18 April 2025
moorthi KS 25

ந்த மாலை முதல் மூன்று மாதங்கள் கடந்து விட்டிருந்தன.   நான்காவது மாதத்திற்கான முதல்நாளை பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமலர் தங்கம்.  நினைவு திரும்பியதினைப்போல பழைய நினைவுகளை மிகச் சரியாகவும் அவளால் மீட்டெடுக்க முடிகிறது.  மதுமலர் தங்கம் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக தெரிந்தது.  அந்த யோசனை அவளது அம்மாவை பற்றியதாக இருக்கலாம்.  அம்மாவின் வாசனை அவளது மனதிற்குள் கமழ்ந்துகொண்டு வந்தது.  

மதுமலர் என்பது மட்டும்தான் அவளது பெயர்.  தங்கம் அவளது அப்பா.  மதுமலருக்கு அப்பாவின் முகத்தினையெல்லாம் பார்க்க தெரியாது.  சமயத்தில் அப்பா என்றுகூட சொல்லத் தெரியாது.  அப்பா என்ற சொல்லை எப்பொழுதாவது தேடி கண்டு பிடித்ததினைப்போல சொல்லுவாள்.  தங்கம் திரும்பி பார்த்ததும், அப்பா! அப்பா! என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பாள்.  பின்னதாக இந்த சொல்லை மறந்துவிடுவோம் என்பதைப்போல அவளது விளிப்பு இருக்கும்.  அவளது உலகத்திற்குள் யாரும் அத்தனை எளிதில் பிரவேசிக்க முடியாது.  அவளுக்குள் எப்பொழுதும் அவள் மகிழ்ச்சியாகவே இருந்துவிடுகிறாள்.  திடுமென அவளின் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டுவதை தங்கத்தால் புரிந்து கொள்ள முடியாது.  அவளுக்கு ஆட்டிசம் குறைபாடு என்பதை எப்படியோ அவளும் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறாள்.  அவளிடம் அதனை யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.  இந்த வார்த்தை மட்டும் அவளது நினைவில் நின்றுகொண்டு விட்டிருந்தது.  ”அப்பா எனக்கு ஆட்டிசமா” என்று கேட்பாள்.   தங்கத்திற்கு துணுக்குற்றுப் போகும்.  எப்பொழுதாவது அப்பா என்று விளிக்கும் அவளது சொல்லில் கிறங்கிப் போகும் தங்கம் வெறெதையும் கவனிப்பதில்லை.  மதுமலர் பள்ளிக்கூடம் போனதோடு சரி.  மேற்கொண்டு அவளுக்கு அதில் விருப்பமும் இல்லை.

தங்கம் சமையற்கட்டில் வேலையாக இருந்தார்.  ”அப்பா ரெண்டாவது செல்ப்க்குள்ள மேலாப்புலயே இருக்குப்பா” என்று சொன்னாள் மதுமலர்.  இத்தனை வார்த்தைகள் கோர்வையாக குதுங்கி குதுங்கி வந்தது இதுதான் முதன்முறை.  அவளின் குரல் பலகீனமாகத்தான் இருந்தது.  

தங்கத்திற்கு மனப்பாரம்.  மன கலக்கமாகவே இருந்தார்.  தனது பிள்ளையை எப்படி கரை சேர்க்கப் போகிறோம் என்பதுதான் அது.  தன் மூச்சு இருக்கும் வரை சரிதான்.  முடிந்தவரை பார்த்துக் கொள்ள முடியும்.  பின்னதாக எப்படி ஆகப் போகிறதோ? என்ற கவலை தங்கத்தினை அவ்வப்பொழுது முட்டிக்கொண்டே இருந்தது.  என்ன செய்வது என்று தெரியாது. 

”அப்பா! என்ன பண்றே?” என்ற இரண்டாவது குரல் வந்தது.  மனக் கலக்கத்தில் இருந்து மீண்டவராக,  ”இந்தா வாறேன்” என செல்பின் மேலும் கீழுமாக தடவிக்கொண்டிருந்த தங்கம்,  பொட்டலத்தினை அப்படியே எடுத்துக் கொடுத்தார்.  

”ரெண்டு மட்டும் எடுப்பா போதும்!” என்று சலித்துகொண்டாள் மதுமலர்.   

