16 June 2024

ஜூலை 18ம் தேதி நெல்சன் மண்டேலாவின்  பிறந்த தினம். சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.  இதனையொட்டி கலகம் காலாண்டு இணைய இதழுக்காக கவிஞர் மதுரா மொழிபெயர்த்து அளித்த நேர்காணல் இதோ..!

ஏப்ரல் 2001 ஓபரா (oprah) இதழில் வெளியான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் நிறைவெறிக்கெதிரான போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலாவின் நேர்காணல்.

ஓபரா : 

சென்ற முறை நாம் பேசியபோது “நான் சிறைக்கு சென்றிருக்காவிட்டால் என்னுள் ஏற்பட்டிருக்கும் இம்மாற்றமெனும் கடினமான சாதனையை நான் அடைந்திருக்க முடியாது”என்று கூறினீர்கள். இந்த 27 வருடங்கள் உங்களுக்குள் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது?

நெல்சன் மண்டேலா : 

சிறைக்குப் போகுமுன் நான் தீவிர அரசியலில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி கட்சியின் அங்கமாக,காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை ஈடுபட்டிருந்தேன். சற்று உட்காரவோ யோசிக்கவோ நேரமில்லை. நான் வேலையாக இருந்தபோது என் உடலும் மனமும் அதில் மூழ்கியிருந்தது. என் முழு அறிவுத்திறமையையும் உபயோகப்படுத்த முடியாமலிருந்தது. ஆனால் ஒரு சிறு அறையில் அடைபட்டபோதே எனக்கு சிந்திக்க நேரம் கிடைத்தது.

கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் பற்றியத் தெளிவான பிம்பம் கிடைத்தது. என்னுடைய பழைய வாழ்க்கை மேலும் செழுமைப்படுத்த வேண்டியதாக உணர்ந்தேன். உறவுகளையும் மற்ற மனிதர்களுடனுமான என் தனித்துவம் மேம்பட வேண்டும் என புரிந்து கொண்டேன்.

ஓபரா : 

எந்த வகையில் உங்கள் கடந்த காலத்தை இன்னும் சிறப்பாக்கியிருக்கலாம் என எண்ணுகிறீர்கள்?

நெல்சன் மண்டேலா : 

நான் 1940 ல் ஜோஹன்ஸ்பர்க்கை அடைந்தபோது என் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டேன்.

கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பிக்க வீட்டைவிட்டு நான் ஓடிப்போனது அவர்களுக்கு பெருத்த அடியாக இருந்தது.

ஜோஹன்ஸ்பர்கில் என் மீது அன்பு செலுத்த நிறையபேர் இருந்தார்கள். ஆனால் நான் படித்து ஒரு வழக்கறிஞரானதும் அரசியலில் தீவிரமானதால் அவர்களைப் பற்றி நினைக்கக் கூட இயலவில்லை.

சிறையிலிருந்த போது இன்னாருக்கு என்ன ஆனது? நான் ஏன் திரும்ப சென்று நன்றி கூறவில்லை? என ஆச்சரியப்பட்டேன். யார் ஆதரவு அளித்து அரவணைத்தார்களோ அவர்களிடம் மனிதனாகக் கூட நடக்காமல் சிறுமைப்பட்டு விட்டேன்.

எப்போதாவது சிறையிலிருந்து விடுதலையானால் அவர்களுக்கு அவர்கள் குழந்தைகளுக்கு பேரக்குழந்தைகளுக்கு என்னாலனதைச் செய்து விட வேண்டும்.

யாராவது நமக்கு நன்மை செய்தால் அவர்களுக்குத் திரும்ப செய்துவிட வேண்டும். இப்படித்தான் என் வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஓபரா : 

மிகச் சரி.

நெல்சன் மண்டேலா : 

நான் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.. திரும்பக் கொடுத்தல்..

எந்த வளமும் இல்லாதவர்கள், ஏழைகள், படிப்பறிவில்லாதவர்கள், நோயாளிகள் இவர்களுக்கெல்லாம் சிறு மகிழ்ச்சியை தரக்கூடிய எந்த நிகழ்வுமில்லாத விடியல்களைக் கண்டே நான் அஞ்சுகிறேன்.

அவர்களுக்கு உதவ இயலாத நிலை வருமேயானால் அதுவே என்னைக் கொன்றுவிடும். என் வாழ்வின் சிறு கணமாவது அவர்களை மகிழ்விக்க உதவுமாயின் அதுவே எனக்கும் மகிழ்ச்சி.

ஓபரா : 

ஆக, நீங்கள் அதிகாலையில் விழிக்கும்போது அந்த நாள் கொடுப்பதற்கானது ?

