- ‘பெண்ணிய எக்ஸ்பிரஸ்’ நிவேதிதா லூயிஸ்.
- ‘கதைசொல்லிகளின் பேரரசி’ ஜீவா ரகுநாத்.
- ‘இரும்பிற்குள் ஈரம்’ வான்மதி மணிகண்டன்.
- ‘சொல் அல்ல செயல்’ கீர்த்திகா.
- ‘உற்சாகத்தின் ஊற்றுக்கண்’ கீதா இளங்கோவன்.
- ‘அபூர்வ நட்சத்திரம்’ சோ.மோகனா.
- ‘தன்னம்பிக்கை நாயகி’ ஹேமா ராகேஷ்.
- ‘உறவுகளை மேம்படுத்த வழிகாட்டும்’ தேவதை லதா.
ஆகிய எட்டுப் பெண் ஆளுமைகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் வழியான தன்னம்பிக்கை நூல்.
அரசுப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி விருப்பு ஓய்வு பெற்றவர். ஆசிரியமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வைப்பதன் மூலம் மகளிர் சார்ந்த பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து இயங்கி வருபவர். ஐக்கிய நாடுகள் சபையில் இரு முறை உரையாற்றியவர். தனது பயண அனுபவங்களைப் பயணக்காட்சிகளாகவும் பெண்ணியம் சார்ந்த கட்சிகளாகவும் தொடர்ந்து எழுதி வரும் ரமாதேவி ரத்தினசாமி அவர்களின் பெண்ணியம் சார்ந்த நூல் இது.
’மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டும்’ என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் கூற்றுப்படி, சமகாலத்தில் தன்னம்பிக்கை நிறைத்து, செல்லும் இடமெங்கும் தடைகளைத் தகர்த்து சுதந்திர வெளியில் பெண்ணியத்தைப் பரப்பும் எட்டுப் பெண் இயக்கவாதிகளைப் பற்றிய வரலாற்றுடன் கூடிய கட்டுரைத் தொகுப்பு இது.
சுயம்புவாக உயர்ந்து பொதுநல வெளியில் பெண்களுக்கான ஓங்கி ஒலிக்கும் குரலாகவும், சமூகநீதியையும் சமத்துவத்தையும் எல்லோரிடமும் வளர்ப்பதில் காட்டும் அக்கறையிலும்; வறுமையையும் ஏழ்மையையும் போக்கி மனிதர்களுக்குள் பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் காட்டும் அக்கறையும் நிறைந்திருக்கும் இந்தப் பெண்களின் வரலாறு வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் உற்சாக டானிக்காகவும் அமைந்துவிடும் என்பது உறுதி.
இன்றைய காலகட்டத்தில் பெண்களின் மீதான சமூகத்தின் பார்வை, ஆண்களின் தொடர்ச்சியான பாலியல் சீண்டல்கள் மூலமாக அச்சத்திற்கு உரியதாக மாறிப் போயுள்ளது. வளரும் பெண் குழந்தைகளுக்குச் சமூகத்தின் மீதான நம்பிக்கையையும், நல்வழிகளின் மூலம் வாழ முடியும் என்ற உற்சாகத்தையும் ஊட்டுவது காலத்தின் அவசர அவசியமாக மாறி நிற்கிறது. இத்தகு சூழலில் இந்நூல் சிறப்பானதொரு பாதையைக் கட்டமைப்பதில் முன்னிற்கிறது.
வரலாறு என்றாலே கடந்த காலம் என்ற பழைய சிந்தனையிலிருந்து வெளியேறி; இன்றைய யுகத்தில் வாழும் பெண் இயக்கவாதிகளை அடையாளம் காட்டுவதில் வெற்றி பெறுகிறது நூல்.
வறுமையில் உழன்ற சாதாரணப் பெண்களைப் போலவும், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் துறந்தும் இந்தப் பெண்களுக்குள்ளும் மன அழுத்தம் நிறைந்து இருந்த காலகட்டம் இருந்தது. வாழ்வில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் தொடர்ந்து அழுத்துகையில்; அதிலிருந்து தப்பிப்பதற்குத் தற்கொலையை நோக்கித் தம்மை செலுத்தியவர்களும் இவர்கள். ஆனால் அடுத்து என்ன என்று எதிர்பார்க்காத பேராச்சரியத்தை அளிக்கும் வாழ்வில் ஏதோ ஒரு புள்ளியில் நாம் பிறந்ததன் நோக்கம் என்ன என்பதை இவர்கள் உணர்ந்து கொண்டதன் பயனே இன்று உலகெங்கும் பேசப்படும் பெண்களாக உலா வரத் துவங்கி உள்ளனர்.
