3 December 2024
now001

1

சின்னச் சின்ன முத்தங்களின் ஸ்பரிசத்தால் குழந்தைகள் குதூகலிக்கின்றன. குழந்தைகளின் முகங்களைத் தொடர்ச்சியாகத் தரிசிக்கின்ற ஒரு விடுதியில் பணியாற்றும் செவிலியானவள் முத்துச் சிப்பிக்குச் சமமானவள் என்றால் நான் முத்துச் சிப்பியாக இருக்கிறேன். முத்துச் சிப்பிக்குள் முத்துப்பரல் இருக்கிறது. இந்த விடுதியில் ஜனிக்கின்ற ஒவ்வொரு பாலகனையும் பாலகியையும் நான் கட்டற்ற அன்புடன் முத்தமிடுகிறேன். குழந்தைகளின் அம்மாக்களை நான் நேசிக்கிறேன் என்ற உள்ளார்ந்த அர்த்தமும் என் குரலில் தொனிக்கிறது. உங்கள் செல்லத்தை ஒரு தடவை முத்தமிட முடியுமா என்று நான் கேட்ட மாத்திரத்திலேயே அவர்கள் சரியென்று தலையசைத்து விடுவார்கள்.

டாக்டர் என்னைப் பதற்றத்துடன் அழைத்து ‘மலர்விழி, அதிக இரத்த அழுத்தத்தோடு வந்திருக்கும் இந்தக் கர்ப்பிணியை உடனடியாகக் கவனியுங்கள்’ என்றார்.

நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் அவளுடைய வயது இருபத்தைந்து. அவளுடைய பெயர், வயது போன்ற விபரங்களைக் கேட்டறிந்து விட்டு, அவளுடைய நோய்ச்சரிதையை ஆராய்ந்து விட்டு, இரத்த அழுத்தத்தை அளந்து விட்டு, அவளின் வயிற்றைப் பரிசோதித்து விட்டு, சிசுவின் துடிப்பையும் கேட்டறிந்து விட்டு டாக்டர் இவ்வாறு தான் கர்ப்பிணியை என்னிடம் ஒப்படைப்பார்.

கர்ப்பமடைந்ததிலிருந்து கர்ப்பிணிகள் சிசுவைப் பிரசவிப்பது வரையுள்ள பராமரிப்பு குறித்து நான் கொண்டிருக்கும் அதீத கரிசனை டாக்டருக்கு அத்துப்படி. பல வருடங்கள் நாங்கள் இருவரும் ஒன்றாகப் பணியாற்றுகிறோம். என்னை அவர் நூறு வீதம் நம்புகிறார்.

என்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற கர்ப்பிணிப் பெண்ணுடன் நான் ஒருசில வார்த்தைகள் நட்புறவுடன் உரையாடுவேன். பிறகு கர்ப்பப்பையில் வளரும் சிசு நன்றாகத் துடிக்கிறதா எனக் கேட்டு விட்டு, சிசுத் துடிப்பானை (fetoscope) அவளுடைய வயிற்றில் வைத்து அழுத்தி சிசுவின் இதயத் துடிப்பு நன்றாக இருக்கிறதா என்று கவனமாகக் காதை வைத்துக் கேட்பேன். இந்த இடத்தில் மருத்துவ மாதுவின் ஒத்துழைப்பை ஒருபோதும் மறக்கமுடியாது.

அடுத்து கர்ப்பிணிப்பெண்ணைப் பார்த்து உங்களின் சிசு கர்ப்பப்பையில் மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருக்கிறது என்ற வாக்கியம்

என்னுடைய வாயிலிருந்து வெளிவரும். அவள் மந்தஹாசத்துடன் புன்னகைப்பாள். அக்கணத்திலிருந்து அவளுடைய குழந்தைப் பேற்றிற்கான சடங்குகளை ஆரம்பிப்பேன். அதாவது பிரசவ அறைக்குள் அவள் பிரசவிக்கும் குழந்தை வீரிட்டழுவது வரைக்கும். குழந்தை வீரிட்டழும் போது பெண்ணின் முகத்தில் பளிச்சென்று தோன்றும் அந்த அற்புதமான புன்னகையை வர்ணிப்பதற்கு வசீகரமான வெண்ணிறம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்கிறேன். நான் இதுவரை சொல்லியது கதையல்ல. நான் அவளுடைய குழந்தையை என்னுடைய கைகளில் ஏந்தியபடி ஆசையோடு முத்தமிடுவேனே ஒரு கணம், அதுதான் கதை.

குழந்தையின் கன்னங்களில் குழிவிழ சிரிப்பதைக் காண்பதற்காக ஆறு வாரங்கள் காத்திருப்பேன். என் மீது நேசம் கொண்டிருக்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்கான பின்தொடர்கை (follow-up) கிளினிக் நடைபெறும் தினங்களில் என்னைச் சந்தித்து உரையாடுவார்கள்.

