1 March 2024

ஒன்று: பிரம்மாண்டத்தின் பிடி சாம்பல்

‘கொலோசியம்’ செல்லும் அந்தப் பேருந்தைத் தவற விட்ட சோகத்தில் இருந்தேன். சிறிது நேரம் கழித்து அங்கே வந்து நின்ற அடுத்த பேருந்தின் ஓட்டுநரிடம், “கொலோசியம்?”, எனக் கேட்டேன். அவர் இல்லை எனத் தலையசைத்து “ஆனால் வழியில் இறங்கிக் கொண்டு நடந்து செல்லலாம்” என்ற அர்த்தத்தில் தன் இத்தாலிய ஆங்கிலத்தில் சொன்னார். எனக்கு இனி மதிய உணவு உண்ணாமல் எங்கும் நடக்கத் தெம்பில்லை. அவரிடம் என் அடுத்த கேள்வி “‘ரோமா டெர்மினி’?”. அங்கே போனால் அது எனக்குப் பழகிய இடம், அங்கிருந்து விசாரித்துக் கொண்டு எங்கும் போய்விடலாம் என்று ஒரு நம்பிக்கை. தவிர ரோமா டெர்மினியில் இருந்து நேராக கொலோசியம் செல்லலாம் என்பதை ‘கூகிள்’ வரைபட வழிகாட்டியில் ஏற்கனவே பார்த்திருந்தது நினைவிலிருந்தது.

ஓட்டுநர் ஆமோதித்துத் தலையசைத்து உள்ளே வரச் சொன்னார். பேருந்து நிறுத்தத்திலிருந்த தானியங்கி பயணச் சீட்டு எந்திரம் மூலம் ஏற்கனவே ஒரு  தொகைக்குப் பயணச் சீட்டு எடுத்து வைத்திருந்ததால் அதை ஓட்டுநரிடம் நீட்டினேன். அவர் ‘சரி’ என்ற ரீதியில் தலையசைத்ததும் போய் இருக்கையில் அமர்ந்தபோது இடுப்பும் கால்களும் அப்படி வலித்தன.

பேருந்து செல்லும் வழியெல்லாம் ‘ரோம்’ என்னை ‘இறங்கி வா’, என அழைத்துக் கொண்டே இருந்தது போல இருந்தது. பேருந்து நின்ற இடங்களுள் ஒரு இடத்தில் அந்த மாபெரும் அழகிய கட்டிடத்தைக் கண்டேன். ஏதோ ‘நினைவுச் சின்னம்’ போல இருந்தது.

ரோமா டெர்மினி சென்றதும் அங்கே ஒரு அதிகாரியிடம் விசாரித்து, அங்கிருந்த எந்திரத்திடம் பெரிதாக மன்றாடாமல் அனாயாசமாகப் பயணச் சீட்டு எடுத்து, ‘மெட்ரோ லைன் பி’ பிடித்து ‘கொலோசியோ’ ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். முதலில் வெளியே சென்று ஏதாவது ஒரு உணவகத்தில் மதிய உணவை முடித்து விட்டு அப்புறம் கொலோசியம் போவது எப்படி என விசாரிக்கலாம் என முடிவெடுத்தபடியே ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததுமே கொலோசியம் என்னை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டது.

இப்படி ரயில் நிலைய வாசலுக்கே வந்து கொலோசியம் என்னை வரவேற்கும் என நான் எதிர்பாராததால் சற்று ஆச்சரியத்துடன் அதிர்ந்தும் தான் போனேன். ரயில் நிலையத்தின் பெயர் ‘கொலோசியோ’ என்று இருந்ததால் அதன் அருகில் தான் கொலோசியம் இருக்கும் என்பதை ஊகித்து இருந்தாலும், அது இவ்வளவு அருகில் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.

ரயில் நிலையத்தின் வாசலிலேயே ‘கொலோசியோ மெட்ரோ கஃபே’ என்று ஒரு திறந்த வெளி உணவகம் இருந்தது. போய் அமர்ந்து, இத்தாலிய மொழியிலும் அருகிலேயே ஆங்கில மொழியிலும் எழுதப்பட்ட உணவுப் பட்டியல் அட்டையைப் பார்த்து ‘ஃபங்கை’ என்ற ‘பிட்சா’ வகையைக் கொணரக் கேட்டேன்.

இங்கெல்லாம் பிட்சாவை வெட்டிக் கொடுங்கள் என முன்பே சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் அப்படியே தான் தருவார்கள் என்பதை என் ‘நீஸ்’ பயண அனுபவம் கற்றுத் தந்திருந்தபடியால், “பிட்சாவை வெட்டிக் கொடுங்கள்”, என்றதும், “‘சி’” என்று சொல்லி நகரப் போன அந்தப் பணியாளரிடம் “அதற்கு முன்னால் நீர் கொடுங்கள்”, எனக் கேட்டு ஒரு ‘பாட்டில்’ நீர் வாங்கி அதில் பாதிக்கும் மேல் காலி செய்தேன்.

கொஞ்சம் சிவப்பு ‘ஒயின்’ அருந்தினால் என்ன எனத் தோன்றியது. அந்தப் பணியாளரை அழைத்து “ஏதாவது ஒரு விலை குறைந்த நல்ல சிவப்பு ஒயின் கொடுங்கள், ‘ஹவுஸ் ஒயின்’ இருந்தால் நலம்”, என்றேன். ஒரு கோப்பை சிவப்பு ஒயின் வந்ததும், அதை ரசித்துப் பருகியபடியே கொலோசியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பிட்சா வந்தது. அதுவே ஒரு சிறு கொலோசியம் போல இருந்தது. இங்கெல்லாம் ‘ரெகுலர், மீடியம், லார்ஜ்’ கணக்குகள் எல்லாம் கிடையாது. எல்லாம் ஒரே பெரிய அளவு தான் என்பதும் முன்னமே என் நீஸ் பயண அனுபவத்தில் தெரிந்திருந்ததால், மேற்கொண்டு யோசிக்காமல் அந்தப் பிட்சாவை எடுத்துச் சுவைக்கத் தொடங்கினேன். சற்றே உருகிய பாலாடைக்கட்டிகள் நிறைய இட்டு, நிறைய காளான்கள் இட்டு, பிட்சா முழுவதும் தக்காளித் துவையலால் தடவி இருந்தது. பிட்சா சன்னமாக இருந்தது. இந்தியாவில் கிடைக்கும் உப்பலான அட்டூழியம் எதுவும் இந்தப் பிட்சா-வில் இல்லை. அசல் பிட்சா சாப்பிட வேண்டும் என்றால் இத்தாலி தான் வர வேண்டும் என்பது எனக்கு உறுதியானது.

