23 November 2024
jinga-natchiyal

ட்டோ உட்டோன்னு சொல்லு’’ அதிகாலையில் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த பேருந்தில் அந்த சிறுமியின் குரல் குழலிக்கு வித்தியாசமாக இருந்தது. அந்த வார்த்தைகளில் பரிதவிப்பும் செய்யக்கூடாத தவற்றை நீ செய்துவிட்டாய் என்கிற தொனியும் இருந்தது.

குழலியின் மனதில் இவள் சொல்வதை நாம் கேட்க வேண்டுமா என்கிற எண்ணம் ஓடியது. பேருந்து வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. பயணிகளில் பாதிப்பேர் உறங்கிக் கொண்டிருந்தார்கள். குழலியும் அந்த சிறுமியும் ஓட்டுநரின் இருக்கைக்குப் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். சிறுமி சன்னலோரம் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் குழலி உட்கார்ந்திருந்தாள். அவளிடம் தான் ’’உட்டோ உட்டோன்னு சொல்லு’’ அந்த சிறுமி கேட்டுக்கொண்டிருந்தாள்.

’’எதுக்கு அப்படி சொல்ல சொல்லுற’’ – குழலி அமைதியாகக் கேட்டாள். அந்த சிறுமி கொஞ்சமும் பதற்றம் குறையாதவளாக, ‘’நீ என்ன கேட்ட, அம்மா இல்லியா, ஏன் தனியா வர்றன்னு கேட்டியே…அது தப்பு இல்லியா? எனக்கு அம்மா இருக்கு. அப்பா இருக்கு. ரெண்டு தம்பி இருக்கு. ஒருத்தன் நாலாவது படிக்கிறான். சின்னவனுக்கு நாலு வயசுதான் ஆகுது. அவன் அம்மாகிட்டயே இருக்கான். உயிரோட இருக்கவங்கள இல்லியான்னு கேட்டா தப்பில்லையா. உட்டோ உட்டோன்னு சொல்லி துப்பு. அப்பத்தான் எங்கம்மா மேல விழுந்த கெட்டது போகும்’’ அவள் படபடவென்று சொன்னபோதுதான் தான் கேட்ட கேள்வியிலிருந்த தவற்றை குழலி உணர்ந்தாள். உண்மையிலேயே அவளுக்குச் சங்கடமாக இருந்தது. மன்னிப்புக் கேட்கும் குரலில் ’உட்டோ உட்டோ’ என்று சொல்லி அவள் சொல்லிக்கொடுத்ததைப் போலவே துப்பினாள். அதன்பிறகுதான் அந்த சிறுமியின் முகத்தில் சிரிப்பும் நிம்மதியும் வந்தது.

குழலியின் முகம் மாறுவதைக் கண்ட சிறுமி நிலைமையைச் சகஜமாக்கப் பேச்சைத் தொடங்கினாள்.

’’உம் பேரென்ன’’

‘’வண்டார் குழலி, உம் பேரென்ன?””

“இதென்ன பேரு வண்டார்குழலி, நான் கேட்டதேயில்ல. யாரு வச்சா இப்பிடி ஒரு பேரு?”

