18 July 2024

ன்று தான் அந்த துளிர், இரு இலைகளால் மண்ணில் கை பரப்பி வெளி உலகிற்குள் எட்டிப் பார்த்தது. வெறிச்சோடிய சாலையில் தூரத்தில் இருந்து ஓங்காரம் இட்டபடி ஒரு லாரி புழுதி கிளப்பிக் கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தது. சாலையின் நடுவிலே சில நிமிடங்கள் முன்னால் கடந்து சென்ற ஓர் பி. எம். டபிள்யூ காரில் இருந்து கசக்கித் தூக்கி எறியப் பட்ட பக்கோடா காகிதம் மிதந்து வந்து அந்த சிறு துளிருக்கு அருகில் விழுந்தது. அதன் கசங்கிய பக்கங்கள் கை ரேகையின் சூடு தணிய மெல்ல தன் சுருக்கங்களை நேர் செய்து கொண்டன.

புரை விழுந்த கண்ணின் மங்கலான பார்வை கொண்டு, புருவங்களை சுருக்கி நோக்கும் வயோதிகக் கிழவி போல, சுருங்கி விரியும் கசங்கிய காகிதத்தின் சிறு ஓட்டை விழியாக சாலையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது அந்த துளிர் செடி. காலைப் பனியின் முதல் மொட்டு அதன் இலையில் இருந்து வழிந்து மண்ணில் தெரித்தது. அந்த சொட்டு நீர் பட்ட இடத்தில் மட்டும் மண் குழி ஏற்படவே, அந்த பள்ளத் தாக்கில் இறங்கி ஏறிச் சென்றது ஓர் எறும்பு.

காலை சிற்றுண்டியை சிறிது மயில் தூரம் நடந்து சென்று எடுத்து வர ஆயத்தமான அந்த எறும்பு மனித அளவீட்டில் ஒரு சில அடிகள் கடந்து செல்லவே பெருமூச்சு விட்டது. பி. எம். டபிள்யு காரில் இருந்த டிரைவர் தூக்கி எறிந்த பக்கோடா காகிதத்திற்குள் நுழைந்து மீதமிருந்த துண்டுகளை உருட்டி முதுகில் சுமந்து கொண்டு பயணப் படும் போது தான் இந்த நீர் குழி பள்ளத் தாக்கினை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

அந்த எறும்பு சுமந்து சென்ற சிற்றுண்டியை சாலையின் நடுவே உள்ள டிவைடரின் அடியில் அது ஏற்படுத்தி வைத்திருந்த குழிக்குள் இழுந்துச் சென்று மறைந்து விட்டது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த துளிர், தன் கவனத்தை மீண்டும் சாலையின் பக்கம் திருப்பியது. சில காத தூரத்தில் சூரியனால் வறுத்து எடுக்கப் பட்ட பொறிந்த தோல் மற்றும் உழைப்பால் உருகிய தசையுடன் ஒரு சிலர் நடந்து வந்து கொண்டிருந்தனர். காலில் ரப்பர் செருப்பும், அங்கங்களை மறைக்க சேலை அணிந்து அதன் மேல் ஓட்டைகளை மறைக்க ரிஃப்ளக்டிவ் ஜாக்கெட் அணிந்து கொண்டு சில பெண்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். லுங்கியும், மேல் சட்டையும் அணிந்து, அதே போன்ற அழுக்குப் படிந்த ஜாக்கெட்டுகளை அணிந்து வந்த ஆண்களையும் நம் துளிர் கவனித்துக் கொண்டிருந்தது. அவர்கள் கூட்டமாக தன் இருப்பிடத்தை நோக்கித் தான் நடந்து வருகிறார்கள் என்று அதற்கு புரிந்தது.

அந்த கூட்டத்தில் ஐந்து வயது நிறைவடைந்த தன் மகனுடன் நடந்து வந்து கொண்டிருந்த ஒரே பெண் நாகம்மாள் தான். மற்றவர்கள் அனைவரும் அவர்களது பிள்ளைகளை பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி விட்டனர். இவள் மட்டும் ஏன் மகனுடன் அந்த இடத்திற்கு வருகிறாள்?