2

இப்பொழுது விடுதிக்குள் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் தொடர்பில் டாக்டரின் குரலில் இழையோடிய பதற்றம் சில கணங்களில் குபீரென்று என்னிலும் தொற்றிக் கொண்டது. நான் சாமானியமாகக் கேட்ட கேள்விகள் எதற்கும் அவள் விடையளிக்க முடியாமல் தடுமாறினாள் அல்லது பதில்கள் குழம்பிய சொற்கள் கொண்ட பிதற்றலாக இருந்தது.

அவளுக்கு வலிப்பு வரப்போகிறது. சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு உடனடியாக அனுப்பவும் என்றார் டாக்டர். இவ்வசனத்தின் மொழிபெயர்ப்பு என்ன தெரியுமா, நான் அந்தப் பாரதூரமான நிலைமையை விவரிக்கிறேன், கொஞ்சம் தாமதித்தாலும் அவள் செத்து விடுவாள்.

அவளுடைய இரத்த அழுத்தம் உச்சத்தை எட்டியிருப்பதோடு, இரண்டு கால்களும் பொலுபொலுவென்று கணுக்காலைச் சுற்றி வீங்கி இருக்கின்றன. அவ்விடங்களில் பெருவிரலால் அழுத்தும்போது தோல் புதைகிறது. அடுத்த கட்டம் வலிப்பு ஏற்படுவதாகும். அதுவோர் அபாயகரமான நிலைமையாகும் என்பதோடு அவளை மரணத்தின் வாயிலிற்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். கருப்பையில் வளரும் சிசுவும் மரணிக்கச் சாத்தியம் என்பதால் டாக்டரின் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு நான் துரிதகதியில் இயங்கினேன்.

‘வாய்வழியாக சொட்டுச் தண்ணீரோ ஆகாரம் ஒரு கவளமோ கொடுக்க வேண்டாம்’

‘சரி, டாக்டர்’

‘இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான நாளவூடு (Intravenous) ஊசி மருந்தைச் செலுத்தி விட்டீர்களா?’

‘ஆமாம் டாக்டர்’

‘இரத்த வங்கியை அழைத்து இரண்டு பைந்து இரத்தத்திற்கு ஏற்பாடு செய்து விட்டீர்களா?’

‘ஆமாம் டாக்டர்’

‘அவளைக் காவுகட்டிலில் (trolley) ஏற்றிவிட்டீர்களா?’

நான் இதோ இதோ என்று பதிலளித்த அதேசமயம் என்னுடைய அலைபேசி அடித்தது. என் கணவனின் அழைப்பு. இந்த வேளையில் கணவன்  எதற்காக என்னை . அழைக்கிறான்  என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன்.

3

என்னுடைய கணவனுடன் நான் வாழும் பத்து வருட வாழ்க்கை நான் விபரிக்கப் போகும் வார்த்தைகளுக்குள் அடங்காத அடிக்கடி நான் மனக்கிலேசமுறுமளவிற்கு கடினமானது. அதன் அர்த்தம் அவர் மோசமான மனிதர் என்பதல்ல. அவர் என்னை ஆழமாக நேசித்த மிகவும் அருமையான மனிதர். நானும் அவரை ஆழமாக நேசித்தேன். ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கொண்ட அவர் கம்பீரமாகவும் நேர்த்தியாகவும் ஆடை அணிந்து என் தோளைக் கையால் பற்றிக் கொண்டு நடந்து வரும்போது நாங்கள் இருவரும் கச்சிதமான ஜோடியாகத் தோற்றமளிப்போம். சடுதியாக யாரோ என்னை வனாந்தரத்திற்குள் தள்ளி விட்டது போல வாழ்க்கை மாறியது. கட்புலனுக்குத் தோன்றா நோயொன்று எங்களிருவரையும் தொற்றிக் கொண்டிருக்கிறது என்பதே அதற்குரிய வியாக்கியானம். அந்த நோய்க்கு மாத்திரை கிடையாது. எதிர்காலம் குறித்து முதலிரவில் நாங்கள் குஜாலாக உறவாடிய கனவுகள்  கலைந்து கண்களுக்கு முன்னால் இப்போது வெற்றுக் குமிழிகள் மட்டுமே தெரிகின்றன. கொண்டாட்டம் களைகட்டிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிறிய முனையுள்ள குண்டூசி அத்தனை அலங்கார பலூன்களையும் சிலகணங்களில் தகர்த்து விட்டால் என்னுடைய மனோநிலை எப்படியிருக்கும், அப்படியான மனோநிலையில் சிறுவர்களாகிய நாங்கள் இருவரும் இருந்தோம்.

