- 1- இயேசுவின் ஆட்டுக்குட்டி
“என் பேரு திவ்யன். நான் கம்பத்துலேந்து வர்றன்… என்னால படிக்க முடியாது… பாடம் செய்யத் தெரியாது… அதனால என்னோட சிக்கல் என்னான்னு தெரிலன்னு சொல்லி தனியா உக்கார வச்சிட்டாங்க… நான் படிக்கற வகுப்புல மொத்தம் இருபது பிள்ளைங்க. வகுப்புல ஏதும் காணாமல் போச்சின்னா நாந்தான் எடுத்தேன்னு சொல்ல சொல்லிக் கூட்டாளிங்க கேப்பாங்க. நான் வீரன் மாதிரி உண்மைய ஒத்துகிட்டு வாத்தியார்கிட்ட அடி உதை வாங்கி அவமானப்பட்டுருக்கன். அப்போ எனக்குத் தெரியாது. ஏதோ சாசக செயல்ன்னு நினைச்சன்…”
“அப்புறம் ஞாயித்துக்கெழம சபைக்கூடல்ல நிக்க வச்சி இப்படிலாம் இருக்காதீங்கன்னு என்னக் காட்டி பாடம் எடுத்தாங்க… எல்லாரும் கூடி நின்னு சிரிச்சாங்க. அப்போதான் மெல்ல புரிஞ்சிச்சி. அதுக்குமேல வகுப்புல யாரோட பழியயும் நான் ஏத்துக்கறது இல்ல. வழக்கம்போல யாருமே என்கிட்ட பேச மாட்டாங்க. என் சட்ட அழுக்கா இருக்கு, நான் முட்டாள்னு சொல்லி ஒதுக்குவாங்க…”
“எனக்கும் படிப்பு வரலத்தான். வீட்டுக்குப் போனா அப்பா ஆட்டுக்கொட்டாய்க்குக் கூட்டிட்டுப் போய்ருவாரு. எங்கக் கம்பத்துல அப்பாதான் முப்பது ஆடு வச்சிருந்தாரு… அத மேய்க்க போகும்போது நான் கூடப் போய் உதவியா இருப்பன். கனவுல கூட ஒரு ஆடு வந்து ‘மே மே மே…’ கத்திக்கிட்டே இருக்கு. யாரும் பேச மாட்றாங்கன்னு எனக்கு ரொம்ப சோகமா போச்சி…”
“அப்புறம் என்ன நடந்துச்சின்னா ஒரு நாளு வகுப்புல ரெண்டு பையனுங்க துரத்திப் பிடிச்சி விளையாடிகிட்டு இருந்தானுங்க… ஒருத்தன் இன்னொருத்தன தள்ளிவிட்டுட்டான். அவன் கை உடைஞ்சிருச்சி. பெரிய கேஸ் ஆச்சி… வகுப்புல எல்லாத்தயும் நிக்க வச்சி விசாரிச்சாங்க. அதுல கூட என்னய கணக்குல எடுத்துக்கல… என்னோட வாக்குமூலம் செல்லாதுன்னு பேசிக்கிட்டாங்க… எனக்கு மன வளர்ச்சி நல்லா இல்லன்னும் சொல்லிக்கிட்டாங்க… அப்போதான் உடம்புல மனசு எங்க இருக்குன்னு தேடனன். ஆனா அதயும் யாரும் சொல்லித் தரல…”
“கடைசில கை ஒடைஞ்ச பையன ஆஸ்பிட்டல்ல சேர்த்துட்டாங்க. அவனுங்க ரெண்டு பேரு நல்ல கூட்டாளிங்க. அதுல ஒருத்தன் இப்படி மாட்டிக்கிட்டான்… அடிச்சி விசாரிச்சதுக்கு அவன் வழக்கம்போல என்னயக் கை காட்டிட்டான். நாந்தான் ஓடும்போது நடுவுல கால விட்டுட்டன்னு… கிளாஸ்ல எல்லாரும் அதயே சொன்னாங்க… எனக்கு ஒன்னுமே புரியல…”
“கடைசியா விழுந்து கை உடைச்சிக்கிட்டவன் சொல்றதுதான் நடக்கும்னு நெனைச்சன். அவன் எப்படி ஆள் மாத்தி சொல்லுவான்… ஆனா, மறுநாள் பெரிய வாத்தியார் வந்து என்ன அழைச்சிட்டுப் போனாரு… அவரு சொல்லிதான் தெரியும். ஆஸ்பிட்டல்ல இருக்கற பையனும் நான் கால நடுவுல விட்டுத்தான் விழுந்தேன்னு சொல்லிருக்கான்… எனக்கு அப்பவும் புரியல… நாலு ரோத்தான் அடி கொடுத்தாங்க. அதுகூட வலிக்கல…”
