நான் முந்தி, நீ முந்தி எனப் போட்டி போட்டுக்கொண்டு சைக்கிளை மிதித்தோம். சுப்பு வளைவுகளில் அனாயாசமாகத் திரும்புவான். எனக்கோ வளைவுகளில் சரித்துக்கொண்டு விழுந்து விடுவோமோ என்கிற பயம் சின்ன வயதில் இருந்தே இருக்கிறது.

எட்டாவது படிக்கும்போது பள்ளிக்கூடம் விட்டு வருகையில் இப்படித்தான் போட்டி போட்டு வந்தபோது மல்லுக்கட்டு வளைவில் திரும்பியபோது சரிந்து விழுந்து தாவாக்கட்டையில் மூன்று தையல் போடுமளவுக்குக் காயம் ஆனது. அதிலிருந்து வளைவுகளில் திரும்புவதென்றால் பயம் வந்துவிடும். வேலை முடிந்து போட்டி போட்டு சைக்கிளில் வருவது வேகமாக வீடு சேரவேண்டும் என்பதற்காகத்தான். அப்படி வேகமாகப் போய் வீட்டில் வெட்டி முறிக்கிற வேலை ஏதும் இல்லை. குளித்து முடித்து கல்லுக்கட்டில் வெட்டி நாயம் பேச கூடுவோம்.

வீட்டில் பெண்கள் நேரமே ராச் சாப்பாடு செய்துவிட்டு யார் வீட்டிலாவது டிவி-யில் நாடகம் பார்க்கப் போய்விடுவார்கள். எட்டு, எட்டரை வாக்கில் நாடகம் முடிந்து வரும்போது பையன்களைச் சாப்பிட அழைப்பார்கள். ஒவ்வொருவராக கலைந்து வீடடைவோம்.

இன்றைக்கு கல்லுக்கட்டில் கூட முடியாது. இரவு வேலை இருக்கிறது. பெரியகாடு சுப்புராயன் மாமாவின் தாயப்பிராக் காட்டிலிருந்து டிராக்டரில் வைக்கோல் எடுத்துவந்து போர் போட்டாகவேண்டும். மதியம் மூன்று மணிக்கு மேல் இரண்டு டிராக்டர் ஏத்திவந்து கட்டுத்தாரையில் அடிப்போர் போட்டுவிட்டோம்.

“இன்னும் மூணு நடையாவும். நைட்டு எடுத்தாந்துடலாமா?. சாப்ட்டுட்டு வந்துடுங்க.”

சுப்பராயன் மாமாவின் மகன் வெங்கடாசலம் சொன்னதும்; சுப்பு சரி என்பதாகத் தலையாட்டினான். எனக்கோ இரவு வேலை அதுவும் வைக்கோல், கடலைக்கொடி போர் போடுவதென்றால் கொஞ்சமாக உதறல் எடுக்கும்.

போன வருடம் இப்படித்தான் கரியாங்காடு வடிவேல் மாமன் காட்டில் இரவு வைக்கோல் போர் போட்டுக் கொண்டிருந்தோம். ஆரானும், மாரியும் கட்டுக்கட்டி விட்டார்கள். நான் கட்டைத் தூக்கிக்கொண்டு ஏணியில் ஏறிப்போய் போடவேண்டும். உதறிப் போர் போட சுப்புவும், மணியனும் செய்துகொண்டிருந்தார்கள். சுப்பு சுமையைப் பிரித்து உதறும் போது சாரைப்பாம்பொன்று திக்குத் தெரியாமல் ஓடியது. என்னை நோக்கிப் போர் சரிவில் கீழிறங்க சுப்பு “பாம்புடா” எனக்கத்தினான்.

ஏணியின் மேல் நின்றுகொண்டிருந்த எனக்கு வைக்கோல் அசைந்தது தெரிந்து தாவிக்குதித்து ஓடினேன். ஆரானும், மணியனும் களத்திற்கே ஓடிவிட்டார்கள். அதிலிருந்து இரவில் வைக்கோல் போர் போடப்போகும் போது ஜாக்கிரதையாக வேலை செய்வதாகிவிட்டது. பேசாமல் நின்றிருந்த என்னைப் பார்த்துக் கேட்டார் வெங்கடாச்சலம்.

