படைப்பிலக்கியத்தில் அரிதாக அதன் கதைமாந்தர்கள் என்ற மனிதர்களைத் தாண்டி, ஒரு இடம் உணர்ச்சி மிக்க பாத்திரமாகக் காட்சிப் படுத்தப்படுவதுண்டு. மனிதர்களைப் போன்ற எனைத்து உணர்வுகளுடன் அந்த இடம் வாசகர்க்குக் கதைகளைச் சொல்லுவது வாசக தளத்தில் புதுவகை அனுபவமாக இருக்கும். மனிதர்களின் எல்லாவகையான உணர்வுகளுக்கும் வெறும் நிலப்பரப்பாகக் கருதும் ஒரு இடம் வெளிப்படுத்தக்கூடியது. அது ஒரு வகையில் அதன் மனிதர்களின் உணர்வுகளுக்கு இணையான மெல்லிய உணர்வை வெளிப்படுத்துபவை. ஆனால் அந்த வெளிப்பாட்டைக் காட்சிப்படுத்தும் எழுத்தும், அதனை உள் வாங்கும் வாசகனும் இந்த அது போன்ற ஒரு அனுபவத்தைப் படைக்க முடியும். இந்த படைப்பு அது போன்ற ஒன்றை இந்த நாவல் வெளிப்படுத்துவதாகக் கருதுகின்றேன்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் கோவை மாவட்டத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கிய ஆனைமலை என்ற பலநூறு சதுர கிலோமீட்டர்களைக் கொண்ட அந்த வனப்பரப்பு, அதன் முகமாக வாழும் பழங்குடியினர், கானுயிர்கள், மலை, காட்டாறு, அதிகார மையத்தை உள்ளடக்கிய வனத்துறையினர், அவர்களின் அதிகாரங்கள் என்ற பலவகையான வாசகர்கள் இயல்பாக உள்வாங்கியிருக்காத பலவற்றைப் பேசி கடக்கின்றது. எல்லா கூறுகளையும் அந்த நிலம் என்ற பாத்திரம் தன்னுள் உள்வாங்கி அதனைத் தனது உணர்வாக வெளிப்படுத்தும் படி நாவல் நகர்கின்றது.
இலக்கியப் படைப்புக்களில் அரிதாகவே பழங்குடி மக்களின் வாழ்வியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த களத்துடன் ஒரு இடைவிடாத பயணத்தை மேற்கொள்ளும் படைப்பாளிகளின் மூலமே அந்த களம் உயிர் பெற முடியும். அதுபோன்ற ஒரு ஆர்வமிக்க படைப்பாளராக பிரசாந்த்.வே உள்ளார். அவரின் முந்தைய சிறுகதைத் தொகுப்பான காடர், இதே களத்தை வெவ்வேறு கதைகளில் காட்சிப்படுத்தியது. இந்த நாவல் பழங்குடிகளின் குரல்களை ஒலிக்கின்றது. வனத்துக்குள் வாழ்வது இயற்கையை எதிர்த்துப் போராடும் போராட்டம் மட்டும் அல்ல. அது சுரண்டல் சமூகத்தின் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் சவாலும் கூடுதலாக நிறைந்தது. சக மனிதனைக் காட்டிலும் இந்த கடுமையான போராட்டத்தை அனுதினமும் மேற்கொள்ளாமல் ஒரு பழங்குடி அவன் மண்ணில் வாழ முடியாது. பழங்குடியின் மண்ணிலிருந்து அவனை வெளியேற்ற ஒரு பெரும் அதிகாரம் கட்டமைக்கப்படுகின்றது. புலிகள் அதன் சரணாலயம் மற்றும் இயற்கை, சுற்றுச்சூழல் அதன் ஆர்வலர்கள் மற்றும் அது சார்ந்த நிதியம் என எல்லாமுமே அந்த பழங்குடிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கக்கூடியதாக மாறிய நிலையில் அந்த மக்கள் யாரிடத்தில் தங்கள் நியாயத்தை, நீதியைக் கோர முடியும்?
ஆனால் வனம் அவர்களைக் காக்கும் தாயாக மாறி தன் குழந்தைகளின் நியாயத்தைப் பேசுவாள் எனப் பழங்குடிகள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை மட்டுமே அவர்களைத் தொடர்ந்து உள்ளேயும், வெளியேயும் வனத்தை இறுகப் பற்றிப் போராட வைக்கின்றது. ஆனைமலை என்பது வெறும் மரங்களும், விலங்குகளும் மட்டும் கொண்ட நிலமகள் அல்ல. அவளின் மக்கள் அவளிடமிருந்து பிரிக்க முடியாதவர்கள். அவளின் அறுபடாத தொப்புள் கொடி இன்னமும் அவர்களுடன் வளர்சிதை மாற்றத்தை உருவாக்கி வருகின்றது. இந்த உறவால் மட்டுமே வனம் உயிருடன் உள்ளது. இதனைத் தனது படைப்பில் தொடர்ந்து பிரசாந்த் வே இலக்கியமாகக் காட்சிப்படுத்துகின்றார். இந்த காட்சிப் படுத்தல் பழங்குடிகளுக்கானது மட்டுமல்ல, ஒருவகையில் பொதுச் சமூகம் வனத்தின் குரலை தங்கள் சுயநலத்தின் பொருட்டேனும் கேட்க வேண்டும் என்ற கரிசனத்துடன் எனக் கருதுகின்றேன்.
– எழுத்தாளர் ச.பாலமுருகன்
எழுதியவர்
இதுவரை.
- நூல் விமர்சனம்29 July 2024பிரசாந்த்.வே எழுதிய “ஆனைமலை” நாவல் – ஓர் அறிமுகம்.
- சமூகம்1 December 2023சாதியத்திற்கு எதிரான சுயமரியாதை போராட்டம் !
- சிறார் பாடல்கள்8 June 2023பட்டம்
- சிறார் கதைகள்8 June 2023மாய வால் குரங்கு