நாகம்மாளின் முன் கதை..

நாகம்மாள் அரக்கோணத்தை அடுத்த சோளிங்கர் பகுதியில் மல்லிகை தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறாள். ஏரிக் கரையோரம் இருந்த புறம்போக்கு நிலத்தை இழந்த நாள் முதல், அவளும், அவளது கணவரும் சேர்ந்து அந்த கூலி வேலைக்கு போய் வருவார்கள்.  மல்லிகை செடி பதியம் எடுத்து, ஐந்து அடி தூரத்தில் நட்டு வைப்பார்கள். அவற்றிற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் ஊற்றி வருவார்கள். வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு சேர்த்து, சுருட்டை விழுந்தால் அதற்கு ரசாயனம் தெளிக்கும் பணியையும் செய்வார்கள்.  இடையில் வரும் களை செடிகளை எடுப்பது, பூ மலர்ந்தால் அதனை சேகரித்து ரயில் ஏறி சந்தையில் கொண்டு போய் விற்பனைக்கு சேர்ப்பது வரை இவர்கள் கூட்டமாக ஒரு கிராமத்தில் இருந்து சென்று குடும்பமாக பணி செய்துவிட்டு பேனர் குடிசைக்கு திரும்புவார்கள்.

இவர்களின் இந்த பனி மூட்டமான வாழ்க்கையில், உழைப்பதையும், உண்பதையும் தவிர வேறு உருப்படியான எந்த சுவாரசியமும் இருக்காது. இசை, பாட்டு, நடனம், கதை வாசிப்பது, எழுதுவது என்று ஏதேனும் பொழுதுபோக்கு உள்ளதா என்றால், ‘ஆ..’ என்று இழுவையாக ஆதிப் பழங்குடிகள் விழிப்பது போல யோசிப்பார்கள். இந்த லட்சணத்தில், இவர்கள் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்கவா போகிறார்கள்? மூக்குச் சளியுடன், தலை முறை தலை முறையாக குடும்பச் சொத்தாக விளங்கும் ட்ரௌசர்களை மாட்டிக் கொண்டு, அதில் பெயருக்கு சேஃப்டி பின் முடுக்கிய படி பரட்டை தலையுடன் சுற்றிக் கொண்டிருப்பார்கள் அந்த சிறுவர்கள். படிப்பு என்பதே அவர்களுக்கு விளையாட்டின் ஒரு பகுதி தான்.

எல்லா பிள்ளைகளும் ஒழுங்காக பள்ளிக் கூடத்திற்கு சென்று வந்த பிறகு மற்ற பிள்ளைகளுடன் விளையாடச் சென்று விடுவதால் அவர்களை பெரிதாக கவனிக்க வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு இருக்காது. ஆனால், நாகம்மாளுக்கு மட்டும் ஒரு வினோதமான பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அவளுடைய பிள்ளையை எப்போதும் கூடவே கூட்டிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.

ஒரு நாய் பத்து குட்டி போட்டால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சேட்டை விளையாட்டுகளில் ஈடுபட்டு, அம்மாவின் மேல் ஏறிப் புரளும். அதை பொருட்படுத்தாமல் அம்மா நாய், அமைதியாக அமர்ந்திருக்கும். என்றோ ஒரு நாள் பால் குடிக்கும் போது காம்பை கடித்து விட்டாலோ, அதிகமாக சேட்டை செய்தாலோ, அந்த குட்டியை தாய் நாய் மண்ணில் போட்டு புரட்டி எடுத்து விடும். அது போலத் தான் அவன் செய்த ஒரு சேட்டையை பொறுக்க முடியாமல் நாகம்மாள் தன் மகனை பள்ளிக் கூடத்தில் இருந்து நிறுத்தி விட்டாள். அப்படி என்ன செய்து விட்டான் அவன்?

