‘சைனாவுல புதுசா ஒரு வியாதி பரவுதாம். வவ்வால் கறி சாப்பிட்டவங்க கிட்ட இருந்து தான் முதல்ல வந்துச்சாம்’ என்ற செய்தியைப் பார்த்துவிட்டு யாரோ கூறியபோது, “இந்த சைனாக்காரப் பசங்களுக்கு வேற வேலை இல்லை.. இப்படித் தான் வெந்ததையும் வேகாததையும் சாப்பிட்டு புதுசு புதுசா வியாதியை இழுத்து வைப்பாங்க” என்று உங்களைப் போலவே நானும் நினைத்தேன். லட்சக்கணக்கான மக்கள் இறந்து விட்டனர், பலநாடுகள் சைனாவிலிருந்து வரும் பொருட்களைத் தடை செய்துவிட்டன, சில நாடுகள் தங்கள் விமான நிலையங்களை மூடிவிட்டன என்பது போன்ற செய்திகளைக் கேட்ட போதும் கூட வெகுவிரைவில் நமது ஊருக்கும் இந்தக் கிருமி வரும், பல உயிர்களைப் பலி வாங்கி, பொருளாதாரத்தையே புரட்டிப்போடும் என்று நினைக்கவே இல்லை.
நாங்கள் மருத்துவம் படிக்கும் போது நுண்ணுயிரியல் (microbiology) பிரிவில் அனைத்து ஆங்கில எழுத்துக்களிலும் துவங்கும் பெயர்களை உடைய அத்தனை கிருமிகளைப் பற்றி வாசித்திருக்கிறோம். தேர்வு எழுதியவுடன் அதில் பெரும்பாலானவற்றை மறந்தும் போயிருக்கிறோம். அதில் ஒன்றுதான் கரோனா வைரஸ்.
சென்ற வருடம் மார்ச் மாதத்தில் ஒரு நாள் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை சார்பில் எங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவர்களையும் திடீரென்று அழைத்து ஒரு பயிற்சியை நடத்தினார்கள். அதில் நாங்கள் வாசித்து மறந்து போயிருந்த கொரோனாவைப் பற்றி மீண்டும் நினைவு படுத்தினார்கள். அவ்வளவுதானே என்று பாடத்தைக் கேட்டு விட்டு டீயும் பப்ஸும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பலாம் என்று இருக்கையில் மேடைக்கு ஒரு மருத்துவர் வந்தார்.
“இப்ப நமக்குப் பக்கத்தில் இருக்கிற ஏர்போர்ட்ஸ் திருவனந்தபுரம், தூத்துக்குடி, மதுரை. இந்த மூணு இடங்கள்ல இருந்தும் வந்து இறங்குற பேசஞ்சர்ஸ் லிஸ்ட், அட்ரஸ், ஃபோன் நம்பரோட நம்ம கலெக்டர் ஆஃபிஸுக்கு வந்துடும்.. அதை அந்தந்த ஊர்கள்ல உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பிரிச்சுக் கொடுப்போம். அவங்க அந்த பயணிகளை ஒரு சுகாதார ஆய்வாளரை அனுப்பி, தினசரி கண்காணிப்பாங்க. தனியறை அல்லது தனி வீட்ல வச்சிருக்கணும்னு வலியுறுத்துவோம். அவங்களுக்கு ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனே அவங்களை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வருவோம். நீங்களும் வெளியூர்ல இருந்து வர்ற பயணிகளுக்கு சளி, காய்ச்சல் அப்படி ஏதும் அறிகுறி இருக்கிறதா கேள்விப்பட்டா எங்களுக்குத் தகவல் தெரிவிக்கணும்” என்று கூறினார்.
