சமூக ஊடகங்களின் மூலமாக இலக்கியம் சார்ந்து தீவிரமாக விமர்சனங்களையும் பகிர்வுகளையும் அளித்து சம கால தமிழ் இலக்கியத்தில் கவனித்தக்க விமர்சகராக கருதப்படுகிறவர் திரு. சரவணன் மாணிக்கவாசகம். இவரின் ஃபேஸ்புக் பதிவுகளில் காணப்படும் ஏராளமான தமிழ் , ஆங்கில இலக்கிய நூல்கள் குறித்தான அறிமுகங்களும் விமர்சனங்களும் பல வாசகர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கின்றன. அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகும் படைப்புகளை வெளிப்படையாக விமர்சிக்கும் சரவணன் மாணிக்கவாசகம் மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபடுகிறார். “கலகம்” இணைய இதழுக்காக மின்னஞ்சல் மூலமாக நேர்காணல் செய்திருந்தோம். இதோ..!
வணக்கம் ! கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் ஒவ்வொரு மனிதரிடமும் இந்த விசாரிப்பு அவசியமாகிறது. நலம் தானே ?
வணக்கம்.மிக்க நலம். நன்றி.
01 – சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களைக் குறித்து நீங்கள் எழுதும் பதிவுகள் இலக்கியத் தேடலுள்ள வாசகர்களுக்குப் பயனுள்ளதாகவும், தகவல் களஞ்சியமாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஒரு நாளில் எத்தனை மணி நேரம் வாசிப்பிற்கு எனச் செலவிடுவீர்கள் ? இத்தனைப் பக்கங்கள் அல்லது இத்தனை நூல்கள் ஒரு நாளில் வாசித்தாக வேண்டுமெனத் திட்டமிடுவீர்களா?
எனது பதிவுகள் யாராவது சிலருக்கேனும் வாசிக்கும் உந்துதலை அளிக்கக்கூடும் என்பதை நினைக்கையிலேயே மனதிற்குப் பெரும் நிறைவாக இருக்கின்றது. பெரும்பாலான நேரங்களில், அன்றைய தினம் எடுக்கும் புத்தகமே, அன்றைய தினத்தின் வாசிப்பு நேரத்தை முடிவு செய்கிறது. தமிழோ, ஆங்கிலமோ நானூறு பக்கங்களுக்குள் இருக்கும் புத்தகங்களை அநேகமாக அன்றே படித்து முடித்து விடுகிறேன். இத்தனை மணிநேரம் என்று திட்டமிடுவதில்லை. சிலநேரங்களில் இடைவிடாத வேலைகள் நான்கு மணிநேரத்திற்கு மேல் படிக்கவிடுவதில்லை. தாண்டவராயன் கதை போன்ற புத்தகங்கள் தூங்கும் வேளையைத் தவிர மற்ற எல்லா நேரத்திலும் தொடர்ந்து படிக்க வைப்பவை.
02- புத்தகங்கள் மட்டுமல்லாது அச்சு இதழ்கள், இணைய இதழ்கள் வெளியாகும் அன்றே பிரசுரமான அனைத்து கதைகளையும் வாசித்து விமர்சனக் கருத்துகளை முன் வைக்கிறீர்கள். தமிழ், ஆங்கிலம் உள்பட வழக்கமாக நீங்கள் வாசிக்கும் அச்சு மற்றும் இணைய இதழ்களை குறிப்பிட முடியுமா?
அச்சு இதழ்களுக்குப் பெரும்பாலும் இப்போது சந்தா செலுத்துவதில்லை.. வேறு மாநிலத்திற்கு வரும் சாதாரண அஞ்சல்கள் பள்ளிப்பருவக் காதலைவிட அதிகம் மனக்கிலேசத்தை ஏற்படுத்துபவை. அதனால் அதைத் தவிர்க்கிறேன். தமிழ்வெளி, வியூகம் இரண்டும் அவர்களே அனுப்பிவிடுகிறார்கள். தொடர்ந்து அவற்றை மட்டும் படிக்கிறேன். அதிலும் வியூகம் இதழ் இலங்கையில் இருந்து வருவதால் தபால்செலவு இதழ் விலையை விட அதிகம். அதனால் மெல்லிய குற்றஉணர்வுடனே அந்தத் தபாலைப் பிரிப்பது வழக்கம். இணைய இதழ்களில் கனலி, யாவரும், தமிழினி, அகழ், ஆவநாழி, காலச்சுவடு, அந்திமழை, வனம், வல்லினம், பதாகை, சொல்வனம் முதலியவற்றைத் தொடர்ந்து படிக்கிறேன்.
