17 September 2024

ந்த நோயின் பெயர் டுசன் தசையழிவு என்பதாகும் (Duchenne Muscular Dystrophy) சாதாரணமாக தத்தித்தவழும் குழந்தை பன்னிரண்டு மாதங்களானதும் எழுந்து நடக்கும் பதினெட்டு மாதங்களாகியும் குழந்தை நடக்க முடியாமல் தத்தளிக்குமென்றால் தசையழிவு நோயின் முதலாவது அறிகுறி அதுவாக இருக்கக்கூடும். புத்திசாலியான தாய் நிச்சயம் இதனைக் கண்டுபிடித்து விடுவாள்.

குழந்தைக்கு நான்கு வயதாகும் போது நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகப் புலப்படலாம். படிக்கட்டுகளில் ஏறவும் பேரூந்திற்குள் ஏறவும் குழந்தை சிரமப்படும். விளையாட்டுச் செயற்பாடுகளில் குழந்தை அசமந்தமாக இருக்கும். குழந்தை தள்ளாடித் தள்ளாடி நடப்பது வாத்து நடப்பது போல் இருக்கும். மேலும் எழுந்து நிற்கவும் குழந்தை அதிக நேரமெடுத்துக்கொள்ளும். குழந்தை கால்விரல்களால் ஊன்றி ஊன்றி நடப்பதை விரும்பும்.அடுத்த கட்டம்தான் பிள்ளையால் முற்றாகவே நடக்கமுடியாத மோசமானகட்டம் வருகிறது. அத்தருணத்தில் பிள்ளைக்கு சக்கர நாற்காலி தேவைப்படும்.

‘ஆமாம் டாக்டர் ஆறரை வயதாகும் போது நடப்பதை என் பிள்ளை முற்றாக நிறுத்தினான்’ என்று கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள் சீமாட்டி. அவளுக்கருகில் அவளுடைய பிள்ளை சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

இந்த விபரங்களை சீமாட்டியிடம் நான் விஸ்தாரமாகச் சொன்னதற்குக் காரணம் அவளுடன் உரையாடும் போதெல்லாம் அவளுடனான முதற்சந்திப்பு எனக்கு ஞாபகம் வந்துவிடும். (என்றாலும் அவன் முப்பது வயதிற்கு மேல் வாழமாட்டான் என்பதைச் சொல்லவில்லை)

‘டாக்டர் உங்களுடைய நேர்மைக்காகவும் வெளிபடைத்தன்மைக்காவும் நோயாளிகள் மீது நீங்கள் காட்டும் அன்பிற்காகவும் இந்த நகரத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் உங்கள் பெயர் பிரசித்தமாக இருக்கிறது. அதற்காகத்தான் நான் உங்களைத் தேடி வந்தேன். அவ்வாறாகவே நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். மற்றைய டாக்டர்கள் போல் எதையுமே மறைக்கக்கூடாது. மழுப்பலாகவோ நழுவலாகவோ எந்தப்பதிலும் வரக்கூடாது’ என்று அவள் அப்போது சொன்னாள்.

நான் டாக்டர் ழீ. உளநோய்ச் சிகிச்சை நிபுணர். நோயாளிகளுடனான என்னுடைய அணுகுமுறையை விபரிக்க விரும்புகிறேன். நோயாளிகள் ஆலோசனை மையங்களில் தற்போது நிகழ்வதுபோல் நோயாளிகளை அறையொன்றில் அடைத்து வைத்து உரையாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

மரமொனறின் நிழலிலே திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகை யொன்றிற்கு சீமாட்டியை நான் அழைத்துச் சென்றபோது அவள் ஆச்சரியமுற்றாள். என்னுடைய விருந்தாளியைப்போல் ஆடம்பரமான ஆசனமொன்றில் அவளை அமரவைத்தேன்.

‘தேநீரா காப்பியா பழச்சாறா?’ என்று கேட்டபோது அவள் காப்பியென்றாள். பணியாள் ஒரு குவளைக்காப்பி கொண்டு வந்தான்.

சீமாட்டியுடனான முதல் சந்திப்பை ஒரு கதையைப்போல் நான் என்னுடைய குறிப்புப் புத்தகத்திலே எழுதி வைத்திருக்கிறேன். எல்லாச் சந்திப்புகளையும் அவ்வாறுதான் எழுதுவேன். என்னிடம் சிகிச்சைக்காக வரும் எல்லா நோயாளிகளைப்பற்றியும் அவ்வாறுதான் எழுதுவேன். நோய் நிருணயித்திற்கும் சிகிச்சைக்கும் அவசியமான நோயாளின் நடத்தைக்கூறுகள் அக்குறிப்புகளில் இருக்கும்.ஓர்அகாலநேரத்தில் சீமாட்டி எனக்கு அழைப்பெடுத்தாள்.

‘நான் சீமாட்டி என்ற பெண் பேசுகிறேன். சிங்கம் என்னைத்துரத்தும் கனவொன்றைக் கண்டு வெடவெடத்து நடுங்குகிறேன். நான் ஓடிக்கொண்டே இருந்தேன். என் பையனால் ஓடமுடியவில்லை. சிங்கம் அவனைக் கௌவுகிறது. அவன் அம்மா அம்மா என்று அலறுகிறான். நான் மயங்கி விழுந்து விட்டேன்’ என்றாள் சீமாட்டி

‘அம்மணி கனவு என்று தெரிந்துவிட்டதுதானே. பிறகேன் பயப்படுகிறீர்கள்? சிங்கம் துரத்துவதென்பது எல்லோரும் வாழ்கையில் ஒரு தடவையேனும் காணக்கூடிய மிகவும் சாதாரணமான கனவாகும்.ஒரு குவளை குளிர்ந்த நீர் அருந்திவிட்டுத்தூங்குங்கள் எல்லாம் சரியாகி விடும்’

