28 May 2024

ல்டு கட்டிடத்தின் கோர்ட் ஹவுஸ் சாலையில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் உள்ள துளசிபாபுவின் மேசைக்கு எதிரே மேற்கு வானின் திறந்த வெளியைக் காட்டிக் கொண்டு ஒரு சன்னல் இருந்தது. துளசிபாபுவின் அருகிலுள்ள நண்பர் ஜகன்மாய்தத், மழைக்காலத்தில் ஒரு காலைப் பொழுதில், வெற்றிலைச் சாற்றைத் துப்பப் போனவர், வானில் ஒரு இரட்டை டை வானவில்லைக் கவனித்தார். உடனே ஆச்சர்யத்தை வெளிப்படுத்திவிட்டு, துளசிபாபு பக்கம் திரும்பிச் சொன்னார் ”இங்கே வாங்க ஸார். நீங்க இந்த மாதிரிக் காட்சியைத் தினசரி பார்க்கமாட்டீங்க”.

துளசிபாபு மேசையை விட்டு எழுந்து, சன்னலுக்கு வந்து வெளியே பார்த்தார்.

“நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்?” அவர் கேட்டார்.

“ஏன், அந்த இரட்டை வானவில்லைப் பார்க்கவில்லையா? உங்களுக்கென்ன நிறக்குருடா?” ஜகன்மாய்தத் கேட்டார்.

துளசிபாபு தன்னுடைய மேசைக்கு மீண்டும் சென்றார். “இரட்டை வானவில்லில் அப்படி எந்த ஒரு சிறப்பையும் நான் காணவில்லை. வானத்தில் இருபது வானவில்தான் இருக்கட்டுமே, எனக்கொன்றும் ஆச்சர்யமாகப்படாது. ஏன், அதைவிட ஒருத்தர் லோயர் சர்க்குலர் ரோட்டிற்குப் போய், அந்த இரட்டைக் கோபுர தேவாலயத்தை, வியந்து பார்க்கலாம்.”

எல்லோரும் ஒரே மாதிரி வியக்கும் உணர்வு கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் துளசிபாபுவுக்கு அந்த உணர்வே இருக்கிறதா என்று சந்தேகப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. ஒரு விஷயம் மட்டும் ஒருபோதும் ஓயாத ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது உணவகம், மன்சூரில் உள்ள அருமையான மட்டன் கெபாப். . இதைப் பற்றி அறிந்த ஒரே நபர் துளசிபாபுவின் சக ஊழியருமான ப்ரத்யோத் சந்தாதான்.

இப்படியொரு அவநம்பிக்கை மனோநிலை கொண்டவரான துளசிபாபு, தண்டகாரண்யக் காடுகளில் மூலிகை மருந்துகளைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது, வழக்கத்திற்கு மாறானதொரு மிகப் பெரிய முட்டையைப் பார்த்தும்கூட அவர் ஆச்சர்யப்பட வில்லை .

துளசிபாபு கடந்த பதினைந்து ஆண்டுகளாக மூலிகை மருத்துவத்தில் மனதிற்கினிய பொழுது போக்காக ஈடுபாடு கொண்டிருந்தார். அவருடைய தந்தை ஊரறிந்த மூலிகை மருத்துவர். துளசிபாபுவின் பிரதான வருமானம் ‘அர்பத்நாட் அன்ட் கோ’ வில் மேல்நிலைக் குமாஸ்தாவாகப் பணி செய்வதில் இருந்துதான், என்றாலும் குடும்பத் தொழிலையும் ஒரேயடியாக விட்டுவிட முடியவில்லை . சமீபகாலமாக அதற்கு இன்னும் அதிக நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறார். ஏனெனில் கல்கத்தாவின் மதிப்புக்குரிய குடிமக்கள் இருவர் அவர் கொடுத்த மருந்துகளால் பயனடைந்தனர் என்பது அவருடைய பாரம்பர்ய மருத்துவத் தொழிலைப் பகுதிநேரத் தொழிலாகச் செய்வதற்கு இன்னும் ஊக்கமளித்தது.

அந்த மூலிகைகளே இப்பொழுது அவரை மீண்டும் தண்ட காரண்யக் காட்டுக்குள் கொண்டு வந்திருந்தன. ஜகதல்பூரில் இருந்து, வடக்கே முப்பது மைல் தொலைவில் உள்ள ஒரு மலைக் குகையில் ஒரு முனிவர் வசித்து வருவதாகவும், மேலும், அவர் அறிந்த சில மருத்துவத் தாவரங்கள் உள்ளன என்றும், அவற்றில் ஒன்று உயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்துவதாகவும், கேள்விப்பட்டிருந்தார். இந்தத் தாவரம் ‘ராவல்ஃபியா செர்பென்டினா’ என்ற மூலிகையைக் காட்டிலும் சக்தி வாய்ந்ததாம். துளசிபாபு ஒருமுறை ஹைப்பர்டென்ஷனால் அவதிப்பட்ட பொழுது செர்பென்டினா’ சரியாக வேலை செய்யவில்லை. மேலும் ஹோமியோபதி, மற்றும் அலோபதி சிகிச்சை முறைகளிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை.

துளசிபாபு அவருடைய நண்பரான ப்ரத்யோத்பாபுவையும் இந்த முறை ஜகதல்பூருக்கு அழைத்துச் சென்றிருந்தார். துளசிபாபுவின் ஆச்சர்யம் உணர இயலாமை’, ப்ரத்யோத்பாபு மனதை அடிக்கடி நெருடும். ஒருநாள் அவருக்கு இது பற்றிக் குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர் சொன்னார்: “ஒருவர் வியப்பில் ஆழ்ந்து போவதற்குத் தேவைப்படுவதெல்லாம் கொஞ்சம் கற்பனை மாத்திரமே; அது துளிகூட உங்களிடம் இல்லை. அதனால்தான் உங்கள் முன் முழு உருவப்பேய் ஒன்று தோன்றினால் கூட நீங்கள் ஆச்சர்யப்பட மாட்டீர்கள்.” துளசிபாபு அமைதியாகப் பதில் சொன்னார். “ஒருவர் ஆச்சர்யத்தை உணராதபொழுது ஆச்சர்யப் படுவதாகப் பாவனை செய்வது போலியான விஷயமல்லவா? இதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.”

ஆனால், இது அவர்களின் நட்புக்குக் குறுக்காக நிற்கவில்லை.

அவர்கள் இருவரும் ஓர் இலையுதிர்கால விடுமுறையில் ஜகதல்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கினர். செல்லும் வழியில், மெட்ராஸ் மெயிலில் இரு வெளிநாட்டு இளைஞர்கள் அவர்கள் பெட்டியில் ஏறினர். அவர்கள் இருவரும் ஸ்வீடன் நாட்டுக்காரர்கள், அவர்களில் ஒருவன் மிக உயரமாக, அவனுடைய தலை ரயில் பெட்டியின் மேற்கூரையில் இடிக்குமளவுக்கு இருந்தான்

ப்ரத்யோத்பாபு அவனை எவ்வளவு உயரம் என்று கேட்க, அந்த இளைஞனும் பதில் சொன்னான். “இரண்டு மீட்டர், ஏழு சென்டிமீட்டர்.” என்று. அது ஏறக்குறைய ஏழு அடிக்குச் சமமாகும். ப்ரத்யோத்பாபு மீதமிருந்த பயணம் முழுவதும் அந்த இளம் இராட்சதனை வைத்தகண் எடுக்காமல் பார்த்தபடியே இருந்தார். ஆனால், துளசிபாபு ஆச்சர்யப்படவில்லை. “இந்த அசாதாரண வளர்ச்சி யானது, ஸ்வீடிஷ் மக்களின் உணவுப் பழக்கத்தைப் பொறுத்து அமைந்துள்ளது. இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை,” என்று சொன்னார்.

அவர்கள் காட்டில் ஏறக்குறைய ஒரு மைல் தூரம் நடந்து, ஐ.நூறு அடி உயரம் மேலேறி துமாய்பாபா முனிவரின் குகையை அடைந்தனர். அந்தக் குகை மிகப் பெரியதாயிருந்தது. சூரிய வெளிச்சம் ஒருக்காலும் நுழைந்திராததாலும், பாபாவின் தூபக்கா லிலிருந்து எப்போதும் புகை வெளியேறிய வண்ணம் இருந்ததாலும், அந்த இருளில் ஒரு பத்தடி தூரமே அவர்கள் உள்ளே நுழைய முடிந்தது. துளசிபாபு மூலிகை மருந்துகளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கையில் ப்ரத்யோத்பாபு டார்ச் விளக்கின் உதவியால், அங்கு அபரிமிதமாய்ப் படிந்திருந்த தொங்கூசிப் பாறைகளையும் பொங்கூசிப் பாறைகளையும் பார்த்து லயித்துப் போனார்.

