25 July 2024

ள் அரவங்கள் எழுந்து இரைச்சல்மிக்க பெருவெளியை உண்டு செய்து கொண்டிருந்தது.

“என் பேரு பியான்…” என்று மலாய்மொழியில் புன்னகை மாறாமல் ஒப்புவித்துவிட்டு அதே வேகத்துடன் அவள் நடக்கத் தொடங்கினாள்.

மலாக்கா, இரவில் மஞ்சள் நிறம் கொண்ட தேசமாக மாறிக் கொள்கிறது. ஜொன்க்கர் சாலையைப் பாதுகாப்பாக தன் ஒளிக்குள் மூடி வைத்துக் காவல் காத்துக் கொண்டிருந்த தெருவிளக்குகளின் விசாலமான பார்வை எல்லாக் கடைகளின் மீது கவிழ்ந்திருந்தது.

“பியான்னா இரகசியமான பொன்னுன்னு அர்த்தம்… ஆனா, நான் இங்க வந்தோன என் பேர டுங்ன்னு மாத்திக்கிட்டன்…” 

மீண்டும் திரும்பிப் பார்த்து மாரியப்பனிடம் சகஜமாகச் சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தாள். கிடைத்த இடத்தில் காரை நிறுத்திவிட்டுப் பரபரப்பான ஜொன்க்கர் சாலையைத் தேடி ஓடி வந்து உள்ளே நுழைந்தால் வெறும் மனிதத் தலைகள் மட்டுமே நெரிசலுக்குள் அசைந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. மூவரும் எந்தப் பாதைக்குள் நுழைந்து எங்கே செல்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் அவள் வந்தாள். மாரியப்பன் நேற்றே தை லோங்கிற்கு அழைத்துத் தன் வருகையைச் சொல்லிவிட்டிருந்தான். அவனும் கடந்தமுறை மாதிரி ஆள் அனுப்புவதாகச் சொல்லியிருந்தான். அவர்களுக்காகவே காத்திருந்து களைத்தவள் போல் “எங்க போகணும்?” என்ற சோர்வான கேள்வியுடன் சட்டென வந்து சேர்ந்தாள். 

“செல்லம்… இந்தச் செவத்த டுங் நம்மள சரியா கூட்டிட்டுப் போய்ருவாளா?”

சரவணன் அப்படிச் சொல்லியதும் தியாகு விரல்களைக் குவித்துக் குத்துவது போன்று சைகை செய்து மிரட்டினான். சரவணனுக்கு இன்னும் போதை தெளியவில்லை என்பது அவனுடைய நடை உணர்த்தியது. அசைந்தாடியபடி மென்மையான தோரணையில் நடந்தான். குடித்துவிட்டால் அவனுக்குள் வசீகரம் வந்துவிடும். அன்பைப் பொழிவான். அருகில் இருப்பவரை அன்பொழுக பார்த்து முத்தமிடுவான். பல நேரங்களில் தியாகுதான் பலிகடா. 

“தை லோங் நமக்குச் சரியான ஆளத்தான் செட் பண்ணிக் கொடுப்பான்…”

மாரியப்பனுக்கு உள்ளுக்குள் குதூகலம். வெளிநாட்டுப் பெண்களின் போலியான அன்பில் அவன் கரைய துடிப்பவன். பணம் அனைத்தையும் தருவித்துக் கொடுத்துவிடும் என்கிற நினைப்பு. சாலையின் இரு மருங்கிலும் போடப்பட்டிருந்த ஏராளமான கடைகளுக்கு மேலேயும் பக்கத்திலும் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் அவ்விடத்தில் பிரகாசமான பகலை உருவாக்கியிருந்தன. வெளிச்சத் தெறிப்பில் ஜொன்க்கர் சாலையின் மொத்த பரபரப்பையும் காண முடிந்தது. ஆள்கள் சற்றும் குறையாமல் பெருகி வழிந்து கொண்டிருந்தனர். சத்தமாகவும் சன்னமாகவும் சீன மொழியின் அலைகள் சீனக் கூத்தின் ஓப்பேரா போல் பெருகி விரிந்தன.

அவர்கள் ‘பாமோசா நாசி ஆயாம்’ கடைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த வியாட்நாம் பெண்ணைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள். கூட்ட நெரிசலில் அவள் இலாவகமாக வளைந்தும் நெளிந்தும் செல்லும் காட்சி அத்தனை பயிற்சிமிக்கதாகவும் அழகானதாகவும் தெரிந்தது. ஒரு குட்டி இளவரசி தமது பூந்தோட்டத்தில் துள்ளியோடும் இலாவகம் அது. அப்படியே பின்தொடர்ந்து எந்த எல்லைக்கும் போய்விடலாம் என அவர்களுக்குத் தோன்றியது. இறுக்கமான சிவப்பு கவுன் அணிந்திருந்தாள். எங்கும் சூழ்ந்திருந்த மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் அவளுடைய வெளிறிய கால்கள் இன்னும் பளிச்சென்று தெரிந்தன. சொல்லப் போனால் கூட்டத்தில் பின்தொடர்தலை விட்டு விலகாமல் இருக்க அவளுடைய கால்களைக் கவனித்தவாறே நடந்தார்கள். பாதி தெரிந்த அவளுடைய முதுகின் இடப்பகுதியில் நீலநிற டிராகனைப் பச்சைக் குத்தியிருந்தாள். அது அவளுடைய பின்னந்தலையைக் குறி வைத்து நாக்கை நீட்டியபடி இருந்தது. அதன் பாம்புடல் நேர்த்தியான வளைவுடன் குழைந்து கீழ்நோக்கி விழுந்திருந்தது. 

“நீங்க இந்த நாசி ஆயாம் சாப்டத்தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா?”

இடையிடையே நின்று அவர்கள் வருகிறார்களா எனக் கவனிக்க நிற்கும் இடத்தில் பேசவும் செய்தாள். அவளுக்குத் தெரிந்த மலாய் வார்த்தைகளை அடுக்கி மாரியப்பனிடம் பேசினாள். அவனால் புரிந்து கொள்ள முடிந்ததால் ஆம் என்பது போல் கள்ளத்தனமாகத் தலையசைத்தான். அவனுடைய பார்வையில் வேறொன்றும் தெரிந்ததை அவள் பார்த்திருக்கக்கூடும். மீண்டும் முதுகைக் காட்டி நடந்தாள். அவளது விரிந்த முதுகில் நீல டிராகன் அமைதியாகப் படுத்திருந்தது. 

“வியாட்நாம்மா இல்ல தாய்லாந்தான்னு தெரில…” எனத் தியாகு கேட்டுவிட்டு அவளை நோட்டமிட்டான்.

“வியட்நாம்டா… பேரு சொன்னா தெரியலயா…?”

அதட்டுவது போன்று சரவணன் சொன்னதும் தியாகு தலையைச் சொறிந்து கொண்டான். அவன் முன்னம்பல் பாதி உடைந்து அவனைக் கோரமாகக் காட்டியது. அதன் சிறு ஓட்டையில் நாக்கின் நுனிப்பகுதியை நுழைத்து மறைத்துக் கொள்ள முயன்றான். தியாகு அவன் கடந்த முறை இங்கு வந்தபோது சந்தித்த தாய்லாந்து நாட்டுப் பெண்ணைப் பற்றி மறவாமல் நினைத்துக் கொண்டிருந்தான். அவள் முழு உருவமாய் அவனுக்குள் நிலைத்திருந்தாள். இங்கு வருவதாக மாரியப்பன் சொன்ன நாளிலிருந்து அவனால் நிலைக்கொள்ள முடியவில்லை. தொழிற்சாலையில் ஓப்பரேட்டர் வேலை செய்யும் அவனுக்குப் மாரியப்பன் போன்றவர்கள் அழைத்து வந்தால்தான் இதுபோன்ற இடங்களுக்கு வர முடியும். அதுவும் எப்பொழுதாவது அமைந்துவிடும் இதுபோன்ற வாய்ப்புகளை அவனுடைய இறுதி நாள் போல் கொண்டாடி கொள்வான்.