“குமார் மாப்ள பேசாம யோசனையாவே இருக்கறானே?”

“அவனுக்கு நைட்ல பிரியப்பாத்தாவே பயப்படுவானுங்கண்ணா.” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு கரியாங்காட்டுக் கதையைச் சொன்னான். ஏகமனதாக இரவு வேலை செய்வது என்பது முடிவாகி வீட்டிற்கு போட்டி போட்டு வந்து கொண்டிருந்தோம்.

கருப்பராயங் கோவில் திருப்பத்தில் கோமதியும், அல்டாப் ராணியும் முன்னால் சிலரும் போய்க் கொண்டிருந்தார்கள். வேகத்தைக் குறைத்து இறங்கினேன்.

“கோமு நாளான்னைக்கு பெரியகாட்டு சம்பு மாமனுது மஞ்ச வெட்டறதுக்கு பேசியிருக்கோம். ஏழு சோடியில எனக்கு மட்டும் சோடி ஆளு இல்ல நீ வாரையா?”

“எனக்கு வேலையிருக்கு. நா வல்ல” பேச்சை வெட்டியபடியே விருட்டென நடையை எட்டிவைத்தாள்.

“அல்டாப்பு நீயாவது வாயேன்.”

“ம்…எனக்குச் சோடி எம்புருசன் இருக்கறான். அவங்கூடவே போறேன். இவளுக்குத்தான் சோடியில்ல பாத்துப் பதனமா பேசி கூட்டீட்டுப் போங்க.”

“எனக்கு சோடிக்குத்தான் கூப்பிடறேன். வர மாட்டைங்குதே?”

“உங்களுக்குச் சோடி வேனும்னா உங்கம்மாகிட்டச் சொல்லி பொண்ணுப்பாத்து சோடி சேத்திக்கிட்டு கூட்டீட்டுப் போங்க. க்கும்” வாயைப் பழிப்புக்காட்டிவிட்டு திரும்பி நடந்தாள் கோமதி.

சைக்கிளில் ஏறி அவர்களைக் கடக்கையில் அல்டாப் கோமதியிடம் கேட்டாள் “ஏன்டி உனக்கு நாளான்னைக்கு வேலையில்லைன்னு சொன்னே. இவிங்க கூட வேலைக்குப் போன என்ன?”

“கம்முனு வாடி இவவேற” என அதட்டினாள்.

கல்லுக்கட்டில் ஒற்றைக்காலை ஊனி சுப்பு நின்று கொண்டிருந்தான். பக்கத்தில் போய் சைக்கிளை நிறுத்தி சட்டத்தில் உட்கார்ந்தவாறு கேட்டேன்.

“எத்தன மணிக்கு மாப்ளே போலாம்.”

“எட்டு எட்டரை வாக்குல போலாம்டா. மூணு மணிக்குள்ளார முடிச்சுட்டம்னா, வந்து தூங்கி எந்திருச்சு சின்னப்பையங் காட்டுக்கு பாத்தி கட்டப் போயிட்டு நேரமே வந்துடலாம். மத்யாணம் தூங்கீட்டு சாயந்திரம் சினிமாவுக்குப் போலாமா?”

“ம்..போலாம். என்ன படம் ஓடுதாமா?”

“நாட்டாமை. சரத்குமார் நடிச்ச படமாம். நல்லா இருக்காம். சுத்து வட்டாரத்துல வண்டி கட்டீட்டு வந்து பாக்கறாங்கலாம். வெள்ளிக்கிழமை போனம்னா கூட்டமா இருக்கும். நாளைக்கே போயிட்டு வந்துடலாம். மஞ்ச வெட்டுக்குப் போயிட்டம்னா அப்புறம் போகவே முடியாது”

“எனக்கு வேற சோடி ஆளே அமைய மாட்டேங்குது.”

“யாரையாவது கேட்டுப்பாத்தியா?”

“கோமதியக்கூடக் கேட்டேன். வேலையிருக்குதுங்குது. யாரப்புடிக்கறதுன்னு தெரியல?”