நெல்சன் மண்டேலா : 

குறிப்பாக, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், சமுதாயக் கூடங்கள் கட்டுவது மற்றும் குழந்தைகளுக்கான உதவுத்தொகை வழங்குவது.. அத்தோடு என் குடும்பத்திற்கான கடமையும்…

ஓபரா : 

நீங்கள் அங்கிருந்து உதவ முடியாத அந்த வருடங்களை இப்போது ஈடு கட்ட நினைக்கிறீர்கள்?

நெல்சன் மண்டேலா : 

அதற்கு தான் அதிக முக்கியத்துவம் என்றில்லை.. என் வாழ்வின் எஞ்சிய நாட்களை ஏழைகளுக்கு, அவர்கள் முன்னிருக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவ விரும்புகிறேன்.

வறுமையே மனிதகுலத்தின் மிகப்பெரிய சவால்.

அதனால் தான் கல்வியைப் புகட்டி  ஏழ்மையை அகற்ற பள்ளிக்கூடங்களைக் கட்டுகிறேன்.

ஓபரா : 

 நீங்கள் முதல்18 வருடங்கள் தண்டனையனுபவித்து சிறையிலிருந்த ராபன் தீவுக்கு சமீபத்தில் செல்ல நேர்ந்தது.

நீங்கள் இரண்டு மூன்று வயதில் பார்த்த உங்கள் மகள்களை 16 வயதுவரை சந்திக்கவே இல்லை என கேள்விப்பட்டேன். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

நெல்சன் மண்டேலா : 

குழந்தைகளைப் பற்றிய எண்ணங்களை நான் விலக்கி வைத்திருந்ததால் தான் அவர்களைப் பார்க்கவில்லை. 27 வருடங்களாக யாரையும் சந்திக்கவில்லை. சிறை வாழ்க்கை கொடுத்த கொடூரத் தண்டனைகளில் இதுவும் ஒன்று. ஒரு தேசத்துக்கு குழந்தைகள் தான் முக்கிய சொத்து. அப்படி அவர்கள் பரிமளிக்க பெற்றவர்களிடமிருந்து கல்வியையும் அன்பையும் அவர்கள் பெறவேண்டும்.

நீங்கள் சிறையிலிருக்கும் போது உங்கள் குழந்தைகளுக்கு அவற்றைக் கொடுக்க முடியாது.

ஓபரா : 

ஓருவர் தன் சொந்தக் குழந்தைகளைக் காணவோ, தொடவோ, அரவணைக்கவோ அனுமதிக்காத ஓருலகு… கற்பனை செய்யவும் கடினமானது. இது உங்களுக்கு பேரிழப்பல்லவா?

நெல்சன் மண்டேலா : 

நிச்சயமாக

ஓபரா : 

வேறு எதையெல்லாம் நீங்கள் இழந்தீர்கள்?

நெல்சன் மண்டேலா : 

என் குடும்பத்தை என் மக்களை.. உண்மையில் பலவிதங்களிலும் சிறையிலுள்ளவர்களை விட வெளியிலிருப்பவர்கள் அதிக கஷ்டப்படுகிறார்கள்.

சிறையில் எங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைத்தது. நல்ல உடை கிடைத்தது. மருத்துவ உதவி கிடைத்தது. 12 மணி நேரம் தூங்க முடிந்தது. ஆனால் வெளியிலிருப்பவர்களுக்கு இவை கிடைக்கவில்லை.

ஓபரா : 

நீங்கள் வெளி உலகில் தொடர்பற்றிருந்ததாக உணர்ந்தீர்களா?

நெல்சன் மண்டேலா : 

வெளியுலகோடு எங்கள் வழியில் நாங்கள் தொடர்போடிருந்தோம். இங்கு நடப்பவை இரண்டு மூன்று நாள் கழித்து எங்களுக்குத் தெரியவரும். சில வார்டன்கள் எங்களுடன் நட்பாகவே இருந்தார்கள்.

அவர்களிடம் எங்களைக் குப்பைக் கிடங்குக்கு அழைத்து செல்லக் கேட்போம்.

அங்கே செய்தித்தாள்கள்  குவிந்துகிடக்கும்.அவற்றை சுத்தம் செய்வது போல் ஒளித்து எங்கள் அறைகளுக்கு எடுத்துச் சென்று படிப்போம்.

ஓபரா : 

தினமும் வாசிப்பது கூட இருப்பவர்களை வாசிக்க ஊக்குவிப்பது என முன்பு இருந்ததை விட மிகவும் ஒழுங்கை சிறையில் கடைப்பிடித்திருக்கிறீர்களே ஏன்?

