அவன் அமர்ந்திருந்த தடுப்புச் சுவரின் அருகில் மின் கம்பம். அதன் வெளிச்சம் கீழே குளமாய் இருந்த மழை நீரினுள் தாமசித்து இருந்த சமயம். சேற்றுப் பதியங்கள் ஆங்காங்கே கரையில் அப்பி இருந்தன. இரவு தூக்கத்திற்காக மட்டும் வீட்டிற்கு வரும் பல பணி விலங்குகளைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்த சொகுசு உந்திகள் வரிசையாக அவன் அருகில் கண் அயர்ந்து கொண்டிருந்தன. அவற்றில் ஓரு வண்டியின் சக்கரத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான் செழியன். அந்தச் சக்கரம் தான் அவன் இங்கே ஒரு பிணத்தின் அருகில் காவல் காக்கும் நிலையில் அமர்ந்திருக்கக் காரணம்!
ரத்தமும், மாமிசமும் ஒன்று குழைந்தால் இப்படித் தான் இருக்கும் என்று கண் கூடாக அன்று தான் காண்கிறான். அந்தச் சக்கரத்தின் வரித்தட இடுக்குகளில் தசைத் துகள்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அவற்றை தன் கூரான பற்களால் கடித்து இழுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் நாய் தோல்வி கண்டு விட்டால், நாளை காலை அதனை சுரண்டி எடுத்துக் முழுமையாக கழுவ வேண்டும்.
“அதற்குள் துஷாரா அதனை பார்த்து இன்னது தான் என்று கண்டு பிடிக்காமல் இருக்க வேண்டும். நல்ல வேளையாக அவள் இன்று பள்ளியில் இருந்து என்னுடன் வீட்டிற்கு வரவில்லை! வந்திருந்தால், இரவு அவள் என்ன கனவு கண்டிருப்பாளோ!”
கமலி 4 ஆம் மாடியில் இருந்து எட்டிப் பார்த்தாள். பிணத்துடன் சரசம் பாடிக் கொண்டிருக்கும் செழியனிடம் போனில் கூட பேச அவளுக்கு பயமாக இருந்தது. இருந்தாலும், அவனை எப்படியாவது அங்கிருந்து விடுவித்து மேலே கூட்டிக் கொண்டு போக வேண்டும். சே! இன்று எவன் முகத்தில் விழித்தானோ!
“நீ தான் இந்த வேலையை செய்யனுமா? அபார்ட்மெண்ட் செக்ரடரி-ன்னு ஒருத்தன் இருந்தானே? அவன் எங்கே?”
எட்டிப் பார்க்கும் மனைவியை அப்போது தான் அண்ணாந்து கவனித்தான் செழியன். அவன் தலையை திருப்பியவுடன் அவனது நிழலின் பாதுகாப்பில் மறைந்திருந்த அந்த பிணம் வெளிச்சத்திற்கு வந்தது. கடைசியாக அவள் அந்த பிணத்தை பார்த்த போது, வழிந்து வெளியே தொங்கிக் கொண்டிருந்த மூளை பள பள வென்று மின்னிக் கொண்டிருந்தது. தற்போது அதன் மேல் ஓரு துணியை போர்த்தி வைத்திருக்கிறார்கள்.
பிணத்தை கண்டதும் அவளுக்கு வாயில் குமட்டிக் கொண்டு வந்தது புளிச்சை. பித்த நீரை அடக்கிக் கொண்டு கைப் பிடி சுவரின் மேல் தலை சாய்த்துக் கொண்டாள். கைப் பிடிச் சுவருக்கு அடியில் வரிசையாக கோல்டன் டஸ்ட் க்ரோட்டன் செடிகள் மஞ்சள் பொட்டுக்களை அதன் இலைகளில் ஆங்காங்கே உமிழ்ந்து விட்டிருந்தன. அதன் காம்புகளில் தன் ஆள் காட்டி விரலை செலுத்தி மெல்ல அதன் இலைகளை சூழற்றிக் கொண்டே பேசினாள்.
