9 November 2024
article vaanamamalai

உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகளோடு பொருந்தாத நிலையில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிறது. ஆளும் வர்க்கம் பிற்போக்கான சமூக சக்தியாகிறது. அதாவது தனது நலன்களுக்கு விரோதமான முற்போக்கான மாறுதலைத் தடுக்க முயல்கிறது. மாறுதலை விரும்பும் சமூக சக்திகள் ஆளும் வர்க்கத்தை எதிர்க்கின்றன. இந்த எதிர்ப்பு படிப்படியாக ஒன்றுபட்ட செயலாக வளர்ச்சி பெறுகிறது. பழைய சமுதாய உறவுகளைப் பாதுகாக்க முயலுகிற ஆளும் வர்க்கத்தின் வன் முறைக்கு எதிராக முற்போக்கு சக்திகள் வன்முறையைப் பயன்படுத்தி எதிர்க்கத் தொடங்குகின்றன. இந்நிலையில் வர்க்கப் போராட்டம் அதிகபட்சத் தீவிரத் தன்மை அடைகிறது. இந்நிலைமையைத்தான் சமுதாய புரட்சி என்று மார்க்ஸீய வாதிகள் அழைக்கிறார்கள்.

அடிப்படை, மேற்கோப்புகளின் தீவிரமாற்றம்.

உற்பத்தி உறவுகளுக்கும், வளர்ந்து வருகிற உற்பத்தி சக்திகளுக்கும் இடையே ஏற்படும் முரண் பாடுதான் சமுதாய புரட்சியின் பொருளாதார அடிப்படையாகும். மார்க்ஸினுடைய வரையறுப்பின்படி, “உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளினுடைய வளர்ச்சிக்குத் தடையான விலங்குகளாகும்போது சமுதாய புரட்சி பிறப்பதற்குரிய காலம் நெருங்கி வருகிறது.” இம் முரண்பாடு சமுதாயப் புரட்சியால் தீர்த்து வைக்கப்படுகிறது, புதிய உறவுகள் தோற்றுவிக்கப் படுகின்றன. சமுதாய புரட்சி என்பது சமுதாய உறவுகள் அனைத்தையும் முற்றிலும் மாற்றியமைத்து புதியதொரு சமூக, பொருளாதார அமைப்பைத் தோற்றுவிப்பதாகும். எனவே புரட்சி பொருளாதார அடிப்படையையும், அதன் மேற்கோப்பையும் பெரிதும் மாற்றியமைக்கிறது. பொருளாதார அமைப்பு மாறுவதோடு மட்டுமல்லாமல் பழைய அமைப்பின் அரசியல் போக்குகள் சட்ட உரிமைகள் போன்ற மேற்கோப்புகளும் முற்றிலும் மாற்றப் படுகின்றன. தத்துவார்த்தம், அரசியல், ஒழுக்கம், சமயம். கலை முதலிய எல்லாக் கருத்துத் துறைகளிலும் புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன. சமுதாய புரட்சியின் அடிப்படைப் பிரச்னை அரசாங்க அதிகாரப்பிரச்னை ஆகும். ஒரு சமுதாயத்தின் அமைப்பை முழுமையாக மாற்றுவதற்கு அரசியல் அதிகாரம் தேவை. ஒரு வர்க்கத்தின் கையிலிருந்து மற்றொரு வர்க்கத்தின் கைக்கு அதிகாரம் மாறுவது புரட்சியின் முதன்மையான அறிகுறியாகும். இவ்வாறு அதிகாரம் மாறுவதற்கு வெவ்வேறு அளவில் வன்முறை தேவையாகலாம். புரட்சி என்றாலே வன்முறைத் தேவை என்பது பொருளல்ல. ஆனால் பிற்போக்கு வர்க்கங்கள் தமது அதிகாரத்தை வன்முறையைக் கையாண்டு பாதுகாத்துக்கொள்ள முயன்றால் முற்போக்கு வர்க்கங்கள் வன்முறையைக் கையாண்டு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முயலும். இது பற்றி மார்க்ஸ்,  “ஒரு பழைய சமுதாயம் ஒரு புதிய சமுதாயத்தைக் கருவினுள் கொண்டிருக்கும்போது வன்முறைப் புரட்சி புதிய சமுதாயம் பிரசவிக்க மருத்துவச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.
ஒரு சமுதாயப் புரட்சித் தோன்றுவதற்கு சில அகவியல் புறவியல் காரணிகள் இருத்தல் வேண்டும். இவைபற்றி லெனின் கூறுவதாவது: “ஆளும் வர்க்கங்கள் எவ்வித மாறுதலுமின்றி பழைய முறையிலேயே ஆட்சி நடத்த முடியாத நிலைமை தோன்ற வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்குள்ளே ஏதாவது ஓர் வடிவத்தில் நெருக்கடி ஏற்படுதல் வேண்டும். கொள்கை பற்றிய இத்தகைய நெருக்கடியின் போது அடக்கப்பட்ட வர்க்கங்களின் கோபம் பீறிட்டுக் கொண்டு வெளிப்படுதல் வேண்டும். ஒரு புரட்சி நடைபெறுவதற்கு சுரண்டப்படும் வர்க்கங்கள் முன்போல வாழ முடியாது என்று முடிவுக்கு வந்துவிட்டால் மட்டும் போதாது. ஆளும் வர்க்கங்களும் முன்போல் வாழமுடியாது என்ற நிலைமைக்கு வர வேண்டும்.

“அடக்கப்பட்ட வர்க்கங்களுடைய துன்பங்கள் அவர்களது சகிப்புத் தன்மையின் எல்லையை அடைந்துவிட வேண்டும். மேற் குறிப்பிட்டக் காரணங்களால் பொது மக்களின் எதிர்ப்புச் செயல்கள் அதிகப்பட வேண்டும். நெருக்கடி நிலைமைகளாலும், ஆளும் வர்க்கங்களின் செயல்களாலும் அவர்கள் செயல்பாட்டிற்கு உந்தித் தள்ளப்படுகிறார்கள்.”