இடுப்புவலி. கால் குடைச்சல், ஒற்றைத் தலைவலி என அவளை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது.  சொடிங்கி விட்டாள் மதுமலர்.  கழிவறைக்கு போனவள், வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.  சமையல் கட்டில் வேலையாக இருந்தாலும், மதுமலரைப் பற்றிய அசைவுகளில் துணுக்குற்றுக் கொண்டுதான் இருந்தார்.  கழிவறையில் தண்ணீர் பாவிக்கொண்டிருக்கும் சத்தம்கூட வெளியே கேட்கவில்லை.  ”ஒரு விசில் சத்தம் மட்டும் வந்திருட்டுங்” என்பதாக மூச்சை முட்டிக்கொண்டே அடுப்பில் வைக்கப்பட்ட குக்கரின் விசிலை பார்த்துக்கொண்டே இருந்தார்.  சாவிக் கொடுக்கப்பட்டு ஆடிக் கொண்டிருக்கும் பேட்டரி பொம்மையினைப் போலவே விசில் ஆடிக்கொண்டிருந்தது.  

”மது!” என்று ஒரு குரல் கொடுத்ததும் வாளியிலிருந்து எடுத்து பாவிக்கப்பட்ட ஒரு டப்பா தண்ணீர் தரையில் விழுந்து சாரும் சத்தம் கேட்டது.  ”சீக்கிரம் வா!” என்று சொன்னதோடு சரி.  தெருமுனையில் இருக்கும் கடைக்கு சாமான் வாங்குவதற்கு கிளம்புவதாக இருந்தார்.  ஒரு கதவை வெளிப்பக்கமாக அடைத்து அமுக்கு பூட்டினை எடுத்து மாட்டியதும்  பூட்டு பல்லை இறுக்கமாய் கடித்துக்கொண்டது.  அமுக்குப் பூட்டுதான்.  பல நேரங்களில் வண்டியின் சாவியினை மறந்துவிடும் தங்கம், இன்று மறக்கவில்லை.  சாவி அவரது சட்டையின் பாக்கெட்டிலிலேயே இருந்தது.  மதுமலரைப் பற்றிய நினைப்பு தங்கத்தினை விட்டு அகலவில்லை.   தங்கத்தின் வீட்டின் முகப்பில் இருக்கும் அந்த கடைதான் தங்கம் வீடு இருக்கும் தெருவிற்கு முதன் முதலாக வந்த கடை.  சாமான்களின் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், அதனை விட்டால் வேறு வழியும் இல்லை.  கூட்டு ரோடுக்குதான் போகவேண்டும்.  தங்கம் விலையினை பார்க்கவில்லை.  தோலுரிக்காத ஒரு கிலோ கருப்பு உளுந்து. ரெண்டு பாக்கட் ஸ்டே பிரி எக்ட்ரா லார்ஜ் மட்டும் வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.  ”பெரும் போக்கில் கிடக்கும் பிள்ளையின் கால் குடைச்சலுக்கு நல்லது! மிக்சியில ஒரு ஓட்டு ஒட்டினதும், கருப்பு உளுந்து கஞ்சி வக்கணும்!” சுடு தண்ணீரில் கொதி வருவதற்கு முன்னதாகவே தய்ய தக்காவென என அவரது மனது அவசரம் காட்டியது.  

