18 July 2024

நீண்ட நேரமாக செல்லமுத்தன் பேசிக்கொண்டே இருந்தான். அவன் முகம் போன போக்கினை வைத்தே “ஓ..அவரா.” என்பேன். “ஆ…” என கையில் தட்டிவிட்டு மீண்டும் பேசுவான். அப்படி என்னதான் பேசுகிறான் என்பதை அறிய நீங்கள் பக்கத்தில் வந்தால் மண்டை குழம்பிப் போவீர்கள். செல்லமுத்தானுக்கு  எல்லா வார்த்தைகளின் ஒலியும் ” தா… தபா..தபா” என்பதற்குள் அடங்கிவிடும். தமிழோ, இந்தியோ எந்தப் பாகுபாடும் இல்லை. எந்த மொழிக்கும் “தா….தபா..தபா” தான். எத்தனை நாள் தான் பேசுவதை புரிந்து கொள்பவர் இல்லாமல் பேசாமல் இருந்தானோ. என்னைப் பார்த்ததும் கொட்டித் தீர்க்கிறான். பேசட்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  செல்லமுத்தானின் “தா.. தபா..தபா” எனக்கு எப்போது புரிய ஆரம்பித்தது என்றால், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கிணறு வெட்டும் வேலைக்குப் போன போதுதான். அங்கேதான் முதன்முதலாக செல்லமுத்தன் எனக்கு அறிமுகம்.

நல்ல வெய்யில் காலம். அந்த ஆண்டு மழை பொய்த்துப் போக, கீழ் பவானி அணை தண்ணீர் வரத்தில்லாமல் வறண்டு போனதாக செய்தியில் சொன்னார்கள். அணையின் பாசன வசதியை நம்பியிருந்த எங்கள் நிலம் வறட்சியை நோக்கிப் போனது;  தண்ணீர் இல்லாமல் விவசாயமும் இல்லாமல் போனது. விவசாயக் கூலியை நம்பியிருந்த என்னைப் போன்றவர்களுக்கு வேலையில்லாமல் போக, கூலி வேலைக்குப் போவோர் எல்லாம் கிணறு வெட்டப் போனார்கள்.

கிணறு வெட்டும் போது தவறி விழுந்தது. வெடிக்காமல் போன வேட்டு கடப்பாரையால் குத்தும்போது வெடித்து,  கல் தவறி விழுந்தது என்று வாரத்தில் ஒரு மரணச் சம்பவமாவது காதுக்கு வந்துவிடும். ஆனாலும் வேலைக்கு ஆளாய்ப் பரப்பார்கள். வேறுவழி?  பசியென்பது எல்லோருக்கும் பொதுதானே. அதையும் மீறி எத்தனையோ தேவைகளும் இருந்தது.

எனக்கு தலைக்குமேல் தேவை இருந்தது. மூன்று ஏக்கர் தோட்டம் குத்தகைக்கு ஓட்டிக்கொண்டிருந்தேன். குச்சிக்கிழங்கும், மஞ்சளும் தண்ணீர் இல்லாமல் ஏழாவது, எட்டாவது மாதத்திலேயே வெட்டிகாசு பார்த்தாயிற்று. வந்தகாசு குத்தகைக்கும், முட்டுவலிக்குக் கடன் வாங்கியதற்கு கொடுக்கவே பத்தும் பத்தாததாக இருந்தது. பிள்ளைப் பேருக்கு  வீட்டிற்கு வந்துவிட்ட அக்காவிற்கு தேவை செய்ய வேண்டும். மாட்டுக்கு கூளம் இல்லை. இரண்டு மூன்று வாரக் கூலியைச் சேர்த்து வைத்தால் ஒரு டிராக்டர் வைக்கோல் வாங்கலாம். எங்கே சேர்த்துவைக்க வாரம் எவ்வளவு சம்பாதித்தாலும் வாய்காலில் மாடு மொன்டதுபோல கரைந்துபோகிறது.

வேலைதேடி அலைவது கிடைத்த வேலை செய்வது என்றிருந்த நாளில் பக்கத்து காட்டில் கிணறு வெட்டும் செய்தி கேட்டு வேடிக்கை பார்க்கப்போனேன். இரண்டு மூன்று நாட்கள் எவ்வளவு ஆழம் போயிருக்கிறது என்று கிணற்றை எட்டிப்பார்த்துவிட்டு வருவேன். கிணற்றின் உள்ளேயிருந்து வரும் கூடையை இழுத்து மண் மேட்டில் வைத்து, மறுகூடையை மாட்டிவிட்டு, இருவர்கூடையை கொஞ்ச தூரம் சுமந்து சென்று சரிவில் கொட்டவேண்டும். தூக்குவதற்கு சிரமப்பட்டுத் தூக்கிப்போனார்கள்.

” ஏங்க நாயக்கரே ! மேல கூட சுமக்கறாங்களே அவங்க பொழுதுக்கும் சொமக்க முடியுமா? கூட ஒருத்தரு குறுக்குத்தடி போட்டா பாரமும் கொறையும் வேலையும் சுலுவா முடியுமல்லங்க.”