எதிரில் இருந்த கொலோசியத்தின் பிரம்மாண்ட தரிசனம் என்னைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பத்து ‘ஈரோ’-க்கள் பிட்சாவுக்கும், மூன்று ‘ஈரோ’-க்கள் தண்ணீருக்கும், ஏழு ‘ஈரோ’-க்கள் சிவப்பு ஒயினுக்கும் தவிர இரண்டு ‘ஈரோ’-க்கள் இனாமும் கொடுத்துவிட்டுச் சாலையைக் கடந்து கொலோசியத்தின் அருகில் சென்றேன்.

கொலோசியத்தின் பிரம்மாண்டம் அப்படியே எனக்குள் இறங்கத் தொடங்கியது. பிரமை பிடித்தது போல இருந்தது. அது ஒரு மாபெரும் இடிபாடு. காலம் அனுமதித்த இருப்பின் பிண்டம். பிரம்மாண்டத்தின் பிடி சாம்பல்.

பல குதிரை வண்டிகள் வாசலில் நின்றிருந்தன. அங்கே நின்றிருந்த மக்கள் வரிசையைச் சுலபமாக ஒரு வித வெற்றிப் பெருமிதத்துடன் தாண்டி அருகிலிருந்த ஆளற்ற வரிசையில் போய், அந்த அனுமதிச் சீட்டு வழங்கும் இடத்திற்குச் சென்று, ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த ரசீது காட்டி, நுழைவுச் சீட்டு பெற்றவுடன், செல்பேசியில் மணி பார்த்தால் மதியம் இரண்டரை. “எனக்கு ஒரு வழிகாட்டி வேண்டும், எவ்வளவு ஆகும்”, எனச் சீட்டு கொடுத்த அந்தப் பெண்மணியிடம் கேட்டேன்.

“எவ்வளவு ஆகும் என்பதைப் பண மதிப்பாகச் சொல்லவா இல்லை நேர மதிப்பாகச் சொல்லவா,” எனக் கேட்டார். “வழிகாட்டிகள் எல்லாம் இன்னும் ஒன்றரை மணி நேரம் கழித்துத் தான் கிடைப்பார்கள் பரவாயில்லையா,” என அடுத்த கேள்வியைக் கேட்டார் அவர். “வேண்டாம். பரவாயில்லை. ஏற்கனவே கொலோசியம் பற்றி ஓரளவு படித்துவிட்டுத் தான் வந்தேன். மீண்டும் போய் தகவல்களைப் படித்துக் கொள்கிறேன். இன்னும் நாலு இடம் போக வேண்டி இருக்கிறது. நன்றி,” எனச் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

ஒரு காலத்தில் ஒரே சமயத்தில் ஐம்பதாயிரம் முதல் எண்பதாயிரம் மக்கள் வரை அனுமதிக்கப்பட்ட இந்த இடத்தில் இப்போது அதிக பட்சம் மூவாயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. கொலோசியம் என்பது ஒரு திறந்தவெளி வட்ட அரங்கு. இது கேளிக்கை நிகழ்வுகளுக்காகவே அதாவது மனிதர்களின் சண்டை, மிருகங்களின் சண்டை, இந்த இருவருக்கும் இடையேயான சண்டை, நாடகங்கள் என இப்படிப் பல வித பொழுது போக்குகளுக்கு வார்க்கப்பட்ட களம். தீ மற்றும் நிலநடுக்கங்களால் பாதிக்கும் மேல் பாதிக்கப்பட்டு அழிந்து இப்போது மிச்சம் உள்ள இதுவே இவ்வளவு அழகு என்றால் அது முழுதாக இருந்தபோது எப்படி இருந்திருக்கும் என்ற சிந்தனை வந்தபோது, காலம் சிதைத்துப் போட்ட இந்தச் சிதிலம் கூட அழகு தான் எனத் தோன்றியது.

அடித்தளத்திலிருந்து படியேறினேன். ஒவ்வொரு படிக்கும் எடுத்த அடி கூட பிரம்மாண்டமாக ஏதோ உலகை அளப்பது போலவே இருந்தது. முதல் தளம் அடைந்து உள்ளே பார்த்தால் அது ஏதோ வாய் பிளந்து கிடந்த ஒரு பிணம் போலத் தோன்றியது. அல்லது இறந்தும் சுழன்றபடி இருக்கும் ஒரு சிறு கிரகம்.