வீட்டிற்கு வந்திருந்தவர், பால் பாக்கட் வந்திருப்பதைப் பார்த்தார்.  எப்பொழுதும் வழமையாக வரும் செய்திதாள் அன்று வரவில்லை என்பதுகூட அவரது நினைவிற்கு எட்டவில்லை.  நினைவு கலைந்து கிடந்தார்.  கலைத்துப் போடப்பட்ட குருவியின் கூட்டினைப்போல மனம் அலங்கோலித்துக் கிடந்தது.  சமயங்களில் என்ன செய்கிறோம், எங்கு போகிறோம் என்றுகூட புரிவதில்லை.  பூட்டைத் திறந்துகொண்டு உள்ளே போனார்.  சமைப்பதற்கு ஒரு ஓரம்.  ஒதுங்கிடம்.  ஒரு சிறிய மறைவான அறை என்பதுதான் வீடு.  அறையின் கதவு சாத்தியிருந்தது.  அவர் கடைக்கு போகும் முன்னதாக சார்த்தப்பட்டிருந்தா? அல்லது திறந்து வைக்கப்பட்டிருந்ததா? என்பதைப் பற்றி எந்த ஞாபகமும் உடனடியாக வரலில்லை.  ”மதூ…” வென ஒரு குரல் கொடுத்துவிட்டு கருப்புத் தோல் உளுந்தினை மிக்சியில் கொட்டினார். ”தங்கோம்..! என்ற இரண்டாவது குரலையும் கொடுத்தார்.  பதில் வரவில்லை.  தங்கத்திற்கு தானியத்தில் கிடக்கும் கல், உமி என எதையும் பிரித்து எடுப்பது, பொறுக்குவது, புடைப்பதுவென எதுவும் தெரியாது.  அப்படியே கொட்டி மூன்று சுற்று சுற்றி ஜாரை இறக்கி வைத்துவிட்டார்.  ”மதூ…” வென மீண்டும் ஒரு குரல் கொடுத்தார்.  கதவு அடைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை.  புறங்கையால் ஒத்திகைக்காக இரண்டு தட்டுத் தட்டினார்.  “எம்மா? மது?” அறையிலிருந்து சத்தம் எதுகலிக்கவில்லை.  ”என்னாச்சிம்மா? மது?” என பேசிக்கொண்டே அறையினை திறந்தார்.  உள் பக்கமாக தாழிடப்படாத அறை.  வெற்றுக் காதிதத்தில் வெள்ளை நிறம் துருவேறிக் கொள்வதைப்போல பொசுக்கென திறந்துகொண்டது.  மலையங்காட்டு கம்பளியின் மீது நூல் போர்வையால் விரிக்கப்பட்ட படுக்கை துவண்டு கிடந்தது.  தங்கத்தின் பார்வை உடனடியாக குளியலறையின் பக்கம்தான் திரும்பியது.  உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்த அறை.  மதுமலர் குளியலறையில்தான் இருக்கிறாள் என்பதை அவரால் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது.  பதட்டத்தோடு தட்டினார்.  கதவு திறக்கவில்லை.  மதுமலரின் முணகல் சத்தம் மட்டும் கேட்டது.  ”எம்மா? பாப்பா? மதூ… தங்கோம்… தொற சாமி…” என்றார்.  குரலில் நடுக்கம்.  வார்த்தைகள் குழறின.  அழுகை ஒருப் பக்கம்.  “அப்பா… அப்பா…” முணகல் சத்தம் குளியலறையிலிருந்து வந்துகொண்டே இருந்தது.  மண்புழுவாக நெளிந்துகொண்டிருக்கும் அவளின் குரலை, இரும்பு சம்பட்டியால் பாறையில் வைத்து அதன் தலையினை மட்டும் நசுக்கியதைப்போல பலகீனமாய் நுணுக்கி நுணுக்கி முணகியது.  

ஒரு சிட்டுக் குருவியின் இறக்கையின் உதறலைப்போல திறந்துகொண்ட அறை.  தங்கம் பார்த்திருக்க கூடாத காட்சி அது.  ”மதூ…  சாமி…” என பிள்ளையை கையில் வாரிக் கொண்டார்.  அவளின் உடம்பை போர்த்திக் கிடக்க ஒரு துண்டுத் துணிக்கூட இல்லை.  பிள்ளை அப்படியே கிடந்தாள்.  ஐந்து வயதில் வந்திருந்த வலிப்பு பின்னதாக வந்ததில்லை.  அவள் கைகளிலும் முகத்திலும் இருக்கும் சிராய்ப்பின் கோடு வலிப்பு வந்திருந்ததைப்போல இருந்தது.  மதுமலரின் உடல் நலிந்திருந்த நிலையில் வலிப்பு வந்திருக்கலாம் என்று தங்கத்தால் யூகிக்க முடிந்தது.  வாயில் ஒழுகிக் கொண்டிருக்கும் கோழையோடு சோப்பின் நுரையும் சேர்ந்து கொண்டிருந்தது.  வலிப்பு வந்து விழுவதற்கு முன்னதாகவே அவள் கதவினை திறந்திருக்க வேண்டும்.   தங்கத்தால் எப்படியோ தனக்குள் இருக்கும் பலத்தினை சொட்டுச் சொட்டாக குவித்து அவளால் தாட்பாளை மட்டும்தான் திறக்க முடிந்திருக்கிறது.  துணிக் கம்பியில் மாட்டப் பட்டிருக்கும் துணியினைக்கூட எடுத்து அவளால் உடம்பினை மறைத்துக் கொள்ள முடியவில்லை.  வாளியிலிருந்து எடுத்து தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரோடு இரத்தம் கலந்து ஓடிக்கொண்டிருந்தது.  தண்ணீர் வெளியேறும் குழாயில் அவள் முன்னதாக பயன்படுத்தியிருந்த ஸெ்டேபிரி பேடு அடைத்துவிட்டிருந்ததில் அவள் பயன்படுத்தியிருந்த தண்ணீர் வெளியேறாமல் தடைபட்டு நின்றுகொண்டிருந்தது.  குளியலறை முழுக்க இரத்தம் பிரிப் பிரியாய் ஓடிக்கொண்டிருந்தது.   மதுமலர் அதன் மீதுதான் மயங்கி கிடந்திருந்கிறாள்.  பெரும் போக்கு என்பது அவளுக்கு எப்பொழுதும் போவதுதான்.  பத்து நாட்களுக்கு இருக்கும்.  பின்னர் படிப்படியாக குறைவதும் உண்டு.  இல்லையென்றால் கூட்டுரோட்டில் இருக்கும் ஆஸ்பத்திரிக்குதான் தங்கம் அழைத்துக்கொண்டு போவார்.  ஊசி மாத்திரை என ஒரு வாரத்திற்கு எடுத்துக்கொண்டால் போக்கு நின்றுபோகும்.  மத்தியானம்தான் மதுவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போயிருந்தார்.   நரம்பில் ஊசி போட்டு மாத்திரை எழுதி கொடுத்திருந்தார்.  இது ஏழாவது நாள்.  இதுவரை இப்படி ஆனதில்லை.  