“கடவுளே! உன்னால எப்படித் தான் அங்கே உட்கார முடியுதோ!”
“நான் என்ன விரும்பியா இங்கே உட்காரந்திருக்கேன்? நான் தான் முதல் விட்னஸ். அவங்களுக்கு அது ஒரு வசதியா போச்சு. ரத்த நாத்தம் முன்னப் பின்ன நுகர்ந்து பாத்திருக்கியா?”
“ஷ்ஷோ! சொல்லாதே! எப்போ வர்றாங்களாம்?”
“இன்னும் கொஞ்ச நேரத்துல திரும்ப வர்றோம்’னு சொல்லிட்டு, ஒரு ஆளை அமர்த்திட்டு போனாங்க. அவனும் இந்தா டீ சாப்பிட்டு வர்றேன்’னு சொல்லிவிட்டு போனவன் தான் ”
“கூடி இருந்த மத்தவங்க எங்கே?”
“எல்லாரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லிவிட்டு நகர்ந்துட்டாங்க”
“பாப்பா உன்னை கேட்டுக் கிட்டே இருந்தா”
“தூங்கிட்டாளா?”
“ம்..ரொம்ப நேரம் போராடின பிறகு தான். நிறைய கேள்விக்கு கேட்டா. எல்லாத்துக்கும் பதில் சொன்னேன். நீ எப்போ வருவே? தனியா படுக்க பயம்மா இருக்கு”
“சைரன் ஒலி கேட்குது. சீக்கிரமே..நீ போய் படு”
கமலி திரும்பும் போது அவளுடைய விரலில் சிக்குண்டிருந்த இலை உதிர்ந்த மெல்ல காற்றில் ஓடமிட்டபடி கீழ் நோக்கி நகர்ந்தது. அது தன்னை நோக்கித் தான் வருகிறதென்று அறிந்த செழியன் அதனை உற்று கவனித்துக் கொண்டிருந்தான்.
உதிர்ந்த அந்த இலை ஆரவாரம் இல்லாமல், எத்தகைய தடையற்ற ஓர் பயணத்தை தரையை நோக்கி மேற்கொள்கிறது? அது முடிவாக தரையை வந்தடையும் போது அதன் இரேகைகளுக்கும், காம்புக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பஞ்சு போல அதன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டது. அது தனது தூண்டிக்கப் பட்ட உறவிடம் இருந்து விடுபட்டதற்கான ஒரே ஒரு சுவடைக் கொண்டிருக்கிறது. அதுவே அதன் காம்பில் வடியும் பச்சை ரத்தம். ஆயினும், அது சில நாட்கள் உயிர் வாழும். தரையளவில் காற்றின் விசை கொண்டு பயணப் படும். அதன் சக இலைகளை சந்திக்கும். ‘நீ எவ்வகை மரம்? என்ன உன் குணம்?’ என்று அளவளாவும். கூட்டமாக ஓரிடத்தில் குவிந்து, பின் மக்கிச் சாகும். ஆனால்..
செழியன் பத்தாவது மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடக்கும் அந்த ஆண் சடலத்தின் உடலை மேலும் கீழுமாக நுட்ப ஆய்வு செய்தான். இந்த உடலை வைத்து இனி என்னவெல்லாம் அரசியல் நிகழப் போகிறதோ! இவன் யாரிடமெல்லாம் பணத்தை கொடுத்து வைத்திருக்கிரானோ! யாரெல்லாம் இவனுக்கு கொடுத்ததை கேட்டு இந்த குடியிருப்புக்கு வரப் போகிறார்களோ! இவன் பிள்ளைக் குட்டிகள் இனி என்ன ஆகும்? மனைவியின் நிலை?