“எப்பிடி” என நாயக்கர் கேட்டார். தாவி மண்மேட்டில் ஏறி கூடையின் இரு காதில் நுழைத்திருந்த தடிக்குக்கீழ் ஒரு தடியைப் போட்டு ” இப்ப தூக்குங்க பாக்கலாம்.” கூடை விரைவாக போய் கொட்டிவிட்டு வரமுடிந்தது. நாளைந்து கூடை கொட்டிவிட்டு வந்தோம். கீழே இறங்கி வந்துநாயக்கரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

“மேல ஒரு ஆள் போடுங்க நாயக்கரய்யா. கூட தலுங்காது பாருங்க.”

“ஆமாங்க தம்பி போட்டுட்டா கொஞ்சம் சிரமம் இருக்காதுதான். நம்ம கிட்ட தோதான ஆள் இல்லைங்களே. பேசாம நீங்களே வாங்களேன்.”

“நானா. எனக்கு கெணத்து வேல தெரியாதுங்களே.”

“அதென்னங்க பிரமாதம். மேல கயிறு இழுக்கனும். கூட தூக்கனும். உள்ள குப்ப வழிக்கறாப்புல மண்ணு கல்ல அள்ளிப் போடனும். மேல மம்புட்டி வேல மாதிரிதானுங்க உள்ளேயும் செய்யனும்.  நாளைல இருந்து வாங்க. வேலய நாங் கத்துக்கொடுக்கறேன். என்ன சொல்றீங்க?”

வேலையில்லாத காலத்தில் கிடைத்த வேலை செய்வோம் என்றிருந்தது. இருந்தாலும் ஒரு வித பயமும் இருந்தது. இரவு முழுவதும் தூக்கமே பிடிபடவில்லை. காலை நேரமே கிணத்து மேட்டில் இருந்தேன். கிணற்று வேலைக்கு வருபவர்கள். ராக்கெட் விடும் விஞ்ஞானி பேல துணி மாட்டியபடியே பேசிக்கொண்டு வந்தார்கள். நாயக்கரும் வந்தார்.

” வந்துட்டீங்களா? வரலீனா. ஆளுடலாம்னு இருந்தேன். இன்னைக்கு மேல யாரு.”

“சுப்புவும், முத்துவும் தூக்கட்டும். நாளைக்கு நாங்க மேலயே நிக்கிறோம்.” என்றார் ஒருவர். சுப்புவும், முத்துவும் சினேகமானார்கள். ஒரு வாரம் கூடை தூக்கினேன். கயிறு இழுத்தேன்.

மறுவாரம் கிணறுக்கு உள்ளே போகச் சொன்னார்கள். துணிந்தவனுக்கு கடலும் கிணறு மட்டம் என்பவர்கள் தண்ணீர் இல்லாத வறண்ட கிணற்றில் இறங்கிப் பார்க்க வேண்டும். உள்ளே போகப்போக பூமிக்குள் இவ்வளவு ஆழம் தோண்டிப்போக முடியுமா என்றிருந்தது. முதலில் அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். ஒரு துண்டு வானம் மட்டுமே தெரிந்தது. அது பொண்ணப்பன் கடை கேக்கைப்போல சதுர வடிவில் தெரிந்தது. சுவாசிக்க காற்று போதாமல் இருந்தது. நேரம் ஆக ஆக பழக்கமாகிப்போனது.

கூடை வருவதற்குத் தாமதமாகும் போது கிணற்றைச் சுற்றிப் பார்த்தால் நீர் ஓழுகிய தாரைகள் தெரியும். எங்காவது சின்னதாக ஊற்று வரும் இடத்தில் கல் வைத்து முட்டுக்கொடுத்து டப்பாவை வைத்திருப்பார்கள். அதில் சேகாரமாகும் தண்ணீர்தான் குடிப்பதற்கு. உள்ளே போன முதல்நாள் நிறைய தண்ணீர் குடித்தேன்.

“ரொம்ப குடிக்காதீங்க தம்பி வயிறு டொம்முனு ஆகிடும்.” என்பான் முத்து.

“எனக்கொரு சந்தேகம் ஒன்னுக்கு வந்தா ஒன்னுக்கு வந்தா எங்கபோறது”

“அப்பிடி மூலைல இருந்துட்டு வந்துடுங்க

“அட..ஏ..சுப்பா கெணத்துக்குள்ள யாராவது ஒன்னுக்கு இருப்பாங்கலா. கெணறு கங்கையல்லோ.”

“அதுக்குன்னு சும்மா, சும்மா மேல போயி மோண்டுட்டு வரமுடியுமா?”

அவர்கள் நடந்து கொள்வதை பார்த்து நானும் பழகினேன். மூன்று மாதம் அந்தக் கிணறு வேலை நடந்தது. கிட்டத்தட்ட எல்லா வேலையும் செய்யக் கற்றுக்கொண்டேன். கொடுமுடிக்குப் பக்கத்தில் கிணறு வெட்ட அடுத்த போனார்கள். இங்கிருந்து போய்வர தொலைவு என்பதால் நான் போகவில்லை.