துமாய்பாபா குறிப்பிட்ட அந்த மரம் சமஸ்கிருத மொழியில் ‘சக்ராபரணம்’ எனப்படும். அதாவது வட்ட இலைகள்’ என்று பொருள். துளசிபாபு இதைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. மூலிகை மருந்துகளைப் பற்றி படித்துள்ள அரைடஜன் புத்தகங்களில் ஒன்றில் கூட இதைப்பற்றிச் செய்தி இல்லை. அது ஒரு மரமல்ல. ஒரு புதர். அது தண்டகாரண்ய காட்டில் ஒரே ஒரு பகுதியில்தான் காணப்பட்டது. வேறு எங்கேயும் கிடையாது. பாபா கொடுத்த தகவல் களைத் துளசிபாபு கவனமாகக் குறித்து வைத்துக் கொண்டார்.

குகையை விட்டு வெளியே வந்ததும், சற்றும் தாமதிக்காமல் துளசிபாபு மூலிகையைத் தேடி விரைந்தார் ப்ரத்யோத்பாபு அவருடைய நண்பருக்குத் துணையாகச் செல்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தார். ஒரு சமயம் அவரும் பெரும் மிருகங்களை வேட்டை யாடுவதில் பேரார்வம் கொண்டிருந்திருக்கிறார். ஆனால், வனப்பாதுகாப்பு அதைத் தடை செய்து விட்டது என்றாலும் காடுகளின் ஈர்ப்புத் தொடர்ந்தது.

அந்த முனிவர் கொடுத்த தகவல்கள் துல்லியமாக இருந்தன. அரைமணி நேர நடை அவர்களை ஒரு பள்ளத்தாக்கில் கொண்டுவிட்டது. அதைக் கடந்து மூன்று நிமிடத்தில் ஒரு புதரைக் கண்டடைந்தனர். ஏழு தப்படி தூரத்தில் மின்னல் தாக்கிக் கருகிய வேப்பமரத்திற்குத் தெற்கில் இடுப்பளவு உயரப் புதரைக் கண்டனர். அது வட்ட வடிவப் பச்சை இலைகள் கொண்டது. ஒவ்வொன்றிலும், நடுவில் ஒரு ரோஜாச் சிவப்புப் புள்ளி. –

“இது என்ன இடம்?” ப்ரத்யோத்பாபு சுற்றிலும் பார்த்துவிட்டுக் கேட்டார்.

“ஏன் இந்த இடத்திற்கு என்ன?” “இல்ல. வேப்பமரத்தைத் தவிர நான் அறிந்த ஒரு மரம் கூட இல்லையே. பாருங்க, எவ்வளவு சுரப்பதமா இருக்கு இதுவரைக்கும் நாம் கடந்து வந்த இடங்களைப் போல் இல்லையே?”

காலடியில் ஈரப்பதமாக இருந்தது. ஆனால் துளசிபாபுவுக்கு அதெல்லாம் ஆச்சர்யமாக இல்லை. ஏன் கல்கத்தாவில் கூட சீதோஷ்ண நிலை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தில் மாறுபடு கிறது. தெற்கே உள்ள டோலிகஞ்ச் வடக்கே உள்ள ஷாம்பஜாரை விடக் குளிர்ச்சியாக இருக்கிறது. ஒரு காட்டின் ஒரு கோடியில் உள்ள சீதோஷ்ணநிலை இன்னொரு கோடியில் இல்லை என்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அதுவும் இயற்கையின் விநோதம் தவிர வேறொன்றுமில்லை.

துளசிபாபு தன்னுடைய பையைக் கீழே வைத்துவிட்டுப் புதரை நோக்கி குனிந்த தருணத்தில் ப்ரத்யோத்பாபுவின் கூரான கேள்வி ஒன்று தடுத்தது.

“அட இது என்ன பாபு தரையில?”

துளசிபாபுவும் அந்தப் பொருளைப் பார்த்தார். ஆனால் அதைக் கண்டு ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. “ஏதாவது ஒரு முட்டையாக இருக்க வேண்டும்.”

ப்ரதியோதிபாபு நினைத்தார். அது ஏதோ முட்டை வடிவப் பாறையாக இருக்குமென்று. ஆனால் இன்னும் கிட்ட நெருங்கிப் பார்த்த பொழுது உண்மையான முட்டைதான் மஞ்சள் நிறத்தில் பட்டை பட்டையாக பழுப்பு நிறக் கோடுகளும் அவற்றில் நீலநிற. புள்ளிகளும் கொண்டது என்பதை உணர்ந்தார். இதென்ன எதனுடையது இது? எவ்வளவு பெரிய முட்டை ஒரு மலைப் பாம்போ ?

இதற்கிடையில் துளசிபாபு அந்தப் புதரிலிருந்து இலைக் கொத்துகளைப் பறித்துத் தன் பையில் போட்டுக் கொண்டார் இன்னும் கொஞ்சம் பறிக்கலாம் என்று விரும்பினார். ஆனால் அப்பொழுது அங்கு நடந்த சம்பவம் ஒன்று அவரைத் தடுத்து நிறுத்தியது.

அந்தக் கணம் பார்த்து அந்த முட்டை குஞ்சு பொரிக்கும் சம்பவம் நிகழ்ந்தது. ப்ரத்யோத்பாபு அந்தக் கூடு வெடிக்கும் சப்தம் கேட்டு துள்ளிக் குதித்து பின்னால் நகர்ந்தவர், பின் கொஞ்சம் தைரியம் பெற்று, அதை நோக்கிச் சில அடிகள் எடுத்து வைத்தார்.

ஏற்கனவே, கூட்டிலிருந்து தலை வெளிப்பட்டுவிட்டது. ஒரு பாம்பல்ல, முதலையல்ல, கடல் ஆமையல்ல. ஆனால் ஒரு பறவை.

விரைவிலேயே அந்த உயிர் வெளிவந்துவிட்டது. தன்னுடைய குச்சிக் கால்களில் எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தது. பெரியதாக இருந்தது. ஒரு பெட்டைக் கோழியின் உருவத்தைப் போல.

ப்ரத்யோத்பாபு பறவைகளின் மட்டில் நாட்டமுள்ளவர். அவர் ஒரு மைனாவும், ஒரு புல்புல் பறவையும் வைத்திருக்கிறார். ஆனால், இவ்வளவு பெரிய அலகும், நீண்ட கால்களும் கொண்ட பறவைக் குஞ்சைப் பார்த்ததே இல்லை. அதனுடைய ஊதாச் சிவப்பு நிற சிறகுகள் அபூர்வமாக இருந்தன. பிறந்தவுடனேயே அதன் நடத்தை சற்று வளர்ந்த பறவையினுடையதைப் போல் இருந்தது

– எது எப்படி இருந்தாலும் துளசிபாபு மட்டும் அந்தப் பறவைக் குஞ்சை கொஞ்சங்கூடக் கவனிக்கவில்லை. மூலிகைகளை முடிந்த அளவுக்குப் பறித்துப் பைக்குள் திணிப்பதில்தான் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

ப்ரத்யோத்பாபு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுச் சொன்னார். “ரொம்ப ஆச்சர்யமாயிருக்கிறது. இதனுடைய பெற்றோர் பக்கத்தில் எங்கேயும் இருப்பதாகப்படவில்லை; அல்லது நம்முடைய பார்வைக்கு எட்டிய மட்டும்கூடப் படவில்லையே”

“ஒருநாளைக்கு இந்த ஆச்சர்யம் போதுமென்று நினைக்கிறேன்” பையைத் தோளில் ஏற்றிப் போட்ட வண்ணம் சொன்னார்.

துளசிபாபு. “ஏறக்குறைய மணி நாலாகிவிட்டது. இருட்டுவதற்குள் நாம் காட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்.”

தன் விருப்பத்திற்குச் சற்று மாறாக, ப்ரத்யோத்பாபு பறவைக் குஞ்சிலிருந்து மனசில்லாமல் பார்வையைத் திருப்பி துளசி பாபுவுடன் நடக்க வேண்டியதாயிற்று. காத்து நிற்கும் டாக்ஸியை அடைய இன்னும் அரைமணி நேரமாவது ஆகும்.

