18 July 2024

காதுக்குள் மணி அடித்தது போல….. மணி தான் அடித்தது போல.

கடித்துக் கொண்டிருந்த முட்டை பப்ஸில் ஒரு நொடி இடி இறங்கியது. சுதாரித்தபடி அனிச்சையாய் சத்தம் வந்த திசையில் திரும்பினேன்.

பட்டர் பன் பாதி வாயில் இருப்பவர்… தேநீர் கண்ணாடி கோப்பையை முகத்தருகே வைத்திருப்பவர்… பக்கோடாவை கையில் இறுக்கிக் கொண்டிருப்பவர்…. கல்லா அருகே நின்று காசு கொடுத்துக் கொண்டிருப்பவர் சமோசாவை எடுத்தது….. எடுத்தது போலவே நின்று கழுத்தை மட்டும் திருப்பிய சப்ளையர்…. என்று அந்த பேக்கரியில் இருந்த கிட்டத்தட்ட அனைவருமே நான் பார்த்த திசையில் தான் பார்த்தார்கள்.

விஸ்வரூபம் படத்தில் வரும் முதல் சண்டைக்காட்சி போல…. மின்னல் வேகத்தில் நடந்து விட்ட அந்தக் காட்சி மீண்டும் என் கண்களில் ஸ்லோ மோஷனில் விழுந்தது.

நான் அமர்ந்திருக்கும் டேபிளுக்கு பக்கத்து டேபிளில் ஓர் அப்பா அவசியமாய் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே அவரின் மகள் ஆசை ஆசையாய் அமர்ந்திருந்தாள். வாங்கிய கேக்கை ஒரு ஸ்பூன் தான் வழித்து வாயில் இட்டிருப்பாள். சில போது சித்திரமாகுதல் இயல்பாகவே நிகழ்ந்து விடும். மாயாஜாலம் என்று கூட சொல்லலாம். மாத்தி யோசிக்கவே விடாத விபத்துகள் போல. எதிலிருந்து எப்படி ஆரம்பித்திருக்கும் என்றெல்லாம் எத்தனை யோசித்தாலும் கிடைக்காத விடையில்…. அவள் எப்படியோ அந்த கேக் கிண்ணத்தை கீழே தவற விட்டிருக்கிறாள். இடது கை பட்டு நகர்ந்து விட்டதா..? டேபிளை ஆட்டும் அளவுக்கு அவள் கால் மேல் கால் போடும் போது முட்டிக் கொண்டாளா..?

ஒருவேளை நான் தான் படக்கென்று எழுந்து எட்டி கேக் கிண்னத்தை தட்டி விட்டு விட்டேனோ…?

ஐயோ என்ன இது……! அவள் கதைக்குள் நான் நுழைந்து கேக் வெட்ட பார்க்கிறேன்.

அப்படி இப்படி என்று எப்படியோ அவள் கேக் கிண்ணத்தை கீழே தவற விட்டு…. பஞ்சு மாதிரி இருந்த கேக்…….தரையில் பட்டு நெஞ்சு வெடித்துக் கிடந்தது.

எனக்கே கண்களில் கற்பனை பூச்சிகள் கொட்ட கண்களைத் தேய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஒருசேரத் தரை தொட்ட கிண்ண சத்தத்துக்கு திரும்பிய கண்கள் எப்போதோ அவரவர் வேலைக்குத் திரும்பியிருந்தன. கேக் விழுந்ததால் கண்டு கொள்ள வில்லையோ…. ஒருவேளை கேர்ள் விழுந்திருந்தால்…..ஓடி வந்திருப்பார்களோ என்னவோ.?

