18 July 2024

இந்த மழையை எதிர் பார்க்கவில்லை. இப்படி வந்து சிக்கிக் கொண்டேன்.

ஆனைக்கட்டிக்குள் இப்படி ஓர் உயிரியல் பூங்காவா?. சிவக்குமார் சார் போய் விட்டு வந்து எழுதி இருந்ததைப் படித்துத் தான் வந்திருந்தேன். அவரை நனைத்த மழையின் ஒன்று விட்ட சகோதரி போல. கொளுத்திக் கொண்டிருக்கிறது.

முகப்பு தாண்டுகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறுத்தி இருந்த பைக்குகள் பக்கம் கண்கள் போக… சாவியை வண்டியிலேயே விட்டு விட்டு ஏதோ ஒரு வெங்காயம் உள்ளே போயிருக்கிறது. சொல்லலாமா வேண்டாமா… சொன்னாலும் யாரிடம் சொல்வது.. கேட்டில் இருப்பவன் கேட்டாலும் கேட்காத மாதிரி சிப்ஸ் தின்று கொண்டிருக்கும் குண்டனிலும் குண்டன். மழை அடித்து நொறுக்குகிறது. இப்போதே நனைந்து விட்டேன்.

“பைக் காணாம போய் படட்டும். அப்பதான் புத்தி வரும். அப்பிடி என்ன அவசரம்….?” மழையோடு மழையாக மனம் பேசியது.

சட்டென உள்ளே எதுவோ ஒரு கிளறல். எங்கோ அடித்த மின்னலுக்கு இங்கே இடிக்கும் சத்தம் போல.

இது நடப்பது தான். நான்கு பாக்கெட்டுகளையும் அவசரமாய் துழாவினேன். சரியா போச்சு. கணுவாயில் என் வண்டியை ஒரு கடை முன் நிறுத்தி விட்டுத் தான் பஸ் ஏறினே. பைக் சாவியை பாக்கெட்டில் காணவில்லை. மழை எனக்காவே அழுவது போல இப்போது வந்த கற்பனையை எட்டி உதைக்கவும் முடியவில்லை. தாவி கட்டிக்கவும் முடியவில்லை. இப்ப பிரச்சனை… சாவியை பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுக்கும் போது தவற விட்டு விட்டேனா… இல்லை வண்டியிலிருந்து எடுக்காமலே விட்டு விட்டேனா….

எப்போது ரோட்டுக்கு வந்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு துளியும் தீயாய் குத்தியது.

ஆனைக்கட்டி பேருந்து நிலையத்துக்கு செல்ல வேண்டுமானால் குறைஞ்ச பட்சம் ஒன்றரை கிலோ மீட்டர் கடக்க வேண்டும். திரும்பித் திரும்பி பார்த்தேன். இரும்பு உடைந்து நொறுங்குவது போல மழை. தொப்பலாக நனைந்து விட்டேன். சட்டை ஒட்டி தொப்பை கூட தெரிகிறது.

அதே நேரம் சிந்தையைக் கலைப்பதாக… சாலையில் தேங்கும் நீரைக் கிழித்தபடி ஓர் இரு சக்கர வண்டி வந்து அருகே நின்றது. மனம் அதுவாகவே கூர்ந்து கொண்டது. தெறித்த துளிகளைப் பரபரவென களைந்து வண்டியை நோக்கி கண்களைத் தெறிக்க விட்டது.

ஆம். சாவி தொங்கிய அதே ஹோண்டா ஆக்டிவா. என்ன எதிர் வினை ஆற்றுவது என்று தெரியவில்லை.

“சார் எங்க… போகணும்” என்றது வண்டியில் அமர்ந்திருந்த பெண் குரல். குரலா அது… குயில். மழை குடித்த குயில் செருமிக் கொண்டே கேட்டது. ஹெல்மெட் தாண்டி முகத்தில் வழியும் நீரில் அழகூருக்கு வரைபடம்.

“அதே வண்டி தான்… ச்சே சொல்லிருக்கலாமோ…” மனம் ஊமை ஆனது. வாய் மெல்லிசாக முனகியது… “கோயம்தூர்..”