‘டாக்டர் இது சாதாரண கனவு என்பது எனக்கும் தெரியும். அச்சொட்டாக இதேகனவையே என்பையனும் கண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான். முகத்திலிருந்தும் மேனியிலிருந்தும் வியர்வை கொட்டுகிறது. அவனுடைய இதயம் மிகவும் வேகமாகத்துடிக்கிறது எனக்குப் பயமாக இருக்கிறது’

‘இதுவும் சாதாரணமான சங்கதிதான்’

‘டாக்டர் நீங்கள் நினைப்தைப் போல் இது சாதாரண பிரச்சினை இல்லை. நாங்கள் இருவரும் தொடர்ச்சியாக இந்தக் கனவை கண்டு வருகிறோம். சிங்கம் நிற்கும் இடத்திலிருந்து சிலஅடிகள் தூரத்தில் செங்குத்தான மலைக்குன்று இருக்கிறது.ஒருநாள் நாங்களிருவரும் மலைக்குன்றிலிருந்து விழுந்து செத்துப் போய்விடுவோம்’

‘திருமதி சீமாட்டி இப்போது நேரத்தைப் பார்த்தீர்களா? அதிகாலை ஓன்று முப்பது. நாளைக்கு உங்கள் பையனையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் பேசுவோம்’ என்றேன் நான்.

நோயாளியின் நடை, காலடியின் வேகம், காலடியை வைத்துச் செல்லும் நளினம், முகத்தில் துளிர்க்கும் வியர்வை, நெற்றிச் சுருக்கங்கள், முகத்தில் படிந்திருக்கும் கவலையின் தடங்கள், ஆடையின் நேர்த்தி, மோஸ்தர், நிமிர்ந்த நடை அல்லது தள்ளாடும் நடை, விழிகளில் தேங்கியிருக்கும் மகிழ்ச்சி அல்லது சஞ்சலம் என்று நுணுக்கமான ஒவ்வோர் அம்சத்தினையும் நோட்டமிட்டு அவை அற்பமாயினும் கூட நான் அர்த்தங்களைக் கற்றுக் கொள்வேன்.

எனக்கு முன்னாலுள்ள ஆசனத்தில் நோயாளி அமர்வதற்கு முன்பாகவே நோயாளியைப் பற்றிய சமாச்சாரங்களும் நோயாளியின் ஆழ்மனதில் புதைந்திருக்கும் சிடுககுகளை வெளிக்கொணருவதற்கான உபாயங்களும் என் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும்.

நோயாளிக்குத தோதான சூழலை உருவாக்கும் எண்ணத்தில் என்னுடைய பிரத்தியேகக் கிளினிக்கை புறநகர்ப்பகுதியில் அமைதியான இடமொன்றில் நடத்துகிறேன். வாடகை ஜாஸ்தி தான் எனினும் கவலையில்லை.

முன்புற நுழைவாயிலிலிருந்து வீட்டு நுழைவாயில் வரை சிசிரீவி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவர்கள் நடந்துவரும் போதே நோயாளியின் மெல்லிய புன்னகையையோ தேம்பும் உதடுகளின் அடக்க முடியாத துடிப்பையோ விழிகளில் முட்டும் ஓற்றைக் கண்ணீர்த் துளியையோ நான் பதிவு செய்வேன்.

சீமாட்டி முதல் தடவையாக என்னைத்தரிசிக்க வந்தபோது அவள் காரிலிருந்து இறங்குவதை நான் அவதானித்தேன். அவளுடைய பணிப்பெண் பின்னாசனத்திலிருந்து மடிக்கப்பட்ட சக்கர நாற்காலியோடு இறங்கி அதனை விரித்தாள். பின்னாசனத்தில் சிறுவன் இருந்தான். சிறுவனை சீமாட்டி இருகைகளாலும் தூக்கி சக்கர நாற்காலியில் அமர்த்தினாள்.

நீண்ட கறுப்புக்கூந்தலைக் கொண்ட அவள் நிச்சயமாக ஒரு பணக்காரப் பெண்தான். அணிந்திருந்த கறுப்பு நிறமான ஆடை காதணிகள் நெக்லஸ் கைப்பை கைக்கடிகாரம் குதிகாலணி அனைத்தும் பிந்திய மோஸ்தரைக் குறிக்கும் பணக்கார அடையாளங்களாக இருந்தன. ஆனால் முகத்திலோ நடையிலோ அந்த வசீகரம் இல்லை. அவள் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தாள் சக்கர நாற்காலியைத் தள்ளியவாறே அவள் தளர்ந்தும் தயங்கிக்கொண்டும் நடந்தாள்.

‘என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று நான் சீமாட்டியிடம் கேட்டேன். அவள் பக்கவாட்டில் திரும்பி சக்கரநாற்காலியிலிருந்த தன் மகனைப் பார்த்தாள். அவன் என்னைப் பார்த்து புன்னகைத்தான்.

‘நான் உங்களோடு நிறையப்பேச வேண்டும்’ என்றாள் அவள்.

‘டுசன் தசையழிவு நோய் உங்கள் மகனைப் பீடித்திருக்கிறது. இது தவிர்க்க முடியாத விஷயம். அந்தக் கவலை உங்கள் உள்ளத்தை ஆட்டுகிறது. எதிர்காலம் முற்றாக இருண்டு விட்டது போல் உணர்கிறீர்கள். மோசமான கனவுகள் மீளமீள வருகின்றன. உங்கள் உள்ளத்தை என்னால் மறுசீரமைக்க முடியும். ஆனால் உங்கள் மகனின் நோய் எனக்குரியதல்ல. சிறுவர் என்புமூட்டு நிபுணரிடம் தான் அதற்குரிய சிக்ச்சை இருக்கிறது’

