17 September 2024

ந்த வார்த்தைத் துண்டுகள் ரவிக்குமாரைப் பிளந்து கொண்டு வெளியே வந்து விழுந்திருக்க வேண்டும். “இந்த உலகத்தில் சிரிக்கவே கூடாது; பற்கள் வெளியே தெரியாமல் ஒரு சின்ன புன்முறுவல். அவ்வளவுதான். அதற்குமேல் சிரித்தால் அபாயம்…”

சிரிக்காமல் ஒரு மானுடன் ஜீவிப்பதை நான் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை. எனக்கு சிரிப்பு ரொம்பப் பிடிக்கும். இதயத்திலிருந்து எழும்பி வரும் கலகல ஒலி. சிரிப்பு ஒரு அழகான விஷயம். சிரிப்பு நிகழும் கணங்களை சிரிப்புக்காகவே அர்ப்பணம் செய்வேன். கண்களில் நீர் துளும்பி நிற்கும் அற்புதமான அனுபவம். ஹாஸ்ய உணர்வுகளுக்கப்பாலும் சக மனிதனின் நெஞ்சில் அன்பு செலுத்தும் ஆத்மார்த்தமான பரிபாஷைதானே சிரிப்பு.

சமீப காலங்களில் சிரிப்பை மறந்துதான் போனேன். இதயத்திலிருந்து வெடித்த சிரிப்பு, இன்று வெறும் அதரச் சிணுங்கல்களாக மாறிப் போனது. அப்பாவுடன் கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு கதைத்த சிரிப்பை ஞாபகப்படுத்தி தோற்றுப் போவேன். எனது புகைப் படங்களில் பதிந்துள்ள சிரிப்பில் உறைந்திருக்கிறது மொக்கவிழும் மலரின் வசீகரத்தோற்றம். தினமும் கண்ணாடி முன் நிற்கும்போதெல்லாம் ஆதிச் சிரிப்பை முயற்சி செய்வேன். வலுக்கிறது உதடுகளின் விகாரம். சிரிப்பை மறந்த ஆப்பிரிக்கக் கறுப்பு எழுத்தாளன், ‘சிரிக்கக் கற்றுக் கொடு மகனே’ என்று ஓலமிட்ட அவலத்தை புத்தகங்களில் படித்திருக்கிறேன், அப்பா சேமித்து வைத்த பழுப்பு வாசனை வீசும் புத்தகங்கள்.

அவற்றில்தான் அந்தப் பூ கிடைத்தது.

மயிலிறகை புத்தக இடுக்குகளில் வைத்து குட்டி போடுவதற்காய் காத்திருக்கும் இளம் பிராயத்தில்தான் நிகழ்ந்தது அந்த அற்புதம். என் புத்தகங்களில் தோன்றிய துளியூண்டு மயில் குட்டிகளையே பார்த்து அலுத்துப் போயிருந்த ஒரு நாளில் அப்பா தூசி தட்டிக்கொண்டிருந்த புத்தகங்களில் இருந்து பழுப்பு வாசனை கமழ்ந்தது. அந்த நெடிக்குள் ஒரு அபூர்வம் பதுங்கியிருந்தாற்போன்ற உணர்வில், ஒரு மாற்றம் வேண்டி மயிலிறகை அந்தப் புத்தகங்களில் வைத்தேன். வினோதம் நிரம்பிய வளரிளம் பருவத்து எண்ண ஓட்டங்களோடு அடுத்த நாளுக்காய் காத்திருந்து புத்தகங்களைத் திறந்தேன். மயிலிறகையே காணவில்லை,

அற்புதம்!

மயிலிறகு மயில் குட்டியாக மாறாமல் வேறு ஒரு ஜீவனாக மாறியிருக்கிறது. என் மனமெங்கும் குதிரைகளின் குளம்படி ஓசை ஒலிக்க அரூபத்தைப் பக்கங்கள் தோறும் தேடித் திரிந்தேன். பக்கங்களினூடே காற்று நடுங்கியது. மெல்ல மெல்ல பழுப்பு வாசனை மட்கிப்போய் பரிமள சுகந்தம் ஜிவ்வென்று எகிறியது. எழுத்துக்களுக்கிடையிலிருந்து வண்ணத்துப் பூச்சிகள் ரீங்காரமிட்டுப் பறந்தன. பக்கங்களில் முகிழ்த்திருந்தது பூ.