“ஏறுங்க… நானும் அங்க தான்” என்றது வாய்க்குள் செல்லும் மழை நீரை பன்னீராக்கித் தெளித்தவள் குரல்.

ஆபத்துக்குப் பாவமில்லை. பெரு மழைக்குப் பேதமில்லை. அனிச்சையாக நடுங்கிக் கொண்டே ஏறி அமர்ந்து விட்டேன்.

“என் பைக் அங்க இருக்குமா… இல்ல எவனாவது ஆட்டைய போட்ருப்பானா… சாவியை எங்க விட்டேன்… தொலைந்து விட்டிருந்தால் கூட தப்பில்லை. வண்டியிலேயே விட்டிருக்க கூடாது.” இதயம் நடுங்குவதை உணர்ந்தேன். தலை சுழலுவதை நுகர்ந்தேன்.

மழையில் வண்டி ஓட்டுவது பிடிக்கும் போல. சும்மா அலற விடுகிறாள். எப்படியோ வேகமாய் சென்று சேர்ந்தால் சரி. ஆழ்மனம் சாவி தொலைத்த குற்ற உணர்வில் நனைந்து கொண்டே இருக்கிறது. அதையும் தாண்டி… யாருக்கு நாம் உதவி செய்யலயோ… அந்தப் பெண் நமக்கு உதவிக் கொண்டிருக்கிறாள். ச்சே என்றானது. இத்தனை படித்து எப்படி இப்படி நடந்து கொண்டோம்.

வண்டிய பூட்டி சாவிய எடுக்க தெரியல.. உனக்கெல்லாம் எதுக்கு பைக் என்று சற்று முன் முனகியது இப்போது என் காதில் எனக்கே கேட்டது. கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள். இன்னுமா சாவி தொங்கும் பைக்கை விட்டு வைத்திருப்பார்கள். நினைத்தாலே கிடு கலங்கியது.

இப்பிடியா கிறுக்கன் மாதிரி இருப்பேன்…

“சார் என்ன ஏதும் பேச மாட்டேங்கறீங்க… இதயத்தை தொலைச்சிட்டீங்களா….” என்றவள் குரல் மழைக்குள் நீந்தி வந்து என்னை அடைகையில்… வண்டியை ஒரு குழியில் விட்டு எம்பி திருப்பிச் சரி செய்து கொண்டிருந்தாள். உட்கார்ந்தபடியே நகர்ந்து ஆடி அவள் வயிற்றை அனிச்சையாகப் பிடிக்க வேண்டியதாகி விட்டது. அடுத்த கணம் அய்யயோ என்று கையை எடுத்தேன்.

“புடிச்சுக்கோங்க. சூடா இருக்கு….” என்று நடுங்கினாள். அவள் சிரித்திருக்க வேண்டும். சிரிப்பின் முடிவு கண்ணாடியில் சிலிர்த்துத் ததும்பியது. அத்தனை அருகே உரசிக் கொண்டு அமர்ந்திருப்பது நன்றாகத்தான் இருந்தது. இரு சக்கர வண்டியா. இல்லை இது சக்கரை வண்டி.

ஐயோ…. இது ரொமான்ஸுக்கான நேரமா. பின்னால் நகர்ந்து அமர்ந்தேன். வண்டியின் பின் தடுப்பை இறுக பிடித்திருந்தேன். இருந்தும் கையில் இயலாமை நடுக்கம்.

இந்தக் காலம் எதுவோ கற்றுக் கொடுக்கிறது. பெரிய வெங்காயம் மாதிரி ஒழுங்கு பேசி ஒரு சின்ன உதவியைச் செய்யாதவனுக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இந்தப் பெண் உதவிக் கொண்டிருக்கிறாள். உண்மையில் அறம் இவளைச் சார்ந்ததுதான். நான் சும்மா… வெத்து. ஒரு பைக் கீயை பத்திரமா வெச்சுக்க தெரியல.