அப்போதுதான், ‘ஓஹோ! கொரோனா கிருமி நம்மையும் நெருங்கி விடுமோ’, என்ற பயமே எங்களுக்கு ஏற்பட்டது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
அதன்பின் ‘ஜனதா கர்ஃப்யூ’ என்று ஒரு நாள் ஊரடங்கை அமல் படுத்தினார்கள் ஒருநாள்கூட கடைக்குப் போகாமல் சமாளிக்க முடியாத தமிழ் சமூகம் அந்த ஒற்றை நாளுக்கு முன்னேற்பாடாக பொருட்களை வாங்கி வைக்க அலைமோதியது. விரைவில் முழு ஊரடங்கு போட்டு விடுவார்கள் என்ற பயத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் கிடைத்த வண்டிகளில் பயணம் செய்தார்கள். எதிர்பார்த்தபடியே நீண்ட கால ஊரடங்கும் போடப்பட்டுவிட, எப்போதும் பரபரப்பாக இருக்கும் எங்கள் வெளிநோயாளிகள் பிரிவும் நிரம்பி வழியும் உள்நோயாளிகள் பிரிவும் திடீரென்று காலியானது.
மிக மோசமான நிலையில் வந்தவரைக் கூட உள்நோயாளியாக சேரச் சொன்னால், “இல்லை! எனக்கு ஊசி மட்டும் போட்டு விடுங்கள். நான் போய் வருகிறேன்” என்று ஓடியே போனார். அரசு மருத்துவமனைக்குப் போனால் கொரோனா தொற்றிக்கொள்ளும் என்ற பயம் அப்போதே மக்கள் மனதில் பரவிவிட்டது. கிட்டத்தட்ட நான்கு நாட்கள் வேலை இல்லாமல் மருத்துவமனையில் சும்மா உட்கார்ந்து இருந்தோம். ‘கொரோனா நம்ம ஊருக்கு வருமா வராதா?’ என்று விவாதித்து பொழுதைக் கழித்தோம்.
ஒரு நோயாளி வந்தார், ‘மூச்சுப் போகவில்லை, வயிறு வலிக்குது, நடுக்கமா இருக்கு’ என்று கூறினார். கொரோனா பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த எங்களுக்கு அதுவும் கொரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. விலாவாரியாகக் கேட்ட பின் தான் தெரிந்தது, அவர் ஒரு குடிநோயாளி என்று. தினமும் குடிக்காமல் அவரால் இருக்க முடியாது. ஒரு மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்ப்பது, அன்றன்றைய ஊதியத்தை வாங்கி மது அருந்துவது, பின் அங்கேயே படுத்திருப்பது என்றே பல வருடங்களாக ஓட்டியிருக்கிறார். மெக்கானிக் கடையையும் அடைத்து விட்டார்கள், மதுக்கடையையும் திறக்கவில்லை. மதுவை நிறுத்தியதால் வந்த கை நடுக்கம் மற்றும் இரண்டு நாள் எதுவுமே சாப்பிடாமல் இருந்ததால் வந்த அறிகுறிகளே அவை என்று தெரிந்தது.
மொத்த வார்டிலும் அவரை ஒற்றை நோயாளியாகச் சேர்த்து உணவு கொடுத்து கைநடுக்கம், வயிறுவலி இவற்றுக்கு சிகிச்சை அளித்தோம். அந்த ஒற்றை நோயாளி அதன் பின் வந்த பல கண்ணீர்க் கதைகளுக்குத் துவக்கப் புள்ளியாய் அமைந்தார்.
அயல்நாட்டில் ஆரம்பித்து, பெருநகரங்களுக்கு வந்து, அதன்பின் சிறு நகரங்களுக்கும் சிறுநகரங்களிலிருந்து சிற்றூர்களுக்கும் பயணித்து கொரோனா பட்டி தொட்டி எங்கும் வியாபித்ததை நாம் அறிவோம். தனிமைப் படுத்துதல் என்பது நோயின் முதல் சிகிச்சையாக செயல்படுத்தப்பட்டு வந்தது. தனிமைப்படுத்தி விடுவார்கள் என்ற பயத்திலேயே பரிசோதனைக்கு ஒருவரும் முன் வராத காலம் அது. தெருவில் ஒருவருக்குத் நோய் தொற்று ஏற்பட்டால் அந்தத் தெரு முழுவதையுமே வளைத்து வளைத்து சோதனை செய்ய அதிகாரிகள் வந்தார்கள். அவர்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்வதும் சில இடங்களில் அவர்களிடம் சண்டையிட்ட கதைகளும் நடந்தன.