அப்பா இந்தப் பூவைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார்.

‘ஒரே ஒரு ஊர்லே ஒரே ஒரு ராஜகுமாரன். அவனிடத்தில்தான் அந்தப் பூ இருந்தது… அன்பே வடிவான பூ’. ஆகாயம் எங்கள் மேல் மல்லாந்து கவிந்திருக்க நட்சத்திரங்களினடியில் அப்பாவும் நானும். ஆகாயத்தில் ராஜகுமாரனும் பூவும். ஏழு கடல் தாண்டி வனாந்திரங்களுக்கப்பாலிருக்கிற தீஞ்சுனையில் உள்ள மலரில்தான் அந்த அரக்கனின் உயிர் இருக்கிறது. அந்த மலரைப் பறித்து வந்த ராஜகுமாரன், இதழ்களைக் கசக்கிப் பிய்த்தெறியாமல், அதன் மகிமையால் அரக்கனைத் தனது மந்திரியாக மாற்றினான். புஷ்பரூபி என்கிற ராஜகுமாரி பகல் முழுவதும், அன்பு செலுத்தும் மானுடப் பிறவியாக இருப்பாள். இரவில் தடாகத்துத் தாமரையாய் மாறி வண்ணத்துப் பூச்சிகளுடன் சந்திர ஒளியில் நனைந்து கிடப்பாள். திரௌபதியிடம் தனது அன்பைத் தெரிவிக்க பீமன் திண்டாடுகிறான். அசரீரி சொல்கிறது, ‘ஓ குந்தி மைந்த… குபேர ஸ்தலத்திலே கதலீவனம் என்றொரு வனமுண்டு. அந்த வனத்திலே சௌகந்திகம் என்றொரு புஷ்பமுண்டு. அன்பால் திரளப்பட்ட அதன் இதழ்களுக்கு உனது சம்சயத்தைத் தெரிவிக்கும் வல்லமை உண்டு…’

புத்தகங்களின் இடுக்குகளில் இருந்தது அன்பால் திரளப்பட்ட சௌகந்திகம். எழுத்துக்கள் கலங்கலாய் நீரில் மூழ்கி மிதக்க, குருவிகள் கொத்திக் கொத்தி இழுத்தன. என் இதயத்தில் பொறுக்க முடியாத வலியெடுத்தது. ரீங்காரமிட்டபடி பட்டாம் பூச்சிகள் மலரைச் சுற்றிச் சுற்றி முத்தமிட, வலி பொறுக்க முடியாமல் பொக்கென வெடித்தது மலர். பதினாயிரங்கோடி வாசனாதி திரவியங்கள் என் மேல் கவிந்தன. ‘ஹ்ஹா… இவைதான் எனது கணங்கள்…’ அற்புதக் காற்றில் நான் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தேன். என்மேலெங்கும் பட்டாம் பூச்சிகள் அணைந்து மொய்க்க, என்னுள் உறைந்தது மலர்.

அது மெல்ல மெல்ல என் இதயத்தில் வேர்பிடிக்க ஆரம்பித்தது. அன்பின் ரத்தமும் சதையுமாக அதன் பட்டுப் போன்ற இதழ்கள் திரண்டன. கருணை பொங்கும் அதன் காருண்யம், என் கண்களில் மொட்டவிழ்ந்து கனிவு சொட்டியது. உடம்பு முழுக்க நேசத்தின் வாசனை ஊற்றுக்கண்களாய் திறவுபட்டுக் குபீரிட, முகமெங்கும் மலர்த்திய இதழ்களுடன் அன்பு.