“பாங்ங், போன வருசம் போர்டருக்குக் கூட்டிட்டுப் போனீங்களே… டங்னோட்டுல நான் போட்ட ஆட்டம் இன்னுமும் தலைக்குள்ள இருக்கு… டங்கு டங்குன்னு ஆடுது…”

“நீ அங்க வெறும் ஆட்டம் மட்டுமா போட்ட? டேய்…” என மாரியப்பன் முறைப்பது போன்று சொன்னதும் தியாகு தலையை வெட்கப்படுவது போல கீழ்நோக்கி வைத்துக் கொண்டான்.

“அதுக்குலாம் ஒரு கலா ரசன வேணும்… எங்க தலைவரு மாரியப்பன் சொல்லிக் கொடுத்தது…”

சரவணன், “ஏது அதுக்குப் பேரு கலா ரசனயா? நீ பண்ண கொடுமையில அதுங்களோட போஸ் வந்து வெரட்டியடிச்சான… மறந்துட்டியா?”

தியாகு கண்களை மூடிக் கொண்டு பெருமிதமாகச் சிரித்தான். கடந்த வருடம் மாரியப்பன் தொழிற்சாலையின் ஆண்டிறுதி கொண்டாட்டத்திற்குப் பின்னர் இரவில் தாய்லாந்து எல்லைக்குத் தியாகுவையும் சரவணனையும் அழைத்துப் போய்விட்டான். இருவரிடமும் போர்டர் பாஸ் இல்லை என்பதை மறந்து குதூகலமாகிவிட்டார்கள்.

“போர்டர் பாஸ் இல்ல, பாஸ்போர்ட் இல்ல… நீங்களாம் ஆம்பளைங்களா?” என வெறுப்படைந்த மாரியப்பன் கேட்ட கேள்விகளை இன்னுமும் அவர்களால் மறக்க முடிந்ததில்லை. மாரியப்பனுக்கு ஆள் இருந்ததால் கள்ளத்தனமாக மோட்டாரில் நுழைந்துவிட்டார்கள். அடுத்த வாரமே தாய்லாந்து பார்டர் பாஸ்ஸைப் பத்து வெள்ளிக் கொடுத்துத் தியாகு எடுத்து வைத்துக் கொண்டான். அதைப் பதக்கம் போல தொழிற்சாலையில் எல்லோரிடமும் காட்டிக் கொண்டிருக்கவும் செய்தான்.

“ஓ! தம்பிக்கு ரெக்க மொளைச்சிருச்சு…” 

“ரெக்க மொளைச்சு வெளிநாட்டுக்கா போகும்… தாய்லாந்து, அடுத்து வியாட்நாம்தான்…” எனச் சகத் தொழிற்சாலை நண்பர்களிடம் காலரைத் தூக்கிவிட்டவாறு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டான்.

“அந்த நாசி ஆயாம் கடைக்கு மேல போய்த்தான் ஆகணும் பாங்…”

மலாக்காவிற்குக் கிளம்பிய நாளிலிருந்து தியாகு ஓயாமல் உச்சரிக்கும் மந்திரம் அது. பயணத்தைத் தொடங்கியதிலிருந்து அதைக் கேட்டுக் காரிலிருந்தவர்கள் வெறுத்துவிட்டார்கள்.

“தோ பாரு… உனக்காக அந்தக் கடைக்குப் போகல… எனக்குச் சாப்டணும்னு தோனுச்சி… அதான்…”

“தியாகு செல்லத்தக் கூட்டிட்டுப் போய் அந்தத் தாய்லாந்துகாரியோட சேர்த்துக் கல்யாணம் செஞ்சி வச்சிட்டுத்தான் நம்ம மலாக்காவ விட்டு வெளியாவறோம்… இந்தத் தருத்திரியம் பிடிச்சவன ஒழிச்சிக்கட்டிட்டு வந்துருவோம்…”

பாதி தெளிந்தும் மீதி போதையிலும் இருந்த சரவணன் பிதற்றிவிட்டுக் கையில் வைத்திருந்த மினரல் போத்தலைத் திறந்து தண்ணீரை ஒரு மிடறு குடித்தான். 

“ஓ! இவரு ஒன்னும் பண்ணல… போன தடவ பினாங்ல அந்தச் சியாம்காரிய காடில கூட்டிட்டு வந்து என்னென்ன கொடுமச் செஞ்ச… நீ பேசறீயா?”

தியாகு சொன்னதும் சரவணன் மெல்ல புன்னகைத்துவிட்டு மீசையை முறுக்கினான். மூவரும் வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்தவுடன் மாரியப்பனின் காரில் மலாக்காவை நோக்கிப் புறப்பட்டனர். எந்தத் திட்டமும் இல்லை. இரண்டு நாள்களாக மாரியப்பன் ‘பாமோசா நாசி ஆயாம்’ நினைவாக இருந்தான். எந்தத் தருணத்தில் இந்த ஆசை உதிர்த்ததென அவனால் சரியாகச் சொல்ல முடியவில்லை. சட்டென இரண்டாண்டுகளுக்கு முன்பு பெரியப்பா மகனின் திருமணத்திற்குப் போயிருந்தபோது ஜொன்க்கர் சாலையிலுள்ள இரவு மார்க்கேட்டில் சாப்பிட்ட நாசி ஆயாமும் அதன் பின்னர் விடுதியில் சந்தித்த வியாட்நாம் பெண்ணும் அவன் நாக்கிலும் மனத்திலும் நினைவுக் கொப்பளங்களாக உதித்து இம்சிக்கத் துவங்கின. எதைச் சாப்பிட்டாலும் அந்த ருசி கொப்பளங்கள் இடையூறாகத் துறுத்திக் கொண்டிருந்தன.

“பாங்… ஆயாம் இருக்கும்தானே?”

“எந்த ஆயாம கேக்கற நீ? டேய்… நான் என்ன மாமாவா உனக்கு? இருட்டடி கொடுத்துருவன்…”

