23 November 2024
kamorrthi story

காடு இறைப்புக்காக கிழக்கு காலனி நடுக்குருவியோடு பாதாங்கிவரை சென்று காளைகளை அற்புதம் பிடித்து வந்திருந்தார்.  மங்கான்தான் காளைகளுக்கு கமலைப் பழகிகொடுத்திருந்தான்.  குட்டேரி திமிலையில் மாட்டப்பட்டிருந்த நுகத்தினை காளைகள் சுமந்து இழுக்காது.  உடம்பினைக் குறுக்கிக்கொண்டு வயிறு முட்டி கழுத்தினை நெமண்டிக்கொண்டு ரோதையில் படுத்துக்கொள்ளும்.  காளைகளின் பின்னுக்கு இருந்துதான் வாலை கடித்து வைப்பான்.  ரோதையின் முன்பக்கமாக இருந்தால் கையில் வைத்திருக்கும் தும்புக்கயிற்றினை மடக்கி காதுகளின்மீது இறுக்குவான்.  காளைகள் சின்னப்பட்டுப் போகும்.

எள்ளுக்காட்டுக்கும் தினைப்பயிறுக்கும் நடுவாந்திரமாக இருக்கும் பொழியில்தான் கமலை ஏத்தக் காளைகள் கரம்புவதற்கு செத்தக்கோம்புகள் மண்டிக் கிடந்தன.  எள்ளுக்காடு பாரு போட்டுவிட்டு வந்திருந்தார் அற்புதம்.   அகல அகலமான பாத்திகள்.  ஒற்றையாள்தான் மடைத்திறந்து தண்ணீர் கட்டவேண்டும்.  மேலக்குண்டில்தான் தினைப்பயிர்கள் சிமுசிமுவென நின்றுகொண்டிருந்தன.  குழந்தைகளின் விரல்களைப்போல கதிர்கள் குவித்து பால்கட்டி வைத்திருந்தன.  ஒன்றிரண்டு மட்டும் மஞ்சள் பூத்தபடி அசங்கிகொண்டிருந்தது.

முதற்கோழி கூவி வைத்ததும் அற்புதம் எழுந்துகொள்வார்.  அந்தியில் பறியின் கிழிசல்களை தைத்து வைத்திருந்ததின்மீது தண்ணீரை ஊற்றி வைத்திருந்ததை பார்த்துக்கொள்வார்.   பெரும் ஒழுகலாக இருந்தால் அந்திக்கு முன்னதாக வந்து பறியினை தைத்துக்கொள்ள வேண்டுமாய் தனக்குள்ளே சொல்லிக்கொள்வார் அற்புதம்.  பலகைக்கல்லின் மீது வைக்கப்பட்டிருந்த சின்னக்குதிருக்கு அண்டையாக படுத்து அயர்ந்து கிடக்கும்  தானியனை அற்புதம் இறைப்புக்காக எழுப்புவதில்லை.  அறிவாளனைத்தான் அழைத்துக்கொண்டு போவர்.  அற்புதம் தலைக்கயிரை கையில் பிடித்துக்கொள்வார்.  பறியினை தோளில் மாட்டிக்கொண்டு போகும் ரெட்டைமலைச்சந்தில் இருட்டு அயர்ந்து தூக்கத்தி்ல் கிடக்கும்.  அரைத்தூக்கத்தில் அற்புதத்தின் பின்பக்கமாக நடந்துவரும் அறிவாளன் படுக்கையில் ரெட்டைமலைச்சந்தில் தூங்கி கிடக்கும் இருட்டினை கால்களில் போட்டு துவட்டிவிடுவான்.  இருட்டு கோட்டான்களைக் கண்டு மிரண்டு கத்துவதாக நினைத்துக்கொள்வான்.