அரைஞாண் கொடியுடன் சேர்த்து சுருட்டிய சீருடைகளுடன் வரும் பிள்ளைகளின் ட்ரௌசர்களை கழட்டி விடுவதில் தொடங்கியது அவன் சேட்டை. அடுத்ததாக, கழட்டி விட்ட பின்பு நண்பர்களின் மணியை பிடித்து தொங்கி கெக்கே பெக்கே என்று சிரிப்பான். அவர்கள் வலியில் துடிப்பதை பார்த்து துள்ளிக் குதிப்பான். அவனது  சேட்டையை தாங்கிக் கொள்ள முடியாத பிள்ளைகள் ஆசிரியரிடம் கோள் மூட்ட, அவர் இந்த சேட்டை தனத்தை எப்படி தடுப்பது என்று தெரியாமல் அவனை அடித்து கட்டுப் படுத்தினார். சில காலம் உள்ளுக்குள் அரித்து கொண்டிருந்த அவனது வேட்கை, ஒரு கட்டத்தில் தன்னை அடித்த ஆசிரியரின் மீதே பாய்ந்தது. அவர் கட்டி வந்த வேட்டியை ஒரு நாள் உருவி விட்டு தொங்கினான். சிறு பெண் பிள்ளைகளின் முன்னால் மானம் இழந்து வலியில் துடித்த வாத்தியார் அவனது பெற்றோரை அழைத்து அழுதே விட்டார்.

“சனியனே..சனியனே..” என்று குடிசையை சுற்றி அவனை வெளு வெளுவென்று வெளுத்து விட்டாள் நாகம்மா.

சில காலம் அவமானப் பட்ட அந்த ஆசிரியரின் கண்ணில் பட வேண்டாமென்று பள்ளிக்கு விடுப்பு எடுத்தாள் நாகம்மா. அதுவே, அவனது சேட்டைக்கு அச்சாரம் இட்டது போல ஆகி விட்டது. நாகம்மாளுடன் மல்லித் தோட்டத்திற்கு சென்று வரத் தொடங்கியவன் அங்கே உடன் வந்த ஒரு பெண் பிள்ளையின் முடியை பிடித்து தொங்கினான். அந்தப் பெண் கூப்பாடு போட்டதில் ஊர் கூடி அவனை மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். அவர்களின் காலில் கெஞ்சிக் கூத்தாடி நாகம்மாள் அவனை விடுவித்து வர வேண்டியதாக போய் விட்டது. சில நாட்களாக தொடர்ந்த விடுப்பு, பின்பு நிரந்தரமாக அவனை பள்ளிக் கூடம் பக்கமே செல்ல முடியாமல் முடக்கிப் போட்டது.

ஒரு கட்டத்தில் மல்லிகை விற்பனை  டல் அடிக்கத் தொடங்கியது. மழையும் பொய்த்தது. வேலை இல்லை என்று முதலாளி கை விரித்தார். வேறு வேலை தேடிக் கொண்டிருந்த சமயத்தில் தான், சாலை காண்ட்ராக்ட் பணிக்கு ஆள் பிடிக்க அவர்கள் கிராமத்திற்கு வந்தனர். அந்த கூட்டத்துடன் நாகம்மாளும், அவளது கணவனும் இணைந்து கொண்டனர். டிராக்டர் வண்டியின் சக்கரத்தில் சேர் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டு பயணிப்பதை போலவே, அவர்களும் ஓட்டுண்ணிகளாக அந்த கான்ட்ராக்டருடன் புறப்பட்டார்கள்.

“யம்மா.. உம்மகனையும் கூட்டியார வேண்டியத் தானே?”

“அவன கூட்டியாந்து என்ன செய்ய? அவனுக்குமா 100 ரூவா கொடுக்கேங்கீக?”

“ஒரு தலைக்கு 100 ரூவா கொடுக்கேன்னு தான் நான் ஜொன்னேன். சைஸ்-அ பாத்து, உம் மகனுக்கு பாதி ரூவா கொரச்சா பூடுவேன்?”

கான்ட்ராக்டர் வலை விரித்தான். இதற்கு ஒப்புக் கொண்டால் அவன் வாழ்க்கை முழுவதும் இப்படியே சாலையோரத்தில் கழிந்து விடும் என்று அவள் சிந்திக்கக் கூடியவள் இல்லை.

