ்ஸும் டிராவல் ஆகுது. ரொம்ப அபூர்வம்”

”தாங்க் யூ ஷியாம்”

யதார்த்தமான உடல்மொழியில் சின்னப் பூச்செண்டை ஏற்றுக் கொள்வது போல் பாவனைச் செய்து புன்னகைத்தபடி தன்னம்பிக்கையோடு உட்கார்ந்தாள். அதில் ஆத்மா மிளிர்ந்தது.

மொபலை டேபிளில் நளினமாக வைத்தபடி ”இப்போ ஷியாம் இந்த ஊருக்கு வந்தாச்சு. என்ன ஸ்பெஷல் செய்தி ஷியாம்”அவனை உன்னிப்பாக நோக்கினாள்.

”நியூஸ்ஸ்ஸ்ஸ்…..” இழுத்துப் புன்னகைத்து விட்டு ”ரொம்ப ஸ்வீட்டான நியூஸ்தான். உன் கூட ரெண்டு மணி நேரம் வொர்க் பண்ணப் போறேன்”

”நீயா…? ஓ கிரேட் ஷியாம். நா ஒரு சாதா அட்மின் அப்பாவி. அவ்வளவு பெரிய பிராஜக்கெட்டா. ஆவலா எதிர்பார்க்கிறேன்.
இந்த மாதிரி சவால் வேலைகள் எனக்குப் பிடிக்கும்” இதயத்தின் அடியிலிருந்து வந்த வார்த்தைகள்.

சின்னப் பேச்சுகள் முடிந்தது. அடுத்து இரண்டு நாள் செய்யப் போகும் வேலையைப் பற்றி உரையாடி ஒரு வழியாக முடித்தார்கள்.

”என்ன மூளை. என்ன பாசிட்டீவ் அப்ரோச். டக் டக்னு உறிஞ்சு உள்ள வாங்கி செய்யப்போற வேலய பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்த மாதிரி இருக்கு. யூ ஆர் வெரி கிரேட். தேங்க்ஸ் பூர்ணிமா”

உடல் மொழியில் அலட்டல் அச்சுப்பிச்சுத்தனம் இல்லாமல் ஏற்றுக் கொண்டு பதிலுக்கு ’வெல்கம்’ என்றாள்.

”நீ இங்க மூணு மாசம் வொர்க் பண்ணிட்டு நார்த் சைடுல போன. அதுக்கு அப்பறம் ரெண்டு வருஷம் ஆள் அட்ரஸ் இல்ல. யாருக்கும் ஒன்னும் தெரியல. என்னாச்சு?”

ஷியாம் சற்றுக் குற்ற உணர்ச்சியில் கண்கள் தாழ்ந்தபடி ”அது பெரிய கத. கேட்காத. ஆஃபர் மேல ஆஃபர். கம்பெனி மாறிட்டே இருந்தேன். எங்க போறேன்னு வெளியே போன கம்பெனிக்கே தெரியாத போது உனக்கு எப்படித் தெரியும். என்னோட கேரியர் வாழ்க்கையில் எதிர்கொண்ட வெற்றிகள் & தோல்விகள்” வருத்தத்தை மறைத்துப் பெரிதாகச் சிரித்தான்.

”புரிஞ்சுது. சிஏ ரேங்க் ஓல்டர் அண்ட் காஸ்ட் அக்கெளண்டண்ட். கொசுறா எம்பிஏ வேற. பிடிக்க முடியுமா. ஆஃபர் மேல ஆஃபர் வந்த நாங்கெல்லாம் பழசாகிப் பழங்குடிகள் ஆயிட்டோம். சரி லேட்டாவுது.பு த்தம் சரணம் கச்சாமி” எழுந்தாள்.

அடக்கமாட்டாமல் சிரித்தான்.

டேபிளில் இருந்த புத்தர் சிலையைக் குனிந்து உற்றுப் பார்த்து ’என்ன தெரிகிறதா புத்தர் அவர்களே. உங்களை விட எங்கள பழங்குடி’ ஆக்கிட்டான்.”

’பூர்ணிமா செம்மடி. இது அபூர்வக் குணம். வெள்ளந்தியான காமெடில க்யூட்னெஸ் இருக்கு. அது தவிர ஆத்மார்த்தமா வெளிப்படுது. இதெல்லாம் கிஃப்டடு ஒன் “ மறுபடியும் கண்களில் நீர் வழியச் சிரித்தான்.