காலை விடிகிறது: பகல் கடக்கிறது: இரவு நிகழ்கிறது. உணர்ச்சிகள் எதுவுமற்ற, அர்த்தங்கள் இல்லாத வெற்றுப் பார்வையால் ஒவ்வொரு நாளும் ஒருவர் முகத்தை ஒருவர் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏதாவது அவர் என்னுடன் பேச மாட்டாரா என்ற ஆதங்கம் தொனிக்கும் பார்வை. அடிக்கடி வெளிச்சம் ஊடுபுகும் சாரளங்கள் மூடப்பட்டு வீடு இருளில் மூழ்கி விடுகிறது. அந்த ஜன்னல்களை நான் திறப்பதா அல்லது அவர் திறப்பதா என்ற விடை தெரியாதது போல் இருவரும் சோபாவில் சாய்ந்து விடுவோம். அல்லது இருளை இருவரும் விரும்பினோம்.

காதலுக்குரிய நாட்கள் எங்கே போய் விட்டன? நான் எனக்குள் சிரித்தேன். கருகருவென்று அடர்த்தியாக வளர்ந்த உங்கள் மீசை மீது ஆசையாக இருக்கிறது என்று நான் சொன்னேன் அல்லவா, அந்த ஆசை எங்கு போய் புதைந்து விட்டது? நீங்கள் கிளுக் என்று சிரித்தீர்கள் அல்லவா, இன்னும் அந்த நினைவுகளை ஞாபகம் வைத்திருப்பீர்கள் அல்லவா? நானே நானில்லாமல் இருக்கையில் என்னைத் தேற்ற வேண்டுமென்ற பிரக்ஞை உங்களுக்கு இல்லையா?

நாட்காட்டியில் ஒவ்வொரு நாள் கிழிக்கப்படும் போதும் குதூகலம் கிழித்து எறியப்படுவதைப்போல் ஏன் உணர்கிறேன்? சரசசல்லாபங்கள் அற்ற தேய்ந்து போன வாழ்க்கையை வாழ்வதைப் போல் ஏன் உணர்கிறேன்?

‘இன்று எங்கள் திருமண நாள்’ என்றார் கணவர் அலைபேசியில். நான் துணுக்குற்றேன். எத்துணை முட்டாள்தனமாக திருமண நாளை மறந்துவிட்டு விடுதியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் ம்ம் என்றேன். எத்துணை அற்பமான பதிலளிப்பு.

என்னை வஞ்சித்த காலம் இன்றைக்கும் எனக்கு அவகாசம் தரப்போவதில்லை. வெள்ளைத் துணியால் வயிற்றுப் பகுதி மூடப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். இனிப் பாதியில் விடுமுறை எடுப்பதற்கில்லை. அபாயகரமான கட்டங்களில் என்னுடைய உதவும் கரங்கள் இல்லாமல் மகப்பேற்று நிபுணர் சத்திரசிகிச்சையை ஆரம்பிக்க மாட்டார். அந்த நம்பிக்கையை வீணாக்க நான் விரும்பவில்லை. உபகரணங்களை நேர்த்தியாகக் கையாளும் என்னுடைய விரல்களின் லாவகம் அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. மலர்விழி என்ற பெயரை அடிக்கடி அவர் உச்சரிப்பார். மகப்பேற்று விடுதியின் பிரதான செவிலியராக நான் ஐந்து வருடங்களாக இருக்கிறேன்.

 

4

மகப்பேற்று நிபுணர் கர்ப்பிணியின் அடிவயிற்றைக் கீறி, கருப்பைச் சுவரைப் பிளந்து, தனது வலது கையை நுழைத்து சிசுவை வெளியே எடுத்தார். அடுத்து சிசு வீரிட்டழும் அந்த வியத்தகு தருணத்திற்காக காத்திருந்தேன். சிசு வீரிட்டழுதது. வீரிட்டழும் குழந்தையை நாங்கள் மனதளவில் நேசிக்கிறோம். இந்தத் தருணங்களின் குதூகலிப்பை நான் வெளிப்படுத்தாவிட்டாலும் உள்ளத்தில் இனம்புரியாத சிலிர்ப்பு எங்கிருந்தோ இறங்கி விடுகிறது.

