பண்டைய ஆண்டான் அடிமை சமூகத்தில் அடிமைக்கு சுயம் என்று ஒன்று இல்லை. அடிமைக்கு கூலியோ மனித உரிமைகளோ எதுவும் கிடையாது. சந்தையில் ஆடு மாடுகளைப் போல் விற்கப்பட்ட கொடுமையும் நடந்தது.
அதற்கு அடுத்த நிலவுடமை சமூகத்தில் விவசாய கூலிகளுக்கு கூலி கிடைத்தது. மேலும் சில உரிமைகள் கிடத்தன.
அதன்பிறகு வந்த முதலாளித்துவ சமூகத்தில் நவீன பாட்டாளி வர்க்கமாக உயர்வு பெற்ற உழைக்கும் வர்க்கம் 8 மணி நேர வேலை நேரம், மாதாந்திர சம்பளம்,TA, DA, gratuity, pf, Medical insurance, paid leave, pension, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பள உயர்வு போன்ற உரிமைகளை போராடி பெற்றனர். அதோடு சொந்த ஊரைத் தாண்டி வெளியே வந்தனர். கல்வி வாய்ப்பு பெற்றனர், நவீன இயந்திரங்களை கையாள வாய்ப்பு பெற்றனர்.
இவர்களே சுதந்திரம்! சமத்துவம்!! சகோதரத்துவம்!! போன்ற முழக்கங்களை முன்வைத்தனர். மேலும் பாலின சமத்துவம், தேசிய விடுதலை, சாதி ஒழிப்பு போன்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விடுதலை முழக்கங்களை முன்னெடுக்கின்றனர்.
மதரீதியான பண்பாட்டு விழாக்களுக்கு மாற்றாக பழைய அடையாளங்களை மறுத்து உரிமைகளை வென்றெடுத்த தினங்களான காதலர் தினம், உழைப்பாளர் தினம், உழைக்கும் மகளிர் தினம் போன்ற நவீன பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள்.
பழைய நிலவுடமைக் கால மதநூல்கள் மற்றும் மன்னர்களை புகழ்ப்பாடும் இலக்கியங்களுக்கு மாற்றாக மக்களைப் பேசும் நவீன இலக்கியங்களை படைக்கிறார்கள்.
ஆனால் நம் நாட்டில் 90 சதவிகிதத்திற்கு மேலான உழைக்கும் மக்கள் இன்றும் முறைசாரா தொழிலாளர்களாகவும் ஒப்பந்த பணியாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நவீன பாட்டாளி வர்க்கத்துக்கு உரிய மேலே கூறப்பட்டுள்ள எந்த உரிமையும் கிடையாது. மனு கொடுப்பதன் மூலம் பெறவும் முடியாது. அரசை பாதுக்காத்து நிற்கும் பெருமுதலாளிகள் விடமாட்டார்கள். ஆட்சியாளர் மீறி நடைமுறைப்படுத்த முயன்றால் ஆட்சியாளரை கொல்லவும் தயங்க மாட்டார்கள்.
எந்தவித எதிர்கால பாதுக்காப்புமற்று உழைக்கும் இம்மக்களின் திருமணத்துக்குப் பெண் பார்ப்பது தொடங்கி குழந்தைக்கு பெயர் வைக்கும் வரை அனைத்தையும் சாதிய உறவுகளும் குலச் சொத்துமே தீர்மானிக்கிறது. அதனால் தான் சாதி மறுத்து காதலித்தாலும் பெற்றோர் சொல் மீறி திருமணம் செய்ய பலர் தயங்குகின்றனர். காரணம் நாளை ஒரு பிரச்சனை என்றால் சாதிசனம் தான் வந்து நிற்கும் என்னும் நம்பிக்கையில். நாளையே ஒரு போலீஸ் கேஸ் என்றால்கூட சாதி சங்கம் வந்து நிற்கும்.
அதைத் தொழிற்சங்கங்கள் தான் உடைக்க வேண்டும். பணியிட பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு, பென்ஷன், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பள உயர்வு போன்றவற்றை உறுதிப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தினால், தொழில்நுட்பம் உலகத்தோடு இணைத்துக் கொண்டுள்ள இக்காலத்தில் அவர்கள் பழைய காட்டுமிராண்டி கால வாழ்விற்கு போக தயங்குவார்கள்.
தேவையே மனநிலையை தீர்மானிக்கிறது!
அவர்கள் தங்களை நவீன பாட்டாளி “வர்க்கமாக மேம்படுத்திக்” கொள்ளும் போராட்டத்தில்தான் தனக்கு எதிரான சுரண்டல் அமைப்பு முறையை பாதுகாத்து நிற்கும் அரசையும் அவர்களது கூட்டாளிகளான மதம் சாதி போன்ற நிறுவனங்களையும் அடையாளம் கண்டு தூக்கி எறிய முன்வருவார்கள்.
வர்க்க மேம்பாடு ஏற்பாட்டால் சாதி ஒழியும் என்று மார்க்சியம் இதைத்தான் சொல்கிறது !
– ஜாசிம்
எழுதியவர்
இதுவரை.
- நூல் விமர்சனம்29 July 2024பிரசாந்த்.வே எழுதிய “ஆனைமலை” நாவல் – ஓர் அறிமுகம்.
- சமூகம்1 December 2023சாதியத்திற்கு எதிரான சுயமரியாதை போராட்டம் !
- சிறார் பாடல்கள்8 June 2023பட்டம்
- சிறார் கதைகள்8 June 2023மாய வால் குரங்கு