குடைக்குள்ளிருந்து வந்தவர்
‘பப்ளிக் பேன்க்’ முன் ஓர் அடைமழை பொழுதில்தான் அவரைப் பார்த்தேன். மழைச்சாரலுக்கு ஒதுங்கி நின்றவர்களின் மத்தியில் சுவரோரம் சரிந்து கிடந்த குடைகளை எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.
அவசரமாக வங்கியினுள்ளே சென்றவர்களின் குடைகள் அவை. வழியில் ஒழுங்கில்லாமல் விழுந்திருக்கக்கூடும். அல்லது காற்றடித்து அவற்றின் ஒழுங்கைக் களைத்துவிட்டிருக்கலாம். அவ்வளவு பேர் இருந்தும் அவர் மட்டும்தான் குடைகளை எடுத்து நேர்த்தியாக அடுக்கியதைப் பார்த்தேன்.
உலகமே ஒழுங்கில்லாமல் இருக்க அதனை யாராவது இப்படிக் குடைகளை அடுக்குவதன் மூலம் சரிப்படுத்துகிறார்களோ எனத் தோன்றியது. மழைக்கு ஒதுங்கிய அத்தனை பேரும் ஒவ்வொருவராக ஓடிப்போய்க் காரில் ஏறுவதும் அல்லது நடந்து சாலையின் இன்னொரு திசைக்கு நடப்பதுமாகக் கரைந்து கொண்டிருந்தார்கள். அவர் மட்டும் அந்த இடத்தை விட்டு அகலவே இல்லை. வங்கியினுள்ளும் வரவில்லை.
வெளியே வந்தவர்கள் சிலர் அக்குடைகளை எடுக்க முனைந்தனர். அவர்களுக்கு உதவுவது போல் பாவனை செய்தார். அதில் ஒரு சீனத்தி அவரிடம் ஒரு வெள்ளி நோட்டை நீட்டினார். புன்னகையுடன் வாங்கி சட்டை பாக்கெட்டில் வைத்தார். அடுத்தடுத்த வந்தவர்கள் அவரைக் கண்டு கொள்ளவில்லை என்றாலும் அதனை மெல்லிய சிரிப்புடன் எதிர்க்கொண்டார்.
அடுத்த சிலர் குடைகளுடன் வந்து சேர்ந்தனர். அதே போல் அவசரமாகக் குடைகளைச் சுவரின் மீது சாய்த்து வைத்துவிட்டுச் சென்றனர். குடைகள் சரிந்தன. அவர் அதனை நிமிர்த்தி வைத்துக் கொண்டிருந்தார். மதியம் வரை தொடர்ந்த மழை அவரை அசைக்கவில்லை. அங்கேயே நின்றிருந்தார்.
பிறகு, கையில் ஒரு குடையை எடுத்துக் கொண்டு ஒழுகிக் கொண்டிருந்த மழைநீரில் நனையவிட்டு ஏதோ பாடலை முணுமுணுத்தார். வங்கியின் உள்ளே இருந்ததால் அப்பாடலைக் கேட்க முடியவில்லை. நானே அவருடைய உதட்டசைவைக் கொண்டு எனக்குப் பிடித்த தமிழ்ப்பாடலை மிமிக்ரிக் செய்து கொண்டேன்.
எப்பொழுது கண்ணயர்ந்தேன் எனத் தெரியவில்லை. என்னையும் மீறி கணநேரத்தில் வந்துவிடும் வினாடி தூக்கத்தை ஒழிக்க முடிந்ததில்லை. தூங்கியதை வேலையாள்கள் பார்த்திருந்தால் ஆபத்தெனத் தெரியும். சமாளித்துக் கொண்டு வெளியே பார்த்தேன். அவர் காணவில்லை. குடைகள் மட்டும் சில வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. மழையும் நின்று விட்டிருந்தது.
ஒரு சிறு மழை பொழுது தொடங்கி ஓய்வதற்குள் என்னென்னவோ மாயம் செய்து விடுகிறது. பாதுகாவலருக்கென வழங்கப்பட்டிருக்கும் நாற்காலியிலிருந்து எழுந்து வங்கிக்கு வெளியில் உள்ள குடைகள் வைக்கும் இடத்திற்கு வந்தேன். தரையின் ஈரம் குளிர்ச்சியை உண்டாக்கியது. முதல் முறையாக வேலை நேரத்தில் பெய்யும் மழை மிகவும் அழகானதாகத் தெரியத் துவங்கியது.