”முன்ன இங்க இருந்ததே அதே பொம்மதானே”

”எஸ். அதே புத்தா தி கிரேட்’

’தேங்க்ஸ் கெளதம புத்தா. இவனோட நீயும் டிராவல் பண்ற” சொல்லிவிட்டு ஸ்டைலாக எழுந்து கிளம்பினாள். முன்பக்கம் போலவே அணிந்த உடையில் பின் பக்கமும் கச்சிதமாகச் செதுக்கியது போல அடங்கி இருந்தது. பருத்தி வாசனையும் அடித்தது. இப்போது பயமில்லாமல் பார்த்தான். வெளி வந்ததும் மறுபடியும் தோளில் துப்பாட்டவைப் போட்டுக் கொண்டாள்.

பின்னால் பவ்யமாக அவளுடன் கூடவே நடந்து கொஞ்ச தூரம் போய் ஒகே சொல்லிவிட்டு தன் கேபினுக்குள் நுழைந்தான். பூர்ணிமா
’மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நீ என் மகளாக வேண்டும்…பூவே பூச்சூடவா’ பாடல் வரிகளை ஹம் செய்துக் கொண்டே தன் கேபினை நோக்கி நடந்தாள்.

தன் கேபினுக்கு வந்த ஷியாம் தன் சுழல் சேரில் உட்கார்ந்து, தன் எதிரில் உட்கார்ந்திருக்கும் பூர்ணிமாவை இப்போது தைரியமாகப் புன்னகையுடன் அள்ள அள்ளப் பார்த்து விட்டு வேலையை ஆரம்பித்தான்.

 

இரண்டு நாள் கழித்து ……!

ஷியாம் முதலில் வந்துவிட்டான். இவ்வளவு சீக்கிரம் தேவையே இல்லை. பெரிய பதவி பிரஸ்டீஜ் எல்லாம் பூர்ணிமா முன்
காணாமல் போனது ஆச்சரியம்தான். விஸ்தாரமான ஹாலில் ஒரு ஒரத்தில் பூர்ணிமா கேபின் குட்டியாக இருந்தது. திறந்துதான் இருந்தது. கவித்துவமாக இருந்தது.

கேபின் உள்ளே வடிவமைக்கப்பட்ட வொர்க் ஸ்டேஷன் அதை ஒட்டிய பூர்ணிமாவின் கலை அம்சம் பொருந்திய பொருள்கள். அதில் தனித்தனியாக மிளிரும் அழகுணர்ச்சியைப் பார்த்துப் பரவசமாக இருந்தது. டேபிளில் தன் கொழுகொழுக் குழந்தைப் பருவப் போட்டோவை வைத்திருந்தாள். எடுத்துச் சின்னதாக முத்தம் கொடுத்துத் திருப்பி வைத்தான்.

பரவசத்திலிருந்து விடுபட்டு முதல் சந்திப்பை யோசித்தபடி புன்முறுவலுடன் பொறுமையாக பூர்ணிமா வருகைக்காக அவள் வொர்க் ஸ்டேஷனை ஒட்டி உட்கார்ந்திருந்தான். அந்த பொறுமையில் ஒவ்வொரு துளியிலும் சந்தோஷம் வழிந்துகொண்டிருந்தது. இந்தப் பொறுமையை இப்போதுதான் வாழ்க்கையில் முதன் முதலாக அனுபவிக்கிறான். ஆச்சரியமும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

பூர்ணிமா லேப் டாப்பில் எக்ஸெல் ஷீட் விரிந்திருந்தது. ஏதோ ’க்ளக்’ மெலிதான சத்தம் கேட்டவுடன் லேப்டாப் பக்கம் திரும்பினான். திறந்து வைத்திருந்த லேப்டாப் எக்ஸல் திரை மறைந்து வேறு திரை ஒளிர்ந்தது. ஒரு சின்ன சிவப்பு பூ உதிர்ந்து குறுக்குவாட்டாகப் பறந்து திரையின் கீழே தரையில் வழிந்திருந்த தண்ணீர் பரப்பில் க்ளக் சின்ன சத்தத்துடன் விழுந்து சின்ன நீர் பனிக்கட்டிக் குமிழிகள் எழும்பி மறைந்தது. அரை நிமிடத்தித்திற்கு ஒரு முறை இந்த ‘க்ளக் பூ’ விழுதல் இது நிகழும்.’கவிதை கவிதை பூர்ணிமா’. புன்முறுவல் பூத்தான்.