அந்தச் சடலத்தின் இருள் நீங்கிய வாழ்க்கை இனி தான் ஆரம்பம். அதன் மீதாய் படியத் துவங்கும் தூரத்து சைரன் ஒளிக் கீற்றுகள் இனி அதன் பாகங்களையும், உறுப்புகளையும் கிழித்துச் சின்னாபின்னமாக்கும். ஆயினும், விடுபட்ட அந்த உயிருக்கு என்ன கவலை?
…………
துஷாரா அவனது அறைக் கதவை மூடித் தாளிட்டாள். வெளியே பேச்சுக் குரல்கள்..இரவெல்லாம் விழித்த அப்பாவுக்கு அது தொந்தரவு செய்யக் கூடாதே என கரிசனம். நேற்றைய அசாதாரண நிகழ்வு குறித்து பேசித் தெரிந்து கொள்ள பலருக்கு ஆர்வம் இருந்தது. அவர்களின் வதந்தி வேட்கையை தீனி போட்டு தீர்க்க முடியாது. காவலர்கள் என்ன சொன்னார்கள்? தற்கொலை செய்து கொண்ட ஆளின் வீட்டில் என்ன நடந்திருக்கும்? உண்மையில் அது ஒரு தற்கொலை தானா? இல்லை, அது ஒரு கொலையா? கடைசியாக யார் சடலத்தை தூக்கி வண்டியில் ஏற்றியது? என அவர்களிடம் இருந்து பல்வேறு கேள்விகள் துளிர்த்த வண்ணம் இருந்தன.
“வந்த காவலர்கள் இவரைத் தான் துளைத்து எடுத்திருக்காங்க. கீழே விழுந்தவன் தலை உடையுமே தவிர இப்படி பிளந்து மூளை வெளியே வராது. நீங்கள் தெரியாமல் காரை அவன் தலை மீது ஏற்றி விட்டீர்களா? அதனால் தான் உங்கள் கார் டயரில் ரத்தக் கரையா? விழுந்தவுடன் அவர் இறந்து விட்டாரா? மூச்சு எவ்வளவு நேரம் இருந்தது? இப்படி ஏகப் பட்ட கேள்விகளாம்”
“இதுக்குத் தான் இது போன்ற விஷயங்களில் தலையை கொடுக்க கூடாது”
“உங்கள் சாமர்த்தியம் அவருக்கு எங்கே? நானும் கூட சொன்னேன். விழுந்தவன் வீட்டில் யாரும் இல்லை. அவன் சொந்த பந்தங்களுக்கு தகவல் சொல்லிவிட்டு எல்லாரும் கிளம்பியது போல நீங்களும் வர வேண்டியது தானே’ன்னு. செத்தவன் உடலை தூக்கக் கூட ஆள் இல்லை என்றால் எப்படி என்று அங்கேயே உட்காரந்திருந்தார்! கடைசியில் அந்த ரத்தக் குழம்பான தலையை பிடித்துத் தூக்க யாருக்கும் தைரியம் இல்லாத போது, இவர் தான் ஒரு முட்டுக் கொடுத்து தூக்கி உள்ளே தள்ளினாராம்! தலை கனமாகவே இல்லையாம்! காற்றுப் போன பந்து போல இருந்ததாம்”
கமலியின் குமட்டல் இரு மடங்காகும் அளவிற்கு செழியன் கதை சொன்ன போது இரவு 2 மணி இருக்கும். செழியன் சொல்லிக் கொண்டிருந்த கணத்தில், கோள் காற்று தொடர் அசைவைத் தர, கோல்டன் டஸ்ட் இலைகள் குளிரில் உடல் சிலிர்த்து கொண்டன. அவையும் கமலியின் குமட்டல் எடுத்த உடலை ஒத்த சிணுங்கலை அவ்வகையே வெளிப்படுத்தின போலும். அவற்றின் அசைவு உருவாக்கிய சலசலப்பு அடங்கவும், அவன் கண் அசரவும் சரியாக இருந்தது.