எட்டுப் பெண்களின் வாழ்க்கை நிலை வேறு. அவர்களின் வளர்ந்த சூழலும் வேறு வேறு. அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளின் வழியே; அவர்கள் தங்களை உணர்ந்து கொண்ட நோக்கம் ஒன்றே ஒன்று. அது வாழ்வை நகர்த்துவதற்குப் போராட வேண்டும் என்பதே. அந்த வகையில் களங்கள் வேறாகவும், காட்சிகள் வேறாகவும், அமைப்புகள் வேறாகவும் இவர்களுக்குக் கண்முன் விரிந்து கிடந்தாலும்; போராட்டக் குணத்தில் மாறாமல் வெற்றி நடை போடுகிறார்கள்.
இங்கு ஒவ்வொரு ஆண்மகனும் தன்னை அட்லஸ் ஆக நினைத்துக் கொண்டு தானே உலகைத் தாங்கிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறான் அப்படி இருக்கும் அவன், எழுதும் ஒவ்வொரு எழுத்தும் அவனைப் பற்றியதாகவே இருக்குமே அன்றி, பெண்கள் குறித்து அவன் ஒருபோதும் எழுதப் போவதில்லை என்று சமகால நிதர்சனத்தை வெளிச்சமிடும் நிவேதிதா லூயிஸ் தொடங்கி; 40 வருடங்களுக்கு முன்பே தனது 17 வயதில் தனது தாய்க்குத் தானே மறுமணம் செய்து வைத்து அவரின் வாழ்வில் புதியதொரு வெளிச்சத்தை உருவாக்கிய புரட்சியாளராக உறவுகளை மேம்படுத்தும் தேவதையாக ஒளிரும் லதா அவர்கள் வரை வாழ்க்கை வரலாறு சிறு குறிப்புகளாக, தன்னம்பிக்கை வரிகளாக நூலெங்கும் ஒளிர்கிறது.
- நிவேதிதா லூயிஸ்:
வரலாற்று ஆய்வாளர், பெண்ணியச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், பேச்சாளர், மரபு நடை ஆய்வாளர், ‘ஹெர் ஸ்டோரீஸ்’ பதிப்பகத்தின் இணை நிறுவனர், பயணங்களில் சிறந்தவர், வடசென்னை குறித்த பொதுப் பிம்பத்தைத் தனது எழுத்துக்களின் மூலம் மாற்றிக் காட்டியவர், வரலாற்றில் மறைந்திருந்த அல்லது மறைக்கப்பட்ட பெண்களைத் தனது எழுத்தின் வழியே வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர். முதல் பெண்கள் என்ற நூலின் வழியே இந்தியாவின் மறக்க முடியாத தான் ஈடுபட்ட துறைகளில் முதல் சாதனைகளைப் படைத்த பெண்களைப் பற்றிய நூல் வழியே நன்கு அறியப்பட்டவர். இலக்கியத்தின் மீதும். பெண்ணியத்தின் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக மத்திய அரசின் ரயில்வே துறையில் கிடைத்த அரசுப் பணியை உதறிவிட்டு சமூக முன்னேற்றத்திற்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்.
பெண்களை இயல்பாக இருக்க விடுங்கள். போலித்தனமான வாழ்க்கை வாழ்வதற்கு நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்கள் பேசுவதற்கான வழியை உருவாக்கிக் கொடுங்கள். உன் இயல்பில் நான் வாழ விடுவேன் என்ற நம்பிக்கையைப் பெண்களுக்குக் கொடுங்கள். ‘அழகுகளுக்குள்ளும் காதலுக்குள்ளும் சுருங்கிப் போகாமல் அறிவு சார்ந்த செயல்பாடுகள் சார்ந்த ஒரு தளத்திற்குப் பெண்களை நகர்த்த வேண்டிய உதவியைச் செய்யாவிட்டாலும்; தடையாக இருக்காதீர்கள்’ என்று ஆண்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் நிவேதிதா லூயிஸ்; தனது எழுத்துக்களின் வழியே பெண்ணியத்தை உயர்த்திப் பிடிப்பதில், பெண்களுக்கான சம உரிமை வழங்கப் போராடுவதில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்.