நெல்சன் மண்டேலா : 

எந்த ஒரு தேசமும் அதன் குடிமக்களுக்கு கல்வியறிவு அளிக்காமல் முன்னேற முடியாது. முன்னேறிய நாடுகளெல்லாம் அந்நாட்டு மக்களின் சிறப்பான கல்வியறிவினாலேயே வழிநடத்தப்படுகிறது. நாம் நம்முடைய வாழ்வை சிறையில் கூட மேம்படுத்திக் கொள்ள முடியும் என எனக்குத் தெரியும். நாம் வேறொரு மனிதனாக இரண்டு பட்டங்களைப் பெற்றவராகவும் வெளிவர முடியும்.கல்வியறிவு அடைவதன் மூலம் நம்முடைய சுதந்திரத்திற்கான வலிமையான ஆயுதத்தை நமக்கு நாமே வழங்கிக் கொள்ளமுடியும்.

ஓபரா : 

ஒரு புத்திசாலி மனிதனாக வெளி வந்திருக்கிறீர்களா?

நெல்சன் மண்டேலா : 

நான் சொல்வதெல்லாம் உள்ளே சென்ற போது இருந்ததை விட குறைவான முட்டாள்தனத்தோடு வெளி வந்திருக்கிறேன். இலக்கியத்தைப் படித்ததன் மூலம், குறிப்பாக “The Grapes of Wrath” போன்ற செவ்வியல் புதினங்களைப் படித்ததன் மூலம் என்னை முழுமையாக்கிக் கொண்டிருக்கிறேன்.

ஓபரா : 

எனக்குப் பிடித்தப் புத்தகமும் கூட

நெல்சன் மண்டேலா : 

நான் அந்த புத்தகத்தை முடித்த போது முற்றிலும் வேறான மனிதனாக மாறியிருந்தேன். என்னுடைய சிந்திக்கும் திறன் மற்றும் ஒழுங்கு மற்றும் தொடர்புகளை அது மேம்படுத்தியது. நான் சிறைக்கு சென்ற போதை விட வெளியே வந்த போது அதிகம் அறிந்தவனானேன். மேலும் நிறைய விஷயங்களை அறிந்துகொள்ளும் போது நம்முடைய ஆணவம் முரட்டுத்தனம் எல்லாம் குறைந்து விடுகிறது..

ஓபரா : 

நீங்கள் ஆணவத்தை வெறுக்கிறீர்களா?

நெல்சன் மண்டேலா : 

நிச்சயமாக..

என்னுடைய இளமையில்  நான் ஆணவமாக இருந்திருக்கிறேன். சிறை அதிலிருந்து என்னை மீட்டிருக்கிறது. நான் எதுவுமே செய்யவில்லை ஆனால் என்  ஆணவத்தினால் எதிரிகளை சம்பாதித்திருக்கிறேன்.

ஓபரா : 

வேறு எந்த குணாதிசயங்களை நீங்கள் வெறுப்போடு பார்க்கிறீர்கள்?

நெல்சன் மண்டேலா : 

அறியாமை… நம்மை பிரிக்கும் விஷயங்களுக்குப் பதிலாக ஒன்றிணைப்பவற்றைப் பார்க்கத் திறனற்ற மனிதரின் இயலாமை.

ஒரு நல்ல தலைவன் வெளிப்படையான முழுமையான விவாதத்தில் தன்னை ஈடுபடுத்தி எந்த முனையில் எதிராளியையும் தன்னுடன் இணைத்து மேலும் வலிமையாவது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

நீங்கள் அகங்காரத்துடனும் மேலோட்டமாகவும் விபரமற்றவராகவும் இருக்கும் பட்சத்தில் இந்த யோசனை வராது.

ஓபரா : 

உங்களுடைய கண்ணோட்டத்தில் நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் ஒரு நல்ல தலைவனுக்கு சமாதானத்தை ஏற்படுத்துவதே நோக்கமாயிருக்கும்.

நெல்சன் மண்டேலா : 

அது உண்மை தான். ஒரு ஆபத்து ஏற்படும்போது நல்ல தலைவன் முன்னால் வந்து நிற்கவேண்டும்.அதே சமயம் கொண்டாட்டங்களில்  அவன்  பின்னணியில் இருக்க வேண்டும்.

ஓபரா : 

நீங்கள் மதிப்பவர்களிடம் கண்ட போற்றத்தக்க பண்புகள் என்னென்ன?

நெல்சன் மண்டேலா : 

சிலநேரங்களில் நம்முடன் இருப்பவர்களையே விமர்சிக்க நேரிடும். அது தவிர்க்க முடியாததும் கூட.

ஒரு தவறை சுட்டிக்காட்டும் போதே அவர் செய்த நல்ல விஷயங்களையும் வெளிக்கொணரும் பண்பு கொண்ட தலைவனை எனக்குப் பிடிக்கும். அவ்வாறு செய்யும் போதே அம்மனிதரைப் பற்றிய முழுக் கணிப்பு உங்களிருக்கிறது என்பதை அறிவார்.நீங்கள் சரியாகக் குற்றஞ்சாட்டியிருந்தால் கூட அவரைப் போல அபாயகரமானவர் யாருமிருக்க முடியாது.

