17 September 2024

முருகேசனுக்கு இரண்டு நாட்களாக நெத்திலி கருவாடு மீது ஞாபகமாக இருந்தது. சுடச்சுட சோறும் நெத்திலி கருவாட்டுக் குழம்பும் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அந்த ஆசை காலையில் அவர் எழுந்ததில் இருந்து ஏக்கமாக மாறியிருந்தது.  அந்த ஏக்கத்தைத் தூண்டும் விதமாக காலையில் இருந்து வானம் மேகமூட்டமாகவே இருந்தது.

காலையில் எழுந்தவுடன் வழக்கமாகக் கொடுக்கும் டீயை முதியோர் இல்லத்தில் கொடுத்தார்கள். முருகேசனும் அந்த டீயை எதையோ நினைத்துக்குடித்தார். இரண்டு நாட்களாக மனம் அவரிடம் இல்லை. திடீரென அவருக்கு அம்மா ஞாபகம் வந்தது. அம்மா ஞாபகம் வந்ததும் அவர் மனது கனமானது. அம்மா சாகும் முன்பு சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் இப்போது ஈட்டியாக குத்தின. ‘’முருகேசு, நீ கவர்மெண்டு வேலையில கைநெறைய சம்பளம் வாங்கி கௌரவமா இருந்தாலும் கடைசி காலத்துல பேச்சுத் தொணைக்காவது ஆள் வேணும்னு தோணும்டா. அதுக்காச்சும் ஒரு கல்யாணத்த பண்ணிக்கோடா. நாப்பது வயசுங்கிறது ஆம்பளைக்கு வாழுற வயசுதாண்டா முருகேசா. ஆள் இல்லாம தனியா கெடந்து அல்லாடுற வாழ்க்கைய எதுக்குடா வெல கொடுத்து வாங்குற. யாரையாச்சும் ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கோ. நானும் போயிட்டா ஒன்ன ஒரு நாதிகூட சீண்டாது. காசு பணத்தவிட தொணை முக்கியம்டா முருகேசா’’ என அம்மா மூச்சைக்கட்டி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் பலித்து வருவதை முருகேசன் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்று, பதினாறு வருடங்கள் கழித்து இப்போது உணர்ந்து வருகிறார். ’’பேச்சுத்தொணைக்கு ஆள் வேணும்டா முருகேசா’’ என முருகேசனின் அம்மா சொன்னபோது அவருக்கு எண்பத்தி ஏழு வயது.  தன் வாழ்க்கையில் இருந்து , வலிகளில் இர்ந்து சொன்ன வார்த்தைகள் அவை. முப்பத்தியேழு வருட தனிமை கொடுத்த துயரிலிருந்து சொன்ன வார்த்தைகள் அவை. ஆனால் அதை உணரும் பக்குவத்தில்   அப்போது முருகேசன் இல்லை.

முருகேசன் வீட்டுக்கு நான்காவது பிள்ளை. அவருக்குப் பிறகு இருவர், பெண்கள். முருகேசனைத் தவிர எல்லோரும் குடும்பம்ம் குழந்தைகளுமாக வாழ்கிறார்கள். முருகேசனுக்கு எனோ கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தது. அதற்கு அவரின் அப்பா மரணமும் காரணமாக இருக்கலாம். வியாபாரத்துக்காக கடன் வாங்கி, வாங்கி கடைசியில் ஒருநாள் பாலிடாயில் குடித்து சோளக்காட்டில் செத்துக்கிடந்தவரை முருகேசன் ஒற்றைஆளாய் தூக்கிவந்த வாழ்க்கைக் கனம் கூட அவரை கல்யாணம், குடும்பம் மீது பயத்தையோ வெறுப்பையோ உண்டாக்கியிருக்கலாம். எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் யாராவது,’’ஏன் நீங்க கல்யாணம் பண்ணிக்கல’’ என கேட்டால், சிரித்துக்கொண்டு தலையை கீழே தொங்கப்போட்டபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்துவிடுவார்.

