13 October 2024
ansuya article

வணக்கம்!  நான் அனுசுயா சரவணமுத்து; ஆனந்தவாடி கிராமம்,  பொறியாளர் (Civil Engineering). 

தெருப் பெயர் மாற்றம் என்று பார்த்தால் சிறிய விடயமாகக் கூட இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு அது ஒரு விடயமாக இல்லாமல் இருக்கலாம். பெயர் மாற்றம் தொடர்பான விடயங்களைக் கூறும் முன்பு ஒரு சில விடயங்கள் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

      கிராமங்களில் மட்டும் தான் இன்னாரின் மகன் இந்தத் தெருவிலிருந்து வருகிறான் என்ற அத்தனை தகவல்களும் இருக்கும்.  நீங்கள் ஒரு தலித் பின்புலத்திலிருந்து வந்து; சாதிய இந்துவின் வீட்டிற்குச் சென்று உங்களால் உட்கார இயலாது. ஏனென்றால், அனுமதிக்கவும் மாட்டார்கள்.  நீங்கள் உள்ளே செல்லக்கூடாது என்ற மனநிலையைச் சிறுவயதில் இருந்தே உங்களுக்குக் கடத்தி இருப்பார்கள்.

பொதுப்படையாக ஒரு கருத்து இருக்கிறது. கிராமம் என்பது அமைதியானதும் அழகானது என்றெல்லாம் கூறுவார்கள். அது ஒரு சிறு நாட்களுக்கு வேண்டுமானால் பொருந்தும் . நீண்ட காலம் வாழ்வது மிகக் கடினமானதாகவே இருக்கும். அது தொழில்நுட்ப ரீதியாக இருந்தாலும் சரி, அன்றாடம் தேவைப்படும் வசதிகளாகட்டும் கிராமங்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை.  இதில் முக்கியமாகச் சாதி மத ரீதியாக ஒடுக்கப்பட்டும் அவல நிலையிலும் கிராமப்புற மக்களே இருக்கின்றார்கள்.  ஒருவேளை நாம் நினைக்கலாம் 2023ல் இருக்கிறோம், இன்றும் சாதி பார்க்கிறார்களா? சாதி இன்னும் இருக்கிறதா ?  ஆம்! இன்னும் இருக்கிறது. இதற்கு நாம் காணும் சாதி ரீதியாக நடக்கும்  படுகொலைகள் குறித்தான செய்தியே சாட்சி. 

 கிராமப் புறத்தில் வளர்ந்து வந்ததால்  சிறு வயது முதலே சாதியத்தின் ஒரு பக்கம் தெரியும்.  எங்கள் ஊரில் இரண்டு ஏரிகள், இரண்டு சுடுகாடு மற்றும் இரண்டு குடிநீர் Tank  என இன்னும் காண முடியும்.  என்னுடைய பள்ளிப் பருவத்தில் தோழிகளின் வீட்டிற்குச் செல்லும் போது திண்ணையிலேயே அமர்ந்து விடுவேன். காரணம், அதைத் தாண்டி நாம் செல்லக்கூடாது  என்ற  வரையறையினால்.  

 காலப்போக்கில் சாதியும் சுற்றி இருக்கும் மற்ற சாதிய ஒடுக்குமுறைகளையும் பார்த்து, நான் மற்ற தோழிகளின் வீட்டுக்குச் செல்வதே இல்லை.  எதற்கு நமக்கு வம்பு என்று  ஒதுங்கியே இருந்து விடுவேன் . 

மற்ற சாதியினர் வசிக்கும் தெருக்களில் செல்லும் போது வயதான மூதாட்டிகள் பெரும்பாலும் நம்மைப் பெயர் வைத்தோ தகுதியை வைத்தோ குறிப்பிட மாட்டார்கள் . 

கீழத் தெரு / பறத்தெரு என்ற அடையாளங்களே மிஞ்சும் , பின்பு தான் இன்னாருடைய பேத்தி / மகள் என்பதெல்லாம் . 

சிறு வயது முதலே சுயமரியாதை சார்ந்து இப்படி அடையாளப்படுத்தும் விதம் ரணமாகவே இருந்தது. இந்த விடயம், காலம் காலமாகச் சாதியை மையமாக வைத்து வந்தாலும்; என்ன செய்து விட முடியும் ஒரு  பள்ளியில் பயிலும் மாணவியால் ? 