ஒரு காலடி சப்தம் கேட்டு ப்ரத்யோத்பாபு நின்று திரும்பி பார்த்தார்.

அந்தப் பறவைக் குஞ்சு அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. “இங்க பாருங்க….” ப்ரத்யோத்பாபு அழைத்தார். துளசிபாபு நின்று, திரும்பினார். அந்தப் பறவைக்குஞ்சு அவர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

பிறகு, தத்தி நடந்து, துளசிபாபுவின் முன்னால் வந்து நின்று, வழக்கத்தை விடப் பெரிதான அலகைத் திறந்து, துளசிபாபுவின் வேட்டி முனையைக் கௌவி இழுத்தது.

ப்ரத்யோத்பாபுவுக்கு ஒரே ஆச்சர்யம். என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கையில், துளசிபாபு அந்தப் பறவையை எடுத்துப் பையில் வைத்துக் கொண்டதைப் பார்த்து, ப்ரத்யோத்பாபு அதிர்ச்சியடைந்து கத்தினார். “பாபு, என்ன செய்கிறீர்களென்று உங்களுக்குத் தெரிகிறதா? ஒரு பேர் தெரியாத பறவைக் குஞ்சை உம்ம பைக்குள்ளே போட்டுக் கொள்கிறீர்.”

துளசிபாபு மீண்டும், நடந்துகொண்டே சொன்னார். “நான் எப்பொழுதுமே ஒரு செல்லப் பிராணி வளர்க்க விரும்பினேன். தெரு நாய்களை வளர்க்கலாம், பெயரில்லாத பறவைக் குஞ்சை வளர்ப்பதில் என்ன தவறு?”

ப்ரத்யோத்பாபு, அந்தப் பறவைக் குஞ்சு தொங்கும் பையிலிருந்து கழுத்தை வெளியே நீட்டி இந்தப் பரந்த வெளியைக் கண்களால் நோட்டமிடுவதைக் கண்டார்.

துளசிபாபு, மஜித்பாரி தெருவில் உள்ள ஒரு ஃப்ளாட்டில் இரண்டாவது அடுக்கில் குடியிருக்கிறார். மேலும், துளசிபாபு ஒரு பிரம்மச்சாரி. அவருக்குப் பணிவிடை செய்ய நடோபர் என்ற வேலைக் காரனும், ஜாய் கெஸ்டோ என்ற சமையல்காரனும் இருந்தனர். அதே அடுக்கில் இன்னொரு ஃப்ளாட்டும் இருந்தது. அதில் தரீத் சன்யால் என்பவர் குடியிருந்தார். அவர் ‘நபருன்’ அச்சகத்தின் உரிமையாளர். மிஸ்டர் சன்யால் ஒரு முன்கோபக்காரர் நகரில் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்சக்தி இழப்புகளால், அவருடைய அச்சசு வேலைகள் பாதிக்கப்படுவதால், அவர் எரிச்சல் அடைந்து விடுவார்.

துளசிபாபு தண்டகாரண்ய காட்டிலிருந்து திரும்பி வந்து இரண்டு மாதங்களாகிவிட்டன. திரும்பி வந்ததும் உடனடியாகக் கூண்டு ஒன்றைச் செய்து அந்தப் பறவையை அதில் வைத்தார். உள் வராண்டாவின் ஒரு மூலையில் அந்தக் கண்டு வைக்கப் பட்டது. அந்தப் பறவைக்கு வடமொழிப் பெயர் ஒன்றைத் தெரிவு செய்து பரிஹட் சஞ்ச்சு’ அல்லது ‘பிக்பில் என்று பெயரிட்டார். ஆனால் விரைவிலேயே ‘பிக் நழுவி வெறும் பில்’ என்று ஆனது

ஜகதல்பூரில் இருந்து கொண்டுவந்த அந்தப் பறவைக் குஞ்சுக்கு முதல் நாள் தானியத்தை உணவிட முயன்றார் துளசிபாபு. ஆனால் அது மறுத்தது. துளசிபாபு யூகித்தது சரியாகவே இருந்தது. அது மாமிச பட்சிணியாக இருக்குமென்று. அப்பொழுதிலிருந்து, அதற்குப் பூச்சிகளையே உணவாக இடுகிறார். சமீப காலமாக அதனுடைய பசியும் அதிகரித்திருந்தது. துளசிபாபு அதற்கு மாமிசத்தை உணவாகக் கொடுக்க வேண்டியதாயிற்று. நடோபர்தான் தினமும் மார்க்கெட்டிலிருந்து அதற்கு மாமிசம் வாங்கி வருவான். அது பறவைக்கு விரைவில் அபரிமித வளர்ச்சியையும் தோற்றத்தையும் கொடுத்திருந்தது.

துளசிபாபு நல்ல தொலைநோக்குடன் அந்தப் பறவைக்குப் பல மடங்கு மிகப் பெரிய கண்டொன்றை வாங்கினார். அவருடைய உள்ளுணர்வு அவருக்கு உணர்த்தியிருந்தது. அந்தப் பறவை பெரிய அளவுடைய ஒரினத்தைச் சார்ந்தது என்று. அந்தக் கூண்டின் மேற்கூரை மட்டும் தரையிலிருந்து இரண்டரையடி உயரமிருந்தது. ஆனால், துளசிபாபு நேற்றுதான் கவனித்திருந்தார். பறவை எழுந்து நின்று தலையை நிமிர்த்தி நின்றால் அதன் தலை மேற்கூரையைத் தொட்டுவிடுகிறது. அந்தப் பறவைக்கு இரண்டு மாதங்களே ஆகியிருந்தாலும் விரைவிலேயே இன்னும் மிகப்பெரிய கூண்டு ஒன்று தேவைப்படும்.

இதுவரை அந்தப் பறவையின் சப்தம் பற்றி ஏதும் குறிப்பிட வில்லை. ஒருநாள் காலை மிஸ்டர் சன்யால் வெராண்டாவில் நின்று டீ குடித்துக் கொண்டிருக்கையில் பறவையின் கத்தலைக் கேட்டு அவருக்குப் புரையேறிவிட்டது. சாதாரணமாக அந்த இரு அண்டை வீட்டுக்காரர்களும் எப்பொழுதாவதுதான் பேசிக் கொள்வார்கள். இன்றைக்கு அவர் புரையேற்றத் தொல்லையிலிருந்து விடுபட்ட பின், துளசிபாபுவின் கூண்டிலிருந்தது என்ன வகையான விலங்கு அது இப்படி கத்தியது என்று அறிந்து கொள்ளக் கேட்டார் உண்மைதான், அதனுடைய கத்தல் பறவையினுடையதுபோல் அல்லாமல், விலங்கினுடையதைப்போல இருந்தது.

துளசிபாபு வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் படுக்கையறைக் கதவருகில் நின்றுகொண்டு பேசினார். “விலங்கு அல்ல, அது ஒரு பறவை. அதன் சப்தம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் உங்களுடைய பூனையின் கத்தலைப்போல யாரையும் தள்ளிரவில் தூக்கத்திலிருந்து கெடுப்பதில்லை”

துளசிபாபுவின் குத்தலான பதில் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருந்தது. ஆனால் மிஸ்டர் சன்யால் முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தார். நல்ல வேளை அந்தக் கூண்டு அவருடைய வீட்டிலிருந்து பார்வையில் படுகிறமாதிரி இல்லை. பறவை மட்டும் அவர் கண்ணில் படுகிறமாதிரி இருந்திருந்தால், அவருடைய மனசில் இன்னும் பாதகமான விளைவுகளைத் தாண்டியிருக்கக் கூடும்.