“ஓ..கோ. சோடி மஞ்ச வெட்டறதுக்கு மட்டும்தானா? இல்ல மொத்தமா சோடியாக்கறதுக்குக் கேட்டியா?

“எது அமைஞ்சாலும் சரிதான் மாப்ளே”

“சரி உடு பாத்துக்கலாம். ஆளு அமையலைன்னா. உங்கம்மாவக் கூட்டியாந்துடு. நேந்து கலந்து செஞ்சாப் போவுது.”

“அதுவும் சரிதான். செரி நாம்போயி சாப்ட்டுட்டு இங்கயே வந்துடறேன்.

***

ண்டாவில் தண்ணீர் குளுந்தே கிடந்தது. வைக்கோல் சொனைக்கு சுறுக்கென நாளு குண்டான் ஊற்றினால் தேவலாம் போல இருந்தது. இனி அடுப்பைப் பற்றவைத்து தண்ணீர் காய்ந்து ஆகிறவேலையில்லை. குளுந்தண்ணியை நாளைந்து குண்டான் ஊற்றிக்கொண்டு, உடம்பைத் துவட்டிக்கொண்டு பொடக்காலியிலிருந்து வெளியே வந்தேன்.

திண்ணையில் இரண்டு காப்பித் தம்ளர்கள் காய்ந்து கிடந்தன. தண்ணீர் சொம்பும் தூணோரம் இருந்தது. யாரோ வந்திருக்க வேண்டும். அம்மா படலைத் தள்ளிக்கொண்டு இடுப்பில் குடத்தோடு வந்தாள். திண்ணையில் இறக்கி வைத்துவிட்டு, காய்ந்த டம்ளரைப் பொறுக்கிக் கொண்டு, தண்ணீர் சொம்மை முள்ளைக் கொடிக்கு வீசி ஊற்றினாள்.

யார் வந்தார்கள் என்று அவளாகவே சொல்லட்டும். என்ன ஏது எனக்கேட்டாள் ஒரு பாட்டம் சீறி வெடிப்பாள். உள்ளே போய் நைந்த, கிழியாத சட்டையைப் போட்டுக்கொண்டு திண்ணை படியில் உட்கார்ந்தேன்.

காப்பித் தம்ளரைக் கொடுத்துவிட்டு “மணி மாமனும் அத்தையும் வந்திருந்தாங்க”

“என்னவாம்?”

“புள்ளைக்குக் கல்யாணம் பேசி முடிச்சுட்டாங்களாம். பைய சத்திரப் பட்டி ரேசன் கடையில வேலையாம். காடு, ஊடு வாசல்னு இருக்குதாம்.”

“ஓகோ. நல்ல விசயம்தான்.”

“எதுடா நல்ல விசயம். நானும் நாலஞ்சு வாட்டி கேட்டுட்டேன். புள்ளைக்கு இப்பப் பண்ணல. இன்னும் ரெண்டு வருசம் போவட்டும்னு போன தைமாசம் சொன்னான். அதுக்குள்ள பேசியாச்சுன்னு வந்து நின்னா என்னத்தச் சொல்றது?”

“அதுக்கென்ன பன்னச் சொல்றே. நீயும், உம்பட புருசனும் ஒழுங்கா பாடுபட்டிருந்தா இருக்கற சொத்தையாவது காப்பாத்தியிருக்கலாம். எல்லாம் வித்து முழுங்கிப்புட்டு நா காடு..காடா வேலைக்குப் போறேன். காட்டு வேலைக்குப் போறவனுக்கு உந்தம்பி பொண்ணக்குடுப்பானா? அவனவனுக்கு மேலதான் பாப்பான். சோத்த எடுத்துவையி. ராத்திரி வேலையிருக்குது.”