பிள்ளையை கையில் அள்ளிக்கொண்டு வந்த தங்கம், டப்பாவில் தண்ணீரை எடுத்து உடம்போடு ஊற்றினார்.  தொள தொளவென துவண்டாள்.  இடுப்போடு இறுகப் பற்றித் தூக்கிய அவர், மதுவை நிற்க வைத்தார்.  பொத பொதவென இருக்கும் அவளை தூக்குவதும் அவருக்கு முடியவில்லை.  வாகுவற்ற இடத்தில் நின்றுகொண்டிருக்கும் அவரது இருப்பே வழுக்கிக்கொண்டு போவதைப்போலவே இருந்தது.  திணறிப் போனார் தங்கம்.  ஒருக்கையில் அவளை அணைத்துக்கொண்டு மற்றொருக் கையில் தண்ணீரை எடுத்து இடுப்போடு ஊற்றினார்.  இரத்தம் கொளித்துக்கொண்டு ஓடுவதைப்போல இருந்தது.  பிள்ளையை இரண்டு கைகளினாலும் இடுப்புக்கு அடியில் கொடுத்து பற்றித் தூக்க முடியில்லை.  தோள்பட்டைக்கு அடியில் இரண்டு கைகளையும் கொடுத்து இழுத்துக்கொண்டே போனார்.  இடுப்பிலிருந்து அவளது பாதம் வரை தரையில் சிராய்த்துக்கொண்டே வந்தது.  இடுப்பில் சுற்றப்பட்டிருந்த துணியும் சிராய்ப்பில் தரையோடு நின்றுகொண்டது.  அவரால் மதுவை மட்டும்தான் இழுத்துக்கொண்டு போக முடிந்தது.  அவளது உடம்பில் சுற்றப்பட்டிருக்கும் துணியியோடு சேர்த்து இழுக்க முடியவில்லை.  

மண்புழுக்கள் நீண்டுக் கிடப்பதைப்போல தரையெல்லாம் உதிரக் கோடுகள்.  சிராய்த்துக்கொண்டே வந்தன.  மதுவை, கம்பளி படுக்கையில் கொண்டு வந்து கிடத்தினார் தங்கம்.  பிள்ளை வளர்ந்த குழந்தையாக கிடந்தாள்.  பெரிய அரிசிக் குண்டானில் வெண்ணீரை எடுத்துக்கொண்டு வந்தார்.  துணியை நனைத்து அவளை புரட்டி இடுப்போடு ஒட்டியும் வழிந்துக்கொண்டிருக்கும் இரத்ததினை கோதியும் துடைத்தும் எடுத்தார்.  துடைத்து வழித்து எடுக்கும் இரத்தத்தினை மற்றொரு பாத்திரத்தில் புளிந்து விட்டார்.  ”ஏம் புள்ளைக்கு இவ்வளவு பெரிய முள்ளு உடம்புல தச்சிருச்சிப் பாரு” என்பதாக குமைந்து குமைந்து அழுதார் தங்கம்.  மதுவை கழுவி சுத்தப்படுத்தி துடைத்து எடுப்பது என்பது, அவருக்கு உடலில் தைத்திருக்கும் காட்டு முள்ளை முள்ளிடுக்கியால் தோண்டி எடுக்கையில் கொப்பளித்துக்கொண்டுவரும் அழுக்கு இரத்தத்தினைப்போலதான்.  வேறான்றும் நினைக்க முடியவில்லை.  மது மெதுவாக தலையினை அசைத்தாள்.  முணகினாள். அவளது உதடுகள் நடுக்குவாதம் கண்டதினைப்போல நடுங்கின.  கண்களை உள்பக்கமாக உருட்டி அசைப்பதைப்போல இருந்தது.  ”இந்தாம்மா ஆச்சி!  அவ்வளவுதாங்!”  என்று சொல்லிக்கொண்டே  அவளுக்கு கழுத்தோடு மாட்டும் ஒரு கவுணை எடுத்து மாற்றி விட்டிருந்தார்.  