மகப்பேற்று நிபுணர் விரல்களால் வெற்றிச் சைகையைக் காட்டினார். அருகில் இருந்த நான் குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் இன்னுமொரு வியத்தகு தருணம் என்னைச் சூழ்ந்து கொண்டது. அச்சொட்டாக அது நானாக இருந்தேன். தட்டையான மூக்கு, பருத்த செவிச்சோணைகள், பிரகாசம் பொருந்திய கருவிழிகள், தடித்ததும் அகன்றதுமான உதடுகள் என்ற என்னுடைய இலட்சணங்கள் அனைத்தும் குழந்தையோடு பொருந்தியதும் காலத்தின் ஞாபகச் சிடுக்குகளிற்குள் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். எங்களுடைய குடும்ப அல்பத்திற்குள் என்னுடைய குழந்தைப் பராய புகைப்படம் ஒன்று இருந்தது.

அந்தக் குழந்தையின் கன்னங்களில் குழிவிழுந்தது. கூந்தல் அடர்த்தியாகவும் சுருண்டும் இருந்தது. முகத்தில் அப்பாவித்தனம் தொனித்தது. நெற்றி பிறைவடிவத்தில் தோற்றியது. என்னுடைய குழந்தைப் பராய புகைப்படத்தைக் கண்டுவிட்ட என் கணவர் என் குழந்தை அச்சொட்டாக உன்னைப் போன்ற ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்.

‘பெண் குழந்தை மீது இத்தனை பித்துபிடித்தவரா நீங்கள்?’ என்று நான் வியப்புடன் கேட்க அவர் ஆமென்று தலையாட்டினார். நான் புளகாங்கிதமடைந்தேன்.

‘ஏன் பெண் குழந்தையை விரும்புகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன்.

‘கத்தரிப்பூ நிறத்தில் ரிபன் கூந்தலிலே கட்டி இரட்டை ஜடை வைத்திருந்த சகோதரி ஒருத்தி எனக்கிருந்தாள். என்னோடு கூடப் பிறந்த இரட்டைச் சகோதரியான அவள் ஒரு தேவதையாக இருந்தாள். எவ்வாறென்றால் அவளுடைய இதயம் முழுவதும் கனவுகளால் நிரம்பியிருக்கிறதோ என்று நான் அதிசயிக்கும் அளவிற்கு அவள் சதாவும் மாயாஜாலக் கனவுகள் குறித்து பேசிக் கொண்டிருப்பாள். நான் அவள் மீது அதீத அன்பு கொண்டிருந்தேன். ஓர்க்கிட் மலர்ச்செடிகள் நிறைந்த பூந்தோட்டம் ஒன்றில் நாங்கள் விளையாடுவோம். அவளைப் பற்றிய சித்திரம் என்னுடைய உள்மனதில் புதைந்திருக்கிறது. நீ பெற்றுத் தரக்கூடிய குழந்தையில் என் சகோதரியைக் காண விரும்புகிறேன்’ என்றார் கணவர்.

‘உங்களுடைய இரட்டைச் சகோதரியை நான் சந்திப்பதற்கு ஆசைப்படுகிறேன்’

‘ சின்ன வயதிலேயே அவள் டெங்கு காய்ச்சல் வந்து இறந்து போய்விட்டாள்’ என்று சொன்ன கணவர் அவளுடைய புகைப்படத்தை என்னிடம் காட்டினார். கணவர் ஆசைப்பட்டதில் தப்பேயில்லை புகைப்படத்தில் இருந்த அவள் அசல் மலர்விழி ஆகவேயிருந்தாள். பெண் பிள்ளைகள் எப்போதும் தங்களைக் கனவுகளால் நிரப்பி இருப்பவர்களும் தங்கள் கூந்தலில் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் ரிபன்கள் சூடி இருப்பவர்களும் ஆவார்கள். எனினும் என்னில் தப்பிருந்தது. திருமணம் செய்து ஒரு வருடம் கடந்த பின்னரும் நான் கர்ப்பம் தரிக்கவில்லை.

 நான் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்புவேன். ஏதோ செய்தியைத் தரப் போகிறேன் என்று கணவர் என் முகத்தையே உற்றுப் பார்ப்பார். நான் கர்ப்பம் தரித்துள்ளேன், urine HCG positive என்ற செய்தியை நான் சொல்ல மாட்டேனா என்று தொக்கி நிற்கும் அவருடைய கண்களில் தெரிந்த ஏக்கம் என் மனதைப் பிசைந்தது. அல்லது ஒருநா‌ளின் வாழ்க்கையில் கணிசமான நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளுடனான என்னுடைய பணி கர்ப்பமடையாமைக்குக் காரணமாக இருக்குமோ என்ற குற்ற உணர்வு என்னைப் பீடித்து ஆட்டியது.

‘திறமையான மகப்பேற்று நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை பெறுவோம்’ என்றேன் நான்.