“ரோம் பேரரசின் மிச்சம் இருக்கும் அழிவுகளுள் மிகச் சிறந்த அழகிய சிதிலம் கொலோசியம் தான். கி.பி.72ஆம் ஆண்டு ‘வெஸ்பேஸியன்’ என்ற பேரரசன் தன் ஆட்சிக் காலத்தில் கட்டடமாகத் துவங்கிய கொலோசியம் அவர் மகன் மற்றும் சிம்மாசனத்தின் அடுத்த வாரிசான ‘டைட்டஸ்’ என்ற மன்னரால் கி.பி.80ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. டைட்டஸ் இறந்த பிறகு அவர் தம்பி ‘டொமிஷியன்’ ஆட்சிக்கு வந்து கொலோசியத்தை சில பல மாறுதல்களுக்கு கி.பி.81ஆம் ஆண்டு மற்றும் கி.பி.96ஆம் ஆண்டு உட்படுத்திச் செம்மைப் படுத்தினார். ரோம் பேரரசின் முதல் வாரிசு அரசியலை இவர்கள் தான் துவக்கி வைத்தார்கள். இவர்கள் மூவருமே ‘ஃபிளேவியன்’ வம்சம் சேர்ந்தவர்கள்.” ஒரு சுற்றுலா வழிகாட்டி தன் அன்றைய கொலோசிய சுற்றுலாக் கூட்டத்திடம் சொல்லிக் கொண்டிருந்ததை ஸ்வாரஸ்யமாக ஒட்டுக் கேட்டபடியே படியேறினேன்.

அவர் தொடர்ந்தார், “உடலுக்கு ஒன்பது வாசல்கள். இந்த கொலோசியத்திற்கு என்பது வாசல்கள் உள்ளன. ஆறு ஏக்கரில் நாற்பத்தெட்டு அடி உயரம் நிற்கும் சிருங்காரச் சிருஷ்டி இது.”

நான் அவரைத் தொடர்ந்தேன்.

“இங்கே மூன்று முக்கிய பகுதிகள் அல்லது அடுக்குகள் உள்ளன. அரங்கம் உள்ள அடுக்கு – இங்கே தான் அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தன. நிலவறை – அரங்கம் கீழே இருக்கும் அடுக்கு – நிலப்பரப்பிற்கும் கீழே அமைந்த இந்த இடத்தில் தான் அடிமைகள், கைதிகள், மிருகங்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் எல்லாமும், எல்லோரும், இருந்தன, இருந்தார்கள். இங்கே இருந்து சட்டென்று நிகழ்ச்சிக்குள் ஒரு புதிய காட்சியைப் புகுத்த, ‘லிஃப்ட்’ போன்ற ஒரு அமைப்பு இங்கே இருந்திருந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மூன்றாவது அடுக்கு நிலவறைக்கும் கீழே உள்ள அடுக்கு. இந்தப் பகுதியைக் காண மட்டும் தனியே அனுமதி பெற்று வர வேண்டும்.”

ஆர்வம் தாளாமல் நான் அந்தக் கூட்டத்தின் வழிகாட்டியிடம் கேட்டே விட்டேன், “இந்த கொலோசியத்தின் வடிவமைப்பாளர் யார்?”.

அந்தச் சுற்றுலாக் கூட்டம் என்னைப் பார்த்தது. ஆனால் யாரும், ‘யார் இவன் புதியவன்’, என நினைத்ததாகத் தோன்றவில்லை. அவர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன் என நினைத்துக் கொண்டார்கள் போல, அந்த வழிகாட்டி உட்பட. வழிகாட்டி மிகச் சுருக்கமாகச் சொன்னார் “அது மட்டும் யாருக்கும் இதுவரை தெரியவில்லை. கட்டிய மன்னர்கள் பெயர் தான் நமக்குத் தெரியும்.”

“பெரும்பாலும், கட்டிடத்தைக் கட்டிய பொறியியல் கலைஞர்களும் அதைக் கட்டப் பணித்த அரசர்களோடு சேர்த்து அடையாளம் காணப் பெறும் படைப்புகளால் நிறைந்த ரோம் நகரத்தின் ஆகப் பெரும் அடையாளமான கொலொசியத்தின் பொறியாளர் யார் எனத் தெரியாதது ஆச்சரியம் தானே”, என நான் விடாமல் தொடர்ந்து கேட்டு வைத்தேன்.

அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் “ஆம், ஆச்சரியம் தான் என் சரித்திரவியலாள நண்பர் ஒருவருடன் இது பற்றி விவாதித்துப் பார்த்தேன். எங்களால் உறுதியாக ஒரு விடையை அடைய முடியவில்லை. அதோ அங்கே பாருங்கள்,” என்றார் அவர் தொடர்ந்து நடந்தபடியே.

அவர் எங்களுக்குக் காட்டியது கொலோசியத்திற்கு உள்ளே அல்ல வெளியே. கீழே, அங்கே, எதுவுமே இல்லை போலத் தெரிந்தாலும் ஒரு திட்டு அல்லது மேடை இருந்தது. அதில் மக்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டும், பேசிக் கொண்டும், செல்பேசியைத் தீண்டிக் கொண்டும் இருந்தார்கள், அவ்வளவே.

எங்கள் ஏமாற்றத்தைப் புரிந்து கொண்டு சிரித்தபடியே அவர் சொன்னார், “அங்கே தான், ஒரு காலத்தில், ஏறக்குறைய நூறு அடி உயரத்தில், வெண்கலத்தால் ஆன நீரோ மன்னனின் பேருருவச்சிலை இருந்தது.”

கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணி தன் ஒளிபடக் கருவியின் ‘சூம் லென்ஸ்’ வழியே அந்த மேடையை இங்கிருந்தே நெருங்கி,  அங்கே எழுதியிருந்ததைச் சப்தமாக வாய்விட்டுப் படித்தார் , “‘ஏரியா டெல் பேஸாமென்டோ டெல் டி நீரோனே’”. அதற்கு அர்த்தம் எனக்கே ஏறக்குறையப் புரிந்தது. அது ‘நீரோவின் சிலையின் அடித்தளம்’ என்று பொருள்படும் என நினைக்கிறேன்.

“மிஸ்டர் ஃப்ரேன்சஸ்கோ” என அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர் அந்த வழிகாட்டியைப் பார்த்து விளித்து “அது என்ன”, எனக் கேட்டார். அவர் கைகாட்டிய அதுவும் கொலோசியத்திற்கு வெளியே தான் இருந்தது.

