13 October 2024
maya angelou interview

ஓப்ரா கெயில் வின்ஃப்ரே(Oprah Gail Winfrey) அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர், நடிகை, எழுத்தாளர் ஆவார்.
1986 முதல் 2011 வரை 25 ஆண்டுகளாக தேசிய சிண்டிகேஷனில்(national syndication) இயங்கிய சிகாகோவில் இருந்து ஒளிபரப்பப்பட்ட அவரது  ‘The Oprah Winfrey Show’ எனும் நிகழ்ச்சியால் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர். ஓப்ரா அமெரிக்க கவிஞர் மாயா ஏஞ்சலோவிடம் எடுத்த இந்த நேர்காணல் The Oprah இதழில் டிசம்பர் 2000 ஆம் ஆண்டு வெளியானது. கலகம் இணைய இதழுக்காக தமிழில் மொழிபெயர்த்து அளித்திருக்கிறார் கவிஞர் மதுரா.


ஓப்ரா :

நான் உங்களிடம் கேட்க விரும்பும் பெரிய கேள்வி இதுதான்: உங்கள் நம்பிக்கை எங்கிருந்து வந்தது? உங்களை விட அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தும் யாரையும் நான் பார்த்ததில்லை, நான் தவறான, மேம்போக்கான துணிச்சலைக் குறிக்கவில்லை, ஆனால் உங்களுக்குள்ளிருந்தே, நீங்கள் நிறைய விஷயங்களைப் பெற்றிருக்கிறீர்கள்

மாயா :

ஏராளப் பரிசுகள்..ஏகப்பட்ட ஆசிகள்..எத்தனையோ வழிகள், ஏதொன்றையும் குறிப்பிட்டு சொல்ல இயலாது நேசத்தைத் தவிர… நேசம் என்று நான் இன்பந்துய்ப்பதைச் சொல்லவில்லை.பாசப்பிணைப்பைச் சொல்லவில்லை.

இந்த நிகழ்வில நான் காதலைக் கூட. சொல்லவில்லை. அதாவது மனிதர்கள் கடவுளைப் பற்றிக் கனாக் காணும் நிலை. அதை நிறைவேற்ற தம்முன் தங்கப்பாதைகளை உருவகித்துக் கொள்வது.

ஒன்றுக்கும் உதவாதவளை ஆன்மீகம் ரஷ்யப்பாடல்கள் மற்றும் ஐரிஷ் கவிதைகளை எழுத வைத்த சூழ்நிலை. அது தான் பரிசுத்தமான அன்பு.என்னிடம் இருப்பதையெல்லாம் விடப் பெரியது.வானில் நட்சத்திரங்களை மின்ன வைத்திருப்பதும் அதுவாகத்தான் இருக்க முடியும்.

அந்த அன்பு பல வழிகளில் என் வாழ்வில் நுழைந்து வாழ்வைப் பற்றிய மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது.

ஓப்ரா :

அப்படியானால் நீங்கள் அறைக்குள் நுழைந்ததும் அத்தனை தலைகளும் திரும்புவது உங்களிடமுள்ள தன்னம்பிக்கையினால் மட்டுமல்ல இல்லையா?

மாயா :

ஓ.. இல்லையில்லை. அதனால் தான் நான் அழகாக இல்லாவிட்டாலும் வாழ்வின் மீதான பிடிப்பால் என்னாலும் ஆணையிட முடிகிறது.

ஓப்ரா :

உங்களை நாங்கள் பார்க்கும் போதெல்லாம் உங்களுடைய முழு சரித்திரத்தையும் பார்க்கிறோம்.

மாயா :

அது தான் சரி—என் சரித்திரம் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்ணாக, யூதப் பெண்ணாக, முஸ்லீம் பெண்ணாக பல பரிமாணங்களைக் கொண்டது. நான் அறிந்த அனைத்தையும் [மற்றும் நான் படித்த அனைத்து கதைகளையும்] -நல்ல, வலிமையான, கனிவான மற்றும் சக்திவாய்ந்த அனைத்தையும் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நான் அனைத்தையும் என்னுடன் கொண்டு வருகிறேன், பிறருடைய உந்துதலால் வரும் இனவெறி  பாலின பாகுபாடு மற்றும் யாருடைய வயோதிகம், மூப்பினால்  என் வாழ்க்கை சுருங்கிப் போவதை நான் அனுமதிக்க மாட்டேன். என்னால் முடியவும் முடியாது. எனவே குட்டி இளவரசியின் ஸ்காண்டிநேவியக் கதையை எடுத்துக் கொள்கிறேன், அல்பைன் மலைகளில் உள்ள ஹெய்டியின் கதையை எடுத்துக் கொள்கிறேன், பேர்ல் எஸ்.பக்கின் தி குட் எர்த் புத்தகத்தில் ஓ-லானின் கதையை எடுத்துக் கொள்கிறேன், அவை அனைத்தையும் எடுத்துக் கொள்கிறேன்.. நான் அவர்களை எடுத்தாள்கிறேன், நான் அவர்களை அறிவேன், நானே அவர்கள். அதனால் நான் ஒரு அறைக்குள் நுழையும் போது, ​​யாரோ ஒருவர் உள்ளே வந்திருப்பது போல் மக்களுக்குத் தெரியும்— உடன் 2,000 பேர் வருவது அவர்களுக்குத் தெரியாது.

ஓப்ரா :

உங்களுக்கு முன் வந்தவர்களுடன் நீங்கள் எவ்வாறு தொடர்பில் இருக்கிறீர்கள்?

மாயா :

எங்களுடையத் தொடர்புகளைப் பார்க்கக் கூடிய வரமும் நான் பார்ப்பதை ஒப்புக்கொள்ளும் தைரியமும் எனக்கு இருக்கிறது. கோழைத்தனம் ஒரு நபரை அடக்கமாக ஆக்குகிறது. அது அவரை அல்லது அவளை, “வானத்திலோ பூமியிலோ உள்ள செயல்களின் பதிவேட்டில் எழுதப்படுவதற்கு நான் தகுதியற்றவன்” என்று சொல்ல வைக்கிறது. கோழைத்தனம் மக்களை அவர்களின் நன்மையிலிருந்து தடுக்கிறது. “ஆம், நான் அதற்கு தகுதியானவன்” என்று சொல்ல பயப்படுகிறார்கள்.

ஓப்ரா :

நீங்கள் தன்னடக்கத்தை நம்பவில்லை என்று எனக்குத் தெரியும்.

மாயா :

நான் அதை வெறுக்கிறேன். இது என்னை எச்சரிக்கையாக ஆக்குகிறது. தன்னடக்கம் என்பது  கற்றதினால் வந்த பாதிப்பு.. வாழ்க்கை அவரை அடித்து விளையாடும்போது, அந்த குணம் மாறும்.