பெரியமலையில் காட்டுக் கோழிகளின் சப்தம் எதுவும் அன்று கேட்பதாக இல்லை.  மலை இருட்டிற்கு அயர்ந்து திம்மென இருந்தது.  ஈஞ்சிப் புதர்களுக்குள் கிடக்கும் உடும்புகள் அன்று பாய்ச்சல் காட்டிக்கொண்டிருந்தன.  இருட்டும் பெரியமலையும் ஒன்றுதான்.  யாருக்கும் பயப்படுவதாக தெரியவில்லை.  பெரியமலையினை ஒட்டி இருக்கும் தனது காட்டிற்குதான் அற்புதமும் அறிவாளனும் காளைகளோடு எள்ளுக்காட்டு இறைப்பிற்காக போய்க்கொண்டிருந்தார்கள்.  காட்டுபன்றிகளின் நிலத்தினை முண்டிவைத்து பாத்திகளை கலைத்துப்போடுவதும் தினைக்கதிர்களை அதங்கிவிட்டுப் போவதிலும் முடங்கிவிட்டிருந்தார்.   இதற்கெல்லாம் பங்கும் பங்காளிகளின் செய்வினை இருப்பதாக அற்புதம் மனதோடு அசைபோட்டுக்கொண்டே போனார்.

காட்டுப் பன்றிகளின் கூட்டம் ரோதையின் குறுக்கே ஓடின.  அதன் கூட்டத்தினைப் கண்டதும் ”தம்பீ” என குரல் கொடுத்துக்கொள்வார் அற்புதம்.  அவற்றின் பற்கள் யானையின் குட்டித் தந்தத்தினைப்போல இருட்டிலும் பளிச்சென தெரியும்.  காட்டுப் பன்றிகள் உலும்பித் திரியும் இரவோடு போராடிக்கொண்டிருந்தவர்தான் அற்புதம்.  ஒவ்வொரு இறைப்பிற்கும் கிட்டுமாறுதான்.

பெரியமலைக்கு அண்டையாக இருக்கும் எள்ளுக்காட்டிற்கு தனது காளைகளுடன் வந்திருந்தார் அற்புதம்.  ரெட்டைமலைச்சந்தில் காளைகளின் கழுத்தில் ஒலிக்கும் மணிச் சப்தம்தான் அவருக்கு பெருந்துணையாக இருந்தது.  காளைகள் கழுத்தினை ஆட்டுவதை வைத்தே காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தினையும் பெருஞ் சீவன்கள் ஊர்ந்து வருவதையும் யூகம் செய்துகொண்டு ”தம்பீ” என அறிவாளனுக்கு குரல் கொடுப்பார்.

அறிவாளனின் முகத்தில் தூக்கம் துவண்டு கிடந்தது.  கமலையினை கட்டி பத்துசால்தான் ஓட்டியிருப்பார்.  கூட்டமாய் வந்திருந்த காட்டுப் பன்றிகள் பறியினை சுமந்துகொண்டு இழுத்துவரும் காளைகளின் முன்பாக நின்றதுதான் தாமுசம்.  காளையின் கழுத்து மணிகள் மூக்கரைக் காற்று விசும்புவதைப்போல இருந்தது.   தும்புக்கயிற்றினை நுகத்தில் மாட்டி இழுத்துக்கொண்டு போகும் அறிவாளனின் கைப்பிடி தளர்ந்து போயின.  நடந்துகொடுத்துக்கொண்டிருக்கும் ரோதைக்குப் பின்னால் காட்டுப்பன்றிகள் போக்கு காட்டி ஓடிவிட்டிருந்தது அவனுக்கு தெரியவில்லை.  வெள்ளந்தியாக இருக்கும் அறிவாளனை காட்டுப்பன்றிகளின் மூக்கிற்கு எட்டவில்லை.   கமலையோடு பிணைக்கப்பட்டிருந்த காளைகளையும் அற்புதத்தினையும் கிணற்றில் தள்ளிவிட்டு பறாச்சிட்டு ஒடிவிட்டிருந்தன காட்டுப் பன்றிகள்.  காட்டுப்பன்றிகள் உலும்பித் திரிவதற்கும் சீர்பட்ட நிலத்தினை கலைத்துப் போடுவதற்கு மட்டுமே தெரிந்து வைத்திருந்தன.