அந்தக் கோடியில் பூர்ணிமா உருவம் தெரிந்தது .கண்கள் விரிந்து வாய் பிளந்தான். வாவ் இன்று புடவை. புரியாத வண்ணக் கலவையில் காட்டன் புடவை. அதற்கு மேட்சிங்காக பிளவுஸ் அணிந்திருந்தாள். புடவைத் தலைப்பை மார்பில் பரப்பி தோளில் சாய்த்து விட்டிருந்தாள். உற்சாக நடையில் கேபினை நோக்கி நடந்து வர ஆரம்பித்தாள்.

ஷியாமிற்கு மனது அள்ளிக் கொண்டு போயிற்று.

கேபினில் அவன் உருவத்தைப் பார்த்தவுடன் பதற்றமாகி வேக வேகமாக வந்து ……..

”சாரி சாரி சாரி ஷியாம்! லேட் ஆயிட்டேன். போன் அடிக்கலாம் இல்ல. சீக்கிரம் வருவேன்னு. நானும் அந்த டைமுக்கு வந்திருப்பேன் இல்ல. எவ்வளவு பொறுமை உனக்கு? இது தேவையா? எவ்வளவு பெரிய ஆளு?”

”ஓகே பூர்ணிமா! .லேட்டாவது எல்லாம் நடக்கற விஷயம்தான் கார்பரேட்ல. அரை மணி நேரம்தானே. பிரச்சனையே இல்ல. இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரா” வாஞ்சையுடன் ஆறுதல் படுத்தினான் ஷியாம்.

”இப்ப உண்மையாக நீ தி கிரேட் புத்தா” கேட்டவுடன் புல்லரித்தது ஷியாமிற்கு.

’ஓகே …ஷியாம். ஏற்கனவே லேட் ஆயிடிச்சு. வேலைல குதிப்போம். பிராஜெக்ட்ட ஒரு கைப் பார்ப்போம்..”

இருவரும் டாப் கியரில் சுறுசுறுப்பாக இயங்கி ரிப்போர்ட்டைத் தயாரித்தார்கள். முடிவில் வேலையில் காட்டும் அவளின் வேகம், சூட்சமம், மாத்தி யோசிக்கும் திறன், சுணுங்காமை அடுத்த கட்டம் நகர்வது எல்லாவற்றையும் கண்ணில் பிரமையோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கவனத்தைக் கலைக்க லேப்டாப்பில் மெலிதாக பியானோ இசையை இயக்கினாள். கிணுகிணுக்கும் இசையில் கவனம் கலைந்து கொஞ்சம் அசடாகி ”நன்றி கோடிகள் ” என்றான்.

‘அசத்திட்ட பூர்ணிமா’ மகிழ்ச்சிப் பொங்க கைக் குலுக்கினான்.

”தேங்க்ஸ் ஷியாம்”

பூர்ணிமா தூரத்தில் அவன் போவதைப் பார்த்து விட்டு உள்ளே வந்தாள். தன் குழந்தைப் போட்டோவைப் பார்த்து “பாருடி பூர்ணிமா குட்டி.. இந்த வேலைக்கு இப்ப அவசியமே இல்லையே. ஆறு மாசம் இருக்கே. நான் இங்கதானே இருக்கேன். எங்க போகப் போறேன். அவ்வளவு அவசரம் எதுக்கு உனக்கு. எனக்குத் தெரியாத மிஸ்டர் ஷியாம் சுந்தர் அவர்களே? அசட்டுத்தன களை அங்கங்க லைட்டா தெரிஞ்சிடுச்சி? உனக்குத் தெரிஞ்சுதா?” உச்சென்று முத்தம் கொடுத்தாள்.
”நத்திங் ராங். எனக்குப் பிடிச்சுது இந்த அசட்டுக் களை. நீ மட்டும் என்ன குறைச்சல். ஹாண்ட்சம் ஃபெல்லோ. எங்கேயும் சிணுங்கவோ கோபமே படலயே. ஒத்து வருவ. எனக்கு என்னப் பத்தி இம்மியும் தெரியாதத ரசிச்சு ரசிச்சு என்னை சாய்ச்சுட்ட”

‘வெயிட் குட்டிம்மா” சொல்லிவிட்டு திரையில் ஸ்க்ரீன் சேவர் தோன்றி களக் என்று சிவப்பு பூ உதிர்ந்து தண்ணீரில் விழுந்து நீர்க் குமிழிகள் எழும்ப…அந்தக் கணத்தில் ஷியாம் மேல் காதல் கொண்டாள்.

போட்டோவில் குட்டி பூர்ணிமா சிரித்தாள். அதே கணம் அவனிடமிருந்து வாட்ஸ் அப் குறுஞ்செய்தி ’கிளிங்’ என்று வந்தது. ’வாட் ஏ கோ இன்சிடென்ஸ் குட்டி பூர்ணிமா அவர்களே’ போட்டோவைப் பார்த்து அழகுக் காட்டினாள்.