நான் பள்ளி படிக்கும் காலகட்டத்தில் எங்கள் தெருவில் சிமெண்ட் ரோடு போட்டார்கள். அப்போது ஒவ்வொரு தெருவிற்கும் ஒவ்வொரு பெயர் வைத்தார்கள். அதில் ‘இந்திரா  நகர் ’ என நான் வசிக்கும் தெருவுக்குப் பெயர் வைத்தார்கள். காலப்போக்கில் அந்தப் பகுதி முழுவதுமே இந்திரா நகர் என்றே குறிப்பிடப்படுகிறது.  ஏதாவது கடிதங்கள் வந்தாலும் இந்திரா நகர் என்றே  அனைவரும் அறிவார்கள்.  

 பின்பு அது என்னுடைய ஒட்டர் ஐடி-யிலும் கூட அதே முகவரியே இருந்தது. பள்ளி முடித்ததும், பொறியியல் படிக்க கல்லூரிக்குச் சென்று விட்டேன். 2011 அல்லது 2012 என்று நினைக்கிறேன் இந்தியாவில் ஆதார் அட்டை அறிமுகப்படுத்தினார்கள்.

 ஆதார் பதிவு செய்துவிட்டு, என்னுடைய முகவரி மற்ற தரவுகளில் இருப்பது போல் இந்திரா நகர் என்று கொடுத்துவிட்டுச் சென்றேன். என் தெருவில் வசிக்கும் மற்ற நபர்களும் அதே முகவரி தான் கொடுத்திருந்தார்கள். ஆனால் நமக்கு ஆதார் அட்டையில் வந்த முகவரியோ ‘ஆதி திராவிடர் தெரு’.  என்ன இது  நாம் முகவரியென ஒரு தெருப் பெயரைக் கொடுத்தால்., இவர்கள் இப்படி எழுதி இருக்கிறார்கள் என்ற கோபமும் வருத்தமும் இருந்தது.  அந்த நேரத்தில் முகவரியைஎப்படி மாற்றுவது என்று தெரியவில்லை.  பின்பு காலமும் கடந்தது. நானும் கல்லூரிப் படிப்பை முடித்து என்னுடைய வேலை சார்ந்து வெவ்வேறு மாநிலங்களில் வேலை பார்த்து வந்தேன்.

    அரசு ஓர் அறிக்கையை விடுகிறது. ஆதார் அட்டை உடன் பேங்க் அக்கவுண்ட், பிஎப் அக்கவுண்ட் என எல்லா  தரவுகளோடும் இணைக்க வேண்டும் என்று .

இப்படியாக எல்லாத் தரவுகளையும் இணைக்கும் போது என்னுடைய பெயருக்குப் பின்னால், கதவு எண்ணிற்குப் பிறகு, இந்திரா நகர் என்பதற்குப் பதிலாக, எல்லாத்  தரவுகளிலும் ‘ஆதிதிராவிடர் தெரு’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. 

 சரியாகக் குறிப்பிட வேண்டும் என்றால் என்னுடைய அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரில் கூட ஆதி திராவிடர் தெரு என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. 

   என்னுடைய சாதிய அடையாளமானது இட ஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்காகத் தேவைப்படுவது மட்டும் என்றே கருதுகிறேன். இட ஒதுக்கீடு ஏதோ ஒரு சலுகையெல்லாம்  கிடையாது.  சமூக , சாதிய மற்றும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது.

இப்படி இருக்கும்போது எந்த அடிப்படையில் ஆதி திராவிடர் என்ற சாதிய அடையாளம் எனது அத்தனை அடையாள அட்டைகள் மற்றும் Appointment order குறிப்பிட வேண்டும் என்ற கோபம் குறைந்த பாடில்லை.

படித்து வேலை பார்க்கும் நமக்கே இத்தனை சிக்கல் / சுயமரியாதை பிரச்சனையாக இருக்கும் போது, அடுத்த சந்ததியினர் பள்ளியிலும் கல்லூரியிலும் சாதிய அடையாளத்தை முகவரியில் ஏன் சுமக்க வேண்டும் என்ற கேள்வியோடே இந்த மனுவை அணுகினேன்.