03- உங்கள் விமர்சனங்களால் படைப்பாளர்களிடமிருந்து எவ்வாறான எதிர்வினை கிடைத்திருக்கிறது.? நீங்கள் மகிழ்ந்த அல்லது சங்கடப்பட்ட ஏதேனும் ஒரு எதிர்வினையைக் குறிப்பிடமுடியுமா?
பொதுவாக என் பக்கத்தில் பதிவதைத் தவிர எழுத்தாளர்களுக்குத் தனியாக நான் அனுப்புவதில்லை. இரா.முருகன், தமிழ்நதி, தேவேந்திரபூபதி, சு.வேணுகோபால் போல வெகுசிலர் அழைத்துப் பேசியிருக்கிறார்கள். பத்மஜா நாராயணன், ஷஹிதா, லதா அருணாச்சலம் போன்றோர் வேறு படைப்புகள் குறித்தும் விவாதித்திருக்கிறார்கள். பெரும்பாலும் கல்லைக் குளத்தில் வீசி இரண்டுநிமிடம் ஆனபின் தோன்றும் சலனங்களே இங்கு எதிர்வினைகள். ஆங்கிலத்தில் யாரும் முட்டாள்தனமாக அவர்கள் நூலைப் பற்றி எழுதியிருந்தாலும், அவர்கள் கவனத்திற்கு வருகையில் கண்டிப்பாகத் தனிப்பட்ட செய்தி அனுப்புவார்கள்.
04- புத்தகங்களைத் தவிர்த்து, அச்சு, இணைய இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளுக்கு, மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து விமர்சனம் எழுதும் நீங்கள், கவிதைகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிப்பதில்லையோ என கருத நேரிடுகிறது. ஏன்?
இது அடிக்கடி என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி. நல்ல கவிஞர்கள் என்று நீங்கள் சொல்லும் எல்லோரது படைப்புகள் குறித்தும் எழுதியிருக்கிறேன். புதிதாக வருபவர் பலரது கவிதைத் தொகுப்பு குறித்து முதலில் எழுதியது நான் என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். சில நேரங்களில் கவிதைத் தொகுப்புகள் தண்டனையாகி விடுகின்றன அந்த தண்டனையை மற்றவருக்கும் தர வேண்டாம் என்று பதிவிடாமல் நான் அடுத்த புத்தகத்தை எடுத்து விடுகிறேன்.
05- விமர்சனம் எனச் சொன்னாலே எது விமர்சனம், எது விமர்சனமில்லை என வரையறைகளும் விதிகளும் எழுந்து விவாதிக்கப்படுகிறது. ஒரு படைப்பு குறித்தான விமர்சனச் சிந்தனை அல்லது இலக்கிய மதிப்பீடு எவ்வாறாக இருக்கலாம்? தீவிர இலக்கிய வாசகராக உங்கள் கருத்து ..