மணி மாமனுக்குப் பெரியதாகச் சொத்து எதுவும் இல்லைதான். வீட்டு நிலம் நாலைந்து செண்ட் இருக்கிறது. மாமன் தறி ஓட்டவும், அத்தை காட்டுவேலைக்கும்தான் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒரே பெண்தான். எங்களுக்குக் காடு தோட்டமெல்லாம் இருந்தபோது “புள்ளைய என் அக்கா யையனுக்குத்தான்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்பா கடன் வாங்கியது கொடுக்கமுடியாமல் போக வட்டிமேல் வட்டியாகி, தீராததுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக வைத்தியச் செலவுக்கு எனக் காட்டை விற்கவேண்டியதாகி போனது. அப்பா இறந்ததற்குப் பிறகு. வீட்டுப் பக்கமே தலை காட்டாமல் இருந்தார் மணி மாமா. இப்போதுதான் மகள் கல்யாணப் பேச்சு வந்ததும் சொல்வதற்காக வந்திருக்கிறார்.

***

பார்வதி அக்காவின் தம்பி சீனு ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டதாக ஊரே பேச்சாகக்கிடந்தது. வீட்டுக்கு வந்து கைகால் கழுவதற்குக் கூட விடாமல் அம்மா கொட்டித்தீர்த்தாள். “குமாரு சேதி தெரியுமா? நம்ம பார்வதி இருக்கால்லோ அவந்தம்பி ஒரு பொண்ணக் கூட்டீட்டு வந்துட்டானாமா? பொண்ணு படிச்ச புள்ளையாமா. அவ வேளை செய்யற துணிக்கடைக்கு நாலஞ்சு மொற வந்துருக்குமாட்டோ. எப்படியோ பேசி, பழகி கூட்டியாந்துட்டானாமா.”

பசியும், சோர்வும் உந்தித்தள்ளியது. பேசாமல் சோத்துத் தேக்சாவின் தட்டத்தைத் திறந்து பார்த்தேன். தண்ணி தான் இருந்தது. ஊர் தண்ணிக் குழாயில் இன்றைக்கு எல்லோரும் நிறைய தண்ணீர் பிடித்திருப்பார்கள். அப்படியான நாளில் தான் நிறையக் குசலம் பேசமுடியும், அதன் விளைவாள் அண்டா, குண்டா எல்லாமே தண்ணீரால் நிரம்பிவிடும்.

“சோறாக்கிலியாம்மா?”

“வடச்சட்டீல உப்புமா செஞ்சு வச்சிருக்கிறேம் பாரு.”

“ஸ்ஸோ. ஏம்மா வேற எதுனா பண்ணிருக்கலாம்ல. இட்லி, தோச சுட்டு எத்தன நாளாச்சு!!.” உப்புமாவை தோசைக் கரண்டியை விட்டு எடுத்தபோது அடலோடு வந்தது. அப்படியே வட்டலில் போட்டுக்கொண்டு திங்க ஆரம்பித்தேன்.

“ம்… இந்த ஆட்டாங்கல்லுல ஆட்டி ஆட்டி எந்தோள் சவ்வே போச்சு. ஒரு கிரைண்டர் வாங்கிப் போடுடான்னா அதக்காணா. தோச வேணுமா தோச. பார்வதி பொறந்தவம்பாரு ஒன்னுமில்லாத குடும்பந்தா. கோயமுத்தூர்ல ஒரு துணிக்கடைக்கு வேலைக்குப்போயி பெரிய எடத்துப் பொண்ண வளச்சுட்டான். பல கோடி சொத்தாம்.ஒரே புள்ளையாமா. எப்புடியும் சமாதாணம் ஆயிடுவாங்க. எல்லாமே இனி அவனுக்குத்தான.”

அம்மாவுக்கு எதுவொன்று நிகழ்ந்தாலும் அதையும், என்னையும் ஒப்பிட்டுப் பேசுவது வழக்கம். தன் அங்கலாய்ப்பை இப்படிக் கொட்டித்தீர்ப்பாள்.

“அவம் பெரிய பணக்காரனாயிட்டா அவிய அக்காவுக்கும், மாமனுக்கும் செய்யாமையா இருப்பான். கிள்ளிக் குடுத்தாக்கூட பல லட்சம் குடுப்பானே. மசுரு உள்ள மவராசி அள்ளி முடியறா, நா மொட்டத்தலச்சி மண்டைய தடவித்தாம் பாத்துக்கோனும். தா நாம் பெத்தது இருக்கே தல நிமிந்து ஒருத்தர்ட்ட பேசறானா ஒன்னா. வேலைக்குப் போவ வேண்டியது. வந்து தின்னுபோட்டு தூங்க வேண்டீது. வேறென்ன தெரீது. அவனெல்லாம் பாரு எப்படிப் பொழைக்கறான்னு.”