‘நகரத்தில் மிகவும் பிரபலமான நைற்றிங்கேல் வைத்தியசாலையில் தான் என் மகனுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை ஐந்து சிறுவர் வைத்திய நிபுணர்களும் இரண்டு சிறுவர் மூட்டு நிபுணர்களும் சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.என் மகனுடைய நோயைப்பற்றியும் அவனுக்குச் சாத்தியமான சிகிச்சை முறைகளைப் பற்றியும் அவர்கள் என்னுடன் உரையாடுகிறார்கள். நிறையக் கருவிகளோடு வருகிறார்கள். அடிக்கடி இரத்தம் எடுக்கிறார்கள். ஸ்கேன் பண்ணுகிறார்கள் ஆனால் யாருமே என்னுடன் மனந்திறந்து பேசத்தயாரில்லாமல் இருக்கிறார்கள். என்னுடைய மகனின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கேட்டால் ஒரு மழுப்பும் பதிலைச் சொல்லிவிட்டு விலகி ஓடுகிறார்கள்’ என்று மீண்டும் கண்களைத்துடைத்து கொண்டாள் சீமாட்டி.

நான் அவளுடைய விரல்களைப் பற்றிக் கொண்டே ‘உரையாடுவோம்’ என்றேன்.


2-

நான் உங்களை விரும்புகிறேன் என்பதால் நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்று என் அறைச்சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் வாசகம் தான் நோயாளிகள் வாசித்து என்னை விரும்புவதற்கான  என்தாரகமந்திரம்.

நோயாளிகள் மீது அன்பு கொள்வதென்பது என்னைப் பொறுத்தவரை ஆத்மார்த்தமான காதலைப் போல். அந்த அன்பை அடைவதற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன். காதலைப் போல இரகசிய அர்த்தங்களால் ஒருவரையொருவர் தழுவிக் கொள்கிறோம்.

அந்த அன்பின் சூக்குமத்தை என் பாட்டியிடமிருந்து நான் பிதுரார்ஜிதமாகப் பெற்றுக் கொண்டேன். அவள் குக்கிராமமொன்றில் பிறந்து வளர்ந்தாள். அந்தக் கிராமத்தவர்களுக்கு அவள் தான் ஓரேயொரு வைத்தியர். முரண் நகை என்னவென்றால் அவளுக்கு படிப்பறிவு கிடையாது.

உளுக்கோடும் சுளுக்கோடும் வருபவர்களை வெறும் மண்புழுதியைக் கொண்டு நீவிவிடுவதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். பாலகனைத் தலைகீழாகப் பிடித்து ஊதிப்போயிருக்கும் வயிற்றைப் பிசைந்து தொப்பூள் மீது மூன்று தடவைகள் ஊதிவிடுவாள். அழுது விறைத்தவாறே வந்த குழந்தை கன்னங்களில் குழி விழச்சிரிக்கும். எப்போதுமே அவளுடைய முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும்.

இவற்றையும் விட கிராமமக்கள் அவள் மீது பேரபிமானம் கொண்டிருந்தார்கள். பாட்டி சிரிக்கும்போது பற்கள் எல்லாம் வெளியே தெரியச் சிரிப்பாள். அது மனதின் அடியாழத்திலிருந்து வரக்கூடிய சிரிப்பு. அந்தச் சிரிப்பை குழந்தைகளும் விரும்பின. ஆண்கள் பெண்கள் வயோதிபர்கள் எல்லோரும் ரசித்தார்கள். நான் அவளைப் போல் நடிக்கிறேன் அவ்வளவுதான்.

‘திருமதி சீமாட்டி அவர்களே காலை வணக்கம்’ என்றேன்.

நீங்கள் பதில் சொன்னீர்கள். உங்கள் வீட்டிற்கு நான் வருவேனென்று .நீங்கள் எதிர்பார்க்கவில்லை அல்லவா? அப்படியாக நோயாளிகளின் வீட்டுக்கே போய் பிரச்சினையின் ஆணிவேரை அறிந்து சிகிச்சை அளிக்கும் டாக்டர் என்று என்னை நினைத்துக் கொள்ளுங்கள்.என் பாட்டியைப் போல

வாஸ்தவத்தில் நீங்கள் சீமாட்டிதான் உங்கள் சமையல்பாக முறைகள் உச்சதராதரத்தில் இருக்கின்றன. நீங்கள் அவசரமாகத் தயாரித்துத்தந்த மாங்காய் சட்னி சேர்ந்தCoronation egg mayoசான்ட்விச் மற்றும் சுடச்சுடக் காப்பியையும் நான் வாழ்கையில் ஒருபோதும் மறக்க மாட்டேன். நீங்கள் கைதேர்ந்த சமையற்காரியாகவும் இருக்கிறீர்கள்.

எனினும் உங்கள் வாழ்க்கை குழப்பத்தில் இருக்கிறது அதனாற்றான் ஐசுவரியங்கள் குவிந்து கிடந்தும் உங்கள் வீடு குப்பைமேடாகக் காட்சியளிக்கிறது. சில நகாசு வேலைகள் செய்வதன் மூலமாக இந்த மோசமான கனவுகளுக்கு முடிவுகட்ட முயற்சிக்கிறேன்.

  • நான் அவதானித்த உங்கள் படுக்கையறை சம்பந்தமான குறிப்புகள் வருமாறு:

படுக்கையறை புனிதமான இடமாகும்.உங்கள் படுக்கையறையிலிருந்து ஒருவகையான நாற்ற நெடி வருகிறது. அது ஆகாது. சுத்தம் முக்கியம். படுக்கையறையோடு தொடர்பற்ற தள பாடங்களை வேறிடத்திற்கு மாற்றவும். எப்போதும் படுக்கையறையில் நறுமணம் கமழ்தல் வேண்டும். முற்றத்திலும் ரோஜா மலர்ச் செடிகளை நடவும்.