ஓப்ரா :

அப்படியானால் ஒருவர் மிக தன்னடக்கமானவர் என கேள்விப்படும் போது….

மாயா :

நான் நரகத்தைக் கண்டதுபோல் ஓடுகிறேன். இக்கணம் ஒரு பாடகரிடம், “நீங்கள் பாடுவீர்களா?” அவர்கள், “ஓ, இல்லை. என்னால் இங்கு பாட முடியாது,” என்றால் நான் உடனே, “அச்சச்சோ! எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, பாங்காக்கிற்குப் போகும் ரயில் எங்கே?”என்று கேட்பேன்.

ஓப்ரா : ஏனெனில்?

மாயா :

ஏனென்றால் அந்த நபர் நம்பகமானவர் அல்ல. அவருக்கு அது தெரியாமலிருக்கலாம்., ஆனால் அடக்கமாயிருப்பது உண்மையற்ற தகவல்களைக் கதைகதையாய் சொல்கிறது.

ஓப்ரா :

வாழ்வில் எங்கு பொருந்துகிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள்.

மாயா :

ஆமாம். மேலும் என்னிடம் என்ன இருக்கிறதோ அதை வரமாக ஏற்றுக் கொள்கிறேன். , எனக்கு முன் சென்றவர்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், இனி வரப்போகிறவர்களுக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்வேன். அதுதான் விநயம்.

ஓப்ரா :

எப்படி இத்தனை புத்திசாலியானீர்கள்?நீங்கள் உங்களைப் புத்திசாலி என கூறிக்கொள்கிறீர்கள் இல்லையா?

மாயா :

ஆம். நான் போகும் வழி சரியானதுதான். நான் நிச்சயமாக அந்தப் பாதையில் தான் செல்கிறேன்.

ஓப்ரா :

நீங்கள் வாழ்வில் மிகுந்த கவனம் செலுத்துவதால் இது வசப்படுகிறது இல்லையா?

மாயா :

நான் கவனஞ்செலுத்துகிறேன். நான் ஞானத்தை விரும்புகிறேன்.நீங்கள் நேசிக்காத ஒன்றில் சிறந்தோங்க முடியாது.அதன் மீது ஆசைப்படாதீர்கள்.அதை நேசியுங்கள்.அதைப் பாராட்டுங்கள்.

மேலும் நீங்கள் ஒன்றை நேசித்தால் அதை வெறுமே அடைய நினைக்க மாட்டீர்கள்.அதுவே உங்களைத் தேடிக் கண்டடையும். மாறாக அதன் மீது ஆசைப்பட்டால் நரகத்தைக் கண்டதுபோல் உங்களை விட்டு ஓடி விடும்.

ஓப்ரா :

நீங்கள் ஒன்றை நேசித்தால் நீங்கள் அதைத் தேடும் போது அது உங்களைத் தேடும்.

மாயா :

மிகச் சரி

ஓப்ரா :

உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தோன்றியது. மாயா என்பது யார்?

உங்களைப் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

மாயா :

ம்ஹூம்

ஓப்ரா : 

உங்களை விட பெரிய ஒன்று உங்களை ஆதரிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் . உங்களுக்காக குரலெழுப்ப உங்களுக்கு உரிமை உண்டு என்பது நீங்கள் யார் என்பதை அறிவதில் இருந்து வருகிறது.

மாயா :

மேலும் எனக்காக முன்னெடுக்க எனக்கு உரிமை மட்டும் இல்லை, பொறுப்பும் எனக்கு இருக்கிறது. எனக்காக நான் நிற்கவில்லை என்றால் வேறு யாரையும் எனக்காக குரலெழுப்ப சொல்ல முடியாது. உங்களுக்காக நீங்கள்  குரலெழுப்பினால், “நான் உதவட்டுமா? என்று மற்றவர்கள் கேட்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.!

ஓப்ரா :

அது உண்மை. அழுது புலம்புவதை சகித்துக்கொள்ளாத உங்கள் குணம் எனக்குப் பிடிக்கும். குறைகூறுவது பொருத்தமற்றது என்று நீங்கள் சொன்னதை நான் மறக்கவே மாட்டேன்.

மாயா :

தனக்கான இரை பக்கத்திலேயே இருப்பதை சாத்தான் அறிந்துகொள்ள மட்டுமே அது உதவும்.

ஓப்ரா :

உங்களுக்கே தெரியும் பெண்களுக்கு அவர்களைப் பற்றிய புரிதலை உருவாக்குவதே என்னுடைய இந்த ஷோ மற்றும் இதழுக்கான என் தினப்படி தேடல். எப்போதும் பெண்கள் என்னிடம் சொல்வதெல்லாம்  “நான் என் சுயத்தைத் தொலைத்துவிட்டேன்.. நான் யாரென்பதே எனக்குத் தெரியவில்லை” என்பவை தான். கூண்டுப்பறவையின் முதல் சொல்லை இன்னும் நீங்கள் நினைவு வைத்திருக்கிறீர்களா?

மாயா :

எனக்கு 19 அல்லது 20 வயதிருக்கும் போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பயங்கரமான அதிசயம்.

நான் சிறுமியாக இருந்தபோது என் பாட்டி தான் கடவுளென்றும் அதை அவர் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலிருக்கிறாரென்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் மனோதைரியமும் கருணையும் கொண்டவர். பின்பு ஒருநாள் என் பாட்டி இறந்து போனார். அப்போது தான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் இனி பாட்டியை இந்த பூமியில் காண முடியாது என்பதை. அடுத்து நானும் இறந்து விடுவேன் எனத் தோன்றியது. நான் வீட்டில் நுழைந்ததும் மகன் நன்கு உறங்கியபின் எல்லா கதவுகளையும் இறுகத் தாளிட்டு கதவோரம் ஒரு நாற்காலியையும் போட்டு வைப்பேன். நான் இறப்பை உள்ளே வரவிடாமல் தடுக்கத்தான் இப்படி செய்கிறேன் என்பதைக் கூட நான் புரிந்துகொள்ளவில்லை. பிறகு எனக்கு மூச்சுவிட சிரமமானது. எனக்கு ஆஸ்துமா கிடையாது. ஆனாலும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கடைசியில் எதனால் இந்த பிரச்சினை என்பதை கண்டுகொண்டேன். என் வாழ்வை உற்று நோக்கி நான் சாவைக்கண்டு அஞ்சுகிறேன் என அறிந்துகொண்டேன். பின் ஒரு முடிவுக்கு வந்தேன். நான் பயந்தாலும் பயப்படா விட்டாலும் ஒருநாள் இறந்துபோகத்தான் வேண்டும். நான் உங்களிடம் இதைப்பற்றிப் பேசியதாக எனக்கு நினைவில்லை.

வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் நிற்பதாக நான் உணர்ந்தேன்.. ஏனென்றால் ஒரு செயலை  செய்தே ஆகவேண்டும் என உணர்ந்தவுடன் அடுத்த நிலை என்ன? அதைப் பற்றி யோசிக்கிறேன். மிகக் கடினமான அச்சுறுத்தும் அம்சமான இறப்பையே எதிர்கொள்ளும் போது மிகவும் கஷ்டமான நடக்கவே முடியாது எனத் தோன்றும் நல்ல செயல்களை என்னால் செய்ய இயலாதா என்ன?

ஓப்ரா :

இது ஒரு தெளிவான சிந்தனை இல்லையா?

மாயா :

ஆம். நான் யோசித்துப் பார்க்கிறேன். என்னால் ஒரு பாலே நடனத்தை ஆட முடியுமென்றால் அதைச் செய்தேன். என்னால் கிளீவ்லேண்ட் தியேட்டரில் நடனம் கற்றுக் கொடுக்க முடியுமென்றால் அதையும் செய்தேன். பிழைப்புக்காகப் பாடவேண்டுமென்றால் இப்போது செய்துவரும் பணிகள் உணவகப் பணியாள் பணி மற்றும் விற்பனைப்பிரதிநிதி இரண்டையும் விட்டுவிடுவேன்.

ஓப்ரா :

அதை முன்பே செய்ய எண்ணியிருந்தும் அதற்கான தைரியம் இல்லாததால் செய்யவில்லை இல்லையா?

மாயா :

அப்படி ஒருபோதும் எனக்குத் தோன்றியதில்லை. நான் ஒருநாள் இறக்கத்தான் போகிறேன். அதனால் ஏன் எல்லாவற்றையும் செய்யக்கூடாது? நேற்று முழுதும் வேலை செய்ததால் இன்று சோர்வாக இருப்பதான எண்ணம் ஏன் வந்தது? அதை நான் ஒருபோதும் நம்பியதில்லை.

ஓப்ரா :

அதனால் தான் உங்கள் ஆற்றலைப் பார்த்து எல்லோரும் அதிசயிக்கிறார்கள். தொடர்ந்து வெளியில் பேசுகிறீர்கள்.. கற்பிக்கிறீர்கள்… கொடுத்துக் கொண்டே…. இருக்கிறீர்கள். எப்படி இவரால் முடிகிறது? ஒரு சிறு தூக்கமாவது தேவை என நாங்கள் நினைக்கிறோம்.

மாயா :

சிறு தூக்கம் அல்லது ஒய்வுக்கு ஒரு ராத்திரி போதுமானது. ஆனால் மூன்று நாட்கள் ஒய்வெல்லாம் யாருக்குத் தேவை? அம்மாடி! இரண்டாம் நாளே செத்து விடுவீர்கள்.

ஓப்ரா :

இப்போது நான் சரியாகப் புரிந்துகொண்டேன் என நினைக்கிறேன். நீங்கள் ஒரு நாள் இறந்துவிடுவீர்கள் என்பதை புரிந்து கொண்டு விட்டீர்கள். அறிவுபூர்வமாக மட்டுமல்ல.  ஏனென்றால் நம் எல்லோருக்குமே அது தெரியும்.

மாயா :

ஆமாம்

ஓப்ரா :

பலர் தாங்கள் இறக்கப் போகிறோம் என்ற உண்மையை முற்றிலும் மறுத்து வாழ்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அது நடக்காது என்று பாசாங்கு செய்கிறார்கள். அதனால்தான் சிலர் மருத்துவரிடம் கூட செல்ல மாட்டார்கள்.

மாயா :

ஆமாம். சிலர் நினைக்கிறார்கள், “என்னை விட இரண்டு அங்குலம் உயரமுள்ள, நல்ல வங்கிக் கணக்கு வைத்திருக்கும் இவரை நான் திருமணம் செய்தால், நான் சாக மாட்டேன், நான் ஆறு கார்களை வாங்கினால், நான் சாக மாட்டேன், நான் யூதர்களை வெறுத்தால், நான் இறக்க மாட்டேன்” நான் ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுத்தால், நான் இறக்க மாட்டேன்.” துன்பத்தை வேறொருவர் மீது செலுத்துவதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அதிகரிக்க நினைக்கிறார்கள், ஆனால் அது நேர்மாறானது.

ஓப்ரா :

உங்களை பயமுறுத்துவது எதுவும் இல்லையா? நீங்கள் எதையும் பற்றி உறுதியாக தெரியவில்லை என்று நினைப்பதேயில்லை. நீங்கள் எப்போதும் அப்படித்தான் இருந்தீர்களா?

மாயா :

நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வது உங்களுக்கு என்னவெல்லாம் செய்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ஓப்ரா :

உங்கள் வாழ்வு கொள்கைகளால் வரையறுக்கப்பட்டது என முன்பொருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள். அவதூறுகள் நம்மை குலைத்துவிட நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையையும் எனக்குக் கற்பித்திருக்கிறீர்கள்

மாயா :

உண்மை தான். சிலர்  மனத்திண்மையோடு வெற்றியை எட்டிப்பிடிக்கும் திறனற்றவர்களாக இருக்கிறார்கள். அதனால் அப்படியே எடுத்துக் கொள்கிறார்கள்.

ஓப்ரா :

அவர்களுடைய கடும் விமர்சனங்களுக்கு , உங்கள் பதில்..

மாயா :

மிகச்சரி.

ஓப்ரா :

அவர்கள் உங்களை இழிவுபடுத்த நினைக்கிறார்கள்.

மாயா :

உங்கள் மனிதாபிமானத்தை குறைக்க முயல்வது ஜூல்ஸ் ஃபைபர் சொல்வது போல் குறுங்கொலைகள். என்னை யாரோ இழிவுபடுத்த விரும்புகிறார்கள் என்று கேள்விப்படும் அக்கணம் அவர்கள் என் வாழ்வைப் பறித்துத் தனதாக்கிக் கொள்ள எண்ணுகிறார்கள் என்றே புரிந்துகொள்கிறேன். அந்த வாய்ப்பை நான் கொடுக்க மாட்டேன்.

ஓப்ரா : ஒரு கோழையின் கொலை முயற்சி

மாயா :

ஆம். சிலருக்கு நேருக்கு நேர் சொல்லக்கூடிய தைரியம் இருக்காது.

வேறு சிலர் சத்தமிட்டு செல்வார்கள். சரி போய் வாருங்கள். ஆனால் இப்படி சிறுகொலைகள் செய்பவர்கள் இருக்கிறார்களே அவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டால் “நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை” என்று சமாளிப்பார்கள். ஆனால் அது சந்தேகமில்லாமல் படுகொலை முயற்சி தான்.