பாரதப் பிரதமர் முன்களப் பணியாளர்களை வாழ்த்தும் விதமாக அனைத்து மக்களையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கைதட்ட சொன்னபோதே இளைய மருத்துவர் ஒருவர், “இப்ப கையைத் தட்டுவாங்க, அடுத்து கட்டை கம்பால நம்மைத் தட்டுவாங்க” என்றார்.
அதுவும் ஒரு கட்டத்தில் நடக்கத்தான் செய்தது.
எங்களைப் போன்ற சிறு நகரங்களைப் பொறுத்தவரை மும்பை சென்னையில் இருந்து வந்த மக்களை மாவட்ட எல்லையில் தனிமைப்படுத்தி, முகாம்களில் வைத்து, அங்கு ஆர் டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. கோவிட் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டவர்களைக் கூட்டி வந்து தனிமையில் வைத்து நாங்கள் சிகிச்சை அளிக்கத் துவங்கினோம். அவர்களுக்கு உடல் நோயை விட மன உளைச்சலே அதிகமாக இருந்தது. கவச உடை போட்டுக் கொண்டு வரும் நபர்களைப் பூச்சாண்டிகளாக மக்கள் பார்த்தார்கள். இந்த பயமும் பதட்டமுமே முதல் அலையில் பிரதானமாக இருந்தது. ஊரில் ஒருவர் மரணம், அதன் பின் பலருக்குப் பரிசோதனை, சிலருக்கு பாசிட்டிவ், அவர்களைக் கூட்டி வருதல், சிகிச்சை அளித்தல், மறுபடியும் வீட்டுக்கு அனுப்புதல் இப்படியே அந்த அலை கழிந்தது.
‘அப்பாடா முடிந்தது!’ என்று மூச்சு விட்டு நிமிர்வதற்குள் அடுத்த அலை. முதல் அலையே பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு மோசமாக இருந்தது இரண்டாம் அலை. இந்த முறை மக்கள் மனநிலைகளில் பெரிய முன்னேற்றம். கொரோனா வந்தால் இப்படித்தான் இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டிருந்தனர், சிகிச்சை பெறாதவர்கள் மூச்சுத் திணறலால் இறந்து விடுவார்கள் என்பதையும் பெரும்பான்மையானவர்கள் உணர்ந்து கொண்டனர்.
கொரோனா அறிகுறி என்றாலே ‘ஓடு அரசு மருத்துவமனைக்கு!’ என்று கூறிய தனியார் மருத்துவர்களும் மெல்ல மெல்ல கொரோனாவுக்கான ஆரம்பகட்ட சிகிச்சைகளை வழங்கத் துவங்கினர். எல்லாரையும் போலவே கொரோனாவுடன் வாழப் பழகிக் கொண்டோம். இருந்தும் திடீரென்று பல மடங்கு அதிகரித்த மூச்சுத்திணறல் நோயாளிகளால் படுக்கைகள் நிரம்பி வழிந்தன. ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை, அத்தியாவசிய மருந்துகள் இல்லை. முதல் அலையைப் போலவே இந்த அலையிலும் மருத்துவர்களும், செவிலியர்களும், துப்புரவுப் பணியாளர்களும் பாதிக்கப்பட்ட நிலை. நாட்கள் நகர நகர பல உயிரிழப்புகள், பல மனஅழுத்தங்கள் மத்தியில் இரண்டாம் அலையும் இப்போது சற்றே ஓய்ந்திருக்கிறது.