இப்போது கையிலிருக்கும் முட்டை பப்ஸை கடிக்கவா வேண்டாமா என்று எனக்குத் தெரியவில்லை. அந்தச் சிறுமி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னதென தெரிந்தும் இயலாத பார்வை அது. ஈக்கள் விரட்டவும் மறந்த அந்த ஏழெட்டு வயது சிறுமி வலியத் திணித்துக் கொண்ட சிரிப்பில்…. ச்சீ….சீ இந்த கேக் இனிக்கும் வேண்டாம் என்பது போலச் சமாளித்துக் கொண்டிருந்தாள். சுயம் சார்ந்த சிந்தனை சிறு வயதிலேயே மானுடர்க்கு வந்து விடுவதை மிக அருகில் காணத் தைரியம் வேண்டும். வேடிக்கை மனம் வாய்த்ததினால் மனம் அசை போட……  என்ன தான் நடக்கும் என்று பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

அருகே அமர்ந்திருந்த அப்பா அடுத்தொரு கேக் சொல்வார் என்று நினைத்தேன். ஆனால் அவர் சொல்லவில்லை. மாலை வரை வேலை செய்து விட்டு இப்போது தான் குளித்து முகச்சவரம் செய்து வந்திருக்க வேண்டும். தன் சிறு மீசையை ஒதுக்கி; ஓரமெல்லாம் நரை கூடிய, உள்ளொடுங்கிய முகத்தில் குறுகுறுவென தவிப்பு நிழலாடியது. அவரின் கண்களில் கோபமும் பரிதாபமும் ஒரு சேர ஊர்ந்து கொண்டிருக்க;  ‘டீயை கொட்டிடாம சீக்கிரம் குடி…’ என்று வாய் முனங்கியது.

சூனியம் பார்த்தபடி தேநீர் குடித்துக் கொண்டிருந்த நெற்றியில்., பல பல யோசனைகளை  கோடுகளாக்கிக் கொண்டிருந்தார். சிறுமிக்கு உள்ளூர ஓடிய பயம்….  ‘இந்தா இந்த டீ கூட எனக்கு வேண்டாம்…’ என்று புன்னகையோடு சொன்னாலும் சொல்லி விடுவாள் போல. கன்னம் ஏறி ஏறி இறங்கும் மூச்சை உணர்கையில்…. எனக்கு உள்ளங்கை வியர்த்தது. அவ்வப்போது அப்பாவைப் பார்த்துக் கொண்டாள்.

கேக் என்ன ஒரு 40 ரூபாய் இருக்குமா…. அந்த கேக் 40 ரூபாய்…. வித்தியாசம் உணர்ந்தேன்.

சரி நாமாவது ஒரு கேக் வாங்கி தந்து விடலாமா என்று மிடில்கிளாஸ் யோசனை மீசை முறுக்கியது. வாங்கி கொடுத்து…….வேண்டாம் என்று சொல்லி விட்டால்….. நமக்கு அவமானமாகப் போய் விடுமே….. ஏன் என் புள்ளைக்கு எனக்கு வாங்கி தரத் தெரியாதா என்று அந்த குறு மீசை கோபித்துக் கொண்டால்…. மூன்று நாளைக்கு இந்த நிகழ்வைத் தூக்கிச் சுமக்க நம்மால் ஆகாது.

கீழே விழுந்த கேக்கை கடைக்காரன் எடுத்து அப்புறப்படுத்தவும் மாட்டேங்கிறான். கண்கள் அதன் மீது போய் போய் வருவதையும் தடுக்க முடியவில்லை. எப்போதுமே இதற்கு தான் இந்த மாதிரி சிறுபிள்ளைகள் அருகே நான் அமர்வதே இல்லை. அவர்களுக்கு முன் நமக்கு ஆர்டர் செய்தது வந்து விட்டால் அவர்களை பார்க்க வைத்துக் கொண்டு சாப்பிடுவது ஏதோ உள்ளூர அரிக்கும் செயலாகவே இருக்கும். ஆனால் இப்படி இன்று விதி கேக்கை விழுக்காட்டி என் கையில் இருக்கும் பப்ஸை தின்ன விடாமல் செய்கிறது. நானும் சமாளிக்கிறேன். அந்தச் சிறுமியின் கண்கள் கலங்கி இருப்பதை உள் வாங்க முடிந்தது… இல்லை…. அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தான் டீ குடிக்கிறாள்… நீ தான் வீணாகக் கற்பனை செய்கிறாய்…..என்று என்னை நானே எத்தனை சமாதானப்படுத்தினாலும்…. சிறுவயதில்….. ஜிலேபியைக் கீழே போட்டு விட்டு நான் அழுகையை அடக்கி சமாளித்தது போலத் தான் இதுவும்.