நீண்டு கொண்டே பேன புலம்பலைச் சமாளிக்க முடியாது. இடையில் வேறெதாவது பேசினால் இன்னும் உக்கிரமாகிவிடலாம். அள்ளி விழுங்கிவிட்டு தட்டை சலதாரையில் போட்டு விட்டு கல்லுக்கட்டுக்கு நடை விட்டேன்.

சீனு ஊருக்கு வரும்போதெல்லாம் தரம் பார்த்துத்தான் பழகுவான், பேசுவான். டீக்காக பேண்ட், சட்டை போடுவான். நோம்பி நொடிக்கு வந்து தங்கும் நாலு நாளைக்கும் விதம் விதமாக உடை உடுத்துவான். வேட்டி கட்டியோ, லுங்கி கட்டியோ பார்த்ததே இல்லை. ஒருமுறை கேட்டே விட்டேன்.

“எப்புடி சீனு பேண்ட் சட்டை போட்டுட்டே தூங்கறே. இறுக்கமா இருக்காது?”

“ஊட்டுக்குள்ளாற லுங்கிதான் கட்டுவேன். வெளிய வந்தா பேண்ட் சட்டைதான். லுங்கி வீட்டுக்குள்ளாற கட்டற அயிட்டம். கட கன்னிக்கு அதையெல்லாம் கட்டிக்கிட்டு எப்படித்தான் வெளிய போறீங்களோ. ட்ரஸ் கேடுன்னு ஒன்னு இருக்கு தெரியுமா? அதெல்லாம் உனக்கெங்க தெரியப்போவுது?”

வாயப்பொளந்து கேட்டுக்கொண்டிருப்பதைத் தவிர வேறென்ன பண்ணமுடியும். நானெல்லாம் தெக்க தாரபுரம் கட்டி, வடக்க ஈரோடு கட்டி எங்க வேலைக்குப் போனாலும் நமக்கு லுங்கிதான். சீனு வந்திருக்கும் நாளில் ஊரில் பெண்கள் கொஞ்சம் அழகாகவே காட்சி தருவார்கள். பார்வதி அக்கா வீட்டு வழியாகச் சதா நடப்பார்கள். துணிந்தவர்கள் பார்வதி அக்காவை எதன் பொருட்டாவது பார்க்கப்போய் வருவார்கள். நீ முந்தி, நா முந்தி போட்டி தான். இன்னைக்கு ராத்திரி எத்தன பொண்ணுங்களுக்கு தூக்கம் வராம கெடக்குதுவளோ.

கல்லுக்கட்டில் நாலைந்து இளவட்டங்கள் இருந்தன. ஒரு புகைப்பானை எடுத்துப் பற்றவைத்து. ஓசியில் இரண்டு கொடுத்து வாயைக்கொடுத்தேன். ஊருக்குள் ஒரே விதமான பேச்சுத்தான் ஓடிக்கொண்டிருந்தது. தனபாலுதான் சொன்னான். “நாளைக்குத் துணி எடுத்துட்டு வந்துட்டு. நாளக்கழிச்சு கல்யாணமாம்.”

மறுநாள் வேலை நேரமே முடிந்து வீடு வந்தேன். ஊரே பரபரத்துக்கிடந்தது. அங்கங்கே கூடிப்பேசிக் கொண்டிருந்தனர். “பொண்ணு வீட்டுல எப்படியோ கண்டுபுடிச்சுட்டாங்கலாமா. நேரா வீட்டுக்கு வந்தா பிரச்சனை ஆகிப்போயிடும்னு போலீசுல சொல்லி. போலீசு வந்து ரெண்டு பேரையும் கூட்டீட்டுப் போயிருக்கு” அம்மா சொன்னதும். என்னதான் நடக்குதுன்னு போயிப் பாத்துடலாம். நாளைக்கு சப்போட்டுக்கு நா வரலைன்னு பேராயிடக்கூடதுன்னு வண்டியை ஸ்டேசனுக்கு விட்டேன்.

