புதுச்சேரியில் பெண் உரிமைகள், சம ஊதியம், வாக்குரிமைக்காகவும் குரல் எழுப்பிய முதல் பெண்மணிகளில் சரஸ்வதி சுப்பையாவும் ஒருவர்.
1523 முதல் 1815 வரை, புதுச்சேரி பல்வேறு காலனித்துவவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் இறுதியாக பிரெஞ்சுக்காரர்களில் முடிவற்றது. சரஸ்வதி கம்யூனிஸ்ட் தலைவர் வி சுப்பையாவின் மனைவி ஆவார், அவர் யூனியன் பிரதேசமான புதுவையில் பிரெஞ்சு காலனித்துவவாதிகளுக்கு எதிராகவும், சுதந்திர போராட்டத்திற்கும் தலைமை தாங்கினார். சுப்பையா அரசியல் சுதந்திரத்திற்காக போராடினார் என்றால், சரஸ்வதி பெண்களுக்கான சமூக சுதந்திரத்திற்காக போராடினார்.
சடகோபன் மற்றும் சூடாமணி தம்பதிக்கு இரண்டாவது மகளாக அக்டோபர் 22, 1924 அன்று வேலூரில் உள்ள ஆர்ணியில் பிறந்தார். கல்வியில் படுச்சுட்டி. அவர் தனது இடைநிலையை முடித்தார், அதன் பின் இரண்டாம் உலகப் போர் நடைப்பெற்றதால் அவர் பள்ளி படிப்பை தொடர முடியாமல் போனது.
1943ல் சுப்பையாவை மணந்த பிறகு சரஸ்வதி புதுச்சேரிக்கு வந்தார். திருமணமான நான்கு மாதங்களிலே சுப்பையா நாடு கடத்தப்பட்டார். அதனால் வேலூருக்கேத் திரும்பிய சரஸ்வதி 1945ல் தான் யூனியன் பிரதேசத்திற்குத் திரும்பினார்.
சரஸ்வதி 1946 ல், ‘பிரெஞ்சு இந்தியப் பெண்கள் சங்கம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார். பின் ஏப்ரல் 9 அன்று அனைத்துப் பெண்கள் மாநாட்டை ஏற்பாடு செய்தார். இந்த மாநாட்டில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டதாக யூனியன் பிரதேசத்தின் வரலாற்றாசிரியர் ஏ.லட்சுமிதாத்தாய் கூறியுள்ளார். புதுச்சேரி வரலாற்றில் முதல் பதிவு செய்யப்பட்ட அமைப்பு சங்கம் இது தான். சுதந்திரத்திற்கு பின் 1950ல், யூனியன் பிரதேச பெண்களுக்கு புதுவையில் வாக்குரிமை வழங்கியது.
எங்கள் கிராமமான சண்முகபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் குழுவை என் அம்மா தனலட்சுமி மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார். அனைவரும் சிவப்பு நிற புடவை அணிந்திருந்தனர். இந்த மாநாட்டில் தான் பெண்களுக்கான வாக்குரிமைக்கான கோரிக்கையை சரஸ்வதி எழுப்பினார், ”என்று புதுச்சேரியின் எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சீனு தமிழ் மணி பெடரல் என்ற இணைய இதழுக்கு கொடுத்த போட்டியில் தெரிவித்திருந்தார். “யூனியன் பிரதேசத்திற்கு முழு சுதந்திரம் மற்றும் இரு பாலினருக்கும் சமமான ஊதியம் போன்ற தீர்மானங்கள் இங்குதான் நிறைவேற்றப்பட்டன,” என்று மேலும் கூறினார். சரஸ்வதி சுப்பையா National Federation of Indian Women என்ற அமைப்பில் தலைவராகவும் பணியாற்றினார் என்பது கூடுதல் செய்தி.
1959 ஆம் ஆண்டு, சரஸ்வதி காசுகடை தொகுதியில் போட்டியிட்டு புதுச்சேரி பிரதிநிதிகள் சபைக்கு முதன் முதலில் ஓரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டது அதுவே. அவர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. 1959ஆம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினாராக பணியாற்றினார். 1968ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் முதல் பெண் துணை மேயராக பணியாற்றினார் என்பதும் சிறப்பான ஓன்று. சரஸ்வதி ஜூன் 4, 2005 அன்று இறந்தார்.
“உள்ளாட்சித் தேர்தலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சரஸ்வதி மிகுந்த ஆர்வம் காட்டினார். தனது வாழ் நாள் முதல் இறக்கும் வரை ஒரு வலுவான இடதுசாரி சித்தாந்தவாதியாக இருந்த சரஸ்வதி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். அப்படிப்பட்ட தலைவர்களை இன்று அரசியலில் பார்ப்பது மிக கடினம்,” என்கிறார் தொழிற்சங்கவாதி முத்துக்கண்ணு.
சரஸ்வதி சுப்பையா அவர்களின் சமூக சேவையைப் பாராட்டி புதுச்சேரி அரசின் மகளிர் திலகம் விருது பெற்ற முதல் பெண்மணி ஆவார். ஆக புதுச்சேரி வரலாற்றில் சரஸ்வதி சுப்பையாவிற்கு என்று ஓர் தனியிடம் உண்டு என்பதை இந்த 75வது சுதந்திரத்தின கொண்டாட்டத்தில் பெண்களின் எழுச்சியை புதுச்சேரியில் வித்திட்ட அவருக்கு வீரவணக்கம் சொல்லி வரும் காலங்களிலும் பெண் உரிமைகளை மீட்டெடுப்போம் என்று சொல்லி பயணிப்போம் .
ஒரு பெண் புரட்சியாளர் பற்றிய தகவலை தந்தமைக்கு நன்றி சிந்துஜா. சிறந்த அறிமுகம்