  • டுசன் தசையழிவு நோய் சம்பந்தமான குறிப்புகள் வருமாறு:

இந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்பதை ஓப்புக்கொள்கிறேன். ஆனால் உங்கள் பையனுக்கு இப்போதிருப்பதையும் விட சிறந்த வாழ்க்கையொன்றைக் கொடுக்கமுடியும். அதற்கு உங்கள் விடாப்பிடியான முயற்சியும் உங்கள் பையனின் ஒத்துழைப்பும் இருக்கவேண்டும். நான் உதவுகிறேன்.


-03-

உங்கள் பையனுடன் நான் உரையாடினேன். அவன் மிகவும் நல்ல பையன் பழகுவதற்கு இனியவன் என்னுடைய நெருங்கிய நண்பனாக இப்போது மாறி இருக்கிறான்.

‘நீ சிங்கத்தை உயிரோடு கண்டிருக்கிறாயா?’ என்று நான் அவனிடம் கேட்டேன்.

‘மிருகக்காட்சிசாலையில் கண்டிருக்கிறேன்’ என்று அவன் பதிலளித்தான்.

‘எப்போதாவது சிங்கம் உன்னைத் தேடி வருமென்று நம்புகிறாயா?’

‘இல்லை’

‘நீ மலைக் குன்றுகளின் மீது ஏறுவதற்கு எண்ணியிருக்கிறாயா?’

‘இல்லை’

‘உன்னுடைய கனவுகளில் நடக்க அசாத்தியமான இந்த இரண்டு விடயங்கள் வருகின்றன. அந்தச் சமாச்சாரங்கள் ஒருபோதுமே நடக்கப்போவதில்லை. ஆகவே நீ அச்சமடைவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை’

‘கனவில் அடிக்கடி சிங்கம் வந்து பயமுறுத்துகிறதே’

‘இனிமேல சிங்கம் வராது. அப்படி மீறி வருமாக இருந்தால் அறிவுரை சொல்கிறேன் கேட்பாயா? நீ மலையேறுபவர்களைப் பார்த்திருக்கிறாயா?’

‘நிறையச் சினிமாப் படங்களில் பார்த்து வியந்திருக்கிறேன்’

‘இனிமேல சிங்கம் வந்தால் அருகில் கயிறு இருப்பதாக நினைத்துக் கொள். அந்தக் கயிற்றை எடுத்து உன்னுடைய இடுப்பில் கட்டிக் கொண்டு மலைக் குன்றிலிருந்து மெல்ல இறங்கிவிடு. உன்னால் அது முடியும். ஏமாற்றமடைந்த சிங்கம் இனிமேல் வரவே மாட்டாது’

‘மிக்க நன்றி’

மேலும் உங்கள் பையன் உறங்கச் செல்லுமுன் அவனுக்கு தேவதைக் கதைகளைச் சொல்லுங்கள். அவன் தேவதைக் கதைகளை மிகவும் விரும்புகிறான். இது சிறுவர்களைக் குஷி ப்படுத்தக்கூடிய மிகவும் பழமையான ஒரு பழக்கவழக்கமாகும்.

என்னிடம் நிறையவே தேவதைக் கதைப்புத்தகங்கள் இருக்கின்றன. அந்தப் புத்தகங்களை நான் உங்கள் மகனிடம் கொடுத்து விடுகிறேன். Cinderella, sleeping beauty, Dumpty Domptyபோன்ற புத்தகங்களும் அதற்குள் இருக்கின்றன.

‘டாக்டர் உங்களால் இரவு நேரங்களில் வர முடியுமா? நான்  தேவதைக் கதைகளை நிலவுக்கு கீழே நிலவைப் பார்த்துக் கொண்டே கேட்க விரும்புகிறேன்’ என்று அவன் கேட்டிருக்கிறான்.நிலவு வானத்தில் இருக்கும் நாட்களில் நான் நிச்சயம் வருவேன். நோயாளியான அவனை குஷிப்படுத்துவது டாக்டரான என்னுடைய கடமையாகும்.

நிலவு நாட்களில் நான் உங்கள் வீட்டிற்கு வருவது உங்கள் பையனை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காகவே அவன் குதூகலிக்கிறான். மகிழ்ச்சியளிக்கக் கூடிய சமாச்சாரம் என்னவென்றால் சிங்கம் துரத்துவதை அவன் தன் கனவுகளில் இப்போது காண்பதில்லை.


-04 –

சீமாட்டி என்னை வெளிப்படையாக் நேசிக்க ஆரம்பித்தாள். சிறுவனின் நோயைப் பற்றி உரையாடும் சாக்கில் அவள் அடிக்கடி என்னைச் சந்திக்க வந்தாள்; தன்னை அதிகமாக அலங்கரித்தாள்; அடிக்கடி புது ஆடைகளை அணிந்தாள்.அவள் டுசன் தசையழிவைப்பற்றி என்னிடம் உரையாடுவதில்லை. என் கண்களையே உற்றுப்பாத்துக் கொண்டிருப்பாள். நான் அவளைத் தவிர்ப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் எடுத்தேன்.

திடீரென்று ‘உங்கள் கண்கள் வசீகரமாக இருக்கின்றன’ என்பாள்.

‘எங்கள் பரம்பரையைச் சேர்ந்த அனைத்து ஆண்களினதும் பெண்களினதும் கண்கள் என்னுடைய கண்களைப் போல்தான் இருக்கும்’ என்றேன்

‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. உங்களுக்கு முன்னால் யார் உட்கார்ந்தாலும் உங்கள் கண்கள் அவர்களைக் இறங்கடித்து விடும்’ என்றாள்.

‘உங்கள் பேச்சிலிருந்து நான் விளங்கிக் கொள்வது நீங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்’

‘நோயை விட்டு விடுங்கள் என்னுடைய ஆடைகளைப் பற்றிச் சொல்லுங்கள். இப்போது மெரூன் வர்ணத்தில் புதிய ஆடைகள் அணிந்திருக்கிறேன் அல்லவா அதைப்பற்றிச் சொல்லுங்கள்’

‘நிச்சயமாக இந்த நிறத்தில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்’

‘நீங்களும் இன்று மெரூன் நிறத்தில் ஷேர்ட்டும் கழுத்துப் பட்டியும் அணிந்திருக்கிறீர்கள். உங்கள் ஆடைகளை நான் மிகவும் விரும்புகிறேன்’

நான் வாய்விட்டுச் சிரித்தேன்.