“ஸ்கூலுக்கும் போவாணாம். ஒரு மண்ணுக்கும் போ வாணாம். ஏறு வண்டியில” என்றாள். அவனும் வீட்டில் அடைந்து கிடக்க பிடிக்காமல் அவர்களுடன் புறப்பட்டான்.

ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாய் என்பது அந்த குடும்பத்திற்கு புதிது. மாதச் சம்பளக் காரன், தீபாவளி போனஸ் வாங்கியதை போல. குடும்பத்தில் 15 வருடங்களாக படித்துக் கொண்டிருந்த வாலிபன் முதல் மாதச் சம்பளத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுப்பதை போல. செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதியின் கால்கள் வீட்டிற்குள் பட்டு, அவருக்கு எடுத்த ஆரத்தி தட்டில் விழுந்த 2000 ரூபாய் தாளினை போல. அன்று மாலை நாகம்மாள் நிச்சயம் கோழி அடித்து குழம்பு வைக்க முடியும்..டிராக்டர் வண்டிச் சக்கரத்தில் தன் கையில் வைத்திருந்த ஆணியை கர கர வென்று தேய்த்துக் கொண்டே பள்ளம் மேடு ஏறிக் குலுக்கத்துடன் போனான் நாகம்மாளின் மகன்.

இதன் இடையில் கான்ட்ராக்டர் வாழ்வில்..

முன்பொரு காலம், டி. என். ஈ. பியில் பணி செய்து வந்த செல்வத்தின் அப்பா, தன் மகன் எலக்ட்ரிக்கல் என்ஜினியராக வேண்டும் என்று பிரியப் பட்டார். அவன் அப்பாவை ஏமாற்றுபவன் இல்லை. அவனால் முடிந்த அளவுக்கு படித்து பத்து அரியர்களை எப்படியோ முடித்து விட்டான். அவன் அப்பாவின் ஆசைக்கு ஏற்றபடி பொறியியலாளன் என்கிற இடத்தையும் பிடித்து விட்டான். ஆனால், பாவம், வேலை தான் கிடைக்கவில்லை. பத்து அரியர் வைத்திருந்தவனுக்கு யார் தான் வேலை கொடுப்பார்கள்? அப்பா,

“முண்டம்..முண்டம்..படிச்சு வேலைக்கு போனா தான் அந்த படிப்புக்கே அர்த்தம்” என்று திட்டும் போதெல்லாம், “நீ ஆசை பட்டதை செஞ்சிட்டேன். வேலை கிடைக்கலை என்றால் அது என் பிரச்சனை இல்லை” என்பான்.

பெத்த கடனுக்காக அவரும் பார்ப்பவர்கள் எல்லோரிடத்திலும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

“என் மகனுக்கு ஏதேனும் வேலை இருந்தால் சொல்லுங்க” என்று. முடிவாக ஒருவர்,

“அரசு உத்யோகமில்லை. ஆனாலும், அரசியல்வாதிகளோடு உத்தியோகம். ரோடு காண்ட்ராக்ட் வேலை இருக்கிறது. செய்வானா உன் பையன்?” என்று கேட்டார்.

“எலக்ட்ரிக்கல் வேலையில் ரிஸ்க் அதிகம். இதையே செய்யட்டும்” என்று செல்வத்தின் அப்பாவும் கௌரவமான காரணம் சொல்லி அதனை ஒப்புக் கொண்டார்.

செல்வத்திற்கு அவன் செய்யப் போகும் பணி என்னவென்று கூடத் தெரியாது. பார்ப்பவரிடத்தில் எல்லாம், “நான் ரோடு கான்ட்ராக்டர்-ஆக இருக்கிறேன்” என்று வீம்பாக தம்பட்டம் அடித்துக் கொள்வான். ஒரு அரசியல்வாதியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம் என்கிற நினைப்பே அவனுக்கு ‘செலப்ரிடி’ அந்தஸ்தை கொடுத்தது. அவருக்கு பணிவிடை செய்து வருவதை, ‘ரைட் ஹேண்ட்’ என்கிற பெயரில் அவனே பெருமையாக சொல்லிக் கொள்வான்.