பறவையின் கூர்மையான பார்வைகள் துளசிபாபுவை ஒன்றும் பாதிக்கவில்லை என்றாலும், பரத்யோத்பாபுவை நிச்சயமாக கவலைக்குள்ளாக்கியது. அலுவலக நேரம் தவிர, வாரத்தில் ஒருநாள் மட்டும் மன்சூர் ஹோட்டலில் கெபாப் மற்றும் பராத்தா உணவு வகைகளுக்காக மட்டும் இருவரும் சந்தித்துக் கொள்வதுண்டு,

ப்ரத்யோத்பாபுவின் குடும்பம் பெரியதாக இருந்ததால் அவருக்கு நிறைய பொறுப்புகளும் இருத்தன ஆனால் தண்டகாரண்ய காட்டிற்குச் சென்று வந்ததிலிருந்து, துளசிபாபுவின் செல்லப் பிராணி அவருடைய மனசில் அடிக்கடி தோன்றியது. இதன் விளைவாக அவ்வப்போது மாலை நேரங்களில் துளசிபாபுவின் வீட்டிற்குள் எட்டிப் பார்த்து வரத் தொடங்கியிருந்தார். அந்தப் பறவையின் அபரிமிதமான வளர்ச்சி வேகமும், தோற்றத்தில் மாற்றமும் பரத்யோதி பாபுவுக்கு நிரந்தர ஆச்சரியத்தை உண்டுபண்ணுவதாகவே இருந்தது. துளசிபாபு இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்பது அவருக்கு உறுத்தலாகவே இருந்தது. ஒரு பறவையின் கண்களில் தோன்றும் பார்வை அத்தனை குரூர மாயிருக்கக் கூடும் என்று. ப்ரத்யோத்பாபு கற்பனை செய்துகூட பார்த்திருக்கவில்லை. மஞ்சள் பழுப்பு நிற வளையத்தின் நடுவே கருவிழிகளில் தெரிந்த அதன் சலனமற்ற பார்வை பரத்யோத பாபுவை ரொம்பவும் ஹிம்சைப்படுத்தியது. அந்தப் பறவையின் அலகு இயற்கையாகவே அதன் உடலைப்போலவே வளர்ந்திருந்தது.

பளபளப்பான கரிய நிறத்தில் ஒரு கழுகின் அலகை ஒத்திருந்தது. அது உடலின் மீதப் பகுதியைவிடவும் மிகவும் பெரிதாக இருந்தது. அதன் வளர்ச்சியுறாத இறக்கைகளையும், நீண்ட உறுதியான கால்களையும் கூர்மையான விரல் நகங்களையும் பார்க்கையில், பறவையால் பறக்க முடியாது, என்பது தெளிவாகியது. ப்ரத்யோத் பாபு பலரிடம் அந்தப் பறவையைப்பற்றி விவரித்திருந்தபோதும், யாராலும் அதை இனங்கண்டு கொள்ள முடியவில்லை.

ஒரு ஞாயிறு அன்று ப்ரத்யோத்பாபு தன் உறவினரிடமிருந்து காமிரா ஒன்றைக் கடன் வாங்கிக்கொண்டு துளசிபாபுவிடம் வந்தார். அந்தக் கண்டினுள் போதிய வெளிச்சம் இல்லாததால், பளிச்சென்று ஒளிவீசும் சாதனமும் இணைத்திருந்தது. புகைப்படம் எடுப்பது ஒரு காலத்தில் அவருடைய பொழுது போக்காக இருந்ததால், போதுமான துணிவை வரவழைத்துக்கொண்டு, கூட்டிலிருந்த பறவையைக் குறிவைத்துப் படம் பிடித்தார் கேமராவிலிருந்து ஒளி வீசியதும், பறவையின் உரத்த எதிர்ப்புக கூச்சல் கேட்ட அதிர்ச்சியில் ப்ரத்யோதிபாபு ஒரு கெஜ தாரம் பின்னுக்குத் தள்ளி விழுந்தார். பறவையின் அலறலையும் ஒலிப்பதிவு செய்து, இந்தப் போட்டோவையும் வெளியிட்டால், இது என்ன பறவை இனம் என்பதை அறிந்து கொள்ள உதவியாயிருக்கும் என்று தோன்றியது. ஏதோ ஒன்று ப்ரத்யோதிபாபுவின் மனசில் உறுத்திக் கொண்டே இருந்தது. அதை துளசிபாபுவிடத்தில் இன்னும் சொல்லவே இல்லை.

எங்கேயோ ஒரு புத்தகத்திலோ, பத்திரிக்கையிலோ இதைப் போல ஒரு பறவையின் படம் ஒன்றை அவர் பார்த்திருந்தார். அது துளசிபாபுவின் செல்லப் பறவையை அப்படியே ஒத்திருந்தது. மீண்டும் அவர் அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தால் அந்த போட்டோவோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்.

இரு நண்பர்களும் டீ குடித்துக் கொண்டிருக்கையில் துளசிபாபு ஒரு புதிய செய்தியை வெளியிட்டார். பில் இங்கே வந்ததிலிருந்து காகங்களும், சிட்டுக் குருவிகளும் இந்த ஃப்ளாட்டுக்கு வருவதையே நிறுத்திவிட்டன. இது ஒரு வகையில் ஆசிர்வாதம்தான். ஏனெனில் சிட்டுக் குருவிகள் கட்டக்கூடாத இடங்களிலெல்லாம் கூடுகளைக் கட்டிக் கொள்ளும், காகங்கள் அடுக்களையிலிருந்து உணவுப் பொருட்களைத் திருடிக் கொண்டோடிவிடும். இதெல்லாம் இப்போது நின்றுவிட்டது.

“அப்படியா?” ப்ரத்யோத்பாபு வழக்கமான ஆச்சர்யத்துடன் கேட்டார்.

“நல்லது. இந்நேரமெல்லாம் நீங்க இங்கேதானே இருக்கிறீர்கள். வேறு ஏதாவது பறவையைப் பார்த்தீர்களா இங்கே?

ப்ரத்யோதிபாபு தான் பார்த்திருக்கவில்லை என்பதை உணர்ந்தார். “ஆனால் உங்கள் வேலைக்காரர்கள் இருவரும் எப்படி? பில்விடம் அவர்கள் பழகிவிட்டார்களா?”

“சமையல்காரன் கூண்டுகிட்டேயே போக மாட்டான். ஆனால் நடோபர் இடுக்கியால் மாமிசம் ஊட்டுவான். அவனுக்கு இதில் எதுவும் ஆட்சேபனை இருந்தாலும் வெளியிட்டதில்லை. ஆனால், பறவை விரும்பத்தகாத வண்ணம் நடந்தால், என் பார்வை ஒன்றில் அமைதியாகிவிடும். அதுசரி, நீ போட்டோ எடுத்ததன் நோக்கம் என்ன ?”

ப்ரத்யோதிபாபு உண்மையான காரணத்தைக் குறிப்பிடவில்லை அவர் சொன்னார். “பறவை இங்கு இல்லாத போது அதன் நினைவாக இருக்குமே என்றுதான்.”

ப்ரத்யோத்பாபு மறுநாளே போட்டோவை டெவலப் செய்து பிரிண்ட் எடுத்தார். அதை இரண்டு பெரிய பிரதிகளாக உருவாக்கினார். ஒன்றைத் துளசிபாபுவிடம் கொடுத்தார். மற்றொன்றைப் பறவையியல் நிபுணரான ரணஜாய் ஷோம் வசம் கொடுத்தார். அதற்கு முன்தினம் தான் தேஷ்’ என்ற வார இதழில் சிக்கிம் நாட்டுப் பறவைகளைப் பற்றி ‘மிஸ்டர் ஷோம் மின் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

ஆனால் மிஸ்டர் ஷோம் இந்த போட்டோவைப் பார்த்து பறவையின் இனம் கண்டுகொள்ள முடியவில்லை. “இந்தப் பறவையை எங்கே பார்க்க முடியும்?” என்று கேட்டார். ப்ரத்யோத்பாபு ஒரு முழுப் பொய்யைச் சொல்லி மழுப்பிவிட்டார். “என்னுடைய நண்பர் ஒருவர் இந்த போட்டோவை ஒசாகாவில் இருந்து அனுப்பி, இது என்ன பறவை? என்று என்னைக் கேட்டு எழுதியிருக்கிறார்.”

துளசிபாபு தன்னுடைய டயரியில் அந்தத் தேதியைக் குறித்துக் கொண்டார். பிப்ரவரி, பதினான்கு. 1980 ஆம் ஆண்டு, பிக்பில் சென்ற மாதம் தான் மூன்றரை அடி உயரக் கண்டிலிருந்து நாலரை அடிக் கூண்டிற்கு மாற்றப்பட்டிருந்தது. நேற்று இரவு ஏதோ ஒரு தவறான செயல் செய்து விட்டுக் குற்ற உணர்வு கொண்டிருந்தது.

துளசிபாபு அந்த நள்ளிரவில் சந்தேகத்துக்குரியதொரு சப்தம்! கேட்டு விழித்துக் கொண்டார். ஏதோவொரு உலோகத்தின் மீது பலமாக மோதும் சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.

ஆனால் விரைவிலேயே சப்தம் நின்றுவிட்டது. பின் முழு அமைதி நிலவியது.