“அதுவா. அது தான் ‘’கான்ஸ்டன்டைன்’ வளைவு’. கான்ஸ்டன்டைன் என்ற ஒரு மாபெரும் ரோம் மன்னன் ‘மேக்சென்டியஸ்’ என்ற ரோம் மன்னனை வெற்றி கொண்ட ‘மில்வியன் பாலத்தின் போரின்’ நினைவாகக் கட்டப்பட்ட வெற்றி வளைவு அது. அந்த வெற்றியின் மூலம் தான் கான்ஸ்டன்டைன் தன் காலத்தின் ஒரே மாபெரும் ரோம் பேரரசன் ஆனார். மில்வியன் பாலம் ‘டைபர்’ நதி மேல் அமைந்திருக்கும் ஒரு முக்கியமான சாலை”.

“அந்த வளைவு மீது காணப்படும் சிற்பங்கள் எல்லாம் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கழித்துக் கட்டிய மீதிச் சிற்பங்களைக் கொணர்ந்து இந்த வளைவின் சுவர்களில் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. ஒரு வித முப்பரிமாணத் தன்மை கொண்டதாக இவ்வகைச் சிற்பங்கள் இருக்கும். அப்படியே சுவரிலிருந்து மேலெழும்பி முன்னோக்கி வந்தது போலத் தோற்றம் தரும். இந்த யுக்திக்கு ‘ரிலீஃப்’ எனப் பெயர், அதாவது ‘முளை விடுதல்’ என்று பொருள் கொள்ளலாம்.”

அந்த வளைவு அபாரமான யௌவனம் கொண்டிருந்தது. கொலோசியம் விட்டுக் கீழே இறங்கியதும் அதை அருகில் சென்று தரிசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

“இங்கே கொலோசியம் உள்ளே அமர்வதற்கு அந்த காலத்தில் ஒருவரின் சமூகத் தகுதி கொண்டு தான் இருக்கைகள் தீர்மானிக்கப்பட்டன. மேலும் இங்கே ‘வெலேரியம்’ எனும் நீட்டி மடக்கக் கூடிய உட்கூரை இருந்தது. வெய்யில் மற்றும் மழையிலிருந்து இது பார்வையாளர்களைக் காத்தது.”

“இன்னும் ஒரு நாள் சண்டையிட இன்று ஒரு நாள் சண்டையிட்டு வாழ்’, என கிரக்க நகைச்சுவை நாடக எழுத்தாளரான ‘மெனேந்தர்’ சொன்னது தான் இங்கே அந்தக் காலத்தில் சண்டையிட்ட அந்த வீரர்களின் தாரக மந்திரமாக இருந்தது. ஏறத்தாழ முந்நூற்று ஐம்பது வருடங்களில் நான்கு லட்சம் பேரைக் காவு வாங்கிய இடம் இது.”

‘ஹ்ம். ஒரு பிரம்மாண்ட பலிபீடம்’, என நினைத்துக் கொண்டேன். மேலும் ‘ரிட்லி ஸ்காட்’ இயக்கத்தில் ‘ரஸ்ஸல் க்ரோவ்’ நடித்த ‘க்ளேடியேட்டர்’ திரைப்படமும் என் நினைவிற்கு வந்தது.

அந்தச் சுற்றுலாக் கூட்டத்திலிருந்தவர்களுள் பெரும்பாலானோர் ஒளிப்படங்கள் எடுப்பதில் தீவிரமானார்கள். சற்று நேரத்தில் நானும் ஃப்ரேன்சஸ்கோவும் மட்டும் தனித்து விடப்பட்டோம்.

நான் அவர் அருகில் சென்று “நான் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு வழிகாட்டி உடனடியாகக் கிடைக்காததால் தனித்து வந்து எதேச்சையாக உங்கள் வழிகாட்டுதலால் கவரப்பட்டு என்னை இங்கே இணைத்துக் கொண்டவன்”, என்றேன்.

அவர் கோபப்படுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் புன்முறுவலுடன் “பரவாயில்லை விடுங்கள். சுற்றுலா முடிந்துவிட்டது”, என்று தன் கையை நீட்டினார்.

நான் அதைப் பற்றிக் குலுக்கிவிட்டு என் பெயர் சொன்னேன்.

“இந்தியாவா?”

“ஆம்”.

“கொலோசியத்தை யாரும் இதுவரை புனரமைக்கவில்லையா”, எனக் கேட்டேன்.

“ஏன் இல்லை. ஏறக்குறைய இருபத்தி ஐந்து ‘மில்லியன்’ ‘ஈரோ’-க்கள் செலவில் 2013 முதல் 2016 வரை சுத்தப்படுத்தல் மற்றும் பழுது பார்த்தல் வேலைகள் நடந்தன.”

“ஹ்ம்”.

நான் சற்றும் யோசிக்காமல் என் கீழ்சட்டைப் ‘பாக்கெட்டிலிருந்த பர்ஸில்’ இருந்து ஒரு ஐந்து ஈரோ தாளை எடுத்து அவர் கையில் வைத்து “இதைத் தயவு செய்து என் அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்”, என்றேன். இந்தக் கொலோசியச் சுற்றுலாவிற்கு ஒரு வழிகாட்டியை வைத்துக் கொண்டால் அவ்வளவு ஆகும், அவ்வளவு தான் ஆகும். அவர் மறுப்பேதும் சொல்லாமல் புன்னகைத்தபடியே அந்தப் பணத்தை வாங்கித் தன் கீழ்சட்டைப் பாக்கெட்டிலிருந்த பர்ஸில் வைத்துக் கொண்டு சொன்னார், “கொலோசியம் என்ற இந்த அற்புதக் கட்டிடத்தின் அமைப்பை மாதிரியாகக் கொண்டு உலகெங்கிலும் சில கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. திருடத் தூண்டும் அழகு அல்லவா இது. ‘வேன்கூவர்’, ‘கனடா’-வில் இருக்கும் பொது நூலகம், ‘ஸ்காட்லேண்டில்’ இருக்கும் ‘மெக்கெய்க்’ கோபுரம், இது மெக்கெய்க் என்ற ரோம் மற்றும் கிரேக்கக் கட்டிடக் கலைகளின் கூறுகளால் கவரப்பட்ட ஒரு கட்டிடக் கலை நிபுணரால் கட்டப்பட்டது மற்றும் இன்னும் ஒரு கட்டிடம். அந்த இன்னும் ஒரு கட்டிடம், இங்கே, ரோமில் தான் உள்ளது”.