ஒரு நாள் செல்வத்தின் வாழ்க்கை பிரகாசமானது. முக்கியமான ஒரு பணியை செய்ய ஆள் தேவை என்று செல்வத்திற்கு சொல்லி அனுப்பப் பட்டது. அவன் புதுத் துணி போர்த்திக் கொண்டு சட்டென கிளம்பிப் போனான்.

“செல்வா, இது ரொம்ப முக்கியமான காண்ட்ராக்ட். மந்திரி அடுத்த மூணு நாள்ல அந்த ஊர் பக்கமா ஒரு கூட்டத்துக்கு போகிறார். சாலை கண்ணுல ஒத்திக்கிறாப்புல இருக்கணும். யார் யாரையோ காமிச்சி விடலாம்-னு பசங்க கேட்டாங்க. நான் தான் செல்வம் ரொம்ப நாளா நம்மளையே சுத்தி சுத்தி வறான். அவனும் பொழைக்கணும்-னு உம் பேரை சொன்னேன். என்னுடைய பெயரை காப்பாத்தணும்” என்று அதிகமாக பில்ட் அப் செய்தார்.

செல்வத்திற்கு தனக்குக் கிடைத்திருப்பது மிகப் பெரிய ஒரு வாய்ப்பு என்று தோன்றியது. அரசியல்வாதியின் நட்பு கிடைப்பதே அரிதான விஷயம். இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக அவர் காலுக்கு அடியில் செருப்பாக கிடக்க வேண்டும் என்கிற ஆசையுடன் அவன் பணி இடத்திற்கு சென்றான். அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது, காலுக்கு அடியில் கிடக்கும் மண்ணை வாரும் காண்ட்ராக்ட் தான் தனக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது என்று.

மூன்று மாத காலமாக மணல் லாரிகள் அந்த வழியாக ஓடிக் கொண்டிருந்ததை செல்வம் கவனித்திருந்தான். கருமாரியம்மன் துணை, முனீஸ்வரன் துணை என்று லாரிகளின் மேல் வரையப் பட்டிருந்த எழுத்துக்கள் தான் மாறுகின்றன. ஆனால், அனைத்தும் அருகில் இருந்த ஏரி ஆறுகளில் இருந்து மணல் அள்ளிக் கொண்டு மற்றொரு இடத்திற்கு செல்வது மாறவில்லை. லாரிகளின் பின்னால் நூல் பிடித்து செல்வது செல்வத்திற்கே சுலபமாக இருக்கவில்லை. ஒரு முறை, பத்து மீட்டர் இடைவெளி விடாமல் லாரியின் அருகில் தன் வண்டியை வைத்துக் கொண்டு காத்திருந்த சமயத்தில், சிக்னல் மாறியவுடன் கிளம்பிய லாரி சற்று பின்னால் வந்தது. அப்போது, கெட்டியான ஒரு கட்டி மணல் அவன் தலை மீது தொப்பென்று விழுந்ததில், நிலை குலைந்து போனான்.

செம்மண் ஓட்டிச் செல்லும் லாரி என்றால் கேட்கவே வேண்டாம். முந்திச் செல்லும் அந்த லாரிகளில் இருந்து, ஆயிரக் கணக்கான மண் துகள்கள், உடம்பின் வியர்வை நாளங்களை துளைத்து ஊசி போல குத்தி கொடுமை படுத்துவதாலேயே அவன் பை பாஸ் சாலையை பயன்படுத்துவதில்லை.