“உம் பேரச் சொல்லவேயில்லையே நீ” –குழலி அழுத்திக் கேட்டதும் சிரித்துக்கொண்டே ‘’எம் பேரு ஜோதி. இஸ்கூல்ல மந்த்ரா. எங்கம்மா ஜோதி ஜோதின்னு தான் கூப்புடும். எங்கம்மாவுக்கு நான்னா ரொம்ப புடிக்கும். எங்கம்மா சென்னையில பெசண்ட் நகர்ல ஊசிமணி விக்குது. எங்கப்பா கோயம்பேட்டுல விக்குது. நான் ஓசூர்ல இருந்து வர்றேன். எங்கத்த பொண்ணுக்கு கல்யாணம். அதுக்கு போறேன். எங்கப்பா கோயம்பேட்டு பஸ் ஸ்டாண்டுல நிக்குது. நான் எறங்கின ஒடனே என்ன கூட்டிட்டு போகும். நான் ஓசூர்ல எங்க அத்த கூட இருந்து படிக்கிறேன். ஏழாவது படிக்கிறேன்’’ எனத் தன்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் கடகடவென்று சொன்ன ஜோதி எனும் மந்த்ராவைப் பார்த்து குழலிக்கு ஆச்சரியமாக இருந்தது. ’தன்னால் இந்த சிறுமியிடம் தன்னைப் பற்றிய விவரங்களை கடகடவென்று சொல்ல முடியுமா என்று யோசித்துப் பார்த்தாள். பேருந்து ராணிப்பேட்டை பைபாஸ் தாண்டி போய்க்கொண்டிருந்தது. சாலையின் இரண்டு பக்கங்களும் பச்சைப் பசேலென இருந்தது. இத்தனை நிறங்கள் இருக்க ஏன் பயிர்கள் எல்லாம் பச்சை நிறத்திலேயே இருக்கிறது. வாழை மரங்கள் கருமையாக இருந்தால் எப்படி இருக்கும்? அதைப் பார்க்கக் கண்களுக்கு இதமாக இருக்குமா? பசுமைதான் மனதுக்கும் கண்ணுக்கும் இன்பத்தைத் தருவதால்தான் இயற்கை எல்லாவற்றையும் பச்சை நிறத்திலேயே படைத்திருக்கிறதா? அப்படியானால் அதே இயற்கை எல்லா மனிதர்களையும் ஒரே இயல்பில், ஒரே மாதிரியான குணத்தில் படைத்திருந்தால் இந்த உலகமே அமைதி பூங்காவாகத்தானே இருக்கும்? இயற்கைக்கு ஏன் அப்படி தோன்றவில்லை’

குழலியின் கைமீது எதோ ஊர்வது போல இருந்ததால் சுயநினைவுக்கு வந்தவளாகக் கையைப் பார்த்தால், கைமீது சிறு அணில் குட்டி தன் குட்டி தலையை வலதும் இடதுமாக ஆட்டி, எந்தப் பக்கம் தாவிக்குதிப்பது எனத் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது. திடீரென பேருந்துக்குள் எப்படி அணில் குட்டி வந்தது என குழலி சுற்றிச்சுற்றிப் பார்க்க, ஜோதி அவளைப் பார்த்து ஈறு தெரியச் சிரித்தாள். ‘’என்ன பாக்குற. என்னோட ஃபிரண்டுதான் இது. ஜமுனா இது பேரு. இவ்ளோநேரம் அது உன் மடி மேலதான் இருந்துச்சு’’ என்றவள் சிவப்பு இற சுருக்குப் பையைக் காண்பித்து,’’இதுக்குள்ள போட்டுத்தான் கொண்டு வந்தேன். இதுக்கு வாழப்பழம்னா ரொம்பப் புடிக்கும். ஆப்பிள், கொய்யா கூட சாப்புடும். செவப்பு கொய்யான்னா அதுக்கு ரொம்ப இஷ்டம் என்று சொன்னவள் குழலியின் விரல்களைப் பிடித்து அணிலைத் தடவ வைத்தாள். குழலிக்கு அந்த அணிலின் சிறு உடலைத் தடவத் தடவ மன இறுக்கம் குறைவதைப் போல தோன்றியது. அதனால் அதை மீண்டும் மீண்டும் தடவினாள். சட்டென அவளுக்கு தன் மகள் சில்வியாவின் நினைவு வந்தது. மீண்டும் ஒருமுறை அணிலைத் தடவினாள். சில்வியாவைத் தடவுவது போல உணர்ந்த கணம், அவள் கண்களில் நீர் கொட்டத் தொடங்கியது. ஜோதி பார்த்து விடக்கூடாது என்பதற்காக சுடிதார் ஷால்-ஐ எடுத்து முகத்தைப் பொத்திக்கொண்டாள்.