கடந்த ஒன்றேகால் ஆண்டு காலத்தைத் திரும்பிப் பார்த்தால் மக்கள் மனங்களில் மருத்துவமனைகள் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கை வளர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. எங்கள் மருத்துவமனையையே எடுத்துக்கொண்டால், தனியார் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் வேறுவழியின்றி அரை மனதுடன் வந்த வசதிபடைத்த நோயாளிகள் திருப்தியுடன் திரும்பிச் சென்றதைப் பார்க்க முடிந்தது. நலம் பெற்று வீடு திரும்புகையில் மருத்துவமனையில் என்னென்ன இல்லை என்பதைக் கவனித்து, கழிப்பறைக்கு வாளி, கப் போன்ற சிறிய பொருட்களிலிருந்து மின்விசிறி, கிரைண்டர், மாஸ்க்குகள் போன்ற பொருட்கள் வரை நன்கொடையாக வாங்கித் தந்து விட்டுப் போனார்கள். ஒருவித தயக்கத்துடனே மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்தவர்கள் திருப்தியுடன் திரும்பிச் சென்றதை எங்களால் உணர முடிந்தது. இப்போது தொடர் சிகிச்சைக்கும் தவறாமல் வருகின்றனர். தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் உறவினர்களைக் கூட்டி வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத விதமாக இந்த ஆண்டு மருத்துவர் தினத்திற்கு பலர் தேடிவந்து வாழ்த்து தெரிவித்தனர்.
கொடுமையான போர் முடிந்த போர்க்களத்திலும் பின்னொரு காலத்தில் ஒரு பூ பூக்கும் என்பதற்கிணங்க, இந்தப் பேரிடர் காலம் மக்களுக்கு மருத்துவத் துறையின் மீது கொஞ்சம் அதிக நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது.
இந்த அனுபவத்தின் பின்னணியில் மருத்துவ வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கையில், பல்வேறு கண்டுபிடிப்புகள், மனித வரலாற்றில் திருப்புமுனையாக, மக்களின் மன ஓட்டங்களை, வாழ்க்கை முறைகளையும் மாற்றத் தக்கதாக அமைந்தது காணக்கிடைக்கிறது.
அதில் முக்கியமான சிலவற்றைக் கூற வேண்டும் என்றால் முதலில் என் நினைவுக்கு வருவது தடுப்பூசியின் கண்டுபிடிப்பு. அரசாங்கத்திலிருந்து தடுப்பூசி போட வருகிறார்கள் என்றாலே ஓடி ஒளிந்த காலம் ஒன்று உண்டு. வருடா வருடம் அம்மைக்கான தடுப்பூசியை செலுத்த வீடுவீடாக வருவார்கள், அப்போது ஒளிந்து கொள்வோம் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பள்ளியில் தடுப்பூசி போட வருகிறார்கள் என்பது முன்பே தெரிந்துவிட்டால் பள்ளிக்கு பாதிக்கு மேற்பட்ட பேர் மட்டம் போட்டு விடுவார்களாம். இப்படி இருந்த சூழ்நிலை மாறி, இன்று National immunisation schedule அட்டவணையில் உள்ளபடி அனைத்துத் தடுப்பூசிகளையும் தங்கள் குழந்தைகளுக்கு முறையாக செலுத்தி விடுகிறார்கள். சில பெற்றோர் சிக்கன் பாக்ஸ், டைஃபாய்ட் போன்ற கூடுதல் தடுப்பூசிகளையும் (optional vaccines) செலுத்திக் கொள்கிறார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா போன்ற ஓரளவு முன்னேற்றம் அடைந்த பகுதிகளிலேயே குழந்தைகள் 5 வயதுக்கு மேல் உயிர் வாழும் விகிதம் 50 சதவீதமாகத் தான் இருந்தது. சிறு குழந்தைகளுக்கு சின்னம்மை, கக்குவான் இருமல், தட்டம்மை, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டன. ஒரு தம்பதிக்கு பத்து குழந்தைகள் பிறந்தால் அதில் ஐந்து பிழைப்பது பெரிய விஷயமாக இருந்தது. எட்வர்ட் ஜென்னர் பால்காரர்களை மட்டும் சின்னம்மை நோய் தாக்குவதில்லை என்பதைக் கவனித்தார். அதற்குக் காரணம் அவர்களை பசுவிலிருந்து வரும் கௌ பாக்ஸ் (cow pox) கிருமிகள் ஏற்கனவே தாக்கியதால் இருக்கலாம் என்று அனுமானித்தார். அடுத்த கட்ட சோதனைகளைச் செய்து தன் அனுமானம் உண்மை என்றும் நிரூபித்தார்.