இரவு முழுவதுமாக வெளுத்திருந்த அவனது சிந்தனை, குழந்தை தாளிடும் சத்தத்தை உள்வாங்கிக் கொண்டு அதன் கதையை பின்னத் தொடங்கியது. இறந்த சடலத்தின் உருவம் அவன் கண் முன்னே தென்பட்டது! அதன் உலகம் இருண்டு போனதாக உணர்ந்தான். கதவுகள் அற்ற அவ்வுலகில், இருட்டு எல்லா திசைகளில் இருந்தும் அதன் வாய்ப்புகளை மூழ்கடித்துக் கொண்டே முன்னேறி வந்தது.
சடலத்தின் அடியில் ஒரே ஒரு இலைக் காம்பு அதன் மொத்த எடையையும் தாங்கிக் கொண்டிருந்தது! அவன் உடல் அந்த காம்பின் பிடிமானத்தை நம்பி அந்தரத்தில் தொங்கியது. சமநிலை தவறி இருட்டுக்குள் விழுந்தால் அவன் எத்தகைய பாதாளத்திற்குள் பிரவேசிப்பான் என்று அவனே அறியான்! ஆயினும், முடிவற்றதாக நீடிக்கும் அந்தரத்து ஊஞ்சலாட்டம் அவன் உடலை மூழ்கடிக்கவே செய்தது! செழியன் தனது கைகளை நீட்டி உடல் சரிவை தடுக்க முயன்றான். ஆயினும், சடலத்தின் உடலை கைப்பற்ற முடியாமல் தவற விட்டான். அந்த உடல் பாதாளத்தை நோக்கிய அதன் பயணத்தை துவங்கியது.
கோல்டன் டஸ்ட் இலையைப் போலவே மெல்ல அசைந்தாடிக்க கொண்டே அது இருளில் மிதந்தது. இவ்வாறே சில நொடிகள், மணிகள், நாட்கள், வருடங்கள்….அது எப்போது அதன் தரையை அடையப் போகிறது என்பதனை தெரிந்து கொள்ளும் ஆவலில் செழியன் தனது கால்களுக்கு கைகளை முட்டுக் கொடுத்தபடி அந்த பாதாளத்திற்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீர் என்று அவனது கன்னத்தில் ஓர் கோல்டன் டஸ்ட் இலை வந்து அமர்ந்தது!
திடுக்கிட்டு எழுந்தான் செழியன். அவன் கன்னத்தில் இரவு, செடியில் இருந்து பிடுங்கி வந்த கோல்டன் டஸ்ட் இலை ஒன்று உண்மையில் அமர்ந்து கொண்டிருந்தது. அது தான் தனது கனவை கலைத்திருக்க வேண்டும் என்று உணர்ந்தான் செழியன். தன்னுடைய நிஜ உலகம் வேறானதாக இருப்பதை அறிந்தான். வெளிப்பக்கமாக பூட்டியிருந்த கதவை தட்டினான். மகள் கதைவை திறந்ததும் வெளியே வந்தான். அவனை பார்த்ததும் அங்கிருந்த கூட்டம் நோவு தணிக்கும் முகமன் வார்த்தைகள் பேசின. அவர்களின் முன் போலியாக சிரித்து விட்டு குளியல் அறைக்குள் நுழைந்தான்.
…….
இலைகள் காய்ந்து அதன் மேல் பல நாட்கள் படிந்த தூசு அப்பிப் கொண்டிருந்தது. இலைகளின் மேல் பயணம் மேற்கொண்டிருந்த ஏதோ ஒரு பூச்சியின் வழித்தடம் மட்டும் தெரிகின்றது. அந்த சம்பவம் நடப்பதற்கு முன்னால் வரை கமலி ஒவ்வொரு நாளும் அந்த கோல்டன் டஸ்ட் செடிகளுக்கு நீர் பாய்ச்சும் வழக்கம் கொண்டிருந்தாள். ஆனால், இப்போது செய்வதில்லை. அதனாலேயே செடிகளுக்கு இந்த வாட்டம். அந்த நிகழ்வுக்குப் பின் கோல்டன் டஸ்ட் இலைகளின் மீதிருந்த பழுப்பு நிறப் புள்ளிகள், அவளது அந்த நாளின் குமட்டலை நினைவு படுத்தின. அவற்றிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்றே அவளுக்குத் தோன்றியது.