முருகேசன் பத்திரபதிவுத் துறையில் ரெஜிஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர். அந்தத்துறை காசு கொழிக்கும் துறை. முருகேசன் கேட்கவில்லை என்றாலும் காசு இருக்குமிடம் தேடி வரும். வர்கின்ற காசையெல்லாம் சேர்த்து வைத்து தங்கைகள் இருவருக்கும் சமமாகப் பிரித்துக்கொடுத்துவிடுவார். அதனாலேயே தங்கைகள் இருவருக்கும் முருகேசன் மீது கொள்ளை பாசம். ஆனால் அதே தங்கைகள் தான், அண்ணா முதியோர் இல்லம் எல்லாம் எதுக்குப் போற, என் வீட்டுல வந்து இரு, நான் பாத்துக்கிறேன் என பாசாங்காகக்கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை. ஆனால் முருகேசனுக்கு அதில் எல்லாம் எந்த வருத்தமும்  இல்லை.

ஒரு அறையில் உட்கார்ந்து டிவியையே பார்த்துக்கொண்டிருப்பது போல நடிப்பதில் விருப்பம் இல்லாமல் அறையை விட்டு வெளியே வந்தார். மழை இதோ வந்துவிடுவேன் என்பது போல் இருந்ததால் வானத்தை ஒருமுறை அண்ணாந்து பார்த்தார். நிறை சூலியாக வானம் கரும் மேகங்கள் பாவியிருந்தது. அந்த கருமை அவரை  என்னவோ செய்தது. கிட்டத்தட்ட அந்த நிறத்தில் தான் இருந்தாள், திலகவதி. முருகேசன் திலகவதியை பார்த்தபோது, அவள் மூன்று வயது பெண் குழந்தையுடன் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்தாள். ரயில் வந்ததும் குழந்தையையும் சூட்கேசையும் தூக்கமுடியாமல் கஷ்டப்பட்டபோது முருகேசன் உதவி  செய்தார். சூட்கேசை அவள் உட்கார்ந்திருந்த இடத்தில் சீட்டின் கீழே வைத்தார். உடனே திலகவதி  கருப்பு வெள்ளை திரைப்படங்களில் வரும் நடிகையைப் போல  ’இரு கைகளையும் கூப்பி ’ரொம்ப நன்றிங்க’ என்றாள். அந்த சித்திரம் முருகேசனுக்கு இப்போது சட்டென மனதுக்குள் வந்தது. மீண்டும் வானத்தை ஒருமுறை அண்ணாந்து பார்த்தார். மேகங்கள் இரண்டு இணைந்து கைகூப்புவது போன்ற ஒரு ஓவியம் இருந்ததாக நினைத்துக்கொண்டாரா அல்லது உண்மையிலுமே அங்கு அப்படி இருந்ததா எனவும் தெரியவில்லை.

மீண்டும் ஒருமுறை வானத்தை அண்ணாந்து பார்த்தார். முப்பத்தியேழு வயதில் முதன் முதலாக ஒரு பெண்ணின் உடலை முழு நிர்வாணமாக பார்த்ததை இப்போது வானமேகங்களில் பார்த்தார். அந்த உடல் திலகவதியின் உடல். திலகவதியின் கணவன் விபத்தில் இறந்துபோன இரண்டு ஆண்டுகளான தனிமையில், அந்த தனிமையும் இளமையும் கொடுக்கும் கொடும் துயரிலிருந்து வெளிவர  ஒரு பின்மாலை பொழுதில் முருகேசனோடு கலந்தாள். அன்றும்கூட வானம் இப்படித்தான் கருமேகங்கள் சூல்கொண்டு வெளிச்சமும்  இருட்டும் கலந்து இருந்தது. வானத்தை திர்ம்பதிரும்ப அண்ணார்ந்து பார்த்ததில் முருகேசனுக்கு என்றுமில்லாமல் மனம் அதீத பாரத்துடன் இருப்பதுபோல் தோன்றியது. அந்த நிமிடம் யாரையாவது கட்டிப்பிடித்து அழவேண்டும் போல இருந்தது. சுற்றியும் முற்றியும் பார்த்தார். இரண்டு பேர் தடியூண்டி வாக்கிங் போய்க்கொண்டிருந்தார்கள். இன்னொரு கணவன் மனைவி ஜோடி சத்தமாக ஆயர்பாடி மாளிகையில் என பாட்டுப்பாடிக்கொண்டே நடந்துகொண்டிருந்தனர்.