ரங்கசாமி மாமன் கோட்டைப்புதூர் செட்டில் வேலை செய்தார். தினமும் ஸ்கூட்டரில் வேலைக்குப் போய்விட்டு வருவார். என்னையும் வேலைக்கு கூட வருகிறாயா எனக்கேட்டார். அடுத்த நாளிலிருந்து

நானும் கோட்டைப் புதூர் செட்டில் சேர்ந்து கொண்டேன். விளக்கேத்தியிலிருந்து முத்தூர் போகும் வழியில் கிணறு வெட்ட அன்றைக்கு மரம் நட்டார்கள். பணை மரம் ஊன்றி, ராட்டை மரம் கூடை மேலே வரும் போது கிழக்குப் புறமாக வரும் வாகு பார்த்து விசுவு ரோப்புகள் இறுக்கியும், தளர்த்தியும் பார்த்து கட்டவே மதியம் ஆகிவிட்டது. அத்தோடு அன்றைய வேலையும் முடிந்தது.

அந்த நாளைக் கூலி வாங்க தயங்கி நின்றோம். செட்டின் கொத்துக்காரன் செந்தில் அப்போதுதான் வயனமாக ஏதேதோ வேலை செய்து கொண்டிருந்தான். பசி வயிற்றைக் கிள்ளியது. பேசாமல் போய்விடுவோமா? மரம் நடும் நாளில் அன்றைக்கான சம்பளத்தை கொடுத்துவிடுவது என்பது ஒரு முறை. சில செட்டுகளில் மரம் நடும் அன்றைக்கு செய்யும் வேலைக்கு கூலியே கிடையாதென்பதும் கேள்விப்பட்டதுண்டு. இந்த செட்டில் எப்படியோ எனத்தெரியாது?.

“மாமா வாங்க போலாம். கொத்து வர்ற மாதிரி தெரியல. வேல முசுங்கறமா இருக்கறாப்பிடி.”

ரங்கசாமி மாமன் தண்ணீரை அள்ளி முகத்தில் அடித்துக்கொண்டு துண்டை உதறி முகம் துடைத்துக்கொண்டு செந்திலைப்பார்த்து “ஓய்..மாப்புளேய்..அப்படியே நாங்க கிளம்புறோம். மாப்ளேய்.”

கைகால்களைத் துடைத்துக் கொண்டு கிட்ட வந்தவர் மெதுவாக ” இன்னைக்கு வாங்காம போனா  நாளைக்கு ஏ என்ன அவசரம் கூலி வாங்கறதுக்குள்ள அப்படீம்பானுவ. ஏதாச்சிம் அசம்பாவிதம் ஆச்சுனா அன்னைக்கு மொத நா கூலி இல்லைன்னு ஏதோ பேசீட்டீங்க. அதனாலதான் ஆச்சும்பானுக. எதுக்கு கெரகத்த தலைல சுமக்கனும். இரு வரட்டும்.”

நாளைக்கு சேறெடுப்பு முடிந்து மேல் மட்டம், உள் அளவுகள் அளக்கப்பட்டு அடிமண் வாகைப் பொறுத்துத்தான் கூலி பேசி முடிவெடுப்பார்கள். நாளைப் பொழுது சேரெடுக்கவே சரியாகிவிடும். சில கிணறுகள் தண்ணீர் குறையவே குறையாது. நாலு மணிநேரம் தான் ஓடும் என்பார்கள். கிணறு வெட்ட வரும் போது ஆறு மணிநேரம், ஏழு மணிநேரம் வரைக்கும் ஓடும். காட்டுக்காரர் கொஞ்சம் உசார் போல இன்றைக்கே கிணற்றை காலி செய்ய மோட்டார் போட்டுவிட்டார். வாய்க்காலில் கரும்புச்சாறு மாதிரி தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது.

கொத்துக்காரன் செந்தில் வாய்க்காலில் இறங்கி கைகால்களைக் கழுவியபடியே “நீ எந்தூரு.”

இது வரை யாரும் என்னை ஒருமையில் பேசியதில்லை. இவன் பேசியதை கேட்ட மாத்திரம் அவன் மேல் ஒரு ஒவ்வாமை வந்தது. ” வேட்டுவபாளையம்ங்க.”

“அங்க யார் பையன். இதுக்கு முன்னாடி கெணறு வெட்டுக்குப் போயிருக்கறயா?”

” பொறையபாளையத்தார்னு சொல்லுவாங்க. இது எங்க சொந்த ஊர் இல்லைங்க. நாங்க குடிவந்தம் ஊடுங்க. செல்லப்ப நாயக்கர் செட்டுல வேலை செஞ்சனுங்க. அவரு கெழக்க கொடுமுடிப் பக்கம் போயிட்டாருங். போக வர சிரமம்ங்க. அதானுங்க ரங்கசாமி மாமங்கிட்ட சொன்னேன். இங்க கூட்டீட்டு வந்தாருங்க.”