ஆனால் ஏதோ நடந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் துளசி பாபுவின் மனசில் இருந்து கொண்டே இருந்தது. கொசுவலையை நீக்கிக் கொண்டு வெளியே வந்தார் சன்னல் கம்பிகள் வழியாக தரையில் நிலவொளி வீசியது. துளசியாபு எழுந்து ஸ்லிப்பரை அணிந்து கொண்டு, மேசையிலிருந்து மின்டார்ச் விளக்கை எடுத்துக் கொண்டு வெராண்டாவுக்கு வந்தார்.

டார்ச் விசிய வெளிச்சத்தில் கூண்டிலிருந்து அத்தனை பெரிய பறவை தப்பி வெளியே வரும் அளவு பெரிய ஓட்டையாக கம்பிகள் தகர்க்கப்பட்டிருந்ததைக் கண்டார். கூண்டு இப்போது காலியாக இருந்தது.

துளசிபாபுவின் டார்ச் வெராண்டாவில் இந்தப்புறம் ஒன்றுமில்லை என்பதைக் காட்டியது. எதிர்க் கோடியில் வெராண்டாவின் வலது பக்கத்தில் மிஸ்டர் சன்யாலின் ஃப்ளாட்.

துளசிபாபு சட்டென்று விரைந்து, அந்த மூலையில் டார்ச் அடித்துப் பார்த்தார்.

அவர் பயந்தது மாதிரியே நடந்திருந்தது.
மிஸ்டர் சன்யாவின் புனை, ‘பில்’லின் அலகில் அகப்பட்டுக் கொண்டிருந்தது. பளபளக்கும் ரத்தத் துளிகள் தரையில் சிந்திக் கிடந்தன. அனால் இன்னும் உயிரோடு இருந்த பூனை கால்களை உதைத்துக் கொண்டிருந்தது.

துளசிபாபு’ பில்’ என்று கத்தினார் உடனே அந்தப் பறவை தன்னுடைய அலகிலிருந்து பூனையைக் கீழே போட்டது. பின்னர் தன் நீண்ட கால்களால் அடியெடுத்து வைத்து மூலையில் திரும்பி, தன்னுடைய கூண்டிற்குள் சத்தமின்றிச் சென்று நுழைந்து கொண்டது.

இப்படிப்பட்ட கட்டத்திலும் கூட துளசிபாபுவால் ஒரு நிம்மதிய பெருமூச்சுவிடாமல் இருக்க முடியவில்லை.

மிஸ்டர் சன்பாலின் அறைக் கதவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அவர் மூன்று நாட்களுக்கு முன்புதான் ஒரு விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்தார். அவருக்கு கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் பள்ளிக்கூடப் புத்தகங்களை அச்சிடுவதில் தன் அச்சகத்தில் சரியான வேலை.

இப்பொழுது அவர் செய்ய வேண்டிய சரியான காரியா என்னவெனில் சன்னல் வழியாக அந்தப் பூளையைத் தெருவில் எறிந்துவிட வேண்டியதுதான் கல்கத்தாவின் தெருக்களில் இப்படித் தெருநாய்களும், பூனைகளும் கிடப்பது தினசரிக் காட்சியாகும். அவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கட்டும்.

மீதமுள்ள இரவில் அவரால் தூங்க முடியவில்லை . மறுநாள் துளசிபாபு ஆயிலைக்கு ஒரு அரைமணி நேரம் தாமதமாகப் போக வேண்டியதாயிற்று. ரெயில்வே புக்கிங் ஆபீஸுக்குச் சென்றார். புக்கிங் குமாஸ்தாக்களில் ஒருவரைத் தெரிந்திருந்ததால், அவருடைய வேலை கொஞ்சம் சுலபமாக முடிந்தது. ப்ரத்யோத்பாபு, பறவையைப் பற்றிக் கேட்டதற்கு, துளசிபாபு, “பறவை நன்றாக இருக்கிறது என்று சொன்னார். பிறகு சற்று யோசித்துவிட்டு, “நான் அந்தப் போட்டோவை ஃப்ரேம் பண்ண வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், ” என்றார்.

பெப்ரவரி மாதம் 24ஆம் தேதி, துளசிபாபு இரண்டாவது முறையாக ஐசுதல்பார் வந்தார். ‘பில் பறவையைக் கொண்ட ஒரு பேக்கிங் பெட்டியும், அதே லக்கேஜ் வேனில் வந்தது. அந்தப் பெட்டியில் காற்றோட்டத்திற்குத் துளைகள் போடப்பட்டிருந்தன.

ஜகதல்பூரிலிருந்து துளசிபாபு இரண்டு கூலியாட்களுடன், அந்தப் பெட்டியோடு ஒரு சரக்கு வாகனத்தில் அந்தப் பறவையை எங்கே பார்த்தாரோ சரியாக அந்த இடத்திற்குப் புறப்பட்டார்.

பிரதான சாலையில் ஒரு குறிப்பிட்ட மைல் எல்லையில் வாகனத்தை நிறுத்தி, கூலியாட்களுடன் அந்தப் பெட்டியை எடுத்துக் கொண்டு மொட்டையாக நின்ற வேப்பமரத்தை நோக்கிப் புறப்பட்டார். அந்தக் குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைய ஒரு! அரைமணி நேரம் ஆனது. கூலியாட்கள் அந்தப் பெட்டியைக் கிழே வைத்தனர் ஏற்கனவே அவர்களுக்குத் தாராளமாக டிப்ஸ் கொடுத்து அவர்களே பெட்டியைத் திறக்கவும் சொல்லியிருந்தார். துளசிபாபு பறவையின் மகிழ் நிலை கண்டு நிம்மதி அடைந்தார். கலிகள் இருவரும் கூண்டின் தாழ்ப்பாள் ஆணிகளைக் கழற்றித் இறந்தவுடன் பறவையைக் கண்டதும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். ஆனால் துளசிபாபுவை ஒன்றும் பாதிக்கவில்லை. அவருடைய நோக்கம் நிறைவேறிவிட்டது. பில் அவரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் தலை ஏற்கனவே நாலரை அடிக் கூரையைத் தொட்டிருந்தது.

“குட்பை , பில்.”

எவ்வளவு விரைவில் பிரிதல் நிகழ்கிறதோ அவ்வளவுக்கு நல்லது. துளசிபாபு டெம்போ வேனை நோக்கி நடையைக் கட்டினார்.

துளசிபாபு தான் போய் வந்ததைப் பற்றி ஆபீஸில் யாரிடமும் சொல்லவில்லை. ப்ரத்யோத்பாபுவிடம் கூட அவர் திங்கள் கிழமையன்று ஆபீஸுக்கு வந்ததும், ‘எங்கே போய் இருந்திர்கள்?’ என்று கேட்டார். துளசிபாபு சுருக்கமாக நைஹாத்தியில் உள்ள உறவினள் ஒருத்தியின் திருமணத்திற்குச் சென்று வந்ததாகக் கூறினார்.

இரண்டு வாரங்கள் கழித்து, ஒருநாள் துளசிபாபுவின் வீட்டிற்குச் சென்ற ப்ரத்யோத்பாபு கூண்டு காலியாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். அவர் பறவையைப் பற்றிக் கேட்டார். துளசிபாபு சொன்னார். “அது போய்விட்டது.” இயற்கையாகவே ப்ரத்யோத்பாபு நினைத்தார், பறவை இறந்துவிட்டது என்று. இனம் புரியாத சோகமும், வேதனையும் அவரை ஆட்கொண்டது.

துளசிபாபுவிற்கு அவருடைய செல்லப் பறவையின் போட்டோ ஒன்று அதன் நினைவாக இருக்கட்டும் என்று அவர் சொன்ன போது ப்ரத்யோத்பாபு பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை. அந்தப் பறவை இவ்வளவு விரைவில் இறந்துவிடும் என்று தோன்றவில்லை..! அவர் எடுத்திருந்த போட்டோ சட்டம் போடப்பட்டு துளசி பாபுவின் படுக்கையறைச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. துளசிபாபு சோர்ந்திருந்தார். மொத்தத்தில் சூழ்நிலையே ஒரே சோகமாக இருந்தது. இந்தச் சோகச் சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டு, ப்ரத்யோத்பாபு ஒரு யோசனை சொன்னார். “நாம் மன்சூருக்குச் சென்று ரொம்ப நாட்களாயிற்று. இன்று இரவு சாப்பாட்டுக்கு அங்கே போய்க் கெபாபுவும் பரோட்டாவும் சாப்பிடலாம்,” என்று அழைத்தார்.