என்னோடு என்னைச் சுற்றி நின்று ஜிலேபி தின்ற என் அக்காவும் தம்பியும், பக்கத்து வீட்டு அண்ணனும் அக்காவும்  கடைசி வரை சிரித்துக் கொண்டு தான் இருந்தார்களே தவிர ஐயோ பாவம் என்று கொஞ்சுண்டு பிய்த்துத் தரவில்லை.

இப்படித்தான் எது ஒன்றுனாலும் ஏதோ ஒன்றில் இணைத்து விடும் வல்லமை எப்படியோ வாய்த்திருக்கிறது எனக்கு. பெரும் சுமையைச் சுகமாகச் சுமப்பதில் ஒரு தீவிரம் எப்போதும் உள்ளே உண்டு. ஆனாலும், சிந்தனை அளவுக்குத் தைரியம் வருவதில்லை நிஜத்தில். அந்தச் சிறுமி அரை கோப்பை டீயை குடித்திருந்தாள். வேண்டா வெறுப்பாக வேக வேகமாய் அவளின் அப்பா குடித்துக் கொண்டிருந்தார். இங்கிருந்து சீக்கிரம் வெளியேற வேண்டும் அவருக்கு. பேக்கரி வழக்கம் போலான ஒரு நடைக்கு எப்போதோ மாறி இருந்தது. கமகமக்கும் விநாயகர் பாடல் ஒவ்வொரு செவிகளிலும் மாலை நேர மயக்கத்தைச் சூட்டிக் கொண்டிருந்தது.

இப்போதெல்லாம் மனிதர்கள் முன்ன மாதிரி இல்லை. ஹெல்த் கான்ஷியஸ் கூடி விட்டது. இஞ்சி டீயும்.. சுக்கு காபியும் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது…..பேக்கரியில்.

இந்தக் கால்வாசி முட்டை பப்ஸை நான் என்ன செய்வது. அந்தச் சிறுமி வேறு கடைக்கண்ணில் என்னைப் பார்ப்பது போலவே இருந்தது. மொட்டுக் கண்களில்… திரண்டு இருக்கும் கரு விழிகளில் பொங்கிப் பொங்கி அடங்கும் கண்ணீரை நான் கண்டு கொண்டேன்….கண்டு கொண்டேன்.

உலகம் எத்தனை வேகமானது என்று சற்று நேரம் அமர்ந்து கவனித்தால் தெரியும். ஒவ்வொரு டீக்கடையும் ஒரு போதி மரம் தான். பல விஷயங்களை மேடையில்… அரங்கில் பேச முடிந்த நம்மால் அதை வீதியில்….. சாலையில்…… பொதுவெளியில் நிகழ்த்திப் பார்க்க முடிவதில்லை.

வெட்கமா….? மற்றவர் என்ன நினைப்பார்கள் என்ற பூச்சா…? இயலாமையா….? நமக்கெதுக்கு வம்பு என்று ஆழ்மனதில் வலிமையாக ஸ்திரப்பட்டிருக்கும் சுயநலமா..?

தலைமைப் பண்பு செயல்படும் இயக்கத்தில் மட்டும் தானா…?

ஒரு கேக்கை ஆர்டர் செய்து அந்தச் சிறுமியிடம் கொடுக்க எது தடுக்கிறது. காலம் காலமாக கேட்டால் தான் உதவி செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டை எப்படியோ மானுட மனம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டதாலா.? வலியச் சென்று உதவினால்….. அதன் பின் கதை கட்டி விடும் உலகமயமாக்கலின் உள் நோக்கம் குறித்தான எச்சரிக்கை உணர்வா….? எது தடுக்கிறது.?

ஒருவேளை வேண்டாம் என்று அவர்கள் மறுதலித்தால்……. மறுதலிக்கட்டுமே. வாங்கிக் கொடுத்தால்…. உடனே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா என்ன ? வாங்கி கொடுக்க வேண்டும் என்று தோன்றி விட்டது தானே. வாங்கி கொடுத்து விடலாம். நாம் நமது அணுகுமுறையில் சரியாகத்தான் இருக்கிறோம் என்ற திருப்தியாவது வரும் தானே.