‘நீங்கள் அலட்டிக்கொள்ள வேண்டாம். திருமணம் செய்தோம், அடுத்தது எங்களுக்கு குழந்தை வேண்டுமென்பது சாதாரண எதிர்பார்ப்பாகும். உங்களுக்கும் அது விளங்கும். அதற்காக எங்களை நாங்களே வருத்திக்கொள்ள வேண்டியதில்லை’ என்றார் கணவர். என்றாலும் அவரை நான் வற்புறுத்தி அழைத்துச் சென்றேன்.

தினசரி இவ்வாறு தமக்கென்று சொந்தமான குழந்தை ஒன்றிற்காக கிளினிக் வரும் இளம்பெண்கள் பலரை நான் சந்தித்திருப்பதால் இவ்வாறான சந்திப்பு எனக்கு ஆச்சரியமானது அல்ல என்றாலும் பெண்ணிற்கே உரித்தான பதற்றம் என்னையும் பற்றிக் கொண்டது.

அதிர்ஷ்டவசமாக, மகப்பேற்று நிபுணர் நேயத்துடன் மனிதர்களோடு உறவாடும் ஒரு மனிதர் என்பதால் திகிலூட்டும் வசனங்களைப் பேசி என்னையும் கணவரையும் திடுக்குறச் செய்யாமல் நீங்கள் இருவரும் குழந்தை ஒன்றை உருவாக்குவதற்கு முற்றிலும் தகுதி உடையவர்களாக இருக்கிறீர்கள் என்று மிகவும் எளிய மொழியில் கூறினார். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வெற்றி அடைவீர்கள் என்றும் கூறி கைகளைக் குலுக்கினார்.

5

நான் திடுக்குற்றவளாக அவளைப் பார்க்கிறேன். சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவளின் ஆரோக்கிய நிலைமை சடுதியாக மோசமடைகிறது. காட்டிகளின் அனேகமான இடங்களில் சிவப்பு அருட்டல் அடையாளங்கள் தென்படுகின்றன. உள்ளக வைத்தியர், மகப்பேற்று நிபுணர், கனிஷ்ட செவிலியர் உட்பட நாங்கள் நோயாளியைத் சூழ்ந்து கொள்கிறோம். ‘இவளின் கருப்பை தளர்ச்சி அடைந்திருப்பதால் கட்டுப்படுத்த முடியாத இரத்தப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது’ என்று நிபுணர் என்னிடம் கவலை தோய்ந்த குரலில் கூறுகிறார்.

இந்த வேளைகளில் நான் பரபரப்புடன் இயங்க வேண்டும். இரத்த வங்கிக்கு அறிவிக்க வேண்டும். நோயாளிக்கு இரத்தம் பாய்ச்சுவதற்காக கனிஷ்ட செவிலியருக்கு கட்டளை பிறப்பிக்க வேண்டும். இன்னும் இரண்டு நாளவூடு Intravenous செலுத்திகளை உட்புகுத்துவதற்காக உள்ளக வைத்தியருக்கு உதவ வேண்டும். சற்று அலட்சியமாக இருந்து விட்டேன் என்றால் கர்ப்பிணிப் பெண் மிகவும் இலகுவாக மரணத்தை முத்தமிடுவாள்.

‘எல்லாம் ஆகி விட்டதா?’ என்று டாக்டர் கேட்டார். நான் ‘ஆம்’ என்றேன். ஒட்சிசன் உருளையைத் தள்ளிக்கொண்டு வந்த சிற்றூழியன் அதனைக் கட்டிலின் அருகில் வைத்தான். எந்த வேளையிலும் அது தேவைப்படலாம். விடுதிக்கு வெளியே காத்திருக்கும் அவளுடைய கணவனுக்கும் ஓர் அவகாசம் எடுத்து அவள் அபாயமான நிலையில் இருப்பதைச் சொல்ல வேண்டும். சஞ்சலத்தால் மூழ்கிப்போன அவளுடைய கணவனின் முகமும் என் உள்மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.

நாடித்துடிப்பை பரிசோதித்தேன். என்னுடைய விரல்களால் உணரமுடியாதவாறு அது பலவீனமாக இருந்தது. இரத்த அழுத்தம் பதிவு செய்யுமளவிற்கு இல்லை. கீழ்க் கண்ணிமையின் உட்பகுதி வெள்ளை வெளேரென்று இருக்கின்றது. பாதங்கள் குளிர்ந்து விட்டன. அதாவது அவள் இறந்து கொண்டிருக்கிறாள்.

‘இன்னுமொரு பைந்து இரத்தம் பாய்ச்சுவோம்’ என்றார் டாக்டர். மீண்டும் இன்னுமொரு பைந்து. மீண்டும் இன்னுமொரு பைந்து என்று நாங்கள் தொடர்ந்து கொண்டிருந்தோம். நாங்கள் மாறி மாறி முகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கேள்விகளும் இல்லாத விடைகளும் இல்லாத தருணங்கள் இவை.