- ஜீவா ரகுநாத்:
எழுத்தாளர், நடிகை, பாடகர், மிமிக்ரி கலைஞர், பழம்பெரும் கதை சொல்லி, மொழிபெயர்ப்பாளர் என்ற பல்வேறு தளங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு; ஒவ்வொன்றிலும் முதன்மையாளராகத் தன்னை நிலை நிறுத்தியவர். 27 நாடுகளுக்கும் மேலாகப் பயணித்து; 25 ஆண்டுகளாகக் குழந்தைகளுக்குக் கதை சொல்லலில் ஒரு புதிய தளத்தை உருவாக்கிக் காட்டியவர். கதை சொல்லும் நுட்பங்கள், கதை மேம்பாடு, கதைகள் மூலம் தகவல் தொடர்புத் திறனை வளர்த்தல் கதைகள் போன்றவைகளை தனது பயிற்சிப் பட்டறையில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கற்றுத் தருகிறார், பள்ளிகள் கல்லூரிகள், கலாச்சாரச் சங்கங்கள், சமூக கழகங்கள் மருத்துவமனைகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், திருவிழாக்கள், சமூக மையங்கள், தனியார் அமைப்புகள் என எந்தவித வரைமுறையும் இன்றி இவரது கதை சொல்லல் நீண்டு கொண்டே செல்கிறது.
- வான்மதி மணிகண்டன்:
’மேக் வெல் கன்டெய்னர் கேர்’ என்ற நிறுவனத்தின் இயக்குநர். ‘பாவையர் மலர்’ மாத இதழின் ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் சமூக ஆர்வலர், சமூக சேவகர், பதிப்பாசிரியர் எனப் பன்முகத்திறன் கொண்டவர், திருமணமான புதிதில் கணவருடன் இணைந்து கடன் வாங்கி ஆரம்பித்து நிறுவனம் நஷ்டத்தில் இயங்க, கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழலில் இருவரும் தற்கொலைக்கு முயற்சிக்க, திடீரென்று பிறந்த ஞானோதயத்தில் தற்கொலையிலிருந்து மீண்டு வந்து; இன்று மிகப்பெரிய கண்டெய்னர் நிறுவனத்தின் இயக்குநராக உயர்ந்த நிற்கும் இவரின் உழைப்பு இன்று எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்மணிக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும். தனது வீட்டையே குழந்தைகளுக்கான நூலகமாகவும், உடற்பயிற்சி மையமாகவும் மாற்றி அமைத்து சமூக முன்னேற்றத்திற்கும் தன்னை உயர்த்திக் கொண்டிருப்பவர், ‘இது நம் வாழ்க்கைக்குப் பயன்படாதது என்று எந்த விஷயமும் இல்லை, தோன்றுவதைச் செய்யுங்கள். ஆனால் நீங்கள் செய்யப் போகும் விஷயம், யாரையும் எந்தக் காலத்திலும் பாதிக்காது என உறுதியாக நம்பினால் அதைச் செய்யுங்கள்’ என்று உழைக்கும் ஒவ்வொருவருக்கும் வாசகம் சொல்லும் இவரது வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொருவரும் வாசிக்கும்போது தன்னம்பிக்கை ஊற்று அவரவருக்குள் உற்பத்தியாகும் என்பது உறுதி.
- கீர்த்திகா:
தனது புகுந்த வீட்டில் தனக்குக் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அவரது எதிர்காலத்தையே புரட்டிப் போட்டது. ‘இந்தத் தொழிலைத் தவிர்த்து உன்னால் ஒரு ரூபாய் சம்பாதித்துக் காட்ட முடியுமா?’ என்ற வினாவில் கொஞ்சமும் துவண்டு விடாமல், தனது தகுதியையும் திறமையும் நம்பி தனி ஒரு மனுஷியாக 13 ஆண்டுகள் நிலைநிறுத்திக் கொண்டு முன்னேறியவர். ஊட்டச்சத்து நிபுணர், உளவியலாளர், ஆலோசகர் எழுத்தாளர், பேச்சாளர், சமூக சேவகர், நிறுவனர், பெண் தொழில் முனைவோருக்கான ஆலோசகர், பெண்ணியலாளர், அரசியல் விமர்சகர் எனப் பல முகங்கள் கொண்டு உலகத்திற்குத் தன்னை நிரூபித்துக் காட்டியவர், உடல் மன ஆரோக்கியம் நிறைந்த உலகை உருவாக்க வேண்டும் என்ற கனவை நோக்கி தன்னை செலுத்திக் கொண்டிருப்பவர், கீர்த்திகா தனி ஒருவராக 8500 கிலோமீட்டர் கார் பயணத்தின் மூலம் சென்னையிலிருந்து காஷ்மீர் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவர்.
