வெயில் பறவைகள்
கொத்திப் போன
கனவு தானியங்கள்
இரவில் மீண்டும் முளைத்து விடுகின்றன
இரவு முழுவதும் விழித்தே கிடக்கும்
நட்சத்திர பறவைகள்
கண்களை காவல் செய்கின்றன
மழைக்கு முன் விதைத்த
கனவுகள்
இப்போது
அறுவடைக்குத் தயாராகிவிட்டன
ஒரு நீண்ட பயணம்
பெயரறியாமல் போன
ஒரு கனவை
எனக்கு அறிமுகம் செய்கிறது
வேர்களை
அந்த நிலத்திலேயே
விட்டு வந்த கனவுகள்
தொட்டிச் செடியில்
ஒரே ஒரு பூவினை மலர்த்திவிட்டு
காத்திருக்கச் சொல்கிறது
பகலும் இரவுமாய் உழைத்து
தேகம் கருத்து
வீதியில் ஏங்கி நிற்கும்
வயோதிக கனவுகளை
கல்லெறிந்து கலைத்துவிடுகிறார்கள் சிறுவர்கள்
பகலும் அல்லாத இரவும் அல்லாத
ஒரு கனவைக் கண்டபடி
ஒரு இளைஞன் வேகமாக
சாலையைக் கடக்கிறான்
கனவுகளுடன் சாலைக்கு வருபவர்களை
அச்சுறுத்துகிறது காவல்துறை
கனவுகளை பலியிடும்
அரசன் ஒருவன்
தன் ஆணைகளை
புதிய புதிய வடிவில்
சட்டங்களாக அமுல் படுத்துகிறான்
கனவுகளைக் கொன்ற தேசத்தில்
ஒரு பறவை
தன் தானியங்களை தேடி அலைகிறது
தானியங்கள் இல்லாத நிலத்தில்
பறவைகளின் எலும்புகள் நிறைகின்றன
எலும்புகளும் சாம்பல்களும்
அரசனின்
அன்றாட கனவுகளை
பூமியில்
விதைக்கத் தொடங்குகின்றன
– மஞ்சுளா
எழுதியவர்
- கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார். இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன. மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார். "மொழியின் கதவு " நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி) வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.
இதுவரை.
- கவிதை20 July 2021கனவுகளைக் கொன்ற தேசம்