செழியனின் கார் ஒரு முறை முனீஸ்வரன் கோயிலுக்கு போய் வந்தது. வண்டிச் சக்கரத்தில் சிவப்பாக ரத்தம் படியும் போது, அதனை மஞ்சள் நிறத்தில் உள்ள எலுமிச்சம் பழத்தால் கழுவினால் போதும்! எல்லா தோஷங்களும் நீங்கும் என அங்கே இருந்த ஒருவர் சொன்னதில் லாஜிக் சரியாக பொருந்துவது போல தெரிந்தது. அதோடு அந்த நிகழ்வு குறித்த எந்த நினைவுகளும் திரும்பாத அளவில் வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருந்தது செழியனின் பணிச் சூழல்.
தினமும் அவசர அவசரமாகத் லிப்ட்ற்குள் நுழையும் செழியன் அந்த வாடிய இலைகளை கவனியாமல் கடந்து போய்க் கொண்டிருந்தான். திடீர் என்று ஒரு நாள் லிப்ட்-ல் இருந்து வெளியே கால் வைக்கும் நேரத்தில் உதிர்ந்த ஒரு கோல்டன் டஸ்ட் இலை அவன் முன்னே நகர்ந்து வந்தது. அதனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு தற்கொலை நடந்த இடத்தை நோக்கினான் செழியன்.
அவனது பார்வை பிணம் கிடத்தப் பட்டிருந்த இடத்தை நோக்கியதாய் இல்லை. மாறாக அவன் அங்கே அமர்ந்திருந்த போது விழுந்த இலை இப்போது என்ன நிலையில் இருக்கும் என்கிற கேள்வியை பற்றியதாக இருந்தது. மெதுவாக அந்த தளத்தில் இருந்து தரைத் தளத்திற்கு வந்தான். இலைகள் பெருக்கிப் போடப் பட்டிருந்த ஒரு ஓரத்தில் தனது ஒரு விரலை செலுத்தினான். கத்தை கத்தையாக பழைய நோட்டுப் புத்தகங்கள் போல மக்கிப் போன இலைகள் வெளி வந்தன. அவற்றில் அன்று விழுந்து இறந்துப் போன இலை எதுவென்று அவனால் கண்டு கொள்ள முடியவில்லை.
வெளியே வீட்டு வேலையாக வந்த கமலி தற்செயலாக திரும்பிப் பார்த்தாள்.
“கிரீஸ் கலையாத உடையும் ஷூவும் அணிந்து கொண்டு இவ்விடத்தில் அமர்ந்து எதை தேடிக் கொண்டிருக்கிறார்?” என்று எண்ணியபடியே,
“ஏங்க? என்ன அங்கே? ஏதாவது தொலைச்சிட்டீங்களா?” என்று செழியனுக்குக் கேட்கும் படி வினவினாள்.
“ஒண்ணும் இல்லை. தோ வர்றேன்”, அவன் தனது கைகளை சுத்தம் செய்து கொண்டு மேலேறிச் சென்றான்.
அன்று மாலை செழியனும் மகள் துஷாராவும் சைக்கிள் எடுத்துக் கொண்டு வெளியே சென்றனர். அவளுக்கு பயிற்சி அளித்துக் கொண்டே பின்னால் ஓடினான் செழியன். அப்போது சுடுகாட்டின் வழியே அவன் செல்வதை எப்படியோ அவனது கண்கள் மேய்ந்து கண்டு கொண்டு விட்டன. காலை அவன் கைகள் துழாவி எடுத்த இலைகள் வெடுக்கென்று நினைவில் வெட்டி மறைந்தன.