நான் பரவசமானேன்.

“அந்த கொலோசியம் மாதிரியின் பெயர் ‘ப்பெலெஸோ டெல்லா சிவில்ட்டா இட்டேலியானா’. ‘சதுரக் கொலோசியம்’ என்று அதை அழைப்பார்கள். அது இங்கிருந்து கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. முடிந்தால் அதைப் பாருங்கள்”, என்றார் ஃப்ரேன்சஸ்கோ.

“தகவலுக்கு நன்றி. என் பயணத் திட்டத்தில் அதை இணைக்க முடியுமா தெரியவில்லை. முயல்கிறேன்.”

மீண்டும் ஒரு முறை அவருக்குக் கை கொடுத்துவிட்டு விடைபெற்றேன்.

பிறகு நானும் ஒளிப்படங்களாக எடுத்துத் தள்ளலானேன். அந்தச் சிதிலத்தின் எழில் எழுந்து வந்து என்னைத் தனக்குள் இழுத்துக் கொண்டது. தற்படங்கள், அகலப் பரப்புப் படங்கள், சக பயணிகளிடம் என் கேமிராவைக் கொடுத்து எடுத்தவை, பரந்த கோணம் கொண்ட காட்சிகள் என ஏறக்குறைய நூறு ஒளிப்படங்களாவது எடுத்திருப்பேன். கொலோசியத்தின் உட்புறமும் ஒரு வித அழகு தான்.

அப்படியே நடந்து வெளியேறப் போன வழியில் கொலோசியம் உள்ளேயே ஒரு அருங்காட்சியகம் உள்ளதைக் கண்டேன். அங்கே கொலோசியத்தின் நுண் பிரதிகள் இருந்தன. ‘ரப்பர்’ சக்கரத்தை வெட்டி உருவாக்கிய கொலோசியத்தின் ஒரு எளிய ‘மினிமலிஸ்டிக்’ பிரதி ஒன்றும் இருந்தது. கொலோசியத்தின் சிதிலமடையாத முழு வடிவப் பிரதி ஒன்றும் தற்போதைய சிதைந்த நிலையின் பிரதி ஒன்றும் அருகருகே இருந்தன. கொலோசியத்தை எத்தனை வடிவங்களில் எப்படிப் பார்த்தாலும் அதன் வசீகரம் கூடிக் கொண்டே தான் போனது. இப்படி ஒரு அழகைப் பிரதியெடுக்கப் பிரதியெடுக்க மூலத்தின் அழகும் பிம்பங்களின் அழகும் மேலும் எழிலேறுகின்றன போல.

கொலோசியத்தை விட்டு வெளியேறியதும் இடது பக்கம் இருந்த கான்ஸ்டன்டைன் வளைவினை என் இடது கண் பார்த்த அதே நொடி என் வலது கண் வலது பக்கம் இருந்த அந்த பிரம்மாண்ட வெடித்த மாதுளை வெண்கலச் சிற்பத்தைக் கண்டது. முதலில் எதைச் சென்று பார்ப்பது என ஒரு நொடி யோசித்துப் பின் கான்ஸ்டன்டைன் வளைவினை நோக்கி நடக்கலானேன்.

ஃப்ரேன்சஸ்கோ சொன்னது மிகச் சரி. அந்த கான்ஸ்டன்டைன் வளைவின் சிற்பங்கள் எல்லாம் அப்படியே என் மீது ஏற வருவது போன்ற ஒரு பிரமிக்க வைக்கும் பிரமையைத் தோற்றுவித்தன.

பிறகு திரும்ப நடந்து போய் அந்த பிரம்மாண்ட வெடித்த மாதுளை வெண்கலச் சிற்ப தரிசனம் கண்டேன். ஒரு வெடித்த மாதுளை நான்காகப் பிளக்கத் துவங்கி, அதில் ஒரு பகுதியின் தோல் நீங்கி அதன் முத்துக்கள் வெளியே தெரியும்படி அமைந்த ஒரு அருமையான உருவாக்கம் அது. அது குறித்து மேலும் அறிந்து கொள்ளலாம் என்றால் அந்தச் சிற்பத்தின் அடியில் எழுதியிருந்த குறிப்புகள் இத்தாலிய மொழியிலிருந்தன.

யாரைக் கேட்கலாம் என யோசித்த போது, அந்தச் சிற்பத்தை மிக அருகே சென்று சுய ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞனிடம், புன்னகையுடன், ஒரு அனுமானத்தில், “நீங்கள் இத்தாலியரா” எனக் கேட்டேன்.

அவனும், “ஆமாம், எப்படித் தெரிந்து கொண்டீர்கள். நீங்கள் இந்தியர் தானே” என்றான்.

“நான் இந்தியன் தான் ஆனால் நீங்கள் இத்திலாயர் என எனக்கு உறுதியாகத் தெரியாது. சும்மா கேட்டு வைத்தேன். இந்தச் சிற்பம் குறித்து அதன் அடிப்பாகத்தில் இத்தாலிய மொழியில் ஏதோ எழுதியிருக்கிறது. அது என்ன எனச் சொல்ல முடியுமா” என வினவினேன்.