சமீபமாகத் தமிழகத்தில் திங்கள் மனுநாள் என்பது சரியாக முன்னெடுக்கிறார்கள் என்று தெரிந்தது.  பின்பு வேலை நிமித்தமாகத் தமிழகம் வந்த போது சமூக நீதியின் அடிப்படையில் சாதிய ரீதியாக  ஆதிதிராவிடர் தெரு,  கீழத்தெரு  போன்ற பெயர்களைப் பதிவேடுகளில் நீக்கி, ஏற்கனவே இருக்கும் இந்திரா நகர் என்ற பெயரைப் பதிவேடுகளில் மாற்ற வேண்டும் என்பதை மனுவாக எழுதி மக்களிடம் கையெழுத்துகள் பெற்று திங்கள்கிழமை – மனு நாள் ( 08.08.2022 ) அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் முன்னிலையில் கொடுத்த போது அவர்கள் BDO ( Block Development office ) இடம் கொடுத்தார்கள். 

பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மனு  ஏற்கப்பட்டு, BDO  இடம் ஃபார்வேர்ட் செய்யப்பட்டதற்கான  கன்ஃபர்மேஷன்  லெட்டர் வந்தது. 

 நான் வேலை நிமித்தமாக  மத்திய பிரதேஷ் சென்று விட்டதால் நேரடியாக இதனைப் பற்றி தொடர்பு கொள்ள இயலவில்லை. பிப்ரவரி மாத  இறுதியில் , 2023  CM CELL வாயிலாக மீண்டும் தெருப் பெயர் மாற்றம் சார்ந்த மூன்று மனுவை அளித்தேன் .  முக்கியமாக சப்போர்ட்டிங் டாக்குமெண்ட்ஸ் அனைத்தையும் Enclose செய்தே வைத்தேன். இந்த மூன்று மனுக்களில் ஒன்று ஆதார் அட்டை முகவரி சார்ந்தது , மற்றொன்று ஓட்டர் ஐடியில் உள்ள தொகுதி முகவரி மற்றும் ரேஷன் கார்டு. முதலில் மனுவை நிராகரித்து விட்டனர் . பின்பு மேல் முறையீடு செய்திருந்தேன். இதனிடையில் வேலை நிமித்தமாகத் தமிழ்நாடு வந்திருந்தபோது BDO சந்தித்து ஏற்கனவே கொடுத்த மனுவின் நிலையை அறியவும் சமீபத்தில் கொடுத்த மனுவின்  நிலையையும் கேட்டு அறிந்து கொண்டேன்.   BDO உடனடியாக பஞ்சாயத்துத் தலைவரிடம் தெருப் பெயர் சம்பந்தமாக தொலைப்பேசியில் உரையாடினார் .

 மேல்முறையீடு செய்வதின் பயனாக பஞ்சாயத்தில் இந்திரா நகர் என தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும்  என சி.எம் செல்லிலிருந்து தகவல் மாவட்ட ஆட்சியரின் வாயிலாக ஆனந்தவாடி பஞ்சாயத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் , அரசு சம்பந்தமான வேலை சாமானிய மனிதனுக்குச் சாதாரணமாக நடந்து விடுமா என்ன ? பஞ்சாயத்து தலைவர், துணை பஞ்சாயத்து தலைவர்,  எல்லோரிடமும் தீர்மானம் மற்றும் பெயர் பலகை வைப்பதை பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன் ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை. சில மாதங்கள் கழித்து பிப்ரவரி மாதம் கொடுத்த மனுவின் பயனாக ஒரு வழியாகத் தீர்மானம் இயற்றப்பட்டது. அந்தக் காப்பியும் எனக்கு சி.எம் செல்லிலிருந்து வந்து விட்டது. 

 ஆனால் பெயர்ப் பலகை வைப்பது பஞ்சாயத்திலிருந்து வைக்க முடியாது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். ஆனால் இந்த மாதிரியான தீர்மானத்திற்குப் பிறகு கெசட் நோட்டிபிகேஷன் அறிவித்து பின்னரே  பதிவேடுகளில் பெயரை மாற்றம் செய்வார்கள்.  இந்நிலையில் ஏற்கனவே இந்திரா நகர் என்று பல பதிவேடுகளில்  இருப்பதாலும் மற்றும் கெசட் தற்போது நோட்டிபிகேஷன்  ப்ராசஸ் இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிந்து கொண்டேன்.  அல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் ஊராட்சி தலைமை துறையில் சென்று அங்கேயும் ஒரு மனு அளித்தேன் பெயர்ப் பலகை வைப்பதற்காக.  அவர்கள் கூறியது என்னவென்றால்  பஞ்சாயத்திலிருந்து பொதுப் பெயர்ப் பலகை வைக்க பஞ்சாயத்துத் தலைவருக்கு அதிகாரம் இருப்பதாகத்  தெரிவித்திருந்தனர்.  