“வேண்டாம். நான் அவற்றில் உள்ள சுவையை இழந்து விட்டேன்,” என்று தோன்றுகிறது.

ப்ரத்யோத்பாபுவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. “கெபாப்’ல டேஸ்ட் போயிடுச்சா? என்ன சமாச்சாரம்? உங்களுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? அந்த முனிவர் கொடுத்த மூலிகை மருந்து சாப்பீட்டீர்களா?”

சக்ராபரணச் சாற்றைக் குடிக்க ஆரம்பித்ததிலிருந்து அவருடைய இரத்த அழுத்தம் குறைந்து சகஜ நிலைக்கு வந்து விட்டதாக துளசிபாபு சொன்னார். அவர் சொல்லாமல் விட்ட விஷயம்: பில் வந்ததிலிருந்து, அவருடன் இருந்த வரைக்கும், அவருக்கு மூலிகை மருந்துகளைப் பற்றிய விஷயங்களே மறந்து போய்விட்டது என்று. கடந்த ஒரு வார காலமாகத்தான் அவற்றின் பக்கம் கவனம் திரும்பியிருக்கிறது.

ப்ரத்யோதிபாபு குறுக்கிட்டார். “மூலிகைன்னு சொன்ன உடனே தான் எனக்கு ஞாபகம் வருது. இன்னிக்குப் பேப்பர் படிச்சிங்களா? தண்டகாரண்ய காட்டைப் பற்றிய செய்தி வந்திருக்கே”

”பேப்பர்ல என்ன சொல்லியிருக்கு?”
துளசி பாபு தினசரி செய்தித்தாள் வாங்குபவர் தான் ஆனால் எப்பொழுதாவதுதான் முதல் பக்கத்தைத் தாண்டிப் படிப்பவர் பெப்பர் கையருகில் கிடந்தது. ப்ரத்யோதிபாபு அந்தச் செய்தியைச் சுட்டிக் காட்டினார். தலைப்புச் செய்தி இப்படியிருந்தது, “தண்டகாரண்ய காட்டின் பயங்கரம்”

செய்தி, தண்டகாரண்ய காட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில், வீட்டு விலங்குகளுக்கு, பட்டிகளில் உள்ள கால்நடைகளுக்கு எதிர்பாராத கணங்களில் திடிரென ஆபத்து நிகழ்கிறது ஏதோ இனம் தெரியாத விலங்கு ஒன்று அவைகளை விழுங்கத் தொடங்கி யிருக்கிறது. அந்த எல்லையில் புலிகள் ஏதும் இருப்பதாகத் தகவல் இல்லை. புலியினம் இல்லாத வேறு ஏதோ ஒரு பிராணி ஒன்றின் நடமாட்டம் தான் இத்தகைய பேரழிவுக்குக் காரணமாக இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. புலிகள் சாதாரணமாக இரையைத் தங்களுடைய குகைகளுக்குத் தான் இழுத்துச் செல்லும் ஆனால் இது அப்படிச் செய்வதில்லை.

கடந்த ஒருவார காலமாக மத்தியப் பிரதேச அரசாங்கம், வேட்டை நாய்களைக் கொண்டு தீவிர சோதனை செய்தும், அத்தகைய தொரு கொடிய விலங்கினத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தென் விளைவாக கிராம மக்கள் மத்தியில் பெரிய கிலி பரவியிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட கிராமவாசி அளித்த தகவல், ஒரு இரண்டுகால் பிராணி ஒன்று. அவரது மாட்டுக் கொட்டகையிலிருந்து வெளியேறியதாகவும், அவர் அங்கு சென்று பார்த்தபொழுது அவரது எருது இறந்து கிடந்ததாகவும், அதனுடைய அடி வயிற்றில் கணிசமான பகுதி உண்ணப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்,

துளசிபாபு அந்தச் செய்தியைப் படித்துவிட்டு பேப்பரை மடித்துத் திரும்பவும் மேசை மீது போட்டார்.

ப்ரத்யோத்பாபு கேட்டார், “இந்தக் கதையில் விசேஷமாக எதுவும் இல்லை என்று சொல்லமாட்டீர்கள்தானே?”

துளசிபாபு தலையை ஆட்டினார். அதாவது விசேஷம் எதுவும் இல்லை .

மூன்று நாட்களுக்கப்புறம் ப்ரதியோத்பாபுவுக்கு வினோதமான சம்பவம் ஒன்று நடந்தது.

காலையுணவின்போது அவருடைய மாைவி ஒரு டின்னைத் திறந்து அதிலிருந்து டைஜெஸ்டிவ் பிஸ்கட்டுகளுடன், டீயும் கொண்டு வைத்தார்.

அடுத்தகணம், ப்ரத்யோத்பாபு சாப்பாட்டு மேசையை விட்டு எழுந்து வீட்டைவிட்டு வெளியே விரைந்தார்.

அந்நேரம், ஏக்டாலியா ரோட்டில் உள்ள அவருடைய நண்பர் அனிமேஷ்பாபுவின் ஃப்ளாட்டை அடைந்தபோது, உணர்ச்சி வசத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார். அவருடைய நண்பரின் கையிலிருந்து நியூஸ் பேப்பரைப் பிடுங்கியெறிந்துவிட்டு மூச்சிறைக்கக் கேட்டார். உங்களுடைய ரீடர்ஸ் டைஜஸ்ட் பிரதிகளையெல்லாம் எங்கே வைத்திருக்கிறீர்கள்? சீக்கிரம், ரொம்ப முக்கியமான விஷயம்”

அனிமேஷ்பாபு, இலட்சக்கணக்கான பேர்களோடு ரீடர்ஸ் டைஜஸ்ட்டைப் படித்து, சுவைத்துப் பகிர்ந்து கொண்டிருந் திருக்கிறார். அவருடைய நண்பரின் இந்த நடவடிக்கையைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். எனினும் அதை வெளியே காட்ட இது சந்தர்ப்பம்! இல்லை. புத்தக அலமாரிக்குச் சென்று அடித்தட்டிலிருந்து ஒரு -ஜன் பிரதிகளை இழுத்து வெளியே போட்டார்.

“உங்களுக்கு எந்தமாதப் பிரதி வேண்டும்?”

ப்ரத்யோத்பாபு எல்லாப் பிரதிகளையும் அப்படியே எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு பிரதியிலும் பக்கம் பக்கமாய்ப் புரட்டினார். இறுதியில் எதைத் தேடினாரோ அதைக் கண்டறிந்தார்.

*ஆமாம் இதுதான் அந்தப் பறவை, சந்தேகமே இல்லை .”

அவருடைய விரல்கள் இயற்கை வரலாற்று அருங்காட்சி யகமான சிக்காகோ அருங்காட்சியகத்திலிருந்த ஒரு பறவையின் மாதிரிப் படத்தின்மீது பதிந்திருந்தன. அதைப் பணியாள் ஒருவன் தன்னுடைய பரஷைக் கொண்டு துடைத்துக் கொண்டிருப்பதான படம்.

அண்டல்கலோர்னிஸ்’ ப்ரத்யோத்பாபு அதன் பெயரைப் படித்துச் சொன்னார். அதன் பொருள் ‘பயங்கரப் பறவை” என்பதாகும். வரலாற்று காலத்துக்குமுன் வாழ்ந்த ஒரு பேரினம், மாமிச பட்சினி, குதிரையைவிட வேகமானது. அந்த மிருக குணம், கொண்டது.

மறுநாள் காலை துளசிபாபு ஆபீஸ்க்குள் வந்ததும், இவரிடம் வந்து, “மீண்டும் நான் தண்டகாரண்ய காட்டிற்குச் செல்ல வேண்டும் நீயும் என்னுடன் வர வேண்டும். உன்னுடைய துப்பாக்கியையும் உடன் கொண்டு வர வேண்டும்.” என்று சொன்னதும் ப்ரத்யோத் பாபுவின் மனதிலிருந்த சந்தேகம் உறுதிப்பட்டது. ரயிலில் தாங்கும் வசதி ஏற்பாடு செய்வதற்குக் குறைந்த நேரமே இருந்தது. எனினும் இப்படி ஒரு அவசரச் சூழ்நிலையில் அது இல்லாவிட்டாலும் பரவாயில்லை .

