25 July 2024

மிழர்களுக்கு எதிராக புத்த பிட்சுகளும், இலங்கை அரசும் தங்கள் பலத்தை பிரயோகம் செய்து, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சமூக உரிமைகளை நசுக்கியபோது, எண்ணற்ற உயிர்களை இழந்த போது, ஒரு கூட்டம் அறவழியில் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க முயன்று கொண்டிருந்த போது, ஏன் அவர்களை நாம் திருப்பி அடிக்கவில்லை என்று அப்பாவின் மடியிலிருந்து கேள்வி கேட்கும் சிறுவனின் மனதில் ஏன் அப்படியொரு கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விகள் அவனை எதனை நோக்கி ஈர்த்தது. எப்படி தங்கள் விடுதலைக்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்த தீரம் மிக்க இளைஞர் படையை அவன் திரட்டினான். போர்ப் பிரகடனம் செய்தான் என்ற சமீப வருடங்களில் நாம் கண்ட, கேட்ட, படித்த. சொல்லப் பட்ட வரலாற்று நாயகனின் போராளி வாழ்வின் ஆரம்ப காலத்தை இப்படம் சொல்லத் துவங்குகிறது.

மேதகு பிரபாகரன் பற்றிய, விடுதலைப் புலிகள் பற்றிய முதல் திரைப்படம். அவர்களின் ஆரம்ப காலம். வரலாற்றை திரிபுகள் இல்லாமல் சொல்லியிருப்பதாகவே நிறைய இலங்கை நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள்.  வடகிழக்கு மாகாணங்களின் ஆட்சி மொழி தமிழ்தான் என்பதற்கான அறப்போர்., தமிழர்களுக்கு எதிராக இயங்காத பண்டாரநாயகாவின் கொலை, புத்த பிக்குகளின் ஆதரவோடு ஆட்சிக்கு வரும் ஸ்ரீமாவோ பண்டார நாயக, இலங்கை பௌத்தபூமி தமிழருக்கு அங்கு இடமில்லை எனும் பிரகடனம், தமிழர் உரிமையை அழிக்கும் தரப் படுத்துதல் சட்ட பிரகடனம், போராட்டம், கொல்லப் பட்ட, எரிக்கப் பட்ட, வன்புணர்வு செய்யப்பட்ட தமிழினம். எந்த மாதிரியான ஆயுதம் ஏந்த வேண்டிய சூழலை எதிரிகள்தான் தீர்மானிக்கிரார்கள் என்பது இந்த இடத்தில் நினைவு கூறத்தக்க ஒன்று. பஸ் எரிப்பின் மூலம் தமிழர் எதிர்ப்பு உணர்த்தப் படுகிறது. எரித்த மேதகு தேடப் படுகிறார், அவரது வீடு கண்காணிப்பில் மிரட்டலில் இருக்க, தன்னை அழைத்துச் செல்ல வரும் அப்பாவிடம், நான் எனக்கான, என் வீட்டுக்கான ஆளில்லை, எம் மக்களுக்கான ஆள் என்று சூளுரைக்கிறார் அந்தப் போராளிகளின் தலைவன். தொடர்ந்து நிகழும் உலக தமிழாராய்ச்சி மாநாடு. அதைக் கலவரமாக்க விரும்பும் பிக்குகள், அதற்கு துணை போகும் தமிழர் யாழ்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா.

நடிகர்கள் தேர்வு, காட்சிகள் நிகழும் இடங்களின் தேர்வு, உடைகள், நடிப்பு,காட்சிகளின் நகர்வு எல்லாமே ஒரு அற்புத மனிதனின் வாழ்வின் சில நாட்களைக் காணும் திரைப்படமாக இதனை உணர வைக்கிறது. ஒளிப்பதிவாளர் தேர்ந்தெடுத்திருக்கும் காட்சிகளுக்கான லென்ஸ் அதற்கு முக்கிய காரணம். எந்த நிகழ்வின் பின் புலத்திலும் காட்சியின் கவனம் குலைக்கும் சித்திரங்களோ, பூக்களோ, வர்ணங்களோ இல்லை. பின் புலத்தை அவுட் ஆஃப் ஃபோகஸில் சிதைக்கவும் இல்லை. ஒரு டாகுமெண்டரி வடிவத்தில் நிஜக் கதையை சொல்லும் முயற்சியில் எடிட்டரும் உணர்ந்து இயங்கியிருக்கிறார். நீட்டிப்பில்லாத வசனங்கள். அளவு நீள்மாகாத காட்சிகள், உணர்வுகளை உள்ளே வைத்துக் கொண்டு செயல் வடிவம் நோக்கி நகரும் போராளி மனோபாவத்தை இயல்பாகவே படம் நெடுகிலும் காண முடிகிறது. இசை, ஒலிப்பதிவு என்று பங்கேற்றவர் அனைவரும் சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள்.

வழக்கமான திரைப்பட பாணியை தவிர்த்திருப்பதாலோ, அனைவரும் விரும்பும் ஒருவரின் வரலாறு என்பதாலோ மட்டும் இதனை சிறந்த படம் என்று அழைத்து விட முடியாது. பலரது பங்களிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழீழத்தில் உருவான ஒரு பிரம்மையை நமக்கு தருவதே இதன் வெற்றி.நிறைய சிறப்பான படங்கள் நமக்குத் தரும் அனுபவம் இது. தன் முதல் படமாக, மாபெரும் கனவை இதன் இயக்குனர் சுமந்து வென்றிருக்கிறார்.


=ஜெகநாத் நடராஜன்

எழுதியவர்

ஜெகநாத் நடராஜன்
ஜெகநாத் நடராஜன்
எழுத்தாளர் பாலகுமாரனிடம் அவரது எழுத்து மற்றும் திரைப்படப் பணிகளில் உதவியாளராக இருந்தவர். இயக்குநர்கள் ஜே.டி. ஜெரி, வஸந்த், ஒளிப்பதிவாளர் ஜீவா மற்றும் கௌரவ் நாராயணன் ஆகியோருடன் திரைத்துறையில் பணியாற்றியவர். தமிழின் முதல் தினசரி தொடரான சக்தியை எழுதியவர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைகாட்சிகளில் பல தொடர்கள் எழுதியவர். கார்லோஸ்புயண்ட்ஸின் ஔரா இவரால் மொழிபெயர்க்கப் பட்டு கோணங்கி மற்றும் கௌதம சித்தார்த்தனால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற ஆல்பிரட் ஹிட்ச்காக் - த் ரூபா நேர்காணல் இவரது மொழிபெயர்ப்பில் அம்ருதாவில் தொடராக வந்து புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இவரது குறுநாவல் தொகுப்பு ’வேண்டுதல்’ எழுத்து வெளியீடாகவும். உலக சினிமா ஆளுமைகளின் நேர்காணல்கள் “இருளில் ததும்பும் பேரொளி” இவரின் மொழிபெயர்ப்பில் புலம் வெளியீடாகவும் வந்துள்ளது. . ‘நீண்ட மழைக்காலம்’ எனும் தலைப்பில் இவரின் சிறுகதைத் தொகுப்பு மற்றும் ‘கீர்த்தனைகளின் வரலாறு’ என்ற கர்நாடக இசை பற்றிய புத்தகம் புலம் வெளியீடாக வந்திருக்கிறது.

இவர் தனக்கு உலக இலக்கியங்களின் மீது தனக்கு ஆர்வமூட்டியவராக சி.மோகனைக் குறிப்பிடுகிறார்
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x