‘இப்படியெல்லாம் உரையாடுவதில் தவறில்லை. உங்கள் மனப்பாரம் குறையுமாக இருந்தால்’ என்றேன் நான். ‘ஹோட்டலில் இரவு விருந்திற்கு வரமுடியுமா?’என்று ஒருநாள்சீமாட்டி கேட்டாள். நான் ‘எதற்காக?’ என்றேன்.

‘நாளை என்னுடைய பிறந்த நாள் வருகிறது. உங்களுடன் சேர்ந்து அதனைக் கொண்டாட விரும்புகிறேன்’

என்னுடைய அலுவலக மேசையில் சட்டகமிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை நான் அவளிடம் கண்ஜாடை மூலம் காட்டினேன்.

‘இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் நானும் என் மனைவியும். எங்களுடைய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவாகும்’

‘நான் சாதாரணமான இரவு விருந்தொன்றிக்காக தானே கூப்பிட்டேன். இது ஒரு சாதாரண புகைப்படம். ஏன் இரண்டு விஷயங்களுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள்?’ என்று என்னுடைய பதிலை எதிர்பாக்காமல் சிரித்தாள் சீமாட்டி.

‘சகஜமாகப் பேசும் நீங்கள் ஒரு கட்டிளமைப் பெண் போல் நடந்து கொள்கிறீர்கள்’ என்று நான் சொன்னதும் மீண்டும் வாயைச் சுழித்துச் சிரித்தாள் அவள்.

‘எனக்கு இளமை திரும்புவதை நீங்கள் புரிந்து கொண்டால் நான் அதிகம் மகிழ்ச்சியடைவேன்’ என்றாள் சீமாட்டி.

மூன்று மாதங்கள் கழித்து என்னுடைய பிறந்த தினத்தன்று இன்னுமொரு மோசமான சம்பவம் நடந்தது.

பிற்பகல் ஐந்து மணியளவில் வெளியே எனக்காகக் காத்துக் கொண்டிருந்த நோயாளிகளையும் பொருட்படுத்தாது விறுவிறுவென்று உள்ளே நுழைந்த சீமாட்டி, உள்ளே நுழைந்த அதே வேகத்திலேயே ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்றாள். நான் நன்றியென்றேன்.

‘நான் பிறந்த நாள் பரிசொன்று தரப்போகிறேன். உங்கள் இடது கையை நீட்டுங்கள்’ என்றாள். ‘நோயாளிகள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்’ என்றதும் ‘நான் குறுகிய நேரமே எடுத்துக் கொள்வேன்’ என்றாள் சீமாட்டி.

விரைவாக அவளை அங்கிருந்து அனுப்பிவிட வேண்டுமென்று எண்ணிய நான் தயக்கத்துடன் இடது கையை நீட்டினேன். சீமாட்டி சடுதியாக என் மணிக்கட்டிலே தான் கொண்டு வந்த புதிய கைக்கடிகாரத்தை மிகவும் வேகமாகக் கட்டிவிட்டு விறுவிறென்று வெளியே போனாள். நான் திக்குமுக்காடிப் போனேன்.

அடுத்து நிகழ்ந்தது இதனையும் விட மிகமோசமான சம்பவமாக இருந்தது. வெளியில் தெளிவாகப் புலப்படாவிடினும் சீமாட்டி பித்து நிலையில் உள்ளாள் என்பதை உணர்ந்து கொண்ட நாள் அது.

என்னுடைய எச்சரிக்கைகளை அவள் தெளிவாகப் புறக்கணித்தாள். டாக்டர் – நோயாளி உறவென்பது புனித நிலையென்று அவளுக்கு நான் விளக்கினாலும் அத்தருணத்தில் அவள் எங்கேயோ பார்த்தபடி அலட்சிய மனோநிலையில் இருந்தாள். உரையாடல் முடிந்ததும் ‘ஆசைகள் நிரம்பிய என்னுடைய உள்ளத்திற்கு உங்களால் கடிவாளம் இடமுடியுமா?’ என்று கேட்டாள்.

எங்களுக்கிடையேயான இறுதிச்சந்திப்பில் அவள் கொந்தளிக்கும் மனோநிலையில் கானப்பட்டாள். என் அறைக்குள்ளேயே அங்குமிங்கும் அமைதியற்றவளாக நடமாடிய அவளின் முகத்திலே கலவரம் தெரிந்தது. என் முகத்தைப் பார்க்காமலேயே இருந்தாள். எங்கள் இருவருக்குமிடையேயான நெருக்கத்தை நன்கு அறிந்த கிளினிக்கில் பணியாற்றும் தாதியர்களும் உத்தியோகத்தர்களும் செய்வதென்னவென்று அறியாது குழம்பியிருந்தார்கள்.

எனக்கு முன்னாலுள்ள ஆசனத்தில் அமர்ந்த அவள் ‘சென்ற முறை நடந்த சம்பவத்திற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் டாக்டர். அந்தக் கைக்கடிகாரத்தை உங்களுக்கு எப்படியோ தர வேண்டுமென்று நான் நினைத்தேன். ஏனென்றால் உங்கள் மணிக்கட்டில் கைக்கடிகாரம் இல்லாமல் வெறுமையாக இருந்ததை நான் பல  நாட்களாக அவதானித்தேன். அது எனக்கு கவலையைத் தந்தது’ என்றாள்.

