தாத்தாவுடைய 72-வது பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் நடந்து முடிந்தது. வீடே கொஞ்சம் அலங்கோலமாய் ஆகி விட்டது. எங்கும் பலூன்கள் சிதறி கிடந்தது. பேன்சி ரிப்பன்கள் தரை முழுக்க இறைந்து இருந்தது. ரெனோ-1 எல்லாவற்றையும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். ரெனோ-1 பிறந்தது முதலே அந்த வீட்டில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறான். ரெனோ-1 கிட்டத்தட்டப் பதினைந்து நிமிடங்களிலேயே வீட்டைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விட்டான். போன வருடத்தை விட இந்த வருடம் கொஞ்சம் வேலை செய்வதில் வேகம் கூடியிருந்தது.

“எல்லா வேலையையும் முடிச்சாச்சா?” அம்மா கேள்வியோடு ரெனோ-1யை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

“யெஸ் மேம் எல்லாம் முடிச்சாச்சு” ரெனோ-1 பதில் அளித்தான்.

பிறந்தநாளுக்கு வந்த பரிசுகளை எல்லாம் இந்திரா பரிசோதித்துக் கொண்டிருந்தாள். வந்த பரிசுகள் மேலிருந்த கலர் பேப்பர்களை கிழித்துப் போட அந்த இடம் மீண்டும் குப்பையானது.

“நீ மறுபடியும் இடத்தை குப்பையாக்கிவிட்டே இருக்கே இந்து” அம்மா குரலை கொஞ்சம் உயர்த்த வேண்டியிருந்தது.

“தாத்தாவுக்கு வந்ததுல முக்கால்வாசி கிப்ட்ஸ் எல்லாமே புக்ஸ்.. குண்டுக் குண்டு புக்ஸ் இத என்னால தூக்க கூட முடியல” இந்திராவுக்கு எட்டு வயது. இன்னும் கொஞ்ச நாளில் அவளுடைய பிறந்தநாளும் வரப்போகிறது. ஜாவா ஸ்க்ரிப்டை (javascript)  கொஞ்ச நாட்கள் முன்பு தான் முடித்து சான்றிதழ் வாங்கி இருந்தாள். அடுத்து பை-லான்(pi-lan) கற்றுக்கொள்ளப் போவதாக ரெனோ-1விடம் சொல்லி இருந்தான். ரெனோ-1 அடுத்த வாரம் முதல் பை-லான் (pi-lan) கற்றுக்கொடுப்பான்.

“தாத்தாவுக்கு புக்ஸ் தான் பிடிக்கும்ன்னு உனக்கு தெரியாதா?” அம்மா கேட்டார்.

“தெரியும். ஆனா இத எல்லாம் விர்ச்சுவல் காப்பி (virtual copy) அனுப்பியிருக்கலாமே எதுக்கு இப்படி தூக்க கூட முடியாத அளவுக்கு புத்தகமா கொடுக்கணும்?”

“தாத்தாவுக்கு இந்த மாறி படிக்க தான் புடிக்கும் அவர் இப்படியே பழகிட்டாரு”

“அது சரி .. நான் போய் தாத்தாவ பாத்துட்டு வரேன்”

“வேணாம். அவர் தூங்கி இருப்பாரு தொந்தரவு செய்யாத இந்திரா”

அம்மா சொன்னது இந்திரா காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. இந்திரா மாடியில் ஏறி தாத்தாவுடைய ரூமுக்கு முன் நின்று கொண்டு இருந்தாள். பார்த்தால்.. ரெனோ-1 அவளுக்கு முன்பாகவே அங்கு வந்து நின்று கொண்டு இருந்தான்.

“நீ எப்படி இங்க வந்தே?” இந்திரா கேட்டாள்.

“லிப்ட் வழியா.. தாத்தா தூங்க போய்ட்டாரு நீ அவர தொந்தரவு பண்ண வேணாம்”

தாத்தா தூங்கி இருப்பாரோ என்ற சந்தேகம் எழ இந்திரா தாத்தாவுக்கு ஒரு வீடியோ மெசேஜ் அனுப்ப ரூம் வாசலில் இருந்த அழைப்பு கேமராவில் பேச ஆரம்பித்தாள்.

“ஹேப்பி பர்த்டே தாத்தா, நீங்க தூங்கிடிங்கன்னு நினைக்குறேன்…”

“ஹாய் இந்திரா.. தாத்தா இன்னும் தூங்கல டா குட்டி, நீங்க தாராளமா உள்ள வரலாம்” இந்திரா பேசி முடிப்பதற்குள் தாத்தா உள்ளே இருந்த கேமரா மூலமாக இந்திராவிடம் பேசினார்.