மாரியப்பனின் நக்கலான வார்த்தைகள் அவர்களுக்குள் சிரிப்பலைகளை உண்டாக்கின. வெள்ளி இரவு தாமதமாகப் பயணித்ததால் கோலாலம்பூர் வரைதான் வர முடிந்தது. அன்றிரவு அங்கே செந்தூலில் தங்கும் விடுதி ஒன்றில் படுத்துக் கொண்டனர். செந்தூல் சாலையில் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருந்த சீன சாப்பாட்டுக் கடையில் சரவணன் நான்கு டைகர் பியர்களை வாங்கிக் கொண்டான். இரவெல்லாம் தூக்கம் வரும்வரை தியாகுவும் சரவணனும் குடித்துக் கொண்டிருந்தனர். மாரியப்பன் மறுநாள் கார் ஓட்ட வேண்டும் என்பதால் தன்னைத் தானே குடிப்பதிலிருந்து விலக்கிக் கொண்டான். அது அவனுக்குப் பெரிதும் அசௌகரிகத்தை உண்டாக்கியிருந்தாலும் பச்சைக் கச்சான்களை நொறுக்கிவிட்டு சார்சி பானத்தைக் குடித்துக் கொண்டான். அதுவும் கருப்பாக இருந்ததால் மனத்தைத் தேற்றியவாறு மீசையில் ஒட்டியிருந்த நுரைகளைத் துடைத்துக் கொண்டான். விடுதியின் சன்னலைத் திறந்துவிட்டுத் தூரத்தில் மசாஜ் செண்டர் தெரிகிறதா என நோட்டமிட்டான். விளக்கு அணைக்கப்பட்ட கால் பாதமொன்றின் உருவம் தூரத்தில் தெரிந்ததைக் கண்டுகொண்டான். ஆனால், அது திறக்கவில்லை என்றதும் சோர்ந்து போனான். எங்குச் சென்றாலும் அவனுக்கு மசாஜ் செண்டர் போய்விட வேண்டும். அதுவும் குடித்துவிட்டுப் போய் அங்குப் படுத்துக் கொண்டால் அவனுடைய இரவு ஆனந்தமாகக் கழியும். அன்று வெறுப்பில் படுத்து உறங்கிவிட்டான். மறுநாள் விழித்ததும் மாரியப்பனுக்குள் தகித்துக் கொண்டிருந்த ஆசைகள் விடவில்லை. நாக்கின் கொப்பளங்கள் அப்பொழுது சிறு கட்டிகளாகப் பரவியிருந்தன.

மூவரும் மதியத்திற்கு மேல் மலாக்காவை நோக்கி கிளம்பினர். பேசிக் கொண்டே வந்து சேர இரவாகியிருந்தது. மலாக்காவின் உள்ளே நுழைந்ததும் ஏற்படும் பரவச உணர்வை தியாகுவால் விளக்க முடிந்ததில்லை. போர்த்துக்கிசியர்களின் கோட்டை அது. போர்த்துகீசியர்களின் செட்டல்மெண்ட் சாலையின் கதைகள் ஏராளமானவை. பீயர் குடிக்க அழைத்துச் சென்று மறுநாள் எங்கோ ஒரு சாலையின் ஓரத்தில் பணமெல்லாம் காணாமல்போன கோலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவனின் கதை அங்குப் பிரபலம். அதைத் தியாகு மேலும் இட்டுக்கட்டி கதைக்குள் கதையை உருவாக்கி சொல்வான். தியாகு அவனுடைய தொழிற்சாலை சிநேகிதிகளிடம் சொல்லும் கதை ஏராளம். தெரியாவிட்டாலும் கேட்டதையும் புதிதாக உருவாக்கியதையும் பிணைத்து ஒரு கதையை உருவாக்கிவிடுவான். கேட்பவர்கள் புருவத்தை உயர்த்தும் அளவிற்கு அவன் கதைகள் இருக்கும். தொழிற்சாலையிலுள்ள இளம் பெண்களுக்கும் மூத்த பெண்களுக்கும் இவன்தான் பொழுதுபோக்கு. அவர்களும் இவன் சொல்லும் கதைகளைத் தேநீர் ஓய்வின்போது ஆர்வத்துடன் கேட்பார்கள். தியாகு தாய்லாந்து கதையையும் ஏதோ பலநாள் அங்கு வாழ்ந்தது போல சொல்லித் திரிவான். ஆனால் போனது என்னவோ மூன்று முறை மட்டும்தான். அதுவும் கடைசியாகப் போயிருந்தபோது அங்கு ஏற்பட்ட சச்சரவில் மறுநாள் காலையில் அங்கிருந்து மாரியப்பன் அழைத்து வந்துவிட்டான்.

“எங்க போய்கிட்டே இருக்கா? சாப்பாடுலாம் பார்க்க பார்க்க வாய் ஊறுது… பாங்ங் கொஞ்சம் கருண காட்டுங்க…”

ஜொன்க்கர் சாலை இரவு சந்தையின் கொந்தளிப்பின் உச்சியில் இருந்தது. உணவுகளும் மலிவுப் பொருள்களும் சீன வைத்திய மருந்துகளும் கைவினைப் பொருள்களும் எனச் சாலையோரங்கள் நிரம்பியிருந்தன. தியாகு அப்படிக் கேட்டதும் தனக்கும் பசிக்கின்ற உணர்வு மாரியப்பனுக்குள் மேலோங்கியது. சாப்பிட்டால் அது நாசி ஆயாம்தான் என அவன் பிடித்து வைத்திருந்த உறுதியைச் சற்றுத் தளர்த்தலாம் என நினைத்தான். குச்சிகள் செருகப்பட்ட ஹோட்டோக்குகளைக் கருகியிருந்த கம்பிகளுக்கு மேல் சீனன் ஒருவன் வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தான். கம்பிகளின் இடுக்கில் கோழி இறைச்சி வறுக்கப்பட்டதன் அடையாளமாய் அங்குமிங்கும் சிதறல்களாகக் கருகிய இறைச்சித் துண்டுகளின் சதைகள் கம்பிகளோடு ஒட்டிக் கொண்டிருந்தன. 

“இன்னும் ரொம்ப தூரமா?” என மலாய் மொழியில் அவளிடம் கேட்டான்.

எது சொன்னாலும் கேட்டாலும் அவள் முதலில் புன்னகைக்கிறாள். பின்னர்தான் பதில் சொல்கிறாள். அந்த இடைவெளி அற்புதமாகத் தோன்றியது. அந்தப் புன்முறுவலை நகரத்தில் அனைவரிடம் பார்த்துவிட முடியாது. அது அந்நியமான தோரணை கொண்டது. வெளியாள்களிடம் மட்டுமே அப்படிச் செய்ய முடியும் என்கிற வித்தையை அறிந்து வெளிப்படுத்தும் உத்தி. மாரியப்பனுக்கு அந்தப் போலியின் மீது விருப்பம் அதிகம். பணத்திற்காக அவர்கள் ஆடும் போலி நாடகத்தின் இரசிகன் அவன். அதன் மீது பித்துக் கொண்டவன். கூடுதலாக இன்னும் பணம் கொடுத்தால் அவர்கள் அன்பை அளவில்லாமல் வாரி இறைப்பார்கள். அதன் எல்லைவரை சென்று இரசித்துவிட்டு அதன் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் இரசனை கொண்டவன். 

“பாங்… போன தடவ கெடைச்ச மாதிரி ஒன்னு கெடைச்சிருச்சின்னு குதூகலமா இருக்கீங்க போல…”

தியாகு அப்படிச் சொன்னதும் மாரியப்பன் நாக்கை வெளியே நீட்டிக் கடித்துக் கண்களைப் பெரிதாக்கினான். அவன் அப்படிச் செய்வது கேலியாக இருந்தது. எப்படியும் கடையைக் காட்டியதும் அவள் பணம் கேட்பாள் எனத் தெரியும். அவர்கள் கொடுக்கப்போகும் பணத்திற்கான புன்னகை அது என்றும் மாரியப்பன் நினைத்தான். பிறகு அவளை அழைத்துக் கொண்டு விடுதிக்குப் போய்விடலாம் என்றும் மனத்தில் கணக்குப் போட்டுக் கொண்டான். அவள் முகத்தில் மூக்கு இருப்பதே தெரியவில்லை. தட்டையாக சிறு மேடு போல் தெரிந்தது. கண்கள் சீனர்களுடையதை ஒத்திருந்தன. இரு முனைகளிலும் கூர்மையாகப் போய் சுருங்கியிருந்தன. பார்க்கிறாளா அல்லது கண்களை மூடியிருக்கிறாளா என்பதைச் சட்டென அனுமானிக்க இயலவில்லை. சிரிக்கும்போது கண்கள் மேலும் சிறுத்துக் காணாமல் போய்விடுகின்றன. புருவத்திற்கும் கண்களுக்குமான பெரிய இடைவெளி அவளைக் கலைநயமிக்கவளாகக் காட்டியது.

