வரிசையில் காத்திருந்தோம். அது ஒழுங்கான வரிசை என்று சொல்ல முடியாது. ஆண்கள் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள், வயதானவர்கள் என்று பெருங்கூட்டம் சேர்ந்த பின் மதியம். அந்தப் பிரியாணிக்கடை அவ்வளவு பிரபலம். பில்லுக்கு பணம் செலுத்தி விட்டுக் காத்திருந்தால் உணவு தயாரானதும் பில்லில் உள்ள நம்பரைக் கூப்பிடுவார்கள். அதுதான் டோக்கனும் கூட. மூன்று மணிக்குப் பின் மதிய உணவு சாப்பிட அத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை வேறு. நல்ல வெயில். கடை வாசலில் கல் இழைக் கூரை போட்டிருந்தார்கள். காற்றே இல்லை. தெருவெங்கும் பிரியாணி மணம் வீசிக் கொண்டிருந்தது.
அங்குதான் அவளை அவன் பார்த்தான். பார்க்கத் தூண்டியது அவளது கால்கள். மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது முதலில் பார்ப்பது எதை? கண்களை என்று அவன் நினைத்திருந்தான். உண்மையில் கால்கள் என்று ஒரு அமெரிக்கச் செருப்பு விளம்பரத்தில் இருந்தது. அதைப் படித்தபின் கால்களை நோக்கி அவன் கவனம் போயிற்று. அழகான பாதமுடையவர்கள் நகத்தைச் சீராக வெட்டி வர்ணப்பூச்சிட்டு மினுமினுக்க வைத்திருப்பவர்கள், கால்களைக் கவனிக்க நேரமில்லாதவர்கள். சீரான விரல்களில்லாதவர்கள். பொருத்தமான செருப்பணியாதவர்கள். பாதங்களே தெரியாமல் காலணி அணிந்தவர்கள். சாக்ஸ் போட்டுச் செருப்பு போட்டவர்கள். அவன் பார்த்த கால்களில் பத்தில் ஒருவருக்குக் காலில் எதாவது அடி பட்டிருந்தது. கீறல், பாண்டேஜ், சதுர, இரட்டை, வட்ட பிளாஸ்திரி என்று அதுவும் வித விதமாக இருந்தது.
அன்றைக்கு அவன் பார்த்த அவளது கால்கள் நீளமாக இருந்தது. எந்த நேரமும் அறுந்துவிடுமோ என்று யோசிக்கும் மெல்லிய வார்ச் செருப்பு. வர்ணப்பூச்சு என்ன நிறம் என்று தெரியவில்லை. பச்சை போலவும் மயில்கழுத்து நீலம் போலவும் செல்ஸ்ட்ரல் ப்ளூ என்று அவன் கேள்விப்பட்ட நிறம் போலவும் இருந்தது. நீளமான மிக நீளமான பாதங்கள். சிவந்த ரோஜா வண்ணத்திலான பாதங்கள்.