எலக்ட்ரா பவுடர் அலமாரியில் இருந்தது.   அதன் கழுத்தினை துண்டித்து தண்ணீரில் போட்டு கலக்கிக் கொண்டுவந்து தலையினைத் தூக்கி கொடுத்தார்.  ஆரஞ்சு பிளேவர்.  அவளுக்கு மிகவும் பிடிக்கும்.  அவளது பக்கத்தில் கொண்டு போனவுடன் கண்களை திறந்துகொண்டாள்.  அவளுக்கு அப்பா தங்கம் ஆரஞ்சு பழத்தினைப்போலத்தான்.  கழுத்தினைச் சொடுக்கிச் சொடுக்கிக் குடித்தாள்.  இரண்டு கண்களின் ஓரத்திலும் சிராப்பு ஏற்பட்டிருந்தது.  உடல் நடுக்கம் கொஞ்சம் கட்டுப்பட்டு வந்திருந்தது.  பின்னதாக மாத்திரையினை கரைத்து அவளுக்கு வாயில் ஊற்றி விட்டார்.  கசந்து கசந்து துப்பினாள்.  எப்படியும் வயிற்றிற்கு கொஞ்சம் போய் சேர்ந்திருக்கும்தான்.  உடம்பினை புரட்டிக்கொண்டிருந்தாள் மது.  

ஸ்டே பிரி எப்படி மாற்றவேண்டும் என்று அவளுக்கு சொல்லித் தந்திருக்கிறார் தங்கம்.  மதுவிடம் பொம்மை படம் வரைந்து காட்டுவார்.  ஒரு வெள்ளைப் தாளை எடுத்து அதில் ஒரு முகத்தினை வரைவார். 

”இதுதான் மதுவாங்”

சிரிப்பாள் அவள். 

”இதுதாங்  அவளோட சின்ன மூக்காம்” 

தொட்டுக் கொள்வாள் அவள். 

”இதுதாங் அவளோட கையாம்”

கைத் தட்டுவாள் அவள். 

”இதுதாங் அவளோட நீளமான முடியாங்!  அழகா இருக்குதானே?” 

அவளது கண்கள் அகலமாக விரியும்.  

சீப்பினை எடுத்து தனது தலையினை வாரிக் காட்டுவார்.  அவளது முடியில் வைத்து முடியினை உருவிக் காட்டுவார்.  தங்கம் சொல்லிக் கொடுப்பதை அவளாகவே செய்துக்கொள்வாள்.  சமயத்தில் பெரும் முறடு பிடிப்பாள்.  ஆடை உடுத்திக் கொள்வதிலும்கூட அப்படித்தான்.  ”அப்பா நீ போட்டு வுடு” என்பாள்.  

”நீயெல்லாம் பெரிய புள்ளையா ஆயிட்ட! இனிமேலு எல்லாத்தையும் நீதாம் பாத்துக்கணும்!” என்று ஒருநாள் சொல்லிவிட்டார்.  அன்றைக்கு முழுவதுமாக தங்கத்தின் மடியில் படுத்துக்கொண்ட அவள் எழுந்திருக்கவே இல்லை.  தங்கத்தின் வேட்டியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு முகத்தினை பதித்துக்கொண்டாள். “மது இருடா! அப்பா பாத்ரூம் போயிட்டு வாரேன்” என்று சொல்லிப் பார்த்தார்.  அப்பொழுதுகூட அவள் எழுந்தபாடாக இல்லை.  இடுப்பினை பிடித்துக்கொண்டு பின்னதாகவே வந்தாள்.  கதவை திறந்து வைத்துக்கொண்டுதான் கழிவறைக்குகூட போக முடிந்தது. 