மேற்கூறிய நிலைமையை புரட்சி நிலைமை என்று லெனின் அழைக்கிறார். இத்தகைய நிலைமை இல்லா மல் செயற்கையாக யாரும் புரட்சியை உற்பத்திச் செய்துவிட முடியாது. பிறவியல் நிலைமைகள் பக்குவமாகும் பொழுது மக்களின் அகவியல் உணர்வும் அதற்கு பொருத்தமாக இருந்தால்தான் புரட்சி தோன்றும். அகவியல் நிலைமை என்றால் புரட்சியை சாதிக்க வேண்டிய வர்க்கத்தின் வர்க்க உணர்வும். ஸ்தாபன பலமும், மக்களிடம் அந்த வர்க்கத்தின் செல்வாக்கும், அந்த வர்க்கத்திற்கு அரசியல் வழி காட்டக்கூடிய கட்சியின் தகுதியும் ஆகும். புரட்சிகரமான கொள்கையினால் வழிகாட்டப்பட்டு, முற் போக்கு வர்க்கங்கள் பிற்போக்கான அரசியல் அமைப்பை உடைத்தெறிந்துவிட்டு தமது வர்க்க அரசியல் அதிகாரத்தால் பழைய உற்பத்தி உறவு களை அகற்றிவிட்டு புதிய உற்பத்தி உறவுகளை ஏற்படுத்துகின்றன. பழைய சமுதாய அமைப்பு அடைய முடியாத உழைப்பு உற்பத்தித் திறனை புதிய சமு தாயம் அடைய வேண்டும். எனவே புதிய சமுதாய அமைப்பு உற்பத்திச் சக்திகளை வளர்க்கக் கூடியதாக இருக்கும். சமுதாயப் புரட்சி வர்க்கச் சமூகங்கள் வளர்ச்சி அடைவதற்கு இன்றியாமையாத நியதியாகும். பழைமையிலிருந்து புதுமைத் தோன்ற அதுவே உந்துச்சக்தியாக உள்ளது. அழியத்தொடங் குகிற சமுதாயத்தை அழித்து வளரத் தொடங்குகிற சமுதாயத்தை உருவாக்குகிறது. மனித் இனத் தின் வரலாற்று வளர்ச்சியில் திடீர் திருப்பங்களையும், துரிதமான முன்னேற்றத்தினையும் அது ஏற்படுத்து கிறது. புரட்சி, பல நாட்டு மக்களையும் செயலுக்குத் தூண்டுகிறது. சமுதாயப் புரட்சிகளின் நெறிமுறை கள் நாட்டுக்கு நாடு வேறுபடும். சில வகையான புரட்சிகள் இறுதி மாறுதலுக்குத் தயாரிப்பாக அமையலாம். இவ்வகையான புரட்சிகளுக்குப் பின் முழுமையான சமுதாயப்புரட்சி தோன்றும்.

சமுதாயப் புரட்சிக்குமுன் புரட்சியை நடத்தும் சக்தி கள் அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும். இதனை அரசியல் புரட்சி என்று கூறுகிறோம். ஒரு. பிற் போக்கு வர்க்கம் முற்போக்கு வர்க்கத்திடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டால் அதனை எதிர்ப்புரட்சி என்கிறோம். உதாரணமாக சிலியில் நடந்தது எதிர்ப்புரட்சி. திடீர் ஆட்சிக் கவிழ்ப்புகள் முற்போக்காகவுமிருக்கலாம், அல்லது பிற்போக் காகவுமிருக்கலாம். ஆட்சிக் கவிழ்ப்பின் பின் அரசி யல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பகுதி எந்த வர்க்கத்தின் நலன்களுக்குப் பணிபுரிகிறது என்பதைக் குறித்து அதனை முற்போக்கு என்றோ பிற்போக் கென்றோ கூறுகிறோம். இத்தாலியில் 1922லும், ஜெர்மனியில் 1933லும் பாசிஸ்ட்டுகளும் நாஸிகளும் திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தியது பிற்போக்கானதாகும். ஏனெனில் அவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை மிகவும் பிற்போக்கான தேசீய ஏகபோகங்களின் நலன்களை விஸ்தரிக்கவே பயன்படுத்தினார்கள். தற்காலத்தில் திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு முறை களை முற்போக்கான ராணுவப் பகுதிகள் பயன் படுத்தி முற்போக்கு வர்க்களுக்காக அரசாங்ககாரத்தை பயன்படுத்துகின்றனர். போர்ச்சுகலில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பையும், கிரீஸில் ராணுவ சர்வாதிகார ஆட்சியை பூர்ஷுவா ஜன நாயக வாதிகள் கவிழ்த்த செயலையும் மேற்கூறிய கருத்துக்கு உதாரணங்களாகக் கூறலாம். ஒவ்வொரு சமுதாயப் புரட்சியின் தன்மையும் அது எத்தகைய சமுதாய அமைப்பை ஒழிக்கிறது, எத்தகைய சமுதாய அமைப்பை உருவாக்குகிறது என்பதைப் பொறுத்திருக்கிறது. எனவே வரலாற்றில் நிகழ்ந்துள்ள சமுதாயப் புரட்சிகள் அனைத்தின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

முதன் முதலில் பண்டைய சமுதாயத்திலிருந்து வர்க்க சமுதாயம் தோன்றுதல்.