ஷால் மூடிய கண்களில் உருவான இருளில் கணபதியின் முகம் மிதந்தது. கணபதி சில்வியாவை இப்படித்தான் தடவுவான். அதுவும் குழந்தையை ஒரு கையில் மார்போடு அணைத்துக்கொண்டு மறுகையில் குழந்தையின் தலையை தடவிக்கொண்டே இருப்பான். அவள் தூக்கத்தில் சிரிக்கும் அழகை பார்த்து பார்த்து வியப்பான். சிலநேரத்தில் உணர்வு மேலிட அழுவான். அவன் கண்களில் நீர் மட்டும் வழிந்துகொண்டிருக்கும். பல நாட்கள் நடுராத்திரியில் அழும் குழந்தைக்குப் பால் கரைத்துப் புகட்டியிருக்கிறான். ஒருமுறை சில்வியாவுக்கு நிமோனியா காய்ச்சல் வந்த போது பதினோரு மாதக் குழந்தையை இரவு முழுதும் கையிலேயே வைத்திருந்து, நான்கு மணிநேரத்துக்கு ஒருமுறை பாராசிட்டாமல் மாத்திரையை நான்காக உடைத்து தண்ணீரில் கரைத்து அவள் தூங்கும்போதே வாயில் சங்கை வைத்து ஊற்றி குழந்தையை சரியாக்கினான். அவள் வாந்தியெடுத்த போதெல்லாம் கணபதிதான் துடைத்துவிட்டான். அந்த கணபதி குழந்தையைப் பார்த்து இரண்டு வருடங்கள் மூன்று மாதங்கள் பதினேழு நாட்களாகவிட்டன என்று மனதுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தவளை ஜோதி உசுப்பினாள். ’’அக்கா பஸ் நிக்குது. நான் போய் அணிலுக்கு பால் வாங்கிட்டு வர்றேன்’’ என்றவள் குழலியின் காலை மிதித்து அவசரம் அவசரமாக டீக்கடையை நோக்கி ஓடினாள்.

குழலி மொபைலில் நேரம் பார்த்தாள். எட்டரை மணியாகியிருந்தது. ’பதினோரு மணிக்குள் கோயம்பேடு போய்விட்டால் அங்கிருந்து ஓலா டாக்ஸி பிடித்து ஹைகோர்ட்டுக்கு போய்விடலாம். பனிரெண்டு மணிக்கு மேல் தான் தன் வழக்கு வரும். இருந்தாலும் கோர்ட்டில் கூப்பிடும் நேரம் அங்கிருந்தால் தான் நீதிபதியிடம் எல்லாவற்றையும் சரியாகச் சொல்ல முடியும் என்று நினைத்தவளுக்கு அயர்ச்சியாக இருந்தது. ஐந்து வருடங்களாக இந்த விவாகரத்து வழக்கு நடக்கிறது.ஆனால் வழக்கு முடிந்தபாடில்லை. ஏன் இழுத்துக்கொண்டே போகிறது என்பதற்கும் காரணமில்லை. கணபதிக்கு என்னதான் பிரச்சனை என்பதை இத்தனை வருடங்களாகியும் புரிந்துகொள்ள முடியவில்லை. விவாகரத்து வேண்டாம் என்பவன் இறங்கி வந்து பேசலாம். அதுவும் இல்லை. ஆனால் பார்ப்பவர்களிடம் எல்லாம் என்னைப் பற்றிக் குறை சொல்வதில்லை. இவன் கெட்டவனா, நல்லவனா என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை. கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தாதவன். கடைசியாக அவன் சொன்னது இதுதான்,’’குழலி உனக்கு என் கூட , என் குடும்பத்துக் கூட அட்ஜெஸ்ட் பண்ணிப் போக முடிலேன்னா நீ உன் அம்மா வீட்டுக்கு போய்டு. நான் ஏதும் சொல்ல மாட்டேன். ஒனக்கு தேவையானதா நான் பாத்துக்கிறேன். உன் அம்மா வீட்ல ஒன்ன பாத்துக்குவாங்கன்ற நம்பிக்கை இருந்தா போ. இல்லாட்டா தனியா இரு. ஒனக்கு எது சந்தோஷமோ அதைச் செய்’’ இவனால் எப்பிடி ஒரு தத்துவஞானியைப் போல வாழ்க்கையை அணுகமுடிகிறது? ஒரே வார்த்தையில் பத்தாண்டுக் கால இல்லறத்தைத் துண்டித்துக்கொள்ளும் மன திடம் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இத்தனைக்கும் அவன் கடவுள் பக்தியில் திளைக்கிறவனும் கிடையாது. அப்புறம் எப்படி அவனால் இது சாத்தியம்? சட்டென உறவை அறுத்துக்கொள்ளுதல் ஆண்களுக்கு வாய்த்த அருங்குணமா? அப்படியானால் அவன் ஏன் சில்வியா விஷயத்தில் இத்தனை அடம்பிடிக்கிறான். சில்வியா வாரத்தில் இரண்டு நாட்கள் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என மூன்று வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறான். அதில் இத்துனை மூர்க்கமாக இருக்கிறான்?’ யோசிக்க யோசிக்க குழலிக்கு தாகம் அதிகமானது. ஒரு லிட்டர் தண்ணீரையும் ஒரே முச்சில் குடித்தாள். தண்ணீர் குடித்ததும் தனி தெம்பு வந்தது போல இருந்தது. ஜோதி பேருந்தில் ஏறினாள். அவள் முகம் சோகமாகயிருதது. குழலி கேட்பதற்கு முன்னமே ஆரம்பித்தாள், ’எங்கயும் பால் கெடைக்கல. அணில் பாவம். சென்னை போறவரைக்கும் பட்டினிதான்’’ என்ற்வளின் முகம் மேலும் வாடி வதங்கியது. அது கண்முன்னே ஏங்குவது., ஒரு பன்னீர் ரோஸ் வதங்கி சுணங்கி காய்வது போலத் தோன்றியது குழலிக்கு.