” ஓ.. செல்லப்பங்கிட்ட வேலை செஞ்சியா, கம்பரஷர் குழிபோட, சம்மட்டி வேல, கூட கட்டறது எல்லாம் கொஞ்சம் தெரியும்னு சொல்லு.”

“அதுமட்டுமில்லீங்க. வெடிபோடறது, கிரேன் ஓட்டறதும் தெரியும்ங்க.”

“பாத்தா சின்னப் பையனாட்டம் இருக்கறே. இதெல்லாம் எப்பக் கத்துக்கிட்டே.”

“ஆறேழு மாசமா அவர் செட்டுல வேலைசெய்யறனுங்க. இதுகூட கத்துக்கலைன்னா எப்படீங்க?”

“அதுவும் சரிதான். இங்க வெடிபோடறது நாம் போட்டுக்குவேன். கிரேன் சத்திவேலு, ஓட்டுவான் இல்லைன்னா மாமன் ஓட்டுவாரு. நீ சம்மட்டி வேலையும், கூட கட்டற வேலைய மட்டும் பாத்தாப் போதும்.”

வெடுக்கென வந்து விழுந்த வார்த்தை குதத்தில் ஊசி ஏற்றியது போலிருந்தது. கைகால்களைக் கழுவிக்கொண்டு மேலேறி உதறிக்கொண்டு சட்டைப் பாக்கெட்டில் நூறு ரூபாய் தாள்களை இரண்டை எடுத்து நீட்டினான்.

“ரெண்டாள் கூலி பெட்ரோலுக்கு நாப்பது. சரியா?”

ரங்கசாமி மாமா தலையாட்டிக்கொண்டார்.

“லீவு போடாம வரனும்.  லீவுன்னா முன்னாடியே சொல்லிடனும். வேற செட்டுக்குப் போறாப்புல இருந்தா முன்னாடியே சொல்லிப்புடோனும். ஆமா. காலைல ஏழு மணிக்கி கெணத்து மேட்டுல இருக்கனும் சரியா?”

நானும் தலையாட்டி விடைபெற்றோம்.

“என்னங்க மாமா எறநூறக் குடுத்துட்டு கூலி, பெட்ரோலுக்கும்னு சொல்றாரு.”

“இங்க எம்பது ரூவாதான் கூலி மாப்ளே. வேலை ஒன்னும் கடுசா இருக்காது. எப்பவுமே வேலை இருக்கும். அனுசரிச்சு செய்யி. அப்புறம் பாத்துக்கலாம்.”

விசாரிக்காமல் வந்து இங்கே சிக்கிக் கொண்டோமோ? எல்லா செட்டிலும் நூறு ரூபாய்தான் கூலி. சில செட்டுகளில் நூற்றி இருபது கூட தருவதுண்டு. கிரேன் மட்டும் ஓட்ட தெரிந்தால் இருபது ரூபாய் கூலி அதிகமாகத் தரும் செட்டுகளும் உண்டு. ஒரு நாளைக்கு இருபது ரூபாய் போனால் வாரம் நூற்றி நாற்பது ரூபாய் காணாமல் போகிறதே. ரங்கசாமி மாமன் கத்தரிக்கோல் சிகரெட்டை ஸ்கூட்டர் ஓட்டியபடியே புகையை விட்டார். புகை என் மேல் முழுவதும் படர்ந்து பின்னால் ஸ்கூட்டர் புகையோடு கலந்தது.

நாயக்கர் செட்டில் இன்னார் இன்ன வேலை என்பதெல்லாம் கணக்கில்லை. எல்லோருக்கும் எல்லா வேலையும் தெரியவேண்டும். அதற்கான ஆள் இல்லை, இதற்கான ஆள் இல்லையென வேலை நிற்கக்கூடாதென்பார். வேலைக்குச் சேர்ந்த பதினைந்தாவது நாளில் கிரேன் ஓட்டக் கற்றுத்தந்தார்.

“பாஞ்சி நாளாயி நீ இன்னும் கிரேன் ஓட்டக் கத்துக்கலியா? கண்ணு பாத்தாக் கைசெய்யனும். ஒக்காறு. ஓட்டு. நா பக்கத்துல இருக்கறேன்.” பக்கத்தில் வைத்துக் கொண்டே எல்லாமே சொல்லிக்கொடுப்பார்.  ஒரு நாள் மேலே கூடை இழுத்துக் கொட்டுவதற்கு இரண்டு பேர். நாளை அவர் கிணற்றுக்குள் இறங்க வேண்டும். இப்படிச் சுழற்சி முறையில் வேலைச் செய்தாக வேண்டும். கூலியும் ஒரே மாதிரியாக நூறு ரூபாய்தான். இங்கே அப்படி இல்லை போலும்.

மறுநாள் காலை ரங்கசாமி மாமனும், நானும் நேரமே கிணற்று மேட்டுக்குப் போய்விட்டோம். அதுவரை யாரும் வரவில்லை. ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். மணி ஏழுக்கு மேல் ஆகியிருந்தது. சாகவாசமாக உடை மாற்றினார்கள். பீடியும், வெற்றிலையும் போட்டுக்கொண்டார்கள். என்னைப் பற்றிய விசாரிப்புகள் நடந்தன.