‘பரவாயில்லை, அந்த சம்பவத்தை நான் முற்றாக மறந்து விட்டேன்’

‘இன்று ஒரு வேண்டுகோளோடு வந்திருக்கிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் கேள்வி கேட்பதற்கு எதுவுமேயில்லை. ஏனெனில் இது நான் மிகவும் தீர்க்கமாக எடுத்த முடிவாகும்’

‘பீடிகை வேண்டாம் விஷயத்துக்கு வாருங்கள்’

‘நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். கணவன் மனைவியாக நாங்கள் இருவரும் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் வாழ்வோம்’

‘……………………………’

‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். மனைவியை விவாகரத்துச் செய்து விடுங்கள். என்னுடைய சொத்துக்கள் எல்லாவற்றையும் நான் அவளுக்குக் கொடுத்து விடுகிறேன்’ என்றாள் சீமாட்டி.

‘நீ பைத்தியகாரி. இங்கிருந்து வெளியேறி விடு’ என்றேன் நான் கோபத்துடன்.

‘நான் பைத்தியகாரி என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்த திருமண மோதிரத்தை என் விரலில் அணிவித்து விடுங்கள். நான் வெளியேறி விடுகிறேன்’ என்று சொன்ன சீமாட்டி தன்னுடைய கைப்பையைத் திறந்து திருமண மோதிரத்தை வெளியே எடுத்தாள்.


-05-

சிருங்காரி :

என் கூந்தலிலே கருஞ்சிவப்பு ரோஜாப்பூ இருக்கும். எல்லோரும் என்னைச் செல்லமாக சிருங்காரி என்று அழைத்தார்கள். நான் நளினமாக நடப்பவள். இறுமாப்புக்காரி. ஆண்களை என்னுடைய அடிமைகள் என்று இறுமாப்புக் கொள்வேன். பணக்காரக் கனவான்களின் கனவுத் தேவதையாக நான் இருந்தேன். ஆனாலும் திருமண வைபவங்களிலோ பிறந்ததின வைபவங்களிலோ கனவான்களைக் காணும் போது என் மனம் சுருங்கிவிடும். அவர்கள் என்னைத் தெரிந்தவர் போல ஒரு போதும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொள்வர்.

கோடீஸ்வரியான நான் என்னை ஜோடனை செய்வதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டேன். என் தாய் தேடிவைத்த செல்வம் அது செல்வத்தை தந்துவிட்டு என்னையும் அவளைப்போல் ஒருத்தியாக்கிச் சென்று விட்டாள். நானொரு கருஞ்சிவப்பு ரோஜா (scarlet rose)

நாட்செல்லச் செல்ல விரக்தி என்னைச் சூழ்ந்தது. நல்லதொரு வாழ்கைக்காக ஏங்கினேன். என்னுடைய பணிப்பெண் ஒருத்தி சந்தோஷமாக வாழும் நிஜமான வாழ்கை எது என்பதைக் காட்டித்தந்தாள். அவள் ஒருமுறை சுகவீனமுற்ற போது அவளைப் பார்ப்பதற்காகச் அவளது வீட்டிற்கு சென்றிருந்தேன்.

ஒரு படுக்கையறை வரவேற்பறை சமையலறை மட்டுமே கொண்ட சிறிய வீடு அவளுடையது. ஒருசில தளபாடங்கள் இருந்தன. சுவர்களில் இயற்கைக் காட்சிகளும் புகைப்படங்களும் தொங்கின. முற்றத்தில் சிறியதொரு பூந்தோட்டம். இவ்வளவுதான் பணிப்பெண்ணின் வாழிடம்.

முற்றத்தில் பாலர்பாடலொன்றை ராகத்தோடு அபிநயத்துடன் இரட்டைப் பெண்குழந்தைகள் பாடிக்கொண்டிருந்தன. ‘குழந்தைகள் உங்களுடையதா?’ என்று கேட்டேன். காய்ச்சலால் நடுங்கிக் கொண்டிருந்த பணிப்பெண் முறுவலித்தவளாக ‘ஆம்’ என்றாள். அருகிலிருந்தவாறு அவளுடைய கணவன் அவளுக்கு நீராகாரம் ஊட்டிக் கொண்டிருந்தான். ஒரு வெள்ளைப் பூனை காலடியிலே சுற்றிக் கொண்டிருந்தது. எளிய காட்சியோடு  இரண்டு புகைப்படங்களைக் கொண்ட வாழ்க்கையானாலும் மனநிறைவு தரும் வாழ்க்கைக் காட்சிகள்.

‘உன்னுடைய குழந்தைகளின் மழலைக் குரலில் நான் கிறங்கிவிட்டேன்’ என்றேன் நான். ‘நன்றி அம்மணி, அவர்கள் மொண்ரிஸோரிக்குப் போகிறார்கள்’ என்றாள் பணிப்பெண். உள்ளுர் சிற்றுண்டிச் சாலையொன்றில் சமையல் உதவியாளனாக இருக்கும் அவளுடைய கணவன் எனக்காக பழச்சாறு தயாரித்தான்.

‘ஏற்கனவே உனக்கு வருமானம் போதாது. உன் கணவனுக்கும் சொற்ப ஊதியமே கிடைக்கிறது. அதற்குள் மூன்றாவது குழந்தையா?’ என்று உப்பியிருந்த அவளுடைய வயிற்றை ஜாடை காட்டி நான் கேட்டேன். அவள் கர்ப்பிணியாக இருக்கிறாள்.

‘என்ன செய்வது அம்மணி? இளமையுடன் இருக்கும்போதே குடும்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு நான் விரும்புகிறேன். என் கணவரும் அப்படித்தான் விரும்புகிறார். தம்பதியருக்கு வயது போனபின் பிறக்கும் குழந்தைகள் அங்கவீனமாகப் பிறக்கின்றன என்ற ஓர் அச்சமும் எங்களிடம் இருக்கிறது’ என்றாள் பணிபெண்.