ஓபரா : 

இப்போது இங்கு அமர்ந்து உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கூட… நீங்கள் ஏழுக்கு ஒன்பதடி உள்ள சிறிய சிறையில் தன் வாழ்நாளைக் கழித்த ஒருவர் என்பதை நம்ப இயலவில்லை. சில வருடங்கள் கழித்து அங்கு செல்ல நேர்ந்தால் இது தான் நீங்களிருந்த சின்னஞ்சிறிய இடம் என்பதை நம்புவீர்களா?

நெல்சன் மண்டேலா : 

பின்னர் நான் அதற்குப் பழகிவிட்டேன், தினமும் காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி செய்வது போன்ற எல்லா வகையான காரியங்களையும் என்னால் செய்ய முடிந்தது. ஆனால் இப்போது நான் வெளியில் வந்துவிட்டேன். நான் அத்தனை சிறிய இடத்தில் எப்படி உயிர்வாழ்ந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை..

ஓபரா : 

பகல் நேரத்தில், நீங்கள் சுண்ணாம்பு குவாரிகளில் கடின உழைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, ​​உங்கள் சகாக்களுடன் பேசவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் நான் சிறைக்குச் சென்றபோது  ஒவ்வொரு நாளும் மாலை நான்கு மணிக்கு சிறைக் கதவுகள் மூடப்படும் என்றும் யாருடனும் நீங்கள் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் சொன்னார்கள்

நெல்சன் மண்டேலா : 

உண்மை தான். ஆனால் நாங்கள் அந்த விதிகளை சவாலாக்கினோம். மூத்த மேலதிகாரிகள் வார்டன்களை புழுவை விடக் கேவலமாக நடத்தினார்கள். ஆனால் நாங்கள் அவர்களுக்கு மரியாதை கொடுத்தோம். அதனால் அவர்கள் எங்களுக்கு உதவினார்கள். அதிகாரிகள் கதவை மூடி சென்ற பிறகு வார்டனகள் கதவைத் திறப்பதைத் தவிர மற்ற விஷயங்களுக்கு அனுமதித்தார்கள். அதுவும் அவர்களிடம் திறப்பதற்கான சாவிகள் இல்லாததால்.

எங்களை பக்கத்து எதிர்த்த சிறைகளில் இருந்தவர்களுடன் பேச அனுமதித்தார்கள்.

நாங்கள் வார்டன்களை நடத்திய விதம் அவர்களை நல்ல மனிதர்களாக்கியது

ஓபரா : 

மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நெல்சன் மண்டேலா : 

எந்த சந்தேகமுமில்லை.

 ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள நல்ல குணத்தை நீங்கள் எழுப்ப முடிந்தால், போதும். நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் எங்களில் பலர் எங்களை வெறுக்கிற பலபேரை மாற்றினார்கள், ஏனென்றால் நாங்கள் அவர்களை மதிக்கிறோம் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.

ஓபரா : 

உங்களை ஒடுக்கும் மக்களை எவ்வாறு மதிக்க முடியும்?

நெல்சன் மண்டேலா : 

 தனிநபர்கள் தங்கள் நாட்டின் கொள்கையில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிறையில், உதாரணமாக, ஒரு வார்டன் அல்லது அதிகாரி அரசாங்கத்தின் கொள்கையைப் பின்பற்றாவிட்டால் அவர் பதவி உயர்வு பெறமாட்டார் – அந்த கொள்கையை அவரே நம்பவில்லை என்றாலும்.

ஓபரா : 

ஆகவே, ஒரு கொள்கையை மட்டுமே செயல்படுத்தும் ஒருவரை நீங்கள் மாற்றமுடியும் ஏனெனில் அது அவரின் கொள்கையல்ல.

நெல்சன் மண்டேலா : 

முற்றிலும் சரி.. நான் சிறைக்குச் சென்றபோது, ​​நான் ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞராக இருந்தேன். வார்டன்களுக்கு கோரிக்கைகள் அல்லது சம்மன் கடிதங்கள் வந்தபோது, ​​அவர்களுக்கு உதவ ஒரு வழக்கறிஞரிடம் செல்ல அவர்களுக்கு வழி இல்லை. அவர்களின் வழக்குகளைத் தீர்ப்பதற்கு நான் அவர்களுக்கு உதவுவேன். எனவே , அவர்கள் என்னுடனும் மற்ற கைதிகளுடனும் நெருக்கமானார்கள்.

ஓபரா : 

உங்கள் சுயசரிதையில், உங்கள் எதிரியை அவமதிக்காமல் தோற்கடிக்க முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று சொல்கிறீர்கள். அதை நீங்கள் எவ்வாறு கற்றுக்கொண்டீர்கள்?