கிணற்று மேட்டுக்குப் போனோம். கிரேன் எஞ்சின் மீது கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த டயர் கூடையை எடுத்தார் ரங்கசாமி மாமா. ஆளுக்கொரு கூடை, மண்வெட்டி, கடப்பாரை, சம்மட்டியை எடுத்து வந்து தென்மேற்கு மூலையில் வைத்தோம்.

ரங்கசாமி மாமன் கிரென் எஞ்சினை ஸ்டார்ட் செய்தார். அப்போதுதான் ஆறுமுகம் சொன்னார். ” மொத்தமே அஞ்சி பேருதான் இருக்கறோம். நீங்க இங்க நாலு பேர் உள்ள போனா. கூட வாங்கிக் கொட்டறது யாரு.”

“அட ஊமையன் வரலையா. அவனிருந்தா கூட வாங்கிக் கொட்டச் சொல்லலாம்.” ரங்கசாமி மாமன் சொன்னவர். “அதா வாந்துட்டாம் பாருங்க. வார நேரத்தப் பாருங்க. ஓவ்வொருத்தரா கீழ எறங்குங்க. ஊமையன மேல நிக்கச் சொல்லறேன்.”

முதலில் இறங்குவது யார் என்பதில் தயக்கம் ஒவ்வொருத்தரிடத்திலும் இருந்தது. இது எல்லாக் கிணற்றிலும் உண்டு. முதல் நாளே கூடை இறங்கும் வாகு பார்த்து வைத்துக் கொள்வார்கள். இரண்டு மூன்று கூடை ஓட்டிப் பார்த்துக் கொள்வதும் உண்டு. இல்லை என்றால் மண்ணோடு கூடை மேலே வரும்போது சுவற்றில் மோதும். பிறகு நடு மரத்தை கல் போட்டு இடுக்கிடுவது, சைடு ரோப்பை இழுத்தும், தளர்த்தி விடுவதுமாக நேரம் ஆகி வேலை கெட்டுவிடும். கூடை நடுக்கிணற்றில் தான் இறங்கியது.

கடைசியாக நான் இறங்க வேண்டியது. ஊமையனிடம் ” நீ மேல நின்னு கொட்டு. செந்திலு வந்ததும் கீழ போயிடலாம் ” ரங்காசாமி மாமன் சொன்தற்கு “அட போடா” வெனச் சொல்லிவிட்டு கூடைக்குள் ஏறி கிணற்றுக்குள் போனான். வேறு வழியில்லாமல் நான் மேலே நின்று கூடை வாங்கிக் கொட்டும் வேலைக்கு நின்றேன்.

கூடை வர வெகு நேரம் ஆயிற்று. ஒரு வழியாக கூடை வருவதற்கான சகிம்சை செய்தார்கள். மெல்லத்தான் கூடை வந்தது. அரைக் கிணற்றுக்குள் கூடை வரும் போது ராட்டை மரத்து கயிறை இழுக்க ஆரம்பிப்போம் மேலே வந்து உருளைக்கு பக்கம் கூடை வந்து நிற்கும்போது மண் கொட்டும் இடத்திற்கு வந்திருக்கும். கொஞ்சம் கீழே விட்டு ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு “உடேய்”எனக் கத்தினாள். மண் கொட்ட வேண்டிய இடத்திற்குக் கூடையை கொண்டு போகலாம். இரண்டு ஆள் இருக்கும் பட்சத்தில் கூடையை சட்டென இறக்கிவிட்டு மறுகூடையை மாட்டிவிட்டு விடவேண்டும்.

ராட்டை மரம் இந்தக் கணத்திற்கே ‘திங்கு திங்கு’கென ஆட்டம் போட்டது. மெதுவாகக் கூடை வந்து கொட்டிவிட்டு காலிக்கூடையை மாட்டி விடுவதுவரை வேலை அவ்வளவு மெதுவாக வேலை நடந்தது. நாயக்கர் செட்டில் வெட்டப்பட்ட ஆட்டைப்போல துடியாய் வேலை நடக்கும். இங்கே சோம்பலாக வேலை நடந்தது.

காலைச் சாப்பிட்டு நேரம்பத்து மணிக்கு எல்லோரும் மேலே ஏறினார்கள். என்னி இருபது கூடைதான் மேலே வந்திருக்கும். முதலில் வந்த ஆறுமுகத்திடம் ரங்கசாமி மாமன் கேட்டார் ” எவ்வளவு சேறு இருக்கும்ங்க மாமா.”

” மூணு கெசத்துக்கு மேல வரும். கடப்பாறையே முழுவுதப்பாறோ. இன்னு ரெண்டு நாளைக்கு வழிக்கோனும்.”

ஆறுமுகம் ஒருதுளி சேறுபடாமல் மேலேறியது எப்படி.? சேறள்ளிப் போடும்போது தெறித்து விழுமே? அதிலிருந்தெல்லாம் எப்படித் தப்பித்தார். இவர் வேலைச் செய்தாரா?. வேடிக்கை மட்டும் பார்த்தாரா?