வாழ்வின் உன்னதமே அந்தப் பசும் இதழ்களில் பொதிந்திருப்பது போல பேணிக் காத்தேன். அது என் ஆகிருதியையே புரட்டிப் போட்டுவிட்டாற் போன்ற உணர்வு ஜில்லிட்டோடி ரத்த நாளங்களெங்கும் அதிர்ந்தது. நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு ஜீவனிடத்திலும் அதன் இதழ் மொக்குகளை விரித்து வைப்பேன். பொக்கென புதிதாய் மலரும் நேசம், அன்றலர்ந்த மலர்போல ஒவ்வொரு முறையும் இதழ்களில் மொய்த்திருக்கும் பனிநீரில் ஈரத்துடன் சிரிக்கும் அன்பு, என் முகம் மறைந்து போய் மலர்.

ஆனால் அப்படியும் நடக்குமா?

குந்தி மைந்தன் இன்னல் பட்டுக்கொண்டு வந்து அன்புடன் நீட்டிய சௌகந்திக மலரை திரௌபதி அலட்சியப்படுத்திய காண்டம் என் மேலும் கவிகிறதே… என்னிடமிருந்த அந்த புஷ்பத்தின் அபூர்வத்தை எந்த ஒரு ஜீவனும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அந்த அற்புதமான மணம் எவரையும் ஆகர்ஷிக்காமல் போனதை என்னால் துளியும் சகிக்க முடியாமல் போயிற்று.

பூக்களைப் பற்றி உணர்ந்த ஜீவனுக்காய் காத்திருந்த சந்தர்ப்பங்களில் எதிர்ப்பட்டது கவர்ச்சிகரமான பூ. கோட்பாக்கெட்டில் ஒய்யாரமாய் இதழ் மொக்குகள் அலர்ந்திருக்க உட்கார்ந்திருந்தது. எனக்குள் சிலிர்த்தது பனி நீர். அவனிடம் பூக்களைப் பற்றிப் பேசினேன்.

அவன் தனது கழுத்தை நெரிபடும் டையை நளினத்தோடு தளர்த்தி விட்டுக்கொண்டபோது, சடக்கென அவன் தலை நரியாய் மாறியது. மூக்கின் நுனியில் நிலை தடுமாறும் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்துகொண்டே, “அன்புடையீர், பூ வேர் பிடிக்காத இடம் கோட்பாக்கெட்தான்…” என்றது விநயத்துடன். தலைகொய்த பூவின் தண்டுப் பகுதியில் சுரந்த அழுகல் வாசனை வெளியில் படர்ந்தது.

“டேய் நீ சொல்றதெல்லாம் பேசறதுக்கு நல்லாருக்கு. ஆனால் வாழ்க்கைக்கு ஒத்து வராது…” என்று உறுமும் மோட்டார் வாகனத்தின் ஒலியினூடே சொல்லிக் கடுகிப் போனான் நடராஜ். பெட்ரோல் புகை மலரைச் சூழ்ந்து கொண்டது. புகை படர்ந்த நகரத்தில் அந்த மலரின் இதழ்களைப் பிய்த்தெறிந்தும், கசக்கியும், கடித்துத் துப்பவும் ஆரம்பித்தனர்.

ஓரிருவர் தனது வளர்ப்புப் பிராணிகளுடன் அன்பு மலர்களைத் தூவியபடி விளையாடினர். தூவல்களின் கனிவான மொட்டுகளில் மலரும் நேசத்தை ஏன் சக மனிதருக்கு நுகரத் தருவதில்லை? தன்னைத் திருப்பி ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்கிற சூட்சமத்தில்தான் மலர்கள் மலர்கின்றனவா?

நான் சிறகுகள் முளைத்தவன் என்றும், யதார்த்த வாழ்வில் மனிதன் மனிதனாக இருக்க முடியாத அவலத்தையும் நிறையப் பேசினான் அருள். ‘லௌகீக வாழ்வில் பூவுக்கு இடமில்லை’ என்றவனை நான் மறுத்துச் சொன்னேன். ‘எல்லாம் சரி உன் சம்பாத்தியத்தில் இந்த வார்த்தைகளைச் சொல்’ என்றான். எனக்குள் சிலீரென ரத்தம் சுண்டியது. என் குடும்பத்தாரின் பிறாண்டல். முதலில் இந்த மண்ணின் மதிப்பீடுகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றும், ஒரு வேளையில் சேர்ந்து லோகாயத வாழ்வின் பற்சக்கரங்களில் சக்கரமாய்ப் பொருந்திப் போகும்போதுதான் வாழ்வுக்கும் அன்புக்குமிடையே இருக்கிற நிரப்ப முடியாத இடைவெளியை உணரமுடியுமென்றும் தர்க்கித்தான் ‘வாழ்வை – வாழ்வின் எதிர் கொள்ளல்களை அனுபவி, உணர், பிறகு சொல்’ என்றான் அருள்.

