28 January 2025
G Moorthi

லந்தை மரம் நின்றுகொண்டிருந்த முட்புதர்களில் மஞ்சள் நிறக் கவுதாரிகள் கழுத்தினை நீட்டிக் கத்திக் கொண்டிருந்தன. ஏரி மண்ணைக் குழைத்து நூல் சாக்கோடு சேர்த்து சாம்பல் பத்துப் போட்டு திருவையில் உடைக்கப்பட்ட துவரம் பருப்பினைப்போலச் சூரியனின் முகம் தெரிந்தது. மண்பானை அடுக்குகளில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த உடைத்த துவரம் பருப்புகளைப்போல இருக்கும் அரைவட்ட சூரியன்கள் அனைத்தும் பாடமாத்தியை கடந்து, சவக்குழி வெட்டும் கலியனை ஒவ்வொரு நாளும் பார்த்துவிட்டுப் போய்விடும். முளைத்துவரும் ஒவ்வொரு பொழுதும் அடுக்குப்பானையில் சேகரம் செய்து வைக்கப்பட்டிருக்கும் துவரம் பருப்பினைப் போலதான். நிறைய சூரியன்களை அவனது வீட்டின் அடுக்குப் பானையில் வைத்திருந்தான். பதமாக உடைந்து வராமல் சொள்ளையாக இருக்கும் பருப்பு, அவனுக்கு முடங்கொண்ட பொழுதினைப் போலதான். என்ன செய்ய முடியும்? அதுதான் போக்கத்த பொழுது. ஒன்றும் செய்வதற்கில்லை. பொழுதின் பிறப்பிலும் கூட அது நிகழ்ந்து விடுகிறது. தனக்குக்கூட ————–ன், ————–ன், கலியன், என்ற நொண்டி பெயரை யாரோ வைத்துவிட்டிருக்கிறார்கள். வெக்கையை உடம்பில் ஏங்கி அதனைப் பூக்கும் வியர்வையாய் நிதமும் மண்ணில் வழித்துச் சாய்ப்பவனுக்குச் சூரியனை அண்ணாந்தும் அதிசயத்தும் பார்க்க ஒன்றுமில்லைதான். மாட்டுவண்டியைப் பூட்டி கட்டுச்சோறு கட்டிக்கொண்டு ஆணும் பெண்ணுமாகச் சூரியனைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்வதையெல்லாம் கலியன் கேட்டிருக்கிறான். மட்டையாலும் வரகு செத்தையாலும் வேயப்பட்டுக் குறுகிய வாயிற்படிகளைக் கொண்ட வீட்டுக் குழந்தைகளின் உயிர்நிலை குழியில் கண்ணாடி போத்தல்களை நாலுக்கும் மூன்றுக்குமாய் நுணுக்கி நிரப்புவதற்கு மாற்று இடம் தேடிப்போகும் பயணப்பாடுதான் அது. ஊரின் முச்சந்தியில் பறக்கும் கொடித்துணியில் கூட அப்பிள்ளைகள் அகோரமாய் கைகளை உதறிக் கூக்குரலிடும் சத்தம், ஆந்தைகளின் முட்டைவடிவில் கட்டப்பட்ட பெரும் மண்டபங்களை நோக்கி ஓயாமல் எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறது.

எங்குச் சென்றாலும் தனக்குச் சவக்குழி தோண்டும் வேலைதான் கிடைக்கும் என்ற தெளிவு கலியனுக்கு எப்படிக் கிடைத்தது என்றுதான் தெரியவில்லை. ஒருவேளை மாற்றாக இயந்திரம் வைத்து மாட்டுத் தோலை உரிக்க நேரிடலாம் என்று இடுப்பில் சொருகியிருந்த சூரிக்கத்தியினைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அவனை பொறுத்தவரையில் உச்சியிலோ, சமயத்தில் ஓரமாகவோ தென்படும் சூரியன் உடைக்கப்பட்ட துவரம் பருப்போ அல்லது கடலைப் பருப்பைப் போன்றதுதான். வெளிச்சத்தினைத் தரும் சரக்குச் சாமானாக அவனுக்கு எப்பொழுதும் தென்பட்டதில்லை.