இப்படியாக லாரிகளில் இருந்தும், மற்ற வாகனங்களில் இருந்து சாலையில் விழுந்து காற்றில் பெருக்கிச் செல்லப் படும் மணல், சாலையை பிரிக்கும் பகுப்பியின் அருகில் தஞ்சம் அடைவதை அவன் கண்டும் காணாமல் இருந்திருக்கிறான். வளர்ந்து வரும் புதிய தேசத்தில், புதுப் புது வேலைகள் ஒடுக்கப் பட்டவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றுகின்றன. இந்த மணலையும் வாரி எடுக்கத் தானே வேண்டும்? அதை செய்யவும் ஆட்கள் வேண்டுமல்லவா? அத்தகைய வேலையை செய்யும் அடிமைகளையும் அவன் இதுவரை கவனித்தும் கவனியாமல் இருந்திருக்கிறான். இன்று அவனிடத்திலேயே அவர்கள் வேலை செய்யும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. அவன் கிரகம்!

செல்வத்திற்கு கொடுக்கப் பட்டிருந்த சாலை 5 கி. மீ நீளம் கொண்டது. அதனை மூன்று நாட்களில் முழுமையாக பகுப்பியின் இரண்டு பக்கமும் சுத்தம் செய்ய வேண்டும். காலை விடிந்தவுடன் பணி செய்ய ஆட்களை நியமித்தால் தான், சுறுசுறுப்பாக வேலை நடக்கும். அந்தப் பணி பாதி அளவிற்கு நிறைவடைய மதியம் ஒரு மணி ஆகி விடும். இதற்கு இடையில், நவீன கொத்தடிமைகளும், வாகன ஓட்டிகளும் அவ்வழியாக செல்லும் போது நெரிசலால் பணி தொய்வடையும். ஓரிடத்தில் தொடங்கிய பணியை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, மணலை குவித்து வைப்பது பெண்களின் வேலை. அதனை வாரி எடுத்து வண்டியில் ஏற்றுவது, ஆண்கள் மற்றும் நாகம்மாளின் மகன் உட்பட மற்ற இளைஞர்களின் வேலை. இடையில் பணி செய்யும் அனைவருக்கும் டி, பிஸ்கட் வாங்கித் தருவது. பணிக்கு தேவையான பொருட்களை ஏற்பாடு செய்வது, வண்டியை வாடகைக்கு எடுத்து வருவது என அனைத்தையும் பார்த்துக் கொள்வது செல்வத்தின் வேலை.

“ஐயா. நீங்க சொல்றதை பாத்தா, இந்த ஜனத்துக்கு சம்பளம் கொடுத்து, வாடகை செலவு போக, என் கை காசை போட்டுத் தான் வேலைய முடிக்கணும் போலயே!”

“இதோ பாரு செல்வம். ஐயா சும்மா ஒண்ணும் உன்னை நம்பி வேலைய ஒப்படைக்கல. நோட்டம் விடுறாரு. நீ செய்யிறியா.. இல்லை பிச்சிக்கிட்டு ஓடுறியா-ன்னு பாப்பாரு. இன்னைக்கு இதை நீ செஞ்சின்னா நாளைக்கு பெரிய காண்ட்ராக்ட் வரும். அப்புறம் உன் இஷ்டம்”

பணியை ஒப்படைத்து விட்டு ஐந்தாயிரத்தை சுருட்டி பாக்கெட்டுக்குள் சொருகிக் கொண்டு போனார் அந்த நகரம். மாவட்டத்தின் பாக்கெட்டில் எவ்வளவு திணித்தோம் என்கிற மனக் கணக்கை போட்டுக் கொண்டே!

“என் தலை எழுத்து.. தே! கிழட்டு முண்ட..குனி…உம்ம முதுகு வளையாதோ?”

மூன்று நாட்களாக மும்முரமாக பணி செய்து வந்தனர் ஆதி கொத்தடிமைகள். நாகம்மாள், தனது மகனுடைய வாலை ஓட்ட நறுக்கி தன் முந்தானைக்குள் முடிந்து வைத்துக் கொண்டிருந்தாள். அவனை அங்கும் இங்கும் நகர விடவில்லை. இடையிடையில், செல்வத்தின் பணி மும்முரத்தை நோட்டம் விடுவதற்காக மாவட்ட நகரங்கள் அடிக்கடி எட்டிப் பார்த்தன.