மனித வரலாற்றில் முதன் முதலில் தோன்றிய சமுதாயம் புராதன பொதுவுடைமை உறவுச் சமுதாயம் ஆகும். இதனுள் உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி பெற்றபோது வர்க்க சமுதாயம் தோன்றியது. இனக்குழு சமுதாயத்தினுள் அடிமை முறை வளர்ந்து அது அடிமை உடைமைச் சமுதாயமாக மாறியது. பாபிலோனியா, கிரீஸ், எகிப்து, ரோம் முதலிய நாடுகளில் இச்சமுதாயங்கள் நிலைபெற்று இருந்ததற்கு தெளிவான சான்றுகள் உள்ளன. அடிமைகள், அடிமைச் சொந்தக்காரர்களையும் எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ஆனால் அவை தனிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டன. பல நூற்றாண்டுகளுக்குப் பின் சுதந்திர மான விவசாயிகளின் நிலைமையும், அடிமைகளின் நிலைமையும் பொருளாதார நிலையில் சமமாகிவிட்டது. அடிமை வர்க்கமும் விவசாய வர்க்கமும் அடிமைச் சமுதாய நெருக்கடிக் காலத்தில் ஒன்று சேர்ந்து போராடத் தொடங்கின. அடிமைச் சமுதாயம் வீழ்ச்சியடைந்து நிலப்பிரபுத்துவ சமுதாயமும் ஆட்சியும் தோன்றின. அடிமைச் சமுதாயத்தைப் போலவே நிலப்பிரபுத்துவ சமுதாயமும் ஒரு வளாச்சிக் கட்டத்தையும், ஒரு வீழ்ச்சிக் கட்டத்தையும் வரலாற்றில் கடந்து சென்றது. நிலப் பிரபுத்துவத்தின் வளர்ச்சிகளின் கட்டத்திலேயே ஐரோப்பாவில் பல விவசாயிகளின் போர்கள் நடந்து வந்துள்ளன. நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து விவசாயிகளும், ஏழை மக்களும் போராடினர். பிரான்சில் 12, 13-ம் நூற்றாண்டுகளிலும், பொகிமியாவில் 15-ம் நூற்றாண்டிலும் விவசாயிகள் தீவிரமாகப் போராடினர். ஆயினும் இப்போர்களில் விவசாயிகள் தோற்றுப் போயினர். ஏனெனில், விவசாயிகள் ஒரு நல்ல அரசன் வேண்டுமென்றே போராடினார்கள். கொடுங்கோன்மையை எதிர்த்து, செங்கோன்மைக்காகத் தங்கள்மீது சுமத்தப்பட்ட நிலப்பிரபுத்துவ அடக்குமுறையை ஒழிக்க வேண்டுமென்று போராடினார்கள். சீனாவில் போராடிய விவசாயிகள் தனி அரசுகளை நிறுவியபொழுது அவை நிலப்பிரபுத் துவ கொடுங்கோன்மை அரசுகளாகவே மாறிவிட்டன. இத்தாலியில் விவசாயிகளின் புரட்சியால் நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை ஒழிக்கப்பட்ட பின் வியாபாரிகளது ஆட்சி நிறுவப்பட்டது.

நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் சமுதாயத் தின் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி நிலைக்கு ஏற்றவாறு இருந்தவரைக்கும் விவசாயிகளின் புரட்சிகள் நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க முடியவில்லை.

முதலாளித்துவ உற்பத்திமுறை தலை தூக்கிய பின்னர்தான் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை பலவீனமடையத் தொடங்கியது. முதலாளித்துவ உற்பத்தி சக்திகள், நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளோடு முரண்பட்டன. புதிய சமுதாய சக்தி முதலாளித்துவ வர்க்கமும், பாட்டாளிவர்க்கமும் அரசியல் அரங்கில் தோன்றின. முதலா ளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தோடு நிலப் பிரபுத்துவ எதிர்ப்புப் புரட்சியின் கால கட்டமும் துவங்கிற்று. இது சுமாராக 16-ம் நூற்றாண்டில் துவங்கிற்று. ஒவ்வொரு நாடாகப் பார்த்தால் முதலாளித்துவப் புரட்சியின் ஆரம்ப காலம் சிறிது முன் பின்னாக இருக்கலாம். சில நாடுகளின் முதலாளித்துவ புரட்சியின் காலங்களை கீழே குறிப்பிடுவோம்.

நார்வே, டென்மார்க்- 1566 -1609
இங்கிலாந்து – 1641 – 1653
அமெரிக்கா – 1775 – 1783
பிரான்ஸ்- 1789 -1794

ஒவ்வொரு முதலாளித்துவப் புரட்சியும் அந்தந்த நாட்டு வரலாற்று நிலைமைகளுக்கு ஏற்ப வர்க்க சேர்க்கைகளைக் கொண்டிருந்தது. இவ் சேர்க்கைகள், இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க் முதலிய நாடுகளில் வெவ்வேறு விதமாய் இருந்தன. இங்கிலாந்தில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சியில் முதலாளிகளும், முதலாளிகள் ஆகிவிட்ட நிலப்பிரபுக்களில் ஒரு பகுதியினரும் தலைமை ஏற்றனர். இதனால்தான் இப்புரட்சியின் விளைவாக நிலப் பிரச்சினையில் விவசாயிகளுக்கு ஆதரவான தீர்வு ஏற்படவில்லை. முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் சேர்ந்து நின்று விவசாயிகளுக்கு எதிராக நிலப்பிரபுக்களுக்கு நிலவுரிமை கிடைக்கும்படி செய்தனர். விவசாயிகள் முதலாளிகளோடு சேர்ந்து புரட்சிப் போராட்டங்களின் முன்னணியில் நின்ற போதும் அவர்கள் ஏமாற்றப்பட்டனர். 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் விவசாய வர்க்கம் என்ற பெயரே இல்லாமல் போயிற்று. இந் நிலைமைக்கு நேர்மாறான நிலைமை பிரெஞ்சு முதலாளித்துவ புரட்சியில் காணப்பட்டது. பிரான்சில் நிலப்பிரபுக்களில் மிகச் சில பகுதியினரே முதலாளிகளாக மாறியிருந்தனர். பெரும் பகுதி நிலப்பிரபுக்கள் விவசாயிகளை நேரடியாகவும், முதலாளிகளை மறைமுகமான வரிகளின் மூலமாகவும் சுரண்டி வாழ்ந்தனர். பிரெஞ்சு முதலாளிகள் நிலப்பிரபுத்துவ அரசையும், நிலப்பிரபுக்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு விவசாயிகளையும், தொழிலாளிகளையும் சேர்த்துக் கொள்ள முடிந்தது. நிலப்பிரபுக்களோடு கொண்டிருந்த நேச உறவுகளைக் கைவிட்டு அவர்கள் விவசாயிகளோடும், சிறு உற்பத்தியாளரோடும், தொழிலாளரோடும் நேச உறவை ஏற்படுத்திக் கொண்டனர். பிரெஞ்சு முதலாளி வர்க்கத்தினால் தலைமை தாங்கப்பட்ட புரட்சியின் விளைவாக நிலப்பிரபுத்துவ அமைப்பு, நாட்டிலும், நகரத்திலும் முழுவதுமாக அழிக்கப் பட்டது. நிலப்பிரச்சினை விவசாயிகளுக்கு ஆதரவாகத் தீர்வு காணப்பட்டது.