நானும் குடைகளை எடுத்து நிமிர்த்தி வைக்கத் தொடங்கினேன். மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. வங்கியினுள்ளே பார்த்தேன். என்னுடைய இடத்தில் நான் அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
யாரும் சிரிக்கக்கூடாது
யாராவது நகைச்சுவையாகப் பேசினால் சட்டென வெறுப்புத் தொற்றிக் கொள்கிறது. இதனை என்னால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. மேகலா எனக்குக் கிடைத்த புதிய காதலி. சிரிக்காமல் பேசலாமே என்று சொன்னதற்கு அவள் மறுநாளே என்னுடன் தொடர்ந்து பேச மறுத்துப் போய்விட்டாள். சிரிப்பைப் பற்றி பேசினால் நான் விரோதியாகப் பார்க்கப்படுகிறேன்.
அடுத்து, கடை முதலாளி, வடிவேலுவின் நகைச்சுவை வசனங்களைச் சொல்லி நகைச்சுவை செய்யும்போது அவரை ஓங்கிப் பளாரென அறைந்துவிடத் தோன்றுவதை வெளியே காட்டிக்கொள்ள முடியவில்லை. அதிலும் அவர் செய்யும் அந்தக் காப்பியடித்த நகைச்சுவையைக் கேட்டு அவரைச் சுற்றி நிற்கும் பெண்கள் சிரிப்பதைப் பார்த்தால் மொத்த நகரமே என் இதயத்திற்குள் பற்றி எரிவதைப் போன்று தோன்றுகிறது.
“உனக்கு எப்போ இந்தக் காமடி பிடிக்காமல் போச்சுன்னு சரியா சொல்ல முடியுமா?”
“ஏன்டா இதுக்கு ஏதாவது கூகள்ல புது நோய்ன்னு போட்டுருக்கா?”
ஒரேயொரு பால்ய நண்பனிடம் இப்பிரச்சனையைச் சொன்னபோது அவன் என்னை விசாரணை கைதி போல் பல கேள்விகள் கேட்டுவிட்டு அபூர்வமான ஒரு ஜந்துவைப் போல பார்த்தான்.
இதனால்தான் நான் யாரிடமும் இதைப் பற்றிப் பேசுவதாக இல்லை. அறைக்குள் இருக்கும்போது பல நகைச்சுவைகள் செய்து பார்த்தேன். எனக்கே அசூயையாக இருந்தது. பிறரைச் சிரிக்க வைப்பது மாபெரும் கலை என்றெல்லாம் சில வாசகங்களைக் கூகளில் பார்த்தபோது எரிச்சல் கூடியது.
அன்றிரவு நான் தூக்கத்தில் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்ததாக அம்மா மறுநாள் புலம்பினார். அவருக்கும் உறக்கமில்லாமல் போகும் அளவிற்கு என் அறைக்குள்ளிருந்து சிரிப்பொலிகள் கேட்டதாகவும் புகார் சொன்னார். அன்றும் நகரத்தில் சிரிப்பவர்களை மிகுந்த வெறுப்புடன் கடந்து கொண்டிருந்தேன். ஒருவர் ஏன் இன்னொருவரைச் சிரிப்புக் காட்டிக் கவர வேண்டும் என அதீத கோபம் உருவானது. அவர்களுக்கு வேண்டுமென்றால் சொந்தமாகச் சிரித்துக் கொள்ளட்டுமே என்று உள்ளுக்குள் கதறினேன்.
நாளடைவில் சிரிப்பவர்கள் அற்ற நகைச்சுவையே இல்லாத நகரம் வேண்டுமெனத் தொடர்ந்து வேண்டிக் கொண்டிருந்தேன். முடிந்தவரை என் பற்களை வெளியே காட்டாமல் பார்த்துக் கொண்டேன். சிரிப்பதற்கு மனிதர்கள் பயன்படுத்தும் சிறந்த உபக்கரணமாய் அவர்கள் பற்களைப் பயன்படுத்துகிறார். அல்லது உதடுகூட சிரிக்கிறது. அனைத்தையும் நசுக்க வேண்டும் என்பது போல் தோன்றியது.