லௌகீக வாழ்வின் சவால்கள் என்னை அழைத்தன. வேலைநாத்தத்தைப் பற்றி நான் கவிதையெல்லாம் எழுதியிருக்கிறேன். வீதியில் இறங்கினால் கவிதைகள் என்னை எழுத ஆரம்பித்தன. நாற்றம் குடலைப் புரட்டியது. முகம் சப்பழிந்து போக நெரிந்து அனலும் வெக்கையில் பூவின் இதழ்கள் கூம்பிப் போயின. அதன் பச்சையம் சருகாகிப் போய்விடுமோ? ஒரு தனியார் ஏஜென்ஸியில் விற்பனையாளன் வேலை. பில் போட்டுக் கொடுப்பதுடன் சரக்கை கடைகளுக்கு டெலிவரி செய்யும் டூ இன் ஒன் வேலை. பூவின் மலர்த்திய இதழ்கள் ஆரவாரித்துச் சிரித்தன.

விற்பனை ஒரு கலைதான். ஒத்துக் கொள்கிறேன். பருத்த முதலாளியிடம் நயமாக இளித்து சரக்கை விற்கும்போதும், நாசூக்காகக் கெஞ்சி பணத்தைக் கறக்கும் போதும் மூன்று சக்கர டெலிவரி வண்டியின் அடியில் நசுங்கிப் போயிருந்தது பூ.

சிதைந்த இதழ்களைப் பதனப்படுத்தி நிமிர்ந்தபோது, ஆகாயத்தை மறைத்திருந்த பிரம்மாண்டமான இரும்புக்கிராதி என்னை வளைத்திருந்தது. அந்த மில்லில் கணக்காளனாக வேலை பார்த்த நாட்கள் கொடூரம் நிரம்பியவை. வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் தரிசித்த அற்புத நாட்கள், கபந்த வாயாய்த் திறந்து நிற்கும் கேட் வாசலில் சோதனை செய்து அனுப்பும் காவலன், எனது பூவை அநாயாசமாக எடுத்து மேஜையின் மேல் விட்டெறிவான். எனது இருதயம் டங்கென்று நொறுங்குபடும். மாலைவரை காத்திருந்து வெளியே வரும்போது அதை வாங்கி இதயத்தில் பத்திரப்படுத்திக் கொள்வேன். நாளாவட்டத்தில் இது ஒரு சடங்காகிப் போய்விட்டது. ஒவ்வொரு சமயம், பூவை சில நாட்கள் வாங்க மறந்திருப்பேன். ஆனால், அநாதரவாய்க் கிடக்கும் அதன் மணம் மட்கிப் போகாமல் பூவின் பிறப்பே அந்த வாசனைதான் என்கிற தாத்பர்யத்தில் கமழ்ந்து கொண்டிருந்தது.

ஏன் ஒரு ஜீவனும் அந்தப் பிரியமான வாசனையை சுவாசிக்க முடியாது போயிற்று என்கிற பிரபஞ்ச ரகசியம் மெல்ல மெல்ல அவிழ்ந்தது. அந்த மலரை வைத்திருப்பதே ஒரு அவலத்திற்குரிய விஷயம் என்கிறாற் போன்று சிற்சில சம்பவங்கள் நடந்தேறின. டைப் அடிப்பவன், மில்லில் கண்காணிப்பாளன், வேற்று மொழி மண்ணில் விற்பனைப் பிரதிநிதி என்று தனியார் நிறுவனங்கள் அளித்த ஜீவனோபாய முகங்கள் மாறிக் கொண்டே வந்தன. என் கபாலம் ஒவ்வொரு முறையும் கழன்று உருளும் போதெல்லாம், பூவின் மகரந்தத் துகள்கள் சிகிச்சையளிக்கும். அற்புதங்கள் நிரம்பிய என் ஜீவிதப் பரப்பு முழுமைக்கும் ரத்தக் கலங்கல். மெல்ல மெல்ல நிறம் மாறிக் கொண்டிருந்தது பூ.