ரெனோ-1, இந்திரா இருவரும் உள்ளே வந்தார்கள். தாத்தா ஏதோ படித்துக்கொண்டிருந்தார். அவருடைய மேஜையில் ஐசாக் அசிமோவின் பௌன்டேசன் புத்தகங்கள் இருந்தது. தாத்தா அவருடைய சிறுவயதில் இருந்தே புத்தகம் படிப்பதைப் பழக்கமாக வைத்து இருந்தார். இந்திரா உள்ளே வந்ததும் அறையின் அமைப்பைக் கடற்கரைக்கு மாற்றினாள். பக்கத்தில் இருந்த புதிய இயந்திரம் இந்த வேலையை மிக அற்புதமாகச் செய்தது. அந்த இயந்திரம் போன வருடம் அம்மா டெல்லியில் இருந்து வரவழைத்தார்.

“தாத்தா நீங்க ஏன் இன்னும் உங்களோட ஜீனை மாத்திக்கல?” இந்திரா கண் சிமிட்டியவாறு கேட்டாள் அந்தக் குடும்பத்தில் பாட்டிக்குப் பிறகு இந்திராவுக்கு மட்டுமே பச்சை நிற விழிகள்.

புத்தகத்தில் இருந்த தன் கவனத்தை இப்போது இந்திரா மீது கொண்டு வந்தார். மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டே புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கண் இமைகளை ஒரு முறை மூடி திறந்தார்.

“இந்திரா…”

“என்ன தாத்தா?” இந்திரா ஆர்வமாய் கேட்டாள்.

“உனக்கு ஏன் இந்திரான்னு பேர் வச்சோம் தெரியுமா?”

“தெரியுமே பாட்டியோட ஞாபகார்த்தமா இந்த பேர் வச்சாங்க”

“ரொம்ப சரி, உன் பாட்டிய நான் லவ் பண்ண காலத்துல அவளும் உன்ன மாறியே தான் முடி வச்சு இருப்பா.. தோள்பட்டை வரைக்கும், பாப்கட் முடி” தாத்தா கண்களை மூடி பழைய நினைவுகளில் மூழ்கி போனார்.

“தாத்தா பாட்டிக்கு என்ன ஆச்சு?” இந்திரா கேட்டாள்.

தாத்தா கண்களை மெதுவாகத் திறந்து இந்திராவை பார்த்தார். அவர் ஏதோ பேச முற்படுவது போல் தெரிந்தது. ஆனால் ரெனோ-1 அங்கே நின்று கொண்டு இருந்தான். தாத்தா ரெனோவை பார்த்து வெளியே போகச் சொன்னார். அந்த அறையில் இருந்த கம்ப்யூட்டர்கள், கேமராக்கள் அனைத்தும் செயலிழக்கச் செய்தார். அறை கடற்கரை அமைப்பில் இருந்து பழைய நிலைக்கு வந்தது.

தாத்தா பேசத் தொடங்கினார்.

“உன் பாட்டி பயோடெக்னாலஜி (bio-technology) படிச்சவன்னு உனக்குத் தெரியும்”

“ம்ம்..” இந்திரா செவி மடுத்தாள்.

வருடம்: 2024

கொரோனா பேரிழப்பு கொஞ்சம் குறைந்து இருந்தது. ஆயினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ ஒரு ரூபத்தில் கொரோனா மறுபிறவிகள் எடுத்துக்கொண்டே தான் இருந்தது. பல நாடுகளின் அரசாங்கங்கள் இதை கட்டுபாடுக்குள் கொண்டுவரப் பெருமுயற்சி செய்தது. இந்தியாவில் பெரும்பாலும் கொரோனா குறைந்து விட்டது. இந்திராவும் ராகுலும் ப்ராஜெக்ட் விஷயமாக டெல்லி சென்று இருந்தார்கள். இரண்டு பேரும் காதலிக்கிறார்கள் என்பது அந்த ஊருக்கே தெரியும் ஆனால் இந்திராவும் சரி ராகுலும் சரி ஒருவருக்கு ஒருவர் வெளிப்படையாக தங்கள் காதலைச் சொல்லிக்கொள்ளவில்லை. ப்ராஜெக்ட்க்காக இந்திரா டெல்லி செல்கிறாள் என்று தெரிந்த பின்பு தான் ராகுல் அவசர அவசரமாக அந்த டெல்லி பயணத்தில் தன்னையும் சேர்த்து கொள்ளும்படி அடம்பிடித்து சேர்ந்தான்.

“நாளைக்கு ப்ராஜெக்ட் முடிஞ்சுரும்.. ஆறு மாசம் போனதே தெரியலல?” இந்திரா ஒரு கையில் தேநீர்க் கோப்பையை வைத்துக்கொண்டு பருகியவாறே கேட்டாள். அவளுக்கு தோள்பட்டை வரை தான் முடி, பாப் கட்டிங் செய்து இருந்தாள், ராகுலின் கோரிக்கை அது ஒன்று தான். இந்திராவின் பச்சை நிற விழிகள் ராகுலையே பார்த்துக்கொண்டு இருந்தது.