விமர்சனம் என்பதே எப்போதும் தனிப்பட்ட வாசிப்பனுபவம் தான். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பது போல் ஆ யிரம் புத்தகங்கள் படித்தோர் யாரும் விமர்சனம் எழுத வரலாம். க.நா.சு வின் தனிப்பட்ட ரசனைத் தேர்வுகள் என்னைப் பொறுத்தவரை சோடை போனதாக நான் பார்க்கவேயில்லை.விமர்சனத்தை ரசனை அடிப்படையில் விமர்சனம், ஆய்வு அடிப்படையில் விமர்சனம் என்று இரண்டு வகையில் சொல்லலாம். ஆய்வு ரீதியாக எழுத நிறைய நேரம் எடுக்கும், நிறைய அந்த வகையான நூல்களை Refer செய்து இந்தநூல் எப்படி வேறுபடுகிறது என்று சொல்ல வேண்டும். கதைக்களம், கதாபாத்திரங்கள், Themes, Symbols என்று Indepth analysis செய்ய வேண்டியிருக்கும். ஆழ்ந்த வாசிப்பு இல்லாமல் செய்ய இயலாது. தினம் வாசிக்கவேண்டியவை Exponential growth ஆகும் நேரத்தில் என்னால் அதைக் கற்பனை செய்ய முடியாது. அதனால் இரண்டின் முக்கியமான கூறுகளையும் வைத்து குறுகிய விமர்சனம் ஒன்றை செய்கிறேன். நம்மிடையே வரும் நீண்ட விமர்சனங்களும் ரசனை அடிப்படையிலானவை, இருபது கதைகள் பற்றிக் கூறுவார்கள். எதுவாக இருந்தாலும் விமர்சனம் Spoilers இல்லாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் நுட்பமான விசயங்களைப் பார்க்கும் கண் வேண்டும். உதாரணத்திற்கு சுமித்ராவிற்கு இறக்கும் வயதில்லை, அவள் கணவனுக்கு அவள் இறந்தது தெரியாது ஆகவே அது கொலை இல்லை. அவள் ஏன் சாக வேண்டும்? ஒருமுறை பார்த்தவர் கூட அவளை நினைவுகூர்கையில் கணவன் ஏன் அதை செய்வதில்லை? ஆசிரியர் தெரிந்தே விட்ட இந்த இடைவெளிகளைப் பற்றிப்பேசாமல் மணிக்கணக்கில் பேசி நாம் எதை சாதிக்கப் போகிறோம்? கண்ணிருக்கும் எல்லோரும் படிக்கப்போவதை குறித்து நாம் மணிக்கணக்கில் சொல்ல என்ன இருக்கிறது?
06- மற்ற மொழிகளை விடவும் தமிழ் இலக்கியப் படைப்புகளில் புதுமையாக, தனித்துவமாக நீங்கள் கண்டறிந்தது எது? மற்ற மொழிகளிலிருக்கும் படைப்புக் களம், படைப்பு விவரிப்புத்தன்மை தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமாக வேண்டுமென கருதுகிறீர்களா?
தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள் உலகத்தின் எந்த மொழிக்கும் குறைந்தவையல்ல. அதே போல் பெருந்தேவி, யவனிகா, கிருபா போன்றவர்களின் கவிதைகள். தமிழுக்கு அநேகமாக எல்லா நல்ல படைப்புகளும் வேற்றுமொழியில் இருந்து வந்துவிடுகிறது. இங்கிருந்து ஆங்கிலத்திற்கு செல்ல வேண்டிய படைப்புகள் நிறையவே இருக்கின்றன. பூனாட்சி போன்ற நூல்களை ஆங்கிலத்தில் கொண்டு வந்து நம்மை நாமே கேலிப்பொருளாக்கிக் கொள்கிறோம்.
07- மூல மொழியிலும் தமிழிலும் நீங்கள் வாசித்த நூல்களில் எந்த நூல் மிக சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டதாக கருதுகிறீர்கள்? எந்த நூல் இன்னும் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாமென கருதுகிறீர்கள்?
ஆல்பர் காம்யுவின் அந்நியன் வெ.ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பில். அதே போல் குட்டி இளவரசன், கீழைநாட்டுக் கதைகள். மொழிபெயர்ப்பில் அவர் மாஸ்டர். வேறெப்போதும் இல்லாதவகையில் அதிகமானோர் மொழிபெயர்ப்பில் இறங்கி இருக்கிறார்கள். சின்னச்சின்னக் குறைகளைத் தாண்டி நல்ல மொழிபெயர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழில் படிக்கையில் தடங்கலை ஏற்படுத்தும் எந்த மொழிபெயர்ப்பும், யார் செய்திருந்தாலும் மோசமான மொழிபெயர்ப்பே.
