புதிய சூரியன் எழும்பி இருந்தது
பரிசுத்த காற்று நுரையீரல் வழி
அடர்ந்த காட்டில் பச்சை இலைகள்
புதியகிருமிகள் உருவாகவில்லை
நோய்த்தொற்று இல்லை
கிருமி நாசினி இல்லை
புகைகள் இல்லை
புகார்கள் இல்லை
தடுப்புகள் இல்லை
தடைத்தாண்டவுமில்லை
ஆடையின்றிதான் இருந்தோம்
சர்ப்பம் தெரிந்தது
ஆப்பிளைக் கடிக்காமல்
இம்முறை சுதாரித்துக்கொண்டோம்
நானும் எனது ஆதாமும்
வாழ்வென்னும் ஆற்றில் தத்தளிக்கிறது மன எறும்பு
இலை பறித்துப்போட்டு காப்பாற்றத்தான் எந்த புறாவும் இல்லை
பெரியசாமி தாத்தாவும் லட்சுமி பாட்டியும்
ஒரே வீட்டில் இருபது வருடங்களாக பேசிக்கொள்வதில்லை
நாளும் கிழமைகளில் நன்றாய் குடித்துவிட்டு
பேசாத பேச்சுக்களை எல்லாம் பேசியே தீர்த்தார்
பெரியசாமி தாத்தா
மாரியம்மன் கோவில் திருவிழாவில்
இதுவரை ஆடாத ஆட்டமெல்லாம்
சாமியாடியே தீர்த்தாள்
லட்சுமி பாட்டி
இந்த இரவிற்குப் பெரிய கோரைப்பற்கள்
உன் நினைவுகளை போர்வைக்குள் விடாமல் போர்த்திக்கொள்ளவே முயலுகிறேன்
உன் மாயக்குரல்வழி உள் புகுந்து தூக்கத்தை கண்களுக்கு வெளியில் அது கைது செய்கிறது
எப்போதும் உன் மடி தேடுவேன்
நீ இல்லாத இந்த பொழுதில்தான் புரிகிறது அப்படி தேடியது சாபம் என்று
தலை கோதும் உன் மென் விரல்கள் காற்றிற்கு இல்லை
மின்விசிறி கூட உன் குரலில்தான் சுற்றுகிறது
இதோ விடிந்துவிட்டது
இன்னொரு இரவில் உன் நினைவு வந்துவிடவே கூடாது
இதே கோரைப்பற்களோடு அந்த இரவும் என்னை பரிகசித்துவிடக்கூடாது.
– அகதா
எழுதியவர்
- கவிஞர், தமிழ்ப் பேராசிரியர். கடந்த நான்கு வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை இணையத்தில் எழுதியதோடு அதன் மூலமாக பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் வாங்கியுள்ளார். அதில் முக்கியமாக தமிழகக் காவல்துறையும், படைப்புக் குழுமமும் இணைந்து கடந்த ஆண்டு நடத்திய மதுவிலக்கு கவிதைப்போட்டியில் உலகளாவிய அளவில் முதல் பரிசு வாங்கியமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல்வேறு இணைய இதழ்கள், ஆனந்த விகடன் உள்ளிட்ட வார மற்றும் மாத இதழ்களில் தொடர்ந்து இவரது கவிதைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. அசோகவனம் செல்லும் கடைசி ரயில் ,நீ பிடித்த திமிர் என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். கவிச்சுடர் விருது ,மக்கள் செல்வாக்கு மிக்க படைப்பாளி விருது, கவிஞர் கண்ணதாசன் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார் . தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்கங்களில் பங்குகொண்டு, பல்வேறு தலைப்புகளில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி உள்ளார். மேலும் பெரம்பலூர் மாவட்ட அளவில் இளைஞர்களுக்கு பல்வேறு வகைகளில் புத்தாக்கப்பயிற்சி அளித்து கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது
இதுவரை.
- கவிதை20 July 2021அகதா கவிதைகள்