அப்போது,’’முருகேசா பேச்சுத் தொணைக்கியாச்சும் ஒரு கல்யாணத்த பண்ணிக்கோடா’’ என்ற அவரின் அம்மாவின் இறுதி வார்த்தைகள் காதுக்குள் கேட்டது.

ஒருநாள் கூடல் முடிந்த அந்த கணத்தில்,’’நீங்க இந்த வித்தையெல்லாம் காட்டுறதுக்காச்சும் உருப்பிடியா ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோங்க’’ என்று திலகவதி கெஞ்சலும் கண்டிப்பும் கலந்த தொனியில் சொன்னாள்.

‘’எவளையோ கட்டிக்கிறதுக்கு உன்னையே கட்டிக்கிடுறேனே’’ என்றதுக்கு, யோசிக்காமல் அடுத்த வார்த்தையாக,’’ எனக்கும் ஆசைதான். ஆனா பொம்பள பிள்ளைய வச்சிருக்கேன். நாளைக்கு இவள கட்டிக்க வர்றவன் என்னால இவள கஷ்டபடுத்தக்கூடாதே. அதான். இல்லாட்டா உங்கள மாதிரி ஒருத்தர வேணாம்னு சொல்ல மனுசு வருமா?’’ என்றவள் அழுதாள். யாரும் யாரையும் எதுவும் சொல்லித் தேற்றவில்லை.

முருகேசன் வேப்பமரத்தடியில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து இருந்தார். அப்போது ’’என்ன சார், சாப்பிட வர்லியா’’ என ஆயர்பாடி மாளிகையில் ஜோடி  கேட்க,  “வர்றேன்…’’ என்றவர் எழுந்துபோகவில்லை. உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தார். டைனிங் காலில் சிலர் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்து வந்த தக்காளி தொக்கின் வாசனை, மீண்டும் நெத்திலி கருவாட்டுக்குழம்பின் மீதான ஏக்கத்தை அதிகப்படுத்தியது.

’’நெத்திலி கருவாட்டுக்குன்னு ஒரு ஸ்பெசல் வாசனை இருக்கு. இது மத்த கருவாடு மாதிரி நாத்தம் வராது. வாசனையா இருக்கும். அதுவும் புளி, காரம், உப்பு சேர்ந்தவுடனே ஒரு வாசன வரும் பாருங்க… அந்த வாசனைய படிச்சுகிட்டே ஒரு தட்டு சாப்பாட்ட சாப்பிட்டுறலாம் தெரியுமா’’ என ஒருமுறை திலகவதி மஞ்சள் கலர் சேலையும் குங்கும கலர் ப்ளவுசும் போட்டுக்கொண்டு தலையை ஆட்டி ஆட்டி சொன்னது  நொந்துபோயிருந்த முருகேசனின் மனதை இன்னும் காயப்படுத்த, குத்திக் கிழிக்கவே நினைவில் வந்தது போல இருந்தது. அதை நினைத்து நினைத்து பார்க்கையில் முருகேசனுக்கு இதயத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியே வந்து கொட்டுவது போல இருந்தது.

”இந்த பொடவை ஒனக்குன்னே வாங்கினேன் தெரியுமா. எனக்கு பொடவையெல்லாம் எடுத்து பழக்கமில்ல. இருந்தாலும் இந்த புடவை எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. புதுநெறமா இருக்குற ஒனக்கு இது நல்லா இருக்கும். இப்பவே கட்டிக்கிறியா? நான் ஒண்ணு கேட்பேன். நீ தட்டாம இதை செய்யனும். மல்லிப்பூ வாங்கிட்டு வந்திருக்கேன். வச்சுக்கிறியா? யாரும் இல்லையில்ல. நீயும் நானும் மட்டுந்தானே இருக்கோம். குழந்தையும் தூங்கிடுச்சு இல்ல. எனக்காக வச்சுக்கோ’’ என்று கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டபோது அவரையும் அறியாமல் அழுதார். எதற்கு அழுகிறோம்  என்பதே தெரியாமல் குலுங்கிக் குலுங்கி அழுதார். அந்த அழுகை திலகவதியை  என்னவோ செய்தது. திலகவதியும் சேர்ந்து அழுதாள். அந்த அழுகை காதலினால் ஆனது என்பது இருவரும் உணர்ந்தபோது இன்னும் கொஞ்சம் அதிகமாக அழுதார்கள்.