“டுங்ன்னா என்ன அர்த்தம்னு தெரியுமா? அழகு… நான் அழகா இருக்கனா?”

எதிர்பார்த்தக் கேள்வி என்பதைப் போன்று மாரியப்பன் அசடு வழிந்தான். அவன் வெட்கப்படுவதை அவள் இரசித்தாள். அவளுக்கு மாரியப்பனின் முகமும் தோற்றமும் பிடித்திருந்தது. அவனை வாஞ்சையோடு மலை உச்சிக்கு அழைத்துச் செல்லும் பாதைகாட்டி போன்ற தோரணை அவளிடம் தெரிந்தது. கண்கள் பிரகாசத்துடன் மின்னின. இன்னும் சிறிது தூரத்தில் மலையின் உச்சியின் அடைந்ததும் அமைதி கொள்ளலாம் என்கிற பாதத்தரிசனம் அவளுடைய நடையில் இருந்தது.

“நீ செம்ம அழகு… போதுமா?” என மலாய்மொழியிலேயே நக்கலான தொனியில் பதில் சொன்னான். அவள் அப்பொழுதும் சிறு புன்னகையைப் பதிலாகக் கொடுத்துவிட்டுத் திரும்பி நடந்தாள்.

“ஆடு அதுவா வந்து சிக்கியிருக்கு…” எனச் சொல்லிவிட்டு மாரியப்பன் தியாகுவைப் பார்த்தான். தியாகுவின் கண்கள் அங்கிருந்த முடிவற்ற கடைகளுக்கு வெளியே போடப்பட்டிருந்த உணவுகளைத் தின்று கொண்டிருந்தன. பசியின் ஏக்கமாய் அவனுடைய கண்கள் கோரமாக விரிந்திருந்தன.

ஒரு கடையில் சிறிய அளவிலான தர்பூசணி பழங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. எல்லாமும் ஒரே அளவில் நேர்த்தியாக இருந்தன. அவற்றின் பச்சை மேனியில் மேலே தொங்கிக் கொண்டிருந்த நீண்ட வெள்ளை விளக்கின் ஒளிப் படர்ந்திருந்ததை சரவணன் ஏக்கத்துடன் இரசித்தான். அவனிடம் காசு இல்லை.  எப்படியும் மாரியப்பன் வாங்கிக் கொடுத்தால்தான் உண்டு என்பதால் கடைக்கு முன் நின்றுவிட்டான். கூட்டம் ஒருவரையொருவர் தள்ளியபடி இருந்தது. நின்றால் போதும் கூட்டம் அதுவாகவே தமக்குப் பிடித்த திசைக்குத் தள்ளிக் கொண்டு போய்விடும். அது எந்தத் திசையென நம்மால் கணிக்கவும் முடியாது. அப்படித்தான் பெரிய உடல்வாகு கொண்ட சீன நண்பர்கள் கூட்டம் ஆர்பாட்டத்துடன் நுழைய போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த சரவணனை வெகு எளிமையாகத் தள்ளிக் கொண்டு சென்றனர். அவன் அசைந்து தடுமாற்றத்துடன் அழகு சாதனப் பொருள்கள் விற்றுக் கொண்டிருந்த கடையருகே இருந்த கூட்டத்தினுள் மாட்டிக் கொண்டான். அங்கு அழகான ரிப்பன்களைப் பார்த்ததும் அவன் கண்கள் பூத்துக் கொண்டன. அவனுக்குள் நெளிவு மேலும் கூடியது.

“எங்கடா போய்ட்டான்? சரவணா! நாசமா போறவன்… நானே பசியில இருக்கன்…”

மாரியப்பன் கோபமானதும் அவன் கண்கள் சிவந்துவிடும். நகர்த்திக் கொண்டிருந்த கூட்டத்தை சரவணன் எதிர்த்தாக வேண்டும். வியாட்நாம் பெண்கள் இன்னும் சிலர் கூட்டமாகச் சிரித்துக் கொண்டே அவனைக் கடந்தனர். அவர்களை நெருக்கத்தில் பார்க்கும்போது அவனுக்குக் கூச்சமாக இருந்தது. வந்த கோபம் திடுமெனக் கரைந்து இலகுவானது.

“சயாங்! எங்க? வா போலாம்,” உரிமையுடன் டுங், மாரியப்பனின் தோளில் கை வைத்தாள். அவளுடைய தொடுதல் அவனைக் குறுகச் செய்தது. அவள் மிகவும் எளிமையாக அவனைக் கையாண்டாள். வழி கேட்பவர்களுக்கு இவ்வளவு கரிசனம் காட்ட வேண்டியதில்லை என மாரியப்பன் நினைத்தான். இத்தனைக்கும் மாரியப்பனைவிட அவள் இளமையானவளாகத் தெரிந்தாள். அந்த முரணை அவன் கூடுதலாக இரசித்தான்.

“டேய், கொஞ்ச நேரத்துல என்னய தள்ளிட்டுப் போயிருப்பாணுங்க போல… எல்லா பெரிய சைஸ்ல இருக்கானுங்க…” சரவணன் திமிறியவாறு மீண்டும் மாரியப்பன் நின்றிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் கண்கள் பதற்றத்தில் இருந்தன. தொண்டையைச் செருமிக் கொண்டான். சாலையெங்கும் பொங்கி வந்த நெருப்பின் புகை கண்களில் நசநசத்தது.

அவள் மூவரையும் கண்கொட்டாமல் பார்த்தாள். கோவில் சாலையும் பொற்கொல்லர் சாலையும் இணைந்து பிரியும் இடத்திற்கு நடுவில்தான் ஜொன்க்கர் சாலை தென்படும். வோட்சன்ஸ் கடைக்கு வந்து சேரும் அந்த நடுபாதையிலிருந்து ஜொன்க்கர் சாலை இரண்டாகப் பிரிந்து ஏறக்குறைய நாநூறு மீட்டருக்கு இரண்டு முனைகளை நோக்கி விரியும். அதன் தொங்கலில் இரு பெரிய தூண்கள் ஜொன்க்கர் நடைக்குள் வரும்படி அழைப்பு விடுத்தப்படி ஓங்கி உயர்ந்து தெரியும். அதன் மீது இரு முனைகளின் கூர்மையும் தெரிய பச்சைப் படகு விஸ்த்தாரமாக அமர்ந்திருக்கும்.

“நீங்க நாசி ஆயாம் சாப்பிடும் முன் என்னோட கடையில ஸ்பிரிங் ரோல் சாப்பிடலாமே? என் கடை பக்கத்துலத்தான்… எங்களோட ஸ்பெஷல் அது…”

அவள் சாமர்த்தியமானவள். மாரிமுத்து கேட்க நினைத்து மனத்திற்குள் திட்டமிட்டிருந்த வார்த்தைகளை அவளாகவே சொல்கிறாள். அவள் கண்களைப் பார்த்துக் கொண்டு உடனே சம்மதம் சொல்ல முடியாமல் பாவனை செய்தான். இரவு அவளுடைய கண்களாக மாறி கெஞ்சியது. ஆசையோடு அழைக்கும் தோரணையில் மஞ்சளொளியில் பிரகாசித்தன.

“நீ தை லோங் ஆளு இல்லயா?” மாரிமுத்து சந்தேகத்துடன் கேட்டான்.