காட்டுப் பன்றிகள் அற்புதத்தினை பறியோடு கிணற்றில் தள்ளுவது எப்பொழுதும் வழமையாகத்தான் வைத்திருந்தன.  முப்பது வருடமாக இரவும் கூட்டமாக வரும் காட்டுப் பன்றிகளும்தான் அற்புதத்தின் ரெட்டைமலைச்சந்தில் நடையுடையாக இருந்தது.  அல்லப்பாடுதான்.  ஆனாலும் சுணங்கியதில்லை.  மேற்கத்தி காடுகளின் மலையோரங்களில் மண்ணில் புதைந்து கிடக்கும் மஞ்சள் கிடங்கினை தின்றுவிட்டுப் போவதற்கு வருபவைதான்.  நாணயவடிவாக துண்டந்துண்டங்களாக வகுந்து அவற்றினைத் தனது முன்னம் பற்களில் சப்பி அதங்கிகொள்வது காட்டுப்பன்றிகளுக்கு பெரும் இஷ்டாமாகிவிட்டிருந்தன.  மேலக்குண்டில் போடப்பட்டிருக்கும் தினைக்கதிர்கள் முண்டித் தின்னும் காட்டுப்பன்றிகளுக்கு  சாமரம் வீசுவதாக இருந்தது.

காட்டுப் பன்றிகள் பெரியமலைக்கு பின்னால் இருக்கும் இண்டுக்காடுகளில் ஓடி ஒளிந்துகொண்டன.  நடைத்தூக்கம் கொண்டிருந்த அறிவாளனுக்கு தூக்கம் கலைந்துவிட்டிருந்தது.  ரோதையின் தொலைக்குழியினைக் நுகத்தடியில் கிட்டிக்கொண்டு காளைகள் வாயில் நுரைத்தள்ளிக் கிடந்தன.  பைங்காவில் கிடந்த வாங்கருவாளை எடுத்து காளைகளை நுகத்தடியில் கழுத்தினை இறுக்கிக்கொண்டிருக்கும்  தும்புக்கயிற்றினை அறுத்துவிட்டான்.  காளைகள் நுகத்தடியோடும் அறிவாளன் அதன் கயிற்றோடும் இணைக்கப்பட்டிருப்பது பொழுதை கடித்து கவ்விக்கொண்டிருக்கும்  இருட்டிற்கு வெளிச்சம்தான்.

வால்கயிற்றோடு கிணற்றில் விழுந்து கிடக்கும் அற்புதத்திடமிருந்து ஓசை எழும்பி வரவில்லை.  காட்டுப் பன்றிகள் பெரியமலைப்பக்கமாக ஓடிக்கொண்டிருக்கும் காலடிச் சப்தம்தான் அறிவாளனுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது.  கால்களில் வெக்கைப் படர்ந்ததாக இருக்கும் விட்டைகளை தரையோடு சிராய்த்துவிட்டபடி மட்டைக்கிணற்றின் சுற்றுபாருக்கு ஓடினான் அறிவாளன்.  இருட்டு தண்ணீராக கிணற்றுக்குள் தொங் தொங்கென ஓசைப்போட்டுக்கொண்டு கிடந்தது.  அற்புதம் மூச்சு வாங்கியபடியே சுத்துப்பாறின் அண்டையாக இருக்கும் பெருந்திண்டில் கிளைத்துக் கிடக்கும் அரசங்கன்றினைப் பற்றிக்கொண்டு இருந்தார்.  இருட்டிலும் அதில் ஒற்றை இலை துளிர்த்துக்கொண்டிருப்பது அறிவாளனுக்கு எப்படி கண்ணில் பட்டது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.  ஆனால் பெருந்தீணி தின்னும் காட்டுப்பன்றிகள் வாலை ஆட்டுவதைப்போல அது இல்லை. தும்புக்கயிற்றினை அறுத்துவிட்ட கைகளுக்கு பலம் கூடிக்கொண்டதாக தெரிந்தது.

காட்டுப் பன்றிகளோடு தோற்றுக்கிடக்கும் அற்புதத்தினை பார்ப்பதற்கு அச்சமாக இருந்தது.  அறிவாளனால் அப்பாவின் முகம் பார்க்க முடியவில்லை.  அப்பாவின் முகத்தில் இழையோடி உறைந்துக் கிடக்கும் காட்டுப்பன்றிகளுடனான கிட்டுமாறின் வீரியம் தளர்ந்துவிடுவதாக இல்லை. பறித் தண்ணீரை தனது உடம்பில் சுமந்துகொண்டு வரும் நுகத்தடியின் முறுக்கு அற்புதத்தின் முகத்தில் தெரிந்தது.   காட்டுப்பன்றிகளின் கதைகளைப் பற்றி அற்புதம் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருந்தார்.  மேலக்காட்டில் விளைந்துவரும் தினைக்கதிர்கள் எல்லோருக்குமானதுதான் என்பதாக அற்புதத்தின் நினைப்பு இருந்தது.  மேற்கத்திக்காரர்கள் காட்டுப்பன்றிகளுக்கு கம்பி போட்டுக்கொண்டார்கள்.  கம்பிகளுக்கு பின்னாலும் முன்னாலும் காட்டுப்பன்றிகளால் முண்டி அதங்க முடியவில்லை.   அற்புதத்தின் மேலக்குண்டு மட்டும் கேட்பாரில்லாமல் கிடந்து போனது.