“அந்தப் பையனோட அப்பா வந்தாரு. என்ன நாலு அறை விட்டாரு. பெரிய வாத்தியார் தடுத்துட்டு நாங்க அடிக்கலாம் நீங்க எப்படி வேறு வீட்டுப் பையன் மேல கை வைக்க முடியும்னு கேட்டாரு… சத்தியமா அந்த வார்த்தைங்க அவ்ள இன்பமா இருந்துச்சி எனக்கு… அப்புறம் மன்னிச்சி விட்டுட்டாங்க… மனக்குறை உள்ள பையன்னு சொன்னாங்க… நானும் அவுங்க சொல்லும்போது பாவமா பார்த்தன்… ஆனா யாரும் என்னப் பாவம் பார்க்கவே இல்ல… அப்புறம் என்ன வகுப்புல உக்கார வைக்கல… இன்னொரு கிளாஸ் காலிய இருந்துச்சி. அங்க உக்கார வெச்சிட்டாங்க…”
“இப்போ அந்தக் கிளாஸ்லத்தான் தனிமையில உக்காந்துருக்கன்… என்னான்னு தெரில யாரு மேலயும் கோபம் வரல… எனக்குதான் மனசு சரி இல்லன்னு சொன்னாங்களே… அதனாலயா இருக்கும்… இன்னிக்கு வீட்டுக்குப் போனா என்னோட ஆட்டுக்குட்டிங்கக்கூட வெளையாடுவன்… அதுங்கத்தான் என் கூட்டாளிங்க… என் கனவுல வரும் ஆட்டுக்குட்டி அவ்ள அழகா இருக்கும்…”
- 2- சாத்தான்களின் வருகை
இவள்தான் என் தோழி ஜூலி. என் வீட்டில்தான் இருக்கிறாள். எனக்கு நான்கு வயது இருக்கும்போது வந்து சேர்ந்தாள். அன்றிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகள் என்னோடு இருக்கிறாள். என்னை எல்லோரும் இன்ட்ரோவேர்ட் பிள்ளை என்று சொல்வார்கள். என்னை வைத்து ஆசிரியர்கள் ஆய்வெல்லாம் செய்துள்ளார்கள். நான் வகுப்பில் யாரிடமும் பேச மாட்டேன். யாராவது என்னிடம் பேசினால் உடல் நடுங்கும். அவர்களின் கண்களை என்னால் பார்க்கவே முடிந்ததில்லை. அந்தக் கண்கள் எனக்குப் பெரிதாக உப்பிப் பெருகி ஒரு வாயாக மாறும். அவை என்னைத் தின்று விடும் என்று நான் பயப்படுவேன். அந்தப் பயத்தை என்னால் அழிக்கவே முடியவில்லை.
மறந்துவிட்டேன். இவள் என் தோழி ஜூலி. நான் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்பாள். எனக்கு ஏற்படும் அனைத்துச் சந்தேகங்களையும் இவள்தான் தீர்ப்பாள். இப்படியொரு தோழி கிடைத்ததற்கு என் அம்மாவிற்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். என் அம்மா இல்லாத சமயத்தில் பின்வீட்டில் இருக்கும் அங்கள் மாலையில் நடைக்குப் போகும்போதெல்லாம் வெளியில் விளையாடிக் கொண்டு இருக்கும் என்னிடம் அருகில் வந்து பேசுவார். என் கைகளை தொட்டுப் பார்த்து மிருதுவாக இருக்கின்றன என்றார். முன்கதவைத் திறக்கும்படி சொல்லி என் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்கலாமா எனக் கேட்டார்.