08 – படைப்புகள் என்றளவில்.. உங்கள் மனதிற்கு நெருங்கிய எழுத்தாளர்/கவிஞர் யார்? ஏன் ?
தி.ஜானகிராமன். அந்த மொழியின் வசீகரமும், வார்த்தைகளுக்கு இடையே அவர் விட்டிருக்கும் மௌனத்தின் சத்தமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
09- தற்போது வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் நம்பிக்கைக்குரியவர்களாக யாரைக் கருதுவீர்கள்? ஏன்?
நிறையப்பேர் இருக்கிறார்கள். இடைவெளி நேராது சங்கப்பலகையில் வரிசையாக உட்கார உட்கார அதுவும் நீண்டு கொண்டே போகிறது. அதிகம் எழுதாததவர், மிகுந்த நம்பிக்கைக்குரியவர்கள் என்றால், ஈழத்தின் பிரமிளா, சிங்கப்பூரின் லதா, ஹேமா, சுஜா ஆகியோரைச் சொல்வேன். இவர்கள் அதிகம் எழுத வேண்டும்.
10- வாசிப்பு என்றளவில் உங்கள் இளமைக்காலம் மற்றும் உங்கள் குடும்பப் பின்னணி குறித்து ?
வாசிப்பு அம்மாவிடம் இருந்து தொற்றிக் கொண்டது. முதலில் தணிக்கை செய்து கொடுத்தவர் பின்னர் நான் படிக்கும் வேகத்தைப் பார்த்து பேசாமல் விட்டுவிட்டார். வாசிக்காத நாட்கள் என் நினைவில் இல்லை. இரவில் படிப்பதால் பகல் முழுக்க வேலை இருந்தாலும் படித்துவிட்டே படுப்பது பழக்கமாகிவிட்டது. என் மகள் குழந்தையில் இருந்தே ஆங்கிலத்தில் அதிகம் படித்து வருகிறார். சில புத்தகங்கள் அவரது சிபாரிசில் படித்ததுண்டு.
11- உங்கள் இல்லத்தில் பிரத்தியேகமாகப் புத்தகத்திற்கு என அறை இருக்கிறதா ? எத்தனைப் புத்தகங்களை வைத்திருப்பீர்கள்?
புத்தகங்களை ஒழுங்கில்லாமல் தான் வைத்திருப்பேன். படுக்கையில் எப்போதும் பத்து புத்தகங்கள் இருக்கும். எல்லா அறைகளிலும் புத்தக அலமாரிகள் இருக்கும். Physical books 5000 இருக்கக்கூடும்.
12 – தமிழ், ஆங்கிலம் நீங்கலாக மற்ற எந்தெந்த மொழிகளின் இலக்கிய நூல்களை வாசித்து உள்ளீர்கள்?
தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் வாசிக்கத் தெரியாது. கன்னடம், தெலுங்கு பேச மட்டுமே தெரியும்.
13 – நீண்ட காலம் இந்திய மற்றும் அயல் மொழிகளின் இலக்கியத் துறையைக் கவனித்து இருப்பீர்கள் என்றளவில் இந்தக் கேள்வி. வெளிநாடுகளில் உள்ளதைப் போலத் தமிழிலக்கிய எழுத்தாளர்களுக்குப் படைப்புகளுக்கு ஏற்ற வருமானம் போதுமானதாக இல்லை என்பது நீண்டகால குறையாகப் பேசப்படுகிறது. இந்தக் குறை நிவர்த்தியாக என்ன என்ன மாற்றங்கள் நிகழவேண்டும்? யாரிடமிருந்து நிகழ வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?