நாங்கள் அவளை இழந்து கொண்டிருக்கிறோமா என்ற பாவனை விழிகளில் தொக்கி நிற்க என்னைப் பார்த்தார் மகப்பேற்று நிபுணர். என் விழிகளிலும் அதுவே தொக்கியது. மீண்டும் மீண்டும் பைந்துகளாக இரத்தத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்த தருணங்களில் அந்த ஐயமே எங்கள் விழிகளில் தொக்கியது.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள இதே கட்டிலில் கடந்த வருடம் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மரணித்தாள். அன்றைய தினம் அவளுக்கருகில் இருந்து அவள் மரணிப்பதை கையறு நிலையில் பார்த்துக் கொண்டு இருந்தவளும் நான் தான். கணவனுக்கென்றும் பிள்ளைகளுக்கென்றும் நிறைய சமாச்சாரங்கள் தேக்கி வைத்திருந்ததை அவளுடைய விழிகளிலே அன்று நான் கண்டேன். சுற்றி வர நவீன மருத்துவக் கருவிகள் சூழ்ந்திருக்க இப்போது ஆறாவது பைந்துடன் இவள் போராடிக் கொண்டிருக்கிறாள்.

நோயாளி இறுதிமூச்சை விடுகையில் அதிநவீனமான இந்தக் கருவிகள் என்னைப் பார்த்து சிரிப்பது போல் பணியில் இருக்கும்போது உணர்ந்திருக்கிறேன். அல்லது அர்த்தமேயில்லாத அவைகளின் இருப்பையும், இலத்திரனியல் தன்மையையும் ஒரு வேடிக்கையே என்று நான் அறைகூவுவேன். ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நாங்கள் அர்த்தமற்ற மனிதர்கள் அல்லர். நோயாளி மரணிக்கையில் எங்கள் அடிமனதில் சிறுதுயர் கவிந்தே இருக்கும். அடுத்த நோயாளி எங்களை எதிர்பார்த்திருப்பதால் கண்ணாடியில் படிந்த பனியைத் துடைப்பது போல் அத்துயரை இலகுவாகத் துடைத்துக் கடந்து விடுவோம்.

இன்றைய நாளிற்குரிய கடமையை முடித்து விட்டுச் செல்லுகையில் என்னருகில் வந்த மகப்பேற்று நிபுணர் ‘கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்’ என்றார். இவ்விரு சொற்களும் சொல்லும் சமாச்சாரம் தெளிவானது. இரத்தம், ஒட்சிசன், ஊசிமருந்து அல்லது எதுவுமே அர்த்தபூர்வமாக அவளுக்கு உதவாததால் எந்த வேளையிலும் அவள் மூச்சை நிறுத்தலாம்.

 

6

வீட்டிற்குள் நுழைந்த வேளையில் தான் இன்று திருமண நாள் என்பதும் கணவரின் அலைபேசி அழைப்பும் ஞாபகம் வந்தது. சோபாவில் தூங்கியவாறு எனக்காகக் காத்திருந்த அவர் திடுக்குற்றவராக எழுந்தார். பூச்சாடி நடுவில் வைக்கப்பட்ட சாப்பாட்டு மேசையில் இரவுணவு இருந்தது. திருமண நாளைக் கொண்டாடுவது என்பதைவிடவும் விரைவாக வா, இரவுணவைத் துரிதமாக முடித்துவிடுவோம் என்ற பாவனையில் கணவர் சாப்பாட்டு மேசையோடு ஒட்டியவாறு என்னை எதிர்பார்த்து நின்றார்.

திருமணம் செய்வதற்கு முந்திய சந்திப்புகளில் என் கூந்தலில் அற்புதமான மல்லிகைப்பூ வாசனை வீசுவதாக என் கணவர் என்னைச் சிலாகிப்பார். அற்புதமான என்ற சொல்லை அவர் அழுத்திக் கூறுகையில் மனசு பெருமிதமடையும். திருமணம் முடிந்த நாட்களில் என் கூந்தலில் ஆஸ்பத்திரி வாசனை வீசுவதாக மெல்லிய கிண்டலுடன் அவர் கூறுவார். அவருடைய முகத்தசைகளில் வழமையாக பளிச்சென்று புலப்படும் மலர்ச்சியை என்னால் காண முடியாதாகையால் இவ்வசனங்களை என்னுடைய கணவர் மனசைச் சுழித்தவாறு கூறுவதாக நான் ஊகித்துக் கொண்டேன்.