சில நொடிகள் பார்த்து விட்டு அவன் அவள் முகத்தைப் பார்த்தபோது அவள் அவனுக்கு மிக அருகில் அடுத்ததாக நின்றிருந்தாள். டோக்கன் 120 என்றார்கள். அவள் தன் டோக்கனைப் பார்த்து ’’உச்’’ என்றாள். ’’உங்க டோக்கன் நம்பர்’’ என்றாள். அவனிடம் அவன் எதிர்பார்க்காமலேயே அது அவனுக்கு ஒரு அபூர்வ கணம். போரடித்து வெக்கையில் பசியோடு உழன்று கொண்டிருக்கும் நேரத்தில் அவள் கேட்டது உண்மையிலேயே ஒரு அபூர்வ கணம். அவன் சொன்னான். டோக்கன் வரிசையில் அவளும் அவனும் அடுத்தடுத்து இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு முன் இன்னும் இருபது பேர் இருந்தார்கள். அவனோடு அவளும் இன்னும் நெடு நேரம் காத்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டான். அவளுக்கு போன் வந்த வண்ணம் இருந்தது. ’’ ஜஸ்ட் பைவ் டூ டென் மினிட்ஸ் . கோ அண்ட் ஹவ் பாத். யூஸ் நியூ சோப்’’ என்று பேசிக் கொண்டே போனாள். அவள் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தபோது அவளும் பார்த்தாள். கண்களால் புன்னகைத்தாள். போனைக் கட் செய்தாள். மணி பார்த்தாள். ’’என்ன நம்பர் டோக்கன் போயிருக்கு’’ என்று கேட்டாள். ’’கவனிக்கல்ல ’’என்றான் அவன். ’’ ஓ’’ என்றாள் அவள். போனில் எதோ செய்தி. பார்த்தாள் புன்னகைத்தாள். மீண்டும் தட்டச்சு செய்தாள். நிமிர்ந்து ’’டோக்கன்’’ என்றாள். அப்போதும் அவன் பார்க்க வில்லை. ’’ஒரு நிமிஷம்’’ என்று நகர்ந்து பார்சல் கட்டிக் கொண்டிருந்தவனிடம் விசாரித்து வந்தான். இன்னும் அவர்கள் முறை வருவதற்கு முன் பதிமூன்று பேர் இருக்கிறார்கள். இன்னும் நேரமாகலாம். கொஞ்சம் முன் பசித்தது போல இருந்தது. இப்போது அது இல்லை. இன்னும் தாமதமானாலும் பரவாயில்லை என்று பட்டது. இருவரும் தார்ப்பாயால் மூடப் பட்ட கார் ஒன்றில் சாய்ந்திருந்தார்கள். திடீரென்று அவள் ஒரு காலை மடித்து வைத்துக் கொண்டாள். அது இன்னும் அழகாக இருந்தது.
’’நீங்க பார்சல முதல்லியே கட்டி வச்சிருக்கலாமே வந்து கேட்டதும் எடுத்துக் கொடுக்கற மாதிரி. எதுக்கு எல்லோரையும் காக்க வைக்கணும்’’
காத்திருந்த ஒருவர் கேட்டார். அவள் ’’பாய்ண்ட் ’’என்றாள்.
’’உங்க முன்னாடி சூடா எடுத்து பார்சல் பண்ணிக் கொடுக்கறதுதான் எங்க ஸ்பெஷாலிடி’’ என்றார் பணத்தை எண்னிக் கொண்டிருந்த கல்லாக் காரர்.
’’கரெக்ட்’’ என்றாள் அவள்.
அவன் புரியாமல் பார்த்தான்.
’’ஆன் லைன்ல கூட வாங்க முடியாது. ரெண்டு பார்சல் தனித்தனியா வாங்கி மெஷர் பண்ணினாலும் ஒரே அளவாத்தான் இருக்கும். இன்குளூடிங் பீசஸ். நீங்க இங்க புதுசா வரீங்களா?’’
’’இல்ல, இன்னிக்குத்தான் உங்கள பாக்கறேன்’’ என்றான்.
மறுபடியும் கண்களாலேயே புன்னகை பூத்தாள்.
மீண்டும் காத்திருப்பு.