“அது என்னோட இன்னொரு பாஸ்… இந்தக் கடையில பார்ட் டைமா மசாஜ் பண்றன்…”

மசாஜ் செண்டர் என்று சொன்னதும் மாரியப்பன் நிறைவானது போல உணர்ந்தான். உடல், மனம் ஆகியவற்றின் மொத்த வலிகளையும் துரத்திவிடலாம் என நினைத்தான்.

“ஏதாவது ஒன்னு சாப்ட்டுட்டுப் போவோம் செல்லம்… வியாட்நாம் சாப்பாட்ட உள்ளுக்குத் தள்ளுவோம்…”

சரவணின் போதை இன்னும் இறங்கவில்லை. மாரியப்பனைத் தாண்டிச் சென்று அவள் முன் ஆஜரானான். அவள் சரவணனின் தாடையில் அவளுடைய சின்னஞ்சிறு விரல்களைக் குவித்து வைத்துக் கொஞ்சுவதைப் போன்று செய்தாள். சாத்தே கடையிலிருந்து குபுகுபுவெனப் புறப்பட்ட புகை அவளை ஒரு தேவதையாகக் காட்டியது. சரவணன் அவளிடம் அப்படியே சரணடைந்துவிடலாம் என்பது போல் சொல்லிக்கொள்ளாமல் பின்னே நடக்கத் துவங்கினான். முதலில் அவள் சொன்ன ஸ்ப்ரிங் ரோல் சாப்பிட்டுவிட்டு அடுத்த வேட்டையை நாசி ஆயாம் பக்கம் திருப்பலாம் என முடிவெடுத்தனர்.

ஜொன்க்கர் சாலை ஓரிடத்தில் வந்ததும் இன்னும் குறுகலாகி கொய் தியோ கடைகளைத் தாண்டி மேலும் சிறுத்துச் சென்றது. அவள் அதற்குள் நுழைந்து ஆர்வத்துடன் நடந்தாள். இடையிடையே சமைத்த புகை மூட்டத்திற்கு நடுவில் தெரிந்த முகங்கள் அவளைப் பார்த்துப் புன்னகைத்தன. அந்த இடத்திற்கே ராணியைப் போல கம்பீரம் குறையாமல் நிமிர்ந்த நடையில் போய்க் கொண்டிருந்தாள். மாரியப்பன் மெல்ல பசியை மறந்தான். சட்டெனக் கையில் வகை வகையான மலாக்கா கீட்ச்சன்களைச் சுமந்து கொண்ட மெலிந்த தேகம் கொண்ட ஒரு பையன் வழிமறித்தான். ஆ ஃமோசா கோட்டையைக் காட்டும் கீச்சன்கள் பல வண்ணத்தில் இருந்தன. வாங்கும்படி கெஞ்சினான். அவன் முகம் வியர்த்துப் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் புகைந்திருந்த நெருப்பின் அனல் அவனுடைய கண்களில் மீந்திருந்தது.

“இப்ப இந்தக் கீச்சந்தான் முக்கியமா… தம்பி டேய் ஓரமா போடா…”

சரவணன் அவனை ஓரமாகத் தள்ளினான். அவன் கூட்டத்தில் கலந்து காணாமல்போனான். முன்னே சென்று கொண்டிருந்த அவளை விட்டுவிடுவோம் என்ற பதற்றத்தில் அந்தப் பையனின் கடைசி பார்வையைக்கூட மாரியப்பன் கவனிக்கவில்லை. மழை பெய்து விட்ட இடங்களில் தண்ணீர் சிறுசிறு தேக்கங்களாகத் தெரிந்தன. அதற்குள்ளும் மஞ்சள் ஒளி சிறுகுழந்தையைப் போன்று பதுங்கியிருந்தது. சடக்கென்று ஒரு கடையின் முன்னே போய் நின்றுவிட்டு அவர்களைத் திரும்பி பார்த்தாள்.

“என்ன நடை இது?” எனச் செல்லமாகக் கடிந்து கொண்டாள். தூரத்து மஞ்சள் ஒளிக்குள் அவளுடைய பிரகாசம் குறைந்திருந்தது. மெல்ல அவசரப்படுத்தும் தொனிக்கு மாறியிருந்தாள். அவளுடைய கால்கள் எங்கேயோ செல்லப் பரபரத்தன. மூவரும் அசைந்து வந்து அவளிடம் சேர்ந்தனர். அங்கிருந்து வலது பக்கம் திரும்பிய பாதையில் சிறு மேடு தெரிந்தது. அதைத் தாண்டி இறங்கியதும் வெளியே நாற்காலியில் வயதான சீனர் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. அவள், அவர்தான் கடையின் முதலாளி என்று கிசுகிசுத்தாள். ஜொன்க்கர் சாலையிலிருந்து சற்றே விலகி அமைதியான ஓர் இடத்தை அடைந்திருந்தார்கள். அந்தக் கடைக்குப் பக்கங்களில் வேறெந்த கடைகளும் இல்லை. எல்லாம் கைவிடப்பட்ட கடைப்பகுதிகள் என்பதை அவர்கள் சரியாகக் கவனிக்கவில்லை. மூவரும் அவரிடம் சலாம் வைப்பது போன்று செய்துவிட்டு அவளைப் பின்தொடர்ந்து கடைக்குள் நுழைந்தனர். காதுக்குள் இன்னுமும் ஜொன்க்கர் சாலையின் பரபரப்பின் அலை ஓயாமல் கேட்டு மெல்ல சிறுத்துக் கொண்டிருந்தது. மாரியப்பன் இரைச்சலை உதறும் வகையில் காதை ஆள்காட்டி விரலால் குடைந்தான்.

கடைக்குள் சென்றதும் வெளியே சாலையைப் பார்க்க முடியவில்லை. வியாட்நாமிய எழுத்துகள் கொண்ட அடுக்கடுக்காகக் கோர்க்கப்பட்ட பலகை கட்டைகளுக்கு அப்பால் மறைந்திருந்தது. வாசலில் இருந்த மேசையில் சிறு சிவப்புநிற மேசை விளக்கு நிமிர்ந்து சிற்றொளியைப் பாப்பிக் கொண்டிருந்தது. அவ்வளவாக வெளிச்சமில்லாத கடை. ஆள்கள் யாரும் இல்லை. ஆறு மசாஜ் சாய்வு நாற்காலிகள் கால்களை மசாஜ் செய்பவர்களுக்கெனப் போடப்பட்டிருந்தன. 

“நான் ஸ்பிரிங் ரோல் செஞ்சிட்டு வர்றன்… உக்காருங்க…” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

அவள் பார்வையில் அத்தனை கரிசனமும் அன்பும் பெருகியிருந்ததை மாரியப்பன் மட்டும் உணர்ந்திருந்தான். சரவணன் போதை தெளிந்து அங்கிருந்த கால் மசாஜ் செய்யும் நாற்காலியில் கால்களைப் பரப்பிக் கொண்டு அமர்ந்து விட்டான். தியாகு சுவரில் இருந்த பெண்ணின் ஓவியத்தைப் பார்த்தான். அவள் ஓர் ஆழ்ந்த நடனத்திற்குள் இருந்தாள். வலது கையை மேலே உயர்த்தியும் இடது கையைத் திருப்பி பின்னே பார்த்தபடியும் வைத்திருந்தாள். கண்கள் சாந்தம் கொண்டிருக்க அவளது ஆடையின் கைப்பகுதியிலுள்ள நுனிப்பகுதியில் இருந்த நீண்ட இரு வண்ணத் துணிகள் பாம்பைப் போன்று சீறி வளைந்து அந்தரத்தில் அவளோடு நடனமாடிக் கொண்டிருக்கும் காட்சி அது. தியாகு அதனுள் ஆழ்ந்து சென்று மௌனத்திற்குள்ளானான்.