இப்பொழுது கூந்தலில் வாசனை பற்றிய குறிப்புகளை அவர் உச்சரிப்பதில்லை. உண்மையில் அவர் இப்போது என்னோடு பெரிதாக அளவளாவுவதில்லை. இப்படியும் நினைத்துக்கொண்டேன். பொரித்த கருவாட்டை நான் விரும்பி உண்கிறேன் ஆகவே என்னுடைய கூந்தலில் கருவாட்டு வாசனை வீசுகிறதோ, என்னவோ?

அவசரமாகக் குளித்தபின் நான் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொண்டேன். நான் அவரைப் பார்த்து புன்னகைத்தேன். அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தார். அருகிலிருந்த ஹோட்டலில் இருந்து அவர் இரவுணவைத் தருவித்திருந்தார். நாசீகூரா எனப்படும் இந்தோனேஷியாவின் சமையல் பாகம். எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. இன்னமும் என்னை என் கணவர் மறக்காமல் இருக்கிறார் என்பதற்கு இது சாட்சியாகும் என்று என்னைத் தேற்றிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன்.

திருமண நாள் ஒவ்வொன்றிலும் இப்படியான சடங்கு நடக்கிறது. நான் கொண்டு வந்த சமையல் பாகம் உனக்குப் பிடித்திருக்கிறதா என்று கணவர் கேட்பார். வேகமாக முந்திக்கொண்டு நான் ஆம் என்பேன். அவர் மகிழ்ச்சி அடைவது போல் நடிப்பார். ஆகாரத்தை ரசித்து ரசித்து உண்ணுவது போல் நாங்கள் பாவனை செய்து கொள்வோம். அதற்கடுத்து பழப்பாகுக் கலவை. கைகளைக் கழுவியபின் அவர் சொல்லப்போகும் வார்த்தைகளை நான் அறிவேன். நான் உன்னை நேசிக்கிறேன். கிணற்றுக்குள் இருந்து வருவது போல் அது இருக்கும். என்னுடைய பதிலும் கிணற்றுக்குள் இருந்து வருவது போல் இருக்கும். நானும்தான்.

சுவாசிப்பதைப் போலவும், ஆடைகளைக் களைந்து அணிவதைப் போலவும், பூங்கன்றுகளுக்கு நீரைப் பாய்ச்சுவதைப் போலவும் முகத்தைப் பார்க்காமல் முயங்குவதைப் போலவும் எத்துணை விந்தையானது என் வாழ்க்கை¡

7

குழந்தைகள் ஜனிக்கும் இடத்தில் ஆச்சரியம் காத்திருக்கும். அதனால் தான் குழந்தைகள் ஜனிக்கும் இந்த இடத்தில் வாழும் என்னை முத்துச் சிப்பி என்று அழைத்துக் கொள்கிறேன். காலையில் ஒரு மரணச் செய்தியை எதிர்பார்த்து விடுதிக்குள் நுழைந்த போது கர்ப்பிணிப் பெண் விகசிப்புடன் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். இது நிச்சயமாக ஆச்சரியம் தான். அவள் சாதாரண தாயாக கட்டிலில் படுத்துக் கிடந்தாள். யாருடையதோ பிரார்த்தனை அவளைக் காப்பாற்றி இருக்கிறது. சின்னச் சின்ன முத்தங்களால் குதூகலிக்கும் என்னுடைய பிரார்த்தனையாகக் கூட இருக்கலாம்.

அவளுடைய குழந்தையை ஆசைதீர முத்தமிடுவதை வியப்புடன் பார்த்துக் கொண்டே ‘உங்களை எனக்கு நன்றாகப் பிடித்து விட்டது’ என்றாள் அவள். ‘உங்களைப் பராமரிப்பது என்னுடைய கடமை’ என்றேன் நான்.

‘உங்கள் கடமையைச் சொல்லவில்லை. நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பதைச் சொல்கிறேன். உங்கள் கணவனையும் பிள்ளைகளையும் பார்க்க வேண்டும். அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும்’

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை நோயாளிக்குரிய கடமையோடு சேர்த்து நான் குழப்பிக் கொள்வதில்லை என்று நான் அவளுக்கு விளங்கப்படுத்தினேன். எனினும் அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே பிறிதொரு தினத்தில் என்னுடைய சரிதையை இப்படி ஆரம்பித்தேன். ‘என்னுடைய கணவர் என்னுடன் பெரிதாகப் பேசுவதில்லை’

‘அடக் கடவுளே’ என்றாள் அவள்.

குழந்தை இல்லாமல் இருந்த நான் எதிர்பாராத விதமாக ஒருநாள் கர்ப்பமடைந்தேன். HCG positive என்றதும் என்னுடைய கணவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். நல்ல சகுனமொன்று வானத்திலிருந்து என் தலைமீது இறங்கியது போல் எல்லாச் சுபகாரியங்களும் என்னைச் சுற்றி நடக்க ஆரம்பித்தன. ஸ்கேனில் கருப்பையில் வளரும் சிசு பெண் என்று தெரியவந்ததும் என் கணவர் சிசுவுக்கு சூஸி என்று பெயரும் சூடினார்.