இன்றைய நாளும்கூட அவனுக்குச் சவக்குழி வெட்டும் பொழுதுக்காகத்தான் விடிந்திருந்தது. பச்சநண்டை தொண்டபாடிக்கு பற்றிவிட்டு காலங்கோலமாகவே கட்டை மொய் அரசமரத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் கலியன். அதே வெளிர் நிற மஞ்சள் பொழுதுதான். அவனது உப்பு படிந்திருக்கும் தேகத்தோடு நெருக்கமான கதைகளை வைத்திருந்தது. இரவெல்லாம் ஓய்ந்து கிடந்த பொழுதின் தாகத்தினைத் தீர்த்துக் கொள்வதற்கு விடிந்ததும் கலியனின் உடம்பிலிருந்து ஒரு புடிச்சையளவு ஈரத்தினை உறிஞ்சி குடித்துவிட்டு பனைமரத்து வேலிக்கு அடுத்ததாக நகர்ந்துபோய் படுத்துக் கொண்டுவிட்டிருந்தது. கலியன் அதனை ஒரு பொருட்டாகக் கூட பார்ப்பதில்லை. அவனது பாடு இன்றைக்கான கூலி. அதற்காகப் பெருங்குழி ஒன்று வெட்டிவிடவேண்டும். அதில் பிணத்தினைப் புதைத்துவிட ஏதுவான சுத்துப்பட்டு வேலைகளைச் செய்து தந்திடவேண்டும். இந்தக் குடியில் அத்தனை பேருக்கும் அவன்தான் சவக்குழி வெட்டியிருக்கிறான். குழியில் இருக்கும் பிணங்கள் அனைத்தும் அவன் கிடத்திவிட்டிருந்தவைதான்.

தொண்டபாடி சரக்கு வர வேண்டும். பச்சநண்டிற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தான் கலியன். பச்சநண்டு சவக்குழி வெட்டுவதற்குக் கூட மாட இருந்து ஒத்தாசை செய்பவன். தொண்டபாடிக்கு பனையோலையில் கட்டித்தரும் கள் வாங்கப் போயிருந்தான் பச்சநண்டு. கீழக்கரைக்கு ஒரு எட்டு போனால் பொவுணி நிறையப் பிடித்துவிட்டு வந்துவிடலாம். பச்சநண்டுக்கு தொண்டபாடி கள்ளுதான் மண்டைக்குள் குழம்பு தாளிப்பு சத்தம் ஏறுவதைப் போலச் சுருக்கென கிறக்கம் இருப்பதாகச் சொல்லுவான். இரண்டாவது கோழி கூப்பாடு போட்ட பிறகுதான் இருவரும் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒரு மரத்துக்கள் குடித்துவிட்டு வந்திருந்தார்கள். கொஞ்சமாகப் போதை இறக்கம் கண்டுவிட்டதாகத் தெரிந்ததும், மண்பானையில் மூன்று நாட்கள் புளித்துக் கிடந்த கம்மந்சோத்து தண்ணீரைத் தாவாக்கட்டையினைச் சுழித்துக் குடித்துவிட்டு வந்திருந்தான். பனங்கள் தரும் கிறக்கத்தில் எத்தனை குழியும் வெட்டிவிடுவான் கலியன். மட்டுப்பட்ட பாம்பின் விசம் கூட அதற்கு பின்னதாகத்தான் வேலை செய்யத் தொடங்கும். பொழுது முளைத்து வருவதற்கு முன் பச்சநண்டுடன் ஒரு மரத்து கள் குடிக்கும்போது தேள்களும், கருவண்டுகளும் காட்டுப் பூச்சிகளும் கள் பானையில் மிதந்துகொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறான் கலியன். மரத்திலிருந்து இறக்கப்பட்டது. வடிகட்டாமல்தான் இருக்கும். முந்தைய இரவில் நாட்டுச் சாராயத்தினை உரைக்காக எடுத்து வைக்கப்பட்டது நாக்கினை நனைத்துவிட்டிருந்த போதை கிறக்கம் இருந்துகொண்டே இருக்கும். கள்ளுண்டு பானையில் கிறக்கத்தில் கிடந்த கருவண்டுகளைக் கலியன் கூழுக்கு கடிச்சிக்க வறுத்த மிளகாயைப் போல நறுக்கு புறுக்கு என மென்று தின்றுவிடுவான். எடுத்துவிட்டுக் குடிப்பதெல்லாம் அவனுக்குப் பழக்கமில்லை.