மருத்துவ உலகில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது அந்தக் கண்டுபிடிப்பு. உலகம் முழுவதும் பரவியிருந்த பெரியம்மை நோயை முற்றிலும் ஒழித்த ஒன்றாகவும், போலியோ போன்ற பெரு நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையை விதைத்ததாகவும் அந்தக் கண்டுபிடிப்பு அமைந்தது.
இப்போது கொரோனா தடுப்பூசிக்கு எதிராகக் கிளம்பும் வதந்திகளைப் போல் அப்பொழுதும் நிச்சயம் கிளம்பியிருக்கும். மதரீதியான, இன ரீதியான கொள்கைகளுக்கு எதிரானதாகக் கூட தடுப்பூசி பார்க்க்கப்பட்டிருக்கும். அத்தனையையும் மீறி பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி. அந்த வெற்றியே, எந்தப் பெரு நோய் வந்தாலும், ‘இன்னும் தடுப்பூசி கண்டு பிடிக்கலையா?’ என்று கேட்பதற்கு அடித்தளமாக அமைந்தது.
இதேபோல் மக்கள் ஆரம்பத்தில் மறுத்து, அதன்பின் அரசு அதிகபட்ச போராட்டங்களுக்குப் பின் ஒத்துக் கொள்ள வைத்த ஒரு விஷயம், குடும்பக் கட்டுப்பாடு. குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைத் தீவிரப்படுத்தியதால் ஒரு ஆட்சியே கவிழ்ந்தது என்று கூறுவார்கள். இப்போது இரண்டு குழந்தைகளைப் பெற்று விட்ட 99% பேர் தாங்களாகவே கருத்தடை முயற்சிகளை விரும்பிக் கேட்கிறார்கள். இதனாலேயே உலகில் மக்கள் தொகை பெருக்கம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.
‘ஆடிமாசம் பிறக்கப்போகுது. அதனால ஆனி மாச கடைசி முகூர்த்தத்துல சிசேரியன் வச்சுக்கலாமா டாக்டர்?’ என்று கேட்பது இந்த நாட்களில் சாதாரணமாகிவிட்டது. இத்தகைய நல்ல நாள் விருப்பங்கள் தவறு தான் என்ற போதும், பேறுகால மரணங்களைத் தடுப்பதில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு இருக்கும் பங்கு மகத்தானது. 16ஆம் நூற்றாண்டில் குழந்தையை காப்பாற்றும் நோக்கிலேயே அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தாயைக் காப்பாற்றுவது இயலாது என்ற சூழ்நிலையில் குழந்தையாவது கிடைக்கட்டுமே என்பதற்காக மயக்க மருந்து எதுவும் இல்லாமல் அத்தகைய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. அதன்பின் படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அதிக ரத்தப்போக்கைத் தடுப்பதற்காக கர்ப்பப்பையே அகற்றப்பட்டது. குழந்தையை எடுத்த பின் கருப்பை தைக்கப் படாமல் அப்படியே விடப்பட்ட காலமும் உண்டு.
தாய், குழந்தை இருவரும் பிழைத்துக் கொண்ட முதல் அறுவை சிகிச்சையை 1580ம் ஆண்டில் ஜேக்கப் நூஃபர் என்பவர் செய்திருக்கிறார். பன்றிகளுக்கு விதை நீக்கம் செய்வதைத் தொழிலாகக் கொண்ட அவர், தன் மனைவி, 13 செவிலித்தாய்கள் உடனிருந்தும் வெகுநேரமாகப் பிரசவம் ஆகாமல் தவித்ததைக் கண்டு தன் கூரிய ஆயுதங்களுடன் களத்தில் இறங்கினார் என்கிறார்கள். அதில் உயிர் பிழைத்த அவரது மனைவி, அதன் பின் ஐந்து குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார் என்றும் வரலாறு கூறுகிறது. அதற்கு 300 ஆண்டுகளுக்கு அப்புறமாகத் தான், 1853ல் விக்டோரியா மகாராணியின் பிரசவத்திற்காக குளோரோஃபார்ம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இன்றைய தேதியில் 70 அல்லது 80 வயதைக் கடந்த பெண்கள் சிலர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக தங்களுக்கு சிசேரியன் செய்யப்பட்டதாக என்னிடம் கூறியிருக்கிறார்கள். தொப்புளுக்கு மேல் இருந்து அடிவயிறு வரை மேலிருந்து கீழாக பெரிதாக கிழிக்கப்பட்டே அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. (Classical caesarean section). அத்தகைய தளும்புகளை முதிய பெண்களில் இன்றும் காணலாம். அதற்குப் பின்னாலேயே அடிவயிற்றில் பிளவு ஏற்படுத்தி செய்யும் சிகிச்சை (Pfannensteil incision) பிரபலமாகியது.