எப்பொழுதுமே, முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சியில் உழைக்கும் மக்களோடுதான் சேர்ந்து கொள்ளும் என்று சொல்வதற்கில்லை. அது எந்த வர்க்கங்களோடு சேரும் என்பதை ஆளும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நிலைமையும் முதலாளி வர்க்கம் உழைக்கும் வர்க்கங்களோடு கொண்டுள்ள உறவையும் பொறுத்தது. முதலாளி வர்க்கமும் ஒரு சுரண்டும் வர்க்கம். ஆதலால் உழைக்கும் மக்களால் தனது சொத்துரி மைக்கும் ஆபத்து வருமோ என்று அஞ்சுவது இயற்கையே. ஜெர்மனியில் தொழிலாளி வர்க்கத்தோடும் விவசாய வர்க்கத்தோடும் கூட்டுச்சேராத காரணத்தால் பூர்ஷுவாப் புரட்சி வெற்றி பெற முடியவில்லை.

முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் ஏகாதி பத்தியம் என்று லெனின் கூறினார். ஏகாதிபத்தியக் கால கட்டத்தில் முதலாளித்துவ நாடுகளில் வர்க்கங் களின் உறவுகள் பெரிதும் மாறுதலடைகின்றன. பல முதலாளித்துவ நாடுகளில் நிலப்பிரபுத்துவ ஒழிப்புப் புரட்சி முற்றுப் பெறவில்லை. இப் புரட்சியை நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு-முதலாளித் துவப் புரட்சி என்று மார்க்ஸீயவாதிகள் அழைக் கிறார்கள். இந் நாடுகளில் தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கமும் இப் புரட்சிக்கு உந்து சக்திகள் ஆகின்றன. தொழில் முதலாளித்துவ கால கட்டத் தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முதலாளித்துவப் புரட்சிக்கு முதலாளித்துவ வர்க்கம் தலைமை தாங்கியது. ஆனால் ஏகாதிபத்தியக் கால கட்டத்தில் பல நாடுகளில் முதலாளித்துவ வர்க்கம் நிலப் பிரபுத்துவ வர்க்கத்தோடு சேர்ந்து கொண்டது.

சார்பு நாடுகளிலும், கலோனியல் அடிமை நாடுகளிலும் நிலைமை வேறுவிதமாக இருந்தது. அந்நாடுகளில் தேசீய முதலாளித்துவ வர்க்கம், நிலையான தன்மையுடையதாக இல்லாதிருந்த போதிலும் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப் பிரபுத்துவ எதிர்ப்புத் தன்மைகள் கொண்டதாக இருக்கிறது. எனவே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முற்றுப்பெறாத இந்தியா போன்ற ஏகபோகமல்லாத தேசீய முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயக் மாற்றங்களை விரும்பும் புரட்சிகரமான சக்தியாக விளங்குகிறது.

நிலப்பிரபுத்துவ ஒழிப்புப் புரட்சிகள் இரண்டு வகையானவை. ஒன்று, உச்சத்திலிருந்து செயல்படும் முதலாளித்துவப் புரட்சி. இரண்டு, உழைக் கும் மக்கள் பெருமளவில் பங்குகொள்ளும் முதலா ளித்துவ ஜனநாயகப் புரட்சி. மக்கள் திரளாக செயல்படுவதால் இதை மக்கள் புரட்சி என்றும் கூறலாம். மேற்கூறிய முதல் வகையான புரட்சியில் விவசாயிகளும், தொழிலாளிகளும் பங்கு கொள்ளாமலேயே முதலாளித்துவ வர்க்கம், நிலப்பிரபுத்துவ எதிர்புரட்சியில் வெற்றி பெறுகிறது. இரண்டாவது வகைப் புரட்சியில் தொழிலாளிகளும், விவசாயிகளும் பங்கு கொண்டு புரட்சியின் விளைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். லெனின் தம்முடைய “அரசும் புரட்சியும்” என்ற நூலில், இவ்விரு வகை புரட்சிகளுக்கு உதாரணங்கள் காட்டுகிறார். முதல் வகைப் புரட்சிக்கு உதாரணங்களாக, 1908-ல் நடை பெற்ற (துருக்கியப் புரட்சியையும், 1910-ல் நடை பெற்ற போர்த்துக்கீசிய புரட்சியையும் உதாரணங் களாகக் கூறுகிறார். 1905-ல் நடைபெற்ற ருஷ்யப் புரட்சியை மக்கள் புரட்சிக்கு உதாரணமாக காட்டுகிறார்). துருக்கியப் புரட்சியிலும், போர்த் துக்கீசியப் புரட்சியிலும் மக்கள் பங்குகொண்ட போதிலும் பெருந்திரளாக பங்கு கொள்ளாத தினால் புரட்சியின் போக்கின்மீது தங்கள் வர்க்கங்களின் செல்வாக்கை செலுத்த முடியவில்லை.

முதலாளித்துவ வர்க்கம் புரட்சிகளில் வெற்றி பெறும்போது, நிலப்பிரபுத்துவ அரசாங்கக் கருவியை முற்றிலும் அழித்து விடுவதில்லை. அதுவே ஒரு சுரண்டும் வர்க்கமாதலால், வர்க்கச் சுரண்டலை அது ஒழிப்பதில்லை. நிலப்பிரபுத்துவ அரசாங்கக் கரு வியை முதலாளித்துவ வர்க்கம் கைப்பற்றிக் கொண்டு, தன்னுடைய சுரண்டல் தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுகிறது. இப்படி மாற்றியமைக்கிறபோது அது வெற்றி பெற்றது, முதலாளித்துவ புரட்சியின் மூலமா அல்லது மக்கள் புரட்சியின் மூலமாக என்பதைப் பொறுத்து அர சாங்க அமைப்பில், ஜனநாயக அம்சங்கள் காணப்படும். மக்கள் மிகுதியாகப் பங்கு கொண்ட புரட்சியின் மூலம் முதலாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வந்திருக்குமானால் நிலப்பிரபுத்துவ அரசாங்கம் உடைத் தெறியப்படும்.

நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு – பூர்ஷுவா புரட்சிகள், தேசீய விடுதலைப் போர்களின் வடிவத்தில் கடந்த சில நூற்றாண்டுகளின் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. அயல் நாட்டு நிலப்பிரபுத்துவ அரசு, வேறு நாட்டில் ஆட்சி செலுத்தி வந்தால் அதனை எதிர்த்து நடைபெற்ற புரட்சிப் போர்கள் விடுதலைப் போர்களாக இருந்திருக்கின்றன. இப் புரட்சிகளுக்கு உள்நாட்டு முதலாளித்துவம் தலைமை தாங்கியிருக்கிறது. மக்கள் திரளாக பங்கு கொண்டுள்ளனர். இவை முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாகவே இருந்தன. இத்தகைய புரட்சிகளுக்கு உதாரணமாக, 16-வது நூற்றாண்டில் நடைபெற்ற நார்வே, டென்மார்க் புரட்சியையும், 18-ம் நூற் றாண்டில் நடைபெற்ற அமெரிக்கப் புரட்சியையும், 19-ம் நூற்றாண்டில் நடைபெற்ற லத்தீன் அமெரிக்கப் புரட்சிகளையும் குறிப்பிடலாம். முதல் புரட்சி ஸ்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்றது. இரண்டாவது புரட்சி ஆங்கில சாம்ராஜ்யத்தின் ஆட்சியை எதிர்த்து நடைபெற்றது. மூன்றாவது புரட்சி ஸ்பானிய, போர்த்துக்கீசிய கொடுங்கோன் மையை எதிர்த்து நடைபெற்றது. இவையாவும் உள்நாட்டு முதலாளித்துவத்தின் தலைமையில் அந் நிய நிலப்பிரபுத்துவ சாம்ராஜ்ய ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்றவை. முதலாளித்துவ நாடுகள் தங்கள் அடிமை நாடுகளைச் சுரண்டுகிற வேகமும், பரப்பும் அதிகரித்தபொழுது உள்நாட்டு முதலாளி கள் அயல்நாட்டு முதலாளித்துவத்தை எதிர்த்தனர். இந்த அம்சம் ஏகாதிபத்ய மூலதன ஏற்றுமதி, கலோனியல் நாடுகளுக்கு அளிக்கப்பட்ட பொழுதிலிருந்து தோன்றத் தொடங்கியது. இந்தியாவில் நடைபெற்ற தேச விடுதலைப் போராட்டம் மக்கள் பெருமளவு பங்கு கொண்ட காரணத்தால் அது பூர் ஷுவா-ஜனநாயகப் புரட்சியாகும்.

பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சி.

வரலாற்றில் நடைபெற்றுள்ள பல வகைப் புரட்சிகளினின்றும் பாட்டாளி வர்க்க சமுதாயப் புரட்சி, பல அடிப்படையான அம்சங்களில் வேறு படுகிறது. அக்டோபர் சோஷலிசப் புரட்சி அதற்கு முன்னர் நடைபெற்றுள்ள பூர்ஷுவா புரட்சிகளி லிருந்து அடிப்படையாக வேறுபட்டது. முந்தைய புரட்சிகளில் உழைக்கும் மக்கள் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியைப் புதிய சுரண்டல்காரர்கள் பறித்துக் கொண்டு விட்டார்கள். பழைய நிலப்பிர புத்துவ சுரண்டல்காரர்களுக்குப் பதில் புதிய முதலாளித்துவ சுரண்டல்காரர்கள் உழைக்கும் மக்களின் எஜமானர்களானார்கள். முந்தைய புரட்சிகள் ஒரு வகையான சுரண்டலையும், சுரண்டல்ஆட்சியையும் ஒழித்துவிட்டு அதற்குப் பதிலாக மற்றொரு வகை சுரண்டலையும் சுரண்டல் ஆட்சியை யுமே ஸ்தாபித்தன. ஆனால் பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சியான அக்டோபர் புரட்சி எல்லா வகையான சுரண்டலையும் ஒழித்து விட்டது. சோஷ லிசப் புரட்சிக்கும் முதலாளித்துவப் புரட்சிக்கும் மற்றொரு முக்கியமான வேறுபாடு உள்ளது. நிலப் பிரபுத்துவ சமுதாயத்திற்குள்ளேயே முதலாளித்துவ உற்பத்தி ஒரு விரோதமான உற்பத்தி முறையாகத் தோன்றி விடுகிறது. அதற்குள்ளேயே இவ்விரண்டு உற்பத்தி முறைகளுக்கும் முரண்பாடு தோன்றி, முதலாளித்துவ உற்பத்தி முறை வளருகிறது. ஆனால் சோஷலிச உற்பத்தி முறை தனக்கு முந்திய உற்பத்தி முறையான முதலாளித்துவ உற்பத்தி முறையோடு சேர்ந்து முதலாளித்துவ சமுதாயத்தி லேயே தோன்றுவதில்லை. சோஷலிச உற்பத்தி முறைக்குத் தேவையான இயந்திர உற்பத்தியும் உற்பத்தி சக்திகளின் சமுதாயத் தன்மையும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் தோன்றிவிட்டபோதிலும் அவ்வுற்பத்தி முறை அழிக்கப்பட்ட பின்னர்தாம் சோஷலிச அமைப்புமுறை தோன்று கிறது. பூர்ஷுவாப் புரட்சி ஏற்கனவே வளர்ந்து வரும் முதலாளித்துவ உற்பத்தி முறையைப்பிரதான உற்பத்தி முறையாக ஆக்குவதே நோக்கமாகும். ஆனால் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் அதிகாரத் தைக் கைப்பற்றிய பின்னர்தாம் புதிய சோஷலிச உற்பத்தி முறை நிறுவப்பட வேண்டும். முதலாளித் துவ உற்பத்தி சாதனங்களை சமூக உற்பத்தி சாதனங் களாக மாற்றுவதற்கு ஒரு அரசியல் புரட்சியின் மூலம் முதலாளித்துவ வர்க்க அதிகாரத்தை ஒழித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவது அவசியம். அவ்வதிகாரத்தை பயன்படுத்தித்தான் உற்பத்தி சாதனங்களின் சமூக உடைமையையும். கூட்டுடைமையையும் நிறுவுதல் வேண்டும். இந்த மாறுதல் நடைபெற நீண்டகால வர்க்கப் போராட்டம் நிகழ வேண்டியது அவசியமாகும். இக்கால கட் டம் முழுவதும் சோஷலிசப் புரட்சிக் கால கட்ட மாகும். இக்கால கட்டத்தில் அரசியல், பொருளாதார, பண்பாட்டு வாழ்க்கை முழுமையாக மாற்றியமைக்கப்படுகிறது. முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறுகின்ற புரட்சிகரமான மாற்றம், படிப்படியான பரிணாம மாற்றத்தால் ஏற்பட முடியாது.