ஓப்ரா :

தவறு செய்த ஒருவர் இரண்டாவது வாய்ப்பு கேட்டால்  நீங்கள் கொடுப்பீர்களா?

மாயா :

நிச்சயமாக.

ஓப்ரா :

நீங்கள் முரட்டு சுபாவத்தை சிறு கொலையாகப் பார்க்கிறீர்கள்.

மாயா :

ஆம்

ஓப்ரா :

உங்கள் வீட்டில் கூட யாரைப்பற்றியும் எதிர்மறையாகக் கூறுவதை நீங்கள் அனுமதிப்பதில்லை.

மாயா :

மிகச்சரி

ஓப்ரா :

இனவெறி பற்றிய ஒரு நகைச்சுவை சொன்னதற்காக உங்கள் வீட்டினரையே நீங்கள் வெளியேற்றியதை நான் பார்த்தேன். அப்போதைய சூழலையே அது பாதிக்குமென்பதைக் கூட நீங்கள் கருத்தில் கொள்ளவில்லை

மாயா :

எதிர்மறை பேச்சு விஷம் மாதிரி என நாம் நம்புகிறேன். உங்களுக்கும் எனக்கும் இடையிலுள்ள காற்று ஒலிகளாலும் பிம்பங்களாலும் நிறைந்திருக்கிறது.  அப்படியில்லையென்றால் எப்படி நான் இங்கு தொலைக்காட்சியை இயக்கி நியூயார்க்கில் நடக்குமொன்றை பார்க்க இயலும்? இக்காற்றில் ஒலிகளும் பிம்பங்களும் கூட்டமாக வௌவால்கள் போல நெரிசலாக இருக்கின்றன. ஓபரா! எதிர்மறைக்கு ஒரு சக்தி இருக்கிறது. ஆம் இருக்கிறது. அதை உன் வீட்டில், புத்தியில், வாழ்க்கையில் நுழைவதற்கு நீ அனுமதித்தால் அவ்வளவு தான் உங்களையே கபளீகரம் செய்துவிடும். அதனால் இனவெறி, ஓரின எதிர்ப்பு, வெறுப்பு போன்றவை பற்றிய கொடூரமான முரட்டுத்தனமான பேச்சுகளைக் கேட்டால் நான் வீட்டை விட்டு வெளியேற்றுகிறேன். எதிர்மறை பேச்சுகள் மரச்சட்டங்களில் ஏறி நாற்காலிகளில் அமர்ந்துகொள்ளும். பின் நம் தோலிலும் ஒட்டிக் கொள்ளும்.

ஓப்ரா :

இது நேர்மறை எண்ணங்களுக்கும் பொருந்துமல்லவா?

மாயா :

அப்படித்தான் நினைக்கிறேன்

ஓப்ரா :

நீங்கள் நல்லவற்றை உள்ளே அனுமதிக்கலாம். அதை உரிமை கோரலாம்.

மாயா :

நீங்கள் அதைக் கேட்கலாம். நீங்கள் எந்த அளவு விரும்புகிறீர்கள் எனக் காட்டலாம். இடங்கொடுக்கலாம். அப்போது அது “எனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது. நான் இங்கேயே தங்க விரும்புகிறேன் எனக் கூறக்கூடும். அதனால் தான் சிலர் ஒரு வீட்டைப் பார்த்தால் இது தனக்கான இடம் என குதூகலிக்கிறார்கள். இன்னொரு வீடு மிக அழகாக இருந்தாலும் இங்கே தங்க முடியாது என மறுதலிக்கிறார்கள்.

ஓப்ரா :

உங்கள் கொள்கைகள் அனைத்தும் நீங்கள் யார் என்பதை அறிவதில் இருந்து உருவாகின்றன, ஏனென்றால் நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரிந்தால், “என் வீட்டில் அது நடக்காது” என்று நீங்கள் மக்களிடம் உறுதியாகக் கூறலாம்.

மாயா :

அது சரி – நான் வேறொருவரின் வீட்டில் இருந்தால், நான் வெளியேறிவிடுவேன். அதற்காக நான் உண்மையில் வருந்தமாட்டேன்.. நான் சாதாரணமாக சொல்வேன் “நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், ஏதொவொன்று எனக்காக பர்மா சாலையில் திறந்து இருக்கிறது”

ஓப்ரா :

உங்கள் வாழ்க்கையை வரையறுக்கும் மற்ற கோட்பாடுகள் யாவை?

மாயா :

பைபிளில் உள்ள பிலிப்பியன்ஸ் புத்தகத்தில் அப்போஸ்தலன் பவுலின் கூற்று எனக்கு மிகவும் பிடிக்கும். முதியவர்கள் இளம் பெண்களைத் துரத்துகிறார்கள், யாரும் சமபாகம் கொடுக்கவில்லை என்று கொரிந்தியர்கள் பவுலுக்கு எழுதிக் கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். அவர் பதில் எழுதி, “நல்ல அறிக்கை ஏதேனும் இருந்தால், இவற்றைப் பற்றி பேசுங்கள்” என்று கூறினார். என்னுடைய கொள்கைகளில் அதுவும் ஒன்று. இது [நான் குறிப்பிட்டது போல] ஒரே மாதிரியாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் அது தனி. என்னால் முடிந்த அளவுக்கு என்னை வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்கிறேன் இது மற்றொரு கொள்கை.

மரியாதையான மனமகிழ்ச்சி தரும் வேலைகளில் ஈடுபட விரும்புகிறேன். அது அப்படியே தொடரவும் விரும்புகிறேன்..”

ஓப்ரா :

உங்கள் வாழ்நாள் முழுவதும், சிலர் உங்களைப் பற்றி, “அவள் தன்னை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்?”  என்று சொல்லி இருப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன். அதற்கு உங்கள் பதிலென்ன?

மாயா :

மற்ற விஷயங்களில் நான் கடவுளின் குழந்தை. நான் அவருடைய குழந்தை மட்டுமல்ல கடவுளும் என்னை நேசிக்கிறார் என்பது ஆச்சரியமான விஷயம்.

ஓப்ரா : இது ஆச்சரியம் தான்

மாயா :

இது கனவா நினைவா என என்னையே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்.

ஓப்ரா :

உங்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்பதை அறியாமலேயே…

மாயா :

சுதந்திரமும் ஒழுக்கமும், சுதந்திரமும் பொறுப்புணர்வும்,சுதந்திரமும் நெறிமுறையும். சுதந்திரமும் மிக்கடுமையான முயற்சியில் அடையக்கூடிய அம்சமும்..