ராமநாதபுரத்திலிருந்து செம்மறி ஆட்டு மந்தைகளோடு வந்திருந்தவர்கள் கம்பெருமாமலை அடிவாரத்தில் கிடை போட்டிருந்தார்கள்.  கிடையாடுகளை ரெட்டைமலைச்சந்து மேலக்குண்டில் ஒரு ராப்பொழுது நிறுத்திவிடவேண்டும் என அற்புதம் நினைத்துக்கொண்டார்.  கி்டையாடுகளின் கூட்டம் காட்டுப்பன்றிகளை அச்சுறுத்தும் என்பதாக அப்பாவுக்கு யோசனையாக இருந்தது.  அற்புதமும் வெள்ளந்திதான்.  பறியினைத் தோளில் மாட்டிக்கொண்டு அல்லாடிக்கொண்டே கிடப்பவர்.   அன்றும் எள்ளுக்காட்டுக்கு தண்ணீர் பாய்ந்திருந்த பாத்திகளில் காட்டுப்பன்றிகள் உடலைக் கிளர்த்தி புரண்டு வைத்திருந்ததை கிடையாட்டுக்காரனிடம் சொன்னார் அற்புதம்.   யானைக்கூட்டங்கள் ஆங்காரமாய் பூமியினை உதைத்து வைத்திருந்ததினைப்போல இருந்தது.  முரட்டு சீவன்களாக இருப்பதாக கிடையாட்டுக்காரன் சொன்னான்.

ஒரு பகல்பொழுதின் பெரியமலையின் மேய்ச்சலுக்கு பிறகு செம்மறியாடுகளின் கிடை காட்டில் அடிக்கப்பட்டிருந்தது.  அன்று காட்டு இறைப்பு ஒன்றும் இல்லை.  ஆனாலும் காளைகளை அற்புதம் கையில் பிடித்துக்கொண்டார்.  பறியும் காளைகளின் காலடிச் சப்தம் அற்புதத்தின் முன்னால் சூழந்து கிடக்கும் இருடடிற்கு பெருந் துணையாக இருக்கும்.  மணிக்கட்டில் தலைக்கயிற்றினை முடிந்துக்கொண்டு மணிச்சப்தம் சீராக இருந்தால் அரைத் தூக்கத்தில்கூட காளைகளுக்குப் பின்னால் போகலாம்.  படுக்கையில் விழுந்து கிடக்கும் சுகம் நடைத்தூக்கத்தின் பக்கத்தில் அண்டாது.  காட்டின் எல்லை ஏன் வந்ததாக இருக்கும்.

கம்பெருமாமலைக்காட்டுப் பக்கமிருந்த ஒற்றைப் பெட்டிக்கடையில் தேனுமிட்டாய் உருண்டைகளையும் அவற்றோடு சில முறுக்கு வளையங்களையும் அறிவாளனுக்கு அற்புதம் வாங்கி கொடுத்தார்.  கிடைக்காரன் சில நாட்டுச்சாராய போத்தல்களையும் 77 மார்க் சுருட்டுக் கட்டு ஒன்றையும் நொறுக்கு தீனி வகைகளையும் வாங்கிவருவதற்கு அற்புதத்திடம் சொல்லியிருந்தான்.   சாமி செலவாக நினைத்துக்கொண்டார் அற்புதம்.  செம்மறி ஆட்டு மூத்திரமும் அதன் புலுக்கைகளும் காடுகளுக்கு பெருந்தீணியாக இருந்தது.  தினைக்கதிர்கள் நிமிந்து பால்கட்டி வரும்.