மழையெல்லாம் என் மீது துப்புவது போலவே இருந்து. பொதுவாகப் பெண்கள் வண்டி ஓட்டுவதை நக்கல் செய்பவன் நான். மங்கி மாதிரி பாவனையில் பப்பரப்பா என்று ஓட்டும் பெண்களை நான் மதித்ததே இல்லை. ஆனால் இன்று அந்த பார்வை மாறி விட்டது. அட்டகாசமான ஓட்டம். என் மனதைப் புரிந்து கொண்டவளாகத் தீர்க்கமான வேகம். ஒவ்வொரு வளைவிலும் வித விதமான சாகசம். சரித்து நிமிர்த்துகையில் நேர்த்தியான ஓட்டுநரின் லாவகம். வேறொரு சமயமாக இருந்தால்… இளையராஜாவை இசைக்க விட்டிருக்கலாம்.

கணுவாயை நெருங்க நெருங்க கண்கள் கூட கலங்கி விட்டன. பைக் இல்லையென்றால் என்ன செய்வது. இப்படியா முட்டாளாக இருப்பேன். உள்ளே நொந்து கொண்டே செந்தில் மார்ட் முன்னால் வண்டியை நிறுத்த சொன்னேன். கண்களில் பால் வார்த்தது காட்சி.

என் ஹோண்டா ஆக்டிவா அங்கேயே நிற்கிறது. கண்களில் நடுக்கம் குறையாத சிரிப்பு. உடலில் திடும்மென பூத்த தெம்பு.

ஓஹ்… மை கடவுளே…. காற்றில் கும்பிடு போட்டேன். அப்பாடா என்றிருந்தது. அப்படி என்றால் சாவியை தான் எங்கோ விட்டிருக்கிறேன். முட்டாள்தனத்தில் கொஞ்சம் குறைந்தது போல உணர்ந்தேன். ஓரளவுக்கு வெளியே சொல்லிக்கலாம். பைக்கில் சாவியை விட்டேன் என்பதை விட பைக் சாவியை எங்கோ விட்டு விட்டேன் என்பது பரவாயில்லை தானே.

வண்டிக்கு அருகே குண்டடி பட்டு தப்பித்த கங்காரு போல ஓடினேன். பூட்டிய வண்டி உடல் குறுகி நின்றிருந்தது. சீட்டைத் தொட்டுத் தடவி… ஹேண்டில் பாரை பிடித்து… உரிமையை மீட்டெடுத்தேன். அதுக்கும் முசுமுசு நாய்க்குட்டி பாவனை தான் போல.

சரி. ஓகே. இனி டூப்ளிகேட் கீ வாங்க வேண்டும். இந்தச் சாவிக்கு டூப்ளிகேட் கீ இதுவரை இல்லை. அது ஒரு முட்டாள்தனம். சரி எங்கு சாவி கடை இருக்கும் என்று அக்கம் பக்கம் தேட ஆரம்பித்தேன்.

அந்த புள்ள பரவாயில்லை. விஷயத்தை புரிந்து கொண்டு அவளும் கூட மாட விசாரிக்கிறாள். நன்றி சொன்ன பிறகும்… இருங்க கூட இருக்கிறேன் என்று உதவுகிறாள். என்ன இவள் உதவிக்கென்றே பிறந்தவள் போல. எனக்கு ஆச்சரியம். அப்படியே அவள் என்னுடன் இருப்பதில் ஒரு ஆண்ச்ரியம்.

அப்படி இப்படி என்று ஒரு போன் நம்பர் பிடித்து இடையர் பாளையத்திலிருந்து 500 ரூபாய்க்கு கீ மேக்கர் வந்தும் விட்டார்.

ஒரு பதினைந்து முறை புலம்பி இருப்பேன். நான்.. பேங்க் ஆபீசர்ங்க. எப்பிடி இப்பிடி மறந்தேன். பைக் என்ன விலை விக்கிது. இப்பிடி விட்டுட்டேன். ஆனாலும் தலைக்கு வந்ததது தலைப்பாகையோடு போச்சு… புலம்பல் தொடர்ந்தது.

அவள் ஆறுதல் சொன்னாள். அதே நேரம் கீ மேக்கர் -ம் வந்து விட்டார்.

“ஏங்க ஒரு டூப்ளிகேட் போட்டு வீட்ல வெச்சுக்க மாட்டிங்களா…?”