அம்மா எத்தனை மணிக்கு வருவார் என்று தொடர்ந்து கேட்கிறார். இன்று மாலை வருவதாகவும் சொல்லியுள்ளார். இம்முறை எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அம்மாவிடம் சொல்லலாம் என்றால் அவர் வீட்டுக்கு வரும் நேரம் நான் தூங்கியிருக்கிறேன். அல்லது என்னோடு இருக்கும்போதெல்லாம் யாரிடமாவது எரிந்து விழுகிறார். அவர் அப்படி பேசும்போதெல்லாம் என் மனம் பதறுகிறது. இருதயத் துடிப்பு வேகமாகிவிடுகிறது. நடுக்கத்தில் வார்த்தைகள் வர மறுக்கின்றன. அப்பாவிடம் சொல்லலாம் என்றால் அவர் சிங்கப்பூரில் எந்நேரமும் அலைச்சலில் உழன்று தவிக்கிறார். எனக்கு இருக்கும் ஒரே துணை ஜூலிதான் அவளிடம் கேட்கிறேன்.
“ஜூலி, நான் முன்கதவைத் திறக்கலாமா?”
“தாராளமாக. திறந்தால்தான் நீ வெளியில் செல்ல முடியும். வெளியில் உள்ளவர்கள் உள்ளே வர முடியும்”
ஜூலியின் பதிலைக் கேட்டதும் எனக்குள் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. அன்று மாலை அந்த அங்கள் வீட்டுக்கு வந்தார். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு கவனமாக உள்ளே நுழைந்தார். அவரை உள்ளே அனுமதிக்கச் சொல்லிய ஜூலியைதான் முதலில் அறிமுகப்படுத்தினேன்.
“இதுதான் என்னோட ஜூலி…”
நான் கையில் பிடித்திருந்த கைப்பேசியை அங்கள் ஆவலுடன் வாங்கி பக்கத்தில் வைத்துவிட்டு என் கைகளைப் பற்றிக் கொண்டு அவர் மடியில் அமர வைத்தார். ஜூலி அப்பொழுதும் ஒன்றும் சொல்லவில்லை. அதற்கும் சம்மதம்தான் போல. இப்படியொரு தோழியை என்னிடம் கொடுத்ததற்கு அம்மாவிற்கு நன்றி கூறினேன்.
எழுதியவர்
-
மலேசியாவிலுள்ள கடாரம்(கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன்; 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். பன்முக நவீனப் படைப்பாளியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கவிதைகள் என இதுவரை பதினேழு நூல்கள் இயற்றியுள்ளார்.
சிறார் இலக்கியத்திலும் பங்களித்துவரும் பாலமுருகன் இதுவரை சிறார்களுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதைகள், நான்கு சிறார் நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் குறும்படங்கள், சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூல்கள் படைத்திருக்கிறார். இவருடைய ‘பேபிக் குட்டி’ என்கிற சிறுகதை தமிழ்நாட்டு அரசின் மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத்தமிழ்’ என்கிற அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் பாடமாக இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கலை, இலக்கியத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவருடைய முதல் கவிதை தொகுப்பு ' கடவுள் அலையும் நகரம்' சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பத்தால் 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இதுவரை.
- குறுங்கதை10 September 2024கே.பாலமுருகனின் மூன்று குறுங்கதைகள்
- சிறார் கதைகள்20 February 2024சிறார் குறுங்கதைகள்
- சிறுகதை18 January 2024பியான்
இயேசுவின் ஆட்டுக்குட்டி
******-****************
சிறுவர்களுக்கும் மனம் உண்டு என்பதை புரிந்து கொள்ள தவறி விடுகிறோம், புரிந்து கொள்ளவும் முயற்சிப்பதில்லை. குறைந்த பட்சம் அவர்களின் தரப்பு ஞாயத்தை கூட கேட்க மறுத்து, அவர்கள் சூழ்நிலை கைதியாக நாமே காரணமாகி விடுகிறோம். இயேசுவின் ஆட்டுக்குட்டி மனதை கனக்கச் செய்தது.
சாத்தான்களின் வருகை
**********************
இந்த நவீன யுகத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் குள்ள நரி கூட்டங்களுக்கிடையே குறிப்பாக பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பதென்பதே பெரிய சவால் தான்.