காளைகள் கால்களைப் பின்னிக்கொண்டு நடக்கவில்லை.  அற்புதம் முன்னதாகவும் காளைகள் அவருக்கு பின்னதாகவும் நடந்துகொடுத்தன.  இருட்டில் ரெட்டமலைச்சந்து பயந்து கிடப்பதாக தெரிந்தது.  காளைகளின் கண்களில் ஒளிரும் விளக்குகளை அறிவாளன் பார்த்துக்கொண்டே இருந்தான்.  பாதை சன்னமாய் விலகி கொடுத்தது.

அற்புதத்தின் கைகள் பற்றியிருக்கும் காளைகளின் தலைக்கயிறும் அவருக்கும் பெருங்கதை இருந்தது.  எல்லாவற்றையம் மனதில் போட்டுக்கொண்டு இருக்கும் அற்புதம் கமலை ஏற்றப் பாடலாக தொலைக்குழி ரோதையில் இரவெல்லாம் பாடிக்கொண்டே இருப்பார்.  காளைகளுக்கும் அறிவாளனுக்கும் நன்றாக தெரிந்திருந்தது.    காட்டுப் பன்றிகளை அத்துவளி செய்துவிட முடியாது என்பது அற்புதத்திற்கு நன்றாகத் தெரியும்.  ஆனால் அதன் போக்குகளை மாற்றிவிடமுடியும் என்பது அற்புதத்தின் நம்பிக்கை.

ரெட்டலைச்சந்து எள்ளுக்காடு வந்திருந்தது.  செம்மறி ஆடுகள் காடெங்கும் பறாச்சிட்டு நின்றுகொண்டிருந்தன.  தப்புச்செடிகளாய் நின்றுகொண்டிருந்த தினைக்கதிர்களை செம்மறி ஆடுகள் இருட்டிலும் மேவாய் கொண்டிருந்தன.  கிடையாக நிற்கவில்லை.  மூங்கில் படல்கள் சாய்ந்து கிடந்தன.  தொலைமேட்டின் வயிற்றில் சிங்கப்பற்கள் பதிந்தபடி கி்டைக்காரன் செத்துக் கிடந்தான்.  அவன் வயிற்றிலிருந்து அதங்கி கிடந்த குடலில் சங்கிலிபூராண்களும் ராப்பூச்சிகளும் நயநயவென ஊர்ந்துகொண்டிருந்ததை மின்மினிப் பூச்சிகள் அற்புதத்திற்கு ராந்தர் பிடித்து காட்டுவதைப்போல இருந்தது.  இரை விழுங்கிய பெருஞ்சீவன் ஒன்று ஊர்ந்து சென்றிருந்தது ரோதையில் தெரிந்தது.  மூக்கில் ஏறிய வாசமும் அப்படித்தான் இருந்தது.    அற்புதம் துள்ளிக் குதித்துக் பெருங்கத்தாக கத்தினார்.  காட்டுப் பன்றிகள் அருகில் இல்லை.  அற்புதத்தின் கத்தலை கொஞ்சமாக கேட்டிருந்தாலும் கூட்டத்தில் மண்ணைக் கிளரி மலர்த்தப் பழக வந்திருக்கும் சிறுங் குட்டிகளுக்கு ஆவுசம் நின்று போயிருக்கும்.

தொலைக்குழி மேட்டில் கிடந்த விட்டைகனைத் தொட்டுப் பார்த்தார் அற்புதம்.  தினைக்கதிர்களின் வாசத்தோடு கதகதப்பான சூடாக இருப்பதாக இருந்தது.  தொலைக்குழிப் பக்கமாக கிடந்த இரும்பு கொலுவை எடுத்துக்கொண்டு பொழிப் பக்கமாக ஓடினார்.  பின்னத்தியாக ஓடிவந்த அறிவாளனை திரும்பி பார்த்தார் அற்புதம்.  அற்புதத்தின் முகம் கொடுவாலை தோளில் வைத்துக்கொண்டிருக்கும் காட்டுக்கருப்புவினைப்போல இருந்தது.  பற்களை துருத்தி சீறிக்கொண்டுவரும் காட்டுப்பன்றிகளிடம்கூட இந்த முகத்தினைப் அறிவாளன்  பார்த்ததில்லை.  அற்புதத்தின் முகம் சண்டாளமாக இருந்தது. தொலைக்குழியில் காளைகளுக்கு கிடந்த தண்ணீரை கைகளில் அள்ளிப் பருகினார்.  பறிக்கொண்டு சாய்ப்பதைப்போல மூச்சி இரைத்தது.  உடம்பு சாமி மலையேறிச் சென்றதினைப்போல லேசாக இருந்தது.