மல்லிகைபூவும்  மஞ்சள் நிற சேலையும் கட்டிக்கொண்டு நெத்திலிக் கருவாட்டுக் குழம்பை திலகவதி பரிமாறினாள். சோற்றையும் குழம்பையும் பிசைந்து சிறு கவளமாக்கி திலகவதிக்கு ஊட்டிவிட்டார் முருகேசன். ஆசை ஆசையாக அந்த கவளத்தை வாயில் அடைத்து மெதுவாக மென்று மென்று முழுங்கினாள். அன்று மட்டும் மூன்றுமுறை கலந்தார்கள்.

வழக்கம்போல் முருகேசன் விடிவதற்கு முன்பு கிளம்பிய போது அழுது  வீங்கிய கண்களுடன் திலகவதி சோடியம் பல்ப் வெளிச்சத்தில் முருகேசன் அருகில் வந்து, அவனது கைகளைப் பிடித்து,   “இனி நாம பாக்கவே வேண்டாம். இனி பார்த்தா நம்மால பிரியவே முடியாது. கொழந்தை இருக்கே. அதுவும் பொண் கொழந்த…. அவ வாழனும்…என்னால எந்த பிரச்சனையும் இல்லாம அவ வாழனும்’’- என்று இறுகப் பற்றியிருந்த இருவரின் கைகளையும் கண்களால் காட்டி, நிறுத்தினாள்.  முருகேசன் எதுவும் சொல்லாமல் அந்த மஞ்சள் வெளிச்சத்தில் திலகவதியின் முகம்  பார்த்தார். தலையில் வைத்த மல்லியும் மஞ்சள் சேலையுமாக திலகவதி அன்று ரொம்பவும் அழகாக இருந்ததைப் போல் அவருக்குத் தோன்றியது. இறுகிய முகத்துடன் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிய முருகேசன் அதன் பிறகு எங்கும் நெத்திலி கருவாடு சாப்பிடவில்லை. எல்லா இடங்களிலும் எல்லாவற்றையும் சாப்பிட மனது வராது. அதுதான் மனதின் சிக்கல். வாழ்வின் சிக்கல். வாழ்வதின் சிக்கல்.

எதை  எதையோ நினைத்ததும் முருகேசனின் மனது என்னவோ செய்தது. சட்டென, ‘எதுக்கு  இந்த வாழ்க்கை… பேச்சுத் தொணைக்குக் கூட ஆள் இல்லாத வாழ்க்கை’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருந்த போது, பக்கத்து வேப்பமரத்தின் கீழ் இருந்த சிமெண்ட் பெஞ்சில் இருந்து அழுகை சப்தம் வருவது போல் இருந்தது. அதுவும் தேம்பித் தேம்பி அழும் சத்தம். தன்னைப் போல யாரோ ஒருவர் தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டு இருக்கிறாரே  என்று நினைத்த முருகேசன் அந்த சிமெண்ட் பெஞ்சை நோக்கி நடந்தார்.