“பாத்து செல்வம்.. மந்திரி ரொம்ப கோவமா இருக்காராம். ரோடு காண்ட்ராக்ட் ஊழல் பத்தி எவனோ செய்தி வெளியிட்டு அசிங்கமா போச்சாம். பணம் போனாலும் பரவாயில்லை. நாளைக்கு ஏதாவது ரெய்டு வந்தா பதவிக்கு ஆப்பு. உஷாரா இருக்காரு-ன்னு கேள்விப் பட்டேன். எங்க இறங்குவாரு-ன்னே தெரியாது. ரோட்டுல ஒரு பொட்டு அழுக்கை பார்த்தாலும், காண்ட்ராக்ட் ஒடனே கேன்சல் ஆயிடும்!” என்று பயமுறுத்தி விட்டு சென்றார்கள்.

தன் மீது ஏற்றப் படும் முழுமையான அழுத்தத்தையும், நாகம்மாள் உள்ளிட்ட பெண்களின் மீதே காட்டினான் செல்வம். ஒரு முறை நாகம்மாளின் கையை பிடித்து இழுத்து,

“அங்கே வாரு. ஒரே இடத்துல ஒளப்பிக் கிட்டு” என்று கடுமையாக நடந்து கொண்டான். இதனை பார்த்துக் கொண்டிருந்த அவளது மகன்,

“இரு இரு உன் டவுசரை அவுக்குறேனா இல்லையா-ன்னு பாரு” என்று மனதிற்குள் பொருமிய படி பணி செய்து கொண்டிருந்தான்.

மூன்றாவது நாள் காலை தொடங்கிய வேலை மிகவும் மெதுவாக நடந்து கொண்டிருந்தது. பகுப்பியின் இரு புறமும் பள்ளமாக இருந்ததால் மணல் தேங்கிய நிலையில் பெருக்குவதற்கு சிரமத்தை கொடுத்தது. ஒரு சில மீட்டர்கள் மணல் அள்ளவே மணிக் கணக்கில் ஆனது பணியாட்களுக்கு. குழந்தையில் இருந்து வீட்டில் அப்பாவைப் போலவே, அம்மாவை வேலை வாங்கிப் பழக்கப் பட்டவன், செல்வம். இங்கும் பெண்களிடம் அவசரப் பட்டான். அவர்களது இயலாமையை கடிந்து கொண்டான். போதாக் குறைக்கு மந்திரி அடுத்த நாள் காலை வருவதற்கு மாற்றாக, அன்று மாலையே அந்த ஊர் பெருமாளை தரிசிக்க குடும்பத்தோடு வருவதாக கேள்விப் பட்டான்.

“இன்னும் ரெண்டு மணி நேரம் தான் இருக்கு. வெரசா பண்ணுங்க..ம்ம்..ம்ம்..” என்று முனகிக் கொண்டிருந்தான்.

நாகம்மாளும், அவளது மகனும் எரும்புப் புத்துக்கும், துளிர் விட்டு மூன்று நாளே ஆன புதிய செடிக்கும் அருகில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். துடைப்பத்தை வைத்து மணலை தள்ளிக் கொண்டே வந்த நாகம்மாள், தும்மல் வரவே அவளது மகனிடம் சொல்லி விட்டு சற்று தள்ளிச் சென்றாள். மணலை மட்டும் வாரிக் கொண்டிருந்த அவன் கண்ணில் பக்கோடா காகிதமும், அதன் அருகில் சிறு சிறு செடிகளும் கண்ணில் பட்டன. திடீர் என்று ஒரு யோசனை பிறந்தவனாக பக்கோடா காகிதத்தை சுருட்டி தன் ஜோபிக்குள் சொருகி கொண்டான். துளிர் விட்ட நமது செடியோடு சேர்த்து, ஒரு அன்னக் கூடை அளவிற்கு செடிகளை பிடுங்கி அதோடு சேர்த்து குப்பைகளையும் ஓரிடத்தில் மறைத்து வைத்தான்.