கைகளைக் கழுவும் பழக்கம், கருவிகளை சுத்திகரிக்கும் பழக்கம் மற்றும் ஆன்டிபயாடிக்குகளின் கண்டுபிடிப்பு, இவை சிசேரியன் உட்பட அனைத்து அறுவை சிகிச்சைகளையும் வேறு ஒரு பாதுகாப்பான தளத்திற்குக் கொண்டு சென்றது என்பதை மறுக்க முடியாது. படிப்படியான இந்த முன்னேற்றங்கள், மருத்துவ வரலாற்றில் நினைவில் கொள்ளத் தக்கவை.
உலக மக்கள் தொகையில் பாதியான பெண்ணினம் அகால மரணம் அடையாமல் தழைத்திருப்பதற்கும் பல குழந்தைகள் தாயின் அரவணைப்பிலேயே வளர்ப்பதற்கும் பிரசவத்திற்கான சிகிச்சையில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் புதிய கண்டுபிடிப்புகளுமே மிக முக்கிய காரணம். எளிதிலும் எளிதாக, “பிரசவமா? ஒன்று, நார்மல். இல்லை சிசேரியன். அவ்வளவுதானே!” என்று இன்றைய உலகம் எடுத்துக் கொள்ளும் நிலை சாதாரணமாக ஒரே நாளில் வந்த மாற்றமில்லை.
பொது அறுவை சிகிச்சைகளை எடுத்துக் கொள்வோம். ஒரு காலத்தில், முயன்று பார்ப்போம், இல்லையேல் மரணம் தழுவட்டும் என்ற நிலையில் இருக்கும் வியாதிகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. நான்கு பேர் சேர்ந்து கை காலை அழுத்திப் பிடித்துக்கொண்டு, அழுகி விட்ட புண்களைக் கீறியதும், பெரிய கட்டிகளை அகற்றியதும் பரவலாக நடந்தது. நோயாளி பிழைத்தால் லாபம், இல்லாவிட்டால் இல்லை என்பதுதான் நிலை. அந்தச் சூழலில் சிறிய காய்ச்சலுக்கும், பல் சொத்தைக்கும் கூட உயிர்கள் பலியாயின என்று கூறினால் இன்றைய தலைமுறைக்கு நம்புவது கடினமாக இருக்கும்.
மதுவையும், சில போதை மருந்துகளையும் கலந்து கொடுத்து லேசான மயக்க நிலையில் ஆழ்த்தி சில அறுவை சிகிச்சைகளை ஆரம்பகாலத்தில் செய்தார்கள். அதன் பின் தற்போதைய திரைப்படங்களின் காமெடி காட்சிகளில் கட்டையால் தலையில் தாக்கி மயக்க நிலைக்குக் கொண்டு செல்வது போல் செய்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1844ல் தான் முதன்முதலில் பல் பிடுங்குவதற்கு ஹோரேஸ் வெல்ஸ் என்ற பல்மருத்துவர் நைட்ரஸ் ஆக்சைடை பயன்படுத்தினார். அதற்கு முன்பாக 1842ல் ஈதர் பயன்படுத்தப்பட்டது. குளோரோபார்ம் 1847ல் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் வியக்கத்தக்க வகையில் நடந்த மயக்க மருந்துகளின் வரவால் இன்று ‘தூங்காமல் தூங்கி’ விழிக்கச் செய்யும் மயக்கவியல் மருத்துவம் மனிதனின் வாழ்நாளை இருபது வருடங்களுக்கும் அதிகமாக நீட்டித்திருக்கிறது.