மூன்று மாதங்களாக தங்கத்திற்கு பெரும் போராட்டம்தான்.  மதுமலர் வயதிற்கு வந்து பெரிய பிள்ளையாகி விட்டிருந்த இந்த மூன்று மாதத்தில் அவளுக்கு அத்தனையையும் ஒற்றையாளாக கவனிக்க வேண்டியிருந்தது.  மதுவிற்கு ஸ்டேபிரி மாட்ட கற்றுக்கொடுத்திருந்தார் தங்கம்.  ”பாப்பாவுக்கு ட்ரஸ்சு மாத்திவுடு!” என்று சொல்லிப் பார்த்தார்.  அவள் கேட்பதாக இல்லை.  பிள்ளை படுக்கையில் பலகீனமாக கிடந்தாள்.  உடல் உதறல் எடுப்பதும், பிள்ளை முணகுவதுமாகவே இருந்தாள்.  இரத்தம் வழிந்துகொண்டே இருந்தது.  இரண்டு பேடுகளை ஒன்றாக இணைத்து அவற்றை ஆடையோடு பிணைத்து அவளுக்கு மாட்டிவிட்டார்.  முலையூட்டிக்கொண்ட குழந்தை அம்மாவின் தோளில் சாய்ந்து எதுகலித்து பால் கக்குவதை விரல்களால் துடைத்து விடுவதைப்போலதான் அவருக்கு இருந்தது.   

உதிர்ந்து இழுப்பிக் கிடந்த இரத்தவாடைக்கு வீடெல்லாம் ஈக்கள் மொய்க்கத் தொடங்கின.  அவை இங்கும் அங்குமாக  பராச்சிக்கொண்டிருந்தன.  எல்லாவற்றையும் துடைத்துவிட்டான்.  மது மெதுவாக கண்யர்ந்ததினைப்போல இருந்தது.  பிள்ளை எழுந்ததும் தோல் உளுந்தங் கஞ்சியினை அவளுக்கு வாயூட்டிவிட வேண்டும் என்று அடுப்பில் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தார்.  கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.  திறந்தார்.  சுபச்செல்விதான் வந்திருந்தாள்.  பக்கத்து தெருவில்தான் குடியிருக்கிறாள்.  மூன்று மாதத்திற்கு பிறகாக வந்திருக்கிறாள்.  மூன்று மாதத்திற்கு முன்னதாக வீட்டில் கமழ்ந்திருந்த வாசம், இப்பொழுது இல்லை.  வெகுவாக மாறியிருந்தது.  அவளும் அதற்கு அந்நியப்பட்டிருந்தாள். 

”வா செல்வி! ஒக்காரு” என ஒரு முக்காலியை எடுத்துப் போட்டார் தங்கம்.  முக்காலியின் கால்கள் சமமாக இல்லை.  உடலின் எடைக்கும் சாய்விற்கும் ஏற்றபடி மாறி மாறி நொடித்துக்கொண்டிருந்தது.  தங்கத்தின் வீட்டு முக்காலி அப்படித்தான்.  மூன்று கால்களும் மூன்று பக்கமுமாக கிளப்பிக்கொண்டிருந்தது.  முக்காலியில் உட்கார்ந்திருந்த சுபச்செல்வியின் சாய்வின் எடைதான் மாறிக்கொண்டே இருந்தது.  அவள் ஒரு வார்த்தைப் பேசுவதும் முக்காலியின் ஒரு காலில் இருந்து நொடிக்கும் சத்தம் வருவதுமாகவே இருந்தது.    

அடர் சிவப்பு நிறத்திலான சேலை கட்டியிருந்த அவள்,  ”என்னா? அமர்க்களமான சமையலா இருக்குதே?” அவளின் பேச்சி விட்டேத்தியாக இருந்தது. 

”அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல! மதுவுக்குதாங் கஞ்சி வச்சிருக்கேன்!”

”ஓ…” என்று வார்த்தையினை இழுத்துக்கொண்டவள், வெறெதுவும் அதன் பிறகாக கேட்டக்கொள்ளவில்லை.  ”ஓ…” வென உதட்டினை குவித்து வார்த்தையினை உள்ளுக்கு இழுப்பது அந்நியம்தான்.  மதுமலர் இருக்கிறாள் என்று அவளுக்குத் தெரியும்.  ஆனால் அவளைக் குறித்து சுபச்செல்வி எதுவும் கேட்கவில்லை.  அவள் அப்படித்தான்.   எல்லாவற்றையும் மறந்துவிட்டிருக்கிறாள்.  

தங்கமும் சுபச்செல்வியும் சந்தித்துக்கொண்டோம் என்பதற்காக முன்னுக்கும் பின்னுக்குமாக பேசிக்கொண்டார்கள்.  முக்காலியின் நொடிப்பு சத்தமும் நின்று விட்டிருந்தது.  பிறகாக பேச்சி வளருவதாக தெரியவில்லை.  

”அப்றோம்…” என்றான் தங்கம்.  சுபச்செல்விக்கு எந்த தயக்கமும் இல்லை.  அவள் வீட்டிற்கு வந்தது குறித்து தங்கத்திற்கும் எந்த சங்கடமும் இல்லை. 