’எஸ்’ என்று பதிலுக்கு புன்னகைத்தபடி பதில் ஹார்ட்டின் விட்டாள்.

அன்று இரவு ஷியாம் தன் பிளாட்டில் இரவு சாப்பிட்டு விட்டு மொபைலில் பூர்ணிமாவின் இன்ஸ்டாகிராம் அக்கெளண்ட்டை திறந்தான். 500 பாலோயர்கள். 50 பாலோயிங்.

புகைப்படங்களில் விதவிதமான உடைகளில், விதவித இடங்களில், விதவிதமான போஸ்களில். எவ்வளவு விதமான முக பாவங்கள். அதில் பளிச்சிடும் வெகுளித்தனம். இதைத் தவிர ரீல்களில் பாடல்கள். நான் ஒரு லூசு ரீல், அழகுக் காட்டல்கள், முகத்தை வலித்து வலித்து காமெடிப் பேச்சுகள், நாய் குட்டி பூனைக் குட்டிகளுடன் செல்லம் கொஞ்சல், தம்பி தங்கையுடன் தீபாவளி, பொங்கல், நவராத்திரி பக்தியுடன் ஸ்லோக முணுமுணுப்புகள், நவராத்திரி கொலு அருகில் பட்டுப்புடவையுடன் களைச் சொட்டச் சொட்ட மின்னிக்கொண்டிருந்தாள்.
பூர்ணிமாவைத் திகட்டத் திகட்டப் பார்த்துக் கொண்டே வர ரீல் ஒன்றில் கண்கள் நிலைத்து நிற்க க்ளக்கென்று கண்ணில் கண்ணீர் முட்டியது.

நில்லென்று சொன்னால் மனம்
நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை
ஓய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தின் தாளம் போடாதோ

பின்னணியில் பாடல் ஓட முன்னணியில் பூர்ணிமா……! மாசு மரு இல்லாமல் உயிரோட்டமாய். வாட் ஏ கேர்ள்.

குர்த்தாவும் ஜீன்ஸும் அணிந்திருந்தாள். முடிகளைக் கொத்தாகப் பின்னால் வாரிச் சுருட்டி கிளிப் போட்டு முடிந்திருந்தாள்.
குட்டியாக அழகாக அவளைப் போலவே இருந்தது. குர்த்தாவில் பிரேசியரின் பிம்பம் மென்மையாக ஓடியது. It is tea time folks. வரிகளில் பூர்ணிமா வீட்டின் ஜன்னல் ஓரத்தில் நின்றபடி சாலையைப் பார்த்தபடி டீ அருந்திக் கொண்டிருந்தாள்.
.
அவளின் பின் பக்கம் அசுர வேகத்துடன் ரூம் அதிர கிர்ர்ர்ர் கர்ஜனையுடன் பிடரி சிலிர்க்கக் கொடூரமாகப் பாய்ந்த பெரிய சிங்கம். அவள் திரும்புவதற்குள் தன் முன் கால் நகங்களை அவள் முதுகில் வைத்துப் பிறாண்ட……

’நோ பூர்ணிமா நோ… ப்ளீஸ் என்ன மறந்துடு. நோ காதல். நான் கோபத்தில் மட்டமான & சாடிஸ்டிக் கய். யாருமே தாங்க மாட்டாங்க” பதற்றத்தில் உடம்பு நடுங்கியது.

”அன்னிக்கு 30 நிமிஷமும் உனக்காகக் காத்திருந்த பொறுமைக்குக் காரணம் காதலில் விழுந்ததில் பிறவிக் குணம் அடித்து இழுத்துக் கொண்டு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அடிமையாகி நாய் குட்டியாய் உன் காலின் கீழ் கிடந்தேன். என் பதவி, என் குவாலிஃபிகேஷன் எல்லாவற்றையும் மறந்து அல்பம் மாதிரி ஆயிட்டேன்.

அதே அந்த 30 நிமிஷம் பொறுமை கல்யாணத்திற்கு அப்பறம்னா பிறாண்டி எடுத்து உன்னை சின்னாப்பின்னம் ஆக்கி இருப்பேன். இந்த மூர்க்கப் பிறாண்டல், டார்ச்சர் தாங்க முடியாமல்தான் முதல் வொய்ஃப் மானசி ராமச்சந்திரன் கதறியபடி ஓடிய காட்சி ஹாரர் படங்களில்தான் வரும். அப்படியான கோபம் …….மாற மாட்டேன். நீ என்னிடம் மாட்டி என்ன விட்டுப் போனாலும் துரத்தித் துரத்தி அடிக்கும் பல மாசம்”

விசும்பிக் கண்ணீராய் கொட்டியதும் தெளிவானான். எப்பேர்பட்ட தெளிவு. ஏதோ தரிசனம் கிடைத்த மாதிரி இருந்தது. முதல் முதலான கிடைத்த அனுபவம். கொடுத்து வைத்திருக்கிறேன். மொபைலை எடுத்தான்.