“ம்ம்..” ராகுல் அதை தவிர்த்து எதுவும் சொல்ல வில்லை. மௌனமாய் இருந்தான்.

“என்ன ஆச்சு உனக்கு?”

“ஒண்ணுமில்ல” கொஞ்சம் நேரம் இடைவெளி விட்டு ராகுல் கேட்டான்: “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?”

இந்திரா யோசிக்கவே இல்லை உடனே சொன்னாள்: “எப்போ?”

டெல்லியில் ப்ராஜெக்ட் முடிந்து இருவரும் மூன்று மாதம் கழித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் டெல்லியில் ஒரே இடத்தில ஒரு பயோடெக்னாலஜி லேப்-ல் வேலையில் சேர்ந்தார்கள். மரபணு மாற்றம் செய்யப்பட்ட மனிதர்களை உருவாக்குவது குறித்து இருவரும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர்.

“இந்த ப்ராஜெக்ட்-அ பொதுமக்கள் கிட்ட டெஸ்ட் பண்ண என்னால அனுமதிக்க முடியாது இந்திரா..!” அந்தப் பேராசிரியர் கண்டிப்பாகச் சொன்னார்.

“சார், ஏற்கனவே இத நம்ம விலங்குகள் மேல டெஸ்ட் பண்ணிட்டோம் நல்ல ரிசல்ட் தான் கெடச்சு இருக்கு”

“தெரியும் இந்திரா, ஆனா இத மக்கள் கிட்டக் கொண்டு போகுறப்போ சின்னதா ப்ராப்ளம் வந்தா கூட உன் வாழ்கையே போய்டும் இத இப்படியே விட்று” பேராசிரியர் எச்சரித்தார்.

இந்திரா விருப்பமே இல்லாமல் அடுத்த ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சென்று கொண்டு இருந்தாள். அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் ராகுல் மட்டுமே. ஆராய்ச்சிப் பணிகளுக்காக இருவரும் கொஞ்சக் காலத்திற்கு குழந்தை வேண்டாம் என முடிவு செய்து இருந்தனர். ஆனால் இப்போது அந்த ஆராய்ச்சி பாதியில் நின்றுவிட்டதால் இருவரும் சொந்த ஊருக்குத் திரும்பினர்.

“இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் இந்திரா, எனக்கு அப்படி ஒரு குழந்தையே வேணாம்” ராகுல் உறுதியாய் சொன்னான்.

“இது நம்ம ப்ராஜெக்ட், நம்மளே இதுக்கு ரிஸ்க் எடுக்கலன்னா யாருக்கு இது மேல நம்பிக்கை வரும்?” இந்திரா கெஞ்சினாள்.

“உனக்கு எதாவது ஆச்சுன்னா?”

“எனக்கும் நம்ம குழந்தைக்கும் ஒன்னும் ஆகாது. முக்கியமா குழந்தைக்கு ஒரு பாதிப்பும் வராது” இந்திரா சத்தியம் செய்தாள்.

கரு உருவான போதே மரபணு மாற்றம் செய்யப்பட்டது. ராகுல் இந்திராவை கவனமாக பார்த்து கொண்டான்.

ஒரு வருடம் கழித்து சிவா பிறந்தான். சிவா பிறந்த பிறகு இந்திரா அடிக்கடி அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தாள். ராகுலுக்கு ஒரு முறை கூட காய்ச்சலோ, வேறு எந்த உடல் பிரச்சனைகளும் வந்தது இல்லை. மரபணு மாற்றம் வெற்றியடைந்தது போல் தான் தெரிந்தது.

சிவா பிறந்து ஆறு வருடம் கழித்து இந்திராவுக்கு கருப்பையில் கேன்சர் இருப்பது தெரிய வந்தது. இந்திராவுக்கு மரபணு பிறழ்வு ஏற்பட்டதால் தான் கேன்சர் வந்தது. சிவாவுக்கும் பரிசோதனை செய்ததில் சிவாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பது உறுதியானது. ஆனால் இந்திராவின் நிலைமை மோசமாகிக் கொண்டே போனது.

“சிவா கிட்ட சொல்லிரலாமா?” ராகுல் கேட்டான்.

“அவனுக்கு இது இப்போதைக்குத் தெரிய வேணாம்.. ப்ளீஸ்..” இந்திரா படுக்கையில் இருந்தாள்.