ஆறுமுகத்திற்குப் பிறகு வந்தவர்கள். சேறும் சகதியுமாகத்தான் வந்தார்கள். சாப்பிட்டு முடித்து துண்டை விரித்து சாய்ந்து கண்ணைமூடினோம். வண்டி ஒன்று வந்துநின்றது. ” எழுங்க எழுங்க மணி பதிணொண்ணாவுது இன்னும் என்ன தூக்கம்.?” வந்திருந்தது கொத்துக்காரன் செந்தில்.

” பத்தே முக்காலுக்குத் தாண்டா மாப்ளே வந்தோம். ” படுத்துக்கொண்டே ரங்காசாமி மாமன் சொன்னார்.

“எவ்வளவு சேறு இருக்கும்ங்க அண்ணா” ஆறுமுகத்தை நோக்கி செந்தில் கேட்டார். படுத்த வாக்கிலேயே, ” ஏகமா மூனு கெசத்துக்கு மேல வரும்.” சொல்லிவிட்டு மீண்டும் தூங்கிப்போனார்.

“அப்ப இன்னைக்கு ஞாயிறு, திங்க, செவ்வாயில வழிச்சு முடிச்சம்னா. புதங்கிழமை குழிபோடலாமா? ஆறுமுகத்திடமிருந்து எந்த பதிலும் வராததால் ரங்கசாமி மாமனை நோக்கிக் கேட்டார் செந்தில் ” ம்…போட்றலாம்.”

“அப்ப புதங்கிழமை லீவு வுட்டறலாம்.”

‘இதுவேறையா? வாரத்துல ஒரு நாள் லீவு, ரெண்டு ஞாயித்துக்கிழமை வேலை செஞ்சா அடுத்த ஞாயித்துக்கிழமை லீவு என வரையறைகளைச் சொன்னார்கள்.

பதிணொண்ணறை மணிக்கு கீழே இறங்கினோம். கிணற்றுக்குள் நாலுபேர். மேலே ரங்கசாமி மாமன்.  கூடை வருவதை பிடித்து, மண்ணள்ளிய கூடைக்கு கொக்கி மாட்டி விடுவதை மட்டுமே ஆறுமுகம் செய்தார். நான் எப்போதும் போல மாங்கு மாங்கென வெட்டி கூடையை நிறைத்தேன். கிரிச், கிரிச்சென கூடை மேலேறியது. ஆறுமுகம் கூடை மாட்டும் போது. ஊமையன் முக்காக்கூடை மட்டும் போடு போதுமென சைகை காட்டினான்.தலையை ஆட்டி வைத்தேன்.

அடுத்த கூடையை கொக்கி மாட்டும்போது ஊமையனைப் பார்த்தேன். ‘கூட மேல போயிட்டு வர்றதுக்குள்ள ஆளுக்கு நாலு மம்பட்டி அள்ளிப் போட்டாப் போதும். மாங்கு, மாங்குனு வேலை செய்யாதே என்பது போல சைகை. காட்டினான்.

நாயக்கர் செட்டில் வேலை முடித்து மேலேறினால் எப்படா வீட்டிற்குப் போய்ப் படுக்கலாம் என்றிருக்கும். இங்கே அந்தமாதிரி வேலையில்லை. புதன்கிழமை வேலையில்லை. வெள்ளிக்கிழமை ஐந்து நாளுக்கான கூலி மட்டுமே கிடைத்தது. வாரம் முழுவதும் வேலைசெய்து எழுநூறு ரூபாய் கூலி கிடைத்த எனக்கு இதுவொரு இழப்பாகத் தான் இருந்தது.

இரண்டாவது வாரம் முடிந்து மூன்றாவது வாரம் வேலை செய்து கொண்டிருந்தோம். ஊமையன் என்றழைக்கும் செல்லமுத்தனின் ‘தப..தபா..தபா’ எனக்கு எப்படியோ புரிந்து கொண்டேன். ஆறுமுகத்திற்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். தனக்கு மட்டும் தான் வேலை தெரியும் எனும் இறுமாப்பு கொண்டவராக இருந்தார். கல் உடைக்கும் போது வாரை பார்த்து உடைக்க கல்லைத் திரும்பிப் போட்டால் இப்படி உடைக்காதே, இப்படி உடையென சொல்வார். சில்லுச் சில்லாக உடையும். மீண்டு திருப்பிப் போட்டு நான் உடைக்க இருந்த இடத்திலேயே உடை என்பார். எல்லா வேலையும் என் தலைமையில் தான் சிறப்பாக நடப்பதாக சொல்லிக்கொள்வார். அதையும் மேலே உள்ளவர்கள் நம்புவார்கள். கீழே இறங்கவே மாட்டார்கள்.

நேற்றைக்கு குழிபோட்டு வெடித்ததை அள்ளிக் கொண்டிருந்தோம். பெரிய கல் ஒன்றை உடைத்துக் கொண்டிருந்தேன். அதைகட்டி மேலேற்றி விடலாம் என்றார் ஆறுமுகம். நான் இழுக்காது உடைத்து விடலாம் என்றேன். குரலை உயர்த்தி நான் சொல்றதைக் கேள் என்றார்.