நான் முடிவெடுத்து விட்டேன். என்ன ஆனாலும் சரி…. அதே மாதிரி அல்லது அதை விடப் பெரிய கேக்….. வாங்கி கொடுத்து விடுவது… என்று. நான் சப்ளையரின் வருகைக்குக் கண்களை எட்டி காட்டினேன்.

நொடி நேரத்தில்…. கிண்ணம் தவறி தரையில் விழுந்த சத்தத்துக்கு வேறு வடிவ இணையாக….. கொலுசொலி குலுங்க….. வளையல்கள் இடுப்பாட்டி சிணுங்க…. சிலுக்கு நடையில்…. ஒரு பெண் ஜிகுஜிகுவென என்னைக் கடந்து அந்தச் சிறுமியின் எதிரே சென்றாள். பவுடர் வாசமும்…. பெர் ஃபீயூம் தூக்கலுமாக என்னைச் சூழ்ந்து கடந்தவளை ஒரு கணத்தில் உடல் மலர்ச்சி கொள்ளக் கண்கள் சிமிட்ட மறந்து பார்த்தேன். கண்கள் சிமிட்டியும் மறந்து தான் பார்த்தேன்.

“பாப்பா….. இந்தா……. இந்த கேக்க சாப்டு…. அது கீழே விழுந்துருச்சுனு கவல படாத…. தவர்றது சகஜம் தான்….”

அந்தச் சிறுமி சாப்பிட்டாளா இல்லையா…. மறுத்தாலா இல்லையா…. எது பற்றியும் யோசிக்காத அந்தப் பெண் கேட்கை அவள் முன்னால் வைத்து விட்டு வேகமாய் புன்னகை நழுவும் முகத்தோடு கையைத் தட்டிக் கொண்டே நகர்ந்து விட்டாள்.

ஒரு கேக்கை வாங்குவதா….. தருவதா…. தந்தால் என்னாகும்…. ஒருவேளை மறுத்து விட்டால்… என்று நான் திட்டம் போட்டுக் கொண்டே இருக்க… அவளோ கண்டதும் முடிவெடுத்து விட்டாள் போல. வந்தாள்., தந்தாள்., சென்றாள்.!!

தீர்க்கத்தின் ஜுவாலையை அவளின் வாசம் இன்னமும் என்னை நிரப்பிக் கொண்டிருந்தது. அந்தச் சிறுமி அப்போது தான் கண்களைத் துடைத்திருக்க வேண்டும். அவளின் அப்பா சாப்பிடு என்று ஜாடை செய்தது போலத் தான் இருந்தது. அந்தச் சிறுமி இம்முறை கவனமாக ஸ்பூனில் வழித்து வாய்க்குள் ஒரு கவளத்தை வைத்தாள். அவள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தது. நான் பார்க்காதவாறு திரும்பிக் கொண்டேன்.

அப்பாடா என்று இருந்தது எனக்கு. ஆனால் அதே நேரம் அவமானமாக இருந்தது. என்ன ஒரு சாக்குப் போக்கு நான்.

இம்முறை சட்டென முடிவெடுத்தவனாய்; மிச்சமிருந்த கால்வாசி முட்டை பப்ஸை எடுத்து வாய்க்குள் திணித்துக் கொண்டு, பில் பே பண்ணிய அதே வேகத்தில் வேகமாய் வெளியேறிச் சுற்றும் முற்றும் பார்த்தேன். அந்தப் பெண் சற்று தூரத்தில் இடுபொடிய அசைந்து அசைந்து நடந்து சென்று கொண்டிருந்தாள்.

வேகமாய் பின்னால் பைக்கை விட்டு அருகே சென்று நிறுத்தினேன். திக்கென்று திரும்பியவள் யோசனையோடே சிநேகப் புன்னகையைக் காட்டினாள். கூடவே  ‘என்ன?’ என்றாள். கர கரக் குரலில்…. கேக்கின் மெது மெதுப்பு.

அவள் முகத்தைப் பார்த்தபடியே….. நூறு ரூபாய் எடுத்து அவள் கையில் திணித்து விட்டு…. வேகமாய் வண்டியைக் கிளப்பினேன்.

இன்னொரு பப்ஸ் சாப்பிட வேண்டும் போல இருந்தது.


 

எழுதியவர்

கவிஜி
கவிஜி
கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x