“அவங்க லேடி ட்ரியூ… எங்களோட வீரப் பெண்மணி…”

டுங்கின் கண்கள் விரிந்தன. சட்டென்று பெருமை கொண்டவள் போல நெஞ்சை நிமிர்த்தி தலையை வலதுபக்கமாகச் சாய்த்தாள்.

“உனக்கு வரலாறுலாம் தெரியுது. படிச்சிருக்கியா?”

மாரியப்பன் கேட்ட கேள்வி அவளை ஒன்றும் செய்யவில்லை. நிதானமாக நடந்து வந்து அவன் முன்னே நின்று கொண்டாள். அவன் நெற்றியில் கை வைத்துப் பின்னர் சிறு புன்னகை கொண்டாள். 

“ரொம்ப வருசத்துக்கு முன்னால வாழ்ந்த ச்சியெளசோவின் அரசி அவுங்க… யானை மேல ஏறி வூ பேரரசுக்கு எதிரா போரிட்டவங்க… கிளர்ச்சியாளர் தெரியுமா?” என்று சொல்லிக் கொண்டே கையில் வைத்திருந்த வெள்ளித் தட்டை அவர்கள் முன்னிருந்த மேசையில் வைத்தாள். அதன் பளபளப்பு மெல்லிய இருளில் பளிச்சென்று கண்களைக் கூசியது.

அவளுடைய கண்கள் மிளிர்ந்தன. சற்றும் சோர்வில்லாத கண்கள். சண்டை மீன்கள் போல் விறைத்திருந்தன. பூரிப்புடன் அவர்களை உபசரித்தாள். தட்டில் இருந்த ஸ்பிரிங் ரோலை ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிடத் துவங்கினார்கள். வெண்சோற்றுத் தாளில் சுருட்டப்பட்ட ஸ்ப்ரிங் ரோலின் உள்ளே பெரிய இரால் பளீரென்று தெரிந்தது. பசியில் இருந்தவர்களுக்கு அடக்கம் கைக்கொடுக்கவில்லை. அத்தனையையும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஓய்ந்தனர். தியாகுவும் மாரியப்பனும் சுவரில் இருந்த லேடி ட்ரியூவின் ஓவியத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“இது ஓவியந்தானே? அவுங்க ஆடிகிட்டு இருக்கற மாதிரி இருக்கு…”

மாரியப்பன்வைப் பார்த்து அவள் புன்னகைத்தாள். அவள் சிரிப்பும் நடனத்தின் இறுதி காட்சியைப் போன்று அசைந்து விரிந்தது. அவள் மீண்டும் சிரித்தாள். அவர்களை அமர வைத்து அதனை நெருக்கத்தில் அமர்ந்து இடைவிடாமல் புன்னகையால் விருந்தளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் இப்பொழுது ஒரு நாகத்தின் கண்களைப் போன்று பளபளத்தன. அதன் நீக்கமற்ற ஈரம் ததும்பி வந்து கண்களுக்குள் அலம்பிக் கொண்டிருந்தது.

“உன்ன எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கு…”

அவள் திடுமெனக் கண்களை மேலே உயர்த்தி சிந்திப்பது போல நாடகப் பாவனையைக் காட்டினாள். அது சிரிப்பாக இருந்தாலும் மாரியப்பன் உதடுகளை இறுகப் பிடித்துக் கொண்டான்.

“என்ன ஞாபகம் இல்லயா? என் கூட்டாளியெ போன தடவ நீங்க கூட்டிட்டுப் போகும்போது நான் அங்கத்தான் நாக்காலில உக்காந்துருந்தன். அது நான் இங்க வந்து புதுசு…”

ஜொன்க்கர் சாலை எங்கோ தூரத்தில் சன்னமாகச் சப்தமிட்டு இவர்களை அழைத்துக் கொண்டிருந்ததை அவர்கள் பொருட்படுத்தாமல் டுங்கின் சொன்னவற்றுக்குள் ஆழ்ந்து போய்விட்டனர். சரவணன் அப்படியே உறங்கிவிட்டான்.

“எது? அந்த வியட்நாம்காரிச்சா?”

அவள் ஆமாம் என்பது போல் சலனமில்லாமல் தலையாட்டினாள். மாரியப்பன் சற்றே நிலை தடுமாறினான். பிறகு, திமிர் அவனை மீண்டும் கௌவிக் கொள்ள நிமிர்ந்து அமர்ந்தான்.

“ஓ! அவளா? பொழைக்கத் தெரியாதவ… சொன்ன மாதிரி செஞ்சிருந்தா அன்னிக்கு அவ மேல கைய வச்சிருக்க மாட்டன்…”

இம்முறையும் டுங்கின் பார்வை மாறவில்லை. ஒருவேளை அவள் ஆவேசம் கொண்டாள் வியாபாரம் பாழாகிவிடும். கவனத்துடன் புன்னகையை மீண்டும் உதட்டினுள் செய்து கொண்டாள்.

“ஆமா… அவளுக்கு அதுலாம் பிடிக்காது… நீங்க கடுமையா நடந்துகிட்டிங்க… அதனால இருக்கலாம்…”

சுவரிலுள்ள லேடி ட்ரியூவின் ஓவியம் அவர்களின் கண்களில் நடனமாட ஓர் ஆழ்ந்த தியானத்திற்குள் நுழைவது போன்று உணர்ந்தார்கள். டுங்கின் தோழியைக் கடந்தமுறை மாரியப்பன் முதுகிலும் மார்பிலும் உதைத்துப் படிகட்டில் தள்ளிவிட்டான். அவள் மீது காரி உமிழ்ந்து குடித்துக் காலியான பியர் போத்தலைப் போட்டு உடைத்தான். தை லோங் வந்துதான் சமாதானம் செய்து வைத்தான். கூடுதலாக இன்னொரு பியர் போத்தலை வாங்கிக் கொடுத்து மாரியப்பனை சாந்தப்படுத்தினான். வலி தாள முடியாமல் அவள் படிகட்டின் ஓரத்திலேயே வயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள். தை லோங் படியேறும்போது அவள்தான் வம்புக்குக் காரணம் என்பதைப் போல அவள் வலது காலை எட்டி உதைத்துவிட்டுத்தான் மேலேறினான். 

போதையில் இருந்தாலும் தை லோங் சொன்ன சட்டச் சிக்கல்களைக் கேட்டதும் சில நிமிடங்களில் மாரியப்பன் தெளிவானான். அவளுக்கு நஷ்ட ஈடாக நாநூறு வெள்ளியைக் கொடுத்துவிட்டு இரவோடு இரவாக அங்கிருந்து கிளம்பியும் விட்டான். அவள் மயங்கி விழுந்தவள் ஒரு வாரம் ஆகியும் குணமடையவில்லை. தை லோங் வேறு வழியில்லாமல் அவளை மீண்டும் தாய்லாந்திற்கு அனுப்பிவிட்டான். அங்குச் சென்றவள் கடன் தொல்லையால் சொந்த கணவனாலே கொலை செய்யப்பட்டுவிட்டாள் என்ற செய்தி டுங்கைப் பெரிதும் தாக்கிவிட்டது. டுங் பல நாள் இரவில் அவளோடு உணவுக்காக ஜொன்க்கர் சாலையில் சுற்றியலைந்த நினைவுகளோடு வாழ்கிறாள்.