ரோப்பை கட்டி “கல்லு வருது” எனக் குரல் கொடுத்தார். ரோப் இறுகி மெல்ல மெல்ல மேலேறியது. கிட்டத்தட்ட கிணற்று மேல் மட்டத்திற்குப் போய் கிரேனால் இழுக்க முடியவிலை. என்ஜினை ரேஸ்செய்து ஓட்டிப்பார்த்தார்கள். ராட்டை மரம் வளைய ஆரம்பித்தது. இழுக்காது கீழ வருது எனச்சத்தம் வந்தது. ஊமையன் செல்லமுத்து எல்லோரையும் ஓடச் சொல்வாதுபோல “தா..தாபா..தா..தாபா.” என்றான்.

கல் வேகமாக வந்து விழுந்தது. விழுந்து வேகத்தில் சேரும், தண்ணீரையும் வாரியிறைத்தது. எல்லோரும் தொப்பலாக நனைந்து போனோம். ஆறுமுகம் கூட நனைந்திருந்தார். மேலே என்ஜின் நிறுத்தப்பட்டது. என்ன நடக்கிறது மேலே எனப் பார்த்துக் கொண்டிருந்தோம். செந்தில் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான்.

நாங்கள் வடக்குமூலையில் ஒன்டியபடியே நின்று கொண்டிருந்தோம்.

” ஏன்டா எல்லாரும் செத்துட்டீங்களா    உசுரோட இருக்கறீங்களா? ”

எங்களுக்கு கல் விழுந்த அதிர்வின் அதிர்ச்சியைவிட செந்திலின் சொல் அதிர்ச்சியாக இருந்தது. யார் பதில் சொல்வது என்பதாக இருந்தது. ஆறுமுகம்தான் ” மேல வாரோம். கிரேன் ஸ்டார்ட் பண்ணு” என்றார்.

ஆறுமுகம் மேலே போய் என்ன சொன்னாரோ தெரியவில்லை? மேலே போன ஒவ்வொருவருக்கும் திட்டு விழுந்தது. நான் மேலே போனபோது  “ஏன்டா இத்தாச்சோடு கல்ல கட்டிவிடறீங்களே. கிரேன் இழுக்குமான்னு அறிவு வேண்டாமாடா. நீ என்ன மயிரு வேலை செய்யறே. எவனாவது செத்துட்டா எவன்டா பதில் சொல்றது.”

“நான் என்னங்க பன்னினேன். உடைக்கலாம்னு தான் சொன்னேன். ஆறுமுகம் அண்ணன் தான் போயிறும்னு கட்டிவிட்டார். அவரக்கேளுங்க. சும்மா என்னப் பேசறீங்க” கொஞ்சம் குரலை உயர்த்தினேன். செந்தில் கையை ஓங்கிக் கொண்டு ஓடிவந்தான்.

“வாய மூடுடா. கூலிக்கார நாயே. எல்லாரையும் முடிச்சுப்புட்டு போலாம்னு பாத்தியாடா”

செந்தில் திட்டுவதைப் பார்த்து ஊமையன் செல்லமுத்தன். “தா..தபா..தபா..தா..த” என முழங்கினான். அவன் பேசியது எனக்குப் புரிந்தது.

“என்னகைய ஓங்கறே. கை வெச்சுடுவியா? அதா அந்த ஆள்தான் கூட கட்டிவிடுறார். கல்லு கட்டிவிட்டதும் அந்தாளுதான். மேல போகாதுன்னு தெரியாதா? இந்தப் பையன் உடைச்சு அனுப்பலாம்னு சொன்னான். இந்தாளுதான் கேக்கல. இந்தாளுக்கு என்ன தெரியும்னு வேலைக்கு வெச்சிருக்கீங்க. உள்ள ஒரு வேலையும் செய்யறதில்ல. நாங்க மூனுபேரும்தான் கூடை கட்டறோம். கல்லொடைக்கிறோம். இந்தாளு கூடைக்கு கொக்கி மாட்டிவிட்டுட்டு  கடப்பாரையப் புடிச்சுக்கிட்டு மதுரை வீரனாட்டம் நின்னுக்கறாரு.” பெரும் சப்தமாக கத்தினான் தொடர்ந்து பேசினான்.

“சுத்தி எல்லாப்பக்கமும் கெணத்துல சாவு நடக்கறத கேள்விப்படாமயா இருக்கறோம். நாங்க ஜாக்கிரதையா இருக்கமாட்டமா? இந்தாளு செஞ்சதாலதான் கல்லு மேல வந்து விழுந்துடுச்சு. இந்தாளப் பேசாம, இந்தப் பையனப் பேசறே. அடிக்கவாரே. நான் செத்துட்டா நீ என்ன செஞ்சுடுவே. காட்டுக்காரங்கிட்ட அம்பதாயிரம் வாங்கிக் குடுப்பியா? அது எம்புள்ளைக்கு அப்பனாயிடுமா? போடா உங்கோட வேலை செஞ்சம்னா மரியாதையே இல்ல. இனி நாங்க வேலை செய்ய மாட்டோம்.”