சிவாவுக்கு அவன் மரபணு தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டுப் பிறந்தவன் என்று தெரியாது. இந்திரா ராகுல் இருவருமே அதை அவனிடம் சொல்லவில்லை.

இந்திரா இறந்ததற்குப் பின் ராகுல் மீண்டும் டெல்லி சென்றான். சிவா படித்தது வளர்ந்தது எல்லாம் அங்கே தான்.

“ராகுல் எப்படி இருக்க? பாத்து ரொம்ப நாள் ஆச்சு..” யாரோ ஒருவர் கேட்டார். முகத்தில் முக்கால் பாகம் தாடி கோட்சூட் போட்டு இருந்தார்.

“நல்லா இருக்கேன்.. நீங்க?” ராகுலுக்கு அவரை யார் என்று தெரியவில்லை.

“என்னடா அதுக்குள்ளே மறந்துட்டியா இந்திராவோட ப்ரோபசர்.. ஞாபகம் இல்லையா?” அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

“ஓ.. சார் நீங்களா சாரி சார் அடையாளமே தெரியல”

“இது யார் கூட..? பையனா? இந்திரா எங்கடா? கடைசியா இங்க இருந்து போனப்போ பார்த்தது.”

“ஆமா சார்.. பையன்.. பேரு சிவா” ராகுல் சிவாவிடம் சொன்னான்: “சிவா, சாருக்கு ஹலோ சொல்லு”

“ஹலோ சார். மை நேம் இஸ் சிவா உங்க பேரு என்ன?” சிவா பேசியவாறே அவரிடம் கைகுலுக்குவதற்காக கை நீட்டினான். இரண்டு பேரும் கைகுலுக்கிகொண்டனர்.

“பையன் பாக்க அச்சு அசலா உன்ன மாறியே இருக்கான். இந்திரா எங்கடா ஆளையே காணோம் வீட்ல இருக்காளா?”

ராகுல் எல்லாவற்றையும் சொன்னான். சொல்லிமுடிக்கும் போது அவன் கண்ணில் நீர்த்துளிகள் இருந்தது. சிவா தூரத்தில் விளையாடி கொண்டிருந்தான்.

“அவளுக்குத் தைரியம் ரொம்ப ஜாஸ்தி.. அதே நேரத்துல பிடிவாதம் பிடிச்சவ” பேராசிரியர் சொன்னார்.

“சார் இத யாருகிட்டயும் சொல்ல வேணாம் முக்கியமா சிவா கிட்ட” ராகுல் கேட்டுக்கொண்டான்.

கிளம்பும்போது அந்த பேராசிரியர் சிவாவுக்கு ஒரு பேனாவை தந்தார். “வரேன் சிவா 1.0” பேராசிரியர் விடைபெற்றார்.

“அப்பா 1.0ன்னா என்ன?”

“யாரவது புதுசா பொறந்தா சைன்ஸ் பாஷையில அப்படி சொல்லுவாங்க”

சிவா வளர்ந்து தன்னுடன் படித்த பெண்ணையே காதலித்து திருமணம் செய்து கொண்டான் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பச்சை நிற விழிகளோடு.

வருடம்: 2074

தாத்தா தான் பெயர் வைத்தார் : “இந்திரா..!”

“அப்போ அப்பாவுக்கு அவரு ஜீன் இன்ஜினியரிங் மூலமா பொறந்தவர்ன்னு தெரியாதா?” பேத்தி இந்திரா கேட்டாள்.

“இதுவரைக்கும் தெரியாது. இதுக்கு அப்புறம் நீயும் சொல்லகூடாது.”

“சொல்ல மாட்டேன் தாத்தா.. ப்ராமிஸ்” இந்திரா உறுதியாய் சொன்னாள்.

ரெனோ-1 வெளியே நின்று கொண்டிருந்தான். அவன் உடம்பில் சார்ஜ் மிகவும் குறைவாக இருந்தது.

இந்திரா எழுந்து செல்லத் தயாரானாள். கொஞ்ச தூரம் நடந்த பிறகு திரும்பி நின்று கேட்டாள்: “தாத்தா, அப்போ நானும் பயோ-இன்ஜினியரிங் மூலமா பிறந்தவ தானே?”

தாத்தா புன்னகையோடு தலையசைத்தவாறு சொன்னார்: “பாட்டிக்கும் உன்ன மாறியே கிரீன் கலர் கண்ணு தான்..!”

“அப்போ நான் தான் இந்திரா-2.0” இந்திரா தூங்கச் சென்றாள். ரெனோ-1 பின்னாடியே சென்றான்.


எழுதியவர்

சந்தோஷ் ராகுல்
திருச்சி மாவட்டம் துறையூரைச் சார்ந்த சந்தோஷ் ராகுல் பி.டெக்., பட்டப்படிப்பு பயிலும் மாணவர்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x