“அவளுக்கு அப்புறம் என்ன ஆச்சி? இங்கத்தான் இருக்காளா?”

பேசும்போதே மாரியப்பனுக்குத் தலை சுற்றல் அதிகமாகியது.

“இல்ல… அவ ஊருக்குப் போய்ட்டா…” என்பதோடு டுங் நிறுத்திக் கொண்டாள். அதற்குமேல் அதைப் பற்றி பேச அவளுக்கு மனம் இடம் தரவில்லை. சொற்களும் சுருங்கி அவளுக்குள் அமிழ்ந்து கொண்டன. முகத்தில் மிகச் சிறியதாக நீந்திக் கொண்டிருக்கும் அவளுடைய கண்கள் உயிர்ப்புக் குறையாமல் மேலெழும்பி வந்து ஆசைகளைத் தூண்டிக் கொண்டிருந்தன.

அவள் சொல்லி முடிக்கும்போது மாரியப்பனும் தியாகுவும் மெல்ல உறக்க நிலைக்குச் செல்லத் துவங்கினார்கள். கைகள் பலமிழந்து தொங்கின. காட்சிகள் யாவும் சுழலத் துவங்கின.

“என்ன வெளில கூட்டிட்டுப் போய் விடு…” என்பது போல் மாரியப்பன் முனகினான். அவள் அவனைச் சாந்தப்படுத்தி நாற்காலியில் அமர வைத்தாள். வெளியில் அமர்ந்திருந்த கிழவர் எழுந்து வந்து கடையின் முன்கதவைச் சாத்திவிட்டு மீண்டும் போய் அதே நாற்காலியில் அமர்ந்து கொண்டார். எங்கோ கேட்ட ஜொன்க்கர் சாலையில் மிச்சப் பரபரப்பின் ஒலிகூட இப்பொழுது கதவை அடைத்ததும் முழுவதுமாய் அடங்கிப் போனது. மூவரும் முழு மயக்க நிலைக்குள் போய்க் கொண்டிருந்தனர். இப்பொழுது கனவுக்குள் அவர்கள் நடனமாடிக் கொண்டிருப்பர். கையில் ஒரு மது கோப்பையுடன் அவர்களுக்குப் பிடித்த பெண்களுக்கு மத்தியில் தாய்லாந்து நிலத்திலோ அல்லது வியாட்நாம் சாலையோர மதுபான கடையிலோ அவர்களின் முகத்தில் சிவப்பொளி படர்ந்து ஆக்கிரமிக்க, அவர்கள் இன்பமான நடனத்திற்குள் ஆழ்ந்து கொண்டிருக்கக்கூடும். டுங் அவர்களின் உறக்கத்தைக் கண்டு சிரித்தாள். 

கதவை மெல்ல திறந்து அந்தச் சீனக் கிழவர் மீண்டும் அவளைப் பார்த்தார். அந்தப் பார்வைக்குள் கேள்விகள் இருந்தன. அவர் புருவங்களை உயர்த்தி மேலும் தம் கேள்வியைக் கூர்மையாக்கினார். வேறு என்ன செய்வது என்பதுபோல் டுங்கின் பார்வை அமிழுந்து கரைந்தது.

“இந்த மிருகங்கள் சற்று நேரம் உறங்கட்டும்,” எனச் சொல்லிவிட்டு அவர்களின் கால்களை மசாஜ் செய்யத் துவங்கினாள். அவள் முதுகில் படுத்திருந்த நீல டிராகன் மெல்ல ஊர்ந்து வெளியேறியது.

  • கே.பாலமுருகன்

  • நாசி ஆயாம் – சீனர்களின் கோழிச் சோறு
  • ஜொன்க்கர் சாலை – மலாக்காவிலுள்ள Jonkers Street
  • ஆயாம் – கோழி
  • சயாங் – அன்பே

எழுதியவர்

கே.பாலமுருகன்
மலேசியாவிலுள்ள கடாரம்(கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன்; 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். பன்முக நவீனப் படைப்பாளியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கவிதைகள் என இதுவரை பதினேழு நூல்கள் இயற்றியுள்ளார்.

சிறார் இலக்கியத்திலும் பங்களித்துவரும் பாலமுருகன் இதுவரை சிறார்களுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதைகள், நான்கு சிறார் நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் குறும்படங்கள், சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூல்கள் படைத்திருக்கிறார். இவருடைய ‘பேபிக் குட்டி’ என்கிற சிறுகதை தமிழ்நாட்டு அரசின் மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத்தமிழ்’ என்கிற அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் பாடமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கலை, இலக்கியத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவருடைய முதல் கவிதை தொகுப்பு ' கடவுள் அலையும் நகரம்' சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பத்தால் 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
Subscribe
Notify of
guest

5 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அன்பரசி
அன்பரசி
6 months ago

புதிய களமாக இருக்கிறது. கதையை நகர்த்திச் சென்ற விதமும் ஜொன்க்கர் சாலையை சித்தரிப்புகளால் விரிவாக்கி காட்டிய விதமும் அருமை. எழுத்தாளருக்கு வாழ்த்துகள்

ந.பச்சைபாலன்
ந.பச்சைபாலன்
6 months ago

ஜோன்க்கர் சாலை நெரிசலில் மாரியப்பன், தியாகு, சரவணன் ஆகியோரைப் பியான் அழைத்துச் செல்ல நாமும் அவர்கள் பின்னே செல்கிறோம். இரவு வேளையில் சாலையின் மஞ்சள் வெளிச்சம் நம் மீதும் கவிழ்கிறது. நாசி ஆயாம் கடைக்குப் போன பிறகு என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆவலைக் கதை தூண்டி விடுகிறது. இரை தேடிச் சென்றவர்கள் இரையாகும் நிலை எதிர்பாராதது. பியான் முதுகில் இருந்து வெளியேறும் டிராகனும் ஓவியத்தில் இருக்கும் புரட்சிப் பெண்ணும் கதையின் முடிவை நமக்கு உணர்த்தி விடுகின்றன. இயல்பான உரையாடலும் சுவையான கதை நகர்த்தலும் காட்சி விவரணையும் நம்மைக் கதையோடு ஒன்றச் செய்கின்றன. கே.பாலமுருகனின் படைப்பாளுமையை இக்கதையும் உறுதிசெய்கிறது. வாழ்த்துகள்.