அவன் சற்று ஆச்சரியத்துடன் அதைப் பார்த்துப் படித்துச் சொன்னான், “இந்தச் சிற்பம் ‘க்யூஸுப்பே கார்டா’ என்ற இத்தாலிய ஓவியரும் சிற்பியுமான ஒருவரால் உருவாக்கப்பட்டது . இந்தச் சிற்பத்தின் இத்தாலியப் பெயர் ‘ஜெர்மனிசியோன்’ அதாவது ஆங்கிலத்தில் ‘ஜெர்மினேஷன்’, துளிர்விடுதல் அல்லது அரும்புதல் எனப் பொருள் வரும்”.

அப்போது இன்னொரு இளைஞன் அங்கே வந்து நின்றான். இவன் என்னை நோக்கி “அவன் என் நண்பன்”, என்று கூறி அவனை அறிமுகப்படுத்தினான். அவன் கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு, இவனுக்கும் கைகொடுத்தேன். அப்போது, என் காற்சட்டைப்பைக்குள் அனிச்சையாகக் கையை விட்டு வெளியே எடுத்த போது, காலையில் சென்ற ‘வேட்டிகன் சிட்டி’ சுற்றுலாவிலிருந்து, திருப்பித் தர இயலாமல் தவறுதலாக என்னுடனேயே நான் எடுத்து வந்துவிட்ட, சுற்றுலாவின் போது தரப்பட்ட அந்த ஒலிக்கருவி என் கையில் சிக்கி வெளியே வந்தது. அதை எடுத்து ஒரு முறை பார்த்துவிட்டுப் பின் மீண்டும் அதை என் காற்சட்டைப்பைக்குள் திணித்தேன்.

அந்தப் புதிய இளைஞனும் என் கையைப் பற்றிக் குலுக்கினான். “நீங்கள் வேட்டிகன் சிட்டி ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள் போல”, என இருவருமே ஒரே சமயத்தில் என்னிடம் கேட்டுவிட்டுப் பின் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். நான் அதிர்ந்து போனேன்.

பிறகு புன்னகைத்தபடியே, “ஆம். இன்று காலை அங்கு தான் சென்றிருந்தேன். மிக அற்புதமான இடம். நான் அங்கே சென்றது உங்களுக்கு எப்படித் தெரியும்”, எனக் கேட்டேன். “நீங்கள் உங்கள் சட்டைப்பையில் கையைவிட்டு எடுத்த அந்த ஒலிக்கருவி, வேட்டிகன் சிட்டி சுற்றுலாவில் தருவது. நாங்கள் இன்று காலை தான் அந்தச் சுற்றுலா சென்றிருந்தோம் ”, என்றான் அந்த இரண்டாம் இளைஞன்.

“அட. ஆம். தவறுதலாக இந்த ஒலிக்கருவியை என்னுடனேயே எடுத்து வந்துவிட்டேன். சுற்றுலா முடிவில் எங்கள் குழுவிலிருந்து நான் தெரியாமல் பாதை மாறி விலகிச் சென்றுவிட மீண்டும் சுற்றுலா அணித் தலைவரைச் சந்தித்து இதைத் திருப்பித் தர இயலவில்லை.”

“ஹ்ம். சரி விடுங்கள். இலவசமாக ஒரு நினைவுப் பொருள் கிடைத்தது என வைத்துக் கொள்ளுங்கள்”, என்றான் அந்த இரண்டாம் இளைஞன். நான் சற்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து அவரை பார்த்தேன். இதே வசனத்தைத் தான் இன்று காலை வேட்டிகன் சிட்டியில் எங்கள் குழுவிலிருந்த ஒரு பெண்மணியும், நான் வெளியேறும் போது, ஏதேச்சையாக அவரைச் சந்தித்து ‘இந்த ஒலிக்கருவியை எப்படித் திருப்பித் தருவது’, எனக் கேட்டபோது சொன்னார். “உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நாங்கள் கிளம்ப வேண்டும்”, என நான் முதலில் சந்தித்த அந்த இளைஞன் சொன்னான். பிறகு இருவருமே விடைபெற்றார்கள்.


இரண்டு: சிதிலப் பூ

அங்கிருந்து காண்கையில் எதிரே இருந்த ஒரு உயர்ந்த மேடை மீது ஒரு பிரம்மாண்டச் சிதிலம் என்னை ‘வா என்னிடம்’ என அழைத்தது. அதைப் பார்த்தால் ஏதோ ஒரு மிக உயரமான குவிந்த மாடத்தின், நிமிர்ந்து நின்றும் மிச்சமிருக்கும் ஒரு ஒற்றைச் சுவரின் மாடக்குழி போலத் தெரிந்தது. நிச்சயம் அங்கே முன்பு ஒரு காலம் ஒரு ஆலயம் இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. நடந்து அதன் அருகில் சென்று அங்கிருந்த படிக்கட்டுகளில் ஏறி அந்த மேடான இடத்தின் மீது நின்றேன். அந்த உயரத்தில் இருக்கும் போது இது ஏதோ ஒரு சிறுகுன்று போன்று தோன்றியது.

யாரிடமாவது இந்த இடமும் இதில் இருக்கும் இந்தச் சிதிலமும் என்னவென்று கேட்கலாம் எனப் பார்த்தால் அந்தப் பக்கம் ஒருவர் கூட இல்லை. திரும்பினால் எதிரே வேறு ஒரு கோணத்தில் காட்சித் தடை இல்லாமல் முழுவதும் காணக் கிடைத்த கொலோசியம், மேலும் அழகாகத் தெரிய, மேலும் சில ஒளிப்படங்கள் எடுக்கலாம் எனக் கேமிராவை எடுத்த போது, “மீ ஸ்கூசி” என்று ஒரு பெண் குரல் என் காதில் கேட்டது. திரும்பிப் பார்த்தால் அங்கே இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். ‘தோழிகள் போல’, என நினைத்துக் கொண்டேன்.