நெல்சன் மண்டேலா : 

நிறவெறி ஆட்சியாளர்களுடன் நானும் என் சகாக்களும் பேச விரும்பவில்லை, ஆனால் எங்களில் சிலர் எங்களது ஒடுக்குமுறையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் வேலையைச் செய்தோம். உதாரணமாக, கறுப்பர்கள் ஜோகன்னஸ்பர்க்கை விட்டு வெளியேறி தங்கள் தாய்நாட்டிற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, ​​ஒரு மனிதன் என்னிடம் வந்து, “எனக்கு உதவுங்கள். நான் என் வேலையை இழந்துவிட்டேன். எனக்கு பள்ளியில் ஒரு மனைவியும் குழந்தைகளும் உள்ளனர், இப்போது நான் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ”  என்றால்

ஒரு வழக்கறிஞராக, நான் உயர் அதிகாரிகளிடம் சென்று, “இதோ, நான் உங்களை ஒரு மனிதனாக அணுகுகிறேன், இங்கே என் பிரச்சினை இருக்கிறது, நான் உங்களை நம்புகிறேன்” என்று கூறுவேன். வேறுவழியின்றி, அவர் அம்மனிதனை வேலையைத் தேட அனுமதிப்பார். ஆகவே, சிறைக்குச் செல்வதற்கு முன்பே நான் அறிந்திருந்தேன். நிறவெறி ஒற்றைச்சார்பு அணுகுமுறை கொண்டவர்களால் இயக்கப்படவில்லை. அவர்களில் சிலர் நிறவெறியை நம்பியது கூட இல்லை.

நீங்கள் அந்த நபர்களுடன் உட்கார்ந்து பேசினால் நிறவெறி ஒருபோதும் தேசத்தைக் காக்க முடியாது அது அப்பாவி மக்களின் … தன்னுடைய சொந்த பந்தங்களின் அழிவுக்கே வழி  வகுக்கும் என்பதை புரியவைக்க முடியும்.

 எனவே  தீவிர நிறவெறி ஆட்சியாளர்களை அவர்களுடைய நல்ல குணங்களைப் பயன்படுத்தி எங்களுடன் பணியாற்றக்கூடிய நபர்களாக மாற்றினோம்.

ஓபரா : 

நீங்கள் சிறுவனாக இருந்தபோது எல்லா நகர மக்களும் தங்கள் பிரச்சினைகளை தங்கள் பிரதிநிதியின் கவனத்துக்கு கொண்டு வருவார்களென்றும் அவரும் அதற்கு பதிலளிக்குமுன் ஒவ்வொருவருடையதையும் கூர்ந்து கேட்பார் என்றும் எழுதியிருந்தீர்கள்..

நெல்சன் மண்டேலா : 

அந்தக் கொள்கை என் வாழ்நாள் முழுதும் என்னை வழிநடத்தியது. மக்கள் அவர்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் போது அது தவறானதாக இருந்தாலும் அதைப் பொறுமையுடன் கேட்க எனக்குக் கற்றுத் தந்தது.

நீங்கள் இருதரப்பின் வாதங்களையும் கேட்காமல், வினா எழுப்பாமல், உங்கள் முன் வைக்கப்படும் ஆதாரங்களைப் பரிசீலிக்காமல் ஒரு பிரச்சினைக்கு சரியான தீர்வை கொடுக்க முடியாது.

மக்களைப் பங்களிக்க அனுமதிக்காமல்,அவர்களுடைய கண்ணோட்டங்களை சொல்ல விடாமல், அவர்களுக்கு முன் நடப்பவற்றை விமர்சிக்க விடாமல் தடுத்தீர்களென்றால் ஒரு போதும் உங்களை விரும்ப மாட்டார்கள்.

கூட்டுத்தலைமை என்ற இலக்கை நீங்கள் அடையவே முடியாது.

ஓபரா : 

ஒரு கட்டத்தில் நீங்கள் வன்முறையை கைவிட்டால் சிறையில் இருந்து வெளியேற உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது  நீங்கள் அதை விரும்பவில்லை. வன்முறை ஒரு தீர்வு என்று நீங்கள் நம்பினீர்களா?

நெல்சன் மண்டேலா : 

இல்லை. “நீங்கள் வன்முறையைக் கைவிட்டால் விடுவிக்கப்படுவீர்கள்” என்று என்னிடம் கூறியபோது அவர்கள் வன்முறையைத் தொடங்கியிருந்தார்கள். நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்ளவே அதைக் கையிலெடுத்தோம். ஒடுக்கப்பட்ட மக்கள்  செய்யும் செயல்களுக்கு அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளே  காரணமாகிறது. மேலும் நான் எந்த நிபந்தனைகளோடும் வெளியில் வர விரும்பவில்லை. என் சகாக்களிடமிருந்து தனிமைப்படவும் தயாராயில்லை.