நீண்ட நாட்களுக்குப் பிறகு மற்றவர்களைத் திட்டக் கிடைத்த வாய்ப்பு போல. கீ மேக்கர்…போட்டு நகட்டுகிறார்.

எங்கிருந்தோ பூக்கூடையோடு பூக்கார பாட்டி தலையில் முக்காடிட்டபடியே வந்து வண்டி நிறுத்தியிருந்த இடத்தை ஒட்டி இருந்த மறைவில் அமர்ந்தது. அதன் இடம் போல. என்னையும் எங்கள் செயல்களையும் ஆழ்ந்து பார்த்து விட்டு… “என்ன சாவி காணமா…?” என்று கேட்டு மெல்ல புன்னகைத்தது. அது ஒரு நம்பிக்கை திறவு.

கண்கள் இறுக “ம்ம்ம்” என்று அனத்தியபடியே பார்த்தேன்.

எங்கோ விட்டது இங்குத் தொடர்வது போல…”சாவிய இப்பிடியா விட்டுட்டு போறது… வண்டில தொங்கிட்டு இருந்துச்சு. நான் தான் எடுத்து வெச்சேன். கேட்ருக்கலாம்ல…” என்று பக்கத்தில் இருந்த சைக்கிள் பஞ்சர் கடைக்காரரை பார்த்து… “ஒரு சாவி குடுத்தேன்ல அத குடு” என்று கேட்டது. பழக்கமான பேச்சு முறை. ஆச்சரியமாய் பார்த்தேன். என்ன இன்னைக்கு இத்தனை நல்லவர்களைக் காண்கிறேன். மூச்சில் ஆர்ப்பரிப்பு.

“நான் இருக்க மாட்டேன்னு தான் இங்கு குடுத்துட்டு போனேன்” என்ற பாட்டி… எங்க ஊர் மாரியம்மன் சாமி மாதிரியே தெரிந்தது. கும்பிட்டு சாவியை வாங்கினேன். ஆனாலும் குற்ற உணர்வு கூடி தலை மேல் தாளம் போட்டது.

கீ மேக்கர் என்னை எரிப்பது போல பார்க்க பார்க்கவே… இருநூறு ரூபாயை எடுத்து அவர் பாக்கெட்டில் அழுத்தினேன். சாவியெல்லாம்…. என்று அறிவுரையை தொடர்ந்தபடியே நகர்ந்திருந்தார்.

“சரி எப்பிடியோ… ஒன்னும் ப்ராப்லம் இல்ல. சரிங்க பாப்போம்” என்றவள் வண்டியை என் அருகேயே விட்டு விட்டு என் பதிலுக்கு காத்திராமல் வந்து கொண்டிருந்த 11 ல் தாவி ஏறினாள்.

நான் திடு திப்பென “ஏங்க… இது… இந்த வண்டி….” என்று நடப்பதை உள்வாங்கி நிதானிப்பதற்குள்… “அது அங்க சாவியோட நின்னுச்சு.. மழை வேற…. அதான் அடிச்சிட்டு வந்தாச்சு…. இப்ப என்னவோ… கொண்டு போக மனசு வரல” என்றாள்.

எனக்கு தூக்கி வாரி போட்டது. விரிந்த கண்களை சிமிட்ட மறந்து பார்த்துக் கொண்டேயிருக்க அதன் பிறகு அவள் பேசியது கேட்கவில்லை. பேருந்து நகர்ந்து விட்டிருந்தது. மழைக்குள் ஒரு திருட்டோவியம் கரைந்து விட்டிருந்தது.

“அடிப்பாவி…”- அந்த பேருந்து போன திசையையே பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன். “இவ நல்லவளா கெட்டவளா…!?”

சட்டென தோன்றிய முடிவை நிதானமாக யோசித்தேன்.

இந்த முறை உதவ கிடைத்த வாய்ப்பைத் தவற விட விரும்பவில்லை. என் ஆக்டிவாவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு… அந்த ஆக்டிவாவை எடுத்துக் கொண்டு ஆனைக்கட்டி நோக்கி முறுக்கினேன்.

எதையோ சமன் செய்ய மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. பெய்யட்டும்.

 

 

எழுதியவர்

கவிஜி
கவிஜி
கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x