எதையாவது செய்வதற்கான சுதந்திரம் சும்மா இருப்பதற்கான சுதந்திரமல்ல. ஆனால் மிகக் கடினமான விஷயம் என்னவென்றால் கடவுள் என்னை நேசிக்கிறார். கடவுளின் குழந்தையாக நான் இருப்பதால் அயோக்கியன் மதவெறியன் கற்பழிப்பவன் எல்லோரையும் அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ நான் பார்க்க வேண்டியிருக்கிறது. அவர்களும் கடவுளின் குழந்தைகளே என அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதுவும் ஒரு வகைப் பொறுப்புணர்ச்சி தான். இது தான் கடினமும் கூட.

ஓப்ரா :

இப்போது நிறைய விஷயங்களைக் கஷ்டமானதாக நினைக்கிறீர்கள் இல்லையா?

மாயா :

எழுதுதல்.20 நூல்கள் மற்றும் அதற்கு மேல் எழுதியும் அது எப்போதும் கஷ்டமானது தான்.

ஓப்ரா :

அமெரிக்க லைப்ரரி அசோசியேஷனின் தடைசெய்யக் கோரும் பத்து புத்தகங்களின் பட்டியலில் கேஜ்டு பேர்ட் இருப்பதாக நான் படித்தேன்.

மாயா :

ஆமாம். ஆனால் அதை தடை செய்ய விரும்பும் பலர் எனது புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கூட படித்ததில்லை

ஓப்ரா :

ஏன் அதை தடைசெய்ய விரும்புகிறார்கள்? பலாத்காரம் என்பதாலா?

மாயா :

பலாத்காரம் என்பதால் தான்.

இன்னும் நான் எங்கோ படித்தேன், ஒரு பெண் கூண்டு பறவையைப் படித்த பிறகு, அவள் தனியாக இல்லை என்பதை உணர்ந்தாள். சில சந்தர்ப்பங்களில் கூண்டு பறவை சில உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்று நான் நினைக்கிறேன் -வாழ்க்கைத் தரம் மட்டுமல்ல, வாழ்க்கையே முக்கியமானது என எனக்கு இளம் பெண்கள் மற்றும் ஆண்களிடமிருந்து கடிதங்கள் வருகின்றன, அவர்களிடம் நீங்கள் ஒரு கற்பழிப்பிற்குப் பின்னும் வாழ இயலும் என என்னால் கூற முடிகிறது. உங்களால் ஒரு போதும் மறக்கமுடியாது .. அதை நினைக்கவும் வேண்டாம்.அதைக் கடந்து போய்க்கொண்டே இருக்கவேண்டியது தான்.

ஓப்ரா :

உங்களால் உயிர்ப்புடனும் கருணையுடனும் வாழமுடியும் எனக் காட்டியுள்ளீர்கள். திறனுடன் வாழ்தல் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் கருணை இவை நானும் நீங்களும் மக்களிடம் பாராட்டும் மற்ற குணங்கள். ஏனென்றால் கருணை எப்போதும் கிடைக்குமொன்று.

மாயா :

உங்கள் வீட்டுக்கு வெளியே பெரிய குடிநீர் ஏரி இருக்கிறது. ஆனால் வீட்டுக்கு உள்ளேயே இருந்து நீங்கள் தாகத்தினால் சாகிறீர்கள்.

ஓப்ரா :

என் பிரியத்துக்குரிய மாயாவின் போதனை என்னவென்றால், “மக்கள் தங்களை யார் என்று உங்களுக்குக் காட்டினால், அவர்களை நம்புங்கள்.”

மாயா :

ஆம் – முதல் முறையாக அவர்களை நம்புங்கள்!

ஓப்ரா :

நீங்கள் என்னிடம் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள், ஆனால்  உண்மையில் இக்கொள்கை ஒன்று தான் மனதில் எதிரொலிக்கிறது . உங்களால் அதைப் பெற முடிந்தால், நீங்கள் சரியாகிவிடுவீர்கள்

மாயா :

கோபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். மேலும் நான் உங்களுக்கு மற்றொரு கொள்கையைச் சொல்கிறேன்: நன்றியுடன் இருப்பது நீங்கள் நிகழ்கணத்திலிருக்க உதவுகிறது.

ஓப்ரா :

மற்றும் பணிவாக..

மாயா :

ம். மனிதர்கள் அக்கணத்தை வாழ்வதில்லை அதனால் தான் பல தவறுகளைச் செய்கிறார்கள். சில நாட்களுக்கு முன் நான் அட்லாண்டாவில் இருந்தேன். என் கொள்ளுப் பேத்தி அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தாள். நான் வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தேன். என் கட்டைவிரலை வெட்டிக் கொண்டேன்.. ஏனெனில் நான் அங்கு இல்லை. என் கவனம் பேத்தியிடம் இருந்தது. உங்களுக்கே தெரியும். ஒரு சமையல்காரிக்கு கத்தியும் சதையும் சேர்ந்தால் என்ன ஆகுமெனத் தெரியாதா? என் கவனம் அங்கில்லை. அதனால் தான் நான் ஆண்களையும் பெண்களையும் நிகழ்கணத்தில் இருங்கள் என ஊக்குவிக்கிறேன்.

அது உங்களை படுகுழியில் விழுவதிலிருந்து காப்பாற்றும். உதாரணத்துக்கு ஒருவர் தன் கணவனையோ மனைவியையோ காதலரையோ இழந்துவிட்டால் அங்கு அவர்கள் உணர்வுகளைப் புண்படுத்தாமல் பேச முடியும் ( நீங்கள் கவனத்தோடு இருந்தால்) நீங்கள் நிகழ்கணத்தில் இருந்தால் உங்கள் வாழ்வையும் உங்களைச் சுற்றியுள்ளோர் வாழ்வையும் இனிமை நிறைந்ததாக ஆக்க முடியும்.

ஓப்ரா :

இக்கணம்

மாயா :

ஆமாம் மேடம். அது மிக முக்கியமானது

ஓப்ரா :

நீங்கள் என் வாழ்வின் முக்கிய வரம் மட்டுமல்ல உங்களுடைய தாக்கம் என் வாழ்வில் பெரும்பங்கு வகிக்கிறது. உங்களை நேர்காணல் செய்வதற்கான காரணத்தில் இதுவுமொன்று.

மாயா :

நான் மிக்க நன்றியுள்ளவளாய் இருப்பேன்.

ஓப்ரா :

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு முறை நீங்கள் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தீர்கள். எங்களுக்கு எட்டுமணிநேரம் முந்தி இருந்தீர்கள். மேடையில் நீங்கள் பேச்சின் நடுவில் இருக்கையில் மாயா ஃபோனை எடுங்கள் என தவித்தேன்.

மாயா :

உண்மை தான்

ஓப்ரா :

நீங்கள் ஃபோனை எடுத்ததும் “என்னாச்சு பேபி? என்ன விஷயம்? சினன விஷயத்துக்காகவா பாதிப் பிரசங்கத்தில் என்னை தொந்தரவு செய்தீர்கள் என்று கேட்கவில்லை. என்ன நடந்தது?என்றதும் ஆஆ. எனக்கு உங்கள் உதவி தேவை என்றேன்.