கனவிற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட ஓர் இரவில் நான் தனியாக நடந்தேன். களிமண்ணால் கட்டப்பட்டிருக்கும் வரிச்சு வீடுகளைக் கொண்ட ஒரு கிராமத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன். சூஸி என்ற என் குழந்தையை அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள். குழந்தை என் கருப்பைக்குள் இருக்கிறது என்று நான் சொல்கிறேன். ஒரு குழந்தையின் அழுகுரல் எங்கேயோ கேட்கிறது. கிராமவாசிகள் என்னைச் சூழ்ந்து கொள்கிறார்கள். எனக்கு மூச்சு திணறுகிறது. காற்றோட்டம் இல்லை, விலகுங்கள் என்று நான் அலறுகிறேன். என் வாயிலிருந்து பேச்சு வரவில்லை. வியர்க்கிறது.

கனவின் இரண்டாம் கட்டத்தில் என் தலைக்குள் குடைச்சலைத் தரக்கூடிய மரணவேதனை என்னைத் தாக்குகிறது. நான் பிரசவ வேதனையால் துடிக்கும் காட்சியை நானே என் கண்களால் கண்டு திடுக்குற்றவளாக எழுகிறேன். நான் ஆஸ்பத்திரிக் கட்டிலில் இருந்து பிதற்றுகிறேன். என்னைச் சூழ்ந்தபடி மகப்பேற்று நிபுணர், செவிலியர், வைத்தியர்கள் எல்லோரும் நிற்கிறார்கள்.

‘மன்னிக்கவும் மலர்விழி, உங்கள் இரத்த அழுத்தம் உச்சத்தில் எகிறி இருக்கிறது. உடனடியாக சிசேரியன் செய்யவேண்டும்’ என்று மகப்பேற்று நிபுணர் சொல்லுகிறார். இன்னும் ஏதோவெல்லாம் பேசுகிறார். என் காதுகளில் எதுவுமே ஏறவில்லை, ஏனெனில் நான் மயங்கிக் கொண்டிருந்தேன்.

‘மிஸ், நீங்கள் என்னுடைய கதையை அல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?’

‘ நிச்சயமாக, உனக்கு நிகழ்ந்தவை தான் எனக்கு நிகழ்ந்தவையும். நான் சொல்லுவதில் சுவாரஷ்யமான கதையின் வாடையே இல்லை என்பதை நான் அறிவேன். எனவே சுருக்கமாக முடித்து விடுகிறேன். குழந்தை பிறந்த பிற்பாடு எனக்கும் உங்களைப் போலவே இரத்தப்பெருக்கு ஏற்பட்டது. நானும் மரணவாசலுக்குச் சென்று திரும்பி வந்தேன். ஒரேயொரு வித்தியாசம், என்னுடைய குழந்தை குறைப்பிரசவமாகப் பிறந்து ஒருசில மணித்தியாலங்களிலேயே இறந்துவிட்டது’

‘கவலைப்படாதீர்கள் மிஸ். உங்களின் அடுத்த குழந்தை எனக்குப் பிறந்ததைப் போல் கொழுகொழுவென்ற குழந்தையாக இருக்கும்’

ஆமாம் என் கணவரும் அதைத்தான் எதிர்பார்த்து என்னைப் பார்க்க ஓடோடி வந்தார். எனக்கு ஏற்பட்ட இரத்தப்பெருக்கை கட்டுப்படுத்த முடியாமல் என்னுடைய கருப்பையை மகப்பேற்று நிபுணர் அகற்றி விட்டார் என்று அறிந்தவுடன் திக்பிரமை பிடித்தவராக நெடுநேரம் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அன்று என்னோடு பேசுவதை நிறுத்தியவர் தான் இன்றும் பேசுவதில்லை.

எழுதியவர்

எம் எம் நெளஷாத்
மருத்துவராகப் பணிபுரியும் இவரின் சொர்க்கபுரிச் சங்கதி, பூச்செண்டு போல் ஒரு மனிதன் ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன. சொர்க்கபுரிச் சங்கதி நூலுக்கு 2017இல் இலங்கை அரசின் சாகித்ய விருது கிடைத்தது.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
சுகன்யா ஞானசூரி

யூகிக்க முடியாத திருப்பம் கதையின் வெற்றி. மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நிலையை அந்தச் செவிலியின் துயரை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது. வாழ்த்துக்கள் நெளசத் தோழருக்கும், கலகம் இதழாசிரியருக்கும்.

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x