சுடுகாட்டின் வேலி முட்களின் மீது பிரண்டைக் கொடிகள் பின்னிக் கிடந்தது. கோழிக் குடாப்பிற்கு வாசல் வைக்கப்பட்டதினைப் போல முகப்பில் நுழைந்து உட்கார்ந்து கொண்டான் கலியன். நிலை கொள்ளாத போதை அவனது மண்டையை கிறக்கியது. தொங்கலாட்டம் போட்ட தலையினைத் தூக்கிப் பார்த்தான். மண்ணில் புதைக்கப்பட்ட சில பிணங்களின் மீது சுத்துப்பட்டு பலகைக் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. சில குழிகளின் மீது சிமெண்ட் கலவையினைப் போட்டு கட்டிடம் எழுப்பி விட்டிருந்தார்கள்.

தோண்டிப் போடப்பட்ட குழிக்குப் பக்கத்தில் தலையில் ஆணியடிக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. அதனை எடுத்துப் பார்த்தான். கிறக்கத்தில் இருந்த கலியனுக்கு அது தண்ணீரை ஊற்றி வைக்கும் மொந்தையினைப் போலத் தெரிந்தது. பச்சநண்டு இன்னும் வரவில்லை. தொண்டபாடிக்கு போன அவனது ஞாபகம் வந்துவிட்டது. கண்களைச் சுருக்கி பாடைமாத்தியைப் பார்த்தான். குழி மேட்டிற்குப் பக்கத்தில் யாரும் அவனது கண்களுக்கு தட்டுப்படவில்லை. எலும்புத் தலை மொந்தையினை எடுத்து அருகில் வைத்துக்கொண்டான். பச்சநண்டு வந்தவுடன் ஒரு சொம்புகள்ளினை எலும்பு மொந்தையில் ஊற்றிக் குடித்துவிட வேண்டும் என்ற நினைப்பை இறுக்கிப் பிடித்து வைத்திருந்தான்.

பார்வை கொஞ்சம் அகன்று விழுந்தது. பிஞ்சு மூங்கில் மரங்களால் செய்யப்பட்ட நாக பாடை கவிழ்த்துப் போடப்பட்டிருந்ததைப் போல இருந்தது. அவற்றைப் பிளந்து, ஒரு தேர்ந்த ஆட்டக்காரியின் இடும்பினைப் போல லாவகமாக வளைக்க வேண்டும். ஐந்து தலை நாகப்பாம்பு தனது உடம்பினைப் பாதியாகத் தரையில் கிடத்திய படி படுத்துக்கொண்டே தலையைத் தூக்கி படம் எடுத்து ஆடுவதைப் போலக் கட்டப்படுவதுதான் நாகப்பாடை. அதன் வாய்ப் பகுதியின் முனை கூராகச் சீவப்பட்டு அவற்றில் சிவப்பு தடவப்பட்ட பாதியாக அறுத்த எலுமிச்சைப் பழம் சொருகப்பட்டிருக்கும். கலியன் சவத்திற்குக் குழி வெட்டுவதோடு பாடை கட்டுவதையும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான். கன்னி கழியாத இளந்தாரியான பெண்டுகள் அய்யோவென இறக்கப் படுபவர்களுக்குத்தான் நாகப்பாடை கட்டுவதுண்டு.

பிரண்டைக்கொடி நிழல் கட்டிலிருந்து எழுந்தவன், அருகில் வந்து பார்த்தான். இறந்த மாட்டின் விலா எலும்புகள்தான் மூங்கிலை வளைத்துக் கட்டப்பட்ட நாகப்பாடையினைப் போலக் கிடந்தது. அதில் மிச்சமாக ஒட்டிக்கொண்டிருக்கும் கறியினைக் கொத்தி தின்பதற்குப் பருந்துகள் அதனைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. தனது உயரத்திற்குக் குறைவாக இருக்கும் பனைமட்டையால் வேய்ந்த வாசற்படியில் நுழைந்த தனது முதுகினை நிமிர்த்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் கலியனின் ஆசை. கொழுத்துத் தொங்கும் கறியினைக் கொத்தித் தின்னும் ஒரு பருந்தாகவே தன்னை நினைத்துக் கொண்டான் கலியன். தன்னை செத்தமாடு என்று சொன்னவர்களை நினைத்துப் பார்த்தான். அவர்கள் அனைவரையும் பாடை மாற்றியில் ஒற்றையாகச் செத்துக் கிடக்கும் மாடாகக் கிடத்தி விட்டிருந்தான். அவர்கள் வசவிய சொற்கள் அனைத்தும் மாட்டின் எலும்புகளாகப் போதையின் கிறக்கத்தில் இருக்கும் கலியனிடம் பல்லைக் கெஞ்சிக் கொண்டிருந்தன. கலியனை பார்த்தால் பாடை மாற்றியில் கிடக்கும் எலும்புகளுக்குக் கழுகுகளைப் போலத் தெரிந்தன. அலகுகள் எலும்புகளில் ஒட்டியிருக்கும் சதையினைக் கிழித்து அறுக்கும் சூரிக்கத்திகளைப் போலவே இருந்தன. செத்த மாட்டை நாகப்பாடையினைப் போல வளைந்து கிடக்கும் விலா எலும்புகளில் ஒட்டியிருக்கும் கறியினைக் கொத்தி தின்னுவது கழுகுகளுக்கு அத்தனை சுகமாக இருந்தது. அந்த மாட்டின் விலா எலும்புகள் தான் எத்தனை நாகப்பாடையைக் கட்டுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. முதுகுத் தண்டிலிருந்து முளைக்கட்டி வந்திருக்கும் விலா எலும்புகளில் விறைத்த ஆண்குறிகள் இன்னும் இருப்பதைப் போலக் கழுகுகள் விறலி மஞ்சள் தடவிய பனங்கருக்கு அருவாள்களில் வேகமாகக் கொத்தத் தொடங்கின. உயிர்களை முளைத்துத் தரும் ஒற்றைக் கண்ணில் கண்ணாடிப் போத்தல்களின் துகள்களைக் கொட்டி நிரப்பியது தான் இந்த விலா எலும்புகள்.