‘’ஏன் டீ வாங்கிக் குடுக்க வேண்டியதுதான ஜோதி’’

‘’ஐயோ, டீ குடிச்சா அணிலோட முடியெல்லாம் உதிந்திடும். அது பாவம். தண்ணி குடுத்திருக்கேன். வாழப்பழம் சாப்புட்டிருக்கு. சென்னைக்கு போய் தான் பால் கொடுக்கனும்’’ என்றவள் அணிலை சுருக்குப் பையில் போட்டு பேருந்து இருக்கையின் கைப்பிடியில் கட்டினாள். அணில் அந்த சின்னஞ்சிறு கைப்பைக்குள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தது. பேருந்து வேலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் வளைந்து திரும்பியது. அந்த மூலையைக் கடக்கும்போது மீன் நாற்றம். குழலி மூக்கைப் பொத்தினாள். ஜோதிதான் ஆரம்பித்தாள்,’’ஒனக்கு ஜிங்கா புடிக்குமா? எனக்கு ரொம்ப புடிக்கும். என் சின்னத் தம்பி அஜீத்துக்கு ஜிங்கான்னா ரொம்ப புடிக்கும். எங்கம்மா இப்ப எனக்கு ஜிங்கா எடுத்து சமச்சு வச்சிருக்கும். நல்லா வெங்காயம், தக்காளி, மெளகா, ஆச்சித்தூளு எல்லாம் போட்டு ஜிங்கா போட்டு செமையா சமச்சு வச்சிருக்கும். ஜிங்கான்னா நா ஒரு குண்டான் சோறு தின்னுவேன். ஒனக்கு ஜிங்கா புடிக்குமா? –குழலிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஜிங்கான்னா என்ன? எனக் கேட்டாள்.

’’ஐயோ ஒனக்கு புரியுறமாதிரி எப்பிடி சொல்றது? மீன் கடையில இருக்குமில்ல. நண்டு, கடம்பா இது கூட இருக்கும். நாங்க ஜிங்கான்னு சொல்லுவோம். நீ என்ன சொல்லுவன்னு தெர்லியே’’

‘’நண்டு கூடன்னா, எறாலா’’

‘’ஆமா, எறா, எறா. அதைத்தான் நாங்க ஜிங்கான்னு சொல்லுவோம். எங்கம்மா சமச்சா சூப்பரா இருக்கும். நீயும் வர்றியா, எங்க வீட்டுக்கு. சாப்புடலாம்’’ இந்த கேள்வி குழலிக்குள் என்னவோ செய்தது. முன் பின் தெரியாதவளை, பேருந்தில் இரண்டு மணிநேரமாக மட்டும் தெரிந்தவளை என் வீட்டுக்கு வா என்று கூப்பிடும் நம்பிக்கை மனது எங்கிருந்து வரும்? யார் கொடுப்பார்கள் இம்மாதிரியான மனதை? ஒருவேளை என் மனமும் இப்படித்தான் இருந்ததா? நான் தான் அதை கடினமாக்கினேனா அல்லது குடும்பம், சமூகம் என்னை இப்படி ஆக்கியதா? பக்கத்தில் இருப்பவனிடம் கூட பேச யோசிக்கும் மனது எப்போது உருவானது? நீயே உயிர் என்று சொன்னவனை அலையவிட்டுக் கதற விடும் மனது ஏன் உருவானது?