உங்கள் வாழ்க்கையில் இப்படிபட்ட பரிவோடு உதவி செய்யக்கூடிய நபர் யார்?

மாயா :

என் அம்மா விவியன் பாக்ஸர். பொதுவாக சிறுகுழந்தைகளை பெற்றோர்கள் சிறப்பாகக் கவனித்துக் கொள்வார்கள். கண்ணிமைக்குள் வைத்துக் காப்பார்கள். அதே சமயம் வளர்ந்த குழந்தைகளுக்கு அவர்கள் நல்ல பெற்றோராக இருப்பதில்லை. குழந்தைகள் வளர்ந்ததும் ” வாயை மூடு இங்கே உட்கார். அதிகம் பேசாதே அளவோடு பழகு” உன்னை ஐரோப்பாவுக்கு அனுப்பப்போகிறேன் என்பார்கள்.

ஆனால் என் அம்மா சிறு குழந்தைகளுக்குக் கண்டிப்பானவர். வளர்ந்த குழந்தைகளுக்கு பிரியமானவர். என் வார்த்தைகளை மதித்து என்னிடம் சரிக்குசமமாய்ப் பேசுவார்.

ஓப்ரா :

நானும் அப்படித்தான் என நினைக்கிறேன். குழந்தைகளை எப்படிக் கையாள்வது என்பது எனக்குத் தெரியவில்லை.

மாயா :

ஆமாம். எனக்கு அப்போது 16 வயது. நான் கர்ப்பமாக இருப்பதாக என் அம்மாவின் கணவரிடம் சொன்னேன். எத்தனை நாள்? என்றார். மூன்று வாரம் என்றேன். அவர் நான் மூன்று மாத கர்ப்பம் என நினைத்து அலாஸ்காவில் இருந்த அம்மாவுக்குப் ஃபோன் செய்து சொல்லிவிட்டார். அம்மா வந்ததும் “மூன்று வாரத்துக்கு மேலாகத் தெரிகிறதே “என்றாள்.

ஆம் இன்னும் மூன்று வாரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்றேன்.

நான் குளிக்க ஏற்பாடு செய் என்றாள்.

நான் செய்ததும் குளியல்தொட்டியில் இறங்கியவள் உள்ளே வா சிகரெட் கொண்டு வா என்றாள். அப்போது தான் நான் அவளை முதல்முறையாக நிர்வாணமாகப் பார்த்தேன்.

உனக்கு சிகரெட் வேண்டுமா? என்றவள் நான் ஆம் என்றதும் எடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டு மீண்டும் குளிக்கப் போனாள்.

ஓப்ரா :

நீங்கள் கர்ப்பமாக இருப்பதைக் கேள்விப்பட்டதும் உங்கள் அம்மாவின் எதிர்வினை இவ்வளவு தான் இல்லையா?

மாயா :

மிகச் சரி. நீ  அந்தப் பையனை விரும்புகிறாயா? எனக்கேட்டார். இல்லை என்றேன். அந்தப் பையன் உன்னை காதலிக்கிறானா?

இல்லை.

அப்படியானால் மூன்று பேர் வாழ்வை நாசமாக்க நமக்கு உரிமையில்லை. நாம் இந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்றார்.

இது தான் விவியன் பாக்ஸர்.

யாராலும் நம்பமுடியாத ஒரு தாய்.

ஓப்ரா :

அது ஐம்பதுகளில் நடந்ததா?

மாயா :

நாற்பதுகளில். என் அம்மா எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்தார். நான் இரண்டு வேலையில் இருந்தேன். நானும் என் மகனும் சமையல் பகுதியுடன் கூடிய ஒரு அறையில் தங்கியிருந்தோம். என் அம்மா என்னை மாதமொரு முறை அழைத்து அற்புதமான உணவு வகைகளை செய்து கொடுப்பார். நான் யாரிடமும் பணம் பெற்றதில்லை.

ஒரு முறை மலையடிவாரத்திலிருந்த ஒரு ஊறுகாய் கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தோம். கடுகும் வினிகரும் கலந்த மணம் காற்றெங்கும் விரவிக் கிடக்க என் அம்மா என்னிடம் சொன்னார்.

“பேபி! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?

நான் சந்தித்தவர்களில்   (என் அம்மா மற்றும் திருமதி.எலினார் ரூஸ்வெல்ட் தவிர) மிக உன்னதமான பெண் நீ..

ஓப்ரா :

அப்போது உங்களுக்கு என்ன வயதிருக்கும்?

மாயா :

23 இருக்கலாம். இது என் பேறுகாலத்திலிருந்தே நிகழ்ந்தது.

அப்போது அம்மா முதுகில் புரளும் வெள்ளி முடிக்கற்றைகளோடு காதுகளில் பெரிய வைரக் காதணிகள் அணிந்து உதட்டுச் சாயத்தை அதிகமாக பூசியிருந்தார்.

என்னிடம்”நீ மிக அறிவாளியாகவும் அன்பு மிக்கவளாகவும் இருக்கிறாய்.இந்த இரண்டு குணங்களும் ஒரு சேர வாய்ப்பது அரிது.என்னை ஒருமுறை முத்தமிடேன்” என்று கேட்டார். நானும் முத்தமிட்டேன்.

அவர் தெருவைக் கடந்து தன் காரிலேறி சென்றார்.நான் வேறு பாதையில் ஒரு வாடகைக்காரிலேறினேன். அதன் கடைசி சீட்டில் அமர்ந்து கொண்டு யோசித்தேன்.

ஒரு வேளை அம்மா சொன்னது சரியென்றால் அவள் புத்திசாலி என்றால் அவள பொய் சொல்வதில் கருமித்தனமாக இருக்கிறாள்..

ஒன்று தெரியுமா?

ஒரு தாய்க்கு தன் குழந்தைக்கு சுதந்திரமளிக்க வேண்டிய வாய்ப்பும் பொறுப்பும் இருக்கிறது.

என் 17 வயதில் என் அம்மா எனக்கு முழுச்சுதந்திரம் கொடுத்துவிட்டார்.

நான் அவரைவிட்டு விலகியதும்.

“நீ வளர்ந்துவிட்டாய். இனி யாரும் உன்னை வளர்க்க வேண்டிய அவசியமில்லை.எது சரி எது தவறு என்பது உனக்குப் புரியும். எப்போதும் சரியானதைத் தேர்ந்தெடு.

எப்போது வேண்டுமானாலும் நீ வீட்டுக்கு வரலாம் என்பதையும் நினைவிலிருத்திக் கொள்” என்றார். அதை அவர் சாகும் வரை கடைபிடித்தார்.