கழுகுகள் விலா எலும்புகளைக் கொத்துவதும் முன்னத்தியாக சென்று மாட்டின் தலையினை காண்பதுமாக இருந்தன. அதன் கண்கள் உடல் வலியில் நோக்காடு போடுவதாக தெரியவதில்லை. கண்கள்தான் உடலின் வாதைகளைத் தெரிவிப்பவை. விலா எலும்புகளில் தொக்கிக் கிடக்கும் சதை துணுக்குகளைக் கொத்தித் தின்னும் கழுகுகள் கண்களை இன்னும் அப்படியே விட்டு வைத்திருந்தன. போதையின் கிறக்கத்தில் இருந்த கலியன் தன்னை ஒரு கழுகினைப் போலவே பாவித்துக் கொண்டமையால் அவனது இருபுறத்தின் அல்லையிலும் முளைத்திருக்கும் கைகள் இறக்கையினைப் போல அசையத் தொடங்கின. வீழ்ந்துபட்டுக் கிடக்கும் இரையினை தின்னுவது தனது அலகின் மீதும் இறக்கையின் மீதும் பிறிதொருவர் குற்றம் சொல்லுவதைப் போல இருந்தாலும், இந்தக் காட்டில் துர் விலங்கின் கறி மண்ணில் கிடந்து விடக்கூடாது என்று கழுகின் மஞ்சள் நிற மூக்கில் வியர்த்துக் கொட்டியது. அது ஊழித் தாண்டவத்தின் சாக்குறியின் வேகம். அதுவும் தொண்டபாடி பனங்கள் குடித்த கழுகுதான். ஒற்றை மரத்தில் சேகரம் செய்து வடிகட்டப்படாமல் பச்சநண்டு கொண்டுவரும் கள் இன்னும் எத்தனை கிறக்கத்தினைத் தருமோ என்றும் நினைத்துப் பார்த்தான். பிருமனையில் வைக்கப்பட்ட மண்பானையினைப் போல இரட்டைக் கொம்புகளை மண்ணில் தாங்கி மல்லாந்து கிடந்தது தலை. ஒற்றைக் கொம்பு மட்டும் எருமைகளோடு மோதிய சண்டையில் பாதியாக உடைக்கப் பட்டிருந்தது. ஒரு வகையில் கலியனும் எருமையின் தேகத்தினைக் கொண்டவன் தான். மீதமாய் உடையாமல் இருக்கும் அந்த ஒற்றைக் கொம்பினைத் தனது அலகால் கிள்ளியெடுத்து அதில் சேகண்டிக்கு ஒத்திசைவாக ஒரு இசையினை ஊதிவிடவேண்டும் என்பதாக நினைத்துக் கொண்டான்.