ஸ்டேசனுக்குள் பொண்ணு வீட்டுக்காரர்கள் இருந்தார்கள். அப்போதுதான் அந்த பொண்ணைப் பார்த்தேன். இருவரும் சோடியாகத்தான் நின்றார்கள். நல்ல சோடிதான். உள்ளே அழைத்தார்கள் “உள்ள நாலஞ்சு பேர் மட்டும் வாங்க. பாக்கியெல்லாம் வெளியவே இருங்க” போலீஸ்காரர் உத்தரவு போட்டார். நாங்கள் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தோம்.

இரண்டு தரப்பையும் ஆளுக்கு ஒரு புறம் நிற்கவைத்து ஒரு போலிஸ்காரர் உட்கார்ந்து கொண்டு விசாரித்தார். சீனு தன் காதல் கதையைச் சொன்னான். ஊரில் கேட்ட அதே கதைதான். போலீஸ்காரர் சொன்னார் “இவர்ட்ட பேசுங்க. இவருக்கு சம்மதம்னா நீங்க கல்யாணம் பண்ணிக்க எந்த அப்ஜெக்சனும் இல்ல” நாற்பது சொச்சம் வயதுக்காரரைக் காண்பித்தார்.

“இவர் யாருங்க சார். பொண்ணோட அப்பாவா?”

“விசயமே தெரியாதா? நீங்க கூட்டீட்டு வந்தீங்கல. உங்க லவ்வர் . அவுங்களோட வீட்டுக்காரர். ஒரு வயசுல ஒரு பொண்ணு இருக்கு இவங்களுக்கு அது தெரியுமா? தெரியாதா? இல்ல தெரிஞ்சுதான் கூட்டீட்டு வந்தீங்களா.”

சீனு அந்தப் பெண்ணைப் பார்த்தான். அது தலைகுனிந்திருந்தது. ஜன்னலில் பிடித்திருந்த எங்கள் கைகள் பிடி விலகியது. சுப்பு கூப்பிட்டான் “வாடா மாப்ளோ போலாம் இங்கென்ன வேல. இந்தக் கருமாயத்தப் பாக்கத்தான் வந்தமாக்கும்” கூட நடந்தேன். சிரிப்பு இலேசாக எட்டிப்பார்த்தது. சுப்புவைப்பார்த்தேன். அவனும் சிரித்துக்கொண்டேதான் வந்தான். ஊரில் பல இளம் பெண்கள் இப்படித்தான் சிரிக்கக்கூடும். நேற்று விட்டுப்போன தூக்கத்தை நிம்மதியாகத் தொடரக்கூடும்.

***

ல்லுக்கட்டில் சுப்புவும், நானும் உட்கார்ந்தோம். கோமதி புள்ளையார் கோவிலுக்கு விளக்குப் போடக் கடந்து போனாள்.

“அந்தப் பொண்ணோட புருசங்கிட்டக் கேளுன்னு சொன்னதும் சீனுவோட மொகத்தப் பாக்கனுமே.” சுப்பு ஆரம்பித்தான். நான் வெடித்துச் சிரித்தேன். மெதுவாக “இந்தக் கோமதி கூட சீனு ஊருக்கு வந்துட்டா பார்வதியாக்கா தொவைக்க வர்றீங்களா? புள்ளையார் கோயிலுக்கு வர்றீங்களான்னு பார்வதியக்கா வீட்டையே சுத்திக்கிட்டிருப்பா தெரியுமா?” எனக்கு முகம் இருண்டது.

புள்ளையார் கோவிலைப் பார்த்தேன். கோமதி புள்ளையார் கோவிலிலிருந்து அம்மன் கோவிலை நோக்கி கல்லுக்கட்டையே பார்த்தபடி போய்க்கொண்டிருந்தாள். வலது கையில் ஒயர்க்கூடை பிடித்திருந்தாள். இடது கையால் “வா” என்பதுபோல ஒற்றைச் சைகை காட்டினாள்.

சுப்பு எனக்கு எதிர்ப்புறமாக உட்கார்ந்திருந்தான். “இருடா மாப்ளே புள்ளையார் கோயிலுக்குப் போயி ஒரு கும்பிடு போட்டுட்டு வந்துடறேன்.”