செல்வத்தின் இடை விடாத வசைபாட்டோடு ஒரு வழியாக பணி நிறைவடைந்தது. நாகம்மாள் உட்பட அனைவருக்கும் சம்பளத்தை அழுது விட்டு, வண்டியில் அவர்களை ஏற்றிக் கொண்டிருந்தான் செல்வம். பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்த நாகம்மாள் மகனை காணாமல் திடுக்கிட்டாள்.

கொஞ்ச தூரத்தில் பின்னால் கட்டிக் கொண்டு சென்ற அவனது கையில் ஒரு காகிதச் சுருள் இருந்தது.

“ரோட்டுல ஒரு பொட்டு அழுக்கை பார்த்தாலும், காண்ட்ராக்ட் ஒடனே கேன்சல் ஆயிடும்.”, அரசல் புரசலாக காதில் விழுந்த எச்சரிக்கை நினைவுக்கு வந்தது.

“டே! இரு டா.. சோத்துல மண்ணள்ளி போடாத டா!” என்று அவனை பின் தொடர்ந்து ஓடினாள் நாகம்மாள். அவளை மீறிக் கொண்டு சென்ற கூட்டம் மந்திரியை வரவேற்க சாலையோரம் நின்றது. அங்கு தொண்டர்களில் ஒருவனாக நின்று கொண்டிருந்த நாகம்மாளின் மகன், சரியாக மந்திரி வரும் நேரம் பார்த்து காருக்கு முன்னால் அந்த பக்கோடா காகிதத்தை தூக்கி எறிந்தான். அது ரோட்டில் பறந்து தன் காருக்கு குறுக்காக போவதை கண்ட மந்திரி, அது விழுந்த இடத்தில் இலைகளும், சின்ன செடிகளும் குப்பைகளும் குவியலாக கிடப்பதை கவனித்தார்.

ரத்தச் சிவப்பான அவரது நெடிய மூக்கு துடித்தது. காரை நிறுத்தச் சொல்லி இறங்கினார். இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்-ஐ சரி செய்தபடி,

“எவன் டா இங்கே காண்ட்ராக்ட் எடுத்து செஞ்சது?” என வினவினார்.

செல்வம் வியர்வை சொட்டச் சொட்ட முன்னே வந்தான்.

“கொஞ்ச நேரம் முன்னாடி வரை இங்கே குப்பை இல்லீங்க ஐயா. இப்போ எப்படி வந்தது-ன்னு தெரியலீங்க”

“ஓஹோ! அப்போ நீ யாரு-ன்னு எனக்கும் தெரியாது. இனிமே பில் புக்கை தூக்கி கிட்டு என் முன்னாடி வந்திராத”

“ஐயா! இனிமே நடக்காது..தயவு செய்து”

செல்வம் அவர் பின்னாலேயே ஓடினான். அவன் பேச்சை கேட்காமல் முன் சென்று காரை திறந்தார் மந்திரி. நாகம்மாள் தன்னுடைய மகன் கூட்டத்தை பிளந்து கொண்டு மந்திரியின் காரை நோக்கி செல்வதை கவனித்து அப்படியே உறைந்து நின்றாள். தூரத்தில் மணல் லாரி வருவதை கண்டாள். முன்னொரு காலத்தில், ஏரிக் கரையோரம் தன்னுடைய வீடு இடித்து நொறுக்கப் பட்ட முன் கதை சுருக்கத்தின் முன்கதை அவள் மனதில் தோன்றி மறைந்தது. முதல் முறையாக அவளது மகனை தடுக்காமல் திரும்பி ட்ராக்டரை நோக்கி நடந்தாள். அங்கே கொத்தடிமைகள் அவளுக்காக காத்திருந்தனர்.


  • கண்ணன் ராமசாமி

 

Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
ராஜேஷ் ராதாகிருஷ்ணன்

அழகான கதை சொல்லல்… கதையின் ஆரம்ப வரிகளின் அழகியல் மணக்கண்ணில் விரிகையில் உண்டாகும் மனக்கிளர்ச்சி அற்புதம்… நான்கடுக்கு வாழ்வியலும் இயலாமையும் ஒரு சேர்ந்த புள்ளி இயல்பான நிறைவு… வாழ்த்துகள் தோழர்

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x