”இல்லே! என்னோட ட்ரஸ் கொஞ்சம் விடுபட்டுப் போச்சி! அத எடுத்துக்கிட்டுப் போகலாமுண்ணு வந்தேன்” 

சுபச்செல்விக்கு விடுபட்டுப் போனது துணிமணி உள்ளிட்ட சில பொருட்களோடு மட்டுமே சுருங்கி விட்டிருக்கிறது.  தங்கத்திற்கு அப்படியான விசயமாக இது இல்லை.  விடுபட்டுப்போன இரண்டு ரவிக்கை, மூன்று சேலை, அலமாரியில் இருந்த ஒரு செட்டு சிவப்புக்கல் மூக்குத்தி கூடுதலாக அவள் பயன்படுத்தி மீதமாக இருந்த இரண்டு ஸ்டே ப்ரி பாக்கட்” என முன்னதாகவே ஒரு துணிப் பையில் போட்டு தயாராக போட்டு வைத்திருந்தார் தங்கம்.

”கதவிற்கு பின்னால இருக்குது பாரு” 

அதற்கு பின்புறம்தான் மதுமலர் படுத்துக் கிடந்தாள்.  ஆனால் சுபச்செல்வியின் கண்களுக்கு அவள் தட்டுப்படவில்லை.  மூன்று மாதங்களுக்கு பிறகாக வீட்டிற்கு வந்திருக்கிறாள் சுபசெல்வி.  இவ்வளவு நாளும் தான் மறந்துவிட்டிருந்த இந்த பொருட்களை ஏன் எடுத்துக்கொண்டு போகவில்லை என்று தெரியவில்லை.  இன்றும் இதனை மட்டும்தான் எடுப்பதற்காக வந்திருக்கிறாளா? அல்லது வேறெதுவும் காரணம் இருக்குமோ? என்பதைப் பற்றியெல்லாம் தங்கம் யோசிக்கவில்லை.  வீட்டில் கமழ்ந்துவரும் இரத்தவாடைகூட அவளின் மூக்கிற்கு அன்னியமாகி விட்டிருந்தது.  வாழ்க்கையோடு புழங்கி கிடக்கும் இரத்தவாடையிலிருந்து அந்நியப்பட்ட பெண் சுபச்செல்வியாகத்தான் இருக்க முடியும் என்று தங்கம் நினைத்துக்கொண்டார்.  

பையின் கைப்பிடியினை இணைத்து கட்டப்பட்டிருக்கும் முடிச்சியினை பிரித்து திறந்து பரிசோதித்துக்கொண்டாள்.  ஒற்றைக்கல் மூக்குத்திதான்.  அதனை திறந்து பார்த்தவுடன் அவளுக்கு புன்னகை ததும்பியது.  இரண்டு பேடு பிரித்து எடுக்கப்பட்ட ஸ்டே ப்ரி பாக்கெட்டும் இருந்தது.  வீட்டில் இருக்கும் மதுமலருக்கு அதனை விட்டுவிட்டு வந்திருக்கலாம்.  அவளுக்கும் தற்பொழுது தேவைபடுவதாக இருந்தது.  பையில் இருந்தவரைக்கும் சரிதான் என்பதைப்போல நினைத்துக்கொண்டாள் அவள். 

“சரி நான் கௌம்பறேன்”  என்று இரண்டு தப்படிப் போட்டு வாசலை கடந்திருப்பாள்.  

”இரு… இரு…” வென வெளியே வந்த தங்கம், ”உள்ளே வா” என்றான்.  வெளியில் ஒரு நடுமத்திமமான வயதில் ஒரு ஆண் நின்றுகொண்டிருப்பதை அப்பொழுதுதான் பார்க்கிறார் தங்கம்.  சுபச்செல்வியிடம் அவன் யார் என்றெல்லாம் கேட்கவில்லை.  ”வாங்க!” என்று சொன்னதோடு ”இவரு…?” என்று தங்கம் தனது குரலை இழுத்தாலும், அவரால் நின்றுகொண்டிருந்தவரை யார் என யூகித்துக்கொள்ள முடிந்தது.  ஆகவே அவரைக் குறித்து மேற்கொண்டும் எதுவும் கேட்காமல், அவரையும் உள்ளே அழைத்தார்.  சுபச்செல்வியும் அவரைக் குறித்து எதுவும் சொல்லவில்லை.  இருவருக்கும் தோலுரிக்கப்படாத கருப்பு உளுத்தங் கஞ்சியை ஊற்றிக் கொடுத்தார்.  தங்கம் தனது வீட்டிற்கு வந்திருந்தவரை பார்த்துக்கொண்டதோடு சரி.  வேறொன்றும் சொல்லவில்லை.  