எலும்பு மஞ்ஜை ஊறிய புழுத்துக் கிடந்த ஆசையை மரங்கொத்திப் பறவைகள் பிளக்கும் சத்தம் கேட்கத் தொடங்கியது. காட்டெருமையின் வேகம் பறவையின் உடம்பில் கூடி வந்திருந்தது. வரிசை வரிசையாய் வளைந்து குவிந்திருக்கும் விலா எலும்புகளை பார்த்ததும் கூட்டமாக வரிசைக் கட்டி வாயைப் பிளந்துகொண்டு தன்னை வேட்டையாட வரும் காட்டு விலங்கினைப் போல நினைத்துக் கொண்டான் அவன். தன்னை ஒரு பறவையினைப் போலப் பாவித்துக் கொண்டவனுக்கு அடுத்தடுத்த பலங்கொண்ட விலங்குகளாய் மாற்றிக்கொண்டு விழுந்து கிடக்கும் மாட்டின் விலா எலும்புகளை நொறுக்கித் தள்ளிவிட வேண்டும் போல இருந்தது. பறவையின் அலகுகளுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாகத் தன்னை ஒரு தனித்து விடப்பட்ட காட்டெருமையாக்கிக் கொண்டு விட்டிருந்தான் கலியன். ஆனாலும் கூட்டமாய் சேர்ந்து விட்டிருப்பதைப் போல இருப்பதற்கு அவனுக்குள் இருக்கும் போதையின் கிறக்கும் பலத்தினைக் கொடுத்திருந்தது. முன்னோக்கி வளைந்திருந்த கொம்புகளை மண்ணைக் குத்தி அதன் கூர்முனையினைச் சிக்கு எடுத்துக் கொண்டான். நான்கு அடி பின்வாட்டமாக வந்து கொம்புகளின் கூர்முனையின் மீது கவனத்தினைக் குவித்துக் கொண்டது காட்டெருமை. எலும்புகளோடு ஒட்டியிருந்த கறித் துண்டுகள் அனைத்தும் பிரிக்கப்பட்டிருந்தன. எலும்புகளிலும் கூட அலகால் கொத்தப்பட்டிருந்த பற்காயம். அகன்று விரிந்து கிடக்கும் மார்பெலும்புகள் அனைத்தும் மாட்டுக்கு அதிகமான கைகள் முளைத்தினைப் போல இருந்தன.

அநாந்திரக் காட்டில் ஒரு அகதி கைகளை அகல விரித்து யாரிடமாவது உதவியினைக் கோரும்படியாகத்தான் இருந்தது. அந்த கைகள்தான் ஆசைக்கு இணங்கவில்லை என்பதற்காகப் பெண் பிள்ளையின் தலையினை துண்டமாடி பனையோலையில் வேய்ந்த கூரை வீட்டின் முன்பாக வீசியெறிந்த கைகள். அந்த இரண்டு கைகள்தான் இன்று நிறைய கைகளாக முளைத்து விட்டிருக்கின்றன. தரையினை முகர்ந்து பெருமூச்சு ஒன்று இழுத்துவிட்டு முன்னத்தியாக வேகமாகக் கால்களை வைத்து எட்டுப்போட்டு நகர்த்தி வந்த காட்டெருமை, தன் உடம்பின் அத்தனை பலத்தினையும் சேர்த்து கொம்பில் குவித்துக்கொண்டது. விழுந்து கிடக்கும் மாட்டின் விலா எலும்புகளையும் தனது கொம்புகளால் நொறுக்கித் தள்ளின. வறுத்துத் தீட்டிய ஒரு விதைப்புட்டி நிறைய இருந்த புளியங்கொட்டைகள் பனைமட்டையில் கொட்டுவதைப் போல மொறமொறவெனச் சத்தம். விலா எலும்புகள் அத்தனையும் பொலபொலவென நொறுங்கிப் போனது. கலியனுக்கு குழி வெட்டிய கைகளின் விரல்களுக்கு அலுப்பு முறிய நெட்டித் தள்ளியதைப் போல் இருந்தது. இன்றைய சவக்குழி யாருக்காக வெட்ட வேண்டும் என்பதையெல்லாம் மறந்துவிட்டிருந்தான். தனது அலகுகளால் சதையினைப் பிரித்தெடுத்து நொறுக்கப்பட்டிருக்கும். விலா எலும்புகளை அள்ளிக்கூட்டி சாக்கில் கட்டிக்கொண்டான் கலியன். இளந்தை முட்புதருக்கு அருகில் கொண்டு வந்து போட்டான்.

தொண்டபாடிக்கு கள் வாங்குவதற்காகச் சென்றிருந்த பச்சநண்டும் வந்திருந்தான்.