- கீதா இளங்கோவன்:
உடல் ஆரோக்கியத்தின் மீதான அக்கறை கொண்டவர். மலையேற்றம் பயிற்சி வீரர், பயணம் சார்ந்த செயல்களைச் செய்பவர், ஆவணப்படங்கள்- குறும்படங்கள் மூலம் பெண்களின் வலிகளைப் பொதுவெளிக்குக் கடத்தியவர். மாதவிடாய், ஜாதிகள் இருக்கேடி பாப்பா, அஃறிணைகள், ஆராயாத் தீர்ப்பு போன்ற குறும்படங்களின் வழியே பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் எனப் பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரர். ’துப்பட்டா போடுங்க தோழி’ என்ற நூல் மூலம் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும் கூட.
- சோ.மோகனா:
அபூர்வ நட்சத்திரம் என்று அழைக்கப்படுபவர். 75 வயதிலும் தினமும் 200 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்து. வறுமையில் உழலும் மக்களுக்கு உதவி செய்பவர். பேராசிரியர், முதல்வர் என்ற பொறுப்புகளிலிருந்து பணி ஓய்வு பெற்ற பின்; தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணித் துப்புரவுத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு தளங்களில் இவரது பணி விரிவாகிக் கொண்டே செல்கிறது. இடையே ‘தாய் சி’ என்ற சீன தற்காப்புக் கலையில் முதுநிலைப் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகிறார் .120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பெண் விஞ்ஞானிகள்., கணித மேதைகள், வானியல் நிபுணர்கள் எனப் பெண்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தனது விரல் நுனிக்குள் வைத்திருப்பவர். அதையே கட்டுரைகளாகவும் நூல்களாகவும் எழுதி பொதுவெளியில் பெண்களை அறிமுகம் செய்தவர். இன்றும் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே போராட்டத்தையே வாழ்வாக விரும்பி ஏற்றுக் கொண்டவர். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகவும் பெண்களுக்காகவும் களத்தில் நின்று குரல் கொடுப்பவர். கல்வியும் கடின உழைப்பும் மட்டுமே பெண்களின் மீதான ஒடுக்குதலைக் கடப்பதற்கான, தடைகளைத் தகர்ப்பதற்கான வழிகள் என்று சமூகத்திற்குத் தனது வாழ்வின் மூலமே நிரூபித்துக் காட்டியவர் . புற்றுநோயிலிருந்து மீண்டு தன்னையே ஒரு புற்று நோய்க்கு எதிரான கேடயமாக மாற்றி விழிப்புணர்வுக்காகப் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு தொடர்ந்து செயலாற்றும் வீரரும் கூட.
- ஹேமா ராகேஷ்:
தனிப்பெரும் ஆளுமை நிலையான வளர்ச்சி நீடித்த வளர்ச்சி என்ற வாழ்வைத் திட்டமிட்டுச் செதுக்குபவர். ”நீங்கள் சிகரத்தை அடைய வேண்டுமென்றால் முன்னோக்கிய முதல் அடியை நீங்கள் தான் எடுத்து வைக்க வேண்டும் .உங்கள் எண்ணமும் செயலுமே உங்களின் முதன்மை நம்பிக்கை.” என்று உற்சாகமூட்டும் இவர்; மிகச்சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர். டிஜிட்டல் தொழில் முனைவோர். அரசு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். மூன்று லட்சத்திற்கும் மேல் ஃபாலோயர்ஸ் கொண்ட வலைத்தளப் பதிவாளர்.