பூவின் தண்டுப் பகுதி அழுகிப் போய்விடும் நிலையில், அதை இழந்து போய்விடுவேனோ என்கிற போராட்ட கணங்களில்தான் கிடைத்தது அந்த உன்னதம். கல்வி நெறி போதிக்கும் ஆசிரியர், புதிய தலைமுறையைத் தோற்றுவிக்கும் நவீன பிரம்மா. கடவுள் எனக்களித்த கொடை. கள்ளங்கபடமற்ற இளம் பிஞ்சுகளின் கைகளில் என் முகம் சந்திரகாந்தியின் சோபையுடன் பனித்தது. சொல்லில் அடைபடா மஹோன்னதமான உலகம் அது; ஒரு மரமோ ஒரு புதரோ ஒரு மலரோ வளர்ந்திராத நிலப்பரப்பு அது. பச்சென்று துடைத்த சிலேட்டுப் பலகையில் நான் எழுத ஆரம்பித்தேன், அந்தப் பூவைப் பற்றி.

அவர்களின் ஈரம் சுரக்கும் கைகளுடன் கைகோர்த்துத் திரிந்தேன். ‘புத்தகங்களில் படிப்பதற்கு ஒன்றுமில்லை… வெளியே படியுங்கள்…’ என்றதும் அவர்களின் கண்களைப் பார்க்க வேண்டுமே… நான் பாடம் நடத்தும்போது பாடத்தை விட்டு அவர்களை வெளியில் அழைத்துச் செல்வேன். பூஞ்சைச் சிறகுகளைக் கடைந்து கடைந்து என்னோடு சேர்ந்து பறந்து வரும் அழகில் பிரபஞ்சம் ரம்மியமாய் மிளிரும்.

அன்றும் அப்படித்தான். மூன்றாம் வகுப்பில் ‘நமது பண்டிகைகள்’ என்ற பாடத்தை நடத்திக் கொண்டிருந்தேன். சுவர்கள் மறைந்தன; வகுப்பறை மறைந்தது;பெண்களின் குமிழியிட்டோடும் சிரிப்பொலி; வெளியெங்கும் வண்ணப் பொடிகள் தூவிய மக்களின் கொண்டாட்டம். பூ ‘ரக்சா’ கயிறாக மாறியிருந்தது. சட்டென ஆகாயத்தில் கனிவு சொட்டும் சந்திரப்பிறையாக மாற, அதனடியில் ஏந்திய கரங்களில் பனிநீரின் ஈரம். கிறிஸ்துமஸ் தாத்தா பை நிறைய பூக்களைச் சுமந்து கொண்டு வந்தார். ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்றது பூ.

சட்டென என் காதுகளில் வெடித்தது அந்த ஆக்ரோஷம். “நிறுத்துங்க சார்…. உங்களைப் போல எங்கப்பாவும் பேசிட்டிருந்தாலேதான் வீட்டு நெலத்தைக்கூட எங்க பெரியப்பா புடுங்கிட்டார். நாங்க ஒண்ணுக்குப் போறதுக்குக்கூட எடமில்லாம இருக்கோம்…” தன் கைகளில் முளைத்திருந்த முட்களால் திருப்பித் திருப்பி அறைந்தான் அந்த மூன்றாம் வகுப்புப் பையன்.