பார்ப்பவர்களிடமெல்லாம் மௌனமாய் இருப்பதைப் பற்றியும் தியானம் செய்வதன் தேவையையும் சொல்லத் தொடங்கினேன். ஒரு நாளில் இரு முறைக்கு மேல் சிரித்தால் வாயில் புற்றுநோய்ப் பரவுவதாக ஏதோ ஓர் ஆங்கிலேயர் சொன்னதாகச் சொல்லி பொய்த்தகவலைப் பரப்பினேன். நான் சொல்லியிருந்தால்கூட யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். யாரோ ஒரு வெள்ளையன் என்றால் நம்மாள் நம்பிடுவிடுவான் என்பது எனக்கு வசதியாக இருந்தது. எனக்கு வேண்டியது யாரும் சிரிக்கக்கூடாது. அவரவர் வேலைகளை அவரவர்கள் அமைதியுடன் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.
இரவு பகல் என அனைத்துப் பொழுதுகளிலும் சிரிப்பவர்கள், சிரிக்க முனைபவர்கள், சிரிப்பை அடக்கி வைத்திருப்பவர்கள் என அனைவரையும் கண்காணிக்கத் துவங்கினேன். என் அலுவலகத்தில் சிரித்தவர்கள் சிலரைப் பிறகொருநாள் கோபம் தாளாமல் அவர்களிடம் கத்தவும் செய்தேன். முதலாளி வெளியே விரட்டியடித்தார்.
“போடா பைத்தியமே…” என்று சொல்லிவிட்டு மேலும் சில கெட்ட வார்த்தைகளையும் சேர்த்துக் கொண்டார்.
அன்றுதான் முதன்முதலாய் நான் விரட்டியடிக்கப்பட்ட நாள். கைவிடப்பட்ட நாள் என்றும் சொல்லலாம். வீட்டுக்குப் போகப் பிடிக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரன் சிரிப்பான். அல்லது எதிர்வீட்டிலுள்ள அந்தச் சிறு குழந்தை என்னைப் பார்த்துச் சிரிக்கும். அலுவலகத்திலிருந்து சிரிப்பொலிகள் திரண்டு வந்து என் காதுகளைக் குடைந்தது. சிலர் கைத்தட்டிச் சிரித்தார்கள்.
இப்பொழுது தெரிகிறதா மேகலா நான் ஏன் சிரிப்பை வெறுக்கின்றேன் என?
நாக்கு
முனியாண்டி தாத்தாவிற்குப் பாதி வாய் திறந்து மீண்டும் மூடியபடி இருந்தது. சிரமப்பட்டு மூச்சை இழுத்தார். மருத்துவமனையில் ஒரு வாரம் வைத்திருந்த இனி பிழைக்க மாட்டார் என வீட்டிற்குக் கொண்டு போகச் சொல்லிவிட்டனர். அவர் நாற்பது ஆண்டுகள் உழைத்துக் கட்டிய வீட்டின் வரவேற்பறையில் ஒரு சிறிய கட்டிலைப் போட்டனர். அவரை அதில் படுக்க வைத்து வாசல் கதவைத் திறந்து வைத்தனர். உயிர் போனால் வாசல்வழி வெளியேற வேண்டுமென ஓர் ஏற்பாடு.
“மனுசன் இவ்ள பெரிய வீட்டக் கட்டி கடைசி வரைக்கும் கால் நீட்டி உக்காந்து சுகத்தக் கண்டானா?”
முனியாண்டியின் வயதை ஒத்த நண்பரான மணியத்திற்கு மரணப் பயம் தொற்றிக் கொண்டது.
வீட்டிலுள்ளவர்களுக்குச் சமாதானம் சொல்வதைப் போல தன்னைத் தானே சாந்தப்படுத்தினார்.