ஓபரா : 

நீங்கள் சக கைதிகளை விட உங்களை உயர்வாக நடத்துவதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை எனப் படித்திருக்கிறேன். ஏனென்றால் உங்களுடன் களப்பணியாற்றியவர்களை உங்களில் ஒருவராக கூட்டுத்தலைமையின் ஒரு அங்கமாகவே பார்த்தீர்கள்.

நெல்சன் மண்டேலா : 

சிறைக்கு வெளியே உள்ள எங்கள் மக்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சமூகத்தை அணிதிரட்ட எனது பெயரைப் பயன்படுத்தினர்.

ஆனால்  தனியொருவனாக என்னை நிலைநிறுத்துவது என்பது என்னைப் போலவே ,அல்லது என்னை விட அதிகமாகவே பங்களித்த என் சகாக்களுக்கு நான் செய்யும் துரோகமாகும்.

ஓபரா : 

உங்களோடு தோள்கொடுத்து சகோதரர்களாக நிறைய பேர் ஒரே சமயத்தில் சிறைக்கு சென்றிருக்கிறீர்கள். ஆனால் உலகம் உங்கள் பெயரை மட்டுமே அறியும். அங்கு ஒரு மண்டேலா குழு இருந்ததை நாங்கள் அறியவில்லை.

நெல்சன் மண்டேலா : 

தன்னடக்கத்தோடு சொல்லவில்லை. உண்மையிலேயே அதிகம் பேர் என்னை விட திறமையோடும் விடுதலைக்காகப் போராடும் வைராக்யத்தோடும் இருந்தார்கள்

ஓபரா : 

1986 ஆம் ஆண்டில் உங்களை விடுதலை செய்ய பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டது. நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள் என்று நீங்கள் உண்மையில் நம்பினீர்களா?

நெல்சன் மண்டேலா : 

 ஒரு நாள் நாங்கள் விடுவிக்கப்படுவோம் என்று எங்களுக்கு தெரியும் . எப்போது என்பது தான் எங்களுக்குத் தெரியாது. சிறை நிர்வாகம் ஒரு வார்டனை எங்களிடம்,அனுப்பி “உங்கள் பெயர்கள், நீங்கள் வந்த இடங்கள் மற்றும் நீங்கள் விடுவிக்கப்பட்டால் நீங்கள் எங்கு செல்ல வேண்டும்” என்ற விபரங்களை சேகரித்தது.. சில நேரங்களில் வார்டன்கள் எங்களிடம் கூறுவார்கள், “உங்களை அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது, ஏனென்றால் நீங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று மொத்த உலகமும் வலியுறுத்துகிறது.”

நிறவெறிக்கெதிரான இயக்கத்தை அரசாங்கம் முற்றிலும் ஒடுக்கிய நாட்களில் நாங்கள் சோர்ந்து போனதுண்டு.ஆனால் ஒரு நாள் விடுவிக்கப்படுவோம் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது.

1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ம் தேதி டி கிளெர்க் என்னை அழைத்து ” நாளை உங்களை விடுதலை செய்ய எண்ணியிருக்கிறேன்” என்றார்.

“நீங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கிறீர்கள். வெளியிலிருக்கும் என் மக்களுக்கு அறிவித்து அவர்கள் தயாராக ஒரு வார கால அவகாசம் வேண்டும்.”

மேலும் நான் சிறைக்கதவைத் தாண்டிவிட்டால் அவருக்கு என்னைக் கட்டுப்படுத்தும் அதிகாரமில்லை என்று டி கிளெர்க்கிடம் கூறினேன். 1988 லிருந்து அடைக்கப்பட்ட விக்டர் வெர்ஸ்டர் சிறையிலிருந்தே நான் விடுவிக்கப்பட விரும்பினேன். அப்போது தான் என்னை கவனித்துக் கொண்ட அப்பகுதி மக்களிடம் பேச இயலும். ஆனால் டி கிளெர்க் தென் ஆப்பிரிக்காவகன் ப்ரிட்டோரியாவிற்கு சென்று அங்கிருந்து என்னை விடுவிப்பதாக வற்புறுத்தினார். நான் மறுத்து விட்டேன். சுய சிந்தனையோடு இருந்ததற்காகத்தான் நான் சிறையிலடைக்கப்பட்டேன். இன்னமும் எனக்காக இவர்கள் சிந்திப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். அடுத்த நாள் விக்டர் வெர்ஸ்டர் சிறையிலிருந்தே என்னை விடுவித்தார்கள்.பத்திரிக்கைகளுக்கு என்னுடைய விடுதலை பற்றி முன்பே அறிவித்திருந்தார்கள்.உலகெங்கிலிருந்தும் ஏராளனமான பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்கள்.

ஓப்ரா:

எனவே 27 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, “எனது நிபந்தனைகளோடு நான் வெளியே வருவேன்” என்று சொன்னீர்கள்.