ஒரு தாள லயத்துடன் அண்டாவிலிருந்த வந்து கொண்டிருந்த பிரியாணி அள்ளிப்போடும் கரண்டி சத்தம் நின்றுவிட்டது. அண்டா காலியாகிவிட்டது. குட்டியானை வண்டியில் அடுத்த அண்டா வந்திறங்கியது. மூன்று பேர் சேர்ந்து கவனத்துடன் தூக்கிப்போனார்கள். எல்லோரும் காத்திருக்கத்தான் வேண்டும். எல்லோரும் ஒரே வித எரிச்சல் உணர்வில்தான் இருந்தார்கள். அவனைத் தவிர. அவனும் அவளும் அசையாமல் அந்த இடத்தில்தான் நின்று கொண்டிருந்தார்கள். அவளுக்கு மீண்டும் போன். வெயிட் வெயிட் என்ற பதில்கள். இரண்டு பேர் நேரமாகிறது என்று பணத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டு போனார்கள். ஒருவர் சட்டைக்குள்ளிருந்து குவார்டர் பாட்டிலில் பாதியை எடுத்துக் குடித்து விட்டு ஓரமாகச் சென்று பாட்டிலைப் போட்டு வந்தார். அவள் சிரித்தாள். உதட்டு அசைவுகள் மாஸ்க்கிற்குள் தெரிந்தன. இன்னும் பத்து பேர் அவர்களுக்கு முன்னால் இருந்தார்கள். அவள் அவனிடம் மணி கேட்டாள். போன் செய்து கொஞ்சம் தள்ளிப் போய் பேசினாள். அவன் காதுகளை அவளை நோக்கித்தீட்டி வைத்தான். ’’ தூங்கி விட வேண்டாம். வந்து விடுவேன். ’’திரும்பி வந்தாள். ’’என் பொண்ணு’’ என்றாள். ’’உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா’’ என்று அவனுக்குக் கேட்க வேண்டும் போலிருந்தது.
’’அவர் கூட இருக்கறா. டிவர்ஸ் ஆயிடுச்சு. வாரத்தில ஒருநாள் வருவா. அவர் வெஜ். அவளுக்கு நான் வெஜ் சாப்பிடணும். இந்த இடத்த தவிர வேற எந்த பிரியாணியும் அவளுக்குப் பிடிக்கல. மனுஷங்க அப்படித்தான். சிலது புடிச்சுப்போச்சுன்னா அதுக்கு என்ன விலைய வேணாலும் கொடுக்கத் தயாரா இருப்பாங்க. எவ்வளவு நேரத்த வேணாலும் .’’
அவன் ஆமாம் என்பது போலத் தலையசைத்தான். அவள் வர்ணவர்ணப்பூக்கள் சிதறியிருந்த மாஸ்க்கைக் கழற்ற முயன்றாள். அவள் முகத்தைப் பார்த்து விட முடியும் என்று அவன் நம்பினான். அவள் கழற்றாமல் சரி செய்து கொண்டாள். கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் பார்ப்பதிலேயே கழிந்தது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்கள் எண் சொல்லி அழைப்பார்கள் என்று அவன் நினைத்தான். அவள் போய் விடுவாள் என்றும் நினைத்துக் கொண்டான்.
முதலில் அவனைத்தான் அழைத்தார்கள். அவன் வாங்கிக் கொண்டான். வாங்கும்போதே அவளையும் அழைத்தார்கள். அவனுக்கு அருகே மிக அருகே வேகவேகமாக அவன் வந்து விட்டாள். வாங்கிக் கோண்டு வேகமாக அவள் நடந்தாள். அவன் பின்னே நடந்தான். இன்னும் கொஞ்சம் கூட்டம் புதிதாக வந்தது. டோக்கன் குளறுபடி சண்டை சத்தம் வந்தது. பார்க் செய்த இடத்தில் வண்டியை எடுக்க முடியாமல் சில வண்டிகள் நின்றன. அவன் எல்லாவற்றையும் அவசர அவசரமாக எடுத்து வைத்து விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு சாலைக்கு வந்தான் அங்கும் இங்கும் தேடினான்.
அவள் இல்லை.
போனில் கேட்ட எதோ பாட்டுக்குத் தாளமிட்ட அந்தக் கால்களும், பூச்சிட்ட விரல்களும் அவனுக்கு ஞாபகத்திலேயே இருந்தன. அடுத்த ஞாயிற்றுக் கிழமை அதே நேரத்தில் அவன் போனான். அதே கூட்டம். அவள் இல்லை. காத்திருந்தான். நெடுநேரத்திற்குப் பின் பேருக்கு எதோ பார்சல் வாங்கித்திரும்பினான்.