ஒரு சக்கரத்தின் கண்டுபிடிப்பு ஆதி மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றியமைத்தது போல, சிறிய ஸ்க்ரூவின் கண்டுபிடிப்பு ராக்கெட் விஞ்ஞானம் வரை பயன்படுவது போல, பல சிறிய கண்டுபிடிப்புகளும் மருத்துவ உலகில் குறிப்பிடத்தக்கவை. ஊசி போடும் சிரிஞ்ச், நுண்ணுயிரிகள், ஆன்ட்டிபயாட்டிக்கள், மைக்ரோஸ்கோப், இதயம்- ரத்த ஓட்டத்தின் பின்னுள்ள ரகசியம், ஸ்கேன் எக்ஸ்ரே போன்ற கண்டுபிடிப்புகள், லேப்பரோஸ்கோபி, லேசர், ரோபோடிக்ஸ் இப்படி மனித மூளை கண்டுபிடித்த பல வியக்கத்தக்க விஷயங்கள் மனிதகுலத்தின் காக்கும் சக்திகளாக அமைந்ததை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இவற்றிற்கான முயற்சிகளில் எத்தனையோ இடையூறுகள் வந்திருக்கும், பல விஞ்ஞானிகள் உயிரிழந்த பின்பு தான் அவர்களது முயற்சிகளை உலகம் அறிந்திருக்க வேண்டும். கலகம் பிறந்தால்தான் நன்மை பிறக்கும் என்பதை அவர்களும் முன்கூட்டியே உணர்த்து கலங்காமல் தங்கள் வியர்வையை சிந்தியிருக்கிறார்கள். மக்கள் மனதில் மருத்துவத்துறை மீதான நம்பிக்கையை வளர்க்க அந்த வியர்வைத் துளிகளே காரணிகளாய் அமைந்ததும் உண்மை.
(இலக்கிய உலகில் அடியெடுத்து வைக்கும் கலகம் இதழால் தமிழ் கூறும் நல்லுலகில் பல நன்மைகள் பிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!)
Dr. அகிலாண்ட பாரதி
எழுதியவர்
-
நெல்லைச்சீமை தென்காசி அருகே இடைகால் கிராமத்தை சார்ந்தவர். மதுரை மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவமும் கண் மருத்துவமும் பயின்றவர். மருத்துவராக தற்போது பணிபுரிகிறார். தீவிர வாசிப்பின் காரணமாக தமிழிலக்கியத்தில் ஆக்கங்கள் பல எழுதி வருகிறார்.
இதுவரை சுமார் பன்னிரெண்டு நாவல்கள், பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். பல போட்டிக்கதைகளில் பரிசுகளும் பெற்றுள்ளார். ’பூஞ்சிட்டு’ என்னும் சிறுவர் கதை இணைய தளத்தின் ஆசிரியர்களுள் ஒருவர். ‘கதை சொல்லு கதை கேளு’ என்னும் வாட்ஸாப் குழுமத்தைத் தொடங்கி சுமார் இரண்டரை வருடங்களாக இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்குத் தினமும் தவறாது பழைய புதிய கதைகளைச் சொல்லி, ஆயிரம் கதைகளைத் தாண்டி இருக்கிறது அந்நிகழ்வு. ஆர்வமுடன் அதைக் கேட்கிற பல குழந்தைகள் தங்கள் பள்ளியில் கதை சொல்லும் போட்டியில் கலந்து பரிசுகளை அள்ளுகிறார்கள். டாக்டர் விகடன், குங்குமம் டாக்டர், கண்மணி எனப் பல வார இதழ்களில் தொடர் மருத்துவக் கட்டுரைகள் எழுதி வருகிறார் இந்தக் ’கதைசொல்லி’.
இதுவரை.
- மருத்துவம்20 July 2021பாதைகள்; பயணங்கள்!