நெல்சன் மண்டேலா : 

ஆம். என் சக கைதிகளும் நானும் சர்வதேச சமூகம் எங்களுக்கு ஆதரவளிப்பதை அறிந்தோம்

ஓபரா : 

உங்களது எழுபத்தியோராவது வயதில் விடுதலை அடைந்த போது மீண்டும் புதிதாய்ப் பிறந்தது போலிருந்தது இல்லையா?

நெல்சன் மண்டேலா : 

உண்மை தான். நான் உள்ளேயிருந்த போது வார்டன்களை அவர்களது குடும்பத்தோடு சிறைக்கதவுக்கருகே வரச் சொன்னேன். அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்பினேன். நேர்மையாக சொல்வதென்றால் அந்த மக்களே எனக்காக கதவருகே இருக்க வேண்டும் என நினைத்தேன். ஒரு பெரிய கூட்டத்தை சந்திப்பேன் என எண்ணவில்லை.

ஓபரா : 

ஒரு தலைவருக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய குணங்களில் ஒன்று தன்னடக்கம் என்று நீங்கள் ஒரு முறை என்னிடம் சொன்னீர்கள். நீங்கள் சிறையில் இருந்து வெளியே வரும்போது பணிவான மனிதராக வந்தீர்களா?

நெல்சன் மண்டேலா : 

நீங்கள் தாழ்மையாக இருக்கும் போது யாருக்கும் தொந்தரவாயிருக்க மாட்டீர்கள். சிலர் பிறரை அடக்கியாளவே நினைக்கிறார்கள். அது தவறு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் ஒத்துழைப்பை விரும்பினால் உங்களுடைய நேர்மையாலும் பணிவாலும் அவர்களை தாங்கள் மிக முக்கியமானவர்கள் என்று உணர வைக்கவேண்டும். உங்களை விட சிறப்பான பண்புகள் அவர்களிடம் உண்டு என்பது உங்களுக்கும் தெரியும். அவர்கள் அதை வெளிப்படுத்த விடுங்களேன்.

ஓபரா : 

தன்னடக்கம் என்பது உலகில் உங்களுக்கான இடத்தை அறிந்து கொள்ளுதலே என்று மாயா ஏஞ்சலோ கூறுகிறார். அது உலகில் எந்த முக்கிய விஷயத்தையும் செய்த முதல் நபர் நீங்களில்லை என்ற புரிதல்.

நெல்சன் மண்டேலா : 

அதுவே உண்மை.

ஓபரா : 

குனுவில் இருப்பது என்பது உங்களுக்கு என்ன மாதிரியானது என்பது பற்றி பேச விரும்புகிறேன். இங்கு அடிக்கடி வருகிறீர்களா?

நெல்சன் மண்டேலா : 

எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம்..

எங்களுக்கு ஜோஹன்ஸ்பெர்கில் ஒரு வீடு இருந்தும் நானும் என் மனைவியும் அங்கு எங்கள் வாழ்வைக் கொண்டாடவில்லை. என்னுடைய மூத்த மகன் நான் சிறையிலிருந்த போது ஒரு கார் விபத்தில் இறந்து போனான்.

ஓபரா : 

ஆனால் அவருடைய இறுதிச் சடங்குக்கு செல்ல நீங்கள் அனுமதிக்கப்படவில்லை.

நெல்சன் மண்டேலா : 

இல்லை. என் மகனை ஜோஹன்ஸ்பெர்கில் புதைத்தோம். ஆனால் பிறகு என் மனைவி குனுவில் என் தந்தைக்கு அடுத்து அவனைப் புதைத்திருக்க வேண்டும் என்றாள். மிகக் குழந்தையாக இருக்கும் போதே என் மகளை இழந்திருக்கிறேன். அவளையும் இங்கு தான் புதைத்திருக்கிறோம். “அதனாலேயே நீங்கள் இங்கு குனுவில் உங்கள் நாளை கழிக்க வேண்டும். உங்கள் குழந்தைகளை பேரக்குழந்தைகளை உறவினர்களை இங்கு அழைத்து அவர்களோடு பிணைப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்” என கிரேஸ் கூறினாள்.

ஓபரா : 

இந்த வயதில் மீண்டும் காதல்வயப்பட முடியும் என நினைத்தீர்களா?

நெல்சன் மண்டேலா : 

நான் முதலில் இந்த பெண்மணியைப் பார்த்த போது காதலைப் பற்றிய யோசனையெல்லாம் இல்லை.

இது வரை சந்தித்தே இராத ஒரு ஜனாதிபதியின் மனைவியாகத் தான் பார்த்தேன். நான் அவரை மிகவும் மதித்தேன்.

ஓபரா : 

அவர் உங்களை எப்படி மாற்றினார்?