காது இல்லாத துணிப் பை ஆக இருந்தது.  அதுவும் ஒருவகையில் சரிதான்.  இல்லையேல், சுபச்செல்வி உதிர்க்கும் அத்தனை சொற்களையும் அதன் காதுகளில் நிரப்பிக்கொள்ள நேரிடும்.  மூட்டையினைப் பற்றிக்கொண்ட சுபச்செல்வி தெருவின் முனைக்கு சென்றுவிட்டிருப்பாள்.  தெரு மடங்கி திரும்பும் தருவாயில், முன்னதாக அவளும் கையசைத்தாள்.  தங்கமும் கையசைத்தார்.  தங்கத்தின் யோசனையெல்லாம் ”நான் சுபச்செல்வியின் நிராகரிக்கப்பட்ட கணவன் என்பதை ஏன் வந்திருந்தவரிடம் அவள் அறிமுக படுத்தவில்லை” என்று யோசித்துக்கொண்டே இருந்தார்.  ஒருவேளை அவளுக்கோ அல்லது அவளது புதிய கணவனுக்கோ, அது தேவைபடாத உரையாடலாக இருந்திருக்கலாம்.  எனக்கு தேவை என்பதை அவள் நிராகரிக்கும் உரிமை அவளுக்கும் இருக்கிறது என்பதைப் பற்றி தங்கத்திற்கு நல்ல புரிதல் இருந்தது.  

”பாப்பாவுக்கு ட்ரஸ் போட்டுவிடுப்பா” என்ற குரல் கொடுத்தாள் மதுமலர்.  சுபச்செல்வி உட்கார்ந்திருந்த முக்காலியில் இரத்தக்கரை தொய்ந்திருந்தது.  அது உள்ளபடியே யாருடையது என்று தெரியவில்லை.  ஆனாலும் முக்காலியில் ஒட்டிக் கிடக்கும் இரத்தத்திற்கும் இந்த வீட்டிற்கும் பிணைப்பு இருந்திருக்கிறது.  உதிர்ந்து கிடக்கும் இரத்தம் யாருடையதாகவே இருக்கட்டும்.  ஆனால் அவள் உட்கார்ந்திருந்த இடத்தில் ஈக்கள்கூட மொய்க்கவில்லை.  அவளின் இரத்தப்பசை இந்த வீட்டிற்கு மட்டுமல்ல, ஈக்களுக்கும்கூட அன்னியப்பட்டுவிட்டிருந்தது.  

எழுதியவர்

க.மூர்த்தி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கல்லூரியல் ஆங்கிலத்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.

கவிதைகள், நாவல்கள் எழுது இவர் மொழிப்பெயர்ப்புகளிலும் ஈடுபடுகிறார். கனலி, வாசகசாலை, கதவு, புதிய மனிதன் , போன்ற இதழ்களில் இவரின் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன.

இவரது நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள் :
கள்ளிமடையான் ( 2019, புலம் வெளியீடு), மோணோலாக் கதைகள் (2022, வெற்றிமொழி வெளியீட்டகம்)

நாவல்கள்:
பங்குடி (2022, வெற்றிமொழி வெளியீட்டகம்), மண்புணர்க்காலம் (2019)

மொழிப்பெயர்ப்பு நூல்கள் :
.ஆரண்ய தாண்டவம் ( பொன்னுலகம் புத்தக நிலையம் 2022) Feet in the Valley by Aswini Kumar Mishra ஆங்கில நாவலை தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார்.

RUGGED ROAD AHEAD (சமகால தழிழ் கவிதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு) ஒதிசா மாநிலம் Ministry of Culture ல் புவனேஸ்வரில் வெளியிடப்பட்டது)

கள்ளிமடையான் சிறுகதை தொகுப்பிற்காக அருப்புக்கோட்டை, மானுட பண்பாட்டு விடுதலைக் கழகம் விருது, பங்குடி நாவலுக்காக தமுஎகச வின் சு. சமுத்திரம் விருது, ஆரண்ய தாண்டவம் நூலுக்காக இராஜபாளையம், மணிமேகலை மன்றத்தின் சிறந்த மொழிப்பெயர்ப்பிற்கான விருது, RUGGED ROAD AHEAD நூலுக்காக திசையெட்டும் மொழிப்பெயர்ப்பு விருது ஆகியவை பெற்றிருக்கிறார். பல்வேறு சிறுகதைப் போட்டியிலும் பரிசுகளை பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x