ஓர் ஊரில் தந்தையும் மகனும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தினமும் குளத்தில் மீன் பிடிப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் குளத்தில் மீன் பிடித்து விட்டு, அதனைச் சந்தைக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் வழியில் மக்கள் அனைவரும் அந்த மீன் கடையின் முன்பு கூட்டமாகக் கூடி இருந்தனர். ஏதோ ஒன்று அசம்பாவிதம் ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டே அந்த கூட்டத்திற்குள் இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தனர்.
அங்கு மக்கள் அனைவரும் ஒரு குரங்கை கட்டையாலும் , கற்களாலும் அடித்துக் கொண்டு இருந்தனர். தந்தையும் மகனும் அந்தக் கூட்டத்தில் இருக்கும் அந்த மக்களிடம், “பாவம் அந்தக் குரங்கை அடிக்காதீர்கள், அது உங்களை என்ன செய்தது” என்று கேட்டனர்.
அதற்கு மக்களின் பதில், “அந்தக் குரங்கால் எங்களுக்குப் பல இன்னல்கள் மற்றும் பல நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்கள். இதனைக் கேட்டு தந்தை மற்றும் மகனும் சிறிது நேரம் யோசித்தார்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து ‘குரங்கால் ஏற்பட்ட நஷ்டங்கள் அனைத்தும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்’ என்றனர். மக்களும் அவர்களின் இரக்க குணத்தைப் பார்த்துப் பாராட்டி மகிழ்ந்தனர். அதற்குப் பிறகு தங்களது குடிசைக்கு அந்தக் குரங்கை அழைத்துச் சென்று, அதற்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போட்டனர். மறுநாள் அந்தக் குரங்கையும் மீன் பிடிக்க அந்தப் பாய் மரத்திலேயே ஏற்றிச் சென்றார்கள். சிறிது நேரத்தில் மீன் வலையை வீசி குளத்தில் மீன் பிடிக்க ஆரம்பித்தனர். வீட்டிலிருந்து காலையில் கிளம்பிய தந்தையும் மகனும் குரங்குடன் உற்சாகமாக இருந்த காரணத்தால் அவர்களுக்குக் களைப்பே ஆகாமல்; நேரம் பார்க்காமல் குளத்தைத் தாண்டி, ஆற்றிற்குச் சென்றனர், ஆற்றையும் தாண்டி கடலுக்கே சென்று விட்டனர்!!.
‘அட கடவுளே பொழுதே போய் விட்டது’ என்ற நினைவு இப்பதான் அவர்களுக்கு வந்தது. ஆனாலும் அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். வழக்கத்தை விட அவர்களின் வலையில் அதிகம் மீன்கள் மாட்டி இருந்தது மற்றும் களைப்பே தெரியாமல் இருந்தார்கள்.
வலையில் சிக்கிய ஒரு கடல் ஆமையைப் பார்த்துத் தான், அவர்களுக்கு தாங்கள் கடலுக்கே பாய்மரக் கப்பலில் வெகு தூரம் வந்து விட்டோம் என்று தெரிய வந்தது. கடலில் அவர்களின் பாய் மரமும் ஒரு பெரிய அலையில் சிக்கிக் கொண்டது… வழி தெரியாமல் எப்படியோ ஒரு தீவிற்குள் அலை அவர்களை அடித்து இழுத்துச் சென்று விட்டது. அன்று இரவு முழுவதும் அங்கேயே பயத்துடன் விடியலை நோக்கி எதிர்பார்ப்புடன் இரவை கழித்தனர். திடீரென்று சூரிய ஒளி ஒன்று அவர்களை எழுப்பியது. கண் சிமிட்டிக் கொண்டே விழித்துப் பார்த்தனர், அப்போது அவர்களுக்கு பயங்கர ஆச்சரியம்!!! ஏனெனில், அந்த வெளிச்சம் சூரியனுடையது அல்ல, அது அந்தக் குரங்கின் வாலில் இருந்த வந்த வினோதமான வெளிச்சம். அப்போது தான் இது சாதாரணக் குரங்கு இல்லை; அது மாய வால் குரங்கு என்று அவர்கள் உணர்ந்தனர். அந்த வாலின் வெளிச்சத்தின் மூலம் அவர்களைக் காப்பாற்ற ஒரு மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்து அப்பா, மகன், குரங்கு மூவரையும் காப்பாற்றினார்கள்.
அந்தக் குரங்கு அனைவரின் பாராட்டையும் நன்றியையும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக அவர்களுடன் வாழ்ந்தது. அந்தக் குரங்கை மீன் சந்தையில் அன்று அடித்த மக்கள் அனைவரும் தேடி வந்து, அந்தக் குரங்கிடம் மன்னிப்பு கேட்டனர். குரங்கும் அவர்களை மன்னித்து தன் தவற்றையும் உணர்ந்து அனைவரிடமும் செல்லமாகப் பழகத் தொடங்கியது.
இந்தக் கதையின் மூலம் நன்றி மறப்பது “நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று ” என்ற குறளை நினைவு கூறலாம். வாழ்வில் அன்பு பெற்றதை மறப்பது, மனதிலிருந்து விட்டு விடுவது நன்று அன்று , நன்மையை அளிக்காது. அன்பினால் பெற்ற இனிய சுகத்தை அழித்து விடுகிற தீவினைகளை அன்றே மறப்பது , அப்பொழுதே நினைவிலிருந்து அகற்றிவிடுவது நன்று. வாயில்லா ஜீவன்களுக்கு அன்பும், அரவணைப்பும் எப்போதும் தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
– கா. கௌதம்
ஏழாம் வகுப்பு
ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளி;
வேப்பூர்; நல்லூர் ஒன்றியம்;
கடலூர் மாவட்டம்.
எழுதியவர்
இதுவரை.
- நூல் விமர்சனம்29 July 2024பிரசாந்த்.வே எழுதிய “ஆனைமலை” நாவல் – ஓர் அறிமுகம்.
- சமூகம்1 December 2023சாதியத்திற்கு எதிரான சுயமரியாதை போராட்டம் !
- சிறார் பாடல்கள்8 June 2023பட்டம்
- சிறார் கதைகள்8 June 2023மாய வால் குரங்கு