நெல்சன் மண்டேலா : 

நிறைய.. என்னை விட உறுதியானவர். எளிதில் உணர்ச்சிவயப்பட மாட்டார். என் வேலையில் அதீத ஆர்வங்காட்டுவது குறித்து எச்சரித்தபடியே இருப்பார். அவர் உலகெங்கும் பயணித்திருப்பதால் குடும்ப விஷயங்களிலும் உலகளாவிய விஷயங்களிலும் நல்ல ஆலோசகராக செயல்படுவார்.

ஓபரா : 

உங்கள் வாழ்விலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் “நம்மை ஒடுக்குபவர்களையும் மன்னிப்பதே பலம்” என்பதே. “மூளைதான் நம்முடைய உணர்வுகளை ஆள வேண்டும்” என்று முன்பொருமுறை கூறினீர்கள்? அந்தக் கொள்கையை எப்படி பயிற்சி செய்தீர்கள்?

நெல்சன் மண்டேலா : 

நாங்கள் அதனுடன் போராடினோம். முக்கியமாக நம்மை விட பலமான எதிரியுடன் மோதும்போது. ஒருவரையொருவர் தாக்கி உயிரிழப்பதைத் தவிர்க்க எங்கள் உணர்வுகளை அடக்கிக் கொண்டோம். இது மட்டுமே சூழலை அமைதியாக்கும்.

ஓபரா : 

அநேகரால் தங்கள் சொந்த குடும்பத்திலேயே இதைச் செய்ய முடிவதில்லை.

நெல்சன் மண்டேலா : 

உண்மை. ஆனால் மக்கள் தவறிழைக்கும் போது நாம் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தங்களுடைய எதிரிகளிடம் பேசி வேற்றுமைகளைக் களைவதே அமைதிக்கு வழி.

ஓபரா : 

இப்போது நீங்கள் உங்கள் பார்வையில் வாழ்வின் அந்திப் பொழுதில் இருக்கிறீர்கள்.இப்போது என்ன முன்னெடுப்புகளைச் செய்யப் போகிறீர்கள்?

நெல்சன் மண்டேலா : 

நான் செய்யும் வேலையையே தொடரப் போகிறேன். இன்னும் சில பகுதிகளில் ஏழைகளுக்கு முறையான சாலைகள், மின்னிணைப்பு, குடிநீர், கழிப்பறை வசதிகளில்லை.ஆனால் நிலைமை மாறும்.அதற்கு சில காலங்கள் ஆகும்.

ஓபரா : 

ஒரு காரணத்திற்காக உங்கள் சகாக்களையும் உங்களையும் மிகவும் மதிக்கிறேன்.ஒடுக்கப்பட்டபோதும் உங்கள் சுயகௌரவத்தை பேணிக்கொண்டீர்கள்.நீங்கள் இது குறித்துப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

நெல்சன் மண்டேலா : 

ஓபரா நீங்கள் மிகவும் தாராள குணமுடையவர். நீங்கள் இப்போது கூறியவையெல்லாம் என்னைப் பற்றி தான் என்றால் நான் எல்லா நேரமும் அப்படியல்ல.

ஓபரா : 

ஒவ்வொரு மாதமும் பத்திரிகையின் முடிவில் “எனக்கு நிச்சயமாகத் தெரியும்” என்று ஒரு கட்டுரை எழுதுவேன். உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தது எது?

நெல்சன் மண்டேலா : 

என் மனைவி என்னை எப்போதும் ஆதரிப்பார் எனத் தெரியும். அதே போல் உலகெங்கும் உள்ள ஆண் பெண் என அனைத்து நல்லவர்களும் சந்திக்கிற மிகப் பெரிய சவால் சமூகத்தின் வறுமை, கல்வியறிவின்மை,நோய்.

ஓபரா :  நீங்கள் சாவுக்கு அஞ்சுகிறீர்களா?

நெல்சன் மண்டேலா :  இல்லை. ஷேக்ஸ்பியர் கூறுவது போல.. கோழைகள் சாவு வருவதற்கு முன் பலமுறை சாகிறார்கள். ஆனால் வீரன் சாவை ஒருமுறை தான் சுவைக்கிறான். இதுவரை கேள்விப்பட்டதிலேயே அதிசயமானது மனிதன் சாவுக்கு அஞ்ச வேண்டுமென்ற விசித்திரம். நிச்சயமான முடிவு வர வேண்டிய நேரத்தில் வந்தே தீரும். அதை நீங்கள் நம்ப ஆரம்பிக்கும் போது மகிமை மேகத்தில் மறைந்து போயிருப்பீர்கள்.

 உங்கள் பெயர் மட்டுமே கல்லறையில் வாழ்ந்து கொண்டிருக்கும். இது தான் என்னுடைய அணுகுமுறை.


மொழியாக்கம் : மதுரா

நன்றி  :  OPRAH.COM

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x