மாயா :

மேலும் என் அம்மா இறந்த அன்றிரவு நான் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன் ஓபரா. அவர் மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் இழுத்துப்பிடித்துக் கொண்டிருந்தார்.

அவர் என் கைகளை அழுந்தப் பற்றிக்கொள்ள விரும்பக் கூடும். அதனால் அவர் அருகிலேயே அமர்ந்து அவர் கைகளைப் பற்றிக் கொண்டிருக்க ஒருவரை நியமித்திருந்தேன். அதனால் உள்ளே சென்றதும் கூறினேன்.” உங்களுக்குத் தெரியும்

சிலபேருக்கு இவ்வுலகைவிட்டு செல்ல அனுமதி தேவைப்படும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்களைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். நீங்கள் கடினமான உழைப்பாளி. அருமையாக சமைப்பவர். நீங்கள் எல்லோராலும் அதிகமாக நேசிக்கப்பட்டவர். எனது ஞாபகசக்தி சரியென்றால் நிறைய ஆண்கள்.. சில பெண்கள் கூட உங்கள் நேசத்துக்காக தங்கள் வாழ்வைப் பணயம் வைத்திருக்கிறார்கள்.

இதை நான் சொன்னதும் என் அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டிருந்தவர் சட்டென கையை விட்டார்.

நான் அவரிடம் “முதலில் கையைப் பிடியுங்கள்.என் அம்மாவைப் பற்றி உங்களை மதிப்பீடு செய்ய சொல்லவில்லை”  என்று கூறினேன்.

பின் அம்மாவிடம் உங்களைப் பற்றி உங்களிடம் சொல்கிறேன். நீங்கள் ஒரு அருமையான பெண்ணுக்கு அம்மாவாகும் தகுதி பெற்றவர்.அது உங்களுக்கு வாய்த்தது. நீங்கள் என்னை சுதந்திரமாக விட்டீர்கள்.இது நீங்கள் செல்வதற்கான நேரம்.இறைவன் உங்களை எதற்காக இப்புவிக்கு அனுப்பினானோ அவை எல்லாவற்றையும் நீங்கள் செய்து முடித்துவிட்டீர்கள்.!

ஓப்ரா :

யாருக்காவது நீங்கள் சுதந்திரம் கொடுக்க விரும்பினால் அவர்களை நேசியுங்கள் என்று முன்பொருமுறை சொன்னதாக ஞாபகம்.

மாயா :

ஆம். அவர்களோடு பாசப்பிணைப்பில் இருக்காதீர்கள். அது நல்லதல்ல. நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது பாசம் வைத்தால் அவர்கள் வாழ்நாள் முழுதும் உங்களை சார்ந்திருக்கக் கூடும்.அவர்களைத் தனியாக விடுங்கள். அவர்கள் தானே வளரட்டும். தவறு செய்யட்டும். நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். “எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம். உங்களை ஆதரிக்க என் கரங்களும் வார்த்தைகளும் உள்ளன என்று.

நான் உங்களைத் தனியே விடப் போகிறேன். உங்களுக்குப் பிடித்த ராக் அல்லது ராப் இசையைக் கேட்கலாம்.அது எனக்கு முட்டாள்தனமாய்த் தோன்றலாம்.”

நீங்கள் ஒருவரை உண்மையாக நேசித்தால் அவரை உங்களுடையதாக்கிக் கொள்ள நினைக்க மாட்டீர்கள்.”நான் உங்களை நேசிக்கிறேன். எப்போதும் நீங்கள் என்னுடனிருக்க வேண்டும்” என சொல்லமாட்டீர்கள். உண்மையில் நீங்கள் யாரையாவது நேசித்தால் அவர்கள் முகத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகிறீர்கள். அது உங்கள் அன்பின் நிலையல்ல. பெரும்பாலானோர் அன்பை தங்கள் உடைமையென எண்ணுகிறார்கள். அதனால் நீ என்னை உண்மையாக நேசித்தால் அடிக்கடி ஃபோன் செய்து எப்படி எங்கே இருக்கிறீர்கள்? நான் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் நினைவுகள் தான் என்னை மென்மேலும் உற்சாகப்படுத்துகிறது என சொல்லவேண்டுமென விரும்புகிறீர்கள். நான் ஃபோனில் வாழ்பவள் அல்ல.

ஓப்ரா :

இப்படிப்பட்ட நேசத்தை காதலிலும் உங்களால் கையாள முடியுமா?

மாயா :

அது மிகக் கடினம். ஆனாலும் நான் அப்படியிருந்தேன்.எப்படியென்று தான் தெரியவில்லை. நான் ஒருவரைக் காதலித்தால் அவர் என்னுடனே இருக்க வேண்டும். என்னை டின்னருக்கு அழைத்துச் செல்லவேண்டும்.என்னுடன் அந்திச் சூரியனை ரசிக்கவேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுவேன் தான். இல்லையென்றாலும் நான் அவரைக் காதலிக்கிறேன். நான் பார்க்கும் அதே சூரியனை அவரும் இப்போது பார்த்துக்கொண்டிருப்பார் என நம்புகிறேன். ஒருவரைக் காதலிப்பதென்பது, காதலிப்பவர் காதலிக்கப்படுபவர் இருவரையும் கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாய் விடுவது. இந்த மாதிரியான நேசம் வயதைப் பொறுத்தே அமையும்.

என்னுடைய 50 அல்லது 60 வயதில்தான் இப்படிப்பட்ட ஞானம் வந்தது.

ஓப்ரா :

எது சரியான வயது?

மாயா :

72. எழுபதுகள் தான் பிரமாதம்.

ஓப்ரா :

நீங்கள் சொல்வதைக் கேட்டால் மகிழ்ச்சியாக இருக்கிறது.நான் நாற்பது என்றல்லவா நினைத்தேன்!

மாயா : ஐம்பதை நெருங்கும்வரை பொறுத்திருங்கள்.

ஓப்ரா : 

ஐம்பதில் அப்படியென்ன விசேஷம்?

மாயா :

ஏராளமான விஷயங்கள்.அதிலொன்று நீங்கள் விரும்பியதைச் செய்யும் போது  பாதுகாப்பாய் உணர்வீர்கள்.முக்கியமாக நாம் ஏன் படைக்கப்பட்டோம் என்ற சிந்தனையில் நேரத்தை விரயம் செய்ய மாட்டீர்கள்.

ஓப்ரா :

ஏனென்றால் உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்.

மாயா :

ஆம்.உங்களுடைய ஐம்பதுகளில் நீங்கள் தெளிந்திருப்பீர்கள். மேலும் நீங்கள் மிக அழகாகி இருப்பீர்கள்.எந்தப் பெண்ணும் அவளது ஐம்பதாவது வயதில் இருக்குமளவுக்கு பேரழகாய் இருந்ததில்லை.