என்னைப் பார்த்து பேசினான். ” இவனென்ன பெரிய இவனா. வா நான் வேலைக்குக் கூட்டீட்டுப் போறேன். வர்றியா இல்லையா.”

கிரேன் என்ஜினுக்கு தண்ணீர் போகும் பேரலில் கைகழுவினேன். கலங்கிய முகமாக ஊமையன் பின்னால் நடந்தேன்.

ரங்கசாமி மாமன்  “குமாரு போவாதடா இரு பேசிக்கலாம்.”

“அந்தாளு அடிக்க வந்தாரே. அப்ப நீங்க என்ன பன்னீட்டு இருந்தீங்க. நானா கல்லு கட்டிவிட்டேன்னு நீங்களும் நம்பறீங்க. இந்தாளு மொதல்ல வந்து எம்பேர்ல கதகட்டியுட்டாரு. நல்லா கூட்டீட்டு வந்திருக்கீங்க. போங்க.”

செல்ல முத்தனின் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து ஊர் வந்து சேர்ந்தேன். மறுநாள் ஒரு செட்டில் கிரேன் ஓட்டுவதற்கு வேலைக்குச் சேர்த்துவிட்டான். அங்கே கிரேன் ஓட்டுவது மட்டும் தான் வேலை. சம்பளம் நூற்றிஇருபது ரூபாய் சம்பளம். செல்லமுத்தன் வேறெரு செட்டில் வேலைக்குப் போனான். செந்தில் செட்டில் வாரா வாரம் புதுப்புது ஆள் வருவதும் போவதுமாக இருப்பதாக செல்லமுத்தன் சொன்னான்.

ஆறுமாதம் அந்த செட்டில் வேலை செய்தேன். ஆடி, ஆவணியில் மழை பெய்து காட்டு வேலைக்குத் திரும்பினோம். குத்தகைக்கு தோட்டவீட்டிற்கே குடிபோனோம். எப்போதாவது வழியில் பார்க்கும் போது “தபா..தபா.” என்பான்.

வெகு நாட்களுக்குப் பிறகு இன்றைக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வாய்த்தது. பழைய நினைவுகளைப் பேசிக்கொண்டோம். விடைபெற்று திரும்பி வரும் வழியில் செல்லமுத்தனுக்கு பேசமுடிந்திருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தேன். அவனுக்கு இருக்கும் துனிச்சல் பேசும் எனக்கில்லை என்று நினைத்தேன்.

பைக்கை வண்டிச்சாலையில் நிறுத்திவிட்டு பையை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தேன். எங்கிருந்தோ நாய் ஓடிவந்து குலைந்தது. “தா..தபா..தபா.” என்றேன். நாய் எட்டத்தள்ளி நின்று குழைத்தது.

“லொள்..லொள்”


 

எழுதியவர்

மதன் ராமலிங்கம்
மதன் ராமலிங்கம்
ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் சார்ந்த மதன் ராமலிங்கம் விவசாயம் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் எழுதிய சிறுகதைகள் ”தொலாக்கெணறு” எனும் பெயரில் நூலாக நடுகல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Subscribe
Notify of
guest

11 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
பிரபாகரன் ஆத்தூர்
பிரபாகரன் ஆத்தூர்
1 year ago

கொங்கு சொல்லாடல்களோடு மதன் ராமலிங்கம் எழுதியது முதல் தடவை வாசிக்கிறேன். கதை சிறப்பாக வந்துள்ளது. இவர் மேலும் சிரத்தை எடுத்து கதை ஆக்கத்தில் கவனம் செலுத்தினால் பெருமாள்முருகன் , இமையம்,போல உயரம் தொடலாம்.

காயத்ரி
காயத்ரி
1 year ago

தப. தப.. தபா… இதற்குள் எத்தனை கோபங்கள், குணங்கள் இல்லயா. வாழ்த்துக்களுங்க மதன்

Balaraj
Balaraj
1 year ago

கிணறு தோண்டுவது பற்றி இப்படித்தான் கதையா தெரிஞ்சி இருக்கேன்.

Ilamaransasi
Ilamaransasi
1 year ago

பசி என்பது எல்லோருக்கும் பொதுதானே..
வறுமையின் வலியை உணர வைக்கும்
வரிகள்.
எளிய விவசாயிகளின் அவலத்தை கண் முன்னே நிறுத்தி இருக்கிறது உங்கள் கதை.
தலையில் கல் விழாம விவசாயிகளை கதைல காப்பாத்திருக்கிங்க…
நம்ம வட்டார பேச்சு நடைல உங்க எழுத்து பேரழகு மதன்.
தொடருங்க..

Sivaprakasam
Sivaprakasam
1 year ago

அன்பின் வாழ்த்துக்கள் அண்ணா

“அசும்பு” அத்தனையும் வேர்வையின் சுவை

Krishnamoorthy
Krishnamoorthy
1 year ago

அருமை.
வாழ்ததுக்கள்

You cannot copy content of this page
11
0
Would love your thoughts, please comment.x
()
x