ஏற்கனவே படைக்கப்பட்டவன்
நான் ஒரு கோட்டில் புதைகிறேன்
மறு கோட்டில் எழுகிறேன்
இடையில் துளையில் நுழைந்து
விரல்களின் அசைவில் மீளுகிறேன்
நீங்கள் அந்திப்பொழுதில்
கூடி மகிழ்கிறீர்கள்
கைகளில் உயர்தர பழரசம்,
நுரைததும்பும் குவளையிலிருந்து
வடிந்து நனைக்கிறது ப்ரியங்களை.
மெல்ல… மெல்ல
விரல்கள் அசைய
ஒரு ராட்சச அலைபோல இசை
புல்லாங்குழலிலிருந்து வெளியேறுகிறது.
நீங்கள் ரசிப்பதில் உயர்வர்க்கம்
இரவுகளின் ஒரு பகுதியில் உறங்குவதற்கு பழக்கப்பட்டவர்கள்
அந்த இரவு, ஒரு சில உயர்தர பானங்களால் நிரப்பப்பட்டிருந்தது
குடித்துவிட்டு அதிகமாக கடவுளென
உங்களில் ஒருவர் மலைகளையும் கடலையும் நெருப்பையும் படைத்ததாக பிதற்றுகிறார்
உங்கள் கைகளிலும் உயர்தர மதுபாட்டிலொன்றை தந்துவிட்டு.
இப்போது நீங்களும் மழை நதியென
படைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பார்த்துக்கொண்டிருக்கும் நான் ஏற்கனவே படைக்கப்பட்ட மனிதன்.
பெருங் கனவு
பெருங் கனவுக்கு
இடராய் இருக்குமென்று
வெளிச்சத்தை இரவாக்குவது சிறந்ததென,
முடிவுக்கு வந்தபோது,
உறக்கத்திற்கென
வெளிச்சத்திலிருந்து இருளுக்கு
விரைவாய் மாறுகிறது கண்கள்.
அப்படியே ஆழ்ந்த உறக்கத்திலிருந்து
மெது மெதுவாக விடுபடுகிறேன்
கனவொன்றுக்குள், மீன்தொட்டியிலிருந்து துள்ளிக்குதிக்கும் மீனைப் போல்.
பிறகு
பெருங் கனவு பாம்புகளாகவும்
சாத்தான்களாகவும்
நிறைகிறது உறக்க நிலைக்குள்.
இப்போது
சலசலக்கும் இலைகளின் நிழல் போல
மெதுவாய் பயம் அறிமுகம் செய்யப்படுகிறது.
பின்னர்
உறக்கமும் கனவும் கலையலாம்
பயம் மட்டும் அறை முழுதும்
நிறைந்து நிற்க.
நான் வெளியேறுகிறேன்
கதவுக்குப் பின்னால்
தனித்துவிடப்பட்ட இரவொன்றிலிருந்து.
இறுதியில் இருளே எனக்கு இதமாகும்
என்ற தப்பெண்ணத்திலிருந்து
விடுபடுகிறேன்.
சூரியன் எனைச் சுடுகிறது.
ஜே.பிரோஸ்கான்
எழுதியவர்
இதுவரை.
- கவிதை20 July 2021பிரோஸ்கான் கவிதைகள்