‘ஏலி ஏலி லாமா சபக்தானி’

திடுமென ஒரு பெரும் பிரளயம் என்னை அடித்துக் கொண்டு போனது. பொங்கிப் பெருகிய அந்த நதியின் சுழற்சியில் என் ஆகிருதி புரண்டு புரண்டோடியது. ஜலம் என் உடம்பெங்கும் புகுந்து என்னுள் கலந்தது. அதன் அலை இரைச்சல் காதுகளைச் செவிடாக்க, கபாலம் பாறைகளில் பட்டுப் பிளக்க, மெல்ல நதியின் பிரவாகம் குறைந்தது. கால்கள் ஆற்று மணலில் புதைந்து நின்றன. நதி மார்பை அளைந்து கொண்டு ஓடியது. மயிர்க்கால்கள் தோறும் விம்மியது வலி. நதியின் ஓசையைத் தவிர எங்கும் அமானுஷ்யம்.

நதியில் மிதந்து வரும் இலைகளின் ஸ்படிகத் துளிகளில் நதி. பாசம் படிந்த படித்துறையில் மீன் குஞ்சுகள் விளையாடின. அதிகாலைக் காற்றின்தலை சீவலில் நதியின் அலை மேடுகள். இன்னும் உடையாத ஒரு நீர்க்குமிழியின் கண்ணாடியில் சூர்யக் கொழுந்து. ஆனந்த லயத்தில் காற்றுக்கூட்டி அதை ஊதுகிறேன். குமிழி பெரிதாகிறது. அது குமிழியல்ல; தலை: சிகை மழிக்கப்பட்ட ஒருவனின் தலை. தீட்சண்யமான அவன் கண்களில் நீரின் ஸ்படிகங்கள் மின்ன, “பூ என்று ஒன்றும் இல்லை” என்று புன்னகையுடன் சொல்லியவாறு முங்கி முங்கி எழுந்தான். நதி சிரித்தது.

அவனது செய்கையின் தீவிரம் என்னைத் தாக்க நானும் நதியில் மூழ்கினேன்.

நதியின் நீரோட்டம் கண்களில் நிறைந்தது. நீர் நிறைந்தபோது காட்சிகள் மங்கின. பூ மங்கியது. மழிக்கப்பட்ட தலையின் தேஜஸ் மங்கியது. மங்கி மங்கி சர்வமும் இருள். மயில் இறகுகள் சேகரிக்கும் பாலகனாய் மாறிப் போயிருந்தேன். எழுந்தபோது உதட்டின் மேல் கட்டை ரோமம் அடர்ந்திருந்தது. ஒவ்வொரு முறை மூழ்கும் போதும் குழந்தையாக மாறி, எழும்போது பெரியவனாகிவிடுகிற அபூர்வ நிகழ்வு அது. எனக்கும் அந்தப் பாலகனுக்குமான ஜீவ மரணப் போராட்டமாக அந்த முங்கல் இருந்தது. பாலகனின் ஆக்கிரமிப்பிலிருந்து பெரியவனின் மனோநிலைக்கு வருகிற முங்கல் அது.

காலத்தின் கடைசலில் மெல்ல மெல்ல எனது முகம் தோற்றம் உரிந்து போயிற்று. பெரியவனின் முகத்துக்கேயுரிய பிம்பம் அடர்ந்தது. எனக்குள் கமழ்ந்த அபூர்வமான மணம் மட்கிப்போய் உடம்பெங்கும் மருந்து வாசனை அடித்தது. மருந்து விற்பனைப் பிரதிநிதிகளின் காற்றுகூட மருந்து வாசனைதான் அடிக்க வேண்டும் என்பது எங்கள் கம்பெனி விதி. மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய கம்பெனிகளின் ரத்தின கிரீடங்களையெல்லாம் அணிந்து விட்டேன். என் சிரிப்பு மறைந்தபோது என் குடும்பத்தினர் முகத்தில் புன்சிரிப்பு. அவ்வப்போது புரட்டும் செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் பூ அலங்கோலமாய் குற்றுயிரும் குலையுயிருமாய் சிதைந்து போய்க்கிடக்கும். அதன் மேல் சிகரெட் வளையங்களை ஊதியபடி அசுவாரஸ்யமாய் பக்கங்களைப் புரட்டிவிடுவேன். என்னிடம் ஒரு அபூர்வ வஸ்து இருப்பதைச் சுத்தமாக மறந்தே போனேன். (தேவையில்லாத விஷயங்களை மறப்பதற்கு எங்கள் கம்பெனியில் மாத்திரைகள் உள்ளன.)