செழியன் தன் மனதில் தோன்றும் வினோதமான யோசனைகளை களையாமல் மிதிவண்டியின் சக்கர ஆரைகளின் சூழற்சியை மனனம் செய்தபடி அவள் பின்னால் ஓடினான். மக்கிப் போன இலைகளின் ஊடே அன்று அவன் அந்த இறந்த இலையின் மிச்சங்களை கண்டான். ஆனால் அவனது நினைவுக் குழிகளுக்குள் அந்த இலையின் முகம் வேறு வடிவத்தில் படிந்திருந்தது. இறந்து போன பிணத்தின் முகமும் இன்றைய தேதியில் வேறொரு வடிவத்திற்கு மாறிவிட்டிருக்கும்.
துஷாராவும் செழியனும் மிதிவண்டியை கைகளில் ஏந்தியபடி லிப்ட் வாசலில் இருந்து வெளியேறும் போது, குதித்து இறந்தவரின் வீட்டில் யாரோ புழங்கிக் கொண்டிருப்பதை கவனித்தான் செழியன். அப்போது, அவர்களில் ஒருவர் கைகளை தட்டிச் சிரித்தபடி தொலைக் காட்சியில் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பதாக அவன் புரிந்து கொண்டான். அதைப் பார்த்த அவனது கண்கள் அசைவுகள் அற்ற ஏளனத்தை இமைகளில் தரித்துக் கொண்டன.
காலை நேரத்து சைக்கிள் பயணத்தால், பள்ளிக்கு தாமதமாக செல்வதாக கமலி, அப்பாவையும் மகளையும் தினமும் திட்டிக் கொண்டிருந்தாள். அதனால் இருவரும் இணைந்து இன்று குளித்து முடித்து விட வேண்டும் என குளியல் அறைக்குள் சென்றனர்.
மணி அடிப்பதற்கு ஒரு நிமிடம் முன்பாக பள்ளியின் வாசலை அடைவது எப்படி என்று விரிவுரை எடுக்கச் சொன்னால் அதில் வெற்றி கண்டு கோப்பையுடன் வெளியே வருவார்கள் அப்பாவும் மகளும். அவ்வாறே இன்றும் அவர்களது நேரம் கணக் கச்சிதமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. சரவீசுக்கு சென்று வந்த கார் அழுத்தியவுடன் சாலையில் வேகமெடுத்துப் பறந்தது. சாலையின் இண்டு இடுக்குகளை பயன்படுத்திக் கொண்டே அவர்கள் நொடிகளைக் கடந்தார்கள். அவர்கள் செல்லும் வேகத்தில் ஒன்று என்ன? இரண்டு மணித் துளிகள் முன்பாகக் கூட அவர்களுடைய பள்ளியை அடைந்து விடக் கூடும். ஆயினும், பாதி வழியில் ஓரிடத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்த்த துஷாரா,
“அப்பா கொஞ்சம் ஸ்லோ பண்ணுங்க” என்றாள்.
“குடியிருப்பில் நடந்த சம்பவத்தை கண்ணால் இதுவரை அவள் பார்க்கவில்லை. அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் அதனை அவள் பார்த்து விட கூடாது”, என்று செழியனின் ஒரு பகுதி சொன்னது. ஆயினும், மகளது பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காமல் அவர் மெல்ல தனது வேகத்தை குறைத்தார்.
அந்த கூட்டத்திற்கு இடையில் அடிபட்டுக் கிடந்த பாட்டியில் தலையில் இருந்து குருதி வழிந்து கொண்டிருந்ததை கவனித்தாள் துஷாரா. பாட்டியின் வியர்வை தோய்ந்த ஜாக்கெட் விலகி மார்பகங்கள் தெரிந்தன. அக்குள் ஈரத்தை கைகளால் தொடுவதை பொருட் படுத்தாமல் ஒரு இளம் பெண் அந்த பாட்டியின் கைகளை தூக்கிப் பிடித்து தாங்கிக் கொண்டிருந்தாள்.