உடைந்த ஆங்கிலத்தில் அவர்களுள் ஒரு பெண் என்னிடம், “எங்களை ஒரு ஒளிப்படம் எடுத்துத் தர முடியுமா” எனக் கேட்டதும் ஆமோதித்துத் தலையாட்டி அவர் கையிலிருந்த ஒளிப்படக்கருவியை வாங்கி அவர்களைப் படம் எடுக்கத் தலைப்பட்டேன். சூரிய ஒளி பின்னால் இருந்து வந்ததால் அந்த ‘சோனி பாயின்ட் அண்ட் ஷூட் கேமிரா-வில் எக்ஸ்போஷர் காம்பன்சேஷன்’ செய்து அவர்களைச் சில கோணங்களில் ஒளிப்படம் எடுத்து, “சரியாக வந்திருக்கிறதா பாருங்கள், இல்லை எனில் மீண்டும் எடுக்கிறேன்”, என்றேன்.

அந்தப் பெண்கள் அந்த ஒளிப்படங்களைத் தங்கள் கேமிராவில் பார்த்துவிட்டு அவை சிறப்பாக இருப்பதாகக் கூறினார்கள்.

“இப்போது உங்கள் முறை. என்னையும் சில ஒளிப்படங்கள் எடுத்துத் தாருங்கள்”, என்றேன் அவர்களைப் பார்த்து.

என் ‘கேமிரா-வை ஆட்டோ மோட்’ அமைப்பிற்கு மாற்றி அவர்களுள் எந்தப் பெண்ணிடம் கொடுக்கலாம் என யோசித்த போது, ஒரு பெண் அவளே முன்னுக்கு வந்து என் கேமிராவை வாங்கிச் சில ஒளிப்படங்கள் எடுத்துக் கொடுத்தாள்.

“உங்களுக்கு இந்தச் சிதிலம் குறித்து எதுவும் தெரியுமா”, என அவர்களைப் பார்த்து என் அருகிலிருந்த அந்த மாடக்குழி குறித்துக் கேட்டேன்.

இருவருமே “சி” என்றார்கள்.

“இது ஒரு ஆலயம். இது ரோம புராணத்தின் காதலின் கடவுளான ‘வீனஸ்’ மற்றும் ரோம் எனும் ஸ்தலமே ஒரு கடவுளாக உருக்கொண்ட ‘ரோமா’ ஆகிய இருவருக்குமான கோவிலின் சிதைந்த மீதம். 307ஆம் ஆண்டு இது தீயில் சிதைந்தது. இது அமைந்திருக்கும் இந்த இடம் ‘வேலியன்’ குன்று எனப்படுகிறது.”

“ஓஹ்.” அந்த மாடக்குழியை மீண்டும் பார்த்தேன். அதுவே அவ்வளவு உயரமாக அவ்வளவு அகலமாக இருந்தது. அங்கே முன்பொரு காலம் இருந்த ரோமா மற்றும் வீனஸ் ஆகியோரின் சிலைகள் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றியது.

“ஒரு காலத்தில் ரோம் நகரத்திலேயே மிகப் பெரிய கோவில் இது தான். வீனஸின் சிலை கிழக்கு நோக்கி, கொலோசியத்தைப் பார்த்தவாறு இருந்தது. ரோமாவின் சிலை வீனஸின் பின்புறம் மேற்கு நோக்கி, ‘ரோமன் ஃபோரத்தை’-ப் பார்த்தவாறு இருந்தது. ‘ஹேட்ரியன்’ என்ற மன்னர், அவரே ஒரு கட்டிட வடிவமைப்பாளர் என்பதால் அவரே தான் இதை வடிவமைத்தார். கோவிலைக் கட்டி முடித்தவுடன், ‘டமஸ்கஸ் நகரத்தைச் சேர்ந்த அப்பல்லோதோரஸ்’ எனும் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளரிடம் இந்தக் கோவில் குறித்துக் கருத்து கேட்ட போது அவர் சிலாக்கியமாக ஏதும் சொல்லாமல் கேலியாக ஏதோ சொன்னதால், அவருக்கு ஹேட்ரியன் மரண தண்டனை அளித்தார்.”

“வீனஸ் என்பவர் பெண் தெய்வம். அவரின் முழுப் பெயர் ‘வீனஸ் ஃபெலிக்ஸ்’. ஃபெலிக்ஸ் என்பதற்கு அதிர்ஷ்டம் கொணர்பவர் எனப் பொருள். ரோமா என்பவரும் பெண் தெய்வம் தான். அவரின் முழுப் பெயர் ‘ரோமோ எடர்னா’. எடர்னா என்பதற்கு ‘என்றென்றும்’ என்று அர்த்தம்.”

“ஆஹா. தகவலுக்கு மிக்க நன்றி.”

“இந்த வீனஸ் மற்றும் ரோமா கோவில் பின்னணியில் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்து இன்னும் ஒரே ஒரு ஒளிப்படம் எடுத்துத் தர முடியுமா”.

“தாராளமாக”.

நாங்கள் நின்று கொண்டிருந்தது வீனஸ் இருந்த இடம். அந்தப் பக்கம் ‘ரோமா ஃபோரம்’ பார்க்கப் போகுப் போது ரோமா இருந்த இடத்தைப் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டேன்.

அந்தப் பெண்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முதுகு காட்டிச் சாய்ந்து கொண்டு தத்தம் கட்டை விரலை உயர்த்திப் பக்கவாட்டில் பார்த்துப் புன்னகைத்தனர். பின்னணியில் வீனஸ் இருந்த இடத்தின் உயர்ந்த வெற்று மாடம்.

‘க்ளிக்’.