ப்ரத்யோத்பாபு உடனடியாக ஒத்துக் கொண்டார். தேடலின் பரபரப்பான உற்சாகத்தில், அந்த இரு நண்பர்களும் பிரயாண அசௌகர்யங்களைப் பொருட்படுத்தவில்லை. ப்ரத்யோத்பாபு ரீடர்ஸ் டைஜஸ்டில் பார்த்த அந்தப் பறவையைப் பற்றி இப்பொழுது ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் அதைச் சொல்லலாம். அதைச் சொல்வதற்கான அவகாசம் நிறைய இருந்தது. இதற்கிடையில் துளசிபாபு நடந்த எல்லாவற்றையும் ப்ரத்யோத்பாபுவிடம் சொன்னார்.

மேலும் சொன்னார், துப்பாக்கி தேவைப்படும் என்று தான் நினைக்கவில்லை என்றும் எதற்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கட்டுமே என்றுதான் கொண்டு வரச் சொன்னதாகச் சொன்னார். இன்னொரு புறம் ப்ரத்யோத்பாபுவால் துளசிபாபுவின் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ள இயலவில்லை. அவர் துப்பாக்கி தேவைப்படும் என்றும் எந்தவிதமான அசம்பாவிதத்தையும் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் நம்பினார். இன்றைய செய்தித்தாளில்கூட மத்தியப் பிரதேச அரசு ஒரு விறகுவெட்டியின் மகன் பலியானதில் இருந்து, அது மனிதனை உண்பது, அந்தப் பிராணியை உயிருடனோ, கொன்றோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு அறிவித்திருந்தது.

ஜகதல்பூரின் வனப்பாதுகாப்பு அதிகாரி, மிஸ்டர் திருமலை. அந்தப் பிராணியை எங்கே கண்டாலும் கட்டுவிட அனுமதி கொடுத்திருந்தார். ஆனால், துளசிபாபுவும், ப்ரத்யோத்பாபுவும் அவர்கள் சொந்தப் பொறுப்பில்தான் செல்ல வேண்டும் என்றும், வேறு யாரையும் காட்டினுள் செல்ல இனிமேல் தூண்ட முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

ப்ரத்யோத்பாபு அவரை, “இதற்கு முன்னர் சென்றிருந்த வேட்டைக்காரர்களிடமிருந்து செய்திகள் ஏதேனும் கிடைத்திருக்கிறதா?” என்று கேட்டார். திருமலையின் முகம் கருத்தது. “இதுவரை நான்கு பேர் அந்த விலங்கைக் கொல்ல முயன்றார்கள், மூன்று பேர் வெற்றிபெறவில்லை. நான்காவது நபர் திரும்பவில்லை .”

“திரும்பி வரவேயில்லையா?”

“இல்லை. அப்பொழுதிலிருந்து வேட்டைக்காரர்கள் போவதற்கு மறுக்கிறார்கள். எனவே, அங்குப் போவதற்குமுன் இரண்டு முறை சிந்திப்பது நல்லது.”
ப்ரத்யோத்பாபுவுக்குக் கொஞ்சம் நடுக்கம் கொண்டது. ஆனாலும் நண்பரின் அசைக்க முடியாத மன உறுதியால் மீண்டும் தைரியம் பெற்றார். “நாம் போகலாம் என்று நினைக்கிறேன்”, என்றார்.

இந்தமுறை அவர்கள் கொஞ்ச தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. ஏனெனில் டாக்ஸி டிரைவர் புழுதி நிறைந்த ரோடாக இருந்ததால் வர மறுத்துவிட்டான். துளசிபாபு, தான் மேற்கொண்ட வேலை இரண்டு மணி நேரத்தில் முடிந்துவிடும் என்றும், அதுவரைக்கும் டாக்ஸி அங்கேயே காத்திருக்கச் சொல்லி, கூடுதலாகப் பதினைந்து ரூபாய் தருவதாகவும் கேட்டுக் கொண்டார். இரண்டு நண்பர்களும் தங்கள் தேடலில் புறப்பட்டனர்.

இப்பொழுது வசந்த காலமாக இருந்ததால், காடு முன் எப்போதையும் விட வித்தியாசமாக இருந்தது. இயற்கை தன் வழியில் சென்றாலும் அங்கு இயற்கைக்கு மாறான ஓர் அமைதி நிலவியது. பறவைகளின் கூச்சல்கள் எதுவும், குக்கூ பறவையின் கத்தல் கூடக் கேட்கவில்லை .

வழக்கம்போல துளசிபாபுவின் தோளில் ஜோல்னாப் பையை மாட்டியிருந்தார். அதனுள் ஏதோ பொட்டலம் இருப்பதை ப்ரத்யோத்பாபு அறிந்திருந்தாலும், அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியாது. ப்ரத்யோத்பாபு அவருடைய துப்பாக்கியையும் குண்டுகளையும் கொண்டு வந்திருந்தார்.

வளர்ச்சி கொஞ்சமாக இருந்ததால், காட்டில் வெகுதூரம் வரை பார்க்க முடிந்தது அவர்களால். எனவேதான் இரண்டு நண்பர்களும் சற்று தூரத்தில் ஒரு பலாமரத்தின் பின்னால் ஒரு மனித உடல் சிதறிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது. துளசிபாபு அதைக் கவனிக்க வில்லை, ப்ரத்யோத்பாபு சுட்டிக் காட்டியதும்தான் நின்றார். பரத்யோத்பாபு துப்பாக்கியை இறுகப் பற்றிக் கொண்டு சடலத்தை நோக்கி நடந்தார். துளசிபாபு அந்த விஷயத்தில் கவனங்காட்ட வில்லை .

ப்ரத்யோத்பாபு பாதி தூரம் சென்று திரும்பிப் பார்த்தார். “உன்னைப் பார்த்தால் பேயைக் கண்டவன் மாதிரி இருக்கிறதே” மீண்டும் தன்னிடம் வந்து சேர்க்க கண்பண்டம் சொன்னார். “இதுதானே அந்த காணாமல் போன வேட்டைக்காரனின் உடல்”

அதுவாகத்தான் இருக்க வேண்டும்” ப்ரத்யோகிபாப காகாக்க குரலில் சொன்னார் ” அனால் வெறும் உடலை மட்டும் வைத்து சொல்ல முடியாது. தலையைக் காணவில்லையே.”

மீதமுள்ள தூரம். அவர்கள் ஒன்றும் பேசவில்லை .

வேப்பமரத்தை அடைய ஒரு மணிநேரம் ஆயிற்று. அதாவது அவர்கள் மூன்று மைல்களாவது நடந்திருக்க வேண்டும். மூலிகைப் புதர் துளிர்விட்டு, புதிய இலைகள் தோன்றி, பழைய வடிவத்தை அடைந்திருப்பதை ப்ரத்யோத்பாபு உணர்ந்தார்.

“பில்லீ!. பில்லீ!”

துளசிபாபுவிவின இந்த அழைப்பு சற்று நகைப்புக்கு இடமளிக்கும் வகையில் இருந்தாலும், ப்ரத்யோத்பாபுவால் புன்னகைக்காதிருக்க முடியவில்லை. ஆனால் , அடுத்த கணமே அவர் உணர்ந்து கொண்டார், துளசிபாபுவின் அழைப்பு இயற்கையானது என்று. அந்த ராட்சதப் பறவையை அடக்குவதில், வெற்றி கண்டிருக்கிறார் என்பதை, ப்ரத்யோத்பாபு தன் சொந்தக் கண்களாலேயே கண்டுணர்ந்தார்.

துளசிபாபுவின் அழைப்பு காடெங்கும் எதிரொலித்தது.

“பில்! பில்! பில்லீ!”

இப்பொழுது ப்ரத்யோத்பாபு காட்டின் உள்பகுதியில் ஏதோ ஒன்று அசைவதை உணர்ந்தார். அது அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த வேகம், நொடிக்கு நொடி அதன் வடிவம், அதிகரிப்பதை உணர்ந்தார்.

அதுதான் அந்த ராட்சதப் பறவை.

ப்ரத்யோத்பாபுவின் கையிலிருந்த துப்பாக்கி, திடீரென்று வெகுவாகக் கனப்பது போல் தோன்றியது. இந்நிலையில் அதைத் தூக்கி உபயோகிக்க முடியுமா என்று ஆச்சர்யப்பட்டார்.

அந்தப் பறவை வேகம் குறைந்து, அவர்களை நோக்கி நடந்து, தாவரங்களுக்கு இடையே ரகஸிய நண்பனைப்போல் வந்து நின்றது.