தொலைக்குழி மேட்டில் நெடுங்கிடையாக செத்துக்கிடக்கும் கிடையாட்டுக்காரனைப் பார்த்தார்.  அவனைச் சுற்றி காட்டுப்பன்றிகளின் பற்கள் சில கிடந்தன.  அருகில் இரத்தம் தோய்ந்த கிடையாட்டுக்காரனின்  கைத்தடி கிடந்தது.  கையோடு கொண்டு வந்திருந்த தேனு முட்டாயினையும் முறுக்குத் துண்டுகளையும் அறிவாளன் அதன் அருகில் வைத்தான்.  சாராய போத்தலும் 77 மார்க் சுருட்டு கட்டு ஒன்றும் அருகில்தான் இருந்தன.  கவிழ்ந்து கிடந்த கயிற்றுக் கட்டிலுக்கு அண்டையாக முனியசாமிக்கு சித்திரைப் பட்டத்துப் படையல் போட்டிருந்ததைப்போல இருந்தது.  கிடையாட்டுக்காரன்தான் முனியசாமி.  அவன் விழுந்து கிடக்கவில்லை.  நிலத்தினை செங்குத்தாக நிர்க்க வைத்துப் பார்த்தால் அவன் வேட்டைக்கான பாய்ச்சல் கொண்டு நின்றுகொண்டிருப்பதினைப் போலவே இருக்கும்.

பொலபொலவென ரெட்டைமலைக்காடு புலர்ந்துகொண்டு வந்தது.  கிடையாட்டுக்காரனிடம் கிடந்த கைத்தடியினை கையில் பற்றிக்கொண்டான் அறிவாளன்.   எள்ளுக்காட்டினைச் சுற்றி கிடையாடுகள் வேலிபோட்டு மேய்ந்து கொணடிருந்தன.   இனி கிடையாட்டுக்காரனும் அங்குதான் இருப்பான்.  ஆனால் காட்டுப்பன்றிகள் வரப்போவதில்லை.

 

 

 

எழுதியவர்

க.மூர்த்தி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கல்லூரியல் ஆங்கிலத்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.

கவிதைகள், நாவல்கள் எழுது இவர் மொழிப்பெயர்ப்புகளிலும் ஈடுபடுகிறார். கனலி, வாசகசாலை, கதவு, புதிய மனிதன் , போன்ற இதழ்களில் இவரின் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன.

இவரது நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள் :
கள்ளிமடையான் ( 2019, புலம் வெளியீடு), மோணோலாக் கதைகள் (2022, வெற்றிமொழி வெளியீட்டகம்)

நாவல்கள்:
பங்குடி (2022, வெற்றிமொழி வெளியீட்டகம்), மண்புணர்க்காலம் (2019)

மொழிப்பெயர்ப்பு நூல்கள் :
.ஆரண்ய தாண்டவம் ( பொன்னுலகம் புத்தக நிலையம் 2022) Feet in the Valley by Aswini Kumar Mishra ஆங்கில நாவலை தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார்.

RUGGED ROAD AHEAD (சமகால தழிழ் கவிதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு) ஒதிசா மாநிலம் Ministry of Culture ல் புவனேஸ்வரில் வெளியிடப்பட்டது)

கள்ளிமடையான் சிறுகதை தொகுப்பிற்காக அருப்புக்கோட்டை, மானுட பண்பாட்டு விடுதலைக் கழகம் விருது, பங்குடி நாவலுக்காக தமுஎகச வின் சு. சமுத்திரம் விருது, ஆரண்ய தாண்டவம் நூலுக்காக இராஜபாளையம், மணிமேகலை மன்றத்தின் சிறந்த மொழிப்பெயர்ப்பிற்கான விருது, RUGGED ROAD AHEAD நூலுக்காக திசையெட்டும் மொழிப்பெயர்ப்பு விருது ஆகியவை பெற்றிருக்கிறார். பல்வேறு சிறுகதைப் போட்டியிலும் பரிசுகளை பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x