அன்பென்பதை என்னவென்று புரிந்துகொண்டிருக்கிறேன்… ’உன்னால் என்னோடும் என் குடும்பத்தோடும் ஒத்துப்போக முடியவில்லை என்றால் உனக்குப் பிடித்த ஒரு வாழ்க்கையை வாழ்’ என்று சொல்வது காதலாலா அல்லது பழிவாங்கவா? குழலிக்கு இப்போது யாரையாவது கட்டிப்பிடித்து அழ வேண்டும் போல இருந்தது. இந்த வாழ்க்கையை ஏன் இத்தனை சிக்கலாக்கிக்கொண்டோம்…என் வாழ்க்கையை மட்டுமா சிக்கலாக்கினேன், சுயநலத்தின் பொருட்டு என்னைச் சுற்றி இருக்கும் எல்லோரையும் கோர்ட்டுக்கு ஐந்து வருடங்களாக அலையவிட்டுக்கொண்டிருப்பது குரூரம் இல்லியா? குழலியின் மனதில் யாரோ இரும்புப்பாறையை தூக்கி வைத்தது போல இருந்தது.கண்கள் இருண்டு தலை சுற்றுவது போல் இருந்தது. யார்மீதாவது சாய்ந்துகொள்ளத் தோன்றியது. ஜோதியின் தோள்களில் சாய்ந்தாள். அந்த சின்னத் தோள்கள் குழலியை தன் மடிமீது சாய்த்துக்கொண்டது. அணிலின் தலையைத் தடவுவது போல அவளின் தலையைத் தடவியது. கண்களிலிருந்து மாலை மாலையாக வழிந்த நீரை தன் பிஞ்சு விரல்களால் துடைத்துவிட்டது. தன் கைப்பையில் வைத்திருந்த பத்து ரூபாய் ஜூஸ் பாட்டிலை எடுத்து குழலியின் வாயில் புகட்டியது. அங்கு அந்த கணம் ஜோதி எனும் பன்னிரண்டு வயது சிறுமி தாயாகி இருந்தாள். ஜூசை புகட்டியவள் அவள் நெஞ்சைத் தடவித்தடவிக் குடிக்க வைத்தாள். குழலிக்கு கணபதி நினைவு வந்தது. கணபதி சில்வியாவுக்கு மாத்திரையைச் சங்கில் வைத்துப் புகட்டியவுடன் இப்படித்தான் நெஞ்சையும் முதுகையும் தடவிவிடுவான். இப்போது தான் சில்வியாவா, குழலியா என்கிற மனபிரம்மை ஏற்பட்டது. அவள் மனம் வாஞ்சையும் பிரதிபலன் பாராத அன்பும் நிறைந்த அந்த நீவுதலுக்கு ஏங்கியது.

தன் போன் அடிக்கவே மெதுவாக ஜோதி மடியிலிருந்து எழுந்து பர்ஸில் இருந்த போனை எடுத்தாள்.

‘’மேடம் எப்ப வருவீங்க?, உங்க கேஸ்தான் இன்னிக்கு நாலாவது கேஸா லிஸ்ட் ஆகியிருக்கு’’

‘’இன்னும் ரெண்டு மணிநேரமாவது ஆகும் மேம். மத்தியானம் டைம் கேட்டுப்பாருங்க. கொடுத்தா ஒகே. கொடுக்கலேன்னா அந்த ஹியரிங்லேயே சொல்லிடுங்க, சில்வியாவ வீக் எண்ட்ல கணபதிகிட்ட…ஐ மீன் அவங்கப்பாகிட்ட விடுறதுக்கு எனக்கு சம்மதம்னு சொல்லிடுங்க மேடம்’’ என்று சொல்லச் சொல்ல குழலியின் மீது அமர்ந்திருந்த இரும்புப்பாறை அவள் கண் முன்னேயே நொறுங்கிப் போனதை உணர்ந்தாள். கட்டைப்பையிலிருந்த ஆம்பூர் ஸ்பெஷல் ஸ்வீட்டை எடுத்து ஜோதிக்குக் கொடுத்தாள். அவள் அத்துனை பற்களும் தெரியச் சிரித்து வாயில் வைத்து ருசிக்கத்தொடங்கியபோது குழலி ஜோதியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். அணில் அந்த சுருக்குப் பைக்குள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தது. குழலி, அணிலின் தலையைத் தேடித் தடவினாள்.

எழுதியவர்

நாச்சியாள் சுகந்தி
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x