“சீக்கிரம் ஆட்டோ கூப்பிடுங்க”, என்று அப்பெண் பதறிக் கொண்டிருந்தாள். அப்போது தனது காரில் இருந்து எட்டிப் பார்த்த துஷாரா,
“வாங்க வண்டியில் ஏற்றுங்க”, என்றாள். உடனே அவளது கையை பிடித்து இழுத்த செழியன்,
“ஸ்கூலுக்கு டைம் ஆச்சு” என்றான்.
“அப்பா! Seriously? Don’t you see?” என இரு கைகளையும் விரித்து ஏமாற்றம் அடைந்தவளாக வினாவினாள். அதற்குள் பாட்டியை உள்ளே அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டாள் அப்பெண்.
வேறு வழியில்லாமல் செழியன் பள்ளி வளாகத்தை தாண்டி மருத்துவமனையை நோக்கி வாகனத்தை செலுத்தினான். கண்ணாடி வழியாக பாட்டியின் முகத்தை பார்த்தான் செழியன். வெளியே அதிகம் அடிபட்டது போலத் தெரியவில்லை. எனினும், அவரது முகம் சுய நினைவுள்ள ஒரு பெண்ணின் முகம் போலத் தெரியவில்லை. உதவும் குணம் கொண்ட அப்பெண் அந்தப் பட்டிக்காக கண்ணீர் சிந்தினாள். துஷாராவும் அவளும் நடந்த சம்பவத்தை பற்றிப் பேசிக் கொண்டே வந்தனர்.
பாட்டியை ஏற்றியதில் இருந்து மருத்துவமனையில் இறக்கி விடும் வரை எந்த சலனமும் இல்லாதவன் போல அமைதியாக இருந்தான் செழியன். பாட்டியை கவனிக்கும் மும்முரத்தின் இடையில் துஷாரா தனது தந்தையின் முகத்தையும் கவனியாமல் இல்லை. அதற்குள் பாட்டியின் மகன் மருத்துவமனையை தேடி வந்து விட்டான். சிகிச்சைக்கான முன் ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து விடைபெறும் போது, மகனிடம் செழியனின் அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு விடைபெற்றாள் துஷாரா. அவளிடம்,
“இந்த சின்ன வயசுல உனக்கு ரொம்ப பெரிய மனசு” என்று அந்தப் பாட்டியின் மகன் சொன்னான். அந்த மகனைப் பார்த்ததும், குடியிருப்பில் தொலைக் காட்சியை பார்த்து கை தட்டிச் சிரித்துக் கொண்டிருந்த இறந்த நண்பரின் உறவினர் முகம் நினைவுக்கு வந்தது. செழியன் மீண்டும் ஒரு முறை ஏளனத்தை வாய் இடுக்குகளில் தரித்துக் கொண்டான்.
பள்ளிக்கு செல்ல வில்லை. துஷாரா தனது ஆசிரியையின் அலை பேசியை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தாள். பின்,
“அப்பா! What’s wrong with you?” என்றாள். முன் செல்லும் வண்டியின் சக்கர ஆரைகளின் சூழற்சியை உற்று நோக்கியபடி சொன்னான் செழியன்,
“விழுந்த கோல்டன் டஸ்ட் இலைகள் முழுதாக மக்கும் முன்பாக அதன் காம்புகளில் புது இலைகள் துளிர் விட்டு விடுகின்றன”
எழுதியவர்
இதுவரை.
- சிறுகதை24 April 2023கோல்டன் டஸ்ட்
- சிறுகதை26 November 2022கயிறு
- கதைகள் சிறப்பிதழ் - 20221 August 2022பகுப்பி