”வீட்டுக்கு வந்து யோசிச்சேன். ரொம்ப ரொம்ப சாரி & என்னுடைய மனப்பூர்வ அப்பாலஜி பூர்ணிமா. உன் மேல ரியல் காதெல்லாம் இல்ல.
இவ்வளவு வருஷ தனிமைல இருந்துட்டு திடீர்னு உன்னப் முதல்லப் பார்த்து பரவசமானேன். அப்புறம் உன்னோட கழிச்ச அந்த ஆபீஸ் தருண புல்லரிப்புகள். அம்மாடியோவ்…! அது கிளப்பி விட்ட பீலிங்ஸோட சம் அப்தான்”அதெல்லாம் கொஞ்ச நாள்தான்.

”பதிலுக்கு உடனே காதல்னு கொஞ்சம் கூட யோசிக்காம நீ மெசஜ் அனுப்பினது பெரிய அதிர்ச்சி. ஆடிப்போய் விட்டேன். ஓ காட் …! ரெண்டு வருஷம் ஆளே அட்ரெஸ் இல்லாம இருந்தேன். என்ன நம்பிட்ட?….. காதல்?”

”நான்தான் லூசுன்னா…!போட்டோ குட்டி பூர்ணிமா ஆயிட்டன்னு எதிர்பார்க்கல. புல்லரிப்ப ஒரேடியா வாரி இறைச்சுட்டா…! நார்மல் ஆக இரண்டு மணி நேரம் ஆச்சு. ஆள் ஸ்மார்ட்ட மேன்லியா வித் குவாலிஃபிகேஷனோட இருக்கான். கெடச்ச சான்ஸல ஆட்டைய போட்டுவோனும்னு விழுந்துட்ட. சாரி சாரி சும்மா கலாச்சேன்.(8 கண்ணீர் வழி சிரிப்பான் எமோஜி)”

”ஆட்ட போடல. வெள்ளந்தியான ஆத்மார்த்தமான காதல் என்ன மாதிரி இல்ல. நாம செஞ்ச வேலல நீ காட்டினா சின்சியார்டி புத்திசாலித்தன்ம் professionalism ஆனா இதுல காட்டல”

”நான் லூசு இல்ல..சப்போஸ் யோசிக்கனும், நிறைய விஷயம் பேசனும், கொஞ்ச நாள் பழகனம்னு சொல்லி இருந்தேன்னா ரொம்ப தப்பா ஆயிருக்கும். என்ன தப்பா ஆயிருக்கும்?” சொல்றேன் ஒரு நாள்.

”ஏன்னா வேற வேலைக்கு ஆஃபர் வந்துடுச்சு. கேட்டுருக்கேன். கிடைச்சுடும். நீ இதெல்லாம் மறந்து சந்தோஷமா ஆகி அப்புறம் கல்யாணம் குடும்பம் குட்டி ஆகி ஒரு நாள் மீட் பண்ணி சொல்றேன். கேட்ட உடனே ’அடப் பாவி நீயாடா….இப்படி’ன்னு முகம் பூரா எஸ்கேப் ஆன மகிழ்ச்சி ஓவர் ஃப்ளோ ஆகி வழியும்.(சிரிப்பு எமோஜி 8). யூ ஆர் எ டீசெண்ட் கேர்ள். எதுவும் மேல நேரடியா கேட்க மாட்டன்னு நம்பிக்கை இருக்கு. ஒரு வாரம் சாதாரணமா இருப்போம். குட் நைட் அண்ட் குட் எக்ஸ்பீரியன்ஸ். ஐ ஹேட் யூ.(சிரிப்பான் 3)”


 

எழுதியவர்

ரவி சங்கர்
சென்னை அண்ணா நகரில் வசிக்கும் ரவிசங்கர் பன்னாட்டு நிறுவனமொன்றின் பணியிலிருந்து விருப்ப ஓய்வுப் பெற்றவர்.
90களில் கணையாழி, தினமணி கதிர், கல்கி, சாவி, புதிய பார்வை, கலைமகள் போன்ற அச்சு ஊடகப் பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x