“என்ன குமாரு புதுசா?”

“இருடா வந்திர்றேன்”

கோமதி அம்மன் கோவில் வாசல் படியில் தீபத்திற்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தாள். நான் வரும் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.

“என்ன புதுசா கோயில் பக்கமெல்லாம்?”

“சும்மாதான் அம்மனை பாத்து கோரிக்கை ஒன்ன வெச்சுட்டுப் போலாம்னு வந்தேன். ஏ வரப்படாதா?”

“வரலாம். யாரு வேண்டான்னு சொன்னா? கோயிலுக்கு இப்படி லுங்கியோடவா வருவாங்க. வேட்டி கட்டீட்டு வரலாம்ல.”

“இது நம்ம சாமி ஒன்னும் சொல்லாது. அதில்லாம வேட்டி கட்டீட்டு நானென்ன சோடியாவா வாரேன். வாரப்ப வேட்டி கட்டீட்டு வந்தாப் போச்சு.”

விளக்கை ஏற்றிவிட்டு பிரகாரத்தைச் சுற்றி வர நடந்தாள். கோமதியின் பின்னாடியே நானும் போனேன்.

“சோடி அமைஞ்சுடுச்சா?”

“எங்க நானும் கோயில் கோயிலா அலையிறேன். ஒன்னும் அமையமாட்டேங்குதே.”

“நான் மஞ்ச வெட்டறதுக்கு சோடி அமைஞ்சுட்டுதான்னு கேட்டேன்.”

“நான் ரெண்டுக்கும் அமையளைன்னுதான் கோயிலுக்கு வந்தேன்.”

“ஓ..கோ.. நாவேனா சோடியா வரவா?”

“ஒன்னுக்கா, ரெண்டுக்கா.”

“ச்சீய்… கருமாந்தரம். கோயில்ல நின்னுக்கிட்டு என்ன பேச்சு இது.” கோவமாக முறைத்தாள்.

“இல்லை கோமு. ஒரு விசயத்துக்கா, இல்ல ரெண்டு விசயத்துக்கான்னு கேட்டேன்.” பதிலே சொல்லாமல் திருநீறு எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டாள். நானும் பூசிக்கொண்டு கோமதியையே பார்த்துக்கொண்டிருந்தேன். குங்குமத்தை வைத்துக்கொண்டு கொஞ்சமாகக் குங்குமத்தை எடுத்து நீட்டினாள். இரண்டு எட்டு வைத்து கையை நீட்டினேன். கையில் படுமளவுக்குக் கொடுத்துவிட்டு

“ரெண்டுக்கும்தான்.”

குங்குமத்தை வைத்துக்கொண்டு நிமிர்ந்து “நாளைக்கு கல்லுக்கட்டுல நிக்கறேன். வந்துரு ஒன்னாப் போயிடலாம்.”

“எல்லாம் பேசி முடிக்கட்டும் ஒன்னாவே போலாம். ம்” கோமதிக்கு புருவம் உயர்ந்து தாழ்ந்தது. நான் தலையை மட்டும் ஆட்டினேன். கோமதி போன பின்பு கொஞ்ச நேரம் கழித்து கைல்லுக்கட்டுக்குப் போனேன். சுப்பு ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

“மாப்ளே சோடி அமஞ்சுடுச்சுடா”

“எதுக்கு குமாரு.”

“எல்லாத்துக்கும்தான்.”


 

எழுதியவர்

மதன் ராமலிங்கம்
மதன் ராமலிங்கம்
ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் சார்ந்த மதன் ராமலிங்கம் விவசாயம் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் எழுதிய சிறுகதைகள் ”தொலாக்கெணறு” எனும் பெயரில் நூலாக நடுகல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அன்பழகன்
அன்பழகன்
5 months ago

நிலத்தையும் நிலம் சார்ந்த மொழியையும் மிக அழகாக கதைகளில் பயன்படுத்துவோரில் மதன்.. நீங்களும் ஒருவராக வளர்ந்து வருகிறீர்கள். கதை நல்ல நடையில் இருக்கிறது. ஜீவன் இருக்கிறது.

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x