20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாளித் துவ அமைப்பு ஏகாதிபத்தியமாக வளர்ச்சி பெற்றது. முற்போக்கு சக்திகள், ஏகாதிபத்தியத்தை ஒழிக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டன.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சில புரட்சிகரமான இயக்கங்களிலிருந்து சோஷலிஸப் புரட்சி தோன்றக்கூடும். முதலாளித்துவப் பாதையில் சிறிது தூரம் முன்னேறிய நாடுகளில், சோஷலிஸப் புரட்சி தோன்றுவதற்கு முன்னர், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி இயக்கங்கள் தோன்றலாம். பொருளாதார அரசியல் துறைகளில் நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்களை அகற்ற அது முற்படும். இப் புரட்சிகள் ஏகாதிபத்ய எதிர்ப்புத்தன்மை கொண்டிருக்கும்.

உலக முதலாளித்துவ அமைப்பு, சோஷலிஸப் புரட்சிக்கான பக்குவ நிலையடையும் பொழுது. விவசாயி வர்க்கம், பாட்டாளி வர்க்கத்தோடு கூட்டுச் சேர்ந்து ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடும் பொழுது, முதலாளித்துவ-ஜன நாயகப் புரட்சி வெற்றி பெற்ற சிறிது காலத்திற்குள்ளேயே சோஷலிஸ்டுப் புரட்சியின் கடமைகளைப் பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள இயலும்.

நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துவிட்ட முதலாளித்துவ நாடுகளில், சோஷலிஸப் புரட்சிக்கு முன்னர் ஏகபோக எதிர்ப்பு-ஜனநாயகப் புரட்சிகள் தோன்றி, அவை வெற்றியடைந்த பின்னரே சோஷலிஸப் புரட்சிக்குரிய தன்மைகள் பக்குவமடையும்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக ஏகபோகங்கள் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து தங்கள் சுரண்டலை உலக முழுவதற்கும் விஸ்தரித்துள்ளன. சுரண்டல் வர்க்கம் உலக முழுவதையும், சுரண்டல் களமாக ஆக்கிக் கொண்டிருக்கிற நிலைமையில் உலக மக்கள் அனைவருமே, ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்க்கும் மாபெரும் சக்தியாக வளர்ச்சி பெறுகிறார்கள். எனவே. ஏகபோகங்களை எதிர்த்து பாட்டாளிவர்க்கம் நடத்துகிற போராட்டத்திற்கு, அறிவாளிப் பகுதிகளும் விவசாயிகளும், நகர நடுத்தர மக்களும், செயல் பூர்வமான ஆதரவளிக்கிறார்கள்.

அவர்களே ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரணியில் சேருகிறார்கள். இதனால் புரட்சிகரமான தொழி லாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் சமுதாய அடிப்படை பெரிதும் விரிவடைகிறது. முத லாளித்துவ ஏகபோகங்களை எதிர்க்கும் ஏகாதி பத்திய எதிர்ப்பணி, பரப்பும் பலமும் அடைகிறது.

சீர்திருத்தங்களுக்காகவும் ஜனநாயகத்திற்காக வும் மக்கள் நடத்தும் போராட்டம், அவற்றின் குறு கிய எல்லைகளைக் கடந்து, ஏகபோக எதிர்ப்பு-புரட்சி போராட்டமாக உருவெடுக்கிறது. “ஜனநாயகக் கோரிக்கைக்காக உழைக்கும் மக்கள் நடத்தும் போராட்டம், சோஷலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியே என்று 1960 மாஸ்கோ அறிக்கை கூறுகிறது. இப் போராட்டத்தில் பங்கு கொள்ளும் மக்கள் பகுதிகள், தம்மிடையே ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளுகிறார்கள். போராட்டங்களின் மூலம் அரசியல் உணர்வு மக்களிடையே வளருகிறது. சோஷலிஸப் போராட்டத்தின் கடமைகளை உணர்ந்துகொண்டு, அவற்றை நிறைவேற்றும் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

இப் புதிய நிலைமைகள் உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆதரவான சாத்தியப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. பல முதலாளித்துவ நாடுகளில் இந்த வர்க்கக் கூட்டாளி ஏகபோக ஆதிக் கத்தை முறியடித்து, அதன் ஆட்சியை அகற்றி, உழைக்கும் வர்க்கங்களின் கூட்டாட்சியை நிறுவுகிற புரட்சியை நிறைவேற்ற முடியும். இவ்வர்க்கங்களுக்கு தொழிலாளி வர்க்கமே தலைமை தாங்கி வழிகாட்ட இயலும். ஏகபோக எதிர்ப்பு – ஜன நாயக மக்கள் அரசு அமைத்தால், அது விரைவிலேயே தொழிலாளி வர்க்கத்தின் சோஷலிஸப் புரட்சியாக உருவாகி வளர முடியும்.