ஆங்கிலத்தில் வரும் புத்தகங்கள், Hit ஆனதென்றால் குறைந்தது ஐம்பது நாடுகளில் வாசிக்கப்படுகின்றன. அந்த எழுத்தாளரின் வருமானத்தை எப்படி நாம் தமிழுடன் ஒப்பிட முடியும்? மாற்றங்கள் வாசகர்களிடமிருந்தே நிகழ வேண்டும். ஒரு சினிமாவிற்கு ஆயிரம், ஹோட்டலுக்கு இரண்டாயிரம் என்று செலவு செய்பவர்கள் பணம் கொடுத்துப் புத்தகங்கள் வாங்காமல் Pdfஐ எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் வந்த கண்மணியின் இடபம், ஜெயந்தியின் லிங்கம் போன்ற நூல்களை தினம் இணையத்தில் பதிவிடும் பெரிய எழுத்தாளர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் சொல்வதைத் தான் படிக்க வேண்டும் என்று வாசகர் காத்திருந்தால் நல்ல புத்தகங்கள் அவர்களைப் போய் சேரப் போவதில்லை. யாத்வஷேம் எத்தனை பேர் படித்தார்கள்? நல்ல புத்தகங்களைத் தேடி அலையும் வாசகர் தமிழில் பத்தாயிரம் பேர் இருந்தால் கூடப் போதும். நல்ல புத்தகங்களுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் பிரதிகள் விற்பனை உறுதியாகிறது. ஆங்கிலப் புத்தகங்களின் எழுத்தாளர் வருமானம் பற்றிப் பேசுபவர்கள், இங்கே ஆங்கிலப் பதிப்பாளர்கள் போல் Deep pockets இல்லாது ஏதோ உந்துதலில் பதிப்பகத் தொழிலில் இருக்கிறார்கள் என்பதை சௌகரியமாக மறந்து விடுகிறார்கள். மனைவியின் நகையை விற்றுப் புத்தகம் போட்டவர்கள் எத்தனையோ பேர்.
14- உங்கள் அனுபவத்திலிருந்து வாசிப்புச் சார்ந்து இளம் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது ?
எந்த வித முன்முடிவும் இல்லாமல் பிரதியை அணுகுங்கள். ஒரு பிரதி இருவேறு நபர்களால் ஒன்றே போல் வாசிக்கப்படுவதில்லை. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சராசரிக்குக் குறைவான தரம் உள்ள படைப்புகளை பிராண்டிற்காக நன்றாக இருக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. மூன்று முறை படித்தும் புரியாத பிரதி உங்களுக்கானதல்ல. வாசிக்க ஏராளமாக இருக்கின்றன. இதை வெட்டென மறந்து அடுத்த வாசிப்பைத் தொடருங்கள்.
கலகம் இணைய இதழுக்காக நேர்கண்டவர் : இரா.சந்தோஷ் குமார்
சிறப்பான நேர்காணல்.இருவருக்கும் பாராட்டுகள்.
நேர்த்தியான கேள்விகள், தீர்க்கமான பதில்கள். என் படைப்புகளின் மீதான விமர்சனங்களைப் பார்த்துவிட்டு தோழர் சரவணன் அவர்களைத் தொடர்புகொண்டவர்களில் நானும் ஒருவன். என் படைப்புகளை வாசித்துவிட்டு தோழர் சரவணன் என்ன எழுதுவார் என ஆவலுடனேயே நான் இருப்பேன். ஏனென்றால், தன் பரந்துபட்ட வாசிப்பனுபவத்தில் இருந்து நேர்மையாக அவர் சொல்லும் விமர்சனம் மகிழ்வளிக்கக்கூடியது! நேர்காணலுக்கு நன்றி!
வாழ்த்துகள் மாணிக்கம் சேர். 13,14 கேள்விக்கான விடை மனதுக்கு நெருக்கமாக இருந்தது. தீவிரமான வாசகர் ஒருவர் பற்றி தெரிந்துக்கொண்ட து மகிழ்ச்சியே 😍
பயனான நேர்காணல்…
வாசிப்பின் வழி எப்போதும் ஆச்சர்யம் கொடுப்பவர். அவர் மூலம் பல புத்தகங்களை அறிந்துக்கொண்டேன்…
மிகவும் சிறப்பாக அமைந்துள்ள நேர்காணல்