ஓப்ரா :

உண்மையாகவா?

மாயா :

நீங்கள் எத்தனை அழகாக இருக்கிறீர்கள் தெரியுமா? பத்து வருடங்கள் முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்கள்? அதைவிட பத்து மடங்கு அழகாகி இருக்கிறீர்கள்.

ஓப்ரா :

உங்களை நீங்களே உணர்ந்துகொள்ளவும் அதற்கான நேரம் வரவேண்டும்.

மாயா :

ஆம். ஐம்பதுகளில் உங்கள் அழகு உங்களுக்கு விருந்து மாதிரி.அது அறுபது வரை நீடிக்கும்.என்ன சொல்கிறீர்கள்? அறுபதில் வாழ்வு உங்களுக்கு நல்ல அங்கீகாரமென்ற பரிசளிக்கத் தொடங்கிவிடும். மக்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிகள் நூலகங்களுக்கு உங்கள் பெயரை வைக்கக் கூடும். அப்போதும் நீங்கள் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் இருப்பீர்கள்.

ஓப்ரா :

நீங்கள் இன்னமும் அப்படியிருக்கிறீர்கள்.

மாயா :

நீங்கள் அப்படி இருக்க விரும்பினால் உங்களால் முடியும்.சிலர் 50வயதிலேயே எல்லாம் முடிஞ்சிடுச்சு. இனி எப்போதும் இல்லை “என சொல்வதைக் கேட்கையில் வருத்தமாக உள்ளது.அவர்கள் சீக்கிரம் படுத்து மெதுவாக எழுவார்கள். ஆனால் உங்கள் அறுபதில் எல்லாமே இனிமையாக இருக்கும். உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும்.

ஓப்ரா :

உண்மையாகவா?

மாயா :

ஆமாம்.

ஓப்ரா :

உங்களுக்கு ஏதேனும் வருத்தம் இருக்கிறதா?

மாயா :

அதிகமில்லை. நான் இன்னும் கொஞ்சம் அன்பாகவும் அறிவாகவும் தாராளமாகவும் இருந்திருக்கலாம்.

ஓப்ரா :

அதை அப்படியே மறந்துவிடுங்கள். உங்கள் தயாள குணத்தினால் தான் மக்கள் உங்கள் வீட்டை மொய்த்தார்கள். பெருந்தன்மையாய் இருப்பதை உங்கள் வாழ்நாள் கொள்கையாகவே வைத்திருந்தீர்கள்.

மாயா :

கண்டிப்பாக. அனுபவத்தால் கற்றுக்கொண்டேன். மீண்டும், நான் என் இருபதுகளில் இருந்தபோது, ​​நான் மிகவும் ஏழையாக இருந்தேன். என் மகனுக்கு 4 வயது, நாங்கள் யூனிட்டி சர்ச்சிற்குச் செல்வோம், அதில் நான் இன்னும் அங்கம் வகிக்கிறேன். என்னிடம் ஏழு டாலர்கள் இருந்தால், என்னால் முடிந்ததை விட கொஞ்சம் அதிகமாக தேவாலயத்திற்கு கொடுப்பேன். பின்னர் நாங்கள் தேவாலயத்திலிருந்து நடந்தே செல்வோம்.

ஓப்ரா :

வெறும் ஏழு டாலர் மட்டுமே வைத்திருந்த அந்நாட்கள் இப்போதும் நினைவிருக்கிறதா?

மாயா :

நிச்சயமாக. அப்போது வங்கிக்கணக்கு கூட கிடையாது.பக்கத்திலிருக்கும் பலசரக்குக் கடைக்கு சென்று நானும் என் மகனும் மெல்லுவதற்கு கடினமான இரண்டு மாட்டிறைச்சி துண்டுகளை எலும்புகளோடு வாங்குவோம். என்னுடையதை சாப்பிடாமல் வைத்திருப்பதைப் பார்த்து என் மகன் “உங்களுடையதை சாப்பிடுங்கள்”என்பான்.”நான் முன்பே கொஞ்சம் சாப்பிட்டேன்.  “நீ சாப்பிடு” என்று அவனைச் சாப்பிட வைப்பேன். அன்றிரவே யாராவது ஃபோன் செய்வார்கள். “சூப்பர் மார்க்கெட் போயிருந்தேன்.அங்கே ஹாம்பர்கர் மீட் (அறைத்த மாட்டிறைச்சி) ஸேல் போட்டிருந்தார்கள். உனக்கும் சேர்த்து வாங்கியிருக்கிறேன் .போகும் வழியில் உன் வீட்டில் கொடுத்துவிட்டுப் போகிறேன்” என்பார்கள். இப்படி எனக்கு அடிக்கடி நடக்கும்.

நீங்கள் ஒரு கைக்குட்டை வைத்திருந்தால் எல்லா ஆசிகளையும் பெற இன்னொன்று தேவைப்படும். நீங்கள் கொடுக்க ஆரம்பித்தால் பரிசுகளைப் பெற ஒரு துண்டு தேவைப்படும். நீங்கள் மேலும் கொடுத்தால் ஒரு மேசை விரிப்பு தேவைப்படும். மேலும் மேலும் கொடுத்துக் கொண்டே இருந்தால் அது முட்டாள்தனமல்ல நீங்கள் கொடுங்கள்.. கடைசியாக நீங்கள் இரண்டாம் மூன்றாம் நான்காம் வீடுகளைப் பெறக்கூடும்.

ஓப்ரா :

உங்களுக்குக் கொடுக்கப்பட்டதால் நீங்களும் கொடுக்கக் கற்றுக்கொண்டீர்கள்..

மாயா :

ஆம். ஏராளமாக எனக்குக் கொடுத்தார்கள்.ஆச்சர்யமான விஷயம்.இது தோல்வி அல்ல. மறுக்கமுடியாத உண்மை.உங்களுக்குக் கிடைத்தால் கொடுங்கள்.கற்றுக்கொண்டால் கற்பியுங்கள். அதைத்தவிர வேறெதுவும் செய்ய வேண்டியதில்லை.

ஓப்ரா :

அவ்வளவு தான். மிக்க நன்றி மாயா.

மாயா :

மிக்க நன்றி ஓபரா


Courtesy  : www.oprah.com

எழுதியவர்

மதுரா
புனைப்பெயர் மதுரா. இயற்பெயர் தேன்மொழி ராஜகோபால்.
சொல் எனும் வெண்புறா, பெண் பறவைகளின் மரம் என்ற இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. பிராயசித்தம் என்ற சிறுகதை தொகுப்பும் வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். இவரது படைப்புகள் வெகுஜன பத்திரிகைகள், மின்னிதழ்கள், இணைய இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x