தேசிய விடுதலைபெற்ற நாடுகளில், ஜனநாயகப் புரட்சி சக்திகள், உலக ரீதியான வர்க்கச் சேர்க்கையில் ஏகாதிபத்திய – ஏகபோக – எதிர்ப்புப் பேரணியில் ஒரு முக்கியமான படைப் பிரிவாகும். அந் நாடுகளில், உள்நாட்டு ஏகபோகங்களும், நிலப் பிரபுத்துவமும், அயல் நாட்டு ஏகபோகங்களோடு கைகோர்த்துக் கொள்வதால், அந்நாடுகளின் புரட்சிக் கடமைகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப் பிரபுத்துவ எதிர்ப்பாக இருக்கும். இந்தியாவில் புரட்சியின் நிலைமை இதுதான். ஏகாதிபத்திய நிலப் பிரபுத்துவ எதிர்ப்புக் கடமையைத்தான் இந்தியாவின் புரட்சிகரமான வர்க்கங்கள் மேற்கொண்டுள்ளன. இந்தப் புரட்சியில் இந்திய தேசீய முத லாளிகளுக்கும் பங்குண்டு. அவர்களுடைய இரட் டைத் தன்மையை அறிந்த தொழிலாளி வர்க்கமும், கம்யூனிஸ்டுக் கட்சியும், நிலப்பிரபுத்துவ ஏகாதிபத் திய எதிர்ப்பு நிலைகளில் அவர்களுடைய பிறழ்ச்சியையும், ஊசலாட்டத்தையும் உறுதியாக எதிர்த்து, அவர்களை மக்கள் போராட்ட இயக்கத்திற்குக் கொண்டு வருகிறது. இக் கடமையை தொழிலாளி வர்க்கம், தேசீய முதலாளி வர்க்கத்தின் நாடியைத் தாங்கிச் செய்வதில்லை. விவசாயி வர்க்கத்தோடு உறுதியான நேச உறவை ஏற்படுத்திக் கொண்டு, இயக்கத்தையும், கூட்டணியையும் பலப்படுத்துவதன் மூலமாகவே, முதலாளிகளின் பிறழ்ச்சியையும் ஊசலாட்டத்தையும் தடுத்து நிறுத்துகிறது.

தேசிய விடுதலை இயக்கம்பற்றிய லெனினுடைய புகழ் பெற்ற வாசகம் இங்கே கருதத்தக்கது.

“ஏகாதிபத்திய அறிவாளிகள், பொருளாதார விடுதலையை ஒதுக்கிவிட்டு, அரசியல் விடுதலையையே வற்புறுத்துகிறார்கள். ஆனால் பொருளாதார விடுதலையே இரண்டினுள் முக்கியமானது.”

புதிதாக விடுதலை பெற்ற நாடுகளில் சுயேச்சையான பொருளாதார வளர்ச்சி ஏற்படாதபடி ஏகாதிபத்தி யங்கள் தடுக்கின்றன. வளர்ச்சியடையாத நிலையில், இந்நாடுகளின் பொருளாதாரத்தோடு பிணைத்து, தங்கள் சுரண்டலைப் பாதுகாத்துக் கொள்ள ஏகாதி பத்தியவாதிகள் திட்டமிடுகிறார்கள். இதனாலேயே அரசியல் விடுதலை பெற்றவுடன், அடிமை நாடுகளின் புரட்சி இயக்கம் முடிந்து விடுவதில்லை. அது புரட்சி யின் மற்றோர் பகுதியின் ஆரம்பமே. அரசியல் விடுதலை பெற்றதும், சுதந்திர தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த வாய்ப்பு தானாகவே பழுத்து விடுவதில்லை. இந்த வாய்ப்பு செயலாகி விடாதபடி, ஏகாதிபத்தியங்கள் தடைசெய்கின்றன. இத்தடையை நீக்க ஏகாதிபத்திய பொருளாதாரப் பிணைப்புகள் அகற்றப்படுவதற்காக விடுதலை பெற்ற நாடுகள் போராட வேண்டும், இதுவே விடுதலைப் புரட்சியின் இரண்டாவது கட்டம். இந்நாடுகள் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருப்பதற்கு அவற்றின் தொழில்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதே காரணம். இவை, தங்கள் தொழில்களை விரைவாக வளர்த்துக் கொள்ள வேண்டும். பின்தங்கிய நாடு களே, ஏகபோகங்களுக்குச் சந்தைகளாகவும். சுரண்டல் வேட்டைக் காடுகளாகவும் இருக்கும். ஆதலால், இந்நாடுகளின் தொழில் வளர்ச்சியை ஏகபோகங்கள் விரும்பமாட்டா. உள்நாட்டு நிலப் பிரபுத்துவத்தை ஒழிக்காமல் நவீன இயந்திரத் தொழில்களை வளர்க்க முடியாது. எனவே தொழில் வளர்ச்சிக்கு நிலப்பிரபுத்துவ அமைப்பு ஒழிக்கப் படுவது அவசியம்.

இந்நிலையில் கடுமையான வர்க்கப் போராட் டம் நிகழ்கிறது. ஏகாதிபத்திய ஆதரவு- நிலப்பிர புத்துவ பிற்போக்கு சக்திகள், தங்கள் பலம் முழுவ தையும் திரட்டி, ஏகாதிபத்திய எதிர்ப்பு-நிலப் பிரபுத்துவ சக்திகளனைத்தையும் எதிர்த்து உக்கிர மாகப் போராடுகின்றன. முதலாளித்துவ நெருக் கடியால் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைப் பயன் படுத்திக்கொண்டு, ஜனநாயகத்தையும், முற்போக் குப் பாதையையும் தாக்குகின்றன. சோவியத் எதிர்ப்பு சோஷலிஸ எதிர்ப்பு பாதையில், அதிர்ச்சியுற்ற மக்களைத் திருப்பிவிட பெரு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. முற்போக்கு சக்திகள் ஒற்றுமைப்படும் பொழுது, பிற்போக்கு சக்திகளும் தங்கள் பலம் அனைத்தையும் திரட்டி, வரலாற்றை பின்னோக்கித் திருப்ப முயலுகின்றன. இவர்களிடையே பாஸிஸ சக்திகள் தலை தூக்குகின்றன. மார்க்ஸிஸ அறிவில்லாத போலி மார்க்ஸிஸ்டுகளும், எந்தக் கலகமும் புரட்சியென்று நம்பி தங்கள் குரலையும், கலகக் கூச்சலோடு சேர்த்து ஒலிக்கின்றனர்.