அவனும் எதுவும் கேட்கவில்லை. கலியனும் எதையும் சொல்லவில்லை. எலும்பு மொந்தை நிறைய கள்ளை ஊற்றிக் குடித்தான் கலியன். அன்றைக்குத் தோண்டப்படும் சவக்குழி பாடை மாற்றியில் நொறுக்கப்பட்ட பசுவின் விலா எலும்புகளுக்கான குழியினை இருவரும் சேர்ந்து வெட்டத் தொடங்கினார்கள். இளந்தை முட்புதரிலிருந்த கவுதாரிகள் தொட தொடவென இறக்கையினை உதறிப் பறக்கத் தொடங்கின. அண்ணாந்து பார்த்தான் கலியன். அதன் இறக்கைகளில் ஒரு மெல்லியதாய் ஈரப்பாரல் கசிந்து விழுவதைப்போல இருந்தது. தன் பெண்டு நந்தினிக்கும் அந்தக் கவுதாரிக்கும் வேறெந்த வித்தியாசமும் தெரிவதாக இல்லை. அதன் உடம்பில் திணிக்கப்பட்டிருந்த கண்ணாடிப் போத்தல்கள் வெட்டப்படும் குழிக்குள் ஒவ்வொன்றாய் விழத் தொடங்கின. உச்சியில் இருந்த சூரியன் தோலுரிக்கப்பட்டு திருவையில் உடைக்கப்படாத துவரம் பருப்பாகத் தகித்துக்கொண்டு இருந்தது. கலியனின் கைகள் எருமையின் தேகக்கட்டின் உறுதியாக மாறத் தொடங்கியது. பசுக்கள் பாலைவன மணற் கால்வாய்களில் செத்துக் கிடக்கும் விலங்குகளின் எலும்புகளை மேயும் சத்தம் கேட்கத் தொடங்கின. உடலைத் தின்று சுகித்து மண்டபத்தில் கிடந்த சாம்பலை மண்டையோட்டில் அள்ளிப் போட்டான். பச்சநண்டு கொண்டுவந்த கள்ளோடு அதனைச் சேர்த்துக் குழைத்து உடலில் பூசிக்கொண்ட கலியன், அன்றிலிருந்து அழிக்கூத்து ஆடத் தொடங்கினான்.


 

எழுதியவர்

க.மூர்த்தி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கல்லூரியல் ஆங்கிலத்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.

கவிதைகள், நாவல்கள் எழுது இவர் மொழிப்பெயர்ப்புகளிலும் ஈடுபடுகிறார். கனலி, வாசகசாலை, கதவு, புதிய மனிதன் , போன்ற இதழ்களில் இவரின் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன.

இவரது நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள் :
கள்ளிமடையான் ( 2019, புலம் வெளியீடு), மோணோலாக் கதைகள் (2022, வெற்றிமொழி வெளியீட்டகம்)

நாவல்கள்:
பங்குடி (2022, வெற்றிமொழி வெளியீட்டகம்), மண்புணர்க்காலம் (2019)

மொழிப்பெயர்ப்பு நூல்கள் :
.ஆரண்ய தாண்டவம் ( பொன்னுலகம் புத்தக நிலையம் 2022) Feet in the Valley by Aswini Kumar Mishra ஆங்கில நாவலை தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார்.

RUGGED ROAD AHEAD (சமகால தழிழ் கவிதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு) ஒதிசா மாநிலம் Ministry of Culture ல் புவனேஸ்வரில் வெளியிடப்பட்டது)

கள்ளிமடையான் சிறுகதை தொகுப்பிற்காக அருப்புக்கோட்டை, மானுட பண்பாட்டு விடுதலைக் கழகம் விருது, பங்குடி நாவலுக்காக தமுஎகச வின் சு. சமுத்திரம் விருது, ஆரண்ய தாண்டவம் நூலுக்காக இராஜபாளையம், மணிமேகலை மன்றத்தின் சிறந்த மொழிப்பெயர்ப்பிற்கான விருது, RUGGED ROAD AHEAD நூலுக்காக திசையெட்டும் மொழிப்பெயர்ப்பு விருது ஆகியவை பெற்றிருக்கிறார். பல்வேறு சிறுகதைப் போட்டியிலும் பரிசுகளை பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
முனைவர் மு. கண்ணையன்
முனைவர் மு. கண்ணையன்
4 months ago

சிறப்பு,
தனித்து இருப்பவனின் மன ஓட்டத்தை அவனது நிலையில் கதையாக்கிய உத்தி சிறப்பிற்கு உரியது.
வாழ்த்துக்கள்.

R Balakrishnan
R Balakrishnan
4 months ago

Good imagery ….the flow of narrative fine …but too much of violent expressions.

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x