பிறகு சில கணங்கள் தாமதித்துவிட்டு ‘அம்மணி நீங்களும் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்றாள். அவள் அந்த வசனத்தைச் சொல்லும்போது என் முகத்தைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்தாள். எனக்குக் கீழ் நீண்டகாலம் பணிப்பெண்ணாக வேலை செய்யும் அவளிற்கு என்னுடைய தொழில் தெரியும்.

என்னைத் தேடிவரும் எந்த ஆணும் என்னை நிச்சயம் திருமணம் செய்யமாட்டார்கள். அவர்களுக்குத் தேவையானது ஆசையைத் தீர்க்கக்கூடிய பிரமிப்பூட்டும் ஓர் ஒற்றைச்சந்திப்பு. எனினும் அபூர்வமான முகச்சாயலைக் கொண்ட அப்பாவிகளாக்வோ ஞானவான்கள் போன்றோ தோற்றமளிக்கும் கனவான்களைக் கண்டவுடன் உள்ளத்திலே நப்பாசை வந்துவிடும். என்னைப்பாத்து உங்களை நான் விரும்புகிறேன் என்று சொல்ல மாட்டார்களா என்று ஏங்கும்.

அந்தக்கனவான்களின் தலையணை மீது என் கூந்தலில் சொருகியிருக்கும் கருஞ்சிவப்பு ரோஜவை வைத்து விட்டு ஒளிந்திருந்து பார்ப்பேன். பூவை கடைக்கண்ணால் கூட பார்க்ககமாட்டார்கள். பூவையே ரசிக்கத் தெரியாத ஜென்மங்கள் அவர்கள்.

ஆடைகளை அணிந்து, தலையையும் வாரிக்கொண்டு கழுத்துப் பட்டியையும் கழுத்திலே மாட்டி படுக்கையறையினுள் இருக்கும் முகம்பார்க்கும் கண்ணாடியிலே கடைசியாக ஒரு தடவை  முகத்தைப் பார்த்தபின் அந்தக் கனவான்கள் குரலில் சுரத்தில்லாமல் அலட்சியமாக எவ்வளவு கட்டணம் என்று கேட்டவுடனேயே மனம் சுக்குநூறாக நொருங்கிவிடும். இதுதான் ஒரு கருஞ்சிவப்பு ரோஜாவின் வாழ்க்கைச் சரிதையில் எழுதப்பட்டுள்ளது என்று என்னை நானே தேற்றிக் கொள்வேன்.

என்றாலும் அடிக்கடி பகல் கனவுகள் வரும். பகலில் தான் நான் தூங்குவேன். பகல்கனவில் எப்போதும் என்னருகில் ஒரு வாலிபன் நடந்து வருவான்; என் விரல்களைப் பற்றிக் கொள்வான். உனக்குப் பக்கத்தில் வரும் இந்த வாலிபன் இன்ன இடத்தில் வாழ்கிறான் என்று ஒரு மனிதர் சொல்லுவார். அடுத்த நாள் அந்த இடத்தைத் தரிசிப்பதற்காகச் சென்றுவிடும் முட்டாள்தனமான பேதையாக நான் இருந்தேன். எல்லா இடங்களிலும் மேனியை விலைபேசும் மணமகனே இருந்தான்.


-06-

என்னுடைய நிஜப்பெயர் சீமாட்டி. என் தந்தையை நான் கண்டதில்லை என் தாய் அவருடைய பெயரை உச்சரிததோடு சரி. என்னுடைய வாழ்கையில் நான் சந்தித்த  ஒரேயொரு நிஜமான ஆண் டாக்டர் ழீ மட்டும்தான். முதற் சந்திப்பிலேயே என்னை ஈர்த்துவிட்ட டாகடர் ழீயிடம் நான் உங்களைத்திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று சொல்ல நினைத்தேன். மேசைமீதிருந்த அவருடைய திருமணப் புகைப்படத்தைக் கண்டவுடன் அந்த நினைப்புக்காக என்னை நானே கடிந்து கொண்டேன். எனினும் என்னுடைய உந்தலைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாட்கள் தவித்தேன்.

டாக்டர் – நோயாளி உறவு நிலை பற்றி அவர் பேசிய வாசகங்கள் எதுவுமே என் காதிற்குள் ஏறவில்லை. வருவது வரட்டும் என்றுதான் இறுதிச்சந்திப்பின் போது திருமண மோதிரமொன்றை வாங்கி என் கைப்பைக்குள் வைத்துக் கொண்டேன். டாக்டர் ழீ என்னை முற்றாக நிராகரித்தார். கடினமான சொற்களால் என்னை ஏசினார். வாழ்க்கையில் முதல் தடவையாக அன்றிரவு தலையணை நனையும் வரை நான் கேவிக்கேவி அழுதேன்.

என் பணிப்பெண்கள் என்னை வியப்புடன் பார்த்தார்கள். அவர்களுக்கு அது புதுஅனுபவம். என்னுடைய கதையை மனந்திறந்து சொல்வதற்கு அங்கு யாருமிருக்கவில்லை. உலக மனிதர்களைப் பொறுத்தவரையில் என் அழுகைக்கு எந்த பெறுமானமும் கிடையாது. அவர்களின் பார்வையில் மாசாலைக்காரியான கணிகை ஒருபோதும் அழமாட்டாள்.

டாக்டர் ழீ மீதான தீராத காதலை வெளிப்படுத்த எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. உளநோய்ச் சிகிச்சை நிபுணர் என்பதற்கப்பால் அவர் சிறந்த மனிதராக இருந்தார். அவருடைய கண்கள் தீட்சண்யம் மிக்கவை. அவருடைய சொற்கள் இனிமையானவை. அவருடைய நடத்தை கண்ணியமானது. நேர்த்தியான ஆடைகளுடனும் ஓவர் கோட்டுடனும் அவர் டாக்டருக்குரிய தோற்றத்தில் இருந்தார். நோயாளிகளுடன் அழகிய முறையில் உரையாடினார்.