முற்போக்கு சக்திகளும், பிற்போக்கு சக்திகளும், புரட்சிப் போராட்டக்களத்தில், மகாபாரதப் போரில் பாண்டவர்களும் கௌரவர்களும் நின்றது போல் நிற்கிறார்கள்.

இப்போராட்டம் இருவகையான பாதைகளுக் கான போராட்டம். அவை முதலாளித்துவப் பாதை, முதலாளித்துவமற்ற பாதை என்பனவாகும். நமது நாடு முதலாளித்துவப் பாதையில் சென்றுவருகிறது. மக்கள் இயக்கங்களால் இப்பாதையை மாற்ற தொழிலாளி வர்க்கமும் கம்யூனிஸ்டுக் கட்சியும் போராடுகின்றன. பழைய பாதையில் தங்குதடையின்றிச் செல்ல வேண்டும் என்பதற்காக பிற்போக்கு சக்திகள் போராடுகின்றன.

கடந்த பதினைந்து ஆண்டு அனுபவத்தில் விடுதலை பெற்ற நாடுகள், முதலாளித்துவமற்ற பாதையில் சென்றால், சோஷலிசத்துக்குரிய பொருளாதார அடிப்படைகளை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை உலக கம்யூனிஸ்டு இயக்கம் அறிந்துள்ளது. புதிதாக விடுதலையடைந்த வளர்ச்சியடையாத நாடுகள், ஏகாதிபத்தியச் சார்பு நிலையிலிருந்து விலகி, சோஷ லிஸ்டு அணியோடு நேச உறவு கொண்டால், சுயேச்சையான வளர்ச்சியை அடைய முடியும் என்பதை பல நாடுகளின் அனுபவம் மெய்ப்பித்துள்ளது. இப்பாதையைப் பின்பற்றி சோஷலிஸக் குறிக் கோளை அடையும் வாய்ப்பு, விடுதலை பெற்ற நாடு களுக்கு இருக்கிறது.

முதலாளித்துவமற்ற பாதையில் ஒரு நாட்டை வழிப்படுத்துவது மார்க்சிச-லெனினிச கட்சிகளாக மட்டுமல்லாமல், சில நாடுகளில் புரட்சிகரமான முதலாளித்துவ ஜனநாயக கட்சிகளாகவும் இருக்க லாம். இந்நாடுகளில் மார்க்சிஸ்டுக் கட்சிகள் இல்லாமல் இருக்கலாம், அல்லது போதுமான செல்வாக்கை பெறாமலிருக்கலாம். ஏகாதிபத்திய எதிர்ப்பு-ஜன நாயகப் போராட்டம் தீவிரமடையும்போது அதற்கு தலைமை தாங்குகிற ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சி வாதிகள் மார்க்சிய – லெனினிய தத்துவத்தைக் கற்றுக்கொண்டு தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்காக போராடுகிற மார்க்சிய வாதிகள் ஆகின்றனர். இது போன்றுதான் கியூபாவில் ஜனநாயகப் புரட்சி வாதிகள் போராட்டம் தீவிரமடையும் பொழுது வி ஞான சோஷலிசப் பாதைக்கு தாமாகவே வந்து விட்டனர். இவ்வாறு பல்வேறு பாதைகளில் ஏகாதிபத்திய இணைப்பிலிருந்து நாடுகள் மீண்டு வருகின்றன. எனவே உலக சோஷலிசப் புரட்சி இயக்கம் பல புரட்சி இயக்கங்களின் கூட்டு இயக்கமாக இருக்கிறது. முக்கியமாக, பாட்டாளி வர்க்க ஏகபோக எதிர்ப்புப் போராட்டம், தேசீய விடுதலைப் போராட்டம். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் ஆகிய மூவகை புரட்சிப் பாதைகள் சோஷலிச இயக்கத்தை நோக்கிச் செல்லுகின்றன.

தற்காலத்தில் உலக சோஷலிச அமைப்பின் சக்திகள் பெரிதும் வளர்ச்சிபெற்று வருகின்றன. ஆனால் முதலாளித்துவ அமைப்பின் சக்திகள் சக்தி குன்றி வருகின்றன. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமும், அடிமை நாட்டு மக்களின் தேச விடுதலைப் போராட்டமும் உச்ச நிலையை எட்டி வருகின்றன. இந்நிலைமைகளில் சில நாடுகளில் பாட்டாளி வர்க்கம் உள்நாட்டுப் போர் நடைபெறாமலே அமைதியான வழிகளில் அதிகாரத் தைக் கைப்பற்றுவது சாத்தியமாகலாம். ஒவ்வொரு தனிப்பட்ட நாட்டின் விஷயத்திலும் அந் நாட்டின் பாட்டாளி வர்க்கம் அமைதியான முறையில் அதிகாரத்திற்கு வருமா அல்லது ஆயுதம் தாங்கிய உள் நாட்டுப் போரின்மூலம் ஆட்சிக்கு வருமா என்பது அந்தந்த நாட்டின் சமுதாய நிலைமைகளையும் வர்க் கச் சேர்க்கை நிலைமைகளையும் இவையாவும் சேர்ந்த புரட்சிக்கான பக்குவ நிலைமையினையும் பொறுத்திருக்கிறது.

இனி, இவ்வாறு வெற்றி பெறும் புரட்சிகர ஜனநாயகச் சக்திகளும் பாட்டாளி வர்க்கமும் தாங்கள் வெற்றி பெறும் முன்பு இருந்த அரசாங்க இயந்திரத்தை தங்களுடைய புரட்சிக் குறிக்கோள் களை நிறைவேற்ற பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று காண்போம். இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகிய மூவரும் வகுத்துள்ள அரசு பற்றிய தத்துவார்த்தக் கொள்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


குறிப்பு :

இக்கட்டுரை நா.வானமாமலை எழுதிய “மார்க்ஸீய சமூக இயல் கொள்கை” நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி.  இது ஒரு நாட்டுமையாக்கப்பட்ட நூல். 

எழுதியவர்

கலகம் - பதிப்புக் குழு
கலகம் - பதிப்புக் குழு
அரசியல், கலை இலக்கிய இணைய இதழ்
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x