‘அண்டல்காலோர்னிஸ்’, ப்ரத்யோத்பாபுவுக்கு எந்நாளும் மறக்க முடியாத பெயர். மனித உயரம் கொண்ட ஒரு பறவை. நெருப்புக் கோழிகள் கூட உயரமானவைதான். ஆனால் அவைகளின் நீண்ட கழுத்தால் மட்டுமே. இந்தப் பறவையின் முதுகு மட்டுமே ஒரு சாதாரண மனிதனின் உயரம் இருந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அந்தப் பறவை கடந்த ஒரு மாதத்தில் கூடுதலாக ஒன்றரை அடி உயரம் வளர்ந்திருந்தது. சிறகுகளின் நிறம்கூட மாறி – விட்டிருக்கின்றன அதன் பழுப்பு நிறத்தில்கூட கருப்புப் புள்ளிகள் காணப்பட்டன. அந்தப் பறவையின் கருவிழியில் தோன்றிய வக்கிரமான குரூரப் பார்வை அதன் கூண்டினுள் அடைபட்டிருந்த பொழுது எதிர்கொண்ட போதுகூட ப்ரத்யோத்பாபுவுக்குத் தாங்க முடியாத பயத்தைக் கொடுத்தது. அந்தப் பார்வை இப்போது முன்னாள் எசமானரை நோக்கியவாறு இருந்தது.

அந்தப் பறவை மேலும் என்ன செய்யும் என்று அறிய முடியவில்லை. அதனுடைய அசைவற்ற தோற்றம் தாக்குதலுக்குத் தயாராகிறதோ என்று தோன்ற, ப்ரத்யோத்பாபு நடுங்கும் கைகளோடு துப்பாக்கியை உயர்த்தி எடுக்க முயன்றார். ஆனால் அவர் அதைச் செய்ய முயன்ற கணத்திலேயே அந்தப் பறவை அவரைப் பார்த்து சிறகுகளை சிலுப்பிக் கொண்டு, இன்னும் அதிபயங்கரமாகத் தோற்றம் கொண்டது.

“துப்பாக்கியைக் கீழே இறக்கு” துளசிபாபு கண்டிப்பான குரலில் கிசுகிசுத்தார்

ப்ரத்யோத்பாபு பணிந்தார். பறவையும் தன் சிறகுகளை இறக்கிக் கொண்டு, தன் எசமானர் பக்கம் வெறித்த பார்வையைத் திருப்பிக் கொண்டது.

துளசிபாபு ஏற்கனவே பையிலிருந்த பொட்டலத்தை வெளியே எடுத்திருந்தார். இப்பொழுது அதைப் பிரித்து, அதனுள் இருந்ததைப் பறவையின் முன் கொட்டினார். அது ஒரு பெரிய மாமிசத் துண்டு,

“நான் வெட்கப் படுவதற்கு நீதான் காரணமாக இருந்திருக்கிறாய். இனிமேலாவது ஒழுங்காய் நடந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்.”

ப்ரத்யோத்பாபு, மாமிசத் துண்டை அந்தப் பறவை தன்னுடைய பெரிய அலகினால் கொத்தி எடுப்பதைப் பார்த்தார். பின்னர் அதைச் சுவைக்க ஆரம்பித்தது.

“இந்தத் தடவைதான் உனக்கு உண்மையாகவே குட்பை”

துளசிபாபு திரும்பினார். ப்ரத்யோத்பாபு பறவையின் பார்வையில் தன் முதுகைத் திருப்பப் பயந்து கொண்டு, கண்கள் பறவை மீது பதிந்திருக்க சற்று நேரம் பின்னாலேயே நகர்ந்தார். பறவை தன்னைப் பின்தொடர்ந்து வரவோ, தாக்கவோ முற்படவில்லை என்று தெரிந்ததும்தான், அவர் நண்பருடன் சேர்ந்து கொண்டார்.

ஒரு வாரம் கழித்து செய்தித் தாள்களில், தண்டகாரண்ய காட்டில் அந்தப் பயங்கரம் முடிந்துவிட்டதாக செய்திகள் வந்தன. ப்ரத்யோத்பாபு அண்டல்கலோர்னிஸ் பற்றியும், அது மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பறவையினம் என்பது பற்றியும் துளசிபாபுவிடம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் செய்தித் தாள்களில் பார்த்த ப்ரத்யோத்பாபு, துளசிபாபுவிடம் வந்து. “இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார்.

துளசிபாபு சொன்னார், “இதில் மர்மம் ஒன்றும் இல்லை. நான் அந்த மாமிசத்தோடு சில மருந்துகளையும் கலந்து கொடுத்தேன்.

“மருந்தா ?”

“சக்ராபரணச்சாறு. அது ஒருவரைச் சைவ உணவு உண்பவராக ஆக்கிவிடும், என்னை மாற்றியது மாதிரி”

“இன்னும் பசியோடு இருக்கிறாயா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் உனக்குக் கொடுக்கிறேன் என்பதால், நீ சாப்பிடுவாய் என்று நம்புகிறேன்,” என்றார் துளசிபாபு.


சத்யஜித் ரே

தமிழில் : எஸ்.அற்புதராஜ்.

எழுத்தாளர் எஸ்.அற்புதராஜ் மொழிபெயர்த்த “சத்யஜித் ரே கதைகள் “  எனும் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட இச்சிறுகதை   எழுத்தாளர் எஸ். அற்புதராஜின் அனுமதியோடு கலகம்  இணைய இதழின் கதைகள் சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மூல ஆசிரியர் குறிப்பு :
சத்யஜித் ரே Satyajit Ray, மே 2, 1921 – ஏப்ரல் 23, 1992) இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளத்தில் பிறந்த, ஓர் உலகப் புகழ்பெற்ற திரைப்பட மேதை. இவர் ஒரு திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மையைக் கொண்டவர். திரைப்படம், ஆவணப்படம், குறும்படம் உட்பட மொத்தம் 36 படங்களை இயக்கியுள்ளார். இவர் புனைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், புத்தக பதிப்பாளர், சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர், வரைபட வடிவமைப்பாளர், திரைப்பட விமர்சகர் ஆவார். வணிகம் கலைஞராக கலைத் துறையில் அறிமுகமானாலும், இலண்டனில் பைசைக்கிள் தீவ்சு (1948) என்ற இத்தாலிய படத்தை பார்க்கும் போது பிரெஞ்சு திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான சீன் ரேனோயர் மூலம் வணிக நிறுவனம் மூலம் அல்லாத தனி நபர் திரைப்படத் தயாரிப்புக்கு ஆர்வமானார். இவருடைய பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார் ஆகிய மூன்று திரைப்படங்களும் உலகப் புகழ் பெற்றவை.

ஆக்சுபோர்டு பலகலைக்கழகம் இவருக்கு கௌரவ பட்டம் வழங்கி சிறப்பித்தது. தன்னுடைய திரைப்படப் பணிக்காக 1992இல் சிறப்பு ஆஸ்கார் விருது பெற்றார்.இவ்விருதை பெற்ற முதல் இந்தியரும் இவரே. 1992இல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றார்.

எழுதியவர்

எஸ். அற்புதராஜ்
எஸ். அற்புதராஜ்
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி ஊரைச் சார்ந்தவர். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் படித்து, அதே பள்ளியில் ஆசிரியராகவும் முப்பத்து மூன்று பணிசெய்து ஓய்வு பெற்றவர். திருச்சி வாசகர் அரங்கில் தீவிரமாக இயங்கியவர். திருச்சி வாசகர் அரங்கு வெளியிட்ட 'இன்று' பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் முக்கிய பங்கு வகித்தவர்.
பின்னர் திரு விஜயகுமார் நடத்திய 'மானுடம் பூத்தது'இதழில் சிறு கதைகள் எழுதியிருக்கிறார். ' தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி'பத்திரிகையில் சத்யஜித் ரே கதைகள் வெளிவந்த காலத்தில் அந்தக் கதைகளை தமிழாக்கி மாணவர்களுக்கு படித்துக் காட்டியிருக்கிறார் .பின்னர் சத்யஜித் ரே தொகுப்பு வெளிவந்தபின் அவற்றை முழுவதுமாக தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இதைத் தவிரவும், இருபது கதைகளும் ஒரு சில கவிதைகளும் எழுதி வெளிவந்துள்ளன.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Vinoth
Vinoth
1 year ago

Thank you for republished this wonderful story. Great translation.. Arputharaj !

மாறன்
மாறன்
11 months ago

அருமையான மொழிபெயர்ப்பு

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x