பின்பு பலமுறை பஞ்சாயத்துத் தலைவர் , துணைத் தலைவர் , வார்டு உறுப்பினர் அனைவரையும் தொலைப்பேசியிலும், நேரிலும் சந்தித்து பெயர்ப்பலகை வைப்பதைப்பற்றிக் கேட்டுக்கொண்டே இருந்தேன். 

பின்பு பலகை வர இரண்டு வாரம் , பெயர் எழுத ஒரு வாரம் என ஒரு மாதத்திற்குப் பிறகு பெயர்ப் பலகை வந்துவிட்டதாகக் கூறினார்கள் . 

ஊராட்சி அலுவலகம் சென்று நேரில் சந்திக்கச் சென்றபோது பஞ்சாயத்துத் தலைவர் இல்லை; அலைபேசியில் தான் தொடர்புகொள்ள வேண்டியதாயிற்று . பெயர்ப் பலகை வைப்பதற்கான ஆயத்தங்களைச் செய்து கொடுக்க கேட்டிருந்தேன்; முதல் விடயமாக மைக்கில் ஊர் முழுவதும் Announce செய்யுமாறு சொன்னேன் ! 

அதற்கு ’பெயர்ப் பலகை கேட்டீங்க  அடிச்சாச்சு இதுக்கு மேல நீங்களே போர்ட வச்சுகோங்க’ என பஞ்சாயத்துத் தலைவர் பதில் அளித்தார்.

‘Announcement செய்வது உங்க ஆளுங்கதான், நீங்களே சொல்லி பலகை வச்சுக்குங்க’ என்ற கூற, இடைமறித்து ‘இல்லை சார் அவங்க கிட்ட நீங்க சொல்றதுதான் சரியாக இருக்கும். நீங்களே Announcement செய்ய சொல்லுங்க; பலகை நானே வச்சுகிறதுக்கு இது என்னுடைய தனிப்பட்ட விடயம் இல்லை  , ஊர் சம்பந்தமானது; ஊராட்சியிலிருந்து வைத்துத் தருவதுதான் முறையாகும். நாளை காலை பெயர்ப்பலகை வைக்க ஆயத்தம் செய்ய சொல்லுங்க’ என்று ரெக்வஸ்ட் செய்தேன்.

அடுத்த நாள் சென்றால் எதுவுமே தொடங்காமலிருந்தது. பின்பு, பஞ்சாயத்திலிருந்து நூறு நாள் வேலை நபர்களை வைத்துப் பெயர்ப் பலகையை  வைத்து, நாங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள நபர்களை அழைத்து இனிப்பு வழங்கி வாழ்த்து மடலோடு முடிந்தது. என்னுடைய ஆசை என்னவோ எங்கள் ஊரில் உள்ள அனைத்து மக்களையும் (தலித் அல்லாத ) அழைத்து ஒரு நிகழ்வாக நடத்த வேண்டும் என்பது தான். பஞ்சாயத்தில் போதுமான ஒத்துழைப்பு இருந்திருந்தால் நிகழ்வாக இருந்திருக்கும் . 

ஏதோவொரு விதத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்காக நிற்பது  “அடிப்படை அறம்”.

நம்மை சுற்றி இருக்கும் விடயங்களை சமூகக் கண்ணோட்டத்தோடு அணுகும்போது பல மாற்றங்களை நிகழ்த்தலாம் மற்றும் தெருப் பெயர்களில் சாதிப் பெயரோ, சாதிய அடையாளங்களோ இல்லாமல் மாற்றுவது அரசு முன்னெடுத்துச் சரிசெய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கை .


  • அனுசுயா சரவணமுத்து

எழுதியவர்

கலகம் - பதிப்புக் குழு
கலகம் - பதிப்புக் குழு
அரசியல், கலை இலக்கிய இணைய இதழ்
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x