அன்றைக்கு வியாபார நிமித்தம் ஒரு மெடிக்கல் ஏஜென்ஸிக்குப் போயிருந்தேன். வேலை கொஞ்சம் தாமதமாகும் என்று தெரிந்தும் வெளியே சென்று ஒரு சிகரெட் பிடித்து வரலாம் என்று நினைத்தேன். எதிரில் கடல் அழைத்தது.

கடற்கரை மணலில் ஷுக்கள் பதியப் பதிய நடந்தேன். எனது காலடிச் சுவடுகளுக்குப் பதிலாய் காலணிகளின் தாரைகள். அந்தக் கோடுகளின் அழகில் மனசைப் பறிகொடுத்து நடந்து நடந்து கால்கள் வலிக்க உட்கார்ந்தேன். ஈர மணலின் குளிர்ச்சி ஆசுவாசப்படுத்தியது.

மனித வாசனையற்ற தனிமையில் கடல் காற்று உறுமியது. சமுத்திரத்தின் எல்லையற்ற கோஷம் வெளி முழுவதும் எதிரொலித்தது. கடலலை மேல் கடலலை. கழுத்துப் பட்டையைத் தளர்த்திவிட்டவாறே விச்ராந்தியாய் சாய்ந்தேன். காலடியில் உறைந்தது கடல்.

அப்பொழுதுதான் தென்பட்டது அந்த அமானுஷ்யம். குழந்தை ஒன்று தனது பிஞ்சுக்கால்கள் மணலில் பதியப் பதிய துரத்திக் கொண்டு வந்தது வண்ணத்துப் பூச்சியை. தளிர்க்கரங்களுக்கு போக்கு காட்டியவாறு விளையாடித் திரிந்தது வண்ணத்துப் பூச்சி. நிஷ்களங்கமான அந்தக் குழந்தையின் முகம் எனக்குள் எல்லையற்ற விகாசமாய் விரிந்தது. அந்தக் குழந்தை என் அருகாமையில் வந்து அதைப் பிடிக்க, அது பதறியோட… அந்தக் காட்சி ஒரு தலை சிறந்த சிருஷ்டி.

நான் சடக்கென எழுந்து குழந்தையின் அருகில் போனேன். வண்ணத்துப் பூச்சியை நழுவவிட்ட ஏமாற்றத்தில் அதனுடைய அற்புதமான முகம் சோபையிழந்து போயிற்று. ‘கடவுளே, ஒரு பூ போன்ற இந்தக் குழந்தையின் ஏமாற்றத்தைப் போக்குவது எங்ஙனம்? இதன் முகம் மறுபடியும் மலராதா?’

அந்தக் கணத்தில்தான் என் ஞாபகத் திவலைகள் வெடித்தன. எனக்குள் பேணுவாரற்றுக் கிடக்கும் அபூர்வ மலர். ‘கடவுளே… அந்தப் பூ இந்தக் குழந்தையிடம்தான் இருக்க வேண்டும். இதனுடைய இதயத்தில்தான் வேர் பிடிக்க வேண்டும்…’ பரபரப்புடன் அதைத் தேடி எடுத்தேன்,

அற்புதம்!

அந்தப் பூ ஒரு கறுப்பு நிறத் துப்பாக்கியாக மாறியிருந்தது. நான் பிரமித்துப் போய் நின்றேன். அதன் வசீகர குணம் உள்ளங்கையில் ஊடுருவ, கரங்கள் இறுகின. குழந்தையை நோக்கி உயர்த்தி நளினமாக அதன் விசையைச் சுண்டினேன்.


– கெளதம சித்தார்த்தன். 

நவம்பர் 1993 ல் எழுதிய இக்கதை, மே 1999 ல் வெளியாகிய  “பச்சைப் பறவை” சிறுகதைத் தொகுப்பில் வெளியானது

எழுதியவர்

கெளதம சித்தார்த்தன்
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x