முருகேசனுக்கு எதிர்த்த அறையில் இருக்கும் தங்கவேலு, ஒரு காலத்தில் வருமான வரித்துறை ஆபிசராக கெத்தாக வாழ்ந்தவர். மனைவியின் மறைவுக்குப் பிறகு மகன்கள், மருமகள்களுடன் இருக்கப் பிடிக்காமல் ஒரு வருடத்துக்கு முன்பு இந்த முதியோர் இல்லத்தில் வந்து சேர்ந்தார். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். எப்போதும் கையில் ஆங்கில நாவல்களோ, பேப்பரோ வைத்துக்கொண்டு வாசித்துக் கொண்டிருப்பார். கொஞ்சம் இறுக்கமான ஆள்தான். ’அப்படி ஒரு இறுக்கமான ஆள் ஏன் இப்பிடி தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருக்கிறார், ஒருவேளை அவருக்கு மனைவி ஞாபகம் வந்துவிட்டதால் அழறாரோ’ என கொஞ்சம் தயக்கத்துடன் அவர் அருகில் உட்கார்ந்தார். இவரைப் பார்த்ததும் இன்னும் கூடுதலாக அழுதார். முருகேசன் எதுவும் கேட்காமலேயே சொன்னார்.  “என்னைய நல்லா இருக்கியான்னு கேக்குறதுக்கு இந்த ஒலகத்துல இருந்த ஒரே ஜீவன் என் தங்கச்சி. அவளும் இன்னிக்கு காலையில போயிட்டா’’ என்று சொன்ன தங்கவேலு முருகேசனின் முகம் பார்த்து,’’ரொம்ப நல்லவ சார். எங்கூட பொறந்த ஒத்தையே ஒத்தப்பொண்ணு. கல்யாணமாகி ஒரே வருஷத்துல தனிமரமா ஆயிட்டா…’’ என்று சொல்லி நிறுத்தியவர், அவரே தொடர்ந்தார். “இன்னிக்கு என்னமோ அதிசயமா காலையிலேயே நெத்திலி கருவாட்டுக் கொழம்பு வைக்கிறேனு ஆச ஆசயா சமையக்கட்டுக்கு போயி சமைச்சுகிட்டு இருக்கும்போது நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி கீழ தரையில உக்கார்ந்தவ அப்பிடியே போயிட்டாளாம். அவ பொண்ணு சொல்லி சொல்லி அழறா. என்னால இந்த சர்க்கரையில வெட்டுன வெரலு இல்லாத காலோட தனியா சென்னையில இருந்து திருச்சிக்கு போக முடியுமா சொல்லுங்க’’ என்று சொல்லிக்கொண்டே திடீரென முருகேசன் மீது சாய்ந்து குழந்தை போல ஏங்கி ஏங்கி,’’ஆயி திலகா நீயும் போயிட்டியா’’ என்று அழுதபோது முருகேசன் ,’’சார் அழாதீங்க….வாங்க ரெண்டு பேரும் திருச்சிக்கு கார் புக் பண்ணி போவோம். தொணைக்கி நான் வரேன்’’ என்று எந்த சலனமும் இல்லாமல் சொன்னதை நம்ப முடியாதவராக பார்த்தார் தங்கவேலு

உடலை சுற்றி உட்கார்ந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருத்தி,’’இன்னிக்கு என்னன்னு தெர்ல பாட்டி காலையிலேயே குளிச்சு இந்த மஞ்சப் புடவையத்தான் கட்டிக்குவேன்னு சொல்லி இந்த புடவையை ரொம்ப நேரமா தேடி எடுத்துக் கட்டிக்கிட்டாங்க. அப்ப ரொம்ப ஹேப்பியா இருந்தாங்க’’ என சொல்லிக்கொண்டிருந்தாள். நடுவீட்டில் இருந்த ஊதுபத்தி வாசனையையும் மீறி நெத்திலிக் கருவாட்டுக்குழம்பின் வாசனை காற்றில் தூக்கலாக மிதந்துகொண்டிருந்தது. அந்த வாசனை முருகேசனின் நாசியைத் தொடும் துரத்தில் அவர் காரில் இருந்து இறங்கி வந்துகொண்டிருந்தார்.


-நாச்சியாள் சுகந்தி

எழுதியவர்

நாச்சியாள் சுகந்தி
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
trackback

[…] ஜூன் 2021- ஆம் இதழில் வெளியான நாச்சியாள் சுகந்தியின் “மழை தருமோ மே…  சிறுகதை குறித்து  அர்ஷா மனோகரனின் […]

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x