- லதா:
மனிதர்களுக்கு அடிப்படைத் தேவை என்பது உண்ண உணவும் வசிக்க இருப்பிடமும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், காமமும் அடிப்படைத் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். ஆண் பெண் உறவு பற்றி மட்டுமல்ல குழந்தைகளின் கல்வி பற்றியும் பேச வேண்டிய கட்டாயம் இது. காமம் குறித்துப் பல மடத்தனமான முகமூடிகளைக் கிழித்தெறிந்து காமம் என்பது அன்பின் ஊற்று என்பதை உலகுக்குப் புரிய வைத்த ’கழிவறை இருக்கை’ நூலை எழுதியவர், சமூக முன்னேற்றச் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்பவர். வேலை வாங்கிக் கொடுக்கும் நிறுவனத்தைச் சொந்தமாக ஆரம்பித்துப் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர். ஆண் பெண் புரிதலையும் சமூகத்தில் பேசு பொருளாக மாற்றிக் காட்டியவர்.
உலகத்தின் வரலாறு எழுதப்பட்டது என்னவோ ஆண்களின் கரங்களில் தான். அதனால் தான் உலகத்தின் முன்னேற்றத்திற்குத் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட பெண்களைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் வரலாற்று நூல்களில் இடம் பெறவில்லை. ஆனால் உலகத்தின் நகர்வை முன்னோக்கிச் செலுத்துவதில் பெண்களின் பங்கு அளப்பரியது. இந்திய வரலாற்றிலும் அத்தகு பெண்களைப் பட்டியலிடுகையில் கஸ்தூரி பாய் காந்தி தொடங்கி நாம் பாடப் புத்தகத்தில் வாசித்திருக்கும் ஒரு சிலரையே நினைவில் கொண்டு வர முடிகிறது. ஆனால், அவர்களால் மட்டும் இந்தச் சமூகமும் பெண்களின் முன்னேற்றமும் கட்டமைக்கப்படவில்லை. வாழும் காலத்திலேயே தமக்கு நேர்ந்த பிரச்சினைகளைக் கொடுமைகளைக் கண்டு அஞ்சி ஒடுங்கி தனது கூட்டுக்கு உள்ளேயே விழுந்து விடாமல் தடைகளைத் தவிர்த்து வெற்றி ஒன்றையே இலக்காக வைத்து முன்னேறி உலகிற்கும் வழிகாட்டும் எத்தனையோ பெண் மேதைகள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை முறையாகப் பட்டியலிட்டால், அதுவே வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிறைய அனுபவங்களைக் கற்றுத்தரும் என்பது இந்த நூலின் மூலம் அறிய முடிகிறது.
தம் மனதிற்குப் பிடிக்காத ஒன்று சொர்க்கமே என்றாலும், அதைச் சுமையாகக் கருதியும் உள்ளத்தில் ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டால், அது மலையே என்றாலும் சுகமானதாகக் கொண்டு சுமக்கும் பெண்களின் சக்தி சுயம்புவாக உருப்பெற்று நமக்கு வழி காட்டுகிறது. தங்களின் வாழ்க்கைக் குறிப்புகளையே கலங்கரை விளக்கம் என எடுத்துக்காட்டும் இந்தப் பெண்களின் உழைப்பும் இடைவிடாத முயற்சியும் கொண்ட கொள்கையின் தொடர்ச்சியான ஈடுபாடும் அவர்களைத் தொடர்ந்து பயணிக்க வைக்கின்றது, அதுவே இது போன்ற நூல்களுக்கும் முன்னோடியாக நிற்கிறது.
இந்த நூலில் என் போன்ற நிறையப் பேருக்கு வழிகாட்டியாக விளங்கும் மோகனா அம்மா அவர்களின் வாழ்வும் இடம்பிடித்திருப்பதை வாசிக்கையில், நானே சாதித்து விட்டதைப் போன்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. நூலை வாசிக்க வைத்த மோகனா அம்மாவிற்குப் பேரன்பும் பெருமகிழ்வும்.
“சுயம்பு” (தடம் பதிக்கும் சாதனைப் பெண்கள்)
ஆசிரியர் : முனைவர். ரமா தேவி ரத்தினசாமி.
வெளியீடு : வேரல் புக்ஸ்
முதல் பதிப்பு: செப்டம்பர் 2024
விலை : 160 ரூபாய்
தொடர்பு எண்: 9578764322
எழுதியவர்
- கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய 'இளையவன் சிவா' திண்டுக்கல் மாவட்டம் - அய்யம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் அரசுப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். மின்மினிகள், தூரிகையில் விரியும் காடு ஆகிய இரண்டு ஹைக்கூ நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, படைப்பு கல்வெட்டு போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.