-07-

என்னுடைய எண்பதாவது பிறந்த நாளான இன்று நிகழ்ந்த ஒர் அதிசயமான சம்பவத்தைப் பற்றி இப்போது நான் விவரிக்கப்போகிறேன்.

இந்த வயதிலே என்னைத்தேடி யாரும் வந்து எனக்கு வாழ்த்துச் சொல்லப் போவதில்லை; யாரும் தொலைபேசியிலே விசாரிக்கப் போவதுமில்லை. என்னுடைய மலர்ச்சாலைப் பணிப்பாளரைத் தவிர.

அவன் ஒவ்வொரு நாளும் என்னைச் சுகம் விசாரிக்கிறான். அவனிடம் நான் அப்படித்தான் சொல்லி வைத்திருக்கிறேன். என்றைக்காவது என்னிடமிருந்து பதில் வராவிட்டால் என்னுடம்பை அப்படியும் இப்படியும்   அசைத்துப்பார். கட்டிலிலே நான் அசைவற்று பிணமாகக்கிடப்பேன். சவப்பெட்டிக்குள் என்னைப் போட்டு மூடி ஆணிகளால் அறைந்து என்னை எனக்கொதுக்கப்பட்ட இடத்தில் புதைத்துவிடு என்று.

மேலும் சொன்னேன். உன்னால் முடியுமாக இருந்தால் இவள் ராணியாக வாழ்ந்தாள் என்று என் கல்லறை மீது செதுக்கிவிடு என்று. அவ்வாறிருக்கையில் நான் மரணிப்பதற்கு முன்பதாகவே மலர்ச்சாலைப் பணிப்பாளர் இன்று வந்து என் கதவைத்தட்டினான்.

‘ஒரு கிழவர் உங்களைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். முன்பும் இங்கே வந்திருக்கிறாராம். ஞாபகமறதி காரணமாக சரியான இடம் தெரியாமல் உங்கள் வீட்டைத் தேடி அலைந்து கொண்டிருந்தார் கூட்டி வந்திருக்கிறேன்’

அதிசயம் இதுதான். வந்த மனிதர் டாக்டர் ழீ. நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு வந்த மனிதரை எப்படி வரவேற்பது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றேன். உளநோய்ச் சிகிச்சை நிபுணரான டாக்டர் ழீ உடனேயே புரிந்து கொண்டுவிட்டார்.

சகஜமான குரலில் ‘சீமாட்டி, அந்த Coronation Egg Mayo சான்ட்விச்சை கொண்டு வா சாப்பிட ஆசையாயிருக்கிறது. சுடச்சுடக் கோப்பியும் வேண்டும்’ என்றார் டாக்டர் ழீ. நான் வியப்புடன் அவருடைய கண்களைப் பார்தேன்.

‘டாக்டர் ழீ, ஒன்று சொல்வேன். நீங்கள் என்மீது கோபித்துக் கொள்ளக் கூடாது. உங்கள் கண்களிலே இத்தனை வயது கடந்த பின்னரும் இன்று காதல் போதை இருப்பதைக் காண்கிறேன்’ என்று நான் சொன்னதும் டாக்டர் ழீ சிரித்தார்.

‘சீமாட்டி, இப்போதும் அப்படியே இருக்கிறீர்கள். காதல் குறும்பும் கட்டிளம் பெண்ணுக்குரிய மனோநிலையும். நான் உங்களிடம் மறைத்த விஷயங்களை மனந்திறந்து சொல்கிறேன். முதன்முதலில் எப்போது நான் உங்களை சந்தித்தேனோ அப்போதே உங்களை நேசிக்க ஆரம்பித்து விட்டேன். அதனை மறைக்க வேண்டித்தான் உங்களோடு மோசமாக நடந்து கொண்டேன்’ என்று டாக்டர் ழீ சொன்னதும் நான் வியப்புற்றேன்.

‘டாக்டர் ழீ என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் மிகவும் நல்ல மனிதர். நான் அப்படியானவள் அல்லள். நான் மோசமானவள் என்பதை நான் உங்களிடம் முற்றாக மறைத்தேன். என்னைச் செல்லமாக சிருங்காரி என்று கூப்பிடுவார்கள். நானொரு கருஞ்சிவப்பு ரோஜா’

‘அது எனக்கு ஏற்கனவே தெரியும். நோயாளியான உங்கள் பிள்ளையின் கதையும் தெரியும். அந்தத் திருமண மோதிரத்தைக் கொண்டு வாருங்கள்’ என்றார் டாக்டர் ழீ.

நான் திடுக்குற்றவளாக ‘எதைப் பற்றிப் பேசுகிறீர்கள்? அந்த மோதிரத்தை இப்போதும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா? அது என்னிடமில்லை’ என்றேன்.

‘பொய் சொல்ல வேண்டாம். உங்கள் கைப்பைக்குள் அது பத்திரமாக இருக்கிறது’ என்றார் டாக்டர் ழீ.

நான் கைப்பையைத் திறந்து டாக்டர் ழீயிடம் திருமண மோதிரத்தைக் கொடுத்ததும் அவர் என்னுடைய மோதிர விரலை நீட்டச் சொன்னார்.

‘நீ என்னை விட நல்லவள். இந்தத் திருமண மோதிரதிற்கு முற்றிலும் தகுதியானவள் நீ. நீ எனக்காகவே காத்திருந்தாய். நானோ மனைவியுடன் வாழ்ந்து கொண்டே உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன்.


எம் எம் நெளஷாத்

எழுதியவர்

எம் எம் நெளஷாத்
மருத்துவராகப் பணிபுரியும் இவரின் சொர்க்கபுரிச் சங்கதி, பூச்செண்டு போல் ஒரு மனிதன் ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன. சொர்க்கபுரிச் சங்கதி நூலுக்கு 2017இல் இலங்கை அரசின் சாகித்ய விருது கிடைத்தது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x