பிருத்விராஜூ
பிருத்விராஜூ
6 months ago

வணக்கம் ஐயா. நமது மலேசியாவின் வரலாற்று நகரமாகிய மலாக்காவில் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜொங்கர் தெருவிற்குள் நடக்கின்ற இந்த கால்நடைப் பயணம் நம்மில் பலருக்கும் பிடித்த ஒன்றாகவே இருந்திருக்கும். ஹோட் டோக்குகள், சாத்தே குச்சிகளை நெருப்பில் வாட்டும்போது புகையின் மணம் நாசிக்குள் ஏறும்போது ஏற்படும் மலர்ச்சி இக்கதையினூடே இழையோடுகிறது. அப்பயணத்தில் பியான் மாரியப்பனையும் அவனது நண்பர்களையும் மட்டுமல்லாது, நம்மையும் அந்த Springroll கடைக்கு அழைத்து வருகிறார். அதற்குப்பிறகு நடக்கவிருக்கும் சம்பவத்தை நோக்கியே கதை முழுவதும் நகர்கிறது. கே.பாலமுருகன் ஐயாவின் வருணனைகளுக்கு என்றும் நான் நல்ல இரசிகன். ஜொங்கர் சாலையை மையமாக வைத்து எழுதப்பட்ட இக்கதையில் வியட்நாமின் தொன்மக் குறியீடுகள் (நீல டிராகன்) எல்லாம் கதையில் செயற்கையாக அல்லாமல் நுட்பமாய்க் கையாளப்பட்டுள்ளது. இக்கதையில் கீச்செயின் விற்கவரும் சிறுவனது பார்வையை அவர்கள் கவனிக்கத் தவறியது அங்கு நடக்கப்போகும் குரூரத்திற்கான மிக மெல்லிய முன்னெச்சரிக்கையாக நான் பார்த்தேன். அந்தப் பரபரப்பு மெல்ல சூடேறுகிற தருணத்தில் இம்மூவரும் என்னென்ன செய்தார்கள் என்பதைப் பீர் பாட்டிலை உடைப்பது போன்று உடைத்துக் காட்டிவிட்டார் எழுத்தாளர். அப்போது வாசகனுக்கு, இவர்கள் தவறிழைத்தவர்கள் என்று மட்டுமல்லாது தண்டனைக்குரியவர்கள்தான் என்ற எண்ணமும் வந்துவிடுகிறது. இனி ஜொங்கர் தெருவிலிருக்கும் மசாஜ் செண்டர்களையும் ஸ்ப்ரிங்க்ரோல் கடைகளையும் வியட்நாமியப் பெண்களையும் பார்த்தால் இக்கதை நிச்சயம் நினைவுக்கு வரும் அளவிற்குப் புனைந்துள்ளார். வாழ்த்துகள் ஐயா.. 

காந்தி முருகன்
காந்தி முருகன்
6 months ago

” பியான் ” சிறுகதையை வாசித்தப் போது மனம் கலங்கிப் போனது. பெண்கள் மீது கட்டவிழ்த்தப்படும் வன்முறையும், ஒடுக்குமுறையும் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ஓயாது என்கிற கேள்வியை இக்கதை முன்னிறுத்தியது. ஆண் வர்க்கத்தால் கக்கப்படும் வன்மம் இன்னும் பெண்கள் மீது உமிழ் நீராகவே தெறிக்கிறது. அதைத் துடைத்து விட்டு நகரும் பெண்களின் அவலம் இன்னுமும் தொடர்கிறது.

மனங்களின் ஓலங்களை ஆர்ப்பரிக்கும் கடலைப் போல அல்லாமல் தேங்கியிருக்கும் குட்டையைப் போல கதைக்களம் சிறப்பாக நகர்கிறது. டுங் என்கிற பியானின் புன்னகையை உணர்ந்தவாரே களத்தில் பயணிக்க முடிந்தது. ஒவ்வொரு பெண்ணின் புன்னகைக்குப் பின்னால் மறைந்து கிடக்கும் ஓராயிரம் வலிகள் ஒளிந்து இன்னுமும் பிம்பங்களற்ற ஒளியாக வாழ்கின்றனர். பியானிற்குள் வலிகள் மட்டுமல்ல, பழிவாங்கும் படலமும் விரிந்து கிடக்கிறது.
எல்லா மனங்களும் வன்மத்தை விரும்புவதில்லைதாம். அவரவர் பயணத்தில் தன்னை மகிழ்வித்துக் கொள்ள எல்லாவற்றையும் சரியென நிகழ்த்தி விட்டு , நிதானமாக யோசிக்க முன்வருவதில்லை.எது சரி எது தவறு என்பதை விட எது தனக்கு வேண்டும் அதை எப்படியாவது பெற வேண்டும் எனும் கொள்கையே முன்னிறுத்திக் கொள்கிறது.
மாரியப்பன் கதாபாத்திரம் தன்னைத் தானே சீரழித்துக் கொள்ளும் கதாபாத்திரமாக கதையில் நடமாடினாலும் அது அவனது வாழ்க்கை, தனக்கு விருப்பமானவற்றைப் பெற்றுக் கொள்கிறான் என்று கண்டும் காணாமல் கூட போய்விடத் தோன்றுகிறது. ஆனால், அவனது உல்லாசத்தில் பெண்கள் ஏன் மீண்டும் மீண்டும் கைதாகிப் போவது வருத்தமளிக்கிறது. அவனது கொடூரத்தின் உச்சம் கதையில் வெளிப்படும் தருணம் மனம் இறுகிப் போகிறது. பெண்கள் மட்டும்தான் பாலியல் தொழிலாளிகள் அல்ல. ஆண்களும் கூட. சபலத்தின் அடிப்படையில் மாரியப்பனும் பாலியல் தொழிலாளி. எல்லா பெண்களும் விருப்பப்பட்டுதான் இத்தொழிலைச் செய்வதில்லை. அவரவர் வாழ்க்கை சூழல்களும் பெருங்காரணம். இச்சிறுதையில் மூன்று விதமான ஆண் கதாபாத்திரங்கள் வெளிப்படுகிறது. தை லோங்கின் வியாபாரத்திற்குப் பயன்பட்ட வியாட்நாம் பெண். வாடிக்கையாளரைக் கஷ்டப்படுத்தியதாக எட்டி உதைக்கப்படுகிறாள். விருப்பமற்ற ஒரு செயலில் அவளை ஈடுபடுத்த முயலும் ஆண் வர்கத்தின் கொடூரத்தின் உச்சமாக மாரியப்பன். அவளை எட்டி உதைப்பதும், பீர் போத்தல்களால் துன்புறுத்துவதும் பெண்களை பலவீனமிக்கவர்களாகவும், அடிப்பணிய கூடியவர்களாகவும் இன்னும் நிலைநிறுத்தப்படுகிறது. அதே வியாட்நாம் பெண் சொந்த கணவனால் கொலை செய்யப்படுவதும் இன்னும் இழிவாகிறது. பியான் தாய்லாந்து நாட்டுக்காரியாக இருந்தாலும் தன்னுடன் பயணித்த ஒரு பெண்ணின் அவலத்தைக் கண்டு அவளுக்குள் பழிவாக்கும் படலம் விரிகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களுக்குப் பெண்களே போராட வேண்டியிருக்கிறது. அதற்கான பொறுமையுடன் காத்திருக்கிறாள். பெயருக்கு ஏற்றாற்போல் இரகசியம் சூழ்ந்து வாழ்கிறாள். அவளுக்குள் ஒளிந்திருக்கும் டிராகன் நிச்சயம் வெளிப்படும். வியாட்நாம் பெண்ணின் மரணத்திற்கு நீதி நிலைநிறுத்தப்படும்.

இக்கதையில் மலாக்கா ஜோன்கர் சாலை சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடை வீதிகளின் விவரிப்பு, கண்ட காட்சிகள் நேரில் உணர்ந்ததைப் போலவே ஓர் உணர்வைத் தந்தது. கம்பியில் சொருகப்படும் கோழி இறைச்சியின் கருத்துப் போன பகுதியைக் கூட கதாசியர் உள்வாங்கி எழுதியுள்ளார். பாராட்டுகள்.

கங்கா
கங்கா
6 months ago

மலேசிய மண் மணங்கமழும் சிறுகதை. வாழ்வாதரத்தைத் தேடி நாடு விட்டு நாடு வரும் பெண்கள் அடையும் இன்னல்கள். எளியாரை வாட்டும் வலியார் என்றேனும் அதற்கான அறுவடையைச் செய்வர் என்பதை முடிவு உறுதி செய்கிறது. கீழ்மை குணம் படைத்த மாரியப்பன் குழுவினர் நிரந்தரமாக உறங்கினாலும் நல்லதுதானே.

You cannot copy content of this page
5
0
Would love your thoughts, please comment.x
()
x