“நன்றி. ‘முப்பரிமாணத்தில் சரித்திரம்’ என கூகிளில் தேடிப் பாருங்கள். இம்மாதிரி வரலாற்று நினைவுச்சின்னங்களின் சிதிலங்களை முன்னூற்று அறுபது திகிரியில் முப்பரிமாண வடிவ மாதிரிகளாக மறு உருவாக்கம் செய்த நிறைய கோப்புகள் காணக் கிடைக்கும். குறிப்பாக இந்த ஆலயம் எப்படி இருந்திருக்கும் எனக் காட்சி ரூபமாகக் கற்பனை செய்யப்பட்டிருக்கும் மெய்நிகர் வடிவத்தை நீங்கள் காண வேண்டும்.”

“நன்றி. இந்த ‘ரோமன் ஃபோரம்’ செல்ல எந்தப் பக்கம் உள்ள பாதையில் செல்ல வேண்டும் என உங்களுக்குத் தெரியுமா?”

“இந்தப் பகுதியும் ‘ரோமன் ஃபோரம்’ தான். இது அதோ அந்தப் பக்கம் உள்ள எல்லை வரை நீண்டு செல்கிறது. நீங்கள் இப்படி இந்தப் பாதையில் செல்லலாம்”, என அவர்கள் கை நீட்டிய திசையில் நான் நடக்க எத்தனித்தபோது அந்தப் பெண் என் அருகில் வந்து தன் இரு கரங்களால் என் தோள்களைத் தொட்டு அவள் இடது கன்னத்தை என் இடது கன்னத்தில் வைத்து என் இடது கன்னத்தின் ஓரத்திலிருந்த காற்றை முத்தமிட்டார். பிறகு வலது புறம் ஒரு முறை இதே போன்று செய்தார். பின் அந்த இன்னொரு பெண்ணும் வந்து சற்றும் தயங்காமல் அதே மாதிரிச் செய்தார். 

இது குறிப்பாக ஃப்ரேன்சிலும் இத்தாலியிலும் பின்பற்றப்படும் ஒரு ஈரோப்பிய வழக்கம் என எனக்கு முன்பே தெரியும். என் ‘நீஸ்’ அலுவலகத்தில் இம்மாதிரிக் காற்று முத்தங்களைக் கவனித்து இருக்கிறேன். ஆனால் அறிமுகமான சற்று நேரத்திலேயே ஒரு அயல்நாட்டு ஆடவனை இப்படி ஏற்றுக் கொண்டு யாரும் நெருங்குவது, அதுவும் தனித்திருக்கும் இரண்டு பெண்கள் நெருங்குவது, அதிசயம் தான்.

அவர்களை நோக்கிக் கையசைத்துவிட்டு ரோமன் ஃபோரம் நோக்கி நடக்கத் துவங்கினேன். சற்று தூரமே சென்றதும், சட்டென்று என் மனதில் அந்த எண்ணம் தோன்றியது. சற்று முன்பு நான் உரையாடி உறவாடிய அந்த இரு பெண்களுள் ஒருவர் வீனஸ் ஆகவும் மற்றொருவர் ரோமா ஆகவும் இருக்கலாமோ. இது எண்ணமா, தரிசனமா இல்லை மாயத்தோற்றமா. எதுவானாலும் அதை உறுதிப்படுத்தியே ஆக வேண்டும்.

உடனடியாக அந்தப் பெண்கள் இருந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தேன். எந்த திசையிலும் என் பார்வைக்கு அந்தப் பெண்களின் உருவம் சிக்கவே இல்லை. அந்தப் பகல் நேரத்திலும் அந்தச் சுற்றுலா தளத்திலிருந்த அத்தனை பயணிகள் மத்தியிலும் எனக்குச் சற்று பயமாகவும், அபத்தமாகவும் இருந்தது. எனினும் அந்த ஸ்வாரஸ்யமான எண்ணத்தை நம்பவே விரும்பினேன். அப்போது எனக்கு இன்னொரு எண்ணமும் தோன்றியது.

ஒருவேளை இவர்களுக்கு முன் சந்தித்த அந்த இரு ஆண்களும் ஏன் அந்த கொலோசியம் வழிகாட்டி கூட யாராவது ரோமனிய அல்லது கிரேக்கக் கடவுளர்களாக இருக்கலாமோ. ‘அப்பல்லோ’ அல்லது ‘பேக்கஸ்’ அல்லது ‘க்யூப்பிட்’ ஆகியோருள் யாராவதாக இருக்கலாமோ.  இப்படி யோசிக்கும் போதே அது எனக்கு மீண்டும் அபத்தமாகவும், தர்கமற்றும் ஆனாலும் வசீகரமாகவும் இருந்தது.

இறுதியாக எனக்கு இப்படியும் ஒரு எண்ணமும் தோன்றியது. ரோம் நகரம் பல்வேறு உருவங்களில் உயிர் பெற்று வந்து எனக்கு வழித்துணையாவதாகத் தோன்றியது. அது ஒரு சுற்றுலா வழிகாட்டி போலவும், ஒரு சக பயணி போலவும் என்னுடன் உரையாடிப் பழகிக் கொண்டிருக்கிறது போலும். மேலும் ஒரு கதைசொல்லியாகவும் அவதாரம் எடுத்து அது என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தது தன் கதையை மட்டும் அல்ல, அதனுடன் உறவாடிக் கொண்டிருந்த என் கதையையும் தான் போல.


 

எழுதியவர்

நந்தாகுமாரன்
நந்தாகுமாரன்
கோவையில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர் பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி 'மைனஸ் ஒன்', உயிர்மை வெளியீடாக டிசம்பர் 2019இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி ‘நான் அல்லது நான்’, அமேசான் கிண்டில் மின்னூலாக டிசம்பர் 2012இல் வெளியானது. ‘கலக லகரி: பெருந்தேவியின் எதிர்-கவிதைகளை முன்வைத்துச் சில எதிர்வினைகள்' எனும் ரசனை நூல் அமேசான் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 2020இல் வெளியானது. இவரின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு 'பாழ் வட்டம்', காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக டிசம்பர் 2021இல் வெளியானது.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ramasubramanian
Ramasubramanian
1 month ago

Superb

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x