முனியாண்டியின் கண்கள் வாசலை நோக்கின. நேரமானதும் ஒரு சில நெருங்கிய சொந்தங்கள் வந்து முகத்தை உற்றுக் கவனிப்பதை முனியாண்டி அசூயையாக உணர்ந்தார். அவர்களின் பார்வையில் இருக்கும் கழிவிரக்கம் பயத்தை உண்டாக்கியது. சற்று நேரத்தில் அவன் வந்து வாசலில் நின்றான். கறுத்த உருவம். முகம் சரியாகத் தெரியவில்லை. அவன் இன்னும் அருகில் வந்தால் முகத்தை அடையாளம் கண்டு கொள்ளலாம் என நினைத்தார். நினைப்பதை அவரால் வார்த்தைகளாகக் கோர்க்க இயலவில்லை. நினைப்பு நினைப்பாக அவருக்குள் உழன்று கொண்டிருந்தது. அவனுடைய வருகைக்குப் பின்னரே முனியாண்டியின் உடல் சிலிர்த்து உதறிக் கொண்டிருந்தது. குரல் புலம்புவது போல் கேட்டது.
இப்பொழுது அவன் முனியாண்டியை மூர்க்கமாகப் பார்க்கத் தொடங்கினான்.
“நீ யாரு?”
முனியாண்டி கேட்கிறார். அக்குரல் அங்குள்ள யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
எந்நேரமும் தன் மீது பாய்ந்து உயிரை எடுக்கக்கூடும் என முனியாண்டி கற்பனை செய்தார்.
“நான் உன் நாக்கால் உருவானவன்…”
அவன் குனிந்து முட்டிகாலிட்டு முன்னகர்ந்து வந்தான். இப்பொழுது அவனுடைய கண்களை நன்றாகப் பார்க்க முடிந்தது. மிகவும் நெருக்கமான கண்கள் அவை. தினமும் பார்த்துப் புழங்கிய கண்கள். நெருக்கமாக வந்ததும் அது தன்னுடைய கண்கள்தான் என உணர்ந்தார். அவன் முனியாண்டியைப் போலவே இருந்தான். முனியாண்டிக்கு இருபது வயதிருக்கும்போது எப்படி இருந்திருப்பாரோ அதே தோற்றம்.
“நீ யாரு? சொல்லு!”
மற்றவர்களைப் போல அவனும் முனியாண்டியின் முகத்தை நெருங்கி வந்து மரண வாடையை நுகர்ந்தான்.
“உன்னோட நாக்கு நான்…”
முனியாண்டி கண்களிலே கெஞ்சினார். கண்ணீர் துளி பெருகி வழிந்துவிடாமல் கண்களுக்குள்ளே பளபளத்துக் கொண்டிருந்தது. கைகளைக் கூப்பி வணங்க முடியவில்லை. கண்கள் வணங்கி தவித்தன. வந்தவன் முனியாண்டியின் கன்னத்தில் முத்தமிட்டு நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். அவனுடைய உடலின் கதகதப்பு முனியாண்டிக்கு அவ்வளவு ஆறுதலாக மாறியது. தன் வயதைக் கடந்து பின்னோக்கி நகர்ந்தது நினைவு. கால்கள் சிறுத்து கைகள் சுருங்கி வீட்டின் தரையில் எச்சில் வடிய தவழ்கிறார். எல்லாம் பின்னகர்கின்றன. உலக நினைவுகள் இழந்து தன்னுணர்வு கரைந்து ஒரு தொட்டிலில் தன் நாக்கின் நுனியைக் கடித்தபடியே ஒரு பெருத்த நாக்கு ஆடிக் கொண்டிருந்தது.
எழுதியவர்
-
மலேசியாவிலுள்ள கடாரம்(கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன்; 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். பன்முக நவீனப் படைப்பாளியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கவிதைகள் என இதுவரை பதினேழு நூல்கள் இயற்றியுள்ளார்.
சிறார் இலக்கியத்திலும் பங்களித்துவரும் பாலமுருகன் இதுவரை சிறார்களுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதைகள், நான்கு சிறார் நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் குறும்படங்கள், சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூல்கள் படைத்திருக்கிறார். இவருடைய ‘பேபிக் குட்டி’ என்கிற சிறுகதை தமிழ்நாட்டு அரசின் மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத்தமிழ்’ என்கிற அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் பாடமாக இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கலை, இலக்கியத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவருடைய முதல் கவிதை தொகுப்பு ' கடவுள் அலையும் நகரம்' சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பத்தால் 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இதுவரை.
- குறுங்கதை10 September 2024கே.பாலமுருகனின் மூன்று குறுங்கதைகள்
- சிறார் கதைகள்20 February 2024சிறார் குறுங்கதைகள்
- சிறுகதை18 January 2024பியான்