சிலது புடிச்சுப்போச்சுன்னா அதுக்கு என்ன விலைய கொடுக்கவும் தயாரா இருப்பாங்க. எவ்வளவு நேரத்த வேணாலும் கொடுப்பாங்க. அவளது சிலிர் குரல் அவ்வப்போது அவனுக்குக் கேட்கும்.
பிறிதொரு ஞாயிற்றுக் கிழமை அவன் அவளைப் பார்த்தான். அவள் மாஸ்க் அணிந்திருக்க வில்லை. அவன் கற்பனை செய்ததற்கு அப்பால் ஒரு அழகிய முகம். அவள் அவனைப் பார்க்க வில்லை. கால்களைப் பார்த்தான். வர்ணங்கள் மாறியிருந்தன. செருப்பும். இம்முறை அவள் அவனிடம் பேச வில்லை. பார்க்கவில்லை. போனில் தொடர்ந்து செய்திகளை அனுப்பிக் கொண்டேயிருந்தாள். இம்முறை நிறைய நேரம் அவர்கள் காத்திருக்க வில்லை. அவனுக்கு முன்னரே அவளது பார்சல் தயாராகி விட்டது. சந்தித்த ஞாயிறு நினைவில் வந்தது.. கடைசியாக அவனுக்கு அது ஞாபகம் வந்தது அன்று அவனும் மாஸ்க் அணிந்திருந்தான்.
எழுதியவர்
-
எழுத்தாளர் பாலகுமாரனிடம் அவரது எழுத்து மற்றும் திரைப்படப் பணிகளில் உதவியாளராக இருந்தவர். இயக்குநர்கள் ஜே.டி. ஜெரி, வஸந்த், ஒளிப்பதிவாளர் ஜீவா மற்றும் கௌரவ் நாராயணன் ஆகியோருடன் திரைத்துறையில் பணியாற்றியவர். தமிழின் முதல் தினசரி தொடரான சக்தியை எழுதியவர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைகாட்சிகளில் பல தொடர்கள் எழுதியவர். கார்லோஸ்புயண்ட்ஸின் ஔரா இவரால் மொழிபெயர்க்கப் பட்டு கோணங்கி மற்றும் கௌதம சித்தார்த்தனால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற ஆல்பிரட் ஹிட்ச்காக் - த் ரூபா நேர்காணல் இவரது மொழிபெயர்ப்பில் அம்ருதாவில் தொடராக வந்து புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இவரது குறுநாவல் தொகுப்பு ’வேண்டுதல்’ எழுத்து வெளியீடாகவும். உலக சினிமா ஆளுமைகளின் நேர்காணல்கள் “இருளில் ததும்பும் பேரொளி” இவரின் மொழிபெயர்ப்பில் புலம் வெளியீடாகவும் வந்துள்ளது. . ‘நீண்ட மழைக்காலம்’ எனும் தலைப்பில் இவரின் சிறுகதைத் தொகுப்பு மற்றும் ‘கீர்த்தனைகளின் வரலாறு’ என்ற கர்நாடக இசை பற்றிய புத்தகம் புலம் வெளியீடாக வந்திருக்கிறது.
இவர் தனக்கு உலக இலக்கியங்களின் மீது தனக்கு ஆர்வமூட்டியவராக சி.மோகனைக் குறிப்பிடுகிறார்
இதுவரை.
- இலக்கியம்28 February 2023ஏன் இலக்கியம்? : நூல்களின் அகால மரணம் குறித்த அறிவிப்பு- மரியோ வர்காஸ் யோஸா
- கதைகள் சிறப்பிதழ் - 20222 August 2022பிறிதொரு ஞாயிறு
- சிறுகதை19 October 2021நீண்ட மழைக்காலம்
- கலை20 July 2021மேதகு – விமர்சனம்
அற்புதம் என்றால் மிகையாகாது….👍
Naala sirukathai